வணக்கம் நட்புறவுகளே...
தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ..இது மனிதர்களாகிய நமக்கு மட்டுமில்லை.... மற்ற ஜீவராசிகளுக்கும் அது ஒரளவு வளரும் வரை அன்னை தந்தையின் அக்கறை கலந்த கண்காணிப்பான பாசம் அத்தியாவசியமாகிறது.
முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து தன் இனங்களை காப்பாற்றி காக்கும் பாசமுள்ள பறவையினங்களும், குட்டிகளை சுமந்து ஈன்று பிரியத்துடன் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்களுக்கும், தன் பாசத்தை அவைகள் ஒரளவு வளரும் வரை தனது வளர்ப்புகளுக்கு தரும் வகையில்தான் இறைவன் அவைகளுக்கும் சிலவற்றை உணர்ந்தறியும் பகுத்தறிவையும் அமைத்து வைத்திருக்கிறான் இதில் அயராது தன் இணையுடன் பாடுபடும் அந்த தந்தை இனங்களுக்கும் அப்படி ஒரு பாசப்பங்குகள் உண்டெனில் அவைகளுக்கும் தந்தையர் தினமென்ற ஒன்றில் ஒர் தனிச்சிறப்பு உண்டல்லவா.. ? இப்படியெல்லாம் கீழுள்ள சிட்டுக்குருவிகள் என்னை யோசிக்க வைத்தது.
இந்த சின்னஞ்சிறிய பறவைக்குத்தான் என்ன சுறுசுறுப்பு, கடமை உணர்ச்சி. காலை நேரத்தில், முந்திய இரவே பேசி வைத்து கொண்டதை போன்று வேறு எந்த நோக்கமுமின்றி, நேராக கூட்டமாக வளர்ந்திருக்கும் தாவரங்களுக்கிடையே அடையாளம் கண்டு அங்கு சென்று தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .) மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..
அதுவும் ஒரு பறவை வந்ததும், மற்றொரு பறவை அதற்கெனவே காத்திருந்த மாதிரி விருட்டென்று பறந்து அந்த புல் பறித்து வர வேகமாக பறந்து செல்கிறது. அது வந்ததும் இதுவும் அப்படியே....காத்திருந்தது போல.. ! இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில்... நடுவில் சிறிதேனும் அயர்ச்சியோ. சோம்பலோ காட்டவில்லை. அதற்கு பசியே எடுத்தாலும் அதற்கு கூட நேரம் ஒதுக்காது போலிருக்கிறது என இவைகள் விடுவிடுவென எங்கோ மேல் மாடியில் கூடு கட்டும் அழகை பார்த்துக் கொண்டிருந்த நான் எண்ணி வியந்து கொண்டேன்.
"அப்பாடா.. நம் சிறு அலகிலிருந்து இது எங்காவது நழுவி விடுமோ என்ற பயம் போக்குவதற்காகவே இந்த ஜன்னல் கம்பி கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நேரம் இதில் அமர்ந்து விட்டு செல்லலாம். ஆண்டவா..! இதை கொண்டு போய் எனது வீட்டிற்கு பக்க பலமாக அமைக்க சேர்க்கும் வரை, இது என் அலகிலிருந்து நழுவி விடாமல் இருக்கச் செய்து விடு. என்று பிரார்த்திக்கிறதோ... " இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி.
" இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனாலும் எத்தனை தடவை இந்த கம்பியில் வந்து வந்து அமர்வது? இன்னும் கொஞ்ச தூரந்தானே.. ! இது எப்போதையும் விட கொஞ்சம் பளுவாகத்தான் இருக்கிறது..! கஸ்டப்படாமல் ஒரு செயலை முடிக்க இயலுமா.. ? இருந்தாலும் ஒரு எம்பில் எழுந்து பறந்து விடலாம். இதோ.. முயற்சித்தே விடுகிறேன்..!" என்கிறதோ இந்த சின்னச் சிட்டு.
" இவர்களுக்கென்ன ஜாலியாக பிற மனிதர்களின் உதவியுடன் வீடு கட்டிக் கொண்டு வெய்யில், மழை, குளிர் என்ற சீதோஷ்ண நிலை பற்றியெல்லாம், கவலையில்லாமல் உள்ளேயே சகல வசதியும் செய்து கொண்டு அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். எங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் உதவிக்கு அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி, வாழ்வில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம். அவ்வளவுதான்.. ! அவரவர் விதிப் பயன்களை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. "என்ற தத்துவங்களில் சிறிது நேரம் லயித்து செலவிடுகிறதோ..? இந்த சிங்கார சின்னச்சிட்டு.
" என்னத்தான் தத்துவங்களை நான் உதிர்த்தாலும், எங்களுக்கும் சபலங்கள் உண்டு. சண்டை சச்சரவுகள் உண்டு. அதையும் மீறி இந்த அன்பு, பாசம் எங்களுக்குள்ளும் உண்டு. அதுவும் உங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்கு அடைக்கலமாய் இடம் கொடுப்பதால், உங்களிடம் நன்றியும் உண்டு. இந்த நன்றியுணர்வை எங்களுக்கு தந்த அந்த ஆண்டவனுக்கும் நன்றி. இன்னமும் கடமை முடியவில்லை வரட்டுமா? எனக்காக அவள் காத்திருப்பாள்.." என்றபடி பறந்து செல்ல தயாரானது அந்த சின்னக்குருவி.
இந்த சிட்டுக்குருவிகளை பார்த்து புகைப்படங்கள் எடுத்து வருடமாகி விட்டது. படங்களை பதித்து பதிவாக எழுததான் இத்தனை தாமதமாகி விட்டது. இதைப்பற்றி பதிவாக எழுத நினைக்கும் போதெல்லாம், எனக்கு சகோதரி "கோமதி அரசு அவர்களின்" நினைவுதான் வரும். அவர்களும் இப்படித்தான் பறவைகளைப்பற்றி ஏதாவது அபிமானமாய் பதிவுகளை எழுதிக் கொண்டேயிருப்பார் என நான் நினைக்கும் பொழுதெல்லாம் அவரும் "ஜன்னல் வழியே" என பறவைகளைப் பற்றி நிறைய பதிவுகள் எழுதிவிட்டார். "பறவைகளின் பாச மலரான" அவருக்கும் அந்தப் பறவைகளின் நன்றியோடு என் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கவிதை (அதற்கு கவிதை என்றுதான் நான் பெயர் வைத்துள்ளேன்.) அவ்வாறு இல்லையென்றால் இந்த குருவிகளும், என்னை மன்னித்து விடட்டும்.
சிட்டுக்குருவி கவிதை....
சின்னஞ்சிறு உன் தேகம் கண்டு
சிட்டுக்குருவி என ஆனாயோ..இல்லை,
சிட்டென பறக்கும் உன் திறன் கொண்டு
சிகரமாய் உன் பெயர் அதுவானதோ. ..
இன்றும் விருட்டென்று நீஅங்குமிங்கும்
பயந்தும், பாய்ந்தும் செல்லும் அழகில்
பட்டான உன் மேனியழகு கண்டு
பரவசமாகுது என் உள்ளம்.
சிறுமி நான் உனைக் கண்ட நாளதில்
"சிட்டான உன்னைப்போல் அதுவும் ஓர்
சிட்டு என்பதால், அதன் பெயர்
சிட்டுக்குருவி" என்ற என் தாயின்
சின்ன அறிமுகம்... உன்னுடனான
சிறந்த நட்பாய் விரிந்தது. உன்
சின்னஞ்சிறிய அலகால் நான் இடும்
சிறு உணவுப் பருக்கைகளை நீ
சிதறாமல் கொத்தும் அழகை
சிறிது நேரமாவது தினமும் நான்
சிந்தையொன்றி பார்த்துவந்தது என்
சிறு வயது நினைவிலிருந்து இன்னும்
சிறிதேனும் விலகவில்லை.
நடுவில் நான் உன்னைத் தேடிய
நல்லதோர் நாட்களில், நீ என்னை
நாடி வந்து பசியாற இயலாமல்,
என் பட்டிண வாசங்கள் உன்னை
என் பார்வையில் படாமல்
எங்கோ பதுக்கி வைத்திருந்தது.
கூடு கட்டி குடித்தனம் அமைக்க இந்த
கூச்சல் நகரம் உனக்கு தோதில்லை
போலுமென என் மனதை தேற்றிய
போதினிலே, காலப்பொழுதுகள்
பழுதாகி அமைந்த காரணத்தால்,
போலிகள் இல்லாத ஓர் இடம் தேடி,
"போய் வருகிறேன்"எனவும் சொல்லாது
உன்னினங்கள் கிளம்பி போய் விட்டதை
உன்னிப்பாய் கவனித்து கேட்டதில் ,
உயிர் போன வேதனை என்னுள்ளே ...
உள்ளம் துடிக்க எழுந்ததை
உளமார நீ உணர்வாயா .. ! என்
உள்ளங்கவர்ந்த சிட்டுக்குருவியே..!
ஆண்டுகள் பலவும் கடந்த பின்பு,
ஆறுதல் பெற்று நாங்கள் இன்புற
மீண்டு வந்த உன்னைக் கண்டதுமே
மற்றுமோர் பிறவி எடுத்து வந்த
மட்டற்ற மகிழ்வு இன்று எங்கள்
மனதினில் இடம் பிடித்து அமர்கிறது.
காக்கை. குருவி எங்கள் இனமென
களிப்புடன் நல் பாடல் தந்த கவி
பாரதியின் சொல் வாக்கை மீறி, இனி நீ
வேற்றிசை சென்றே வாழ்ந்திடும்
பிற வேறெந்த எண்ணங்களும்
பின்னாளில் கொள்ள வேண்டாம்.
பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி,
பாசமுள்ள பறவைகள் இதுவென்று
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும்
பேறொன்றை மட்டும், அந்த
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...!
சிறப்பு பிராத்தனைகள்....
ஏதோ எனக்கு தெரிந்த உரைநடை கவிதை என்ற பெயரில், சில பல வார்த்தைகளை வரிசையாக கோர்த்து வடித்துள்ளேன். இதில் யாரும் நெற்றிக்கண் என்ற ஒன்றை திறவாமல், அப்படியே திறந்தாலும், இதிலுள்ள குற்றங்களை மட்டும் சத்தமின்றி பொசுக்கி, குறைகளை உருவாக்கியவரை சுட்டெரிக்காமல் ,காத்தருள வேண்டுமாயும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் கூடவே நக்கீரரையும் மனமுருக வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
🙏. 😀😁😀😁. 🙏.
அருமை.. அருமை....
ReplyDeleteசின்னச் சின்ன சொற்களால்
சிட்டுக் கொரு பாட்டு...
சிந்தையும் மகிழுதம்மா
சிறப்பி தனைக் கேட்டு...
வாழ்க நலம் எல்லாம்...
வணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
நீங்களும் உங்களின் அற்புதமான தமிழில் கவிதையாய் பாராட்டுகள் தந்து கருத்துரை தந்தமைக்கு என் பணிவுடன் கூடிய மகிழ்ச்சி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவும் கவிதையும் அருமை....... ஆறறிவு படைத்த மனிதன் வீட்டுக்குள் அடைந்து கிடைக்க இந்து சின்னம் சிறிய பறவைகள் சுந்தந்திரமாக பறந்து திரிவது கண்டு மனம் மகிழ்கிறது
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் தற்போதுள்ள சூழ்நிலைய நன்றாக விளக்கி கூறியுள்ளீர்கள். மனிதன் வீட்டுச் சிறைக்குள. பறவைகள் சுதந்திர காற்றை மனிதரின் தொந்தரவுகள் இல்லாமல் அனுபவிக்கின்றன. அதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றன நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம், எனக்கும் உங்கள் பதிவு கண்டதும் கோமதி அக்கா ஞாபகம் வந்தது! சிட்டுக்குருவிகளுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வந்ததே.. அதைச் சொல்லுங்கள். அதன் வேகத்துக்கு அதைப் படம் பிடிப்பதும் ரொம்பக் கஷ்டம்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனக்கும் சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவின் நினைவுதான்.. அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.
ஆம் என மேல் அதற்கு நம்பிக்கை வந்ததே பெரிய விஷயம். நான் கையை காலை ஆட்டாது அருகில் நெருங்கி படம் எடுப்பதற்குள் அது "பறக்கலாமா" என பலமுறை யோசித்து விட்டதையும் உணர்ந்தேன். எப்படியோ நான்கைந்து போட்டோக்கள் சரியான தெளிவில்லாவிடினும், சிறைப்பிடித்து வைத்துக் கொண்டேன். நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்கோ கூடு கட்டக் செல்லும் அது எப்படி சரியாக உங்கள் வீட்டு ஜன்னல் கம்பியில் ஓய்வெடுக்கிறது? ஆச்சர்யம். சரியாய்ப் பாருங்கள்.. உங்கள் வீட்டு சன்ஷேட் அல்லது ஏஸி மெஷின் அருகேதான் அதன் கூடு இருக்கும்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அதற்கு என்னமோ சற்று ஓய்வெடுக்க இந்த ஜன்னல் கம்பிகள் செளகரியமாக இருக்கிறதோ என்னவோ..! அது மேலே பறந்து செல்வதை மட்டுமே காண முடிந்தது. அது கூடு அமைத்திருக்கும் இடத்தை காண முடியவில்லை. ஏஸியும் எங்கள் வீட்டில் இல்லை. தாங்கள் வந்து தந்த கருத்துக்கு நன்றிகள். என் தாமதமான பதிலை பொறுத்துக் கொள்ளவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வந்து வந்து அமரும் அந்த சின்னஞ்சிறு சிட்டுகளைக் கண்டதும் கமலா அக்கா மனதில் அக்கவிதை ஊற்றெடுத்து விட்டது... ஸூப்பர்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கவிதை ஏதோ ஒரளவு வந்துள்ளது. உங்கள் மாதிரியெல்லாம் வார்த்தைகளை அதட்டி, உருட்டி, மடக்கி எழுத தெரியாது. அதையும்
தாங்கள் பாராட்டியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கமலாமா,
ReplyDeleteஉங்களை சிட்டுக் கவிதை எழுத வைத்த அந்த சிட்டுக்கு மனம் நிறை நன்றி.
இப்பொழுது கூடடையும் குருவுகளுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு
உங்களுக்குப் பதில் எழுதுகிறேன்.
அவைகள் உங்கள் எழுத்தைப் பற்றி அறிவித்ததால் நானும்
பறந்து வந்துவிட்டேன்.
சிட்டுக்களின் உலகம் அற்புதமானது. அவை எழுப்பும்
கீச் சத்தம்,அதிகாலை பூபாளம்.
உங்களுக்கு பரிவுடன் போஸ் கொடுத்த அந்த
குருவி அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
வணக்கம்.
குடும்பத்தின் பரிவை எடுத்துக்காட்டும்
உங்கள் கவிதைக்கும் மனம் நிறை பாராட்டுகள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/சிட்டுக்களின் உலகம் அற்புதமானது. அவை எழுப்பும்
கீச் சத்தம்,அதிகாலை பூபாளம்./ மிக நன்றாக குருவிகளின் இனிமையான கீச் சத்தத்தை விட இனிமையாக கருத்துகள் தந்திருக்கிறீர்கள். இதைக்கண்டு மகிழ்ச்சி என்னுள்ளத்தில் அளவில்லாத எழுகிறது.
உங்களின் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும், கருத்துகளுக்கும் என் பணிவான நன்றிகள். இதற்கு தாமதமாக பதில் அளிக்கிறேன். என் பதிவுகளுக்கு வரும் உங்களுக்கு உடனே, அல்லது ஒரிரு நாட்களிலாவது பதில் அளித்து விடும் என்னை, சூழ்நிலைகள் இந்த தடவை மிகுந்த காலதாமதத்தை தந்து விட்டன. என்னை மன்னித்து விடுங்கள்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
குருவிகளை பொறுமையோடு படமெடுத்தமைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை வரிகள் அருமை சகோ வாழ்த்துகள் தொடரட்டும் கவிதை மழை.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவுக்கும் படங்களுக்கும் தந்த தங்களுடைய பாராட்டுகளுக்கும், கவிதை நன்றாக உள்ளதென வாழ்த்துகள் கூறியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிட்டுக்குருவிதான் உங்களுக்குள் எத்தனை சிந்தனை அலைகளைத் தோற்றுவிக்கிறது....
ReplyDeleteஇங்கயும் தர்ப்பணம் செய்துவிட்டுப் போடும் தர்ப்பையை, சன்னலோரமாக வரும் புறா எடுத்துச் செல்லும்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/இங்கயும் தர்ப்பணம் செய்துவிட்டுப் போடும் தர்ப்பையை, சன்னலோரமாக வரும் புறா எடுத்துச் செல்லும். /
ஆகா..! அதுவும் கூடு அமைத்து, குஞ்சுகள் வளர்த்தி, அவையும் இதற்குள் பறக்க கற்றுக் கொண்டிருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. என் தாமதமான பதிலை பொறுத்துக் கொள்ளவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//தன் சின்னஞ்சிறு அலகால் பறிப்பதும், (அது ஏதோ புல் வகையை சேர்ந்த மாதிரி இருக்கிறது .) மீண்டும் பறந்து வந்து கூடு கட்டும் இடத்திற்கு வந்து சேர்வதுமாக என்ன ஒரு பொறுப்புணர்ச்சி..//
ReplyDeleteஇந்த் அமாதிரி புற்களை எடுத்து வரும் குருவியின் பேர் புள்ளிசில்லை குருவி.
எங்கள் வீட்டில் கூடு அமைத்து இருந்தது முன்பு.
பசும் புற்களைதான் எடுத்து வரும்.
சிங்கார சின்னச்சிட்டு நினைத்த தத்துவத்தில் நானும் லயித்து விட்டேன்.
சின்னக்குருவி உங்களிடம் சொல்லி சென்றதையும் ரசித்தேன்.
//பார் உள்ளளவும் உன் பேர் சொல்லி,
பாசமுள்ள பறவைகள் இதுவென்று
இனி வளரும் எங்கள் சந்ததிக்கும்
பிரித்துணர்த்தி காட்டிப் பழக்கும்
பேறொன்றை மட்டும், அந்த
பாரதியின் நினைவாக நீ. . , பெரும்
பரிசெனவே எங்களுக்கு தந்து விடு...! //
இவ்வளவு அழகான கவிதை படைத்த உங்களை பாரட்ட வேண்டும், வாழ்த்துக்கள் அழகான கவிதைக்கு.
பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி கமலா.
இங்கு மீண்டும் குருவி வந்து இருக்கிறது , கூட்டை புதுபித்து விட்டது.
இனி தினம் அது எழுப்பும் ஓலி மகிழ வைக்கும்.
படங்கள் எல்லாம் அழகு.
தந்தையர் தின சிந்தனையும் மிக அருமை.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/இந்த் அமாதிரி புற்களை எடுத்து வரும் குருவியின் பேர் புள்ளிசில்லை குருவி.
எங்கள் வீட்டில் கூடு அமைத்து இருந்தது முன்பு.
பசும் புற்களைதான் எடுத்து வரும்./
அப்படியா... பெயர் விபரம் தந்தமைக்கு நன்றி. அன்று யதேச்சையாய் ஜன்னலில் வந்து வந்து அமரவும் அதன் சின்ன அலகில் எப்படி ஒவ்வொன்றாய் பொறுமையுடன் கவ்வி வருகிறதென ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நான் மெள்ள படங்கள் எடுக்கும்வரை போஸ் தந்தது.
கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு நன்றிகள்.
/இங்கு மீண்டும் குருவி வந்து இருக்கிறது , கூட்டை புதுபித்து விட்டது.
இனி தினம் அது எழுப்பும் ஓலி மகிழ வைக்கும்./
அந்த இனிய நாதம் தங்களை மகிழ்விக்கிறதா? அது இந்நேரம் குஞ்சுகள் பொரித்து பறக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளதா? நீங்கள்தான் பறவைகளின் ஆர்வலர். அது குறித்து உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும்.
பதிவை ரசனையுடன் படித்துப் பார்த்து தந்த கருத்துக்களுக்கு மிக்க மன மகிழ்ச்சி அடைந்தேன். அதற்கு பதில் தர எனக்கு நிறைய காலதாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிட்டுக்குருவி கவிதை வரிகள் அருமை...
ReplyDeleteசிட்டுக்குருவி மட்டுமல்ல... பறவைகள் என்றாலே கோமதி அம்மா ஞாபகம் வருவது உண்மையே...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவும், கவிதையும் நன்றாக உள்ளதென கூறி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்
/சிட்டுக்குருவி மட்டுமல்ல... பறவைகள் என்றாலே கோமதி அம்மா ஞாபகம் வருவது உண்மையே.../
ஆம்.. அதைத்தான் பதிவிலும் குறிப்பிட்டு விட்டேன். அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.
பதில் தர காலதாமதம் ஆனதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒரு சாதாரண சிட்டுக் குருவி உங்களை ஒரு அருமையான பதிவையும் அழகான கவிதையையும் எழுத வைத்து விட்டது. அன்று பாரதி குயில் பட்டு பாடினான், இன்று நீங்கள் குருவிப் பாட்டு பாடி விட்டீர்கள், பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சிட்டுக்குருவி பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்
/அன்று பாரதி குயில் பட்டு பாடினான், இன்று நீங்கள் குருவிப் பாட்டு பாடி விட்டீர்கள், பாராட்டுகள்/
அவரின் பாட்டுக்கு ஈடாகுமா? அவர் கவிதைகளுக்கு உயிர் தந்தவர். எனினும் பாராட்டுக்கள் மகிழ்வை தருகிறது. நன்றி
இந்த தடவை கருத்துகளுக்கு பதில் தர காலதாமதம் ஆனதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறு நிகழ்வு கவிதைக்கான கருப்பொருள். மிக அருமை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவும், கவிதையும் நன்றாக இருப்பதாக கூறி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
காலதாமதமாக உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் பதில் தருவதற்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான படைப்பு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறியள்
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சிறப்பான படைப்பு எனக்கூறி வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
காலதாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிட்டுக்கள் அழகு, கவிதையும் :)
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்து கருத்துக்கள் தந்தததற்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் கருத்துக்கு தாமதமான பதில் தருகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பணிவான வணக்கம் அனைவருக்கும்.
ReplyDeleteஎன் பதிவுக்கு வந்து கனிவான கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உடனே அனைவருக்கும் முன்பு போல் தனித்தனியாக பதில்கள் தர இயலவில்லை. இருப்பினும் மெள்ள மெள்ள தந்து விடுவேன். அதுவரை அனைவரும் மன்னித்துக் கொள்ளவும். மீண்டும் உங்களின் அன்பான கருத்துகளுக்கு நன்றி தெரித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிட்டுக்குருவியைப்போலவே உங்கள் பதிவும் அழகு!!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அழகான பதிவு என்ற பாராட்டிற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
உங்களைப் போன்ற பதிவர்களின் கருத்துரைகள் என் எழுத்துக்கு பலம் சேர்க்கிறது.
என் தாமதமான பதிலுரைக்கு மனம் வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தந்தையர் தின நினைவாகக் குருவியப்பாவுக்கும், குருவியம்மாவுக்கும் நீங்கள் தொடுத்த கவிதை அபாரம். அருமை. நல்ல கருத்துள்ள கவிதை. உங்களுடைய கற்பனை வளமும், ஆழ்ந்த புரிதலும், அதைக் கவிதை, எழுத்து ஆகியவற்றில் கொண்டு வரும் திறமையும் வியக்க வைக்கிறது. சிட்டுக்குருவிகள் மறுபடியும் வர ஆரம்பித்திருக்கின்றன. நீங்கள் அவற்றைப் பொறுமையாகப் படம் எடுத்துப் பகிர்ந்ததுக்கும் நன்றி. படங்களும் நன்றாய் வந்திருக்கின்றன. கோமதியும் பறவைகளின் காதலர். எனக்கும் பறவைகள் என்றால் மிகவும்பிடிக்கும். ஆனால் இங்கே பறவைகளின் கூச்சல் தான் கேட்க முடியும். பார்க்க முடிவது எப்போதாவது தான். உங்கள் ஜன்னல் விரியத் திறந்து கிடக்கிறது உங்கள் அன்பான மனம் போல்! அதான் பறவைகள் வந்து இளைப்பாறுகின்றன. வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/தந்தையர் தின நினைவாகக் குருவியப்பாவுக்கும், குருவியம்மாவுக்கும் நீங்கள் தொடுத்த கவிதை அபாரம். அருமை./
ஹா. ஹா. அழகாக நேரில் பார்த்து பேசுவது போல் அமையும் உங்கள் கருத்துரைகளை கண்டு எப்போதும் மனம் மகிழ்ந்திருக்கிறேன்.
என் பதிவை ரசித்துப் படித்து தந்த பாராட்டுகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
உண்மைதான்.. சகோதரி கோமதி அரசு அவர்களும் பறவைகளின் காதலர். உங்கள் பதிவிலும் எல்லா உயிருக்கும் அடைக்கலமும், ஆதரவும் தந்ததை உங்கள் பதிவில் படித்து வந்துள்ளேன். நீங்கள் அம்பத்தூர் வீட்டிலிருந்த போது தங்கள் வீடு மரங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் விதவிதமான பறவைகளை கண்டு பேசி மகிழ்ந்திருப்பீர்கள்.
உங்கள் கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்கும் என் பணிவான நன்றிகள். இந்த தடவை உங்கள் கருத்துக்களுக்கு பதில் அளிக்க கால தாமதம் ஆகி விட்டதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிட்டுக் குருவி பற்றிய பதிவும் உங்கள் வர்ணனையும் அருமை
ReplyDeleteதுளசிதரன்
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சிட்டுக்குருவி பதிவு நன்றாக இருப்பதாகக் கூறி, ரசித்து பாராட்டியமைக்கு என் மனம் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
தங்கள் கருத்துக்கு நான் தாமதமாக பதில் தருவதற்கு வருத்தமடைகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா உங்கள் பதிவு பார்த்ததும் கோமதிக்கா நினைவுதான் வந்தது.
ReplyDeleteசிட்டுக்க்குருவி என்ன நினைக்கிறது பேசுகிறது என்ற உங்கள் கற்பனை அந்தச் சிட்டுக் குருவியைப் போலவே சிறகடித்துப் பறக்குது!! ஹா ஹா ஹா ஹா
மிகவும் ரசித்தேன்.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம்.. உண்மைதான். சகோதரி கோமதி அரசு நினைவுதான் எனக்கு இந்தப் பதிவை தொகுக்கும் போதெல்லாம்.. இதை நீங்கள் அனைவருமே ஆமோதித்துள்ளீர்கள். நன்றி.
/சிட்டுக்க்குருவி என்ன நினைக்கிறது பேசுகிறது என்ற உங்கள் கற்பனை அந்தச் சிட்டுக் குருவியைப் போலவே சிறகடித்துப் பறக்குது!! ஹா ஹா ஹா ஹா/
அருமையான பதிலுக்கு நன்றி சகோதரி. ஒரு பதிவை ரசித்துப் படித்து பாராட்ட நல்ல மனம் வேண்டும். அது உங்களிடம் அளவுக்கு அதிகமாக உள்ளது. உங்கள் பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்.
எனக்கு என்னவோ இந்த தடவை கருத்துக்களுக்கு பதிலளிக்க மிகுந்த காலதாமதம் ஆகி விட்டது. வருந்துகிறேன். மன்னிக்கவும்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
பொதுவாகச் சிட்டுக் குருவிகள் வீட்டின் கூரையின் மேலே ஏதேனும் ஓட்டை இருந்தால் கூடக் கூடு கட்டிக் கொள்ளும்.
ReplyDeleteசென்னையில் எங்கள் மாமியாரின் அப்பா அவர் கட்டிக் கொடுத்த வீட்டில் மேலே உத்திரம் என்று சொல்வேமே சீலிங்க் அதில் கட்டைகள் பதிட்து அதில் ஓட்டைகள் ஆங்காங்கே அதாவது குருவிகள் கூடு கட்ட என்று வைத்துதான் கட்டுவாராம். மாமியாரின் வீட்டில் கூட அப்படி இருக்கும்.
உங்கள் வீட்டிலும் கூட ஏதேனும் உங்கள் கண்ணில் ஜன்னல் அருகில் சன் ஷேடில் இருக்கா என்று பாருங்கள். கமலாக்கா இப்பல்லாம் குருவிகள் கூடி கட்ட என்றே மண்ணில் குடுவை போல அல்லது புற்களில் செய்தவை போன்றவை விற்கப்படுகின்றன அதை நாம் வெளியில் கட்டித் தொங்கவிட்டால் அதில் அவை வந்து கூடு கட்டிக் கொள்ளும். நாம் தண்ணீரும் சாப்பாடும் வைத்தால் அவை வந்து இவற்றை எல்லாம் செக் செய்து தங்களுக்குப் பாதுகாப்பானதா என்று பார்த்துவிட்டுச் சென்று அப்புறம் வந்து ஹப்பா இந்தக்கமலாம்மா நமக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்காங்கனு ஹாயா அதுக்குள்ள புல்லைச்செருகி முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். இங்க பாரு கமலா பாட்டி என்று காட்டும்... கமலாம்மா மீண்டும் பாட்டியாகி குஞ்சுகளைக் கொஞ்சலாம்.,!!!!!!! பிரசவம் பார்த்த மகிழ்ச்சியும் கிட்டும்!
அக்கா நிஜம்மா என் ஒன்றுவிட்ட நாத்தனார் கூடுவாஞ்சேரியில் ஒரு பெரிய தோட்டம் உள்ள வீடு வாங்கினாள். அது நம் வீட்டில் பலருக்கும் ஒரு ஹாலிடே ஹோம் போல். முன் பக்கம் பின் பக்கம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தோட்டம். வீடும் பெரிதாக இருக்கும். அங்கு மொட்டை மாடியில் வெராண்டாவில் இப்ப்டிச் செய்து பல பிரசவம் நடந்தது அதான் சொன்னேன். குருவிகள் பல வகை ஹாயாக வரும். அவர்களுக்குள் இடம் பிடிக்க வேறு ஒரே கீச் கீச் சத்தம் தான். அதன் பின் நிறைய வாங்கிக் கட்டினாங்க. இப்ப அவங்க அமெரிக்காவில் அந்த வீடு வாடகைக்கு...தோட்டப்பராமரிப்புக்கு ஆள் என்று இருக்கிறது.
கீதா
http://sivamgss.blogspot.com/2008/02/p.html இங்கே பாருங்க, நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், பறவைகளுக்குப் பிரசவம் பார்த்த கதையை! :)))) எல்லாம் சொந்த வீடாயும், தனி வீடாயும் இருக்கணும்! :( குடியிருப்பில் என்னத்தைச் செய்யறது? பெருமூச்சு விடறதைத் தவிர்த்து!
Deleteகவிதை அருமை கமலாக்கா....உங்கள் திறமை வியக்க வைக்கிறது.
ReplyDeleteபாராட்டுகள்!
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கவிதை அருமையென கூறிய உங்களுடைய மனங்கனிந்த பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா! அருமையாக இருக்கிறது பறவை பகிர்வு. பறவைகள் என்றாலே கோமதிம்மா நினைவு தான் வரும். உங்கள் கவிதையும் எண்ணங்களும் நன்று. சில நாட்களாக இங்கே அணிலுடன் பேச்சுவார்த்தை! :) பறவைகளும் வருகின்றன. பக்கத்து மரத்தில் அவை கூடு கட்டும் அழகைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது உண்டு.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பறவை பகிர்வு உங்களுக்கும் சகோதரி கோமதி அரசு அவர்களை நினைக்க வைத்தது குறித்து பெருமை கொள்கிறேன்.
தாங்கள் அன்பான அணிலுடன் பேசி மகிழ்ந்தது தங்கள் பதிவில் பார்த்ததுந்தான் எனக்கு இந்த குருவிகளை ஒரு வருடம் முன்பு படமெடுத்து வைத்ததை எப்படியும் இப்போதாவது பதிவாக்கி விட வேண்டும் என முடிவு கொள்ள வைத்தது. பக்கத்து மரங்களில் அவைகள் கூடு கட்டி வசிக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டேயிருக்கலாம். தங்களின் அன்பான பாராட்டிற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
பதில் தர தாமதமாகி விட்டதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா கமலா அக்கா .....
ReplyDeleteமிக மிக அருமை தங்களின் எழுத்துக்களும் படங்களும் ...
....எங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு வீடு கட்ட எங்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் உதவிக்கு அழைக்காது நாங்களே சிரமபட்டாலும், படைத்தவனின் கருணையெனும் உதவியை நினைத்து ஆனந்தம் அடைந்தபடி,....
மிக அற்புத சிந்தனைகள் படிக்க படிக்க திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது உங்களின் வார்த்தைகள் ...
சிட்டுக்குருவி கவிதை...எங்களின்
சின்ன இதயத்தை கொள்ளை கொண்டது ...
வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் கமலா அக்கா ..
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவை ரசித்து படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.
சிட்டுக்குருவி கவிதை தங்கள் மனதை கொள்ளை கொண்டதை அறிந்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ந்தேன்.
உங்கள் அன்பான வாழ்த்துக்களும் கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான முயற்சி
ReplyDeleteவாழ்த்துகள்
வணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் பதிவுக்கு உங்களின் முதல் வருகை கண்டு பெருமிதம் அடைகிறேன்.
தங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.