Saturday, September 17, 2022

பழி


வீடு திறந்திருந்தது. அதைப் பற்றி கவலையின்றி செல்வி யாரிடமோ கைப் பேசியில் அரட்டை அடித்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் "நானிருக்கும்"  தைரியந்தான் அவளது துணிச்சலுக்கு காரணம் என்பது எனக்கும் தெரியும். அதை பிரதீபும், செல்வியும் என் காதுபடவே கூறி என்னை சில சமயங்களில் உற்சாகப் படுத்துவார்கள். இதை குறித்து எனக்குள் ஒரு பெருமையும் என் முகத்தில் அடிக்கடி விகசிக்கும்.

நான் எட்டு வருடங்களாக இவர்களுடன் ஐக்கியமாகி இருக்கிறேன். பிரதீப் அலுவலகம் சென்றவுடன் செல்விக்கும், அவள் குழந்தைக்கும் நான்தான் முழுக்க முழுக்க துணை.

செல்வி என்னை நம்பி, என்னுள் இருக்கும் சமார்த்தியத்தை நம்பி, வீட்டையே என்னிடம் ஒப்படைத்த மாதிரி, இடைப்பட்ட நேரத்தில், அருகிலிருக்கும் கடைகளுக்கும் வேறுபல அவளுக்கு பிடித்தமான இடங்களுக்கும்  தைரியமாக போய் விட்டு வருவாள்.  குத்து மதிப்பாகச் சொன்னால் நான்தான் அவர்களையும், வீட்டையும் பாதுகாத்து வருபவன். 

இப்படியாக ஓடிய வாழ்வில் ஒரு நாள் இரவு. வழக்கம் போல் வராண்டாவில் என் இடத்தில் படுக்கை. மழை காலமாகையால், விட்டு விட்டு தூறலும், தீடீரென பெரு மழையுமாக பெய்து கொண்டிருந்தது. இரவில் குளிர் தாக்கும் என்பதால், என் மேல் போர்த்திக்் கொண்டிருக்கும் போர்வைக்குள் அடைக்கலமாகி, விழி மூடி தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்தபடி இருந்தேன். 

குழந்தை மாலு லேசான சிணுங்கலுடன் அழ ஆரம்பித்து அப்புறம் நிறுத்தி  தூங்கி விட்டிருப்பாள் போலும்.. .!!!! சத்தத்தை காணோம். காற்றும், மின்னலும், சற்று லேசான மேக உறுமலும் என் உறக்கத்தை ஒரு வழியாக உண்டு இல்லை என பண்ணிக் கொண்டிருந்தன.

கண்கள் இப்படி அடிக்கும் மின்னல் வெளிச்சத்தில் கூசுகிறதே என்று நினைக்கும் பொழுதில், சடசடவென மழைத் தூறல் பெரிதாகி, காற்றையும் தன்னோடு உடனழைத்தபடி வாய் விட்டு நகைப்பது போன்ற சத்தத்துடன் பெரிதாக ஆரம்பித்தது.

 இருட்டு இரவுக்கு துணை போனாலும், அவ்வப்போது உமிழ்ந்து மறைந்து பின் கண் சிமிட்டி உதயமாகும் மின்சாரத்தை  ஏதோ கூறி  வைதபடியிருக்க, மழை, மின்னலை கைப் பிடித்த எக்களிப்புடன் காற்றுடன் சேர்ந்து கொண்டவாறு அதை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது..!

இந்த கேளிக்கை வைபவங்கள் இத்தனையும் மீறி ஆழ்ந்த உறக்கம் லேசாக என் கண்ணைத் தழுவ ஆரம்பித்த வேளையில், அத்தனை சத்தத்திலும்  வித்தியாசமாக  ஒரு சத்தம் எழ கண்ணையும், அறிவையும் திறந்து பார்த்து உணர்வதற்குள் ஒரு பாரம் என்னுடன் இணைந்தது மாதிரி ஒரு உணர்வு......!! "நானும் இனி உன்னுடன்தான்... !!" என்ற உரிமையுடன் வெறி கொண்ட மனதாக என் உடலுக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு.. ..!! உடலை குலுக்கியது போன்ற ஒரு அவஸ்தையுடன்  போர்வை விலக்கி எழுந்து அமர்வதற்குள் என்னை அது முழுதாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

"என்னங்க.....இது எப்படியிருக்கு.... நல்லா இருக்கா? பாத்துட்டு சொல்லுங்க.!" என்றபடி பார்வதி தன் எதிரில் ஒரு வட்டமான கூடையை திறந்து காண்பித்ததும், அவன் அலறி விட்டான்.

"என்னடீது சே.. சே...  முதல்லே வெளியிலே கொண்டு விடு" ...!. என்று அவன் பயங்கரமான அறுவெருப்புடன்  கத்தவும். முகம்  சுருங்கியவள்,. ... 

"இல்லைங்க.! காலையிலே அப்பா வரும் போது நம்ம வீட்டுக்கு அருகே நாலஞ்சு குட்டிகளை பாத்ததும் அப்பாவுக்கு என் ஞாபகம் வரவே அதில் ஒன்னை இங்கே கொண்டு வந்தார். எனக்கு கல்யாணம் ஆறதுக்கு முந்தியே நம்ம டைகரை நாந்தான் வளர்த்து பாத்துகிட்டே ன். அது தீடிரென்று  உடம்பு முடியாது போனவுடனே ரொம்ப நாள் அது நினவாகவே இருந்தேன். அதை ஞாபகம் வச்சுகிட்டு அப்பா இந்த குட்டியை  எனக்காக கொண்டு வந்திருக்கார். " அவள் தயங்கி வண்ணம் சொன்னாள்.

" என்ன இழவோ போ.! இதெல்லாம் எனக்கு பிடிக்ககாதுன்னு உனக்கு தெரியுந்தானே... திருப்பி அனுப்ப வேண்டியதுதானே..!" அவன் கோபத்துடன் சீறவும்  அவள் மெளனமாய் தலை குனிந்தாள்.

" அம்மா  வீட்டுலே பொழுது போற மாதிரி இங்க போறதில்லைன்னு சொன்னதை ஞாபகம் வைத்து அப்பா ஆசையா வந்து தந்திருக்கிறார். எப்படி வேண்டாமென்று சொல்வது? கொஞ்ச நாளைக்கு நம்மோடு வளர்ந்தா, அப்புறம் நமக்கே பிடிச்சு போயிடும். அதுக்கும் எங்கே போறதுன்னு இடம் தெரியாமே நம்மோடு பழகிடும். இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியனுங்கிறது இல்லே...!!! என்று அவள் மெல்ல இழுப்பதற்குள்.,  அவன் மேலும் கடுப்பானான்.

"என்ன.... .. உபதேசம் பண்ற உத்தேசமா? சமயம் கிடைக்கறப்ப இப்படியெல்லாம் வேறே சொல்லலாமுனு சொல்லிட்டு போனாரா உங்கப்பா.!  வார்த்தைகளின் உஷ்ணம் அவளை தகித்தது.

அவள் மடமடவென்று பெருக்கும் கண்ணீரை அடக்கியபடி," இல்லை.. இல்லை. அவரை எதுக்கு  இப்ப இழுக்குறீங்க? நான் யதேச்சையாகத்தான் சொன்னேன்." என்று முடிப்பதற்குள், "இவங்களை யார் இப்போ வரச் சொன்னாங்க? போகும் போது உன்னையும் கையோடு கூட்டிகிட்டு போகாமே, வளர்க்கிறது ஒன்னு, வாழறதுக்கு ஒன்னுன்னு என் உயிரை வாங்கிட்டு......சே.! கல்யாணம் பண்ணிகிட்டதே பெரிய தொந்தரவுப்பா.... கையிருக்கும் முகம் துடைத்த துண்டை சோபாவில் எறிந்து விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் அவன்.

பார்வதி பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள். வாய் விட்டு அழக் கூட தெம்பில்லாது மனசு சோர்ந்தது  கையிலிருந்த பிறந்தே இரண்டு நாட்களான அந்த ஜீவன் பரிதாபத்துடன் அவளை கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும்  சோம்பல் ஒன்றை விடுத்தபடி கண்ணை மூடிக் கொண்டது. அவள் அதன் முகத்தோடு முகம் வைத்தபடி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தாள்.


நான் எப்போதும் போல் இல்லையென கொஞ்ச நாட்களாக சற்று புகார்களை என் எதிரிலேயே கூற ஆரம்பித்து விட்டாள் செல்வி. என் செயல்கள், சேவைகளில்  எந்த குறையும் இல்லையென்றாலும், அவர்களிடம் ஏனோ மனம் ஒட்ட மறுத்தது. செல்வியை பார்க்கும் போது என் விழிகளில் சமயத்தில் ஒரு வெப்பம் வருவதை உணர முடிந்தது. அதை அவள் கவனித்து விடுவாளோ என்ற பதற்றத்தில்் அவள் அருகாமையை தவிர்க்கப் பார்ப்பது அவளின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

"பிரதீப். ! நீங்க இப்ப ஊருக்கு போய்தான் ஆக வேண்டுமா? செல்வி கொஞ்சலுடன் மறுபடியும் அந்த கேள்வியை கேட்டாள்.

" என்னம்மா..! எத்தனை தடவை சொல்றது.. பிஸினஸ் விஷயமா நான் இப்படி போயிட்டு வர வேண்டிதானே இருக்கு.. ஒரு வாரத்திலேயே திரும்பிடுவேன். .எப்பவும் இந்த மாதிரி நேரத்திலே தைரியமாய் இருப்பே..! இந்த தடவை ரொம்பவே பயப்படுறே.. ஏன் என்ன ஆச்சு உனக்கு? என்றவன் ஆறுதலாக அவள் கைப்பற்றிக் கொண்டான்.

"ஒன்னுமில்லை! இந்த தடவை ஏனோ கொஞ்சம் பயம் வருது" என செல்வி தடுமாறினாள்.

எப்பவும் போல நீ நார்மலா  இருக்கிற தைரியத்தாலே இத்தனை நாள் நான் கவலையில்லாமே  போயிட்டு வந்திருக்கிறேனே ! இப்ப மட்டும் ஏன் விசித்திரமா தயங்குறே! தைரியமா இரு! ஒரு வாரத்திலேயே வந்துடுவேன். நாள் பறந்து போயிடும்...." என்ற பிரதீப் பயணத்திற்கு ஆயுத்தங்கள் செய்ய ஆரம்பித்தான்.

"இப்படி ஏன் என்னை வெறுக்கிறீங்க? அதனாலே சாப்பாட்டை கூட சாப்பிடாம இருக்கனுமா? இன்னைக்கு நம்ம திருமண நாள்.. அதனால்தான் இந்ந ஸ்வீட் பண்ணினேன்.இதையாவது சாப்பிடுங்க.!" கிண்ணத்திலிருக்கும் பாயாசத்தை அவனருகே மெள்ள நகர்த்தியதும்,  அவன் அதே விட வேகத்தில் அதை எதிர்புறம் தள்ளினான்.

" நான் இப்போ ஸ்வீட் கேட்டேனா ? இல்லை உன்னை சாப்பாடு பறிமாறவும் நான் அழைத்தேனா ?  ஏன் இப்படி தொந்தரவு பண்றே? எனக்கு எது தேவையோ அதை நானே எடுத்து போட்டுக்கிறேன். அதை விட உன்னாலே  பண்ண முடியலைன்னா பேசாமே இரு.. நான் வெளியிலேயே சாப்பிட்டுகிறேன்.  இப்படி பண்ணி வைச்சதெல்லாம் சாப்பிட்டு பாக்கிற சாக்கிலே பேசி என்னோட அன்பு முழுமையா கிடைச்சிடும்னு மட்டும் எதிர்பார்க்காதே.. " அவன் வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ பார்வதி சட்டென்று ஏதும் பேசாமல் முகம் சுருங்கினாள்.

" நீங்க இப்படி இருக்க என்ன காரணம்"னு தெரியாமே நான் தினமும் வெந்து சாகிறேன். என்னை பிடிக்கலைன்னா கல்யாணம் பண்ணும் போதே நீங்க வேண்டாம்னு மறுத்திருக்கலாமே.!" மனசுக்குள் வந்த கேள்வியை எச்சிலுடன் விழுங்கியபடி "என்னை மன்னிச்சுடுங்க.. இனி நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. என்றபடி தன் அறைக்குள் புகுத்தவளுக்கு கண்ணீர் ஆறுதல் தர படுக்கையை சரணடைந்தாள்.

மாதங்கள் ஓட நாட்கள் துணை புரிந்தது. ஓடிக் களைத்த நாட்களில் ஓர் நாள் ஊரிலிருந்து அவளை காண வந்த தனது தந்தையின் வரவு கண்டு சற்று மகிழ்ந்தாள் பார்வதி. அவள் நிலை கண்டு தந்தைதான் பதறி விட்டார்.

"என்னம்மா.... இப்படி சோர்வாக இருக்கிறே? இந்தளவுக்கு உடம்பு சரியில்லையா? டாக்டர்கிட்ட போனியா? கேட்டா மாப்பிள்ளைக்கு ஆபீஸ் வேலை சரியா இருக்குனு சொல்றே. உன்னை கவனிக்க கூட அவருக்கு நேரமில்லையா ? என்று பாசத்துடன் படபடத்த அவரை கொஞ்சம் அமைதிப்படுத்தினாள் பார்வதி.

" இல்லேப்பா இந்த ஒரு வாரமா கொஞ்சம் முடியலே... வேறே ஒன்னும் இல்லேப்பா? லேசான காய்ச்சல்தான். சரியாயிடும். அப்பா . நான் கொஞ்ச நாள் உங்க கூட ஊருக்கு... நம்ம வீட்டுக்கு வந்திருக்க ஆசைப்படறேன். வரட்டுமாப்பா?

" என்னம்மா நீ.. நம்ம வீட்டுக்கு வர்றதக்கு அனுமதியெல்லாம் கேப்பியா? உங்க அம்மா இருந்திருநதா உனக்கு உடம்புக்கு  முடியில்லைன்னு சொன்னதுமே உன்னை கூட்டிகிட்டு போயிருப்பா.. இங்கே அத்தையாவது உனக்கு ஒத்தாசையாக இருக்கவும் அந்த கடவுள் துணை புரியல்லியேம்மா... இப்ப இந்த அப்பா மட்டுந்தானே இருக்காருன்னு அனுமதி கேக்கிறியாம்மா?"

"அதெல்லாம் இல்லைப்பா.! அவரை தனியா விட்டுட்டு எப்படி வர போறோம்னு எனக்குதாப்பா ரொம்ப கவலை ? இல்லைன்னா, நான் போகனுன்னு சொன்னா என்னை அவரே கொண்டு வந்து விட்டிருக்க மாட்டாரா? என்று, வறட்டுப் புன்னகையுடன் கூறினாலும், "நான் போறேன்னு சொன்னா அடுத்த நிமிஷம் என்னை கொண்டு வந்து அங்கே விடறதுலேதான் அவருக்குதான்  ரொம்ப சந்தோஷப்பா..." என்று மனசுக்குள் அழுகையுடன் கூறிக் கொண்டாள்.

என்னவோ நீ நல்லா இருக்கனும்மா.! அம்மா இல்லாத குறை தெரியாமே உன்னை வளர்த்து உங்கம்மா பிரியபட்ட மாதிரியே அவ அண்ணன் பையனுக்கே உன்னை கட்டி வச்சேன். அவ அண்ணனும் ஒன்னு விட்ட உறவாயிருந்தும் எங்ககிட்டே பேசி சத்தியம் வாங்கியபடிக்கு தன்னோட மகனை எனக்கு மருமகன்ஆக்கினாரு. இதையெல்லாம் பார்க்க உங்கம்மா கொடுத்து வைக்கல்லேயே.! பாவி அவதான் முந்திகிட்டான்னா, மாப்பிள்ளையின் அப்பாவும், தன் மகனை எனக்கு மருமகன் ஆக்கின சந்தோஷத்திலே  இப்படி போயிட்டாரே... இப்ப நான்தான்  உங்க ரெண்டு பேரையும் பாக்கற ஆவல்லே அங்கிட்டும், இங்கிட்டுமாய் அல்லாடிகிட்டு இருக்கேன்.

."சரிப்பா!! நடந்த கதை இப்ப எதுக்கு? நீங்கதான் அம்மாவுக்கும் மேலாயிருந்து என்னை வளர்த்து கல்யாணம் பண்ணி வைக்கல்லியா? எனக்கு அம்மா இல்லைன்னு வருத்தாமாயிருந்தாலும், உங்ககிட்டயே அம்மா பாசத்தையும் சேர்த்து அனுபவிச்சே வளர்ந்துட்டேப்பா... அம்மா இல்லாத குறையே எனக்கில்லைப்பா.. நீங்க மட்டும் எனக்குன்னு என்னைக்கும் இருந்தா போதும்." கண்ணீருடன் விழிகளை துடைத்துக் கொண்டவளை  வாஞ்சையுடன் பார்த்த தந்தை தன் விழிகளிலும்  வழிந்த கண்ணீரை அடக்கமாட்டாமல் உகுத்தார்.

மறுநாள் "தந்தையுடன் ஊருக்கு போகிறேன்" "என்றவளை தடையேதும் சொல்லாமல் அவன் அனுப்பியதை கண்டதும் பார்வதியின் மனம் இன்னமும் சோர்வடைந்தது. அதுதான் அவளின் கடைசி பிரிவாகவும் இருக்குமென யாருமே நினைத்துப் பார்க்கவில்லை
.

வாசலில்  யாரோ அழைப்பு மணியை அழுத்தி அழைக்கவும், விரைந்து சென்று கதவை திறந்த செல்வி உள்ளே வந்தவனைப்பார்த்து "நீயா?" என கத்தி அதிர்ந்தாள்.

"நானேதான்....! எப்படி இவன் வீடு தேடி வந்து விட்டான் எனப் பாக்கிறியா? அதுவும் உன் காவலர் இல்லாத சமயமாக பார்த்து வந்ததற்கு நீ கண்டிப்பாக என்னை பாராட்டனும்... ! என்றான் வந்தவன் கண்களை சிமிட்டியபடி...

" நீ எதுக்கு வீட்டைத் தேடிக் கொண்டு இங்கேயெல்லாம் வருகிறாய்? நான்தான் நீ கேட்ட பணத்தை அன்னைக்கே அவருக்கு தெரியாமே எப்படியோ புரட்டி கொடுத்திட்டேனே..! ஏன் இப்படி என் வாழ்க்கையை கெடுக்க மறுபடி, மறுபடி வந்து தொந்தரவு செய்றே..! கோபத்துடன் அடிக்குரலில் கூறினாள் செல்வி.

"பணமா? நீ கொடுத்ததெல்லாம் ஒரு கணக்கா? நான் கேட்டதை கொடுத்தியா.. ஏதோ அதில் நாலிலொரு பங்கை கொடுத்துட்டு நானும் தந்திட்டேன் என்று சொல்லிக் காட்டுறியே.. !என்றவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு " ஆ... வீடு நல்லாத்தான் இருக்கு..!  பிடிச்சாலும், நல்லா வசதியானவனைத்தான் பிடிச்சிருக்கே .. ! அவனும் தன் மாஜி மாமனார் சொத்தை வளைச்சுப் போட்டு உன்னையும் அதில் ராணியாக வாழ வைக்கிறான்..! என்று எகத்தாளமாக கூறியபடி வாய் விட்டு சிரித்தான்.

" நீ இப்ப மரியாதையா வெளியே போகப் போறியா.. ! இல்லை..... கோபத்தில் குரல் நடுங்கியது செல்விக்கு.

"இல்லை... என்னப் பண்ணப்போறே? கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப்போறியா? எங்கே தள்ளி விடு.... பார்க்கலாம்..! என்றபடி  அவளை நோக்கி தன் கழுத்தை முன்னுக்கு நீட்டியவனை கண்டதும் செல்வியின் முகம் கோபத்தில் கொதித்து சிவந்து கண்களில் கண்ணீரை வெளிப்படுத்தியது.

" அய்யோ...! நிறுத்து...!! இப்படி அழுது அழுதுதானே அன்னைக்கு என்னை காதலிச்சே.... ! அதுக்கப்புறம் என்னை கைவிடும் போதும், இதே அழுகைதான். உங்க உறவுலே உன்னையே ஒருத்தன் ரொம்ப வருடமா விரும்புறான்... அவனைத்தான் அப்பா, அம்மாவும்  கட்டிக்க சொல்றாங்கன்னு எத்தனை மாய்மாலமா பேசி, என்னை விட்டுட்டு, அதிக வசதியா இருக்கிற இவனை இரண்டாந்தாரம்"னு பாக்காம கல்யாணம் செஞ்சுகிட்டே.... ! அப்புறந்தானே தெரிஞ்சது..! அவனை நீயும் அவனிடம் இருந்த வசதியான அந்த பணத்துக்காக காதலிச்சதையும், அவன் உனக்காக வலுக்கட்டாயமாக தன் அப்பா கட்டி வைத்த மனைவியையே வெறுத்து ஒதுக்கி விட்டு அவள் அந்த வேதனையில் உள்ளம் உருகி இறந்ததும், உன்னை என்னவோ பெரிய மகாராணியா நினைச்சு உன்னோடு வாழ்ந்து வர்றததையும், அப்புறந்தானே தெரிஞ்சுகிட்டேன்..! "வந்தவன் அவளின் வாழ்க்கையை கேவலமாக பேசியபடி சோபாவில் அமர்ந்து கொண்டான்.

"இப்ப என்ன வேணும்"னு இப்படி தொந்தரவு  பண்றே?

"கண்டிப்பாக நீ வேண்டாம்.. "என்றவன் தான் அடித்த ஜோக்கை நினைத்து தானே பலமாக சிரித்தான்.

"எனக்கு பணமாக பத்து லட்சம் தந்து விடு...! உன் வாழ்க்கையை விட்டு  முழுதுமாக போய் விடுகிறேன்." என்று சிரித்தபடி கூறிய அவனைப் பார்த்து அதிர்ந்தாள் செல்வி.

"பத்தா? அவ்வளவுக்கு நான் எங்கே போவேன்? ஏற்கனவே அவருக்கு தெரியாமல், எப்படியோ என் நகைகளை வைத்து உனக்கு இரண்டு வரை கொடுத்து விட்டேன். தயவு செய்து என் நிலைமையை புரிஞ்சு பேசு." அவள் குரல் அழுகை கலந்ததால் கம்மியது.

அதுதான் சொன்னேனே..! அதெல்லாம் பணத்தோட கணக்கே இல்லைன்னு..!  நீ முழுசா பத்தை கொடுத்துட்டு, என் வாழ்க்கையிலும் விலகிப் போயிடு.. நானும் எங்கேயாவது போய் செட்டில் ஆயிடுவேன். இல்லாட்டி.. உன் கணவனோடேயே பேரம் பேச வேண்டியதிருக்கும்.. எப்படி வசதி?" அவனின் வன்ம சிரிப்பு அவளின் முகத்தில் அறைந்தது. 

அவள் முகம் பேயறைந்த மாதிரி சற்று வெளிறியது. 

அந்த அறைக்குள் நுழைய முடியாமல் ஏதோ என்னை தடுத்தது. அவர்களின் காரசாரமான பேச்சுக்கள் எனக்குள் சற்றே சந்தோஷத்தை  உண்டாக்கியதை என்னால் உணர முடிந்தது. 

" சரி . நான் இப்ப போயிட்டு  நாளை மறுநாள் வருகிறேன். அதற்குள் பணத்தை ரெடி பண்ணிடு....."அவன் கிளம்ப யத்தனித்தான்.

எப்படி? பாவி... பாவி... என் நிலைமை புரியாமே இப்படி சொல்றியே.. நாளைக்குள் எப்படி நீ கேட்கும் பணத்தை ரெடி பண்ண முடியும்...? அதற்குள் உனக்கு ஏதேனும் சாவு வரக்கூடாதா? மனதுக்குள் கடுமையாக அவள் திட்டிக் கொண்டாள். 

என்ன..? எனக்கு சாபம் கொடுக்கிறாயா? உன் சாபமெல்லாம் பலிக்காது. அப்படியே பலித்தாலும், அது உனக்கும் சேர்த்துதான் பலிக்கும். பார்க்கிறாயா.. ?"அவள் முக பாவத்தைக் கொண்டு கணித்து  அவளருகில் வந்து கிசுகிசுப்பான குரலில் அழுத்தமாக சொன்னவன் அவள் அவனின் பேச்சில் அதிர்ந்து நிற்கையில், அறை கதவை திறந்து வாசல் கடந்து வெளியேறினான். 

என் மனது முழுக்க ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம் சட்டென ஓடி ஓடி சந்தோஷிப்பதை புரிந்து கொண்டேன்." 

எங்கே போய் தொலைஞ்சே...! சமயத்தில நீ ரொம்ப என்னைை கண்டுக்காமல் காலை வாரி விடறே....! என சுள்ளென்று செல்வி கத்தியதும் ஒரு இன்பமாகத்தான் இருந்தது. அவனைப் பற்றி என்னிடம் முழுதாக சொல்ல முடியாத ஒரு இக்கட்டில் அவள் இப்படி கோபப்படுவதை பார்க்கும் போது என்னுள்ளும் அவளை துன்புறுத்தும்  வெறி வருவதை உணர்ந்து கொண்டபடி நான் அவள் அறையை விட்டு மெளனமாக வெளியேறினேன். 

மறுநாள் மாலை வரை அவளிடத்தில் எந்த கலகலப்புமின்றி, குழந்தையை கவனிப்பதை மட்டும் கடனாக செய்து வந்ததை  நானும் புரிந்து கொண்டேன்.  என்னுடன் அவளை விளையாட கூட அனுமதிக்காமல், தன்னுடனே வைத்துக் கொண்டிருந்ததும்
 எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அன்று மாலைக்கு பின் எங்கோ குழந்தையுடன் சென்று விட்டு வந்தவளிடம் ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்தது. "வரட்டும்....நாளை.. நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று லேசாக ஒரு தடவை சத்தமாகவே  முணுமுணுத்துக் கொண்டதை நான் பார்த்ததும், இன்னும் படபடப்பாக வியர்வை துளிர்க்கும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.  இரவு பிரதீப்புடன் ஃபோனில் பேசும் போதும் எப்போதும் போல், நிறைய நேரம் பேசாமல், "இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடுவீர்களா? ஒன்றும் பயமில்லை.. .!!! நான் தைரியமாகத்தான்
 இருக்கேன். .  !!! .சரி... சரி. ... எப்போ வேலை முடியுதோ..... அப்போ உங்க செளகரியப்படி புறப்பட்டு வாங்க.... ஒன்றும் பயமில்லை..." என்று குரல் உசத்திப் பேசியவள்  சீக்கிரம்  பேச்சை துண்டித்து விட்டு படுக்கச் சென்றாள். மறுநாள் விடியப் போகும் காலைப் பொழுதை  ஆவலுடன் நானும் எதிர்பார்த்தபடி கண் மூடினேன். 

மறுநாள் மதியத்திற்கு மேல் கதவு தட்டப்படும் ஒலியில் மாடியிலிருந்து விரைந்து வந்த செல்வி குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த என்னை பொருட்படுத்தாது சென்று கதவை திறந்தாள். அங்கே அவனைக் கண்டதும் "உள்ளே வா" என்றபடி மாடிக்கு விரைந்த அவளை அவனே சற்று ஆச்சரியத்தோடு பார்ப்பதை என் விழிகள் கவனிக்க தயங்கவில்லை. 

"என்ன உபசாரம் பலமாக இருக்கிறது? கொடுக்க வேண்டியதை தந்து விட்டால் இப்படி வெளியேற எனக்கும் சௌகரியமாக இருக்குமே" வந்தவன் அதே நக்கலோடு ஆரம்பிக்க அவள் அதற்குத்தான் "வா என்றேனே.." என்றவள் ஒரு கண்ணசைவில் என்னை நோக்கினாள். 

"ஓ..  புரிகிறது.. புரிகிறது.. கொடுக்க இருப்பதை யாருக்கும் தெரியாமல்.... சரி... சரி. ..முறைக்காதே. .. இதோ வந்து விட்டேன்.."என்றபடி அவன் மாடிப்படியேறினான். 

எனக்குள் இன்னதென்று தெரியாத ஒரு வெப்பம் உடலெங்கும் பரவியது. 

மெதுவாக அவர்கள் அறியாதபடி நானும் மேலேறி அவர்கள் இருந்த அறை வாசலில் நின்று கொண்டேன். அறைக்கதவு தாழ்ப்பாள் இடாமல் வெறுமனே சார்த்தியிருக்க, அந்த சாத்திருந்த கதவை சுலபமாக திறந்து கொண்டு உள்ளே செல்ல முடியும் என்பதை புரிந்து கொண்டேன். 

"என்ன. . உள்ளே அழைத்து விட்டு ரகசியம் பேசவா வந்திருக்கிறேன். இல்லை. .. அப்போ அனுபவிக்காததையும் இப்ப சேர்த்துக் கொடுக்கச
போகிறாயா? ." என்றபடி அவன் விஷமத்தனமாக கேட்பது எனக்குள்ளும் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. 

"ஆமாம். .  கொடுக்கத்தான் போகிறேன்.. இந்தா வாங்கிக் கொண்டு நிம்மதியாக போய்ச் சேர். ... ." என்ற அவளின் பதிலுக்கு அவன் விதிர்விதித்து, சற்றுப் படபடத்த குரலில்,  " ஏய்.... ஏய்.. என்னது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறே.. .? எனவும் நான் மெள்ள கதவை திறக்கலானேன். 

அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திகைப்படைய செய்தது. கையில் துப்பாக்கியை வைத்தபடி நெருங்கி வரும் அவனை குறி பார்த்தபடி பயங்கர கோபத்திலிருந்த செல்வியின் முகம் எனக்கே சற்று பயத்தை உண்டாக்கியது. 

"ஏய். ... அட.. உனக்கு இப்படி சுடக் கூடத்  தெரியுமா? சுட்டுடாதே.. .. சுட்டுடாதே.   அப்படியே நீ  சுட்டாலும், சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வரவங்கிட்டேயிருந்து எப்படி தப்புவே. ...? போலீஸ் வந்து விசாரிச்சு, கொலை கேஸ்ன்னு வெளியிலே நியூஸ் வந்து, 
அப்புறம் உன் கணவன் வந்து விபரம் தெரிஞ்சு அவமானம் தாள முடியாம அவனும் ஒரு முழ கயித்தை நாடுவான். .. இதெல்லாம் உனக்குத் தேவையா. .. ?"  அவன் கையை உயர்த்திபடி பேசிக் கொண்டே ஒவ்வொரு இன்ச்சாக  மெள்ள  அவளை நோக்கி நகர்வதை
உணர்ந்தேன். 

" ஏய்... கிட்ட வராதே. . . நிஜமாகவே இப்பவே சுட்டுவேன். இது எந்த சத்தமும் கேட்காத லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி.... போயிடு.... என்னை விட்டு போயிடு.. இனி என் வாழ்க்கையோடு நீ தொடர்ந்து வந்தேன்னா உன் உயிர் உன் கிட்டே இருக்காது.... எனவே சத்தம் போடாம நீ இப்போ போயிட்டு.. இனி எப்பவும் இங்கு வரவே வராதே..." அவள் படபடவென வார்த்தைகளை முடித்ததும், அவன் கை எப்படியோ அவளை வளைத்துப்பிடித்து அவள் கையிலிருக்கும் துப்பாக்கியை பறித்துக் கொண்டது. 

அந்த கண நேர மாற்றத்தில் என் நெஞ்சும் அதிர்ந்து படப்படத்தது. 

"என்ன. . சத்தமே கேட்காத துப்பாக்கியா?நான் சுட்டாலும் இது சத்தம் போடாதா? இப்ப சுட்டு காண்பிக்கட்டுமா. .. .? இல்லை எனக்குதான்  சுடத்தெரியாதுன்"னு நினைச்சுகிட்டு இருக்கியா? ஆனாலும் உன் உயிர் எனக்கு தேவையில்லை.. நான் கேட்ட பணத்தை கொடுத்துடு. ...".  நானும் இப்படியே உன் உயிரை எடுக்காமலே போயிடுறேன்.. .." என்றபடி அவன் பல்லைக் கடித்தபடி கேலியாக கூறிச் சிரிக்கவும், 

அவள் சற்று பயம் கலந்த முரட்டுத்தனத்துடன் அவன் கையிலிருக்கும் ரிவால்வர் பிடுங்க முயற்சி செய்ததும் நான் அவர்கள் எதிர்பாராதபடிக்கு, அவர்கள் இருவர் நடுவிலும் பாய்ந்தேன். 

அந்த ஒரு நொடியில், அவர்களின் கை அழுத்தத்தில், அந்த சத்தம் இல்லாத துப்பாக்கியின்  குண்டு என் உடலைத் துளைத்ததும், நான்" ஆ, "வென்ற அலறலில் துள்ளி விழுந்ததை கண்ட செல்வி, ஆ..... .. அய்யோ...  .என்று சத்தமிட்டபடி கதறினாள். அவனும் ஒரு நிமிடம் தடுமாறியவன் மறுநிமிடமே  சுதாரித்தபடி கையிலிருப்பதை எறிந்தபடி வெளியே ஓடியதை நான் மெள்ள கீழே சாயும் போது என் கண்களால் காண முடிந்தது. 

"அய்யோ.. .. நீ எனக்காக உன் உயிரை இப்படி தியாகம் செய்து விட்டாயே. . இப்போ நான் என்ன செய்வேன்.. .. " செல்வி கதறுவதை உயிர் இன்னமும் பிரியாத மயக்கம் தழுவி கொண்டிருந்த என்னால்  கேட்க முடிந்தது. என்னை விட்டு  இத்தனை நாள் என்னுள்ளிருந்து மகிழ்ந்திருந்த  அந்த மற்றொரு உயிரும் காற்றாய் கலந்து பரந்து விரிந்ததையும் என், கண்களின் ஜீவன் குறையாமல் இருந்த அந்த வேளையில் புரிந்து கொள்ள முடிந்தது. 

"உன்னைப் போல் ஒரு அன்பான ஜீவனை நானும் என் வாழ்வில் நேசித்து வளர்த்து வந்தேன். என் கணவனின் பிடிவாதத்தால் என் தந்தை தந்த அதை என் தந்தையிடமே  தந்து விட்டேன். இவளின் காதல் மயக்கத்தில் இருந்த என் கணவன் அவளால் வளர்த்த உன்னை எப்படியோ ஏற்றுக் கொண்டதும் இப்போது எனக்கு சௌகரியமாக இருந்தது. நான் உனக்குள் இங்கு வந்த வேளையில், இவளின் முகத் திரைகள்  இவளின் பழைய செய்கைகளால் கிழிந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். 

வாழும் போதும் சரி... வாழ்ந்த வாழ்விலும் சரி. .. அதன் பின் இறந்த பின்னும்  நிம்மதியின்றி சுற்றி வந்த நான் இவளை பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் அதுவாக வந்ததை கண்டு அந்த நேரத்திற்காக உன்னுடன் இணைந்து தங்கினேன். 

என் முன்னாள் கணவனிடம் இவளின் பழைய வாழ்வை காண்பித்து, நிரூபித்து சந்தோஷபட வேண்டி உனக்குள் காத்திருந்தேன். ஆனால், நானும் ஒரு பெண்தானே.. . "பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பார்கள். அதுவும் நான் சுபாவத்திலே நல்லவளாக வாழ்ந்து எனக்கு என் கணவன் தந்த மனவருத்தத்தில் மட்டுமே என் உயிரை பிரிந்தவள். அந்த நல்ல குணம் இப்போதும் என்னில் அப்படியே இருந்ததினால் இவள் துப்பாக்கியில் அடிபட்டு இறந்து விடுவாளோ என்பதை காண சகியாமல், சண்டையிடும் இவர்கள் இருவரின் நடுவில் பாய நினைத்தேன். 

அந்த என் நினைப்புடன் உன் நினைப்பும் இணைந்ததால், அது நடந்தே விட்டது. ஏனென்றால் நீயும் இந்த உலகில் மனிதர்களோடு இந்த மனிதர்களுக்காக நன்றியுடன் மட்டுமே வாழப் பிறந்தவன். அதனால் அநியாயமாக உன் உயிரும் இப்போது போகப் போகிறது. எப்போதும் விதியை மாற்ற இயலாது. என் உயிர் காற்றிலே கலந்து இறைவனோடு சங்கமிக்கும் நேரம் வந்து விட்டது. எனக்காக இத்தனை நாள் உன்னுடலில் இடம் தந்த உன்னை நான் வாழ்த்துகிறேன்.. .. வணங்குகிறேன்... என்னால்தான் உனக்கிந்த வேதனை என்றால், என்னை மன்னித்தும் விடு.... நான் வருகிறேன்... " என்றபடி ஒரு பெண்ணுருவம் என் காதோடு  பேசியபடி என் உடலை அன்புடன் தன் கை கொண்டு ஸ்பரிசித்த நேரம் அவள்  மெதுவாக காற்றோடு கலைய என் இறுதி மயக்கம் மிக அருகில் என்னோடு  நீடித்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

கதை நிறைவுற்றது.

ஒரு வித்தியாசத்திற்காக  இந்தக்கதை எழுத ஆரம்பித்து வருட கணக்கில் முடிக்காது பாதியிலேயே வைத்திருந்தேன். கதை ஆரம்பிக்கும் போது எடுத்த கதை கருவும் சற்றே மறந்தே விட்டது எனலாம். எப்படியோ ஒரு மட்டும் இன்னமும் கதையை நீட்டாமல் முடித்துள்ளேன். 

கதை சற்று பெரிதாக உள்ளதால் முதலில் இதை இரு பாகமாக வெளியிடலாம் எனவும் நினைத்தேன். ஆனால் அதன் ஸ்வாரஸ்யம் (அப்படியும்  ஒன்று கதையில் இருந்தால் ஹா ஹா ஹா. ) குன்றி விடுமோவென ஒரே பதிவாக வெளியிட்டு விட்டேன். பொறுமையுடன் படிக்கும் உங்கள் அனைவரின் ஊக்கமிகு கருத்துக்கள் மேலும் என்னை எழுத வைக்கும் (பயம் வேண்டாம்... இதே கதையை அல்ல... ஹா ஹா ஹா) என நினைக்கிறேன். கருத்துக்கள் அளிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

37 comments:

  1. உணர்வு பூர்வமான கதை.  பார்வதியின் மறைவை மறைமுகமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.  செல்வியை பார்வதியின் கணவன் பார்வதி காலத்திகேயே அறிவான் என்று அர்த்தமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் பதிவுக்கு வருகை தந்து பொறுமையாக கதையினை படித்து தந்த கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      /செல்வியை பார்வதியின் கணவன் பார்வதி காலத்திகேயே அறிவான் என்று அர்த்தமா?/

      ஆம். அதனால்தான் அவனுக்கு தங்கள் பெற்றோர்களால் திருமணம் செய்விக்கப்பட்ட பார்வதியை பிடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளேன். கதையை இன்னமும் விரிவாக நீட்டித்தால் குறுநாவலாகி விடுமே என்ற அச்சத்தில் இத்தனை சுருக்கம். ஹா ஹா ஹா. தாங்கள் அருமையாக புரிந்து கொண்டு படித்து நல்லதொரு கருத்து தந்ததற்கு என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நீளம் அதிகமாக இருந்தாலும், படித்துக்கொண்டே வரும்போது சரசரவென ஓடிவிட்டது போல பிரமை.  பாவம் பார்வதி...  எப்போதும் ஏமாளி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நீளம் அதிகமாக இருந்தாலும், படித்துக்கொண்டே வரும்போது சரசரவென ஓடிவிட்டது போல பிரமை/

      நல்லவேளை.. அதிக நீளம் என சொல்லி விடுவீர்களோ என கவலையாக இருந்தது. என் கைப்பேசியில் பார்க்கும் போது மிகப் பெரிதாக தெரிந்தது. தங்களது ஊக்கம் மிகுந்த இத்தகைய பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

      ஏமாளிகள் இருக்கும் வரை உலகம் அவர்களை ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கும். அவர்களையும் அப்படி படைப்பது "அவனின்" விளையாட்டுகளில் ஒன்று போலும். தங்களின் நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வித்தியாசமான கதை... பரபரப்பாக இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வித்தியாசமான கதை என்ற முடிவெடுத்து கருத்து தந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கருத்தைத்தான் நானும் மனதாற எதிர்பார்த்தேன். கதையின் நீளம் அதிகமிருப்பினும் பொறுமையாக படித்து தந்த உங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. //"நானும் இனி உன்னுடன்தான்... !!" என்ற உரிமையுடன் வெறி கொண்ட மனதாக என் உடலுக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு.. ..!! உடலை குலுக்கியது போன்ற ஒரு அவஸ்தையுடன் போர்வை விலக்கி எழுந்து அமர்வதற்குள் என்னை அது முழுதாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது.//

    கதையின் நிறைவுக்கு இந்த ஆக்கிரமிப்பு காரணம் புரிந்து விட்டது.

    நல்லதே செய்து விட்டு விடைபெற்றது நன்றியும், அன்பும் இணைந்தால் நல்லதுதான் நடக்கும்.

    கதை நன்றாக இருக்கிறது. அமானுஷ்ய கதையும் எழுத வருகிறது உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      இது சற்றே நெடிதான கதைதான். இன்னமும் நீளமாக்கினால் படிப்பவர்களுக்கு கஸ்டமாக இருக்குமேயென ஏதோ எனக்குத் தெரிந்த மாதிரி சுருக்கி, வளர்த்து தெய்வாதீனமாக எழுதி முடித்து விட்டேன. இது பதிவில் சொன்ன மாதிரி எப்போதோ ஆரம்பித்தது. . ஆரம்பிக்கும் போது இருந்த கதையின் கரு அதன் வார்த்தைகளை இணைத்து வந்து சேர்க்கும் போது மாறுபட்டு கூட இருக்கும். எழுத விடாததற்கு ஏதோ வேலைகள், மனசஞ்சலங்கள் என்று தடை செய்யும் போது ஒரே மூச்சாக அமர்ந்து எழுதவும் அது தடை செய்து விடுகிறது. அப்போதெல்லாம் எதையுமே சிறப்பாக எழுதும் உங்களனைவரையும் என் மனதின் நம்பிக்கையாய் எடுத்துக் கொள்வேன். அப்படி கொஞ்சங்கொஞசமாக எழுதி தெய்வத்தின் அருளினாலும், மனதில் நீங்கள் அனைவரும் தந்த நம்பிக்கையாலும், ஒருமட்டும் ஒரு கதையை வெளியிடட வைத்த இறைவனுக்கு நன்றி.

      /நல்லதே செய்து விட்டு விடைபெற்றது நன்றியும், அன்பும் இணைந்தால் நல்லதுதான் நடக்கும்./

      உண்மை.. அழகாக கருத்து சொல்லியுள்ளீர்கள். உங்களுக்கு என் மனம். நிறைந்த பாராட்டுக்கள்.
      நல்ல கருத்து.

      /கதை நன்றாக இருக்கிறது. அமானுஷ்ய கதையும் எழுத வருகிறது உங்களுக்கு./

      நன்றி சகோதரி. இப்படிப்பட்ட ஊக்கம் நிறைந்த தங்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும் தன்னம்பிக்கையையும் தருகிறது. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பாராட்டுக்கள், வாழ்த்துகள். பிடிக்காத வாழ்க்கையை கொடுத்ததால் பழி வாங்க வந்தாலும், நல்ல குணம் மேல் ஓங்கி ஜெயித்து விட்டது.

    பார்வதி வளர்த்த போது பிடிக்கவில்லை, செல்வி வளர்க்கும் போது பிடிக்கிறது.
    பிடிக்காதவர் என்ன செய்தாலும் குறைதான் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை பொறுமையாக படித்து நல்லதாக கருத்துக்கள் தந்தமைக்கும், தங்கள் வாழ்த்துகளையும், மனமுவந்து தந்த பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /பிடிக்காதவர் என்ன செய்தாலும் குறைதான் இல்லையா?/

      ஆம்.. பிடிக்காதவர்கள் அனபாலே அர்ச்சனைகள் செய்தாலும், அதிலும் ஏதோ ஒரு குறையை கண்டு பிடிப்பதுதான் இந்த மனித சுபாவம். இது அந்த மனிதப்பிறவி ஜனித்ததிலிருந்து தொடர்கதையாக வருவதுதான்... இறுதியில் எங்கேனும் ஒரு இடத்தில் அதை புரிந்து கொள்ளும் போது அந்த அன்பு செய்பவரின் காலம் கடந்திருக்கும். அதன் பின் இந்தப்பிறவியில் என்ன பிரயோஜனம்.?

      நல்லதொரு கருத்துக்களை தந்ததற்கு மிகவும் மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கதை மனதை தொட்டது வித்தியாசமான கோணம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      கதையை பொறுமையாகப் படித்து, வித்தியாசமான கோணத்தில் கதை மனதை தொட்டு என்று அழகான கருத்தை பதிவு செய்தமைக்கு என் அன்பான நன்றி சகோதரரே. , தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்தை கண்டதும் என் மனம் மகிழ்வுறுகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. *வித்தியாசமான கோணத்தில் கதை மனதை தொட்டது என்ற அழகான கருத்து என்று படிக்கவும்.

      Delete
  7. ஶ்ரீராமுக்கு அடுத்து நான் தான் கருத்துச் சொல்லி இருந்தேன். ஆனால் எனக்கு பதில் வரலையேனு பார்த்துட்டு இங்கே வந்து பார்த்தால் கருத்து காக்கா ஊஷ்! :( கருத்தை என்னோட மெயில் பாக்சில் இருந்து தூக்கிக் கொண்டு வந்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா.. இன்றும் தங்கள் கருத்தை காக்கா கொண்டு போய் விட்டதா? சோதனைதான்.. தங்களுக்கு மட்டும் ஏன் இப்படி அடிக்கடி நிகழ்கிறது. இன்று என்னுடைய நண்பர்கள் பதிவுகள் என்ற இடத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள். என் பதிவு பிளாக் ஒவ்வொரு தடவையும் திறக்கவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. என் கைப்பேசியில் தான் ஏற்பட்ட மாறுதலா.. .? இல்லை கூகுளின் மாற்றங்களா. ? சரியான விபரங்கள் என் மகளிடம் தந்ததுதான் (அவளுக்கு நேரம் கிடைக்கும் போது) அறிய வேண்டும்.

      நீங்கள் எப்படியோ உங்கள் மெயில்பாக்ஸிலிருந்து எடுத்து வந்து எங்கள் பதிவுகளில் இணைத்து விடுகிறீர்கள். உங்களின் கணினி குறித்த திறமைகளுக்கு என் பாராட்டுக்கள். அந்தளவு திறமைகள் என்னிடம் இல்லை. மறைந்து கொண்டிருந்த கருத்தை கொண்டு வந்து இணைத்து மேலும் பல கருத்துக்களை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் அன்பா ன ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. //Geetha Sambasivam has left a new comment on the post "பழி":

    நீளமான கதை தான். சஸ்பென்ஸ் வைத்து இரு பகுதிகளாகவே கொடுத்திருக்கலாம். நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். அந்த வாயில்லா ஜீவனின் உடலில் புகுந்தது பார்வதி தான் என்பதை உடனேயே தெரிந்து கொண்டேன். எதிர்பார்த்தது செல்வியின் மரணத்தை. ஆனால் முடிவு வேறு விதமாய் அமைந்து விட்டது. வாழ்த்துகள். செவ்வாய்க்கிழமைக்கு இரண்டு பகுதிகளாய் அனுப்பி இருக்கலாமோ?:// இதான் நான் போட்டிருந்த கருத்து. நீங்கள் அருமையாகச் சிறுகதைகள்/பெரிய கதைகள்/நாவல் வடிவம் என எழுதி அசத்துகிறீர்கள். பத்திரிகைகளுக்கும் எழுதிப் பாருங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஆம்.. உண்மைதான் பெரிதான ஒரு கதையாகத்தான் அமைந்து விட்டது. நிறைய விஷயங்களை அவரவர் ஊகத்திற்கே நான் விட்டாலும், இன்னமும் கொஞ்சம் சுருக்கி எழுதி இருக்கலாம். அந்த திறமைதான் என்னிடம் வரவில்லையே!! அதனால்தான் எ. பிக்கு அனுப்பத் தயங்கினேன். ஏதோ இந்தளவிற்கு நீண்ட நாட்கள் கழித்து பாதி எழுதி வைத்திருந்ததை முடிக்க வைத்து விட்ட இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் மேலும் கதைகளை எழுதலாமா என்ற எண்ணங்களையும் எனக்குள் ஏற்படுத்துகிறது.

      ஒரு குடும்ப கதை சிறிது முடிக்காத நிலையில் உள்ளது. அதை எழுதி முடித்து எ. பிக்கு அனுப்ப வேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறேன். இறைவன் அருள வேண்டும்.

      /பத்திரிகைகளுக்கும் எழுதிப் பாருங்களேன்./

      தங்கள் யோசனைகளை நான் பதினேழு வயதிலேயே ஒரிரு தடவைகள் செய்திருக்கிறேன். எனக்கும் பெரிய எழுத்தாளி ஆக வேண்டுமென கற்பனை, கனவெல்லாம் இருந்தது. அதிர்ஷ்டம் என்ற ஒன்று எதற்கும் அமைய வேண்டுமல்லவா?. இப்போதைக்கு எனது பத்திரிக்கைகள் என் சொந்த பிளாக்கும், நம் அனைவருக்கும் உற்சாகமும், ஊக்கமும் தரும் எ. பியுந்தான். (எ. பி ஆசிரியர்கள் பொறுத்து கொள்வார்கள் என நினைக்கிறேன். ஹா ஹா ஹா. ) என் எழுத்து தாகத்தை இவையிரண்டுந்தான் தணித்துக் கொன்டுள்ளது. ஊக்கம் மிகு கருத்துரைகள் தர நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். வேறு என்ன வேண்டும் எனக்கு. இவைகளுக்கே நான் இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கடைசியில் என்ன இருந்தாலும் நாயின் நன்றி/அல்லது பார்வதியின் நல்ல மனது இரண்டும் இணைந்து செல்வியைக் காப்பாற்றி விட்டது. நல்ல முடிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. மனிதர்களை விட நன்றி மிகுந்த ஜீவன் அது.. தன்னை வளர்த்த செல்வியை சாக விடாமல் தடுக்க நினைக்கும் போது பிறப்பிலேயே நல்ல மனதுடைய பார்வதியின் மனதும் அதையே செய்ய நினைத்தது. எனவே அங்கு செல்வியின் உயிர் தப்பியது. செல்வியை பொறுதத்த வரை தான் வளர்த்த ஜீவன்தான் தன் உயிரை காப்பாற்றியது என நினைத்திருப்பாள். இது நல்ல முடிவு என்ற கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். லேப்டா, பிசி இல்லாமல் இவ்வளவு பெரிய கதையை எழுதியதே ஒரு சாதனைதான்.

    கதையை நான் இன்னும் ஆழமாகப் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். படித்துவிட்டு எழுதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      டெஸ்க் டாப் இருந்தும் இதிலேயே ஏதோ எழுதி வருகிறேன். பழகி விட்டது. அதுவும் என்றாவது எனக்காக ஒத்துழைப்பு தரும். நம்பிக்கை உள்ளது.

      மீண்டும் கதையை படித்து விட்டு நல்ல கருத்துரைகளை தாருங்கள். காத்திருக்கிறேன். தங்களது அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கதை என்னைக் கவர்ந்தது. இன்னும் தீர்க்கமாக எழுதி இரு பாகமாகப் போட்டிருக்கலாம். சில இடங்களில் குழப்பமாக இருந்தது, புரிவதற்கு.

      ஆர்வம், முயற்சியைப் பாராட்டுகிறேன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் மீள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /கதை என்னைக் கவர்ந்தது/

      நன்றி சகோதரரே. இந்த ஒரு வரிக்காகத்தான் நான் காத்திருந்தேன்.

      /இன்னும் தீர்க்கமாக எழுதி இரு பாகமாகப் போட்டிருக்கலாம். /

      ஆம். இன்னமும் கொஞ்சம் நேர்படுத்தி எழுதி இருக்கலாம். ஆனால் சிறுகதை வரம்பை தாண்டி சென்று விடுமே என்ற பயந்தான்.( ஏற்கனவே தாண்டியாச்சு:)))

      அனைவருக்கும் புரிவதற்காகத்தான் பார்வதியின் சம்பந்தபட்ட இடத்தை நீலக்கலரில் தந்துள்ளேன். இருப்பினும் தங்கள் சொல்படி இன்னும் சில இடங்களில் விவரித்து கதையை இருபாகமாக தந்திருக்கலாம். தங்களின் ஆலோசனைக்களுக்கும், ஊக்கம் தரும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. கமலாக்கா , நல்லா எழுதியிருக்கீங்க. முடிவு உட்பட...முதல்ல இப்படிப் பெரிதாக மொபைலிலேயே எப்படி அடிக்கறீங்க யம்மாடியோவ். அதுக்கே உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள். கணினி இல்லை என்றால் மொபைலில் வாசிப்பேன் ஆனால் கருத்து இடவே மாட்டேன் என்னால் முடியாது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தாங்கள் கதையை பொறுமையாக படித்து நல்லதாக கருத்துக்கள் தந்ததற்கு தங்களுக்கு என் மகிழ்வோடு கூடிய நன்றி.

      நான் அவ்வப்போதுதானே இதில் பதிவுகள் எழுதுகிறேன். இது ஒரு சாதனையே இல்லை. ஆனால் சகோதரர் கில்லர்ஜி அவர்களும் நிறைய பதிவுகள் கைப்பேசியிலேயே எழுதுவதாக கூறியுள்ளார். அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நான் தினமும் அனைவரின் பதிவுகளை படித்து கருத்துக்கள் கூற மட்டுமே கைப்பேசியோடு வருகிறேன். எனினும் உங்கள் அன்பான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கதையை சஸ்பென்ஸாகக் கொண்டு சென்றதும், இடையில் பார்வதியின் மறைவு மறைமுகமாக வந்ததும் புரிந்தது அது போல முதல் சில வரிகளிலேயே நாலுகால் பைரவர் என்றும் தெரிந்துவிட்டது. அதனுள் பார்வதி அந்த மழைநாளில் புகுவதும், பார்வதியின் மனம் அதன் கண்கள் மனம் வழி வருவதும், அது மாறியிருக்கிறதே என்று செல்வி நினைப்பதும் எல்லாம் புரிந்தது கமலாக்கா...அதனுள் பார்வதி என்பது அந்த செல்வியின் பழைய காதலன் வந்து பேசும் போது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை நன்றாக படித்து புரிந்து கொண்டு கருத்துரைகள் கூறி என்னை மகிழ்வுற செய்து விட்டீர்கள்.

      நான் கூட நிறைய இடங்களில் நாம் தெளிவாக கூற இயலாது குழப்பமாகவே சொல்லியிருக்கிறோமோ என நினைத்தேன். இன்னமும் சற்று தெளிவாக விரித்தால் கதை குறுநாவலாக விடுமோ என்ற ஐயம் வேறு எக்கு வந்து விட்டது. நேற்றுதான் சிறுகதைகள் எப்படி எழுத வேண்டுமென எ பியில் பார்த்தோம். அதற்குள் இப்படி ஒரு கதையா என அனைவரும் நினைத்து விடக்கூடாதே என்ற அச்சம் எனக்குள் இருந்தது. ஆனால், தங்களது கருத்து மகிழ்வாக உள்ளது
      நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. முடிவில் பைரவர்/பார்வதி புகுந்து காப்பாற்றியது முடிவு நல்லாருக்கு.

    பாராட்டுக்கள் வாழ்த்துகள் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையின் முடிவு நன்றாக உள்ளதென்று கூறியமைக்கு மிகவும் நன்றி சகோதரி. உண்மையில் இந்தக்கரு மனதுக்குள் தோன்றிய போது இதன் முடிவை வேறு விதமாக யோசித்திருந்தேன். ஆனால் அது மறந்தே போய் விட்டது. அவ்வளவு நாட்கள் எழுத தடைபட்டுப் போனதில அந்த முடிவும் இப்படி மாறி விட்டது. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்..

      உங்கள் அனைவரின் பாராட்டுகளுக்கும் நான் உரித்தானவளா என்ற சந்தேகமும் எனக்குள் எப்போதும் உள்ளது. ஏனெனில் என்னை விட அற்புதமாக எழுதும் திறன் பெற்றவர்கள் நம் பதிவுலகில் உள்ளனர். ஏன்.. நீங்களும் ஒரு அற்புதமான எழுத்தாளிதானே.. உங்களின் அருமையான எழுத்துகளுக்கு நான் எப்போதுமே தீவிர ரசிகை.உங்கள் அனைவரின் எழுத்துக்கள்தான் எனக்கு என்றும் மூலதனம்.

      தங்களது வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. பிடித்தவங்க என்ன செஞ்சாலும் பிடிக்கும்....பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் பிடிக்காது...அதான் அந்த பார்வதியின் கணவன், செல்வியின் காதலன்....ம்ம் பார்வதி கடைசியிலும் அத்தனை பழிவாங்கல் உணர்வு இருந்தும் வாங்காமல் கடந்துவிட்டாள். கணவ்ன் முன் அம்பலப்படுத்தவும் இல்லாமல் போய்விட்டாளே அட்லீஸ்ட் அதையாவது செய்திருக்கலாமோ?!! கொல்லாவிட்டாலும்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் பிடிக்காது./

      ஆம்.. அது மனித இயல்பு என மேலே சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். என்ன செய்வது? பார்வதியைப் போல பல பெண்கள் தன் கணவரால் பிடிக்காமலேதான் தங்கள் வாழ்வை வாழ்கின்றனர்.

      /கணவ்ன் முன் அம்பலப்படுத்தவும் இல்லாமல் போய்விட்டாளே அட்லீஸ்ட் அதையாவது செய்திருக்கலாமோ?!! கொல்லாவிட்டாலும்..../

      ஆகா... வேறு கணத்திலும் இதை எழுதியிருக்கும். அப்படித்தான் முதலில் வந்த சிந்தனை இருந்தது. நாட்பட்ட எழுதாமல் தேக்கி வைத்த காலம் போன போக்கில் கதையின் கரு சிறிது மாற்றம் கண்டு வேறு முடிவை சந்தித்து விட்டது. பரவாயில்லை... மற்றொரு முறை வேறு கோணத்தில் வேறு மாதிரி எழுதி விடலாம். யோசனைக்கும், அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. பிடித்தவங்க என்ன செஞ்சாலும் பிடிக்கும்.. பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் பிடிக்காது..

    மனித மனதின் இயல்பு இது..
    இதற்கு யாதொரு காரணத்தையும் யூகிக்க முடியாது..

    இவை எல்லாம் முன் ஜென்மத்துடன் தொடர்பு உடையவை..

    இந்தக் கதையை நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்..
    அடிக்கடி தங்கள் தளத்திலேயே எழுதலாம்..
    எழுதுங்கள்..

    உங்களுக்குள்ளேயே நீங்கள் பிறப்பீர்கள்.. புது அவதாரம் நிகழ்வதை உணர்வீர்கள்...

    இந்த அனுபவம் கை வரப் பெற்றால் - ஊழ்வினை ஒருபக்கம் இருந்தாலும் -
    நம்மை நாமே சரி செய்து கொள்ள முடியும்..

    தமிழை ஆராதனை செய்யுங்கள்.. தவமும் கை கூடி வரும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மனித மனதின் இயல்பு இது..
      இதற்கு யாதொரு காரணத்தையும் யூகிக்க முடியாது..

      இவை எல்லாம் முன் ஜென்மத்துடன் தொடர்பு உடையவை../

      உண்மை... உண்மை. இதுவேதான் என் மனதிலும் எழுந்தது.

      தாங்கள் கதையை ரசித்து படித்து தந்த நல்லதொரு கருத்துக்கு என் மனம் மகிழ்வுறுகிறது.மேலும் ஊக்கந்தரும் சொற்களை கருத்தாக தந்தமைக்கு நன்றி.

      /தமிழை ஆராதனை செய்யுங்கள்.. தவமும் கை கூடி வரும்../

      நன்றி. நன்றி. எல்லாம் உங்களைப்போன்ற கற்றோர்களின் ஆசிர்வாதங்கள். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன்,
    மிகப் புதிரான கருவைத் தெளிவாக
    புனர்ஜன்மக் கதையாக எழுதிவிட்டீர்கள்.
    மழை விவரிப்பும் டைகருக்குள் பார்வதி புகும் விவரணமும் அசாத்திய எழுத்து. இவ்வளவு திறமையை உங்கள் கைபேசியிலேயே
    எழுதி அனுப்பி இருக்கிறீர்கள் என்றால் அது மகத்தான சாதனை.

    மனம் நிறை பாராட்டுகள் அம்மா.
    இரு பெண் உள்ளங்கள் இரு ஆண் வடிவங்கள்.
    அன்பும் வக்கிரமும்
    வாழ்க்கையை எப்படிக் கூறு போட்டு விடுகின்றன.

    டைகர் மரித்தாலும் நல்லுலகம் சென்றிருக்கும்.
    உங்கள் திறமை மேலும் மேலும் வெளி வர வேண்டும். நிறைய எழுதுங்கள்.
    அருமையான கதைக்கு மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் என் தனம் வந்து அன்பான கருத்துக்கள் தந்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது சகோதரி. உங்களின் ஆழமான கருத்துரைகள் உண்மையை சொல்கின்றன. என்னை மனம் மகிழ்விக்கின்றன. அந்த நன்றி மிக்க ஜீவனுக்கு நீங்கள் வைத்த பெயர் பொருத்தமாக உள்ளது.

      /அன்பும் வக்கிரமும்
      வாழ்க்கையை எப்படிக் கூறு போட்டு விடுகின்றன./

      உண்மைதான்.. வக்கிரமில்லாத உள்ளத்தோடு பிரதீப் அன்பாக பார்வதியோடு குடும்பம் நடத்தியிருந்தால், இந்த மாதிரி கதைகள் உருவாக சந்தர்ப்பமே வந்திருக்காது.

      /உங்கள் திறமை மேலும் மேலும் வெளி வர வேண்டும். நிறைய எழுதுங்கள்.
      அருமையான கதைக்கு மிக நன்றி./

      உங்கள் அன்பான உள்ளத்திலிருந்து வந்த வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி சகோதரி. உங்கள் வாக்கு பலிக்கட்டும். கதையை பொறுமையாக படித்து நீங்கள் தந்த கருத்துக்கு என்னுடைய நன்றியும் எப்போதும் உங்களுக்கு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. கமலாக்கா நலம்தானே?.. சின்னக்கதைபோல இருக்கே படிச்சுத்தான் பார்ப்பமே எனப் பார்த்தால்.. நீண்டுகொண்டுபோகுது... கதை படிக்கும் பொறுமையும் மூடும் இப்போ இல்லாமல் இருக்கு:)).. மீண்டும் வருவேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க. வாங்க.. சகோதரி. நலந்தானே? எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் அனைவரும் நலமா? உங்களை இங்கு இன்று கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

      இந்த கதை நீளம் அதிகந்தான்.. ஆனால் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என நம்புகிறேன். . கதையை நிதானமாக படித்து கருத்துரை தாருங்கள். அவசரமேயில்லை. ஏதோ எனக்குள் தோன்றுவதை இப்படி எழுதி காலத்தை விரட்டிக் கொண்டிருக்கிறேன்:))) ஆனால், இன்று தங்களை கண்டது மிக்க மகிழ்வாக உள்ளது. உங்களை இங்கு காண வைத்த இந்த கதைக்கு நன்றியும் கூறிக் கொள்கிறேன். . தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி. தொடர்ந்து வலைத்தளங்களுக்கு வாருங்கள். அனைவரும் எதிர்பார்க்ககிறோம். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete