வானிலை மன மாற்றங்கள்.
பரபரப்பின்றி பட்டப்பகல்
முழுவதும், பாதை மாறாமல்
பயணித்து வந்த பகலவனுக்கு
பாத பூஜையுடன் இன்று வரவேற்பு.
உதயவன் உதித்ததிலிருந்தே
உலா வரும் காலங்கள் தோறும்
வழக்கமான முறையிலேயே நடந்து
வந்திருந்தாலும், செல்லும் திசை
வழியனுப்புவது போலவே
வரவேற்பதை தன் முறையாக
வைத்துக் கொண்டிருந்தன
மேல்திசை பொழுதுகள்.
வாயு பகவானையும்,
வருண பகவானையும்,
கிஞ்சித்தும் தன் உதவிக்கென
கிட்டதட்ட வருடக்கணக்காக கூடவே
வரவழைத்துக் கொள்ளாமல்,
தனியாளாக நின்று வெற்றிக் கொடி
நாட்டி வந்த அருணனுக்கு
அன்று அலங்கார மலர் வளைய
அன்பளிப்புகள்.
பாராட்டுதல்களுக்கு முகம் சிவந்த
பாஸ்கரன் தன் பங்குக்கு
வானத்தை செங்குழம்பு
வர்ணமாக்கி அலங்கரித்தான்.
பார்க்கும் இடமெல்லாம், மேலும் தன்
பாதம் பதித்த இடமெங்கும்,
சென்னிற பொன் வானம்
தங்கமென தான் நினைக்கும்
தகதகப்பை தந்து மனம்
தளர விடாதிருக்கச் செய்தான்.
மனம் கொள்ளா மகிழ்ச்சிகள்
மலர்ந்திருந்த தருணத்தில்,
நறு மணம் வீசும் மலர்களின்
மனம் மாறாத பொழுதினில்
வழக்கமான இருட்டுப் போர்வையை
வானம் தீடிரென உதறிப் போட்டது.
தன்வசம் இதுகாறும் பயனற்று கிடந்த
வண்ண ஒளி விளக்குகளை
வாரித் தெளித்து மேலும் தன்
வனப்பை வெளிப்படுத்த முயன்றது.
வான் மேகங்கள் அதற்கு துணையாக
கரவொலிகள் இசைத்திட்டன.
வாயுவும், வருணனும் சற்று
வாடி முகம் சுளித்திருந்த போதினும்,
மேலிடத்தின் உத்தரவுகளுக்கேற்ப
மேல்திசை களிப்புடன் கலந்தனர்.
ஆதிக்கம் செலுத்தி ஆர்ப்பரிக்காது
அமைதியுடன் தன் பங்கு காற்றை
அவசரமாக தந்தார் வாயு பகவான்.
பூமியின் பொறுமை மனதிற்காக
பூவைப் போல் வாசல் தெளித்து
மழைக்கோலம் போட்டு, அதன்
மனதை மகிழ வைத்து, சற்றே
மமதையும் கொண்டார் வருணன்.
இதுவெல்லாம் எனக்கு சாதாரணம்
இந்த இறுமாப்புக்கள்
நாளை பொடி பொடியாகும்
நான் பவனி வந்தால், ஒரு
நாள் பொழுதில்
நகர்த்தி விடுவேன் என்றார்
நாளும் வலம் வரும் சூரியனார்.
பாராட்டு பத்திரத்திரத்தில் ஒரு
பக்கம் கூட புரட்டி
படிக்க ஆரம்பிக்கவில்லை. அதற்குள்
இப்போராட்டங்களை கண்டதில்,
பெரும் போர் களமாகியது அவர்
போரிடும் நெஞ்சம்.
நேற்று பதினைந்து நிமிடங்கள் காற்றுடன் கூடிய மழை.
ReplyDeleteஇன்றிலிருந்து மூன்று வாரங்களுக்கு அதனால் வீறுகொண்டு எழப்போகும் சூரியன்.
நேரத்துக்கேற்ற கவிதை. பாராட்டுகள்.
காலை வணக்கம் சகோதரரே
Deleteபதிவை கண்டவுடன் தங்களின் உடன் வருகையையும், கருத்துப் பகிர்வையும் கண்டு மிக மகிழ்ச்சியடைந்தேன். நான் இந்தப் பதிவின் காரணத்தைப் பற்றி என் சொந்த கட்டுரையை தட்டச்சு செய்து வெளியிடுவதற்குள் , வந்த தங்களின் கருத்துக்கள் மன மகிழ்வை தருகின்றன. (தீடிரென வந்த அந்த பத்து நிமிட மழையைப் போல.)
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மழை பெய்ய ஆரம்பித்தவுடன் வெளியில் நடந்தேன். இருபது மீட்டர்கள் நடப்பதற்குள் தொப்பலாக நனைந்துவிட்டேன்.
ReplyDeleteதளமெங்கும் தண்ணீர், காற்றுடன் கூடிய மழையால். வளாகத்தின் புல்வெளிகள், மரங்கள் நனைந்திருக்கும். எவ்வளவு நாட்கள் காய்ந்துகிடந்தன
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றீர்களா ? மழை வருவதற்கு முன் இடி, மின்னல் அறிவுறுத்தியதே ..! அப்படியும் எப்படி வெளியில் சென்றீர்கள்? நீண்ட இடைவெளிக்குப் பின் பெய்யும் முதல் மழை உடம்புக்கு ஆகாது எனக் கூறுவார்கள்.
ஆம், புற்கள், மரங்கள் நேற்று கொஞ்சம் மகிழ்வை அடைந்திருக்கும். இது போன்ற மழையும் தொடர்ந்தால், வீடுகளில் வெப்பம் குறைந்து இதமாக இருக்கும். பிரார்த்திப்போம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்..
இரவு நேரம். கடந்த மூன்று மாதங்களாகக் காய்ந்துகொண்டிருக்கிறோம். மழையைப் பார்த்ததும் உற்சாகம்தான். ஆனால் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. இதோ இப்போது 2:35க்கு, நல்ல மழை வானம் கருத்திருக்கிறது. அரை மணி நேரத்திர்க்குக் குறையாமல் மழை பெய்யும். 2 மணி வரை நான் ஏசியில்தான் இருந்தேன் என்பது வேறு விஷயம்.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களது மீள் வருகைக்கும், கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. ஓரிரு மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க இயலவில்லை. எங்கள் வீட்டில் ஏ. சி வசதி இன்னமும் பொருத்தவில்லை. எப்போதும் மின் விசிறியின் உபயோகமே போதும். குளிர் காலத்தில் அதுவும் தேவைப்படாது. ஆனால் இந்த தடவை வெப்பம் அதிகம். இன்று இங்கும் மதியம் மூன்றிலிருந்து அரை மணி நேரம் ஓரளவு நல்ல மழை பெய்தது. நேற்று போல் இன்று இல்லை. ஆனாலும், இந்த வெப்பம் அடங்க தினமும் இது போல் ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்து பெய்தால்தான் நல்லது. இறைவன் மனம் வைக்க வேண்டும். பிரார்த்திப்போம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் அனைவருக்கும்.
ReplyDeleteஇது நேற்று மாலை என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படம். இது போல் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளேன். நேற்று மாலை இங்கு ஒரு பத்து நிமிட மழை மின்னல், இடிகளுடன் பெய்தது. அதனால், இதைப்பார்த்ததும் நேற்று இரவு எனக்குள் உருவான வரிகளை இத்துடன் சேர்த்து விட்டேன். (அழகாக கவிதை எழுதுபவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.) வரும் வானிலை மாற்றத்திற்குப் பின் இதை வெளியிட இயலாதேயென இப்போது அவசரமாக இதை வெளியிடும் ஆர்வத்தில் கவிதையை? மறு பரீசிலனை கூட செய்யவில்லை. மாறும் என் வாழ்க்கைப் பொழுதுகளுக்குள், இதுவரை பதிவேதும் எழுதாத ஆர்வங்களிலும் பதிவுகள் போடும் அவசரத்திலும், இது தானாக வந்திங்கே அமர்ந்து கொண்டது. கவிதைக்கடியை பொறுத்துக் கொள்ளும் சகோதர சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுதல்களுக்கு முகம் சிவந்த
ReplyDeleteபாஸ்கரன் தன் பங்குக்கு
வானத்தை செங்குழம்பு
வர்ணமாக்கி அலங்கரித்தான்.//
படமும் , கவிதையும் அருமை.
செங்குழம்பு வர்ணம் வானத்துக்கு அலங்காரம் தான்.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
படமும் கவிதையும் நன்றாக உள்ளதென கூறியதற்கும், குறிப்பிட்டு காட்டி பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றி சகோதரி.
ஆம் செம்மையான கலர் வானத்திற்கு மட்டுமின்றி சூரியனுக்கே ஒரு அழகைத் தரும். மேற்கு பார்த்து பால்கனி இருப்பதால் இத்தகைய படங்களை அடிக்கடி எடுத்து பார்த்து ரசிப்பேன். இன்று நீங்களும் ரசித்து ஊக்கம் மிகுந்த கருத்துக்களை தந்திருப்பதற்கு மகிழ்வான நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//பூமியின் பொறுமை மனதிற்காக
ReplyDeleteபூவைப் போல் வாசல் தெளித்து
மழைக்கோலம் போட்டு, அதன்
மனதை மகிழ வைத்து, சற்றே
மமதையும் கொண்டார் வருணன். //
பூவை போல வாசல் தெளித்து சென்றதா மழை.
கோடையில் மழை மனதுக்கு மகிழ்ச்சி.
நல்ல மழை பெய்து தண்ணீர் கஷ்டம் சரியாக வேண்டும்.
மிக் அழகாய் கவிதை எழுதி இருக்கிறீர்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
நீண்ட மாதங்கள் கழித்து வந்த முதல் மழை பெரிதாக கொட்டித் தீர்க்கவில்லை. இங்கு ஒரு மாதமாக வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. இரவில் மிகவும் தெரிகிறது. தூக்கம் வர மாட்டேன் என்கிறது. அத்தோடு கடந்த மூன்று மாதமாக தண்ணீர் பிரச்சனை வேறு.
இப்படி அடிக்கடி மழை பெய்தால் வெப்பம் குறையும், வரண்டு கிடக்கும் நிலத்தடி நீரும் ஒரளவு நீர் பிடிப்பு ஏற்பட்டு வர வாய்ப்புள்ளது. நல்ல மழை வந்து மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.
கவிதையை பாராட்டி இருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. தங்களது ஊக்கம் நிறைந்த கருத்தைக்கண்டு மிக்க மகிழ்வடைகிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
Deleteநம் பிரார்த்தனைகள் இன்று கொஞ்சம் பலித்து விட்டது. இன்று மதியம் மூன்றிலிருந்து ஒரு அரை மணி நேரம் ஒரளவு நல்ல மழை பெய்தது. இனி வரும் நாட்களும் இந்த மாதிரி மழைகள் தொடர்ந்தால் தண்ணீர் பிரச்சனை தீருகிறதாவென பார்க்கலாம் . அனைத்திற்கும் இறைவன்தான் துணையாக இருக்க வேண்டும். தங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நம் பிரார்த்தனைகள் இன்று கொஞ்சம் பலித்து விட்டது. இன்று மதியம் மூன்றிலிருந்து ஒரு அரை மணி நேரம் ஒரளவு நல்ல மழை பெய்தது.//
Deleteமகிழ்ச்சி.
ஏரி,குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய் பெய்ய மக்கள் வளமாய் வாழ
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஏன்று அடிக்கடி சொல்வோம். வேதாத்திரி மகரிஷி சொல்வது போல.
நல்ல மழை பெய்ய வேண்டும், நீர்நிலைகள் நிறைய வேண்டும், மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம். வாழ்க வையகம் எனச் சொல்வோம். நல்ல மழை பெய்து மக்கள் கஷ்டங்கள் நீங்க வேண்டும். நன்றாக சொன்னீர்கள் . நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வானிலை மன மாற்றம் தலைப்பும் , சூரியன் படமும், கவிதையும் அருமை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
தலைப்பும் பொருத்தமாக உள்ளதென கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. எல்லாம் உங்களைப் போன்ற பதிவர்களிமிருந்து கற்றதுதான்.நீங்கள் உங்கள் அன்புள்ளத்தால் மீண்டும் படத்தையும், கவிதையையும் பாராட்டியமை கண்டு, மனம் அளவு கடந்து மகிழ்ந்தாலும், சங்கோஷத்தினால் நானும் கதிரவன் போல் நாணிச் சிவக்கிறேன். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மழைக்கால கவிதை அருவியாக பொழிகிறது அருமை சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
கவிதையை கண்டு அருவி போலுள்ளது என பாராட்டியதற்கும் மிக்க மகிழ்வடைந்தேன் சகோ. எல்லாம் நீங்கள் அனைவரும் தரும் ஊக்கம் நிறைந்த கருத்துரைகள் தாம் காரணம். தொடர்ந்து நல்லதொரு கருத்துக்கள் தந்து என் எழுத்தை என்றும் சிறப்புடன் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெடுங்கவிதை. கதிரவனின் ஆதிக்கம் வாயுவின் சாமரம், வருணனின் பொழிவு என்று கவிதை சிறப்பாக உள்ளது. ஆனாலும் மனதில் பதிவதில் சுணக்கம்.
ReplyDeleteJayakumar
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
கவிதையை குறித்த தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
எதுகை, மோனை, தளை, யாப்பு போன்ற இலக்கணத்தின் இணக்கம் இல்லாத கவிதை மனதில் பதியாது சுணக்கத்தைதானே உருவாக்கும். ஹா. ஹா.
வெறும் சொற்களால் உருவான அவசர கவிதை இது. மேலும் நான் கவிதையில் கத்துக்குட்டி. இருப்பினும் தாங்கள் வந்து படித்து ரசித்து அருமையென பாராட்டியிருப்பதற்கு என் பணிவான நன்றி. உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே
Deleteசென்ற என்பதிவான கதைக்கும் உங்களை எதிர்பார்த்தேன். இதை என் கருத்தில் குறிப்பிட மறந்து விட்டேன். இன்றைய பதிவுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை சூப்பர். நீண்ட கவிதையை உருவாக்க்கக் காரணமான மழையைப் பாராட்ட வேண்டும். மழையால் உவகை கொண்ட உங்கள் மனது. படித்ததால் உவகை கொண்டது எனது! வார்த்தைகளை பல இடங்களில் ரசித்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
கவிதையை படித்து ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே. ஆம். இக்கவிதை உருவானதற்கு அந்த மழையையும் பாராட்ட வேண்டும். நான் உங்களைப் போல, வெகு சிறப்பாக கவிதை இயற்றுவதில் வல்லமை பெற்றவள் அல்ல. அன்று என்னவோ எடுத்த அந்தப் படத்துக்கு ஏற்ற மாதிரியான வாசகங்கள் மனதுக்குள் உருவாயின. அதுபோல் அல்லாமல் உங்களுக்கு டக்கென வரிகள் தோன்றி விடும். இருப்பினும் என் கவிதையை ரசித்து பாராட்டியமை கண்டு ரொம்பவும் மகிழ்வடைந்தேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ReplyDeleteமழை
விதைகளை மட்டும்
முளைக்க விடுவதில்லை...
கவிதைகளையும்!
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்கள் கவிதை சூப்பர். பார்த்தீர்களா..? நான் சொன்ன மாதிரி கருத்திலேயே வார்த்தைகள் வந்து விழுகின்றன. ரசித்தேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுபோன்ற கோடை மழையைப் பார்த்ததும் நானும் சில வருடங்கள் முன்பெல்லாம் சட்டென எதையாவது எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறேன்.
ReplyDeleteகாய்ந்து கிடந்த மனதில்
ஈரம் பட்டதும்
விதை போடாமலேயே
துளிர்க்கிறது கவிதை.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஓ.. நீங்களும் கோடை மழைக்காக எழுதியிருப்பது கண்டு மகிழ்வடைகிறேன்.
உங்களின் சின்னதாக வரும் கவிதைகளில் கூட ஏகப்பட்ட அர்த்தங்கள். அதனால்தான் வியாழன் தோறும் கதம்பத்தில் கவிதையை முதலில் தேடுவேன். எனக்கு அந்த அளவு திறமை கிடையாது. மனதில் வரும் வார்த்தைகளை மடக்கத் தெரியாமல் மடக்கி கவிதையை தேவையில்லாமல் பெரிதாக்கி விடுவேன். இருப்பினும் உங்கள் அனைவரது ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் என்னுள் ஊற்றாகி வரும் கவிதைகளை..? மேலும் இந்த மாதிரி எழுத வைத்து விடுகிறது. ஹா ஹா. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தமிழ்நாட்டின் வெயிலால் காவிரி வறண்டிருப்பதைப் போல மனமும் வறண்டு கிடக்கிறது! எனவே இப்போது கவிதைகள் அடிக்கடி முளைப்பதில்லை!!!!
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அப்படியும் தங்கள் கவிதை மனம் வற்றாது . ஏதோவொரு வகையில், எந்தவொரு காட்சிகளை கண்டாவது அது வெளிப்பட்டு விடும். அதில்தான் தங்களின் திறமையே உள்ளது. வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் எப்போதுமே வெயில் அதிகந்தான். இப்போது கேட்கவே வேண்டாம். எங்களுடைய சென்னை வசத்தில், மயிலையிலேயே வீடுகள் பல மாறினும் இருந்து வந்தோம். புற நகர் பக்கம் செல்லவில்லை. (வெயிலின் தாக்கத்திற்காகத்தான்) மயிலை மெரினா, சாந்தோம் கடற்கரை அருகிலேயே இருந்ததினால், ஒரளவு வெயில் பாதிக்காமல் காற்று வந்து கொண்டேயிருக்கும்.
இந்த பெங்களூர் இந்த தடவை சென்னைக்குப் போட்டியாக இப்படி மாறுமென்றே நினைக்கவில்லை. மின் விசிறி எதிரிலேயே எப்போதும் நேரத்தை கடத்த வேண்டியுள்ளது. கூடவே தண்ணீரும் "தண்ணி" காட்டுகிறது.:))என்னவோ..! இந்த நிலைமை சரியானால், சரிதான்.
நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். ..!
இன்று பேஸ்புக் மெமரிஸ்க்கு சென்றால் நான் 2013 ல் இதே போல மழையை வருந்தி அழைத்திருக்கிறேன். அதைப் படிக்கச் சொல்லி கேட்ட என் அப்பா அவர் பெயரில் ஒரு அக்கவுண்ட் உருவாக்கச்சொல்லி அதில் ஒரு வரி பாராட்டி இருந்தார்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி
/அதைப் படிக்கச் சொல்லி கேட்ட என் அப்பா அவர் பெயரில் ஒரு அக்கவுண்ட் உருவாக்கச்சொல்லி அதில் ஒரு வரி பாராட்டி இருந்தார். /
அப்படியா? மிகவும் மகிழ்ச்சி..! என்ன இருந்தாலும் தன் மகன் தன்னைப் போலவே ஒரு சிங்க குட்டி என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் அல்லவா? அந்த தருணம் உங்களுக்கும் மிக சந்தோஷமாக இருந்திருக்கும். பெற்றவர்கள் பாராட்டும் போது கிடைக்கும் சந்தோஷமே ஒரு தனிப்பட்ட சந்தோஷந்தான்...! அவரின் வாழ்த்துக்கள் உங்களுடன் என்றும் நிலைத்திருக்கும். அது உங்களுக்கு கிடைத்திருப்பது குறித்து நானும் சந்தோஷ படுகிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மழை வேண்டி கவிதை....அன்னிக்கே மாகை மழை வந்துச்சு இல்லையா அக்கா. வானிலை அறிக்கையை கூட கவிதையா சொல்ற திறமை நம்ம கமலா அக்காவுக்கு தான் வரும் அக்கா பேசாம மெட்ரோ லாஜிக்கல் டிபார்ட்மெண்டுக்கு போயிடுங்க. நெஜமாவே நல்ல ரசனையா இருக்கும் இல்ல யா அக்கா. இன்று மழை பெய்யும் அப்படிங்கறது நீங்க அழகா ஒரு பாட்டாவே சொல்லிடலாம் மழை வருது மழை வருது குடை கொண்டு வான்னு சொல்லி சும்மா ஜாலியா அந்த மாதிரி மெட்டாலாஜிக்கல் டிபார்ட்மெண்ட்ல நீங்க அழகா சொல்லுவீங்க அக்கா உங்க கவிதை வரிகளையும் சேர்த்து..
ReplyDeleteஆஹா பாருங்க உங்க கவிதை வந்து மேல போய் வானத்தட்டிருச்சு முட்டிவிட்டது அதான் மழை.
இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி தொடங்கி மழை இதோ இந்த வாரம் முழுசும் இருக்கு அக்கா இனிமே வெதர் நல்ல வழக்கமான பெங்களூர் தட்பவெட்ப நிலை ஆகிடும்.
இப்பதான் பெங்களூர் பெங்களூரா இருக்கு நார்மலா மார்ச்ல ஒரு பத்து பதினைந்து நாள் கொஞ்சம் சூடா இருக்கும் உடனே மழை தொடங்கிடும் ஈவினிங் ஈவினிங் மழை பெய்ய தொடங்கும் கொஞ்சம் கொஞ்சமா அப்புறம் ஏப்ரல்லயும் அதே மாதிரி விட்டு விட்டு பெய்யும் அப்பறம் மேற்கு அப்புறம் தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கும் இதுதான் பெங்களூரின் வழக்கமான காலநிலை... எப்படியோ கமலா அக்காவின் கவிதையும் மழையும் பொழிந்து விட்டது விட்டன கவிதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
தங்கள் கருத்துக்கள் பெய்த ஓரிரு மழையை விட என் மனதை குளிர்விக்கிறது. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
/பேசாம மெட்ரோ லாஜிக்கல் டிபார்ட்மெண்டுக்கு போயிடுங்க. நெஜமாவே நல்ல ரசனையா இருக்கும்/
ஹா ஹா ஹா. நான் இனி எங்கிருந்து வேலைக்குப் போவது? அதுவும் வானிலை அறிவிப்பாளராக..! இப்படித்தான் ஜன்னல் வழியாக வானத்தை அளந்து கண்ட கனவுகளை வெளிப்படுத்த வேண்டியதுதான்...! என்னும் நீங்கள் சொன்ன கருத்துக்கள் நான் வானிலை அறிவிப்பாளர் போஸ்டை பெற்றது போல் மகிழ்வடையச் செய்தது. நன்றி சகோதரி.
சென்ற இருவருடங்களாக பெங்களூர் குளிர் தாங்காமல், சில சமயம் அவஸ்தைபட்டதுண்டு. இந்த தடவை அனல் கக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல் திண்டாடியாச்சு. இப்போது நான்கு நாட்களாகத்தான் இரவில் ஓரளவு தூங்க முடிகிறது. அந்த பெய்த இரு மழைகள் கொஞ்சம் வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால், இன்னமும் பகலில் வெப்பம் அதிகமாகத்தான் உள்ளது. இன்னமும் நல்ல மழைகள் பெய்து, வெப்பம் தணிந்து தண்ணீர் பிரச்சனை ஏதுமின்றி பழைய நாட்கள் வர வேண்டும். இயற்கை நம்முடன் துணையாக இருந்து நமக்கு நல்லதுகளை நடத்தி தர வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களின் அன்பான கருத்துக்கள் கண்டு மனம் குளிர்ந்தேன் சகோதரி. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகான கவிதை! உங்கள் கவிதை சிறு தூரலாக நின்று விடாமல், பெருமழையாக தொடரட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
அழகான கவிதை என்ற பாராட்டிற்கும் மிக்க நன்றி. தங்களுடன் ஊக்கம் மிகுந்த கருத்துரை கண்டு மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.