Wednesday, March 19, 2025

விதி வலியது.

அகோ வாரும் பிள்ளாய்..! அதாகப்பட்டது இந்த விதி ரொம்பவே பலமானது...!வலியது..! வலிமையானது..! உண்மைதானே..! 

அந்தக்காலத்தில் தேவர்கள், இறைவனார்கள், முதற்கொண்டு, செல்வ செழிப்புடன் சிறப்பாக கொடி கட்டி வாழ்ந்த அரசர்கள், பக்குவப்பட்ட மாந்தர்கள், மகான்கள் என அனைவரையுமே "விதி" என்பது தலைகீழாக புரட்டி எடுத்து விட்டு சந்தோஷமடைந்திருப்பதை எத்தனை புராணங்களில், பழங்கால கதைகளில் பார்த்துள்ளோம். "விதி வலியது. அதை வெல்ல இயலாது என்று கூறும் போது சமயங்களில், நம் மதியில்னால்தான் ஒரு செயல் நடந்தது/நடக்கிறது/ நடக்கப் போகிறது என சிலர் பெருமை கொள்கிறார்கள். ..! இது அசட்டுத்தனமல்லவா..! என எனக்கு எப்போதும் தோன்றும்." விதியை, மதியால் வெல்வதற்கு, அந்த விதியும் சற்று  வளைந்து தந்தால்தான் அது (அதாவது நாம் நினைத்த மாதிரி ஒரு செயல் நடப்பதென்பது...! ) நிறைவேறும். இது காலங்காலமாய் செயல்பட்டு வருவதல்லவா..? 

சரி இப்போது இந்த "விதி" புராணம் எதற்கென்றால், தினமும் ஒரு செயல் அது பாட்டுக்கு தேமேன்னு நடந்து கொண்டிருக்கும் போது, அது மாறுபட்டால், அதன் பெயர் "விதி"யின் செயல்தானே...! 

சென்ற புதனன்று காலை உணவு முடிந்ததும், மதிய சாப்பாட்டிற்கு சுத்தம் செய்து பாலக் கீரையை அரிந்து கொண்டிருந்த போது,  இயற்கை அழைப்பிற்கு கட்டுப்பட்டு குளியலறைக்கு சென்றவள், கால் அலம்பி வெளியேறும் போது, அந்த ஈர கால்களோடு, என்  (விதியின்) செயல்பாடும் உடன்பிறப்பாக வந்து சேர்ந்து கொள்ளுவோமென்று சற்றாவது அந்த "விதி" எச்சரித்திருக்க கூடாதா? (அதற்குதான் பேச தெரியாதே..! செயல்பாட்டில் மட்டும் தன் வேகத்தை காட்டி விட்டு சந்தோஷபட்டுக் கொள்ளும்.) விளைவு, படி தாண்டி கால் வைத்து, ஈரக்கால் வழுக்கியதில், கீழே கோணலும் மாணலுமாக விழுந்ததில் பல இடங்களில் நல்ல அடி எனக்கு மட்டுந்தான். (அப்போது குளியலறை  வாசலில் இருக்கும் மிதியடியில் கால் வைத்து நான் கால்களின் ஈரம் ஆற்றக்கூடாதா என உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த மிதியடியும் அப்போது விதியின் பக்கம் பலமாக சாய்ந்து அப்புறப்படுத்தபட்டிருந்தது...) எனக்கு காதில் விழாது என்ற சந்தோஷத்தோடு, அந்த "விதி" கைகொட்டி சிரித்திருக்கும் 

அத்தோடு "அப்போது வீட்டில் யாருமில்லை.. அனைவரும் அவரவர் வேலையாக வெளியில் சென்றுள்ளனர் என்ற தைரியமும் அதன் (விதியின்) கூடுதல் சந்தோஷம்." ஆங்காங்கே பட்ட அடிகள்... அடிகளுக்கு கிடைத்த வேதனை என்ற பரிசுகளோடு நான் எழவே சிறிது நேரம் பிடித்தது. மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு (உனக்கு மட்டும்தான் தைரியமா? எனக்கும் சிறிதளவு இருக்கக் கூடாதா..? என்று கண்ணுக்கு மறைவாக இருக்கும் விதியுடன் பேசியபடி சிரமத்துடன் எழுந்தேன்.) அப்படியே சிறிது நேரம் சமையலை புறக்கணித்து அவர்களுடனே வெளியில் சென்றிருந்தாலும், விதி வெளியிலேயே ரோடில் வழக்கப்படி விழவைத்து, வேறென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ. .? என அத்தனை வலியிலும் நினைத்துக் கொண்டேன். 

ஹாலுக்கு வந்தவுடன், உடனே கைவசம் இருக்கும் அயோடக்ஸ், நீலகிரி தைலம் என மருந்துகளை தேடி எடுத்து எனக்கு கிடைத்த வெகுமதிக்கு கூலியாக்கினேன். கால் மணி நேரம் வலிகளை,எங்கெங்கு என நிர்மாணித்து / தீர்மானித்து உபயோகிக்கும் போது,  "நல்லவேளை..! ரத்த காயங்களை தராமல், பிசகு, குளியலறை படியில் இடுப்பு, மூட்டு என அடிபட்ட கடுமையான வலியை மட்டும் தந்தமைக்கு, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்." 

மேலும், ஒரு கால் மணி நேரம் அமர்ந்திருத்து விட்டு பின், கைகளை சுத்தம் செய்து கொண்டு பாக்கி நறுக்காமல் இருந்த "பாலக்கை" பொடிதாக அரிந்து கடாயில் கொதிக்க வைத்து, ஏற்கனவே வெந்திருந்த பாசிப்பருப்புடன் கூட்டு செய்ய ஒரு தேங்காயையும் உடைத்து துருவி மிக்ஸியில் அரைத்து சேர்த்து கூட்டாக்கி விட்டு. குக்கரில் சாதத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தால், நிமிரவோ, குனியவோ முடியாமல், பின் இடுப்பு வலி (முதுகு தண்டின் அடிபாக எலும்பு.) அதிகமாக தெரிந்தது. கூடவே, வலது கால் மூட்டு, வலது கால் பெருவிரலோடு சேர்ந்து கால் பாதம் என அனைத்து இடங்களும், சுளுக்கு வீக்கம், வலி என போட்டிப் போட்டுக் கொண்டு "விதி"தன் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தது. 

ஆகா..! வெளியில் சென்றிருந்தவர்கள் வந்தால், "கவனமாக இருக்க வேண்டாமா." என்ற திட்டு வேறு கிடைக்குமே என்ற படபடப்பில், நேரங்கள் நகர்ந்து அவர்கள் வரவும் ஆயிற்று. 

வெளியிலிருந்து வந்தவர்களிடம், விதியின் விளையாட்டை விவரித்தப்பின், வலிகளின் கோர முகங்களும் மூன்று நாட்களுக்கும் மேலாகவே கடுமையுடன் தொடர்ந்தன. நீ.கி,தைலம், அயோடக்ஸ் போன்ற தொடர்ந்த மருந்தோடு, வெந்நீர், ஐஸ்பாக்ஸ் ஒத்தடங்களோடு எனக்கு தினமும்  பெரும்பாலும் மன  ஆறுதலை தந்தது உங்கள் அனைவரின் பதிவுகள்தாம்...! அனைவரின் பதிவையும், படித்து கருத்திட்டு என் வலிகளை தாங்கினேன் என்றால்  அது மிகையல்ல..! நிஜமான உண்மை. 

எப்போதும் போல் ஐந்தாறு  நாட்கள் நொண்டியடி நடந்து என் கடமைகளை செய்து கொண்டேதான் இருக்கிறேன்.  பழைய வலி இல்லாத நாட்களை மீண்டும் எதிர்பார்த்தபடி...!  

வந்து விடும் அந்த வலியில்லாத நாட்கள்.. ஏனெனில், நம் உடலை, நம் உடலே சரி செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இறைவன் தந்த ஒரு வரம். அந்த வரம் என் வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டுமெனவும் இறைவனை அன்போடு பிரார்த்திக்கிறேன். 

பதிவின் முதல் வரிகள் எத்தனை உண்மையானதென இப்போது கூறுங்கள்

இப்போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை படித்துப் பார்த்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட விதியின் உபத்திரவங்களை எண்ணி மனம் மிகவும் வருத்தப்பட்டது. தீடிரென எதிர்பாராமல் விளைந்த அவரின் கால் வலியும், வேதனையும் விரைவில் சரியாக வேண்டுமென இறைவனிடம்  பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். 

ஒருவரின் பிரார்த்தனைகள் கண்டிப்பாக  அவரின், மற்றும், மற்றையவர்களின் உடல், மன நலன்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை (இன்று எ. பியிலும் கேள்வி பதிலில் இது இடம் பெற்றுள்ளதை படித்தேன்.) எனக்கு நிச்சயம் உண்டு. 

இன்றோடு எட்டு நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனோ உங்களிடமும் இதை சொல்ல வேண்டுமென தோன்றியதால், இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியதை இப்போது நிறைவு செய்து  இங்கு பகிர்கிறேன்.

படிக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றிகள் .🙏

23 comments:

  1. அடடா...   அந்த வலிகளை நினைத்துப் பார்த்தாலே எனக்கு உடல் சிலிர்க்கிறது. அப்பா..  அதுவும் அந்த முதுகு, கால் வலி...   ரொம்பக் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம். அந்த கீழே விழுந்தவுடன் உண்டான வலிகளை இப்போது நினைத்தாலும் இதயம் படபடக்கிறது. , அதுவும் அன்றைய வீட்டின் தனிமைச் சூழலில். எப்படியோ சமாளித்து எழ வைத்த இறைவனுக்கு அன்று நான் நன்றி சொல்லி மாளவில்லை. என்னவோ நேர்ந்தான் காரணம். மீன ராசிக்கு ஜென்ம சனி பெயர்ச்சி , 12 ம் தேதி ஒரு கண்டம் என ஜோதிட சம்பவங்களை பிறகு படித்த போது வயிற்றில் இனம் புரியாத சங்கடம் வந்தது. இப்போது வலிகள் சற்று குறைந்துள்ளன. ஆனாலும் இரவு படுத்த பின் முதுகு தண்டின் வலி தெரிகிறது. தங்களின் ஆறுதலான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா என்கிற கேள்வி வெறுப்பாக இருக்கும்.  ஆனால் கேட்கவேண்டிய கேள்வி.  குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் ஒவ்வொரு அசைவிலும் ஜாக்கிரதை இருக்க வேண்டும். 

    சிறு வயதான என்னையே என் பிஸியோ 'எழுந்திருக்கும்போது அப்படியே எழுந்திருக்காதீர்கள்.  கைகளை சப்போர்ட் செய்து எழுந்திருக்க வேண்டும்' என்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உண்மையான கேள்வி தான். ஆனால், நாம் ஜாக்கிரதையாக இருக்கும் போதெல்லாம் அந்த விதியும், வெறுப்படைந்து பார்த்துக் கொண்டேதான் உள்ளது போலும்..! அதனின் அந்த கோபத்தில் நம் மூளையை செயலற்றுப் போகச்செய்ய அதற்கு ஒரு அரை நொடி போதுமே..! அந்த அரை நொடியில் நம்மை வீழ்த்தி அது வென்று விடும். அதுதானே அதனின் இயல்பு.

      /சிறு வயதான என்னையே என் பிஸியோ 'எழுந்திருக்கும்போது அப்படியே எழுந்திருக்காதீர்கள். கைகளை சப்போர்ட் செய்து எழுந்திருக்க வேண்டும்' என்கிறார்./

      ஹா ஹா ஹா. ஆம் உண்மை. சிறுவர்களுககுத்தான் விளையாட்டுப் போக்கில் நிறைய அடிபட வாய்ப்பு உண்டல்லவா? அந்த எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் பாஸ் சொல்கிறார்கள். அப்படியே கேட்டு கொள்ளுங்கள்.

      இப்படி வாய் விட்டு சிரித்தால், நோய்கள் சொல்லாமல் போய் விடும். அதனால்தான் உங்கள் அனைவரின் பதிவுகளைப் பார்த்து படித்து என் வலியை குறைத்தேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கீதா அக்கா பதிவு இனிதான் படிக்க வேண்டும்.  என்ன என்று நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் யூகிக்க முடிகிறது.  ஒரு வாரமாகி விட்டது என்கிறீர்கள்.  வலி குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.  உங்கள் வலி, சிரமங்களையும் நகைச்சுவையோடு எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். இன்று மாலைதான் அவர்களுக்கு வந்த இடரை குறித்து விபரமாக பதிவிட்டிருக்கிறாகள். அதைப் படித்து பார்த்ததும் எனக்கும் மிகவும் மனதுக்கு சங்கடமாக இருந்தது.

      மேலும் என்னைப்பற்றி, நான் விழுந்து எழுந்ததை நான் பாதியளவுக்கு எழுதி வைத்ததும் நினைவுக்கு வந்தது. அதை வெளியிட வேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன். அட..! என்ன ஒற்றுமையான விதிகள் என விதியின் ஆற்றலை எண்ணி வியப்படைந்து , என் கதையையும் தெரிவித்து விட்டேன்.

      இன்று கொஞ்சம் வலிகள் குறைந்துள்ளது. ஆனால் அடி முதுகின் எலும்பு வலி கொஞ்ச நாள் படுத்துமென நினைக்கறேன்.

      எல்லாமே ஒரு மாயைதானே...! இந்த நகைச்சுவைகள்தான் எத்தனை துன்பங்களிலும் என்னை காத்து வருகின்றன. "இடுக்கண் வருங்கால்...." நல்லதுதானே...! தங்களின் அக்கறையான நலம் விசாரிப்பு இன்னும் ஒரு வாரத்தில் என்னை குணப்படுத்தி விடும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. வணக்கம் சகோ
    மருத்துவமனை சென்று வந்தீர்களா ? மிதமாக இருக்க வேண்டாம் முழுமையாக செக் செய்து கொள்ளவும்.

    தாங்கள் பூரணமாக நலம் பெற எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும், ஆறுதலான விசாரிப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /மருத்துவமனை சென்று வந்தீர்களா? /

      வழக்கப்படி விழுந்த அன்றும், மறுநாளும் மருத்துவமனை செல்ல லாமா என நினைத்து, வழக்கப்படி போகவில்லை. விழுந்த மறுநாள் வேலைகளை செய்ய இயலாமல் ஒரு நாள் ஓய்வு கிடைத்தது. அதற்கு மறுநாள் வேலைகள்தான் இதற்குரிய மருந்து என நான் நினைத்ததால், வழக்கப்படியான வேலைகளை சிரமம் பாராமல் செய்து வருகிறேன். இன்று கொஞ்சம் வலிகள் குறைந்த மாதிரி உள்ளது. இன்னமும் ஒரு வாரத்தில் இறைவன் அருளால், முழுமையாக குணமாகி விடுமென நம்புகிறேன்.
      தங்களின் அக்கறையான விசாரிப்பிற்கும் , பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அகோ வாரும் பிள்ளாய் என்று விக்ரமாதித்தன் கதையை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.   

    எடுத்து இன்னுமொருமுறை வாசிக்க ஆவல்.  ஆனால் படிக்காமல் இருக்கும், 

    படிக்கக் காத்திருக்கும் புத்தகங்களே நிறைய இருக்கின்றனவே.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /அகோ வாரும் பிள்ளாய் என்று விக்ரமாதித்தன் கதையை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். /

      ஹா ஹா ஹா. ஆமாம். கீழே விழுந்து எழுந்து என பலமுறைகள் இப்படியான கதைகளை உங்கள் அனைவரிடம் பகிர்ந்திருக்கிறேன். என்னவோ இப்படி பகிர்வதிலும், எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது..! . அதன்படி பார்த்தால் வேதாளம் மறுபடி, மறுபடி முருங்கை மரத்தில் ஏறுவது போல, இது விக்கிரமாதித்தியனின் பழைய கதைகள்தானே ..! ஹா ஹா.

      நீங்கள் படிக்க வேண்டியதை படித்தப் பின் நிதானமாக படியுங்கள். பதிவு எங்கேயும் ஒடிவிடாதல்லவா? நீங்கள் மறுபடி படிக்க நினைக்கும் போதே, விக்கிரமாதித்தனின் விடா முயற்சி, பொறுமை என அனைத்தும் எனக்கும் நினைவுக்கு வருகிறது. என் மனதுக்குள் ஒரு ஆறுதலான மகிழ்வும் வருகிறது. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அக்கா, விதி என்பது நாம் நம்மை சமாதானப்படுத்திக்கச் சொல்வது.

    ரொம்பவே கவனமாக இருந்தும் அதையும் மீறி வரப்ப அதைச் சொல்லிக்கொள்ளலாம்

    ஆனால் ஒரு வயதை நாம் அடைந்துவிட்டால் மிகவும் கவனமாக நடக்க வேண்டும் என்று தோன்றும் எனக்கு. அதற்காகப் பயந்து கொண்டு அல்ல,

    முழுவதும் செக்கப் செய்து கொண்டீர்களா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /விதி என்பது நாம் நம்மை சமாதானப்படுத்திக்கச் சொல்வது.

      ரொம்பவே கவனமாக இருந்தும் அதையும் மீறி வரப்ப அதைச் சொல்லிக்கொள்ளலாம். /

      தாங்கள் கூறுவதும் உண்மைதான். ஆனால், எத்தனை புராணங்கள், கதைகள் படிக்கிறோம். இதில் விதியைப்பற்றி கேள்விபட்டுள்ளோம்.

      எனக்கும் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஒரே வீட்டில் ஒரே தாய்க்குப்பிறந்து வளர்ந்து வரும் உடன் பிறப்புகள் வாழ்க்கை முறையில் அவரவர் வாழ்க்கையை வாழும் போது, அவர்களுக்கிடையே ஏற்ற, தாழ்வுகள் உண்டாவதில்லையா ? இதைத்தான் அவரவர் செய்த வினைப்பயன், கர்மா என்கிறோம். . ஒருவருக்கு படிப்பு நன்றாக வரும் போது, மற்றொருவருக்கு அவ்விதம் வருவதில்லை. அப்படியே இருவருமே நல்ல படிப்புடன் அமைத்தாலும், வேலை, அதுவும் அயல்நாட்டில் நல்ல வருமானத்துடன் வேலை வாய்ப்புக்கள், திருமணம், குழந்தைகள், அந்த குழந்தைகளின் படிப்புக்கள் வசதிகள் என எத்தனை பாகுபாடுகள் அவர்களுக்குள்... இதை இறையருள் எனவும் சொல்லலாம், விதிப்பயன் எனவும் சொல்லலாம். அவரவர் வாங்கி வந்த வினைப்பயன் எனவும் சொல்லலாம். இப்படித்தான் நாம் நம்மை எதற்கும் சமாதானம் செய்து கொள்கிறோம். ஆயினும், அவர்களுக்குள் மனதளவில் கிலேசங்கள், வருத்தங்கள் என வர வாய்ப்புண்டு. கண்களுக்குத் தெரியாத இறைவனை பல வடிவங்களில் வழிபடுவதும், இறையருள் என்ற ஒன்று உண்டு என பரிபூரணமாக நம்பி வழிபடுவதற்கும், வித்தியாசம் உண்டல்லவா..? அது போல் இதுவும் தாங்கள் கூறியபடி மனச் சமாதானத்திற்கு ஏற்பட்ட ஒன்றுதான்...!

      விதி என்றாலும், நம் கவனக்குறைவு என்றாலும் வலி என்பது ஒன்றுதான்.. (இறையருள், இறைசக்தி என்ற நம்பிக்கையைப் போன்று.) .

      இல்லை சகோதரி. எனக்கு மருத்துவமனைக்கு செல்வதற்தே எனக்கு பயம். ஆனால் மருத்துவமனைக்கே சென்றதில்லை என்ற அர்த்தமில்லை. மூன்று குழந்தைகள் பிரசவத்திற்கு சென்றிருக்கிறேன். மதுரையில் தீடிரென உடம்பு முடியாமல் போனதில்லை ஐ. சி. யுவில் சில நாட்கள் இருந்து அனைவரையும் பயமுறுத்தி வந்திருக்கிறேன். இப்போது என் காது கேட்காத பிரச்சனைக்கு அனைவரும் ஆஸ்பத்திரி, டாக்டர் என சிபாரிசு செய்தனர். அந்த பிரச்சனையே எனக்கு ஒரு பிரச்சனைதான். பதில் சொல்ல என்னுடன் யாரையாவது அழைத்துச் செல்லில் வேண்டும். அது அவர்களை அசௌகரியப்படுத்தும். இதனாலேயே நான் கீழே விழுந்தாலும், ஜூரம், சளியென உடம்பு சரியில்லாமல் போனாலும், பெரும்பாலும் இறைவனிடத்தில் குணப்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கிறேன்.

      நீங்கள் என் உடன் பிறந்த சகோதரி போல அன்போடு பேசுவதால் நானும் உங்களிடம் உரிமையாக இவற்றைச் சொன்னேன். உங்களின் அக்கறைக்கு, அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. இப்போது என் காது கேட்காத பிரச்சனைக்கு அனைவரும் ஆஸ்பத்திரி, டாக்டர் என சிபாரிசு செய்தனர். அந்த பிரச்சனையே எனக்கு ஒரு பிரச்சனைதான். பதில் சொல்ல என்னுடன் யாரையாவது அழைத்துச் செல்லில் வேண்டும்.//

      அக்கா எனக்கு 36 வயதிலிருந்து காது கேட்பதில்லை. என் அம்மாவின் பிரச்சனை எனக்கும். அப்போதிலிருந்து காது மெஷின் போட்டுக் கொண்டு இருக்கிறேன். இரு காதுகளுக்கும் தேவை என்றாலும் ஒரு காதில் போட்டுக் கொண்டிருக்கிறேன். அதை வைத்துதான் சமாளிக்கிறேன். வீடியோ வேலைகளும் ஃபோன் பேசுவதும் செய்து வருகிறேன்.
      தனியாகச் செல்வதும் எல்லாமும்.

      நீங்களும் அபப்டி ஒன்று போட்டுக் கொள்ளுங்களேன். அப்ப உங்களுக்குத் தன்னம்பிக்கையும் வரும். யார் உதவியும் இல்லாமல் தனியாகச் செல்லவும் வந்துவிடுமே...இது ஒரு பரிந்துரைதான். குழந்தைகள் அழைத்துச் செல்கிறேன் அப்பிரச்சனைக்கும் என்று சொல்ல்லும் போது நீங்கள் சென்று வ்ரலாம் என்பது என் கருத்து. இதில் யாரையும் சிரமப்படுத்துவது என்றில்லை. பார்க்கப் போனால் நாம் நம்மைக் கவனித்துக் கொண்டுவிட்டோமென்றால் அதுவே நம்மைச் சுற்றி உள்ளவங்களுக்கு நன்மை இல்லையா அக்கா.. இது ஒரு வின் வின் சிச்சுவேஷன் தானே. நீங்க குழ்னதைகளுக்கு உதவியாக இருக்கிறீங்க. அவங்க உங்க உடல் நலத்தைக் கவனிக்கத் தயாராக இருக்காங்க. அப்ப நீங்க அதைக் கேட்கலாமே அக்கா. மருத்துவர் பயமில்லாமல் போய் கவனித்துக் கொண்டு வாங்கக்கா.

      உங்கள் பிரச்சனைகளை இறைவனிடம் விடுகிறேன் என்று சொல்றீங்க. அந்த இறைவன் உங்களுக்கு வழி காட்டுகிறாரே! உங்கள் குழந்தைகள் மூலம். அப்ப அதைப் பற்றிக் கொள்ளலாமே. இறைவன் நமக்குப் பல வழிகள் காட்டுகிறான். நாம் சொல்லிவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் அதல்ல...அவன் காட்டும் வழிகளை விழிப்போடு பற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா?

      கீதா

      Delete
  7. அக்கா, ரத்தகாயங்களை விட ஊமை அடிகள் தான் பிரச்சனையே....

    அக்கா தயவு செய்து உங்கள் தங்கையாக இதை முன் வைக்கிறேன். நீங்கள் என்னதான் இடுக்கண் வருங்கால் நகுக என்று எழுதியிருந்தாலும்....சீரியஸ் நோட் ...மருத்துவரிடம் சென்று ஒரு செக்கப் செய்து ஆர்த்தோ கூட வேண்டாம்....ஃபிசியோ டாக்டர்டம் சென்று வந்தாலே போதும்.

    ஸாரி கமலாக்கா, என்னால் அத்தனை எளிதாக விதி என்று, உங்களுக்கு, உங்களை அல்ல, எனக்கே கூட சொல்லிக் கொள்வதில்லை...சொல்லிக் கடந்து செல்ல முடியாது.

    ஏன் சொல்றேன் என்றால் நான் சமைக்கும் போது சில சமயம் நாம எழுத கற்பனை விரியும்....அப்ப கவனச் சிதறல் வரும்...ஒன்று கால் வழுகும் (செருப்பு போட்டிருந்தாலும்) இல்லைனா, கையைச் சுட்டுக் கொள்வதுண்டு. இதில் மட்டுமில்லை. வெளியில் நடக்கும் போதும் கூட.....அன்று கூட வெளியில் ஓரிடத்தில் மணலில் நடந்தப்ப... ஒரு இடத்தில் ஸ்லிப் ஆகி முட்டி சரிய விழுந்தேன்.....ஒன்றும் ஆகவில்லை....நான் கவனமாக இருந்தேன் என்று சொன்னேன். அப்படித்தான் நானும் நினைத்தேன் ஏன்னா நடக்கும் முன், மனம் , கீதா மணல்...கீதா பார்த்து நட மணலுக்குள் மரங்களின் வேர் மறைந்திருக்கும்...இல்லைனா ஏதாஅச்சும் தடுக்கும் குத்தும்....கவனமா நட என்று எச்சரித்தது....நானும் அதை நினைத்துக் கொண்டு....ஆனால் மனம் என்ன அப்படியேவா இருக்கும்....உடனே மொபைலில் எடுத்தவற்றை இந்த முறை ஆர்டரில் காப்பி செய்ய வேண்டும்...பதிவு எப்படி எழுத வேண்டும் என்று கற்பனையில் =கணக்குப் போட்டுக் கொண்டே வந்ததில் அப்புறம் பார்த்தியா நான் சொல்லியும் உன் மனசு வேற நினைவில் ....என்று மனமே என்னை சொல்லியது...ஸோ நான் கவனமாகத்தானே இருந்தேன் ஆனால் அது சரியல்ல என்பதை நான் புரிந்து கொள்ள முடிந்தது, இப்படி நான் கொஞ்சம் அனலைஸ் செய்து பார்ப்பதுண்டு கமலாக்கா...ஸோ அடுத்த முறை கவனமாக இருக்கணும் என்றும் நினைத்துக் கொள்வதுண்டு...ஹிஹிஹி

    இப்போது எப்படி இருக்கீங்க? ஓகேயா...தயவு செய்து செக்கப் பார்த்துக் கொண்டீர்களஆ?

    என் வீட்டிலும் என் மகன் கணவர் திட்டுவாங்கதான்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்களது விரிவான கருத்தில், என் கண்முன்னே என்னுடன் பிறவாத அக்கா, தங்கை உறவை கண்டேன். உங்கள் அன்பிற்கும், அக்கறையான பேச்சிற்கும் மிக்க நன்றி சகோதரி. இதுவே எனக்கு ஒரு வலி நிவாரண மருந்துகளாக இருந்து செயல்படும்.

      எனக்கு அலோபதி மருந்துகள் ஒத்து வராமல் போய் விடும் என்ற எண்ணம் உண்டு. ஆயுர்வேதம் ஓரளவிற்கு பயன்படுத்தி வருகிறேன். சில பிரச்சனைகளை ஆயுர்வேத மருந்துக்களினால் என் உடல் சரி செய்துள்ளது.

      இப்பவும் வலி அதிகமாகும் போது அலோபதி டாக்டரிடம் சென்று விடுவோம் எனத் தோன்றும். வீட்டிலும் அனைவரும் போகலாம் என்பார்கள். நான்தான் உடனே மறுத்து விடுவேன். (காரணம் மேலே உங்களுக்கு சொன்ன காரணங்கள்தான்.இதற்குத்தான் குடும்ப டாக்டர் என ஒருவரையே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் நினைப்பேன். :))) ) சரி.. தானாகவே நாட்பட்ட குணமாகும் என்ற நம்பிக்கையோடு பத்து நாட்களில் குணமாவதை ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்துக் கொள்வேன். என்னவோ இப்போதெல்லாம் அதுவே பழக்கமாகி விட்டது.

      /வெளியில் நடக்கும் போதும் கூட.....அன்று கூட வெளியில் ஓரிடத்தில் மணலில் நடந்தப்ப... ஒரு இடத்தில் ஸ்லிப் ஆகி முட்டி சரிய விழுந்தேன்.....ஒன்றும் ஆகவில்லை....நான் கவனமாக இருந்தேன் என்று சொன்னேன். அப்படித்தான் நானும் நினைத்தேன். /

      அடாடா..! நீங்களும் கீழே விழுந்து விட்டீர்களா.? நல்லவேளை..! நீங்கள் மணலில் விழுந்ததால் தப்பித்தீர்கள் . வேறு கல், சிமிண்ட் இடமாக இருந்திருந்தால் கஸ்டமாக போயிருக்கும். மேலும் உங்கள் மனதில் அப்படி நினைத்த உங்கள் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.

      இப்போது கொஞ்ச வலிகள் உள்ளது. கீழ் முதுகு எலும்பிலும், கால் பாதத்திலும்) பார்ப்போம். நாட்பட்ட குணமடையவில்லையென்றால், ஒரு மருத்துவரை நாட வேண்டும்.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கண்டிப்பாகக் குடும்ப மருத்துவர் ரொம்ப அவசியம் அக்கா. ஸ்பெஷலிஸ்டிடம் முதலில் செல்ல வேண்டாம். குடும்ப மருத்துவர் சொல்வதன் அடிப்படையில் செல்வதுதான் நலல்து.

      நாட்பட - இதைத் தவிர்த்துவிட்டு உடனே சென்று பாருங்களேன் ப்ளீஸ்...

      நான் அருகில் இருந்திருந்தால், உங்கள் கையைப் பிடித்து, இழுத்து வாங்கக்கா என்று தரதரவென்று இழுத்துச் சென்றிருப்பேன்!!! ஹாஹாஹா....

      குழந்தைகள் (உங்க குழந்தைகள் சொல்லும் போது....நானும் குழந்தைதானே!!!!!! பாருங்க எப்படி சைக்கிள் கேப்ல நுழைஞ்சுக்கறேன்) சொல்லும் போது உடனே நாம் கேட்க வேண்டும் கமலாக்கா!!!!

      கீதா

      Delete
  8. அக்கா, பாத்ரூமில் பிடித்துக் கொள்ள ஏதாச்சும் போட்டுக்கோங்க. பெரும்பாலும் பாத்ரூமில்தான் பலரும் விழறாங்க.

    அக்கா இன்னொன்று, நம்மை அறியாமலேயே நம் ஆழ் மனதுக்குள் இருப்பவை நம்மை இயங்க வைக்கும்.
    உடல் உபாதைகள் கூட நம் உடலை அசத்திவிடும். விழ வைத்துவிடும் ஷணப் பொழுதில்.

    நாமெல்லாம் சர்க்கரைக்காரங்களாச்சே!!! அதனால் சொல்கிறேன் கமலாக்கா.

    ரொம்ப ஓவரா உங்களை மிரட்டறேனோ!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆமாம்.. ஆனால், நான் பாத்ரூமிலிருந்து பெட்ரூமுக்கு வெளிவரும் போது, ஈரமான கால்கள் வழுக்கியதால் விழநேர்ந்தது. இந்த டைல்ஸில் காலூன்றிதான் நடப்பேன். ஆனால் இது போல், இருமகன்கள் வீட்டிலும் நிறைய தடவை விழுந்து எழுந்தாகி விட்டது. வெளியில் சென்றாலும், இது போன்ற பிரச்சனையில் பல தடவைகள் விழுந்து ஒரு மாதம், இருமாதங்களுக்கு ம் மேலாக அவஸ்தைகள் பட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். காலில் பலம் குறைந்து விட்டது. என்னவோ.. ஒருவருக்கும் பிரச்சனைகளை தராமல் நல்ல ஆரோக்கியத்தை தாவென இறைவனை வேண்டி கொண்டேதான் உள்ளேன்.

      உண்மைதான் இந்த சர்க்கரைத்தான் கால்களை இப்படி படுத்தி பலகீனமாக்கி பிரட்டி விடுகிகிறதா? தெரியவில்லை...!

      /ரொம்ப ஓவரா உங்களை மிரட்டறேனோ!!!!!!/

      சே, சே. அதெல்லாம் ஒன்றுமில்லை. என் நல்லதுக்குதானே இவ்வளவு விபரமாக சொல்கிறீர்கள். நானும் உரிமையோடு என்னை ப் பற்றி சொல்கிறேன். நம் நட்பு இப்படியே தொடரட்டும். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கண்டிப்பாக கமலா அக்கா. கால்களுக்குப் பலம் தரும் பயிற்சிகளைச் செய்ய முடிந்தால் நலல்து கமலாக்கா.

      அதுவும் நம்மைப் போன்ற இனியவர்களுக்குக் கால் சட்டென்று தளர்ந்துவிடும், அக்கா.

      எனவே ஆடுகால் சதைக்குப் பலம் கொடுக்கும் பயிற்சிகள் நல்லது.

      கூடவே உங்கள் இடுப்பு வலிக்கு, இப்படிச் செய்து பாருங்கள். படுக்கும் போது இருகால்களுக்கும் இடையில் தலையணை ஒன்றை நெடுக்காக அதாவது கால்களின் நீளவாக்கில் ஏற்ப முட்டியின் கிழே அலல்து முட்டியோடு நடுவில் தலையணையை வைத்துக் கொண்டு, தலையணை நல்ல நீளமாக இருந்தால் அப்படிச் செய்யும் போது பாதங்கள் ஒன்றுசேர்ந்து இருக்காது . அந்த பொசிஷன் நல்லது என்று என் ஃபிசியோ மருத்துவர் சொல்லியிருக்கிறார்.

      முடிந்தால் செய்து பாருங்கள், கமலாக்கா

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான மீள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தாங்கள் கால்களுக்கு தரும் பயிற்சி பற்றி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டு விரிவாக எழுதியதை படித்து தெரிந்து கொண்டேன். அப்படியே செய்து பார்க்கிறேன்.

      எனக்கு படுக்கும் போது இரு பாதங்களும் அழுத்தமாக பாரமாக இருப்பது போன்றுதான் உணர்கிறேன். தினமும் வீட்டில் சாதரணமாக நடமாடினாலும், (பல வருடங்களாக) எப்போதுமே அப்படித்தான் உள்ளது. கால் பாதத்தின் விரல்களை மடக்கி நிமிர்த்தும் போது அப்படிதான் உணர்கிறேன். இதற்கு சுகர் காரணமா? இல்லை வேறு ஏதாவது காரணமா எனத் தெரியவில்லை. சுகர் முதன் முதலில் கண்டறிய பட்ட போது மருத்துவரும் சென்று மேலும் பல சோதனைகள் எடுத்துக் கொண்ட பின், அவரிடமும் இதுபற்றி (கால் பாதத்தைப்பற்றி) கூறினேன். அவரும் அப்படித்தான் இருக்கும். மாத்திரை எடுது து வாருங்கள் சரியாகி விடுமெத்தான் கூறினார். ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து சுகருக்கான மாத்திரை எடுத்துக் கொள்ள இயலவில்லை. அது வேறு ஏதோ பக்க விளைவுகளை. தந்து உபத்திரவம் வந்தது. அதனால் அதை நிறுத்தி விட்டேன். வேறு டாக்டரிடம் செல்லவில்லை. சுகர் அளவையும் சரி பார்க்கவில்லை. தொடரும் பாத பிரச்சனைகளோடு இருந்து வருகிறேன். இப்போது தங்களின் ஆலோசனை கள் நன்றாக உள்ளது. செய்து பார்க்கிறேன். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. இதற்கு உடனே பதில் தர எனக்கு தாமதமாகிவிட்டது. நேற்றும் வலைத்தளத்திற்கு வரவில்லை. மன்னிக்கவும் சகோதரி.
      நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அன்புள்ள கமலா!
    இப்போது உங்கள் வலிகள் சரியாகி விட்டனவா முழுவதும்? கீதாவின் ஆலோசனைகள் அனைத்தையும் படித்தேன். இப்படி ஒருத்தர் வலிய வந்து, திரும்பத் திரும்ப ஆலோசனைகள் சொல்வது, அவற்றை நீங்கள் உங்களின் பயம், பல சங்கடங்கள் காரணமாக நீங்கள் மறுத்தாலும் திரும்பவும் வந்து உங்களை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லி மீண்டும் ஆலோசனை சொல்வது என்பதெல்லாம் இப்போதைய உலகில், வாழ்க்கையில் இத்தனை நல்ல மனதுடன் ஆலோசனைகள் சொல்வதெல்லாம் மிகவும் அரிது! முதலில் கீதாவின் நல்ல மனதுக்கு நானும் இங்கே மனதார பாராட்டு சொல்லிக்கொண்டு, நானும் இங்கே என் அனுபவங்களைப் பகிர்கிறேன்.
    இந்த எலும்பில் அடியென்பது, எனக்கு பலவிதமாக நேர்ந்ததுண்டு. கீழே விழுதல், எதிர்பாராத விதத்தில் உடம்பில் அடிகள், இப்படி வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்களினால் நான் வலியுடன் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு சமயம் ஊருக்கு கிளம்பும்போது வீட்டிலிருந்த சோஃபாவில் வலது காலில் இலேசாக இடித்துக்கொண்டேன். கொஞ்சம் வலித்தது. வலி மருந்தை தடவிக்கொண்டு அப்படியே விமானம் ஏறி ஊருக்கும் வந்து விட்டேன். மூன்றாம் நாளிலிருந்து கால் பாதத்தில் நல்ல வலி. உடனேயே மருத்துவரிடம் செல்ல முடியாமல் வீடு நிறைய விருந்தினர்கள். ஒரு வழியாக அவர்களெல்லோரும் சென்ற பின் ஒரு வராம் கழித்து மருத்துவரிடம் சென்றால், எக்ஸ்ரேக்கு பிறகு அவர் விரல்களில் hairline fracture என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. பாதத்தில் கட்டு போட்டுக்கொண்டு படுக்க வேண்டியதாகி விட்டது!!
    அதனால் கீதா சொல்வது போல நீங்கள் மருத்துவரிடம் சென்று வருவது மிக மிக முக்கியம். பல காரணங்களினால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      உங்கள் அன்பான கருத்தை கண்டவுடன் நான் உண்மையிலேயே கண் கலங்கி அழுது விட்டேன். என் மீது நீங்கள் பாசத்துடன் அக்கறை கொண்டு ஒரு உடன் பிறந்த சகோதரியாக பலவிதத்திலும் ஆலோசனைகளை சொல்லியிருப்பதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.

      /கீதாவின் ஆலோசனைகள் அனைத்தையும் படித்தேன். இப்படி ஒருத்தர் வலிய வந்து, திரும்பத் திரும்ப ஆலோசனைகள் சொல்வது, அவற்றை நீங்கள் உங்களின் பயம், பல சங்கடங்கள் காரணமாக நீங்கள் மறுத்தாலும் திரும்பவும் வந்து உங்களை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லி மீண்டும் ஆலோசனை சொல்வது என்பதெல்லாம் இப்போதைய உலகில், வாழ்க்கையில் இத்தனை நல்ல மனதுடன் ஆலோசனைகள் சொல்வதெல்லாம் மிகவும் அரிது! முதலில் கீதாவின் நல்ல மனதுக்கு நானும் இங்கே மனதார பாராட்டு சொல்லிக்கொண்டு, நானும் இங்கே என் அனுபவங்களைப் பகிர்கிறேன்./

      ஆம். கண்டிப்பாக... கண்டிப்பாக அவரும் வந்து என் உடன் பிறப்பாக உறுதுணையாக பலவிதத்திலும், ஆலோசனைகளை தந்திருக்கிறார். தந்து கொண்டும் இருக்கிறார். அவரின் ஆலோசனைகளை நான் மறுக்கவில்லை. அவரின் நல்ல மனதுக்கும் நான் மிகவும் என் வாழ்வு உள்ளவரை கடமைபட்டுள்ளேன். எனக்கு உடன் பிறந்தவர் என் அண்ணா ஒருவர் மட்டுந்தான். அவரும் இப்போது இல்லை. அவரின் அன்பை இப்போது உங்களிடமெல்லாம் நான் காண்கிறேன். கூடவே ஒரு சகோதரி இல்லையே என்ற குறையை நீங்கள் அனைவரும் போக்கி விட்டீர்கள். அதனால்தான் வலைத்தள நட்பாகிய உங்கள் அனைவரையும் நான் சகோதரர், சகோதரி என்றே அழைக்கிறேன்.

      இப்போது என் அடிபட்ட வலிகள் குறைந்து வருகின்றன சகோதரி. ஆயுர்வேத மருந்துகளை உபயோகப்படுத்தி வருகிறேன். சுகருக்கும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளேன் . உங்கள் ஆலோசனைப்படி அதை விரைவிலேயே செயல்படுத்த எண்ணியுள்ளேன். எனக்கு ஆயுர்வேதம் ஒத்துக் கொள்ளும். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. எனக்கு எப்போதுமே கால் விரல்களிலிருந்து நடுப்பாதம் வரை உள்ளங்காலில் அழுத்தமும் கனமும் மரத்திருப்பது போன்ற ஒரு உனர்வுமிருக்க்கும். சென்ற தடவை சென்னையில் கால்களுக்கென்றே சிகிச்சை கொடுக்கும் ஒரு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டதில் இப்போது பரவாயில்லை. இது போல நீங்களும் கால்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்லலாம். சர்க்கரையால் இந்த மாதிரி பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதே பிரச்சினைகளுடன் நடப்பதும் வேலை செய்வதும் எந்த விதமான குறையும் இல்லாமல் செல்கிறபோது நமக்கு இந்த பிரச்சினைகளை சரி செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றுவதில்லை. பிரச்சினைகளுடனேயே வாழப்பழகி விடுகிறோம். ஆனால் வேறு பிரச்சினை திடீரென்று வந்த நடக்க முடியாமல் போனால்?
    இதற்காகத்தான் நாம் அலட்சியமாக இல்லாமல் அவ்வப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்பது!
    சர்க்கரை நோய்க்கான மருந்துகளை நிறுத்தி விட்டதாக சொல்லியுள்ளதை படித்தபோது பகீரென்றது. நிஜமாகவே சர்க்கரை நோயுள்ளவர்கள் அனுபவிக்கும் பல தரப்பட்ட வலிகளை, பிரச்சினைகளை, அபாயங்களை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா?

    ReplyDelete