Friday, April 26, 2019

செல்வங்கள்..


அந்த காலத்தில், பொதுவாக பெரியவர்களை வணங்கும் போதும்., திருமணங்களில் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும் போதும், "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.!" என்று வாழ்த்துவது வழக்கம்.  "பதினாறு" என்பது பதினாறு வகையான செல்வங்களை குறிப்பது என்பது நாமெல்லோரும் அறிந்ததே.! இருப்பினும் நகைச்சுவைக்காக அப்பப்பா.. ஒன்றிரண்டையே சமாளிக்க முடியலே.. இதிலே பதினாறு வேறேயா? என்று பதினாறையும் குழந்தைச் செல்வமாக மட்டுமே குறிப்பிட்டு தெரிந்தோ , தெரியாமலேயோ கிண்டல் செய்பவர்கள் வேறு ரகம்.  இதில் தெரிந்து வாழ்த்தியவர்கள் இவர்களின் நகைச்சுவையை ரசிப்பதை தவிர  வேறு  வழியில்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

இந்த பதினாறு வகையான செல்வங்களை  ஒரு மனிதனுக்கு அன்புடனே தந்தருள வேண்டுமென ஆதிகடவூரில் வாழ்ந்தருளும்  அன்னை அபிராமி அம்பிகையை வேண்டி அவளருள் பெற்ற அபிராமி பட்டர் இவ்வாறு  உளமுருக பாடியுள்ளார். 


அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)


இந்த பதினாறு செல்வங்களும் ஒருவரது (அது ஆண், பெண் இரு பாலாராகிலும் சரி) வாழ்வில்  அனைத்தும் ஒருசேர கிடைக்கப் பெற்றால், அவரை விட புண்ணியம் செய்தவர்கள் இந்த உலகில் வேறெவரும் இல்லை என்றே கூறலாம்.  ஆனால் மேற்கூறிய அனைத்தும் முற்றிலுமாக அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது சந்தேகந்தான்..! 


பொதுவாக அக்காலத்தில், படிப்பறிவு மிகவு‌ம் இருப்பவர்களுக்கு, மேற்கொண்டு படிக்க வசதி (பணம்) இருக்காது. பணமிருப்பவர்களுக்கு கல்வியறிவு சற்று அலட்சியம் காட்டி சென்றுவிடும். அப்படியே இரண்டும் அமைந்தாலும், நோயோ, வேறு வகையான தொந்தரவுகளோ அமைந்து நீண்ட நெடுவாழ்வு  குறைந்து போய் விடும். இல்லை.. நல்லபடியாக திருமணம் நடந்து இல்லறவாழ்வு நன்றாக இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லாது ஆயுள்  முழுக்க கவலைகளை சுமக்க நேரிடும். இப்படி ஒன்றிருக்க ஒன்றில்லாது அமைவதைதான் "விதியின் செயல்" என ஏற்றபடி, காலம் நம்மையும் காலத்தை நாமுமாக கடத்தி  வந்தோம். 


இப்போது காலத்தை நாம் அனுசரித்து போகிறோமா ? இல்லை காலம் நம்முடன் அனுசரிக்கிறதா? புரியவில்லை... ஆயினும் "தனமெனும்" பணம் மட்டும் அதுவும் தெய்வ சங்கல்பமாக ஒரு மனிதரின் வாழ்க்கையில் அமைந்து விட்டால், உலகில் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை வந்துள்ளது. மேலைநாடுகளிலும் சென்று உயர் கல்விகள் பெற தகுந்த வசதிகள் , வாழ்வில் அத்தியாவசிய தேவைகளை, இல்லை, தத்தம் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் வசதிகள், எந்த நோய்க்கும் தீர்வாக மருத்துவ வசதிகள், எமனுடன் இயன்ற வரை போராடும் துணிவு, இப்படியான வாழ்வுக்கு பணமிருந்தால் போதுமென்ற நிலை உருவாகி விட்டது. 


அன்னை, தந்தையையும், அன்பையும், தவிர அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று சொல்வார்கள். ஆனாலும் ஒரு உயிரின் முதலும், முடிவும்  என்றுமே "படைத்தவன்"  கையில்தான் உள்ளது என்பதையும் அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒரு உயிரின் "முடிவின்" நிமிடத்தை "அவன்" எழுதிய பின் அந்த நேரத்தை மாற்றியமைக்க நாம் பணத்தைக் கொண்டு எவ்வளவு பேரங்கள் "அவனுடன்" நடத்தினாலும், நிச்சயம் தோல்வி நமக்குத்தான் என்பதும் நாம் அறிந்ததே... 


இந்த செல்வம் இல்லாதவர்கள், அமையாதவர்கள்.. ஏழைகள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில்  ஒர் ஓரமாக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை  எல்லாவற்றிலும் ஒரு கேள்விக்குறியாக அமைந்தாலும்,  பலருக்கு, மற்றச் செல்வங்கள் ஒரளவு துணையாக நின்று அவர்களது வாழ்வை நகர்த்திக் கொண்டு நகர்கிறது. 


பணத்திற்கு அதிபதியான அன்னை மஹாலக்ஷ்மியும் நிலையாக ஒரிடத்தில் தங்காமல், உலகில் அவரவர்களுடைய பூர்வஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மாறிக்கொண்டேயிருக்கும் தன்மை உடையவள். அதன்படி ஏழை, பணக்காரன் ஆவதும், பணக்காரன் தீடிரென்று நொடித்து  பணவசதிகளை இழப்பதும்,  கர்மாக்களின் கணக்குப்படி நடந்தவாறே உள்ளன. பிறப்பிலிருந்து, இறப்பு வரை கஸ்டஜீவனம்  செய்வதும், இல்லை பிறப்பிலிருந்தே பணத்தில் புரண்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெறுவதும் அவரவர் ஊழ்வினைப் பயனே.! 


ஒரு கதை...

ஒரு முனிவர் சிறுவயதிலிருந்தே சுக போகங்கள்அனைத்தையும் துறந்து பக்தியுடன் காட்டில் தவமியற்றி வரும் போது. அன்னை மஹாலஷ்மியானவள் அவரிடம் சிறிது காலம் தான் தங்கியருள வேண்டிய நிர்பந்தத்தை உணர்த்தி, அவர் வாழ்க்கையோடு உடனிருப்பதாக சொல்லி வந்து நின்றாள். முனிவர் முதலில் மறுத்தாலும், அவளின் கடமையை செய்ய விடாது  தடுப்பது தர்மமகாது என எண்ணி ஒப்புதல் தந்தார். ஆயினும், "அம்மா வரும் போது சொல்லிக் கொண்டு வந்த நீ என்னை விட்டு போகும் போது சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்" என வேண்டுகோளுடன் கூறியதும் அதற்கு மஹாலக்ஷ்மி சம்மதித்து அவருக்கு அருள் புரிய தொடங்கினாள்.

அதை சோதித்து பார்க்க விருப்பம் கொண்ட முனிவர், அந்நாட்டு அரசனின் விருப்பமின்றி  சில செயல்களை அவனுக்கு எதிராக வலுக்கட்டாயமாக செய்யப் போக அன்னையின் அருளினால், அவையனைத்தும்  அரசனுக்கு நலம் பயக்கும் செயல்களாக மாறி முனிவருக்கு பெருமையையும், புகழையும் ஏற்படுத்தி தந்தன.


முனிவரின் அத்தனை தவறான செயல்களையும் உடனிருந்து அரசனுக்கு அனுகூலமாக மாற்றுவித்தவள் அன்னையே.! இதை முனிவரும் உணர்ந்து கொண்டார். சில காலங்களுக்குப்பின் அரசனின் நன்மதிப்பையும், நாட்டு மக்களின் மரியாதையையும் பெற்று அரசனின் விருப்பத்திற்கேற்ப மறுப்பேதும் கூறாது அரண்மனையிலேயே தங்கியிருந்தார் முனிவர்.


ஒரு நாள் முனிவர் தனக்கென்று கிடைத்த அபூர்வ மாங்கனியொன்றை  அதில்  அரண்மனையிலேயே இருக்கும்  அரசனுக்கு எதிரிகள் விஷமேற்றி யிருந்ததை  அறியாமல் அரசனுக்கு தரும் போது, அரசனும் தம் மதிப்பை பெற்ற முனிவர் தந்ததாயிற்றே எனஆர்வத்துடன் அதை உண்ணப் போகும் தறுவாயில், அரண்மனை வைத்தியரால் அந்த உண்மை கண்டுணரப்பட, முனிவரின் மேல் கோபம் கொண்ட அரசனின் மனைவி, அமைச்சர்  ஆகியோர் முனிவரை ஈவிரக்கமின்றி கொல்லும்படி ஆணையிட்டனர். 


அரசன் அதை தடுத்து "எத்தனையோ தடவை தன்னை காத்தவரை கொல்ல வேண்டாம். அவரை காட்டுக்கு அனுப்பி விடுங்கள்"என உத்தரவிடவே மறுநாள் அவரை காவலாளிகள் கடுமையான இழிச்சொற்கள் கூறி, காட்டில் கொண்டு விட்டனர். செல்லும் வழியெங்கும் மக்களும் அவரை தூற்றினார்கள். அவரும்  மாங்கனியை அரசனுக்கு தருவதாக அரசன் இருப்பிடம் நோக்கிச் செல்லும் போது  அன்னை மஹாலக்ஷ்மி அவர் முன் தோன்றி, " குழந்தாய்.! இன்றுடன் உன்னுடனான என் வாசம் முடிந்தது. ஆதலால் நான் உன்னை விட்டு அகலுகிறேன்" என கூறி விட்டு மறைந்ததை நினைவு கூர்ந்தார். 


அன்னையின் துணையினால், தன் வாழ்வில், ஏற்பட்ட மாற்றங்களையும், ஆண்டியாக வாழ்ந்த தான் அரமணை வாசத்தில் வாழ்ந்ததையும், புகழும், பெருமையும், தேடி வந்ததையும், இன்று அவள் அகன்றதால், பழையபடி காட்டிற்கு  இழிசொற்கள் சூழ வந்ததையும் கண்டுணர்ந்த முனிவர், அன்னையின் புகழ் பாடி அவளை தொழுது விட்டு தம் பழைய தவ வாழ்க்கையை எவ்வித சலனமுமின்றி தொடரவாரம்பித்தார். 


இந்தக் கதை அனைவரும் அறிந்ததுதான். அந்த முனிவரைப்போல உன்னதமான உள்ளத் தூய்மையும், எதையும் சமமாக ஏற்கும் மனோபாவமும் சாதாரண மனிதர்களுக்கு கைகூடி வராது. எத்தனைப் பிறப்பெடுத்தாலும் பிறவிகள்தோறும், சிந்தனையும் செயலும் இறைநாமத்தையன்றி வேறெதுவும் வேண்டாத பண்பை அடைந்திருக்க வேண்டும். அத்தகைய பண்பை அடைய ஆசைகளை களைந்தெறியும் கலைகளையும் கற்றிருக்க வேண்டும். இவ்விதமான அசுர சாதனைகளை அம்முனிவர் சென்ற பிறவிகளில் செய்திருந்ததால் அவருக்கு காடு மேடு அனைத்தையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள எளிதில் சாத்தியமாயிற்று. 


"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. ஆனால்,"காதறுந்த ஊசியும் வாராது கடைகாண் வழிக்கே"என்று உண்மை உணர்ந்து உபதேசித்தார்  பட்டினத்தார். இத்தனைக்கும் அவர்  தன் இளமையிலிருந்தே பணத்திலே  அதிக நாட்டம் கொண்டு இரவு பகலாக உழைத்து பணமீட்டி, பணத்தால் அத்தனை வசதியும் அனுபவித்து, ஒரு காலகட்டத்தில் ஊழ்வினையின் நல்லருளால்  ஞானம் பெற்றவர்.. அவ்வருளும் அனைவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அதற்கும் எத்தனையோ பிறவிகளில் "அவனருளை"  அநேக சிரமங்களிடையே சேகரித்திருக்க வேண்டு்ம். 





இதை குறித்து பகிரும் போது இந்த அருமையான பாடலும் நினைவுக்கு வந்தது. அதையும் பகிர்ந்துள்ளேன்.

மேற்கூறிய இந்த பதினாறு வகையான செல்வங்கள் பெற இன்னும் எத்தனை பிறவியோ? ஆனால் இந்த  பதினாறு வகையான அர்த்தங்களை இந்தப் பிறவியில் படித்துணரலாம் எனத் தோன்றுகிறது. அதை உங்களோடு பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. எனினும் என் பதிவையும், பதிவோடு இதையும் படிப்பீர்கள் என நம்புகிறேன். 


நன்றியுடன் உங்கள் சகோதரி... 

      -----------------------------------------------
பதினாறு வகையான அர்த்தங்கள். 

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சனைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவீர்கள்.. யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு..? 

9] ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீங்கள் சிரித்துப் பாருங்கள்! உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

27 comments:

  1. எல்லாமே நன்றாக இருக்கின்றன. முனிவரின் கதையும் படித்தது தான். மனிதனால் இந்தப் பதினாறு வகையான அர்த்தங்களையும் உணர்ந்து புரிந்து கொள்ள முடிந்தால் இப்போதைய மோசமான நிலையே ஏற்படாதே! இன்று மக்கள் மூழ்கி இருப்பது தேவையற்ற தேவைகளை நாடியும், வேண்டாத சிற்றின்பங்களில் மூழ்கியும் தானே! யோசிக்கும் திறனே போய்விட்டதோ என நினைக்கும்படி மக்கள் "மா"க்கள் ஆகிவிட்டனரோ?!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மை. முனிவரின் கதையை ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் படித்தமைக்கும், அனைத்தும் நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
      தாங்கள் முதலில் வந்து கருத்து தெரித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
      என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. குட்மார்னிங். நீண்ட நாட்களாய் பதிவுகள் எழுதாமல் இருந்த குறையை நீக்கி விட்டீர்கள். குறைதீர் நீண்ட பதிவாகவே வெளியிட்டு விட்டீர்கள்! ஹா... ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /குறைதீர் நீண்ட பதிவாகவே வெளியிட்டு விட்டீர்கள்! ஹா... ஹா... ஹா...!/

      ஹா. ஹா. ஹா.. ஆமாம். குறை தீர்க்கும் பதிவு. "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்கிற மாதிரி எழுதும் போதே எழுதி விடலாம்.. என்ற எண்ணம்தான்.. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பதினாறும் பெற்று வாழும் பெருவாழ்வு வாசகத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அந்தக் காலத்தில்தான் அதிகம் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவர் வீட்டிலும் அவ்வளவு மக்கள்செல்வங்கள் இருந்த காலம் அது!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்து உண்மைதான். அந்த காலத்தில் மக்கட்செல்வம் ஒவ்வொரு வீட்டிலும் நிரம்பியிருந்தது. அதனால் கூட்டுக்குடும்ப வாழ்வு அனைவருக்கும் புரிந்தது. இனித்தது. இந்த காலத்தில், தனித்தனி ஆவர்த்தனங்கள் இயல்பாகி விட்டன. தங்கள் இனிய கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சுவையான விவரங்களை அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். பொதுவாக சில வாசகங்கள் நமக்குத் பிடித்துப்போக அதன் வரிகள் நமது அனுபவங்களோடு ஒத்துப்போவதும் ஒரு காரணமாய் இருக்கும் இல்லையா?!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பொதுவாக சில வாசகங்கள் நமக்குத் பிடித்துப்போக அதன் வரிகள் நமது அனுபவங்களோடு ஒத்துப்போவதும் ஒரு காரணமாய் இருக்கும் இல்லையா?!!!/

      உண்மை... சில வாசகங்கள் நம் வாழ்ந்த, வாழுகின்ற வாழ்வோடும் இணைகிறது. அப்போது அந்த வாசகங்களை நினைவுபடுத்தி பேசும் போது அதன் அர்த்தம் இயல்பாகவே மனதில் பதிந்தும் போய் விடுகிறது. அதனாலும் அது பிடித்துப் போகும்.

      என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. முன்பு எங்கள் தளத்தில் உள்பெட்டியென்று ஒரு பதிவு அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருந்தோம். அதில் இதுமாதிரி எஸ் எம் எஸ்ஸில் வந்த சில அருமையான வாசகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் வாசகங்கள் கூட அதில் இருந்தன, இருக்கின்றன!!!

    தொடர்ந்து அவ்வப்போது பதிவுகள் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /முன்பு எங்கள் தளத்தில் உள்பெட்டியென்று ஒரு பதிவு அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருந்தோம். அதில் இதுமாதிரி எஸ் எம் எஸ்ஸில் வந்த சில அருமையான வாசகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்/

      அப்படியா? தகவலறிந்து கொண்டேன். எனக்கும் இவை இப்போதைய வாட்சப்பில் வந்தவைதான். தங்கள் இணைப்பிலும் இவ்வாசகங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

      தொடர்ந்து எழுதுங்கள் என்ற ஊக்கமிகும் கருத்துக்கு நன்றி.
      என் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. முனிவரின் கதை அருமை.

    14 வதில் சொல்லப்பட்டது மிகவும் அற்புதம்.

    காணொளி ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்தமைக்கும்.பகிர்ந்திருக்கும் வாட்சப் வாசகத்தை குறிப்பிட்டு பாராட்டியமைக்கும், மிக்க நன்றிகள்.
      காணொளியையும் பார்த்து அருமை என கூறியிருப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. காணொளியை இப்போத் தான் பார்த்தேன்.பார்க்கும்முன்னர் அது காசே தான் கடவுளடா படத்தின் காட்சி என நினைத்திருந்தேன். ஏவிஎம் ராஜன் நடிச்ச படத்தோட இந்தப்பாடல் நிறையக் கேட்டிருந்தாலும் எந்தப் படம்னு தெரியலை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் மீள் வருகை தந்து பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      இது சக்கரம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். இந்தப் பாடலின் பெயரிலேயே ஒரு படம் வந்துள்ளது. முத்துராமன் லெட்சுமி நடித்த காமெடி படம். அதிலும் யு பாடல்கள் நன்றாக இருக்கும்.

      கருத்துகள் தந்த அனைவருக்கும் நன்றிகள்.நடுநடுவில் வந்து மெல்ல பதிலளிக்கிறேன். தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. //இந்தப் பாடலின் பெயரிலேயே ஒரு படம் வந்துள்ளது. முத்துராமன் லெட்சுமி நடித்த காமெடி படம். அதிலும் யு பாடல்கள் நன்றாக இருக்கும்.// நான் நினைச்சது அந்தப் படமோ என்று தான். காசே தான் கடவுளடா! படம். நகைச்சுவைப் படம்.

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு.

    //இந்த பதினாறு செல்வங்களும் ஒருவரது (அது ஆண், பெண் இரு பாலாராகிலும் சரி) வாழ்வில் அனைத்தும் ஒருசேர கிடைக்கப் பெற்றால், அவரை விட புண்ணியம் செய்தவர்கள் இந்த உலகில் வேறெவரும் இல்லை என்றே கூறலாம். ஆனால் மேற்கூறிய அனைத்தும் முற்றிலுமாக அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது சந்தேகந்தான்..! //

    எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது சாத்தியம் இல்லை.

    கர்மவினைக்கு ஏற்ப பயங்களை அடைவார்கள் என்று சொல்லுவார்கள் முன்னோர்கள்.


    //அம்மா வரும் போது சொல்லிக் கொண்டு வந்த நீ என்னை விட்டு போகும் போது சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்" என வேண்டுகோளுடன் கூறியதும் அதற்கு மஹாலக்ஷ்மி சம்மதித்து அவருக்கு அருள் புரிய தொடங்கினாள்.//

    இது நல்ல ஒபந்தமாய் இருக்கிறதே!


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது சாத்தியம் இல்லை./

      அழகாக சொன்னீர்கள்.. உண்மைதான்.! யாருக்கு எது கொடுப்பினையோ அதையன்றி வேறு எதுவும் கிடைக்காது. நாம்தான் அதை உணர்ந்து கொண்டு ஆசைகளை கொஞ்சமாவது ஒதுக்கி வைத்தால் மன உளைச்சல்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

      முனிவர் கர்ம யோகி. அதனால்தான் செல்வத்தின் நாயகியே அவரிடம் வந்து "நான் உன்னுடன் சற்று காலம் தங்கியிருக்க போகிறேன்." என்று உத்தரவு பெறும் பாணியில் பகன்றாள். அதனால் அந்த ஒப்பந்தமும் இனிதாக இருந்தது. முனிவரும் அவள் வந்ததையும், அகன்றதையும் சரிசமமாக எடுத்துக் கொண்டார். அந்த பக்குவம் சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமா?
      தங்கள் அழகான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ராமரின் முகம் நாட்டை ஆளவேண்டும் என்ற போதும் மலர்ச்சியாக இருந்தது , காட்டுக்கு போக வேண்டும் என்று கட்டளையிட்ட போதும் மகம் மலர்ந்தே இருந்தது.

    இன்ப, துன்பத்தை சமமாக பார்க்கும் மனநிலை எல்லோருக்கும் வருமா என்பது சந்தேகம். சமமாக பாவிக்கும் மனநிலை பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ராமரின் முகம் நாட்டை ஆளவேண்டும் என்ற போதும் மலர்ச்சியாக இருந்தது , காட்டுக்கு போக வேண்டும் என்று கட்டளையிட்ட போதும் மகம் மலர்ந்தே இருந்தது./

      அவர் தெய்வாம்சம் இல்லையா..! எதையுமே சமமாக பாவிக்கும் பக்குவம் பெற்றவரில்லையா.! அவருக்கிணை வேறு எவர்? நல்லகருத்து சகோதரி.. தங்கள் அற்புதமான கருத்துக்கு மிக்க நன்றி..
      தாமதமான என் பதிலுக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. காசேதான் கடவுளடா கடவுளுக்கும் இருது தெரியுமடா ! இந்த பாடல் கேட்டு இருக்கிறேன்.

    //நீங்கள் சிரித்துப் பாருங்கள்! உங்கள் முகம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பாருங்கள்; உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.//

    எனக்கு பிடித்து இருக்கிறது இந்த வாக்கியம்.

    பதிவு அருமை.
    முடிந்த போது இது போன்ற நல்ல பதிவுகளை எழுதுங்கள் கமலா.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      பாடலை இதற்கு முன் கேட்டு ரசித்திருப்பினும் மறுபடியும் கேட்டதற்கும்
      வாக்கியங்களை ரசித்தமைக்கும் நன்றிகள்.

      பதிவு அருமையென பாராட்டியமைக்கும், ஊக்க மிகு கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..
      என் பதில்தான் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. பதினாறு செல்வமும் ஒருவனுக்கு அமையவே அமையாது. அது சாத்தியமுமில்லை. என்ன அமைந்தாலும் 'போதும்' என்ற மன அமைதி அமையுமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதினாறு செல்வங்களும், ஒருசேர ஒருவருக்கு அமையவே அமையாது..
      நன்றாகச் சொன்னீர்கள். "போதும்" என்ற அந்த அமைதியும் எவருக்கும் கிட்டாது. இந்த செல்வங்களை விட "இது அமைந்ததே இதுவே நமக்கு போதும்" என்ற திருப்தியை ஒருவர் வாழ்நாளில் பெற்று உணர்ந்து விட்டால் அதை விட செல்வம் வேறேது? அழகான கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. பதினாறு செல்வங்கள் என்பது போல பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பதற்கும் விளக்கம் உண்டு. தெரிந்தால் பகிருங்கள்.
    பழமொழிகளில் 8ம் எண்ணினர்க்குரியது, 9ம் எண்ணிற்குரியதும், 12ம் எண்ணிற்குரியதும் பிடித்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பதினாறு செல்வங்கள் என்பது போல பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பதற்கும் விளக்கம் உண்டு. தெரிந்தால் பகிருங்கள்./

      கண்டிப்பாக எழுத்ம் நேரம் அமைந்தால் எழுதுகிறேன். தங்கள் உற்சாக பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
      சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      பதிவையும் ரசித்து, இலக்கமிட்டு பகிர்ந்த வரிகளை ரசித்தமைக்கும், என்னை ஊக்கப்படுத்தும் வரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் வேலை பளுவிலும் என் பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு என் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் கொடுத்த சுட்டிக்கும் சென்று பார்க்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete