வணக்கம் அனைவருக்கும்
உலகில் நாம் தோன்றியவுடன் நம்முடனே ஒட்டியபடி பிறப்பது இந்த ஆசைதான். ஆசைக்கு என்றும் அழிவில்லை. பிறந்த குழந்தை தன் தாயின் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நேசிக்க தொடங்குவதிலிருந்து இந்த ஆசை ஆரம்பிக்கிறது ஒரு உடல் அழிந்த பின் கூட அதன் ஆசாபாசங்கள் விடாது தொடர்வதாய் நம்பபடுகிறது. அதற்காக மறைந்த அந்த உடலுக்கு அவர்தம் சந்ததியினர் விருப்பபட்டோ, இல்லை, விருப்பபடாமலோ, அல்லது மறைந்த அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி பூர்த்தி செய்யும் முகமாகவோ, அவர்களின் வருட நினைவு நாளை நினைவாக திவசம் என்ற பெயரில் செய்து வருகின்றனர். அது அவரவர்களுக்கு பிடித்தமான விருப்பங்களை பொறுத்தும். மாறுபட்ட முறையிலும் அமையும். எனக்கு தெரிந்து ஒருவர் வேறு எந்த படாடோபமுமின்றி தந்தை, தாயின் நினைவு நாளில் ஒரு வழியற்றவர்களின் இல்லத்திற்கு சென்று அங்கிருப்போர்களுக்கு அன்றைய உணவுக்கு சிறிதேனும் வழி செய்வார். அதுவும் வருடந்தோறும் என்பதில்லை. அவருக்கு எப்போது எந்த வருடம் செளகரியபடுகிறதோ அப்போது. அதற்கே அவரை பாராட்ட வேண்டும்.
இப்படியாக உலகில் ஒவ்வொருவருடைய ஆசைகள் உள்ள போதிலும், மறைந்த பின்பும் பலவிதம். ஆசைகள் அதன் நிலை மாறி பேராசைகள் ஆவதில்தான் துன்பமே விளைகிறது. அதை எத்தனையோ கதைகள் மூலமாகவும், புராண கதைகள் மூலமாகவும் அறிந்துள்ளோம். ஆனாலும் இந்த பேராசைகள் ஒருவரை அழிக்க வேண்டுமென்று இருந்தால் அதுதான் அவர்களின் மாறுபடும், இல்லை மாற்றமே இல்லாத விதியாகவும் அமைந்து, அவர்களின் சிறப்பற்ற வாழ்க்கைக்கு ஒரு சாட்சியாகவும், ஒரு காரணமாகவும் ஆகி விடுகிறது. சிலசமயங்களில் அவர்களே தெய்வாதீனமாக நன்றாக வாழ்ந்து அனுபவித்து விட்ட பின்னர், ஒரு பாவமும் அறியாத அவர் சந்ததியினரை அது வாட்டி வதைக்கிறது. ஆக ஐம்புலன்களின் மூலமாக ஏற்படும் ஆசைகளை அடக்கி எந்த ஒரு மனிதப்பிறவி ஞான மார்க்கத்தில் பயணிக்கிறாரோ அவர் துன்பமற்ற வாழ்வை பெறுவார் என்பது திண்ணம் என்றும் நாம் அந்த கண்ணன் காட்டிய வழியில் படித்து அறிந்துள்ளோம். இருப்பினும் அது இயல்பாகவே நம்மால் கடைப்பிடிக்க முடிகிறதா?
"என்னடா.. இந்த ஞானோபதேசம்? நாம் அறிந்த விஷயங்களை மறுபடியும் இப்படி அரைத்த மாவாய் எதற்கு இப்போது.... என நீங்கள் மனதுக்குள் நினைப்பதற்குள் இப்போது விஷயத்துக்கு வருகிறேன்."
எனக்கு ரங்கநாதனை தரிசிக்க ஸ்ரீ ரங்கம் செல்ல வேண்டுமென ரொம்ப நாளாக (நாட்கள் என்றால் ஓரிரு நாட்களில்லை. .ஒரு மாத நாட்களில்லை... . ரொம்ப வருடங்களாக.... ஒரு 365 ஐ 12க்கும் மேலாக பெருக்கினால் எவ்வளவு வருமோ அந்த அளவு நாட்களாக..இல்லை அதற்கும் மேலாகவே. .. என்றும் வைத்துக் கொள்ளலாம். ) ஒரு ஆசை உண்டாகி விட்டது. எப்போதோ எங்கள் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போது, வேறு உறவுகளின் விஷேட நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து போகும் வழியில் திருச்சியில் இறங்கி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும், சமயபுரம் கோவிலுக்கும் எட்டிப் பார்த்து விட்டுச் சென்றோம். நாளடைவில் அது கனவு மாதிரி மறந்தே போய் விட்டது. இத்தனைக்கும் அந்தக் கோவிலைப் பற்றிய, ஸ்ரீராமரிடம் அளவு கடந்த மிகுந்த பக்தியும் பற்றும் கொண்ட விபீஷணனின் (இலங்கை வேந்தன் இராவணனின் தம்பி. ) சற்றே கவனக்குறைவால் உண்டான கோவில் இது என்ற விபரத்தைத் தவிர வேறு ஒரு விபரமும் இன்றுவரை தெரியாது. இந்த ரங்கனை தரிசிக்கும் ஆசை நாளாக, நாளாக எனக்குள் எழுந்தது எப்படி என்று விளக்கமாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு தாபமாய் அந்த எண்ணம் உண்டாகி விட்டது. அதை நான் மட்டும் நினைத்தால் எப்படி? "அவனும்" நினைத்தால் அல்லவா அது நல்லபடியாக நிறைவாக நடந்தேறும்.
சதா எந்நேரமும் சிவனை நினைத்தபடி இருந்த சிவ பக்தராகிய நந்தனாருக்கே எப்போது சிவ தரிசனம் கிடைக்க வேண்டுமென்று சிவபெருமான் நினைத்தாரோ அப்போதுதான் அவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. அதுவரை அவர் பட்ட அல்லல்கள் ஒரு காவியமாய் இன்றும் அவர் பெயர் சொல்லியபடி புகழ் பெற்று நிற்கிறது. சரி... எப்போதும் சிவனையே நினைத்தபடி "அவனை" காணும் ஆவலையே தன் மூச்சாக கொண்டபடி இருந்த அந்த புனிதமான சிவ தொண்டரும், பந்த பாசங்களோடு, ஜீவனை வளர்த்தபடி அன்றாடம் குடும்ப கடமைகளின் நடுவே "அவனை"யும் எப்போதோ நினைத்தபடி, இந்த பாழும் உலகப் பற்றில் மூழ்கி அதிலிருந்த விடுபடவும் தெரியாது / விரும்பாது இருக்கும் நானும் ஒன்றாகி விட முடியுமா? ஏதோ உதாரணத்திற்கு அவரைச் சொன்னேன். அவர் பெயரை நினைத்து உச்சரித்து எழுதிய "இந்த ஒரு நிமிடமேனும் கடல் போன்ற எனது ஏகப்பட்ட பாவங்களில் ஒரு துளியையாவது போக்கி விடப்பா" என பகவானை இப்போது பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். 🙏.
இந்த ஆசை என் இளைய மகன் திருமணம் நவம்பரில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடந்த போது அதிகமாகியது. ஆனால் அப்போது திருமண வேலைகளிலும், அந்த வருடம் பெய்த பயங்கர மழையினால் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி போக, வரவே நேரம் சரியாக இருந்தது. மேலும் கோவிலுக்கு அப்போதைய முதல்வரின் வருகையால் கோவிலுக்குச் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் இருந்தமையால் மற்றொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என உறவுகளின் அறிவுறுத்தல்களில் திரும்பி வந்தாகி விட்டது. ஆக அப்போதும் "அவன்" என்னை அவனைப்பார்க்க அனுமதிக்கவில்லை.
அதன் பின்னும் என் ஆசை கடந்த வருடங்களில் பேராசையாக மாற முயற்சித்தபடி இருந்தது. எனினும் என் ஆசையை "அவன்" கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தான். இந்த தடவை என் மகன் மருமகள் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு முன்பே என் ஆசையை அவர்களிடம் சொல்லி காண்பித்துக் கொண்டேயிருந்தேன்.( ஏனெனில் என் மருமகளின் தாய் வீடு திருச்சிதான்)
அவர்கள் வந்த நேரம் என் விதி வசத்தால், விடாது கருப்பாக தொடர்ந்த என் உடல் நலக்குறைவுகள் பற்றியும், அதனால் மைசூருக்கு செல்லும் வழியில் ஸ்ரீ ரங்கபட்டினம் சென்று அங்கேயாவது அந்த ரங்கநாதனை தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்கு "அவன்" தரவில்லை என்பதையும் என் முன் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
இப்படியாக அவர்கள் வந்த பின் நாட்கள் நகர்கையில் ஒரு நாள் என் மகன் "நானும் என் மனைவியுடன் திருச்சிக்கு சென்று விட்டு, பிறகு திருநெல்வேலிக்கும் செல்லப் போகிறேன். இப்போது தொற்றும் அவ்வளவாக குறைந்துள்ளது. எல்லாமே மூன்று நான்கு நாட்களுக்குள் செல்லும் பயணந்தான். ஆங்காங்கே ரயிலிலும், பஸ்ஸிலும், வாடகை காரிலுமாக பயணம் உன்னால் வரமுடியுமா?" எனக் கேட்டதும் என் ஆசை அதன் சிறகுகளை கன்னாபின்னாவென்று பயங்கரமாக விரித்தபடி, என் உடல்நலக் குறைவையெல்லாம் கவனிக்காது உதாசீனப்படுத்தி "இதை விட்டால் உனக்கு எப்போதும் சமயமே வராது. ஒதுக்காமல், ஒதுங்கி விடாமல், உடல் நலத்தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சென்று வா"வென கடுங்கோபம் கொண்டு அவசரமாக விரட்டியது. நானும் உடனே சரியென சம்மதம் சொல்லவும், எங்களுடன் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவருக்குமே இந்த புறப்பாடு பிடித்துப் போனதில், ஒவ்வொருவராக எங்களுடன் இணைந்தனர். பிறகென்ன.... அலுவலக விடுமுறையான அந்த நான்கு நாட்களுக்குள் சென்று திரும்ப வேண்டுமென்ற ஒரு கட்டாயத்துடன் திருச்சியில் என் மருமகளின் தாய் வீட்டிற்கு புலர்ந்தும் புலராத ஒரு காலையில் சென்று விழுந்தோம். அங்கு தங்கிய நாட்களில் எங்களை அன்புடன் உபசரித்து நல்லதொரு தெய்வ தரிசனங்களுக்கு வழி வகுத்து தந்த மருமகளுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள் எப்போதும். எங்களின் தீடிர் வருகையால் அவர்களுக்கு சிரமங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன். 🙏.
அன்று உடனே குளித்து முடித்து, டிபன் சாப்பிட்ட கையோடு ரங்கனின் தரிசனத்திற்காக கிளம்பும் போது என் ஆசை சிறகு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தில் படபடவென அடிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
அன்று வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் எனக்கு நம் சகோதரி கீதா சாம்பசிவம் நினைவு வந்து கொண்டேயிருந்தது. இங்குதான் அவரும் கோவிலுக்கு அருகில் எங்கோ வசித்து வருகிறார் எனக் சொல்லியிருந்தார். ஆனால் அவரின் முகவரி எனக்குத் தெரியாது. நான் முன்பு அவரிடம் ஒருமுறை ஸ்ரீரங்கம் வர ஆசையாக இருக்கிறதென்றும், அப்படியே வரும் போது தங்களையும் சந்திக்கும் ஆவலும் இருப்பதாகவும் வலைத்தள பதிவுகளில் எங்களுக்குள் நடந்த கருத்துரையாடல்களில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஒரு முன்னறிவிப்பும் இல்லாது இப்படி தீடிரென கிளம்பிய பயணத்தில், அதுவும் வீட்டின் அத்தனை உறவுகளுடன் வரும் போது அனைவரோடும் சென்று எப்படி அவர்களை சந்திக்க இயலும் என்ற மன சமாதானத்தையும் எனக்குள் சொல்லிக் கொண்டேன். "மற்றொரு முறை இதே பாக்கியம் வாய்க்கும் சந்தர்ப்பத்தை "அவன்" தந்தால் அந்த சந்தர்ப்பத்தில் உங்களை தவறாது வந்து சந்திப்பேன் சகோதரி" என மனதுக்குள் அவரிடம் மன்னிப்பும் கேட்டபடி கோவிலுக்கு விரைந்தோம். மன்னிக்க வேண்டுகிறேன் சகோதரி.... 🙏.
நேரடியாக கோவிலினுள் சென்று ஆளுக்கு 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு நீண்ட க்யூவில் வளைந்து வளைந்து பயணித்தோம். முதலில் எங்கு செல்ல வேண்டும் எப்படி முறைப்படி செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. அரங்கனை அந்த நேரத்துக்குள் தரிசிக்கும் ஆவல் மட்டுமே அப்போது மனதுக்குள். வரிசையில் நின்றபடி அனந்த சயனத்திலிருந்தபடி அருள் பாலிக்கும் அரங்கனை நெருங்கி விட்டோம். "சற்று ஆறஅமர கண்குளிர நிம்மதியாக தரிசிக்கும் வாய்ப்பு இங்கும் குறைவுதான் போலிருக்கிறது என்ற எண்ணம்தான் வரிசையில் செல்லும் போது எங்களுக்குள் எழுந்தது." "ம்..ம். சீக்கிரம்.. சீக்கரம் போங்க" என்றபடி விரட்டாத குறையாக தள்ளி விடும் கோவில் காவலர்கள். "எப்படி அவனை முகம் பார்த்து பாதம் வரை மனதில் இருத்தி வைக்கப்போகிறோம்" என்ற கவலை மனதில் தத்தளிக்க இருகரம் கூப்பி வைத்த விழிகளை எங்கும் நகர்த்தாமல் கால்கள் படிகளில் இடறி விடாமல்," இத்தனை நாள் தவத்தை புரிந்து கொள்ளப்பா ரங்கநாதா" என்று மனதோடு அரற்றியபடி கூட்டத்தோடு நகர்ந்தேன். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த அதிசயம்." அவன்" பாதங்களின் அருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு பட்டாச்சாரியார் என் கைகளை ரங்கனுக்கருகில் பற்றியிழுத்து "நீ எங்கே இப்படி" என்று என்னை கேட்டபடி "அவனை" முகம் முதல் பாதம் வரை முழுதுமாக தரிசிக்க வைத்தார். ஒரு நொடி தடுமாறிய பொழுதில் ரங்கனின் விழிகள் என் விழிகளோடு சந்தித்து ஆசிர்வதித்தன . ஆகா.. ஆகா... நாராயணா.. கோவிந்தா.. ரங்கநாதா... என மனது சிலிர்த்து மெய் உருகும் போது அதே பட்டாச்சாரியார் சுதாரித்து கொண்டபடி "நீயா.. போ.. போ.. என்றபடி கூட்டத்தோடு பிடித்து தள்ளி விட்டு விட்டார். அந்த ஒரு நொடி தரிசனத்தை என் உயிருள்ள வரை மறக்க இயலாது. இப்போது இதை உங்களுக்கு தெரிவித்து எழுதும் போதும் எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்த ஒரு நொடி அவருள் இருந்தது அந்த ஸ்ரீரங்கன் என்பதை அவர் அப்போது உணர்ந்தாரோ இல்லையோ, நான் இன்று வரை உணர்கிறேன். "வருட கணக்காக என் மனத் தவிப்பை உணர்ந்தவனாக "அவன்" நடத்திய நாடகம் இது... " என தினமும் விழி கசிய வீட்டில் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்.
தரிசனம் முடிந்து வெளியில் வந்து அமர்ந்த போதும், என் மனதின் சிலிர்ப்பு குறையவில்லை. தாயாரையும், தன்வந்திரி நாராயணரையும் தரிசித்து விட்டு (மற்ற சன்னதிகள் பெரும்பாலும் மூடியிருந்தன) மறுபடியும் மாலை வேறு ஒரு இடத்திற்கு பயணம் என்பதினால் தாமதிக்காமல் வெளியில் வந்தோம். வீட்டுக்கு திரும்பி வரும் சமயம் அனைவரிடமும் "இன்று எனக்கு பிறந்த நாள்.இந்த நாளில் எனக்கு அரங்கனின் அன்பு பார்வை எப்படி மனச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது" என சொல்லிக் கொண்டே வந்தேன்."உனக்கு வரும் ஏழுதானேம்மா பிறந்த நாள்" என்ற மகன்களிடம் "ஆமாம் ஆனால் இன்று ஜென்ம நட்சத்திரம். முன்பெல்லாம் இந்த நாளில்தான் நாம் பிறந்த தினம் என்போம். இன்றைய இந்த நாளில் தெய்வமே மனமுவந்து என்னை நோக்கி ஆசிர்வதித்ததை மறக்க இயலாத நாள் " என்றேன். அன்றைய தினம் என் ஆயுளில் எனக்கு மறக்க முடியாத பிறந்த நாள்தான். நாராயணா... நாராயணா...
ஊருக்கெல்லாம் சென்று திரும்பி வந்தவுடன் நம் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் ஸ்ரீ ரங்கனின் பதிவாக நிறைய வெளியிட்டார்கள். நானும் அதே மெய்சிலிர்ப்புடன் படித்து வந்தேன். அதில் ஒரு பதிவாக பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்தான் (அன்றுதான் விபீஷ்ணன் ராமர் தனக்களித்த பள்ளி கொண்ட ரங்கநாதனை விமானத்தோடு தான் ஆளும் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது தன்னுடைய மதிய நியமநிஷ்டைகளை முடித்துக் கொள்ளும் பொழுதினில் கீழே வைத்து விட ஸ்ரீரங்கனின் விருப்பபடி ரங்கன் அங்கு ஸ்தாபிதம் ஆன கதையை விவரித்து கூறியிருந்தார்.) அந்த ரங்கநாதன் அங்கு பள்ளி கொண்டான் என்ற புராணத்தை சொல்லியிருந்தார்கள். அந்த பங்குனி மாத என்னுடைய பிறந்த நாள் நட்சத்திரமாகிய அந்த நட்சத்திரத்தில்தானே பகவான் தன்னையும் அங்கு ஸ்தாபிதம் ஆக்கிக் கொண்டு என்னையும் அருள் பார்வை பார்த்திருக்கிறார் என எண்ணிய போது அன்றிலிருந்து விவரிக்க இயலாத ஆனந்தம். இன்னமும் என்னுள்ளம் அந்த சம்பவத்தின் சந்தோஷ சிலிர்ப்பில்தான் உள்ளது. 🙏.
இப்போது என் ஆசை நிச்சயம் மேலும் பேராசையாக மாறி இருக்கிறது. ஆனால் இது துன்பங்கள் இல்லாத பேராசை. மீண்டும் ஸ்ரீரங்கனை கண் குளிர மனம் சிலிர்க்க ஒரு தடவை தரிசிக்க வேண்டும். ஆனால் இந்த தடவை "அவன்" மீண்டும் "பந்த பாசங்களோடு வாழும் வரை போராடு" என என்னைப் பிடித்து தள்ளி விடாமல் "என்னுடனேயே வந்து விடு" என அழைத்துக் கொள்ள வேண்டும். நடக்குமா? அதையும் "அவன்" செய்வானா? அவனின் "கணக்குப்" புத்தகத்தை எனக்காக சிரமம் பாராமல் மாற்றியமைப்பானா என்ற மனத் தவிப்புடன் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். 🙏. நாராயணா. நாராயணா. நாராயணா. ரங்கநாதா. .🙏🙏🙏🙏.
எங்கள் மகனுடன் அவசரமாக சென்று வந்த இடங்களைப் பற்றி எழுதுகிறேன் என சென்ற பதிவில் கூறியிருந்தேன். ஆனால், இதுவரை என்னை இதுபற்றி எதுவும் எழுத விடாமல் இருந்தவன் இதை உங்கள் அனைவரோடும் இன்று பகிர்ந்து கொள்ளும் இந்த வேளையை நினைவுபடுத்தி எழுத வைத்ததும் "அவன்தான்" என மனப்பூர்வமாக நம்புகிறேன். "அவன்" தானே நம்மை என்றும் ஆட்டுவிப்பவன். பக்தியினால் என் மனம் இன்புற்ற இந்தப்பதிவை பொறுமையாக படித்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.
பதிவு மிக அருமை.
ReplyDeleteநீ எங்கே இப்படி" என்று என்னை கேட்டபடி "அவனை" முகம் முதல் பாதம் வரை முழுதுமாக தரிசிக்க வைத்தார். ஒரு நொடி தடுமாறிய பொழுதில் ரங்கனின் விழிகள் என் விழிகளோடு சந்தித்து ஆசிர்வதித்தன . ஆகா.. ஆகா... நாராயணா.. கோவிந்தா.. ரங்கநாதா... என மனது சிலிர்த்து மெய் உருகும் போது அதே பட்டாச்சாரியார் சுதாரித்து கொண்டபடி "நீயா.. போ.. போ.. என்றபடி கூட்டத்தோடு பிடித்து தள்ளி விட்டு விட்டார். அந்த ஒரு நொடி தரிசனத்தை என் உயிருள்ள வரை மறக்க இயலாது. //
ஆஹா! அற்புதம். மெய்சிலிர்க்கும் அனுபவம்.
அந்த நொடி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
பிறந்த நாள் அன்று தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். மீண்டும் ரங்கனை, கீதா சாம்பசிவத்தை பார்க்கும் வாய்ப்பை ரங்கன் அருள்வார்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம். அற்புதமான மறக்க முடியாத தரிசனம். அதை இன்று உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வைத்தவனும் "அவனே". தங்களது கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி. தங்கள் பதில்கள் மனதை உற்சாகமடைய வைக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து உங்களின் பிற கருத்துகளுக்கும் பதில் தருகிறேன். தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//ஜென்ம நட்சத்திரம். முன்பெல்லாம் இந்த நாளில்தான் நாம் பிறந்த தினம் என்போம். இன்றைய இந்த நாளில் தெய்வமே மனமுவந்து என்னை நோக்கி ஆசிர்வதித்ததை மறக்க இயலாத நாள் " என்றேன். அன்றைய தினம் என் ஆயுளில் எனக்கு மறக்க முடியாத பிறந்த நாள்தான். நாராயணா... நாராயணா... //
ReplyDeleteஇப்போது தேதிபடியும் நடசத்திரபடியும் கொண்டாடுகிறார்கள்.
உங்களுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும். பதிலளிக்க வருவதற்குள் தாமதமாகி விட்டது.
ஆம். இப்போது அனைவரும் தேதிபடியும், நட்சத்திரபடியும் இரு பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ஆனால் பிறந்த தேதிக்குத்தான் முதலில் முக்கியத்துவம்.
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இப்போது என் ஆசை நிச்சயம் மேலும் பேராசையாக மாறி இருக்கிறது. ஆனால் இது துன்பங்கள் இல்லாத பேராசை.//
ReplyDeleteரங்கன் இந்த பேராசையை இப்போது நிறைவேற்ற மாட்டார்.
"அன்பான குடும்பத்திற்கு இப்போது உன் ஆதரவும் வழி நடத்துலும் தேவை என்று சொல்வார்."
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ரங்கன் இந்த பேராசையை இப்போது நிறைவேற்ற மாட்டார்.
"அன்பான குடும்பத்திற்கு இப்போது உன் ஆதரவும் வழி நடத்துலும் தேவை என்று சொல்வார்."/
ஏன் அப்படி சொல்கிறீர்கள்... என் அன்பையும் ஆதரவையும் அனைவருக்கும் தரும்படி செய்து வழி நடத்துபவனும் "அவன்" தானே... என் வேண்டுகோளை உடனடியாக இல்லாவிடினும், எப்போதேனும் ஏற்றுக் கொள்வான் என நம்பி கொண்டிருக்கிறேன். உங்களை போன்றோரின் அன்பையும் எனக்கு சம்பாதித்து தந்த அவனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தங்களது அன்பான ஆதரவான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//என் அன்பையும் ஆதரவையும் அனைவருக்கும் தரும்படி செய்து வழி நடத்துபவனும் "அவன்" தானே... என் வேண்டுகோளை உடனடியாக இல்லாவிடினும், எப்போதேனும் ஏற்றுக் கொள்வான் என நம்பி கொண்டிருக்கிறேன்.//
Deleteஆமாம், எல்லாம் அவன் செயலே! நம்பிக்கை வழி நடத்தும்.
வணக்கம் சகோதரி
Deleteமீள் வருகை தந்து என் பதில் கருத்துக்கு உடனடியாக பதில் தந்து ஆமோதித்தது கண்டு மகிழ்வடைகிறேன். வாழ்வின் இன்ப துன்பங்களை சமமாக கருதும்படி அந்த பார்த்தசாரதி உரைத்த வாக்குப்படி அவனடியை எப்போதும் தொழுதபடி இருக்கிறேன். அவன்தான் நம்மை மட்டுமின்றி, உலக மக்களையும் நல்லபடியாக வழிநடத்தி செல்ல வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். தாங்கள் மீண்டும் வந்து தந்த அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாம் தீவிரமாக ஆசை கொண்டு சிந்தனை செய்தால் தக்க சமயத்தில் அவன் தரிசனம் அமைந்துவிடும்.
ReplyDeleteரங்கநாதன் தரிசனம் மனத்தை நெகிழ்த்தியது. சென்ற வைகுண்ட ஏகாதசியில் தரிசனம் செய்தேன். கீசா மேடத,தைப் பார்க்கச் செல்லவில்லை, அவர் வளாகத்தின் வாசலில் இருந்தபோதும். அவல் பையர் குடும்பம் வந்திருந்தது, கொரோனா பயம். யாருக்கும் ரிஸ்க் இருக்கக்கூடாது என்பதால்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/தாம் தீவிரமாக ஆசை கொண்டு சிந்தனை செய்தால் தக்க சமயத்தில் அவன் தரிசனம் அமைந்துவிடும்/
உண்மை. தங்களைப்போல த்தான் என் குடும்பத்தில் இருப்பவர்களும் கூறினார்கள். "ரங்கனை பார்க்க வேண்டும் என்று நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததினால், அவன் உன்னை அவனருகிலேயே அழைத்து தரிசனம் பெற வைத்து விட்டான்" எனச் சொன்னார்கள். உங்கள் கருத்தும் அவ்விதமே இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நீங்களும் சென்ற வைகுண்ட ஏகாதசியில் சென்று அவனை தரிசனம் செய்தது குறித்து மகிழ்ச்சி. கூட்டம் மிக அதிகமாக இருந்திருக்குமே.. . நாங்கள் சென்ற அன்றே நிறைய கூட்டந்தான்.அந்த கூட்டத்தில்தான் எப்படி தரிசிக்கப் போகிறோம் என மனது அலைபாய்ந்தது.
கீதா சாம்பசிவம் சகோதரியை சந்திக்காது வந்தது எனக்கும் வருத்தம்தான். மற்றொரு முறை நம் சகோதரி கோமதி அரசு சொல்வது போல் அந்த சந்தர்ப்பம் அமையட்டும்.
தாங்கள் பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நம் அதீத ஆவலும் அதனால் வரும் சிறு சாமர்த்தியமும் பெருமாள் சேவையை இன்னும் கொஞ்சம் அதிக நேரம் எனக்கு வழங்கியிருக்கிறது. உங்களுக்கும் இன்னொரு முறை வாய்க்கட்டும்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/உங்களுக்கும் இன்னொரு முறை வாய்க்கட்டும்./
அடிக்கடி "அவனை" பக்தியுடன் சென்று தரிசித்து வரும் தங்களின் நல்ல மனதால் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்வை தருகிறது. உங்களின் வாக்கு பலிக்கும் நாளை எதிர்பார்த்தபடி இருப்பேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரங்கனை தரிசனம் செய்ததை உணர்வுப்பூர்வமாக சொன்ன விதம் அருமை சகோ.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை உள்வாங்கி ரசித்துப் படித்தமை கண்டு என் மனம் மிகவும் மகிழ்வடைகிறது. தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. தங்களின் அன்பான வாழ்த்துக்களும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களின் எண்ணம் நம்பிக்கையோடு தொடர வேண்டும்... வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/தங்களின் எண்ணம் நம்பிக்கையோடு தொடர வேண்டும்... வாழ்த்துகள்./
அதேதான்.. நானும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். ரங்கனின் அருள் பார்வை தரிசனத்தை ப் பற்றி உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டது மனம் மகிழ்வாக உள்ளது. உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீ ரங்கநாதனைத் தரிசித்த அனுபவத்தை சுவை பட விவரித்துள்ளீர்கள். அடுத்து எங்கள் ஊர் பத்மாநாபனையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்.
ReplyDeleteJayakumar
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/ஸ்ரீ ரங்கநாதனைத் தரிசித்த அனுபவத்தை சுவை பட விவரித்துள்ளீர்கள்./
நன்றி.. நன்றி. தாங்கள் பதிவை ரசித்துப் படித்து தந்த அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி.
/அடுத்து எங்கள் ஊர் பத்மாநாபனையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்./
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியையும் 90 களில் என் கணவர் குழந்தைகளுடன் ஒரு முறை குருவாயூர் வரும் போது தரிசித்திருக்கிறேன். என் கணவர் குருவாயூரப்பனின் தீவிர பக்தர். ஆனால் அப்போதுள்ள பிரயாண வசதிகள், காலநேர அவகாசங்கள் இவைகளினால் அப்போதும் எல்லாவிதத்திலும் ஒரு அவசர தரிசனந்தான். இன்னொரு முறை ஸ்ரீ ரங்கநாதனை இப்போது மெய் சிலிர்க்க தரிசனம் பெற்ற மாதிரி பத்மநாப ஸ்வாமியையும் தரிசனம் பெற வேண்டுமென்ற ஆவல் உள்ளது. தங்கள் அழைப்பு அவனருளால் பலிக்கட்டும். அழைப்புக்கு உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//Geetha Sambasivam has left a new comment on the post "ரங்கனின் கருணை. ":
ReplyDeleteஎப்போ எந்த மாசம்னு புரியலை. பங்குனியிலா? ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கட்டாயமாய் உங்களை அழைத்திருப்போம். எங்க வீட்டில் வலை நண்பர்கள் பலரும் வந்து போயிருக்கிறார்கள். எத்தனை பேரானால் என்ன? எங்களால் முடிஞ்ச வரை உபசரித்திருப்போம். மீண்டும் அரங்கன் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்தனைகள்.// இந்த என் கருத்துத் தான் முதலில் வந்திருந்தது. பின்னர் காணாமல் போயிருக்கு. மெயில் பாக்ஸில் இருந்து தேடி எடுத்துப் போட்டிருக்கேன். விரைவில் ஶ்ரீரங்கத்துக்கு அரங்கனைத் தரிசிக்க நீங்கள் வந்து எங்களையும் பார்த்துச் செல்லும்படி அருளுவான்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எப்படியோ தங்கள் கருத்துகள் வந்தடைந்து விட்டன.
/எப்போ எந்த மாசம்னு புரியலை. பங்குனியிலா? /
ஆம் பங்குனியில்தான். ஏப்ரல் ஏழு பிறந்த நாள். முன்பே என் பதிவில் சொல்லியுள்ளேனே..
தங்களின் அன்பும், பெருந்தன்மையான குணமும், உங்களுடன் பதிவுலகில் பழகியதிலிருந்தே அறிவேன். உங்களை வந்து சந்தித்த பதிவர்களை நீங்கள் உபசரித்ததாக பதிவுலகில் குறிப்பிட்டு கூறியதிலிருந்து உங்களுடைய உபசரிப்பு தன்மையை பற்றியும் அறிந்து கொண்டேன். அதனால்தான் ஸ்ரீ ரங்கம் வந்தால் தங்களை சந்திக்கவும் பெரும்ஆவல் கொண்டேன். ஆனால் தீடிரென புறப்பட்டால் உங்களுக்கு தகவல் தெரிவிக்க இயலவில்லை. உங்களோடு தொடர்பு கொள்ள வேறு மார்க்கமுமில்லை. இரண்டாவதாக வந்த நேரம் தொற்றும் முழுமையாக குறையவில்லை. அதனாலும் வரத் தயங்கினேன். நாங்கள் கிளம்பியதிலிருந்து வரும் வரை முக கவசத்துடன் பயணித்தோம். ஆனால் ஆங்காங்கே மக்கள் தைரியமாக எந்த முககவசமும் போடவில்லை. (மனதுக்குள் இறைவனின் கவசங்களை கூறிக்கொண்டே சமாளித்தார்களோ என்னவோ.. :)
தங்களின் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.
/விரைவில் ஶ்ரீரங்கத்துக்கு அரங்கனைத் தரிசிக்க நீங்கள் வந்து எங்களையும் பார்த்துச் செல்லும்படி அருளுவான்./
கண்டிப்பாக அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன். உங்களின் அன்பான அழைப்புக்காகவேனும், அவ்வாறே கூடிய விரைவில் அந்த ரங்கநாதன் அருள் புரிவான் என நம்புகிறேன். அவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அன்பான கருத்துகளுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பின் தொடரும் கருத்துக்கள் எல்லாமும் என்னோட மெயில் பாக்ஸுக்கு வருகின்றன. ஆனால் என்னோட கருத்து மட்டும் இங்கே இல்லை. இதே போல் எங்கள் ப்ளாகிலும் இன்று நான் பலருக்கும் கொடுத்திருந்த மறுமொழி போனாலும் பின்னர் மெயில் பாக்ஸுக்குப் போய்விட்டன. அங்கிருந்து தேடணும். :)
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னவோ இந்த கருத்துப் பெட்டி மாறியதிலிருந்தான் இந்த பிரச்சனை என நினைக்கிறேன். என் கருத்தும் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களின் பதிவில் இப்படித்தான் காணாமல் ஓடி ஒளிந்து கொண்டு விட்டதென இப்போதுதான் எ. பியில் உங்கள் கருத்துக்கு பதிலாக தந்து விட்டு வந்திருக்கிறேன். அதுவும் இப்படி கண்ணாம் மூச்சி ஆடினால் இதுவாவது கை கொடுக்குமென இங்கும் பகிர்கிறேன். :) இந்த பிரச்சனை எப்போது சரியாகப் போகிறதோ? அதற்கும் காத்திருப்போம். என்ன செய்வது? கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இப்படி ஒளிந்து கொள்ளும் கருத்துகளை ஸ்பாமிலிருந்து கண்டு பிடித்துக் கொண்டுவந்து இங்கேயே விட்டு விடலாம். நாங்கள் அவ்வப்போது ஸ்பாமை கண்காணித்தபடி இருக்கிறோம்.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. எனக்கு கைப்பேசியிலேயே தட்டச்சு செய்து போடும் போது எந்த வித குறைகளும் அவ்வளவாக வரவில்லை. இரண்டு தடவைகள்தான் இம்மாதிரி நிகழ்ந்துள்ளன. இனி இப்படி வந்தால் உங்கள் சொல்படி நடந்து கொள்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தை.
ReplyDeleteமீண்டும் செல்லும் வாய்ப்புகண்டிப்பாக அமையும்.
ஆனால், உணர்வுபூர்வமாக எழுதும் போது //ஆனால் இந்த தடவை "அவன்" மீண்டும் "பந்த பாசங்களோடு வாழும் வரை போராடு" என என்னைப் பிடித்து தள்ளி விடாமல் "என்னுடனேயே வந்து விடு" என அழைத்துக் கொள்ள வேண்டும். நடக்குமா? அதையும் "அவன்" செய்வானா? அவனின் "கணக்குப்" புத்தகத்தை எனக்காக சிரமம் பாராமல் மாற்றியமைப்பானா என்ற மனத் தவிப்புடன் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். //
வேண்டாமே இது. உங்கள் அன்பும் ஆதரவும் குழந்தைகளுக்கு வேண்டுமல்லவா....எனவே இதை எல்லாம் அப்பால பாத்துக்கலாம்!!!! இந்த வரிகளைத் தவிர்த்து மற்றவை அழகாக எழுதியிருக்கீங்க
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.
/வேண்டாமே இது. உங்கள் அன்பும் ஆதரவும் குழந்தைகளுக்கு வேண்டுமல்லவா....எனவே இதை எல்லாம் அப்பால பாத்துக்கலாம்!!!! இந்த வரிகளைத் தவிர்த்து மற்றவை அழகாக எழுதியிருக்கீங்க/
இது என் ஆழ்மனதில் உள்ள வேண்டுதல் சகோதரி. இரண்டாவதாக இதை எப்போதுமே தவிர்க்க முடியாது. யாருக்கும் சிரமம் தராமல், என் உடலுக்கும் சிரமங்கள் ஏற்படாமல் அவன் என் வேண்டுதலை நிறைவேற்றினால் சரிதான். அதையும் அவன் அருளில்லாமல் என்றுமே பெற முடியாதல்லவா?
தங்கள் அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அரங்கனின் தரிசனம் குறித்த தங்களது பகிர்வு கண்டு மகிழ்ச்சி. அவன் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கடினமான உங்கள் அலுவலக வேலை பளுவிலும் என் பதிவுக்கு வந்து படித்து நல்லதொரு கருத்தினை தந்தமை கண்டு மிக்க மன மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களின் மனமுவந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எப்படி இந்தப் அப்பதிவை விட்டேன் என்று தெரியவில்லை. என் கண்ணில் படவில்லை. அடுத்த பதிவில் உங்கள் பதில் கண்டு தேடி வந்து படித்து விட்டேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் அடுத்த பதிவின் பதில் கருத்தை கண்டதும் விரைந்து இப்பதிவுக்கு வந்து படித்து கருத்துக்கள் தந்திருப்பது மிக்க மகிழ்வை தருகிறது. தங்களின் வேலைகளின் மும்மரத்தில் பதிவை கவனியாமல் தவற விட்டிருப்பார்கள் என்று நானும் அதைதான் நினைத்தேன். இருப்பினும் உண்மையாகவே பதிவில் உங்கள் கருத்தை காணாதது மனதுக்கு ஒரு மாதிரி வருத்தமாக இருந்ததினால் சொல்லி விட்டேன். தங்களை சிரமபடுத்தியதற்கு மன்னிக்கவும். ஆனாலும் தாங்கள் உடனே வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு என பணிவான நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிலிர்க்க சிலிர்க்க எழுதி இருக்கிறீர்கள். அரங்கனின் விளையாட்டு சிலிர்க்கு வைத்தது. நிஜமா என்று நம்ப முடியாமல் கேட்க வைக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யம்.. அற்புதம். பெருமாள் அனுக்கிரஹம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம். எத்தனையோ கோவிலுக்கெல்லாம் செல்லும் போது இத்தகைய மெய் சிலிர்க்கும் அனுபவம் கிடைத்ததில்லை. ஸ்ரீ ரங்கநாதனை காண வேண்டுமென்ற என் வெகு நாளைய தாபத்தை "அவன்" புரிந்து கொண்டது போன்ற நிகழ்வு இந்த கோவிலில்தான் கிடைத்தது.
/பெருமாள் அனுக்கிரஹம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது./
நன்றி. நன்றி. அவனருள் என்றும் அனைவருக்கும் குறையின்றி கிடைத்து நிலைத்திருக்க வேண்டுமாய் நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களின் கருத்துக்கள் மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கீதா அக்காவை சந்திக்க முடியவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்குதான் முன்பு உங்களிடம் அலைபேசி எண் கேட்டது. இப்படி ஏதாவது சந்தர்ப்பம் அமைந்தால் சந்திக்கலாம்! முன்னரே திட்டமிட்டால் மின்னஞ்சல் வாயிலாகக் கூட கேட்டிருக்கலாம்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் அங்கு செல்லும் போது ரங்கனை தரிசனம் செய்யும் நல்ல வேளை பொழுது கூடி வரும் போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களையும் சந்தித்து வர வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால், நாங்கள் கிளம்பிய அவசரம், அப்போது தொற்று இன்னமும் முழுதாக குறையாத வேளை, எங்கள் குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து செல்வது என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே அவர்களை சந்திக்க இயலாது போய் விட்ட வருத்தத்தை பதிவிலும் பகிர்ந்திருக்கிறேன். மற்றொரு தடவை "அவனை" தரிசிக்கும் வாய்ப்பையும், சகோதரி அவர்களை காணும் நல்ல வேளையையும் "அவனே" மீண்டும் கண்டிப்பாக தருவான் என நம்புகிறேன்.
மற்றபடி நீங்கள் சொல்வதும் உண்மைதான். எதற்கும் நேரம் காலம் என்ற ஒன்று அமைய வேண்டுமல்லவா. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் பணிவான நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆதனூரில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயனைக் கண்டு தரிசித்த போது இப்படித்தான் மனம் குழைந்து நின்றேன்.. கண்களில் நீர் துளிர்த்தது..
ReplyDeleteபதிவு மனதை நெகிழ்த்தி விட்டது..
அரங்கனின் நல்லருளால் அதர்மம் விலகி அகிலம் நலமாக வாழட்டும்..
ஓம் ஹரி ஓம்..
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் உண்மை. சில சமயங்களில் நாம் மனதில் வேறு எவ்வித சிந்தனைகளுமின்றி, அவனை மட்டுமே சிந்தித்தவாறு பக்தியுடன் இறைவனை காணும் போது, அவனின் திவ்ய தரிசனத்தையும் நாம் உணரும் படி செய்து விடுகிறான்.
தங்களின் ஆதனூர் ஸ்ரீஆண்டளக்கும் ஐயனின் பதிவை உங்கள் தளத்தில் படித்த போது நானும் மெய்யுருகி போனேன். படங்களும் நன்றாகவிருந்தன . மரக்காலை தலையணையாக வைத்தபடி பள்ளி கொண்ட பெருமாளின் படங்களை அன்று கண்டு ஆனந்தமடைந்தேன். அந்த கோவிலுக்கும் அவன் அழைத்தால் நல்லது என்ற எண்ணமும், ஆசையும் மனதில் வந்தது.
இந்தப்பதிவையும் தாங்கள் பாராட்டியமைக்கு மிக்க நன்றி. எல்லாம் அவன் செயல். அவன் நல்லருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
தங்கள் கருத்துக்கு தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.