Tuesday, February 18, 2025

கேள்வி பதில்கள் தொடர் பதிவு.

இதை அப்போது எழுதிய நாள். வருடம். ஜுலை. 6, 2014. 

வெளியூர் பயணங்களில் என் எழுத்துப்பயணம் தடைப்பட்டிருந்த இரு வாரங்களில், இந்த "என் கேள்விக்கென்ன பதில்" தொடர் பதிவில், என்னையும் பத்தோடு ஒன்றாக, பதிந்திருந்ததை (பெயர் பட்டியலில்) சகோதரர் கில்லர்ஜியின் பதிவை பார்த்தறிந்தும் சற்று சந்தோசம் கலந்த திகைப்புக்குள்ளானேன்.

சந்தோஷம்…. என்னையும் மதித்து நட்பு வட்டத்தில் சேர்த்திருப்பது.!!!

திகைப்பு…. இந்த கேள்விகெல்லாம், தகுந்தாற் போல் என்னால் பதில் அளிக்க  இயலுமா?

பதில் எழுத அழைத்த அவரது அழைப்பை தட்ட இயலாமலும், காலம் கட(மற)ந்த ஒரு கதையை எப்படி மீண்டும் தொடர்வது என்று குழப்பமாகவும், இருந்தாலும், ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு கேள்விகளுக்கேற்ற பதில்களை உருவாக்கி,  (நன்றாகத்தான் சமாளிக்கிறாய..! வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய்? உன்னை……! என்று மனசாட்சி பல்லை நறநறவென்று கடிக்க..!) சரி! இதுவும் ஒரு பதிவாகத்தான் இருக்கட்டுமே! என்ற எண்ணத்தில், எழுதி வெளியிட்டு விட்டேன்.

வலையுலகில் அறியாத பல நல்லதோர் விலாசங்களையும், இந்த தொடர் பதிவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் பரிபூரணமான, நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக என் வலைப்பூவிற்கு வந்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள்  மிகவும் குறைவு! நானும் நிறைய வலைத்தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் இங்கு கூறிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்ப்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா? என்ற நப்பாசையும் என்னை எழுத தூண்டியது!

    இதோ! கேள்விகளுக்கான, என் பதில்களை, விமர்சிக்கும் உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்களுடைய 100 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

முதலில் 100 ஆவது வயதை தொட விருப்பமில்லை! இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்கப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா? அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா? என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட! இத்தனை ஆசையா உனக்கு? ஒரு பேச்சுக்கு எழுத சொன்னதற்கே, இப்படி நீட்டி முழக்கிறேயே!! உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான்! )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன்! யாருமேயில்லை! (அதன் பின்தான் புத்தியில் உதித்தது! காதருகே பேசி சென்றது என் விதியென்று!!.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க! பின்னே எங்கேயிருந்து கொண்டாட்டம்!!!!. 

     என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களிடமிருந்துதான், ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். நானும்அப்படித்தான்! ஆனால், கனிணியின் மூலம் இணையத்தின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த பின் இதில் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். சந்தர்ப்பங்கள் சுலபமாக என்னுடன் இணைந்து வர அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சிரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம். “சிரிப்பும் புளிப்பும் சிறிதுள” என்று என் பாட்டி அடிக்கடி கூறுவார்கள். “என்ன அர்த்தம்”? என்று நான் கேட்க “புளிப்பு ஒரு வயதுக்கு மேல் நம் உடம்புக்கும், பற்களுக்கும், ஒத்து வராது. அதுபோல் வாய் விட்டு சிரித்தலும், ஒரு வயதின் வரம்பு வரைதான். அதன்பின் அனாவசியமாக எதற்கெடுத்தாலும் சிரிக்காது, அடக்கி, புன்னகைக்க மனம் பக்குவபட்டு விடும்.” என்று கூறுவார்கள். பாட்டி சொன்னது அந்த காலத்தில், எனினும், அது என்னை பொறுத்த மட்டில் உண்மைகளாக போய் விட்டன. ஆனாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அனைவரிடம் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கடைசி என்பதேது?

24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

முன்பெல்லாம், மாதம் ஒரு முறை அந்த நிலையை சந்தித்திருக்கிறேன். இப்போது தங்கியிருக்கும் இடத்தில் அந்த நிலை கடவுள் புண்ணியத்தில் இல்லை! அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது! சே! என்ன வேலைகளோ”!!! என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே!!!:)) )

உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

திருமணத்தன்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தீர்களோ! அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோஷம் தினமும் உங்களை வந்தடையும்!” என்று மனதாறச் சொல்லி அவர்களை வாழ்த்துவேன்.

உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவீர்கள்?

ஒவ்வொரு வீட்டிலிருந்து ஆரம்பித்து, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என்று அனைத்துவிடங்களிலும், மனிதரை, மனிதர் நேசிக்கும் மனிதாபிமானம், உறவுகளை நேசித்தல், ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, அன்பு பரிமாற்றம், மரியாதையுடன் பழகுதல், போன்ற நற்பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால், உலகத்துக்கென்று எந்த பிரச்சனை வரப் போகிறது? இயற்கையின் பிரச்சனைகள் என்றால், மனிதரின் இந்த இயற்கையான குணங்கள் அதை ஒரளவு சரி செய்தும் விடுமென நினைக்கிறேன்.  

நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, அதில் எது சிறப்பாக இருக்கிறதோ! அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும்.! நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல! )

உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால், என்ன செய்வீர்கள்?

தவறான தகவலை காலம் ஒரு நாள் திருத்தி காட்டும் என்ற நம்பிக்கையில், பொறுமையுடன் இருப்பேன். வேறு வழி! தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?)

உங்கள் நண்பரின் மனைவி இறந்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்?

"உண்மையாக நேசித்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியரை விதி தன் கூரிய வாள் கொண்டு இரு கூறாக பிரித்து சந்தோசபட்டுக் கொள்கிறது. ஏனென்றால் அதன் பொழுது போக்கே அதுதான்.! “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்!” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் கூறுவேன்.

குழந்தைகளற்ற நண்பரென்றால் வேறு விதமாக ஆறுதல் அளிக்க வேண்டியதுதான்.! ஆனால், “ஆறுதல்” என்பது மனப்புண்ணின் எரிச்சல் அகற்றும் சிறு காற்றுதான். மற்றபடி உருண்டோடும் காலங்கள்தாம், முடிந்தால் அவரை தேற்ற முயற்சிக்கும்.  

உங்கள் வீட்டில் தனியாக இருந்தால், என்ன செய்வீர்கள்?

எனக்கு வீட்டின் வேலைகளே பெரும்பாலும் சரியாகவிருக்கும்.! அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது தைப்பது, ஒட்டுவது,  என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே!” என்று அனைவரிடமும் திட்டுகள் வேறு வாங்கி, தனிமையை சமாளித்திருக்கிறேன்.) செய்வது, என்று தனிமையை விரட்டிய காலம் போய் இன்று எதையாவது எழுதிக் கொண்டும், நடுவில் டி.வி யுமாக, தனிமையை போக்குகிறேன்.

இதற்குள் இந்த தொடர் பதிவில் வலைத்தளத்தின் உறவுகள் அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்

######################################

வணக்கம் அனைவருக்கும்.

இன்று சகோதரி கோமதி அரசு அவர்களின் வானொலி பதிவை கண்டதும், அவர் கூறிய அந்த கேள்வி பதில், சுற்றுத் தொடரில் நானும் கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை எடுத்து படிக்கும் போது, அவர் அளவுக்கு அருமையான பதில்களை நான் தந்திருக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். அப்போது அவரின் அறிமுகமும் எனக்கில்லை. ஆனாலும் அன்று என்னையும் பெருமைபடுத்திய நட்புள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை.

அன்று ஏதோ சமாளித்து எழுதியது இன்று கோமதி அரசு சகோதரியின்  பதிவை படிக்கும் போது நினைவுககு வர இது மீள் பதிவாக மீண்டும் இன்று என் வலைப்பூவில் உருப்பெறுகிறது. "உனக்கு இது ஒரு பதிவை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் என புரிகிறதென " என் மனது உறுதியுடன் சொல்கிறது. இப்படியான  நிர்பந்தங்களினால், சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவோடு, பதிவாக, பத்தோடு பதினொன்றாக இதுவும் இங்கே அரங்கேறுகிறது. 

அன்று மனதில் எழுந்த எண்ணங்களை மட்டும் அப்போதுதான் கற்றுக் கொண்ட டேபிள் டாபில் எப்படியோ தொகுத்து தந்த நான் இன்று  கைப்பேசியில், வண்ணங்களையும்  இணைத்து தந்துள்ளேன்.  இது ஒன்றுதான், பத்து வருடத்தில் நான் பெற்ற முன்னேற்றம்.இதை நவிலும் போது  சற்று நாணமாகத்தான் உள்ளது. எனினும், இப்போது உங்கள் அனைவரின் ஊக்கம் நிறைந்த அன்புகளை பெற்ற பெருமிதத்தில் மகிழ்வெய்தியிருக்கிறேன். 

அன்று பதிவுக்கு வந்து பதில் தந்து வாழ்த்தியவர்களுக்கும், இன்று பதில் தந்து வாழ்த்தப் போகிறவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்🙏. 

Friday, February 7, 2025

கற்பனையுடன், கலந்த காவியம்.

 அம்மா..! ஏனோ என்னை நீ பெற்றெடுத்தாயே..!!

சூரசேனரின் மகள் குந்திதேவி. அவளின் சிறு வயது இயற்பெயர் பிருதை. (பிரீதா) பகவான் கண்ணபிரானின் வளர்ப்பு தந்தையான வசுதேவருடன் பிறந்தவள். ஸ்ரீகிருஷ்ணருக்கு அத்தை குந்திதேவி. . 

மன்னர் சூரசேனன்  தன் உயிர் நண்பர் குந்தி போஜனின் வேண்டுகோளுக்காக தனக்கு முதலாவதாக பிறந்த மகளை, அவர் மகளாக வளர்க்க விருப்பம் கொண்டு கேட்டதினால் அவருடன் அவர் நாட்டில் வளர அனுமதித்து அவருக்கு தத்தாக தாரையும் வார்த்து தந்தார். அன்றிலிருந்து அவள் பெயர் குந்திதேவி ஆயிற்று.

தன் யாகம், அது சம்பந்தபட்ட பூஜைகள் தடங்கலின்றி செய்ய உதவிக்கு பணிக்கப்பட்டிருந்த இளவரசி குந்தி தேவிக்கு இயல்பாகவே அந்த இளவயதிலேயே இருந்த சிறந்த ஆன்மிக பக்தியில் மனம் மகிழ்ந்து அவளுக்கு குழந்தை வரமருளும் ஒரு மந்திரோபதேசம் செய்து அருளியவர் துர்வாசர் மகரிஷி. மேலும், அவளுடைய பிற்கால வாழ்வையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் தன் தவ வலிமையால் அந்த மந்திரத்தை அவளுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே  உபதேசித்தார். ஆனால், அவள் செய்த முதல் தவறு அதனை அந்த ஏதுமறியா இளவயதிலேயே  விளையாட்டாக சூரியபகவானை நோக்கி, பரீட்சித்து பார்த்ததுதான்..! அதன் மூலமாக பிறந்தவன் மாவீரன் கர்ணன்.

பொது வாழ்க்கைக்கு பயந்து அவள் செய்த இரண்டாவது தவறு தனக்குப் பிறந்த அந்த மகனை ஒரு பேழையில் வைத்து கங்கை நதியில் விட்டது. ஆனால், அப்பேழை தெய்வாதீனமாக நதி நீரினால், எந்த பங்கமும் வாராது,  பேழையுடன் மிதந்து சென்று அதிலுள்ள குழந்தை, ஹஸ்தினாபுரம் அரசவை தேரோட்டி அதிரதியிடம் சென்றடைந்து அவனால் சீரும் சிறப்புமாக வளர்க்கபட்டது. 

குழந்தை கர்ணன் வளர்ந்து நல்ல வாலிப வயதில் ஒரு நாள் தன் வளர்ப்பு தாய் தகப்பனால் தன் பிறப்பின் உண்மை அறிந்து தான் ஒரு பெற்றோர் யாரென தெரியாத அநாதை குழந்தையாக அடையாளம் காட்டப் பெற்ற போது துடித்துப் போகிறான். சென்ற இடமெல்லாம் அவமானம், இன்னாரின் மகன் எனத் தெரியாத அசிங்கங்கள் என மனம் துவன்ற போது, ஒரு காலகட்டத்தில் ஹஸ்தினாபுரத்து மூத்த இளவரசன் துரியோதனனுக்கு உயிரினும் மேலான நட்பாகினான். 

அவனால், சிற்றரசராக ஒரு ராஜ்ஜியம் பெற்று, மணிமுடி, பேர் புகழ் என அனைத்தும் கிடைத்தன. துரியோதனின் நன்மதிப்பால் பதவியேற்று நாட்டில் நல்லாட்சி செய்த போது, இவன் தேரோட்டி மகன் என்ற அவச்சொல் கொஞ்சம் மறைந்து, பிறர் கேட்டதை கொடுப்பதற்கென்றே பிறந்திருக்கும் கர்ண மாமன்னன் என்ற நல்ல பெயர் வந்தது. 

அடுத்து ஹஸ்தினாபுரத்தில் நாடும் சூதும் ஒன்றையொன்று தழுவி மகிழ்ந்தன. துரியோதனனின் சிற்றப்பா பாண்டுவை முறைப்படி மணமுடித்தும் குந்திதேவி தன் கணவனாகிய பாண்டுவுக்கு ஏற்பட்ட குழந்தைகள் இல்லாத ஒரு சாபத்தினாலும், மாற்றாக தன் சிறு வயது பழைய  மந்திர பலன்கனாலும், பெற்றெடுத்த பாண்டவர்களாகிய ஐவருக்கும், துரியோதனன் உட்பட கௌரவர்களாகிய திருதராஷ்டிரனின் நூறு புதல்வர்களுக்கும், பங்காளி சண்டைகள் பாரபட்சமின்றி உருவாயின. கௌரவர்கள் தங்களுடைய கபட சூதாட்டத்தில் வென்ற நாட்டின் அதில் இருவருக்குமான பங்கீடு வார்த்தைகள் படு தோல்வியில் முடிந்தன. 

கௌரவர்களின் தீய மதியினால் விளைந்த சூதும், சிக்கலும், பாண்டவர்களை முடிந்த வரை பழி வாங்கியும், இனி வருந்தி பயனில்லை என்பதாக தலை குனிந்து மெளனித்திருந்தன. தர்மத்தை அதர்மம் வெல்ல துடிதுடித்து கொண்டிருந்தன. 

விளைவு.. போர்...! குருஷேத்திரம் குருதி புனலில்  மூழ்கி தத்தளித்தது. பதினெட்டு நாள் யுத்தத்தில் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். பாண்டவர்களின் வாரிசுகளும், கௌரவர்கள் அனைவரும், நாட்டுக்காக தம்முயிரை துச்சமாக நினைத்த அரசவை சான்றோர்கள், பெரியவர்கள் என அனைவரையும் யுத்தம் காவு கொண்டது. இறுதியில் தர்மம் வென்றது. அதர்மம் இயன்றவரை போராடி அனைவரின் உயிர்களையும் நடைபெற்ற போருக்கு பரிகாரமாக எடுத்துக் கொண்டபடி. தோற்றது. 

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த குந்திதேவி நினைவலைகளை விட்டு விலகி, ஒரு நீண்ட பெருமூச்செறிந்தாள். எத்தனை கொடிய சம்பவங்கள்  யாரிடமும் கேட்காமல், யாரையும் எதிர்பாராமல் நடந்து முடிந்து விட்டன. 

தன் வாழ்வில்தான் ஆரம்ப முதற் கொண்டு எத்தனை இன்னல்களை அனுபவித்தாயிற்று...! ஒன்றா...! இரண்டா..! வாழ்வில் அடுத்தடுத்து வந்த இன்னல்களை பொருட்படுத்தாது இன்முகத்துடன் மெளனமாக ஏற்று கொண்டதினால்தான்,சிறுவயதில் இருந்தே தன்னை ஒரு துறவியின் மனநிலையில் வாழுபவள் என்கிறார்களோ ..? 

தந்தைக்கு மதிப்பும் தந்து, பின் வளர்ப்பு தந்தைக்கு தன்னுடைய எந்த ஒரு செயலாலும் களங்கத்தை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு, திருமண வயதில் தனக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த சுயம்வரத்தில் தனக்கு மணாளனாக அமைந்த ஹஸ்தினாபுரத்து அரசன்  பாண்டுவுக்கு மனதாற மரியாதை செலுத்தி, புகுந்த நாட்டின் அரசவை பெரியவர்களையும், சான்றோர்களையும், உறவுகளையும் அவர்களின் வார்த்தைகளையும் சத்தியமாக நினைத்து மதித்து, எந்த துன்பங்கள் வந்த போதும், தன் பிள்ளைகளுடன் அனுசரித்து போய், சிறந்த அறிவுரைகள் கூறி அவர்களை வளர்த்து, இறுதியில் தர்மம், தர்மம் என்று, அதன் பால் கொண்ட நல்மதிப்புக்காக பெரும் அறப்போரை சந்தித்து, அன்பானவர்களையும், உறவுகளையும் இழந்து, கடமை என்ற ஒரு செயலுக்காக தன் புத்திரர்களை ஹஸ்தினாபுரத்து அரியணையில், அமர்த்தி அரசாள வைத்துப் பார்த்து, பிறகு வயதான தன் மைத்துனர்கள், மற்றும்  உடன்பிறவா சகோதரி காந்தாரியுடன் அவர்களின் வருத்தத்தையும், வார்த்தைகளையும் கண்டு தானும் மனம் வருந்தி, அவர்கள் வானபிரஸ்தம் ஏகுகையில், அவர்களை தட்டி அரசவையில் இருத்தி வைக்க இயலாமல், தானும் துறவு பூண்டு வனவாசம் ஏகி, அங்கு வசித்த பல வருடங்களுக்குப்பின், அந்தக் காட்டில் எழுந்த  காட்டுத்தீயின் வெப்பத்தையும், குளிர் நிலவாக ஏற்று வாழ்ந்த அந்த உலக வாழ்வை முடித்து விட்டு  இங்கு வந்தாகி விட்டது. 

இன்று வலிய வந்து ஏற்றுக் கொண்ட இருப்பிடம் இது. இதில் குறையொன்றும் இல்லை..! செய்த தவறுக்கு பரிகாரம் தேடித்தான் இந்த வாழ்வை ஏற்று வந்துள்ளேன் என மனத்துள்  கூறிக் கொண்டாள் குந்திதேவி. 

துறவு என்பதை வாழ்வின் இறுதி காலத்தில், எல்லாம் நடந்து முடிந்த பின், புகுந்த வீட்டு உறவுகளின பேச்சுக்கு கட்டுப்பட்ட பின், பிறகுதான் முழுமையாக ஏற்றுக் கொண்டேனா என்றால், இல்லையென்று தன் உடல்  நிச்சயத்துடன் கூறுகிறது என்பதையும் அவளால் மறுக்க இயலவில்லை. 

குந்தி ராஜ்ஜியத்தில் வாழ்ந்த போது வாலிப மனதில் அப்போது எத்தனை ஆசைகள்..? இளமை பருவத்தில் இளவரசியாக வசதியாக வலம் வந்து வாழ்ந்த காலங்கள்...! மங்கைப் பருவத்தில் ஹஸ்தினாபுரத்து மன்னர் பாண்டுவை சுயம்வரத்தில் கைப்பிடித்தவுடன் மனதில் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத சந்தோஷங்கள்...! அப்போது தன்னால் அவைகளை துறவு நிலையுடன் விலக்கி வைக்க இயலவில்லையே..! 

மணந்த கணவரிடம் தன் இளவயது தவறை சமயம் பார்த்துச் சொல்லி, மன்னிப்பு கேட்டு விட்டு வாழ்வின் சந்தோஷங்களை தொடரலாம் என்று தானே அந்த ஆசைப்பட்ட மனது துடித்தது. ஆனால், அதுவரை ஆசைப்பட்ட அந்த மனது அண்டை நாட்டுடன் போருக்குச் சென்ற கணவர் போரில் கிடைத்த பரிசாக மற்றொரு நாட்டுப் பெண்ணை மணமுடித்து கைப்பற்றி வந்ததை கண்டதும், பிறகு தன் கணவர் அவர் பெற்ற சாபத்தின் காரணமாக, நாட்டை விட்டு, கானக வாழ்வை ஏற்றுக் கொண்ட போது, தாம் இருவரும் அவருடனேயே கானகம் செல்ல வேண்டிய சமயங்களில்தான், முழுமையான துறவை நோக்கி, மனதுடன் உடலும்  செல்ல ஆரம்பித்து விட்டதை அவள் முழுவதுமாக உணர்ந்தாள். ...! 

பிறகு கணவர்  "தான் இரு மனைவிகளை பெற்றும், தன் சந்ததியினரை பெறாமலேயே  தன் வாழ்வு இவ்வாறு முடிய நேருகிறதே" என வருத்தமுற்று பேசிய ஒரு  சூழ்நிலையில், அதுநாள் வரை மூடி மறைந்திருந்த தன் மனதில் உள்ள அந்த உண்மையை எடுத்துச் சொன்ன போது, கணவரின் ஆஞ்கைபடி மூன்று மகன்களை தன் மந்திர உச்சாடன மகிமையில் ஈன்றெடுத்த தந்த போதும், மனதில் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் தரவில்லையே...! அதனால்தான் தனக்கு  இளையவளான மாத்ரி கேட்டவுடன் அவளுக்கும் அந்த மந்திர உபதேசம் செய்வித்து, அவள் மூலமாகவும், இரு குழந்தைகளை தன் கணவருக்கு தர முடிந்தது. 

பின்பு விதி வழி அன்பு கணவரையும், இளையவள் இழப்பையும் தாங்கிக் கொண்டு பெற்ற குழந்தைகள் ஐவரை வளர்த்து காக்கும் பொறுப்பை சுமந்த போதும், மனது சமநிலையில்  பக்குவமடைந்து விட்டது. அந்த பக்குவந்தான் புகுந்த நாட்டுக்கு வந்து சேர்ந்ததும், பெரிய மைத்துனர் திருதராஷ்டிரனின் நூறு குமாரர்கள் தங்கள் புதல்வர்களை அலட்சியபடுத்தி, அவமானப்படுத்தி பார்க்கும் போதும், தன் புதல்வர்களுக்கு அமைதி காக்கும்படி அறிவுரைகள் சொல்ல வைத்தது. 

விதி அத்தோடு அவளை விட்டதா? இளவயதில், அறியா பருவத்தில் பெற்ற மகனை, நதி நீரில் அனுப்பி வைத்த மகனை, சந்திக்க வைத்து, அவனிடம், தங்களுடன் வந்து விடுமாறு அறிவுறுத்தி, அவன் அதை மறுத்து சொன்ன அந்த வார்த்தைகளில், அவனிடம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, அவனிடமே இரண்டு கடுமையான வரங்களை கேட்கும்படி செய்த அந்த விதியிலும், அவள் பக்குவப்பட்ட மனம் அதிகம் கலங்காமல் சமனபட்டுதான் இருந்தது. பதிலுக்கு அவன் கேட்ட இரு வரங்களையும் தர முடிந்தது. 

இறுதியில் அந்த தலைமகன் சொன்னபடி போரில் வீரமரணம் அடைந்து உயிர் நீத்த போதும், அந்த மகனை வாரி அணைத்து, "இவனும் என் மகன்" என ஊரறிய சொல்லும் போதும், மனது அழுது துவண்டாலும் நிலைகுலைந்து போகாமல், ஒரு துறவியின் ஒருமை சார்ந்த எண்ணத்தில் வலுப்பட்டுத்தான் நின்றது. ஆனால், தன்னால் அவன் வாழும் போது பெற்ற அவமானங்களை தினமும் நினைக்கும் போது மனம் சஞ்சலங்களில் ஆழ்ந்ததை மட்டும் அவளால் தவிர்க்க இயலவில்லை. இதோ...! அதற்காகத்தான், ஒரு பிராயசித்தமாக இந்த இடத்தை அவள் தேர்ந்தெடுத்து பிடிவாதமாக வந்துள்ளாள். 

"அம்மா...! தாங்களா?" என்ற குரல் கேட்டு மீண்டும் கலைந்தாள் குந்திதேவி.

"யார்.. பாஞ்சாலியா..? நீ ஏனம்மா இங்கு வந்தாய்..? உன்னை யார் இங்கு வரச்சொன்னது? உன்னை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் யாருக்கு வந்தது.? எப்போதுமே அமைதியாக ஒலிக்கும் அவளின் குரல் பாஞ்சாலியின் பதிலுக்காக பரபரத்தது. 

" அம்மா..! நீங்கள் முதலில் சொல்லுங்கள்...! எதற்காக நீங்கள் இங்கு வாசம்..?நான் உங்களை இங்கு சற்றும் எதிர்பார்க்கவேயில்லை...!" பாஞ்சாலியின் வருத்தம் குரலில் தெரிந்தது.

"என் பிராயச்சித்தம் தேடி நானாக இங்கு  வந்திருக்கிறேன் மகளே..! இது இறைவன் அளித்த முடிவல்ல..! நானே விரும்பி அளித்துக் கொண்ட தண்டனை....!"ஆனால், உன்னை நான்  இங்கு எதிர்பார்க்கவில்லை. நீ எப்படி இவ்விடம் வந்தாய்..? அதைக்கூறு..! அழுத்தமாக வந்த அந்த குரலுக்கு பணிந்தாள் பாஞ்சாலி. 

மஹாராணி காந்தாரியின் சாபத்தினால், யாதவ குலம் ஒருவரை யொருவர் அடித்துத் தாக்கிக் கொண்டு அழிந்ததையும், அதன் மன்னனான கிருஷ்ணர் அதை கண்டு மனம் பொறுக்காமல், தான் இந்த பூலகில் வந்த தன் அவதார நோக்கம் முடிவுற்றதை மக்களுக்கு உணர்த்த வேண்டி, தம் பூத உடல் விட்டு வைகுண்டம் திரும்பியதையும் விவரித்து கூறினாள். 

"மேலும், பஞ்ச பாண்டவர்களும் கிருஷ்ணர் இல்லாத உலகில் வாழ விருப்பமின்றி, தங்கள் மகன் அபிமன்யுவின் புத்திரனாகிய பரீஷித்துவுக்கு அரசனாக பட்டம் கட்டி விட்டு, பூவுலகை துறக்க எண்ணம் கொண்டு உயிருடன் சொர்க்கத்தை அடைவதற்காக  மேருமலை ஏறி நடந்து வந்து கொண்டிருக்கும் போது, தான் முதலில் மயக்கமுற்று மடிந்ததினால், இங்கு வந்த கதையையும் கூறினாள் பாஞ்சாலி." 

"ஆ...!!! என் அன்பு மருமகன் கிருஷ்ணனுக்கா இந்த முடிவு..! மற்றவர்களின் செயல்களை மட்டுமின்றி அவனின் செயல்களையும்  அவன்தானே தீர்மானிப்பான். ...! அவனால் யாதவ குலத்தை கட்டுப்படுத்த இயலவில்லையா. ..?  என்ன ஒரு சோகம்..! ஆனால், எல்லாமே அவன் நினைத்ததை  நடத்தும் மாயைதான்...! இருந்தும் இங்கிருக்கும் எனக்கே அவன் மறைவு செய்தி வருத்தத்தை தரும் போது, அவனால் மட்டுமே, அவன் வார்த்தைகளின் போக்குப்படி அசைபவர்கள் நீங்கள் அனைவரும்...! உங்கள் மனதும் எனக்குப் புரிகிறது....!! சரி.. நீங்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைய எண்ணம் கொண்டு சேர்ந்து  செல்லும் போது, உனக்கு மட்டும் ஏன் இந்த முடிவு உண்டாயிற்று...? மகளே...!"குந்தியின் கவலை அவள் குரலில் ஒலித்தது. 

"காரணம்.. அதை நான் எப்படிச் சொல்வேன் அம்மா..! நான் உங்கள் குமாரர்களாகிய பஞ்ச பாண்டவர்களில், இளைய குமாரர் பார்த்தனின் மேல் வைத்த தனிப்பட்ட பாசந்தானாம் அம்மா..! ஐவரை விட அவர் மேல் நான் தனிப்பட்ட பக்தி, தனிப்பட்ட அதீத பாசம் வைத்திருந்தேனாம்..! இது எப்படி சாத்தியமாகும்...!! என்னையறியாமலேயே பார்த்தன் பேரில் நான் அதிகம் பற்று வைத்திருந்தேனா அம்மா...! இது உண்மையா அம்மா..! விசும்பலாக வந்தது பாஞ்சாலியின் குரல். 

"அது நீ அவனை மட்டும் மணமுடிக்க  நினைத்திருந்த போது, தீடிரென மாற்றங்களை எதிர்பார்த்திராத ஒரு காரணத்தால் கூட வந்ததாக இருக்கலாம். என்ன செய்வது? என் வாயிலாக உன் வாழ்க்கைப் பாதை மாறியது. நீ தவறேதும் செய்யவில்லை மகளே..! உன் குணத்துக்கு நீ எப்படியோ அப்படியேதான் இருந்தாய்..! இப்போதும் இருக்கிறாய்...! நீ ஒரு உத்தமி அம்மா...! உத்தமி. அதில் என்றும் மாற்றமில்லை மகளை... வீணாக வருந்தாதே...!! அன்றும் சரி,..! இன்றும் சரி..! என் வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்லவில்லை. உன்னைப்போல் ஒரு மருமகளைப் பெற.... இல்லையில்லை...., ஒரு மகளைப் பெற நான்தான் தவம் செய்திருக்க வேண்டும். 

இதோ... நானும்தான் நீ சொல்லும் அந்த மகனின் மேல் அதிக பாசம் வைத்து, என் வயிற்றில் பிறந்த அறுவரில் பெரியவனை இழந்து விட்டேன். இழந்ததோடு மட்டுமின்றி, அவனின் வாழ்ந்த காலம் தொட்டு மடியும் வரை அவனுக்கு ஏற்பட்ட  அவமானங்களுக்கு காரணமான நான் ஒரு பெரும் பாவியம்மா..... பாவி.. ! அந்தப் பாவத்தை எங்கு  எப்படி நான் கழித்து தீர்க்கப் போகிறேன்....?  அதனால்தான் காட்டுத் தீயில் மடிந்த பின், உன் பெரிய மாமனார்கள், அருமை தாயார் காந்தாரி அவர்கள் என யார் சொல்லியும் கேட்காமல், அனைவருக்கும் கிடைத்த அந்த  சொர்க்கத்தின அழைப்பை என்னையும் பகிர்ந்து கொள்ள அழைத்தும் கூட ஏற்று செல்லாமல் பிடிவாதமாக இந்த நரகத்திற்கு வந்தேன். ஆனால், இங்கும் என் வயதிற்காக எந்த கடுமையான வேலைகளும் தராமல், மரியாதை தந்து நோகடிக்கிறார்கள்...! நொந்து கிடக்கும் மனதிற்கு மருந்தாக என் உடலையும் கொஞ்சம் கடுமையான வேலைகளினால் நோகடித்தால்தானே எனக்கு....,!! நான் செய்த பாவத்திற்கு  பரிகாரமாக இருக்கும்...!! "கண்களில் கண்ணீருடன் ஒரே மூச்சில் குந்தி தேவி சொல்லி முடிக்கவும், அர்ஜுனன் நகுலன் சகாதேவன், பீமன் என நால்வரும் அங்கு வந்தனர். 

" அம்மா...! நீங்கள் எப்படி இங்கு...?" என பாஞ்சாலி கேட்ட அதே கேள்வியுடன் பதறி போய் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டனர். 

எதிர்பாராது காலடியில் பணிந்து நிற்கும் தன் அன்பு மகன்களை கண்டதும் குந்திதேவி திகைத்துப் போனாள். 

"குமாரர்களே ..! என் கேள்வியும் அதுதான்...! இப்போதுதான் பாஞ்சாலி வந்தாள்.. அடுத்தடுத்து நீங்களும் இங்கு வர காரணம்...? உங்களில் மூத்தவன் உங்கள் அண்ணன் எங்கே..? அவனை தனித்து விட்டு, விட்டு இப்படி வர உங்களுக்கு யார் ஆஞ்கையிட்டது...? திகைப்பு நீங்கி குந்திதேவியும் சற்றே கோபத்துடன்  கேட்டபடியே தன் மகன்களை அவர்கள் தலையை தொட்டு ஆசிர்வதித்தாள். 

" அம்மா..! அவரவர்களின் திறமைகள் மேல் நாங்கள் எங்களையறியாமலே அதிகமாக பெருமை கொண்ட காரணத்தால் இங்கு வர நேர்ந்தது...! அண்ணன் அவர் தர்மத்தில் என்றும் சிறிதும் பிறழாதவர் என்று தாங்கள் அறிவீர்கள். அவரின் செயல்கள் எவருக்குமே துன்பத்தை தராதபடிக்கு கடமை வீரராக மட்டுமே வாழ்ந்தவர். அதனால்,அவர் இப்போது அவருக்கு  விருப்பமின்றியே இருந்தாலும், சொர்க்கத்தை சென்றடைந்து இருப்பதாகவும் அறிந்தோம்..! அங்கு அவர் அனைவரின் விருப்பங்களை உணர்ந்து செயலாற்றி சத்திய தர்மங்களை அனுசரித்து நடந்து கொள்வார். இருப்பினும், இப்போது எதிர்பாராது உங்களிருவருடன் இங்கு நாங்கள் சேர்ந்திருப்பதையே எங்களின் சொர்க்கமாக கருதுகிறோம்...! அர்ஜுனன் அமைதியாக கூறியபடி அன்னையின் கைகளை வாஞ்சையுடன்ப் பற்றிக் கொண்டான். 

குந்தியின் மனம் சோர்வுற்றது....! "யாருமில்லாத தனிமையுடன் ஒரு துறவியின் மன நிலையோடு, தன் பிராயசித்தத்தை இங்கு கழிக்கலாமென்று வந்தால், இப்படி தன்னை சூழ்ந்த உறவுகளும் வந்து தங்களையும் என்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு சந்தோஷமடைகிறார்களே..!" என்ற வருத்தம் மேலோங்கியது அவள் மனதில்...! 

"குழந்தைகளே..! உங்களுக்கு ஏன் இந்த முடிவு..?  உங்களை பூலோகத்தில் ஒரு பொழுதேனும், வாழ விடாமல் இம்சித்து பார்த்து சந்தோஷமடைந்தவர்கள் அனைவரும் சுவர்க்கத்தில் இருக்க, நீங்கள் ஏன் இப்படி மறுபடியும் அல்லாட வேண்டும்..? ஏன் இந்த சோதனைகள் மறுபடியும்...! இது இறைவனுக்கே அடுக்குமா..? குந்தி தன்னையறியாமல் மனம் நொந்து கூறி கண்ணீர் விடவும், "

" அதைத்தான் அம்மா நானும் அங்கு சென்றவுடன்  கேட்டேன்..! உன் மனதில் இன்னமும் கௌரவர்கள் மேலுள்ள கோபங்கள் அசூயைகள் குறையவில்லையா..? நடந்த போரில் தர்மம் தோற்காது வெற்றிகளை உனக்கு அள்ளி அளித்தும் அவர்கள் மேலுள்ள உன் மனதின் வன்மங்கள் அழியவில்லையா ? நீ எத்தனை தர்மங்கள் செய்தும், உன் அறியாமையால் இப்படி உன் ஒன்று விட்ட  சகோதரர்களை இகழலாமா? அதனால் நீயும் உன் தம்பிகள், மனைவியுடன் சிறிது காலம் நரகத்திலிருந்து வா" வென தர்ம தேவன் என்னையும் இங்கு இருக்கப் பணித்து விட்டார்..! மேலும் கௌரவர்கள் மட்டுமின்றி குருஷேத்திர பூமியில் வீரமரணம் அடைந்த காரணத்தினால் அனைவரும் இன்று சொர்க்கத்தின் நிரந்தரவாசிகள் ஆகி விட்டார்கள். ஆசைகளையும், பற்றையும், அதன் காரணமாக எழும் கோபங்களையும் விடாதிருக்கும் எங்களுக்குத்தான் இந்த நிலை. எனக்கும் தம்பிகள், பாஞ்சாலி இல்லாமல் அங்கு தனித்திருக்க விருப்பமின்றி தோன்றவே உடனே இங்கு வந்து விட்டேன் அம்மா...!!" என்றபடி அங்கு தர்ம புத்திரர் வரவும் சரியாக இருந்தது. 

அனைவரும் தீடிரென அவர் சொல் கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த பின் ஒருவரையொருவர் பிரியமுடன பார்த்து கண்களால் அன்பை பகிர்ந்து கொண்டனர். 

" அம்மா..! எங்களை விடுங்கள்..! நீங்கள் இப்படி விரும்பி இங்கு வரலாமா? உங்கள் வயதிற்கு எத்தனை இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள்..! அதை விடவா உங்கள் பிராயசித்தங்கள்..? உங்களை நாங்கள் அறிவோம் அம்மா..! உங்கள் மனதால் நீங்கள் யாருக்கும் கெடுதல்களை நினைத்ததில்லை...! அப்படியிருக்கும் போது ஏன் இந்த முடிவெடுத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்...? தர்மர் அன்னையின் அருகில் வந்து அமர்ந்தபடி இதமாக பேசினான். 

"குழந்தாய்.. நீ தர்மத்தின் புதல்வன்.. இப்படித்தான் உன்னால் யோசிக்க முடியும்...! ஆனால், நான் உன் தமையனுக்கு அளித்த வேதனைகளை நீ அறிவாயா.. ? உங்களை நான் எங்குமே எப்போதுமே எந்த நிலையிலுமே விட்டுத் தந்ததில்லை. மகிழ்வுகளும், அதே சமயம் வேதனைகளும், சூழும் போது, உங்களுக்கு பக்கபலமாக நான் உங்களுக்கு அருகிலேயே இருந்துள்ளேன். இரண்டையும் சமமாக பார்க்கும்படி கற்றுத் தந்துள்ளேன். விளைவுகளை கண்ட போதில் சமாதானபடுத்தியுள்ளேன். ஆனால், அவனை பிறந்தவுடன், மனமொப்பி இல்லையென்றாலும், என் ராஜ வாழ்க்கைக்கு புறம்பானதாக, ராஜ குடிமக்களுக்கு, அவச்சொற்களை தந்து விடக் கூடியதாக அவன் பிறப்பு இருந்து விட கூடாதே என்பதற்காக, அவன் வாழ்வை அவனை கேட்காமலேயே தியாகம் செய்ய வைத்த பெரும் பாவியடா நான்...! 

"அன்று உங்களுக்கு பக்கபலமாக, தூணாக, நின்ற மாயவனின் மூலமாக அவன்தான் என் மகன் எனபதையறிந்து, அவனைப் பார்க்கச் சென்ற போது, அவனின் தாயார் நான்தான் எனக் கூறியும் சிறிதளவும்  நம்பவில்லை அவன். 

மாறாக இப்படி ஒரு தாயார் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென என்னை பெருமைபடுத்தினான். என் சோகத்தை குறைப்பதற்காக உங்களை நீங்களே இப்படி பொய்யுரை சுமந்து வந்து கூறி என்னை ஆசுவாசபடுத்துகிறீர்களா என கேட்டு அவனை அவனே குறைத்து மதிப்பிட்டு கொண்டான். 

இறுதியில் உண்மை அவனின் மனதோடு உரத்து உரைத்ததும், "அம்மா...!  இன்றாவது என்னை பெற்றெடுத்தீர்களே..!!" என என்னை கௌரவப்படுத்தினான். அவனை நான் பெற்றதற்கு மகிழ்ந்த அந்த தருணத்திலிருந்து, "அம்மா..! என்னை ஏனோ நீ பெற்றெடுத்தாயே...!  என இன்று வரை நான் ஒவ்வொரு நாளும், என் தாயை நினைத்தபடி, பொழுதுக்கும் வருந்தி நிற்கிறேன்.  

அத்தனை நாள் பிரித்து வைத்த கோபத்தை அந்த நேரத்தில் சிறிதேனும் காட்டவில்லை அந்த குணமுடையோன். என்னை கண்ட சந்தோஷத்தில், நான் கேட்ட வரங்களை தட்டி கழிக்காமல் உடனே பரிசாக தந்தவன், பதிலுக்கு அவன் இரு வரங்களை கேட்டு என் வாயை கட்டிப் போட்டான். அச்சமயம் பேச்சிழந்து நின்றேனே ஒழிய  மூச்சிழந்து போகவில்லை நான்..! 

"கௌரவ படைகளுக்கு போர் பதவிகள் பங்கிட்டு தரும் சமயத்தில், "நீ வீரன் அல்ல...! பெற்றவர்கள் யாரென தெரியாத  கோழை" என சான்றோர்கள் இழிந்து பேசிய வருத்தத்தில், "இத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த அந்த அன்னை...! அன்னையா அவள்...! பெற்ற மகனை நதியில் இட்டு கொல்ல நினைத்த ஒரு பாவி... அரக்க குணமுடைய அவள் ஒரு அன்புத் தாயாக இருந்திருக்க மாட்டாள். ...? அவளால்தான் எனக்கு இந்த இழிவு..! இப்போது என் வயிறெரிய கூறுகிறேன். .அவள் செய்த இந்த  பாவங்களுக்கு அவள் ஏழேழு பிறவிக்கும் அவள் நரகத்தில்தான் வாசம் செய்ய வேண்டும்...!" என்று மனம் கடிந்து, உடல் கடினப்பட்டு கூறினானே ...!  அந்த சொல் சொல்லுமளவுக்கு அவன் மனம் எந்த பாடு பட்டிருக்கும்...? அந்த பாவத்திற்கு, பரிகாரமாக, அவன் சொல்படி நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா கூறுங்கள்...!!" குந்திதேவி இத்தனை நாள் சோகத்தையும், மனதில் ஏற்பட்ட வருத்தத்தோடு சேர்த்து கண்ணீராகவும் கொட்டித் தீர்த்தாள். 

பாண்டவர்கள் ஐவரும், பாஞ்சாலியும் அவளை எப்படி தேற்றவது எனத் தெரியாமல் தவித்தபடி இருந்தனர். இதுநாள் வரை தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது அமைதியாகவே இருந்த தாய் இன்று இப்படி உடைந்து போவாள் என்பதை அவர்கள் சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. 

" அம்மா.." ஆ.....! அன்று கேட்டு புளகாங்கிதமடைந்த அதே குரல்...! காதுகளில் தேனாக பாயந்து நாவின் வழி இறங்கி, அதன் சுவையை மனதுக்குள் பாய்ச்சியது குந்திதேவிக்கு. அங்கே கர்ணன் பழைய தேஜஸ் பெற்ற பொலிவோடு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

"கர்ணா.. என் அன்பு மகனே....! என்று பாய்ந்து சென்று அவனை தழுவி வரவேற்க குந்தியின் கைகளும், மனதும் பரபரத்தன. ஆனால், ஏதோ குற்ற உணர்வு தடுக்க, மனதை அடக்கியபடி "கர்ணனா..! வா. ! மகனே..! " என்றாள். 

" அம்மா..! நீங்கள் பேசியதெல்லாம் கேட்டேன். அன்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன என் வார்த்தைக்காக உங்களுக்கு ஏனம்மா இந்த தண்டனையை வழங்கிக் கொள்கிறீர்கள்.? அன்று அந்த சான்றோரின் மனதில் உதித்த நல்ல எண்ணந்தான் என்னை முதல் நாளைக்கே யுத்தத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது என்றாரே..! அதனால்தான் என் நண்பனுடன் இன்னமும் பல நாட்கள் நான் பூவுலகில் இணைந்திருக்க முடிந்தது. அம்மா...! இப்போதும் என்னை வாழ வைத்த தெய்வம் சொல்லித்தான், அவன் வருத்தத்தை கண்டதும் நான் இங்கு வந்தேன். நீங்கள் படும் சிரமங்களை என்னால் பார்க்க இயலவில்லை. புறப்படுங்கள்..! இப்போதே..!  நாம் இங்கேயாவது சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததேயென என் மனம் பூரிக்கிறது... வாருங்கள் அம்மா...!போகலாம் " என்றபடி தன் கரம் பற்ற வந்த மகனை தன் கரம் கொண்டு விலக்கினாள் குந்திதேவி. 

" இல்லை.. மகனே...! உன் வாக்கு பொய்யாக கூடாது..! நான் சில காலம் இங்கிருந்து விடுகிறேன். அதுதான் நம் அனைவருக்குமே நல்லது...! மீண்டும் காண வேண்டிய பந்தங்களை காணும் போதும், கண்ட போதும், மனதில் அனேக கனல்கள் உருவாகும். அதை இந்த சுவர்க்க பூமியும் தாங்காது. மேலும், என்னால் மீண்டும் ஒரு பிரளயத்தை சகிக்க இயலாது..!" குந்தியின் குரலில் இப்போது கொஞ்சம் பயம் தெரிந்தது. 

" அம்மா..! அவ்விதம் இப்போது ஏதும் நடவாது என உறுதி தந்திருக்கிறார் உன் மருமகன்....!கர்ணனின் பேச்சில் குறும்பு தொனிக்கவும், திடுக்கிட்டாள் குந்திதேவி. 

"யார்..?  அந்த மாயவனா..? அவனும் இங்கே வந்து விட்டனா ?  குந்தி சுற்றுமுற்றும் நோக்கவே, "அத்தை..!! நான் எங்கு போயிருந்தேன். திரும்பி வருவதற்கு...? உங்களுடன்தானே எப்போதும் என் வாசமும்..!! என்ற குரல் கேட்டு மெய்சிலிர்த்தாள் குந்தி தேவி. 

அங்கு கிஷ்ணரின் விஜயம் கண்ட போதினில், அது அனைவருக்குமே அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது.

" அத்தை.! உன் சந்தேகங்கள் தீர்ந்ததா ? நான் இந்த அவதார நோக்கத்தில் எடுத்த பிறவி உலக மக்களின் நன்மை கருதியே..! அதன் நன்மைக்காக நீங்கள் அனைவரும் என் மனதை புரிந்து கொண்டவர்களாக பிறந்து வாழ்ந்து,வீழ்ந்து இப்போது மறுபடியும் என்னுள்ளேயே கலந்து விட்டீர்கள். இனியேது மறுபடி, சூது, வாது, யுத்தம் பூசல் பிரிவெல்லாம்...? கலங்காதே அத்தை. இனி அனைவரும் என்னிருப்பிடத்திலேயே கலந்து விடலாம்...! "வா.. உன் மக்களுடன்.. அங்கே உனதருமை கணவரும் காத்திருக்கிறார். நீ செய்த தான தர்மங்கள், உன் நல்ல உள்ளத்தின் பிரதிபலிப்புகள் அங்கு உன் நிழலாக இருக்க வேண்டி காத்திருக்கிறது. புண்ணிய உலகத்தில் பலகாலம் இருந்த பின் உனக்கென விதிக்கப்பட்டதை பிறகு ஏற்றுக் கொள். புனரபி ஜனனம். புனரபி மரணம் என்பதை நீ அறியாதவள் இல்லையே....!!! "  கிருஷ்ணன் தன் அன்பு கரம் பற்றி அவளை அழைத்துப் போனதில், குந்திதேவி  சிந்தை தெளிவுற்று அவனுடன் நடந்து போனாள். 

அவளைச்சுற்றி, அவள் அருகாமையில் தன் மக்கள் அறுவரும், நட்புறவோடு கலந்து நடந்து வருவதைக் காண மனம் மகிழ்வுற்றாள். பாஞ்சாலியும் ஓடிவந்து தன்னுடன் கரம் கோர்த்து கொண்ட போது, அவள் அடைந்த பெருமைக்கு அளவில்லை எனச் சொல்லலாம். தர்ம தேவரும், கௌரவர்களும், சொர்க்கத்தின் வாயிலில் வந்து நின்றபடி அவளை அன்புடன் வரவேற்றார்கள். 

சூரியதேவன் தன் ஸவர்ணமயமான  பொற்கரங்களால் அனைவரையும் ஆசிர்வதித்ததுடன், மகிழ்வில் சற்று அதிகமாகவே ஜகத்ஜோதியாக காட்சியளித்தார். 

                               கற்பனை

                                காவியம்       

                                  முற்றும்.

இது சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் ஒரு (கடந்த வெள்ளிக்கு முன்பான வெள்ளி என நினைக்கிறேன்.)  வெள்ளியன்று கர்ணன் திரைப்படத்தில் ஒரு பகுதியை (குந்தி தன் மகனையறிதல்) தந்து அதில் வரும் காட்சிகளை மற்ற திரைப்படங்களோடு ஒப்பிட்டு தொகுத்த போது, சொன்னது. "இதற்கு தோதாக யாராவது இந்தகாட்சிகள் சம்பந்தப்பட்டதாக எழுதுங்களேன்." என்றார். எனக்குத் தந்த கருத்திலும் அவ்வாறே சொன்னார். என்னையும் அந்தப்படத்தின் காட்சிகள் வெகுவாக பாதித்தது. அதன் விளைவே இந்தப் பதிவு. இதில் என் கற்பனை முழுக்க உண்மைகளுடன் கலந்துள்ளது. 

நான் மஹாபாரதத்தை அக்கு வேர், ஆணிவேராக கரைத்து குடித்தவள் அல்ல..! எனவே இதில் ஏதேனும் அறிந்தறியாத பிழைகள் இருந்தால், மஹாபாரதத்தை முழுக்க அறிந்து படித்தவர்கள் மன்னித்து விடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

பதிவு பெரிதாக உள்ளதேயென யாரும் புறக்கணிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். மஹாபாரதம்  என்றால், அதை சார்ந்த பதிவும் சற்று நீளத்தைதானே காணும். நானும் என்னாலான வண்ணம் சுருக்கி உள்ளேன். :)) 

ஸ்ரீராம் அவர்கள் எபிக்கு எழுதி அனுப்பச் சொன்னதாக நினைவு. ஆனால், இரண்டு வாரங்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதத் தொடங்கி இன்றுதான் என் கற்பனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். இதுவே பயங்கர தா.. ம... த.. ம்.. இதில் எழுதியதை என் கைப்பேசியில், ஒருங்கே அமைத்து சீராக்கி, அவருக்கு அனுப்புவதற்குள் பல வெள்ளிகள் முளைத்து விடுமென்பதால், இந்த வெள்ளியிலேயே என் பதிவில் இறக்கி விட்டேன்..மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரரே.

இதை படித்து கருத்துக்கள் தெரிவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.

மேலும் சென்ற பதிவுக்கு வந்த அனைவருக்கும் பதில் கருத்துக்கள் வழங்க முடியாதபடிக்கு ஒரு மாதமாக என் உடல்நலம் பாடாக படுத்தி விட்டது. அதற்குள் இந்தப்பதிவை எழுதி முடிக்கும் ஆவலும் வேறு சேர்ந்து கொண்டதால்,அதற்கு பதிலுக்கு நன்றி சொல்ல இயலாமல் போய் விட்டது. அதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும். 🙏.