Monday, August 13, 2018

நோய் விரட்டி....

அடர்த்தியான கும்மிருட்டு.. இருள் கெட்டியான போர்வைையை, ஒன்றிற்கு இரண்டு மூன்றாக விரித்து குளிருக்கு அடக்கமாக போர்த்திக் கொண்டு விட்ட ஒரு பிரமையை உண்டாக்கியது. மழை ஒரு நிலையில்லாது  ஈரக் காற்றின் உதவியோடு, நசநசத்து பெய்து.. குளிருக்கு துணையாக  "நான் இருக்கிறேன் உனக்கு" என்றபடி தோளில் கை போட்டு நட்புணர்ச்சியோடு புன்னகைத்துக் கொண்டிருந்தது.

சாலையில் அவ்வப்போது ஓடிக் கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் அனைத்தும், கூடி பேசிக்கொண்டவை போல், ஒன்றன் பின் ஒன்றாக  தன் சத்தத்தை நிறுத்த ஆரம்பித்து வெற்றி கண்டு விட்டது. ஐப்பசியின் முன்னிரவு  நேரம் பின்னிரவு நேரத்தை சற்று தொடர்ந்து களைப் பேதுமின்றி பயணித்து களிப்புடன் நெருங்கும் பொழுதும் ஆரம்பித்தாகி விட்டது... எங்கோ ஒரு மரத்தில் ஆந்தை அலறும் சப்தம் விட்டு விட்டு கேட்டதும் நின்று போக,  சாலையோரத்து சின்ன சின்ன மரம் செடிகளின் மறைவில்  சுவர் கோழிகள்  ஓயாது போட்ட  கிர்...கிறீச்..கிர்.. கிறீச்.. என்ற சப்தமும் நிசப்தத்தின் வருகை கண்டு அதிர்ந்து போனதில், அரண்டு போய் நின்றிருந்தன.

மெளனம் தான் அழகாய் இருப்பதை கொஞ்சம் கர்வத்தோடு தனக்குத்தானே புகழ்ந்து  கொள்வது கண்ட சிலீரென்ற காற்று, ஒரளவு உயரமான மர இலைகளின் ஊடே மோதி சற்றே சலசலப்பை உண்டாக்கி, மெளனத்தின் கர்வங்கொண்ட  மனதின் பொறுமையை சோதித்து சந்தோஸமடைந்தன.

இந்த கால கட்டத்தில்தான். மனித சஞ்சாரம் இல்லாத  இந்த நேரத்தில்தான், இவைகளின் நடமாட்டம் தீவிரமாகப் இருக்கும்.... இருளில் விழிகள் எட்டி துழாவும் போது, விழி தட்டி கண்ணிணுடேயே படர்ந்து பரவிப் போகும்.  வர்ணனைகளை கேட்டதோடு சரி.. ஒரு தடவையும், பார்த்ததோ  பிடித்ததோ இல்லை... ஆயிற்று.. இன்று இதை சந்திக்கத்தானே இந்த நேரம்  பார்த்து காத்திருந்து வந்தாகி விட்டது.

அத்தனை நிகழ்விலும்  சரக்.. சரக்....கென  பாதச்சேர்ந்த செருப்பின் ஓசை சிறிது  கண்ணயர்ந்த இருளையே  திடும்மென விழித்துக் கொள்ள வைத்தது.  மிரளும் இருட்டும் கலையாதிருக்க வேண்டும். கலைந்து போகாத இந்த இருளுக்குள், "அதை"  எப்படி அடையாளம் காண்பது? வெள்ளை உருவில், புகை மாதிரி கண்ணுக்கு தெரிந்து "பிடிக்க" ப் போகும் போது கைக்கு அகப்படுமா? இல்லை கைத் தட்டி பறந்து மறைந்து விடுமா?

இல்லை, சாதரண உருவில் நடந்து வந்து, "என்னை உனக்குப் பிடிக்கிறதா? நான் முன்னால் போனால் ஓடி வந்து பிடிக்கிறாயா?  இல்லை.. உன்னை ஓட விட்டு நீ களைப்படையும் போது  சத்தமின்றி நான் வந்து நிற்கும் போது  பிடிக்கிறாயா? எப்படி வசதி" என்று கேட்குமா?

அதுவுமில்லாது,  தலை விரித்துப் போட்டபடி, பற்பசை கொண்டு  பல் துலக்கும் கோலத்தில், இரண்டு நீண்ட பல்லை மட்டும் வாயோரங்களில் காட்டி,  பயங்கர சிரிப்பொன்றை உதிர்த்து, மற்ற பற்களை சிரித்த பின் காட்டியபடி ,வக்ரமான  முகத்துடன்  மெதுவாக  காற்றில் வேண்டுமென்றே மறையுமா ? இதை முன் பின் பார்த்திருந்தாலாவது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.  ஐயோ... எப்படி இருக்குமென்று தெரியவில்லையே...

குறிப்பாக இவற்றை எந்த பாலில், ஆண், பெண் என்ற எந்த பாலில் அடையாளம் கண்டு பிடித்துக் கொண்டு பிடிப்பது?  எது பிடிக்க இலகுவாக வசப்படுமென அறிந்து கொள்ளாமல் இந்த நடு நிசியில் வந்து இப்படி  தடுமாற வேண்டுமா?  உள்ளெழுந்த  நினைவுகள் படபடவென திட்டி தீர்ப்பதற்குள் ,  இருளில் ஏதோ ஒரு பறவை வழி தடம் மாறி வந்து "கீறீச்" சென அலறி முகத்தில் "பட்"டெனஅறைந்தபடி பறந்து சென்றது. மனசு முழுக்க திகில் வெள்ளம் திடிரென பிரவாகமாய்  பாய்ந்து வந்து நின்று ஒரு உலுக்கு உலுக்கியது. . . சிறிது முடியாமல் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இருட்டு மையை விழி நிறைய வேண்டிய மட்டும் அப்பிக்கொண்டு,  இரு கை கொண்டு வழித்தெடுத்த ஒரு இடைவெளியில், விழி கூர்ந்த போது, வெள்ளை உருவொன்று கையசைத்து "வா" "வா" என்றபடி நகர்வது மங்கலாக புலப்பட்டது. "யார் நீ" என்ற வினாவுக்கு, சற்றும் பயமேதும் கொள்ளாமல், அருகில் வந்து பற்கள் இல்லா வாயை  "ஆ" வென "வி" ரித்துக் காட்ட "ஓ நீதானா அது" என்றபடி கை நீட்டி பிடிக்க உத்தேசிக்கும் போது, பளாரென்ற ஓர் அறை கன்னத்தில்  விழுந்தது.

இதை எப்படி பிடிப்பது .... 

ஒரே குழப்பமாக இருந்தாலும். உடலின் வலியோடு, தலை கழன்று போகும்படியான வலியும், கண்கள் இரண்டும், இரு அருவிகளாக மாறாத பாறாங்கற்களாக, சிக்கித் திணற, கற்களுக்கிடையே  ஊறும் நீரை உள்ளடக்கி, விடும் மூச்சை,  வாய் வழி மூச்சாக்கி, மூக்கின் வழி சுவாசத்தை, கடந்த இருபது நாட்கள் வரை மரணத்தின் வசமும் தராமல், தானும் பெருக்கெடுத்து ஓடி  நாசியின் நலனை சரி வர பாதுகாக்கா மலும், பெரும் சோதனைக்குள்ளாக்கி, இரவின் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை கை பிடித்து நரகத்தின் வாசலுக்கே கொண்டு விடும் இந்த நீர் தே(தோ)சத்திற் காக இதை பிடிக்கத்தான் வேண்டும் போலும்.

சற்று நகர்ந்து மரமொன்றின் இடை வெளியில், அதன் அசைவு மறுபடி தெரிய பிடிக்க விரையும் போது, ஒரு பெரிய கல் தடுக்கி சட்டென மண்ணை கவ்வி விழுந்ததில். படபடக்கும் இதயம் சுய நினைவை திருப்பி இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து கண்களை மலரச் செய்தது....

வேறு ஒன்றுமில்லை... "மாத்திரை போட்டால், ஒரு வாரம்... போடாவிட்டால் ஏழு நாட்கள்" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய நோயாகிய  ஜலதோஷம்,  இந்த தடவை  வந்த தென் மேற்கு மழை தீவிரத்தைப் போல் கடந்த இருபது நாட்களாக கடைசி பாராவில் சொல்லியதை போல் சற்று வெறி  பிடித்தால் போல் தாக்க உறவுகள் "ஆவி"யையும் கூடவே பிடித்தால் உங்களுக்கு கொஞ்சம் சரியாக வாய்ப்புள்ளது என்று வலியுறுத்தி  கூற, நானும் ஒவ்வொரு நாளும் படுக்க போகும் முன், என் "ஆவி" யை தொலைந்து விடும் அவஸ்த்தையை பட்டாலும்,  சரி!  நாளை "பிடித்து" பார்க்கலாம், என தள்ளிப் போட்டு கொண்டே வந்தேன். "ஆவி"பிடித்தல் என்ற வார்த்தை என்னுள் "நமக்கும் பேய் கதைகள் எழுதும் ஆற்றலை உண்டாக்கி கொள்ளலாமே " என எண்ணியதில்,  இரவு வராத  நித்திரையில் சிறிது கற்பனையை தோற்றுவித்தது. அதன் விளைவே இந்த பதிவு.

அனைவரும்,
என்னுடன், 
வந்து
அறு(ஆ.வி)வையை, 
ப(பி)டித்ததற்கு, 
நன்றிகள்.
   
              ==================😀===================


28 comments:

 1. நள்ளிரவில் வெளியிடும் பதிவில் இப்படியா ஆவி ஓட்டுவது ?

  நான் விட்ட கொட்டாவியே என்னை பயமுறுத்தி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   கொட்டாவி வராததினால்தான் ஆவிகளின் கொட்டமும் பதிவினில் ஆட்டம் போட்டது.
   இந்த நேரத்திலும் கொட்டாவியை தொலைக்கும் நம்மை போன்றோரை ஆவிகள் நெருங்குமா? ஹா ஹா ஹா . சிரித்தது நான்தான்.பயம் வேண்டாம்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. கில்லர்ஜி.. நீங்கள் விட்ட கொட்டாவியே உங்களை பயமுறுத்தியதா? ரசித்துச் சிரித்தேன்.

   Delete
  3. அதுசரி ஆவி வந்தது கமலா சிஸ்டர் ஊரில:)) ஆனா கொட்டாவி தேவகோட்டையில வெளிவந்திருக்கே:)).. ஆவி பிடிச்சாத்தான் அடிக்கடி கொட்டாவி விடுவினமாம்:)) அம்மம்மா சொல்லித்தந்தவ:))

   Delete
 2. ஆரம்பங்களில் அபார வர்ணனைகள். ஆவியாய் இல்லாமல் வேறெதையோ சொல்லப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு.. கடைசியில் ஆவிதான், ஆனால் வேற ஆவி! அது ஏற்படுத்திய தாக்கம் நான் நினைத்த ஆவி... ரசனையுடன் எழுதி இருக்கிறீர்கள். ரசித்தேன்.


  ஒரு வாரம்தானே இருக்கவேண்டும் அது ஏன் 20 நாட்களுக்கும் மேலாய் இருக்கிறது?!!

  :)))

  ReplyDelete
  Replies
  1. டுவிஸ்ட் வச்ச கதை எண்டாலே ஸ்ரீராமுக்கு நல்லாப் பிடிக்கும்:))..

   //ஒரு வாரம்தானே இருக்கவேண்டும் அது ஏன் 20 நாட்களுக்கும் மேலாய் இருக்கிறது?!!///

   ச்...ரீராம்ம்ம் இது வெனிஸ்கிழமை கேய்க்கவேண்டிய கிளவி:)) மறந்து இங்கின கேய்ட்டிட்டீங்க:)).. அதிரா வந்திட்டனெல்லோ இனி கண்ணில விளக்கெண்ணெயோடுதான் சுத்துவேன்ன் ஹா ஹா ஹா:))

   Delete
  2. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீங்கள் என்ன ஆவியை நினைத்தீர்கள்? ரசித்துப் படித்தமைக்கும், பாராட்டியமைக்கும் நன்றிகள்.

   /ஒரு வாரம்தானே இருக்கவேண்டும் அது ஏன் 20 நாட்களுக்கும் மேலாய் இருக்கிறது?!!/

   "ஜலதோஷம் வந்தால் கண்டிப்பாக ஒரு வாரம் நம்முடன் கண்டிப்பாக கேட்காமல் தங்கி விடும். ஆனால் சந்தோஷம் ஒரு நாள் கூட தங்க யோசிக்கும்" என்று படித்தது நினைவுக்கு வருகிறது.
   இரண்டும் கூடிக்கொண்டு பிரிய மனமில்லை என நினைக்கிறேன்.
   இங்கு குளிர் அதிகமாக உள்ளது. ஒருதடவை வந்த ஜல்பு தீபாவளி வெடி மாதிரி டபுள் ஷாட்,ட்ரிபிள் ஷாட் அடித்து போவேனா என்கிறது. மாறி மாறி அனைவருக்கும். அதுதான் தெ.மே ப.மழை தீவிரம் மாதிரி என்றேன். விசாரிப்புக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. அதானே.! அதிரா இந்த தடவை கையில் விளக்கெண்ணொய் பாட்டிலோடு வந்திருக்கிறார். ஈசியாக தவறுகளை சுட்டிக் காண்பித்து கண்டு பிடித்து விடுவார். ஹா ஹா.

   Delete
 3. இஃகி, இஃகி, நல்ல வர்ணனை, ஆனால் இப்படி ஏதோ வரப் போகுதுனு தெரிஞ்சதாலே பயப்படலை! நல்லாவே எழுதறீங்க! அபாரமான கற்பனை! என்ன தான் ஆவி, பாவி பிடிச்சாலும் ஜலதோஷம் அனுபவிச்சே தீரணுமே!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா காவிரியில தண்ணி வந்ததிலிருந்து கீசாக்காவின் சிரிப்பே மாறிடுச்சூஊஊஊஊ:)).. நேக்கு இப்போ டவுட்டு டவுட்டா வருது:) ஆவி கீசாக்காவைப் பிடிச்சிருக்கோ?:)

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   பயப்படற மாதிரி அங்கே ஒன்றும் இல்லையே.. நான் சாதரண ஆவி பிடித்தல் பற்றிதானே எழுத ஆரம்பித்தேன். அதனால்தான் தங்களுக்கும் பயமேதும் வரவில்லை. பாராட்டிற்கும், படித்தமைக்கும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   /என்ன தான் ஆவி, பாவி பிடிச்சாலும் ஜலதோஷம் அனுபவிச்சே தீரணுமே!/

   அது என்னவோ 100க்கு100 உண்மையான வார்த்தைகளை சொல்லியிருக்கிறீர்கள். என்ன பிடித்தாலும், எதுவுமே போகும் போதுதான் போகும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் அதிரா

   /காவிரியில தண்ணி வந்ததிலிருந்து கீசாக்காவின் சிரிப்பே மாறிடுச்சு...... /

   இல்லை.. இல்லை.. இது என்னவோ பரசுராமர் (கலப்பை) சிரிப்பாம். இன்று காலை எ. பி யில்தான் அறிந்து கொண்டேன்.

   Delete
 4. 'அடடா...! என்ன இது...?' என்று நினைத்துக் கொண்டே படித்தேன்... முடிவில் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ரசித்துப் படித்ததாக நீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரரே. என்னை ஊக்குவித்தது மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. பேய்யை பற்றிய சிறுகதையோ என எண்ணிக் கொண்டே படிக்கத்துவங்கினேன்...
  பற்றியது பேய்யல்ல....என முடிவில் தெரிந்து கொண்டேன். ஜலதோஷத்தை விரட்டும் நடவடிக்கயை கதை போல சொன்னது அருமை....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   பேய் கதைகள் எனக்கும் எழுத வருமா என்பதற்கு ஒரு முன்னோட்டந்தான் இந்த பதிவு. நீங்கள் அனைவரும் ரசித்ததை பார்க்கும் போது ஒரளவு முயற்சிக்கலாம் எனத் தோன்றுகிறது. தங்கள் ரசிப்புக்கும் பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்த வகையில் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நீண்ட நாட்கள் தங்களை காணவில்லையே..தங்களின் மிகுந்த பணிச் சுமைகளுக்கு நடுவிலும் என் தளம் வந்து கருத்துரை தந்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

   /எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்த வகையில் ரசித்தேன்./

   பதிவை ரசித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   /பிரமாதம்.👌👌/

   இந்த வார்த்தை எனக்கு டானிக் மாதிரி சகோதரி.

   தங்களின் பாராட்டின் மூலம் பதிவை நன்கு ரசித்திருக்கிறீர்கள் என புரிந்து கொண்டேன் சகோதரி.
   பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. ஹா ஹா ஹா ஏதோ காட்டில போய்க் கொக்குப் பிடிக்கிறேன்ன் குயில் பிடிக்கிறேன் என்பதைப்போல ஆரம்பிச்சு.. முடிவில ஆவி பிடிச்சிட்டீங்களே:)).. நல்லவேளை ஆவியை நீங்க பிடிச்சீங்க:), மாறிக்கீறி ஆவி உங்களைப் பிடிச்சிருந்தா?:))..

  ஹா ஹா ஹா நல்ல ருவிஸ்ட்.. இல்ல டுவிஸ்ட்.. இப்பூடித்தான் சொல்லோணும் என நெ.தமிழன் புரொஃபிஸர் சொல்லித் தந்திருக்கிறார்:).. ஹ ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா சிஸ்டர். (சகோதரிக்கு மாற்றாக)

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /ஏதோ காட்டில போய்க் கொக்குப் பிடிக்கிறேன்ன் குயில் பிடிக்கிறேன் என்பதைப்போல ஆரம்பிச்சு.. முடிவில ஆவி பிடிச்சிட்டீங்களே:)/

   இல்லையே சகோதரி. கடைசியில் எதுவுமே புடிக்க முடியவில்லையே...

   /மாறிக்கீறி ஆவி உங்களைப் பிடிச்சிருந்தா?:))../

   அப்படி பிடிச்சிருந்தாலும், உபாதை குணமாகியிருக்குமே.. அதுக்கும் வழியில்லாமல், கல் தடுக்க விட்டதே! சரி.. எதுக்கும் நல்லதுதான்! அப்படியே ஆவி என்னை பிடித்திருந்தாலும், ஜல்பும் போகலைன்னா, நான் இரவு 12க்கு மேல் தினமும் உங்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியிருப்பேன். ஆவித் தொல்லையிலிருந்து தப்பித்தீர்கள்...

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன். .

   Delete
 9. அருமையான தொடக்கம் மர்மநாவல் போல் போய் ஆவி கதையோ என்று நினைக்கிற மாதிரி கொண்டு போய் சலதோஷத்திற்கு ஆவி பிடிப்பதாக கதையை நிறைவு செய்து இருப்பது அருமை.  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   /அருமையான தொடக்கம் மர்மநாவல் போல் போய் ஆவி கதையோ, என்று, நினைக்கிற மாதிரி கொண்டு போய் சலதோஷத்திற்கு ஆவி பிடிப்பதாக கதையை நிறைவு செய்து இருப்பது அருமை./

   பேய் கதைகள் எழுத வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை. அதற்கு எனக்கு திறமை இருக்கிறதா என்றால், இல்லை எனத்தான் நான் சொல்வேன். ஆனாலும், இந்த மாதிரி எழுதி அதற்கு வரும் தங்களின் கருத்துரைகள் என் முயற்சிக்கு ஆறுதலாக இருக்குமாவென்று தெரிந்து கொள்ளத்தான் முயன்றேன். தாங்கள் அனைவரும் ரசித்திருப்பதாக கூறியது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது.

   மர்ம நாவல் போல் ரசித்து படித்தமைக்கும், பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 10. கதை தொடக்கத்தில் தந்த ஆரம்ப வர்ணனைகள் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   வர்ணனைகளை ரசித்து பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி. தங்கள் ஊக்கமும், கருத்தும் எனக்கு மிகவும் உற்சாக மளிக்கிறது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. ஆஹா.... நல்லா ஆவி பிடித்தீர்கள் போங்கள்!

  வர்ணனைகள் அருமை. தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரரே

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பதிவை ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  /ஆஹா.... நல்லா ஆவி பிடித்தீர்கள் போங்கள்! /

  ஹா ஹா ஹா ஹா ஆவி பிடிக்கத்தான் போனேன். ஆனால் பிடிக்க முடியவில்லையே...

  அருமை என்ற பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் என மனம் நிறைந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete