Wednesday, May 11, 2022

இடுக்கண் வருங்கால்...

மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. 

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில்  நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளிலும் சந்திக்கும் போதும் அந்தப் பாடலின் வலி மிகுந்த அர்த்தம் புரியும்.  ஆனால் இந்த தடவை (போன வருடம் நடுவிலிருந்தே) வரும் ஒவ்வொரு உபாதைக்கும் இலவசமாக ஒன்றிரண்டை கூடவே தந்தபடி உடல் நலன்கள் படுத்தும் பாட்டில், அந்தப்பாடலும் ஆனந்தமாக ஹம்மிங் செய்தபடி என்னுடனே வந்து பாடிக் கொண்டிருந்தது. 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என தான் அநியாயமாக தவற விட்ட மார்கழியின்  குளிர் பனியை நினைவில் நிறுத்தியபடி, தை மாதத்தின் பொங்கலில் இருந்து ஆரம்பித்த ஜலதோஷம்  விடாமல் ஜுரத்தில் வந்து நின்றது. அத்துடன் சந்தோஷப்படாமல், கூடவே பல் வலியையும் துணைக்கு அழைத்தபடி மாறி மாறி ஆட்டம் போட்டு அனுபவித்தது. அப்போதுதான் வெளிநாட்டிலிருக்கும் அன்பு மகனின் தீடிர் வரவு. ஜூன் ஜூலையில் வரப்போவதாக சொன்ன( மகனும், மருமகளும் தீடிரென பத்து பதினைந்து நாட்களில் டக்கெட் புக் செய்து வந்து விட்டார்கள். எனக்கோ உடல் நிலை சரியாவேனா என ஒரேடியாக அடம் பிடிக்கிறது. என்னால் சரியானபடி இயல்பாக எல்லா வேலைகளையும் செய்தபடி அவர்களுக்கு வாய்க்கு ருசியாக சமைக்கவும் முடியவில்லை. சமைக்காமல் இருக்கவும் இயலவில்லை. ஜீரம் கண்ட பத்து நாட்களில் இருமலும், சளியுமாக இருந்த அந்த நேரத்தில்  எனக்கு சமைத்த பொருள் வாசனையும் தெரியவில்லை. நாவுக்கும் எவ்வித ருசியில்லை. ஆகா...... ஓ. மைகாட்.... இது தொற்றா என்ற பீதியில், இருந்த கொஞ்ச மன பலமும், உடல் பலமும்,.பயந்து ஓரங்கட்டியது. இருந்தும் விடாமல், எப்படியோ வீட்டு வேலைகளை பல்லைக் கடித்தபடி சமாளித்தபடி செய்து கொண்டிருக்க, வலது கடைவாய்யின் மேலிருக்கும் கடைவாய் பல்வலி மேலண்ணத்தில் ஒரு பெரிய கட்டியை உமிழ்நீர் கூட முழுங்க முடியாமல் உருவாக்கி டாக்டரிடம் அழைத்துச் சென்றது. (எதற்கும் மருவத்துவரிடம் போகாமல் பாட்டி வைத்தியங்கள் செய்து நாட்பட்ட காலப்போக்கிலாகவும் குணப்படுத்தி கொண்டிருந்த என்னை பயங்கர அந்த வலி கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு சென்றது எனக் கூட கூறலாம்.)) 

அவரானால் கண் எலும்பு, கன்னங்களில் எலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறதா என ஆராய, நன்றாக அழுத்திப் பார்த்ததில், வலி அதன் உச்சத்துக்கே போய் விட்டது. அவர் தான் கொடுக்கும் மூன்று வேளை பொழுதுக்கு ஐந்து நாட்களுக்கான ஆன்டி பயாடிக் மாத்திரைகளில் சரியாகி விடுமெனவும் , இருந்தும் இப்படியே வைத்திருக்க கூடாது கடைவாய் பற்களை அகற்ற வேண்டுமெனவும் அச்சுறுத்த எனக்குள் இருக்கும் (சமீபத்தில் கண்டுபிடித்திருக்கும்) இனிப்பின்  அளவை நாங்கள் சொன்னதும், அவரும் பிரமித்து விட்டார்.

(இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் கால் பாதம் மரத்தல், கால் வலி என தொடர்ந்து படுத்திக் கொண்டேயிருக்க, என் மன்னியும், மற்றும் உற்றார்களும், ஏன் நம் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும் சுகர் டெஸ்டுக்கு பரிந்துரைத்தார்கள். அதன்படி எடுத்துப் பார்த்ததில்,  அதன் அளவு எக்கச்சக்கமாக இருக்கவே அன்றிலிருந்துதான் நான் எ.பியில் அனைவருக்கும் வணக்கம் கூறுகையில் "இன்னாள் இனிமை நிறைந்த நன்னாளாக இருக்க வேண்டுமென்ற" அந்த வாசகத்தையே விட்டு விட்டேன். "எவ்வித கலக்கங்களும் இல்லாத நன்னாளாக"என்ற வாசகம் என்னையறியாமல் அன்றிலிருந்து அங்கு தினமும், இடம் பெற்று விட்டது. இப்போதும் பெறுகிறது:) ) (அப்பாடா.... இதற்கும் யார் கேட்கிறார்களோ இல்லையோ ஒரு விளக்கம் தந்தாகி விட்டது.) 

இனிப்பின் அளவை கேட்டு பிரமித்த அந்த மருத்துவர் " இன்னுமா அதற்குரிய மருந்துக்கள் எடுக்கவில்லை" என கடுப்புடன் கேட்டவர், அதன்பின் உடனே இரத்த அழுத்த அளவையும் எடுத்துப் பார்த்து விட்டு எங்களையும் பிரமிப்பில் ஆழ்த்தி விட்டார். அப்புறமென்ன.... அவர் முகத்தில் நிறைய கடுப்புடன் முதலில் பல் உபத்திரவதிற்கு மட்டும் மருந்து மாத்திரைகளை எழுதி தர, அவரிடமிருந்து அனேக வலிகளுடன் விடைபெற்றோம். 

அந்த மாத்திரைகள் எனக்கு சில ஒவ்வாமையை தந்தோடு, ஒரு வாரத்தில் பின் விளைவாக பைல்ஸில் கொண்டு விட்டது. அப்புறம் மறுபடியும் வேறொரு வலிகளுடன் கூடிய அவஸ்த்தைதான்....மறுபடி நான் ஆயுர்வேதத்திற்கு வழக்கப்படி மாறினேன். (அதற்கான  மருந்துகளும் அவ்வப்போது இந்த அவஸ்தைகளுக்கு ஏற்கனவே பல முறை எடுத்து பழக்கம்தான்..... ) அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் அனைவரும், ஊரிலிருந்து வந்த மகன் உட்பட மைசூர் பிரயாணத்திற்கு முன்பே கார் புக் செய்து கிளம்பவும், எனக்கு இந்த பயணத்தில் மைசூர் போகிற வழியில் ஸ்ரீ ரங்கபட்டிணா சென்று ஸ்ரீ அரங்கநாதனை தரிசிக்க ஆவல் எனச் சொன்னேன்." சரி.. அதற்குள் உனக்கு உடம்பு குணமாகி விட்டால் கிளம்பலாம்" என்று அவர்கள் சொல்லவும் வலிகளோடு நாட்களை அவனை தரிசிக்கும் ஆவலில், ஆசையில் கடத்தியும், ரங்கநாதன் என்னை அவனைப் போலவே அனந்தசயனமாக்கி அழகு பார்த்ததோடு சரி.... என்னை கிஞ்சித்தும் நடமாடி அசைய விடாமல் வேறு "அவன் "ரசிக்க ஆரம்பித்து விட்டான். வேறுவழி...... என் மகள் எனக்கு துணையிருக்க அவர்கள் அனைவரும் அரங்கனை தரிசிக்க கிளம்பிச் சென்றார்கள். அரங்கனை தரிசித்து விட்டு அப்படியே மைசூர் பயணத்திற்கும் சென்று வந்தார்கள். அதன் பின் வந்த நாட்களில்தான்  உடல் நிலைகள் நடுவே நானும் அவ்வப்போது அனைவரின் பதிவுகளுக்கும், எ.பிக்கும் வந்து "இடுக்கண் வருங்கால்...." என்ற வரிக்கேற்ப உலா வந்தேன். (அப்பாடா...... இப்பவாவது ஒரு வழியாக தலைப்பிற்கு ஏற்ற வரிகளுக்கு கிட்டத்தில் வந்து விட்டேன். :)) 

அதன் பின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக் கொடி காட்டி என்னுடன் சமாதானபடுத்திக் கொண்டதும், மகனுடனும், குடும்பத்துடனும் சில பயணங்கள்  அவசரமாக   (அதன் பிறகு மகன் தன் ஊருக்கு திரும்பி விடுவாரே) சென்றோம். அதைப்பற்றி அடுத்தப்  பதிவில் கூறுகிறேன். எப்படியோ நானும் என் அறுவை பதிவுக்கு இப்படியாகிலும் ஒரு வழி அமைக்க வேண்டுமே?

சரி... .அந்த இரண்டாவது தலைப்பிற்கு வருவோமா? இப்பவும்  ஒரு வாரமாக எனக்கு என்ன பிரச்சனையென்றால், அளவில்லா சுகருக்கு மருத்துவம் பெற ஒரு அலோபதி மருத்துவரிடம் சென்றால், அவர் மறுபடியும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து அதிக இரத்த அழுத்தத்திற்கு முதலில் பத்து நாளைக்கு ஒரு மருந்தும், கால்வலிக்கு மருந்தும் தந்திருக்கிறார். அதுவே எனக்கு ஒவ்வாமை தராமல் இருக்க வேண்டும். மறுபடி அடுத்த வாரம் இனிப்பை பரிசோதனை செய்து அதற்கான மருந்துகள் தந்து அது எனக்கு ஒத்து வருகிறதா எனப் பார்த்து,...... ஒத்து வராவிட்டால் வேறு மருந்தை பரிந்துரை செய்வாராம்..... ஆண்டவா..... மழை விட்டும்....... தூவானக்கதையாக ஏன் இப்படி?  கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறாய்? எனும் போது என் மனதுள் மறுபடி அந்த பாடல் ஒலிக்கிறது. 

ரொம்ப நாட்களாக (மாதங்களாக) எதுவும் எழுதி யாரையும் அதைப் படிக்கும் அவஸ்தைகளுக்கு உள்ளாக்கவில்லயே  எனத் தோன்றியதின் விளைவாக இந்தப்பதிவு எழுதி விட்டேன். "இத்தனை நாட்கள் கழித்து ஒரு பதிவு எழுதினால் இப்படியா ஒரே ரம்பமாக" என நீங்கள் மனதினுள் லேசாக நினைப்பது கேட்கிறது. ஏதோ இங்கு வந்து என் அன்பான உறவுகளாகிய உங்களிடம் சொன்னால் எனக்கொரு மன ஆறுதல். சந்தோஷம்.  அவ்வளவே... 

ஆகா......பதிவை படித்தவுடன் யாரோ அந்தப் பாடலைப் பாடுவது போல், என் காதிலும் கேட்கிறதே.....ஹா ஹா ஹா .  

அட....அது நீங்கள்தானா?:))) 

34 comments:

  1. வருக சகோ
    தங்களது மீள் வரவு நல்வரவாகட்டும் இனி தொடர்ந்து எழுதுங்கள்.

    மகன் குடும்பம் வந்து சென்றதில் நிறைய விடயங்கள் இருக்கும் அவைகளையும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடியாக வந்து பதிவை சிறப்பித்து, என் வரவிற்கு நல்வரவு கூறிய கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

      நிறைய பதிவுகள் எழுத ஆசை இருக்கிறது. தொடர்ந்து ஆண்டவன் அருளால் எழுதுகிறேன். மற்றும் தங்களது ஊக்கம் மிக்க கருத்துரைகள் என்னை கண்டிப்பாக எழுத வைக்கும். மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழல் அமையும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவுக்கு நல்லதொரு ஆறுதல் வார்த்தையாக கருத்துரைத்தமை கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் வாக்கு பலிக்கட்டும், அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. உங்கள் வலிகளையும் நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறீர்கள்.  உண்மையிலேயே இடுக்கண் வருங்கால நகுகதான்.  பின்விளைவுகளை ஏற்படுத்தியது படித்ததும் சிரித்து விட்டேன்.  மன்னிக்கவும் உங்கள் தொந்தரவு பற்றி எழுதி இருக்கிறீர்கள்.  நான் சிரிக்கிறேன்.  அதற்கு உங்கள் எழுத்தைதான் நீங்கள் கடிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பின் விளைவுகள்... ஹா.ஹா.ஹா அப்போதைய மாற்றி, மாற்றி வந்த என் வலிகளின் அழுத்தம் இப்போது என வார்த்தைகளிலும் வந்து விழுந்து விட்டது. அப்போது மாறி, மாறி வந்த அந்த தொந்தரவுகள் அப்பப்பா.. சொல்லில் அடங்காது. அந்த ரங்கநாதன்தான் என்னை காத்தருளினான் என நம்புகிறேன். இடுக்கண் வருங்கால் இப்படி நகைத்துதானே ஆக வேண்டும். இதோ.. பதிவை படித்து நீங்களும் நகைத்து விட்டீர்கள். ஹா ஹா. தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சர்க்கரை அவ்வளவு அதிகமாக இருந்தால் முதலில் இன்சுலின் ஊசி எழுதிக் கொடுத்து விடுவார்களே... அலோபதியில் முதலில் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு பின்னர் சித்தாவோ, ஆயுர்வேதமோ தொடரலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      முதலில் பல் சம்பந்தபட்ட வலிகளுக்கு சென்ற போது அந்த மருத்துவர் அப்படி ஏதும் சொல்லவில்லை. நானே சுகருக்கும் மருந்து தருகிறேன் என்றார். கட்டுப்பாட்டுக்கு வந்த பின்தான் பல்லை அகற்றுபடியாக இருக்குமெனவும் தெரிவித்தார். அதன் பின் வந்த தொடர் வேதனைகளிலும், மகனுடன் சென்ற பயணங்களிலும் மறுபடி அவரிடம் செல்லவில்லை. இப்போது நாங்கள் சென்று வந்தவர் இந்த சர்க்கரை வியாதிக்கான ஸ்பெஷலிஸ்ட். அவரிடந்தான் சென்ற வியாழனன்று சென்றோம். அவர் அதிக இரத்த அழுத்தம் எனச் சொல்லி அதற்கான மாத்திரை தந்து, மீண்டும் இனிப்புக்கான டெஸ்ட் எடுத்ததும் வரச் சொல்லியிருக்கிறார். எனக்குத்தான் இந்த அலோபதி மாத்திரைகள் ஒத்து வராமல் போய் விடுமோவென்ற பயத்தை தருகின்றன.

      நீங்கள் சொன்ன கருத்தின்படியும் செயல்படலாம். கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால் தேவலாம். பார்க்கலாம். எல்லாம் அவன் செயல். தங்களது ஆறுதலான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. விரும்பும் நேரத்தில் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கிப் படுத்திருந்தது சோர்வையும் வருத்தத்தையும் தந்திருக்கும்.  இப்போது சர்க்கரை உட்பட எல்லாம் கட்டுக்குள் வந்து விட்டதா?  ரத்தக்கொதிப்பு?  பல் வலி, கட்டியும் சரியாகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்... அப்போது மகன் வந்திருக்கும் நேரம் அவருடன் எங்கும் செல்ல முடியாதபடிக்கு நோயுற்று இருந்தது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் வெளியில் செல்ல முடியவில்லை என்பது கூட வருத்தத்தை எனக்கு அவ்வளவாக தரவில்லை. அவர்களுக்கு வேண்டியதை செய்து போடக் கூட இயலாமல், முடிந்ததை செய்தேன். உடல்நல குறைவின் வலிகள் அப்போது என் உயிரை வாங்கிக் கொண்டிருந்தன அதை நினைத்தால்தான் இப்போதும் வருத்தம் வருகிறது. காரணம், .இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து அவர்கள் வருவார்களோ ..

      இப்போதைக்கு பல் வலி குறைந்துள்ளது. (சத்தமாக சொன்னால் கூட அதன் காதுகளுக்கு கேட்டு விடுமோ என்று பயமாக உள்ளதால் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொல்கிறேன்.:)) சர்க்கரை உபாதைக்கும் இனிதான் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறைவன் நல்லபடியாக அனைத்தையும் வழிநடத்திச் செல்ல வேண்டும். உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. என்னோட முந்தைய கருத்துக் காணாமல் போய்விட்டது. இந்தக் கருத்து இங்கே வெளியாகாமல் என்னோட மெயில் பாக்ஸுக்கு வந்தது. அதைக் காப்பி, பேஸ்ட் செய்து போட்டிருக்கேன். :)

      Delete
    3. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் மற்ற கருத்து ஏதும் வரவில்லையே... தாங்கள் மறுபடியும் தங்கள் கருத்தை இங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க நன்றி. கருத்து பெட்டி மாற்றத்தை தொடர்ந்து இப்போதெல்லாம் இந்த மாதிரி கருத்துக்கள் மற்றவர்களுக்கு போகாத நிலை வேறு அடிக்கடி ஏற்படுகிறது. எனக்கும் இந்த கைப்பேசியில் சரியாகவே வரவில்லை. தட்டச்சு பண்ணி அது சரியாக வந்திருக்கிறதா என கருத்தை மேலிழுத்து பார்ப்பதற்கும் நம் கைவிரல்கள் பட்டு கருத்துக்கள் மாயமாகி விடுகின்றன. எப்படியோ பழகி வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. சர்க்கரை நோயை அலட்சியம் செய்யக்கூடாது. எல்லா நோய்களுக்கும் அதுவே தாய் போன்றது. அதை அடக்கிவிட்டால் மற்றவைகளை சுலபமாக கட்டுப்படுத்த முடியும். ஆனால் என்ன, டாக்டர்கள் பத்து பன்னிரண்டு மாத்திரைகளை விழுங்கச் சொல்வார்கள். சிவனே என்று உடன்படுங்கள். விரைவில் நிம்மதி கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் சொல்வது உண்மைதான்.. இந்த நோய் தன்னுடன் அனைத்து நோய்களையும் அழைத்து வருமென சொல்கிறார்கள். மருத்துவர் தரும் மருந்துகளை எடுத்துக் கொண்டு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.

      தாங்கள் அன்பு கூர்ந்து தந்த கருத்துரைகள் ஒரு நம்பிக்கை பலத்தை தருகின்றன. தங்கள் ஆறுதலான கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கவலை வேண்டாம்... தினமும் நடைப்பயிற்சி மிகவும் முக்கியம்...

    25 வருடமாக அடியேன் இனிப்பானவன்...!

    இனிப்பில் மூன்றாவது Neuropathy...! அதனால் :-

    இடது பாதம் முழுவதுமாக மரத்து விட்ட நிலையிலும் நடைப்பயிற்சியை தொடர்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். நடைப்பயிற்சி முக்கியம் என்றுதான் அனைவரும் சொல்ல கேட்கிறேன். தங்கள் ஆலோசனைபடி இனி அதற்கும் முக்கியத்துவம் தருகிறேன்.

      /இனிப்பில் மூன்றாவது Neuropathy./என்றால் எனக்குப் புரியவில்லை. ஆனால் உங்களுக்கு அளவுக்கதிகமான சுகர் உள்ளதென பதிவுகளில் படிக்கும் போது வரும் கருத்துகளில் தெரிந்து கொண்டேன்.

      எனக்கு இரண்டு ஆண்டுகளாகவே இந்த பாதங்கள் வித்தியாசமாக இருப்பதை உணர்கிறேன். பாத விரல்களை மடக்கும் போது காலின் தடிமன் புரிகிறது அது ஏற்கனவே ஒருதடவை கீழே விழுந்து காலில் அடிபட்டதில் இருக்குமென சொல்லி வந்தேன். பின் அனைவரும் சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் கொள்ள சொன்னதின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் எடுத்தோம். இன்னமும் அதற்குரிய மருந்துகளை எடுக்க மருத்துவரிடம் செல்லவில்லை. இனிதான் மருந்துகளை துவக்க வேண்டும். இப்போதைக்கு இந்த பாதம் இயல்பானால் சரிதான். பார்ப்போம். தங்களின் ஆறுதலான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கமலாக்கா உங்கள் பல் வீக்கம் கால் வலி எல்லாமே நீங்கள் ரொம்பவே இனிமையாகிவிட்டீர்கள் அதனால்தான்!! கூடவே உங்களுக்கு மன அழுத்தம் ஏதோ ஒரு கவலை உள் மனதில் அதனால்.....

    கவலையே வேண்டாம் கமலாக்கா. இனிப்பு அழுத்தம் எதுவும் பயப்படுவதற்கில்லை. இனிப்பு மட்டும் தவிர்த்தால் போதாது. உணவு அளவு, என்ன உணவு என்பது மிக மிக முக்கியம். உங்கள் சர்க்கரை அளவுக்கேற்ப மருத்துவர் சொல்லும் உணவு முறையைப் பயன்படுத்துங்க. தயவு செய்து உணவும் உடற்பயிற்சியும் முக்கியமாக நடைப்பயிற்சி மிக மிக மிக முக்கியம். வீட்டில்தான் நாள் முழுவதும் வேலை இருக்கிறதே அப்புறம் எதற்கு உடற்பயிற்சி என்று சொல்லாமல் தினமும் நடைப்பயிற்சி முக்கியம். இருங்கள் அடுத்து வருகிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது ஆறுதலான வார்த்தைகளுக்கு முதலில் என் நன்றிகள் சகோதரி.

      நீங்கள் சொல்வது போல் இனிப்பு சாப்பிடுவதை இப்போது தவிர்த்து விட்டேன். பல மாதங்களாக காப்பிக்கு கூட சர்க்கரை போட்டுக் கொள்வது கிடையாது. மனஅழுத்தங்கள்தான் உடல் நிலை பாதிப்புகளுக்கு ஆரம்பமாக இருக்கிறது என்பதை நானுமறிவேன். என்ன செய்வது? மனதை லேசாக வைத்துக் கொண்டாலும், ஏதேதோ பிரச்சனைகள் வந்து அழுத்தத்தை உண்டாக்கி விடுகிறது. அது நான் வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம். மற்றபடி அனைத்தையும் மறக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டேதான் உள்ளேன்.

      உங்கள் ஆலோசனைபடி மருத்துவரை சந்தித்து சர்க்கரைக்குப் அவர் தரும் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, உணவு, மற்றும் நடைப்பயிற்சிகள் முறையே எடுத்துக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. மகனுடன் வெளியில் செல்ல முடியாதது மிக மிக வருத்தம்தான். ஆனால் உடல் ஆரோக்கியம் முக்கியமாச்சே. சரி இப்போது சர்க்கரை அளவு அழுத்தம் எல்லாம் எப்படி இருக்கு?

    சர்க்கரை வியாதி வியாதி என்று சொல்லப்பட்டாலும் அது வியாதி அல்ல ஒரு குறைபாடுதான் அதைச் சரி செய்துகட்டுக்குள் வைத்திருந்தால் மற்றவை சரியாக இருக்கும்.

    உடல் மெட்டபாலிசம் மிக மிக முக்கியம். யோகப் பயிற்சி முடிந்தால் தெரிந்தால் செய்ய்யுங்கள் கமலாக்கா. அது போல தியானம் மூச்சுப் பயிற்சி உதவும். ரத்த அழுத்தத்திற்கும்.

    மனம் அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மருந்துகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். எல்லாம் விரைவில் குணமாகிவிடும். கவலை வேண்டாம். ஜாலியாக இருங்கள் கமலாக்கா,

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. இரண்டு வருடங்களுக்கு பின்பு வந்திருக்கும் மகனுடன் என் நோவுகள் காரணமாக சரிவர சிரித்துப் பேசக்கூட முடியவில்லை. அதை நினைத்தால் இப்போதும் மனது வேதனைபடுகிறது. என்ன செய்வது?

      இரத்த அழுத்த அளவு மட்டும் இப்போது எடுத்தது 210 என்றார். சர்க்கரை அளவு இனிதான் எடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பு எடுத்தது. இப்போது சா. மு. சா. பி எப்படி உள்ளதென பார்த்து விட்டு அந்த ரிப்போர்ட்டுடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

      ஆமாம்.. இது ஒரு வியாதி இல்லை என்றுதான் அனைவரும் கூறுகின்றனர். இருப்பினும், இதற்குரிய கட்டுப்பாடுகளை காணும் போது சற்றே பயம் வருகிறது. யோகா வெல்லாம் இதுவரை கற்கவில்லை. இறைவழிபாட்டின் போது தியானம் நிறைவேறி விடும். வீட்டு வேலைகளை. நான்தான் செய்து வருவதால் வீட்டுள்ளேயே எப்போதும் நடைதான். காலையில் எழுந்தால் அமர்வது என்பதே அரிதாகத்தான் இருக்கும். என்னவோ அனைவரும் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள வேண்டும். அது ஒன்றே நிறைந்த செல்வம். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. உங்கள் வேதனைகளை வழக்கம் போல நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க. இடுக்கண் வருகால் நகுக!!!!!! என்றாலும் வரிகளின் இடையில் வருத்தம் தெரிகிறதுதான். மனதை அமைதியாக வைத்து மனப்பயிற்சியும் செய்யுங்கள் கமலாக்கா...குறிப்பாக ஆழ்ந்து மூச்சு இழுத்து விடுவது Conscious breathing, Diaphragmatic breathing

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் சொல்வது போல் மூச்சுப்பயிற்சி செய்யலாம். எனக்கு நிறைய ஆலோசனைகளை சொல்லியுள்ளீர்கள். உங்களது அன்பை நினைக்கையில் எனக்கு என் உபாதைகள் அனைத்தும் விரைவில் குணமாகி விடுமென்றுதான் தோன்றுகிறது. உங்கள் கருத்துகளுக்கு நான் தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அக்கா நானும் இனிமையானவள்தான்!!! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஹா.ஹா.ஹா ஆமாம்.. நீங்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்தான். அது நீங்கள் எழுதும் பதிவிலும், எல்லார் பதிவுக்கு தரும் உங்கள் கருத்திலும், உங்கள் அன்பான பேச்சிலும் நடவடிக்கைகளிலும் துல்லியமாக தெரிகிறதே...அந்த சிறந்த குணத்திற்கும் நன்றி சகோதரி. தங்கள் அன்பான கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. தங்களது வேதனைகளைப் படித்ததில் மிகவும் வருத்தமாக இருக்கின்றது..

    இறைவன் துணையிருப்பானாக..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா . நான் தேவையில்லாமல் என் வருத்தங்களை பகிர்ந்து உங்களையும் வேதனைக்குள்ளாக்கி விட்டேனா? மிகவும் வருந்துகிறேன். இரண்டாவதாக இப்போதெல்லாம் இந்த வயதில் பிணிகள் வருவது சகஜந்தானே.. . அனைத்தும் இறையருளால் சரியாகி விடும். நம்பிக்கைதான் நம் வாழ்வின் ஆதாரம்.

      தங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. தங்களது உடல் நலன் குறித்து சிந்தித்த போது திருஞான சம்பந்தர் அருளிச் செய்த திரு அண்ணாமலை திருப்பதிகப் பாடல் குறிக்கப்பட்டது.. அதனை இத்துடன் இணைத்துள்ளேன்..

    பெருகும்புனல் அண்ணாமலை
    பிறைசேர்கடல் நஞ்சைப்
    பருகுந்தனை துணிவார்பொடி
    அணிவாரது பருகிக்
    கருகும்மிட றுடையார்கமழ்
    சடையார் கழல் பரவி
    உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய்
    அடை யாவே.1.10.6

    தங்களுக்கு இயலும்போது திரு அண்ணாமலை சென்று தரிசனம் செய்து வரவும்..

    அண்ணாமலை போற்றி!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது இறையுணர்வில் தாங்கள் எனக்காக சிந்தித்து கூறியதை இறைவனின் ஒரு அருளாசியாக ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி.

      தங்கள் சொல்படி திருஞானசம்பந்தர் அருளிய திருப்திகத்தை பக்தியுடன் பாடி எம்பெருமானை வணங்கி கொண்டேன். இறையருளால் திருவண்ணாமலைக்கும் சென்று வர இறைவன் கருணை புரிய வேண்டுகிறேன். நேற்று மாலை பிரதோஷதன்று ஈசனை துதித்து பாடலுடன் அவனருள் சார்ந்த தங்களது கருத்துரை கிடைத்தமைக்கு மனப்பூர்வமான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இரத்த அழுத்தத்தை இத்தனை வருடங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே.. அதுவே பல பிரச்சனைகளைக் கொண்டுவரும். முதலில் சிறிது தியானம் செய்ய ஆரம்பியுங்கள் (கம்ப சூத்திரமில்லை. மனது அமைதியாக சிலபல நிமிடங்கள் இருக்கணும். எனக்கு அரைமணியிலிருந்து முக்கால் மணி வரை சாத்தியம்..ஆனால் செய்வதில்லை). சுகருக்கு எல்லோரும் இனிப்பை நிறுத்துங்கள் என்பார்கள். ஆனால் முதலில் கார்போஹைட்ரேட்-சாதம் போன்றவற்றை கால் வயிறுக்கு மேல் சாப்பிடுவதை நிறுத்தணும், கொஞ்சம் நடக்கணும். ஆனால் பாருங்க.. ஆண்கள்னா, அக்கடா என்று இவற்றை உடனேயே கடைபிடிக்க ஆரம்பிக்கலாம். பெண்களுக்கு வீட்டுவேலை அது சம்பந்தமான முக்கியத்துவம் இவைகளால் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள இயலாமல் போகிறது. என் மனைவியும் முழு ஹெல்த் செக்கப்புக்கு உடன்பட மாட்டேன் என்கிறாள். இன்னும் இரு வாரத்தில் (கழுத்தில் கத்தி வைத்து ஹா ஹா) அழைத்துக்கொண்டு செல்லப்போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் முதலிலேயே கவனித்து இருக்கலாம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த கால் மரத்தலை, பற்களின் நலனை கவனியாமல் குடும்பத்தின் சுமைகளை சுகமானதாக எண்ணி வாழ்ந்து வந்து விட்டேன். தங்களின் அன்பான ஆலோசனைகளின்படி செய்கிறேன். தங்களுடைய விபரமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      /என் மனைவியும் முழு ஹெல்த் செக்கப்புக்கு உடன்பட மாட்டேன் என்கிறாள். இன்னும் இரு வாரத்தில் (கழுத்தில் கத்தி வைத்து ஹா ஹா) அழைத்துக்கொண்டு செல்லப்போகிறேன்./

      ஹா.ஹா.ஹா. ஆமாம் என்னையும் அப்படித்தான் அழைத்துக் கொண்டு சென்றார்கள். இல்லையென்றால் இன்னும் எத்தனை வருடங்களுக்கு நான் அமைதியாக இருந்திருப்பேனோ ?

      நீங்கள் உங்கள் மனைவியையும் கத்தி (வாயால் மட்டும் கத்திச் சொல்லி வறுப்புறுத்தி ) பயமுறுத்தல்கள் இல்லாமல் டாக்டரிடம் அழைத்துச் சென்று அவரின் உடல் நலத்தை கவனியுங்கள். வாழ்த்துகள்.

      தாமதமாக உங்கள் கருத்துக்கு பதில் இடுவதற்கு மன்னிக்கவும். இரண்டொரு நாட்களாக டெஸ்ட் எடுக்கவும், மருந்து மாத்திரைகள் வாங்கவுமாக டாக்டரிடம் அலைவதில் நேரம் சென்று விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. இந்த பதிவு எனக்கு காட்டவில்லையே! வீட்டுவேலைகள் ஏதாவது இருக்கும் அதுதான் வலைத்தளம் வரவில்லை என்று நினைத்தேன். இவ்வளவு கஷ்டபட்டு இருக்கிறீர்கள்.
    நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி.

    குடும்பம் நமக்கு முக்கியம்தான். குடும்பநலனுக்காக நம் உடல் நலத்தை பார்த்து கொள்ளும் கடமையும் நமக்கு இருக்கிறது.

    வேலைகளை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள், உதவிக்கு ஆள் வைத்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு, மனதுக்கு ஓய்வு கொடுங்கள்.

    மருந்துகளுடன் இறைவன் கருணையும் துணைபுரியும்.

    உங்கள் துன்பத்தை நகைச்சுவையாக சொல்லி விட்டீர்கள். அது போல துன்பத்தை கடந்து விடுங்கள்.

    நானும் இனி ஒழுங்காய் நடைபயிற்சி மேற் கொள்ள வேண்டும். என் கால் கை குத்தல் வலி இருக்கிறது இடுப்புவலியும் இருக்கிறது என்று அலோபதி சாப்பிட்டு பார்த்து அதை கைவிட்டு ஹோமியோபதி மருத்துவரிடம் போய் வருகிறேன். இப்போது எல்லா வலிகளும் குறைந்து வருகிறது.
    பற்கள் ஆடுகிறது, அதனால் சாப்பிட சிரமம். வலி இருக்கிறது எனக்கும் பல் மருத்துவர் அனைத்து பற்களையும் எடுக்க வேண்டும் புதிதாக கட்ட வேண்டும் என்கிறார். தள்ளி போட்டு வருகிறேன். விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.

    குழந்தைகளுடன் சென்று வந்த இடங்களைப்பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.

    என்னையும் முழு மருத்துவ பரிசோனதை செய்து கொள்ள சொல்லி சொல்கிறார்கள் பிள்ளைகள்.

    அவர்கள் வரும் நேரம் செய்ய வேண்டும்.

    நீங்கள் நலமாக இருந்தால் மேலும் குடும்பத்திற்கு உழைக்கலாம்.
    உங்கள் உடல்நலத்திற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    பதிவு மிக அருமையாக இருக்கிறது துன்ப பட்டத்தையும் ரசிக்கும்படி எழுதி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் ஊருக்கு சென்று வந்ததிலிருந்து ஏதோவொன்று படுத்திக் கொண்டிருப்பதை நானுமறிவேன். அதையும் மீறி தங்களது உடல்நிலை உபாதைகளை பொருட்படுத்தாது தாங்கள் குடும்பத்துடன் ஒத்துழைப்பாக இருந்து, ஊரிலிருந்து வந்த மகளுக்கும், மகனுக்கும் வேண்டியதை செய்து தந்து, அவர்களின் அன்பையே மருந்தாக கருதி வருகிறீர்கள். உங்கள் மனதைரியத்தைதான் நானும் முன்னுதாரணமாக கொண்டு என் உடல்நிலை படுத்தலை கடந்து வந்து கொண்டிருக்கிறேன்.

      தங்களது ஆறுதலான வார்த்தைகள் மனதுக்கு தெம்பையும் தைரியத்தையும் தருகின்றன. தங்களது அன்பான பிராத்தனைகள் உடனடியாக பலிக்கும் என நம்புகிறேன். தாங்கள் வந்து பதிவை படித்து மன ஆறுதலாக இப்படி சில வார்த்தைகள் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு என் பதிவை நினைவு படுத்தி விட்டேன். தங்களை சிரமபடுத்தி விட்டேனோ என இப்போது நினைக்கிறேன். ஆனாலும், தாங்களும் உடனே வந்து படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். தங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கும், பதிவை குறித்து மனமுவந்து தந்த பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி. ரொம்பவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. துன்பத்தையும் சுவாரசியமாக தந்துள்ளீர்கள்
    .டொக்க்டர் தரும் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சியும் செய்யுங்கள் உணவு முறையையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நீங்கள் ரசித்து படித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களிடமெல்லாம் சொன்னால் எனக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கிறது. உங்களது அன்பான ஆலோசனைகளின்படி நடந்து கொள்கிறேன். நீங்கள் என் பதிவுக்கு கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete