Sunday, February 11, 2018

சேமித்தல் அவசியம்...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடுகள் அவர்கள் வாழ்க்கையில் அமையும்  வசதிகளைப் பொறுத்தே அமைகிறது என்பது திண்ணம். வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அதற்கு மூலதனம் பணந்தான்! (உதாரணம் அதில்தான் "தனம்" என்ற வார்த்தையே உள்ளதே! ) ஆனால் உலகில் எல்லோராலும்  பணத்தால் வாழ்க்கையை வசதியாய் அமைத்துக்கொண்டு வாழ்ந்திட முடியுமா? அதுவும் இயலாது! ஏனெனில் எவரவர் எப்படி வாழ வேண்டுமோ அந்த நியதிபடிதான் படைத்தவன் படைத்து அனுப்பியிருக்கிறான். அதன்படி நாம் வாழ்ந்து வந்தாலும், நாளைய வாழ்வுக்காக. எதிர் கால நன்மைக்காக, சந்ததிகளின் வாழ்க்கைகாக, இல்லை பிற உபயோகத்திற்காக என்று நமக்கு இறைவன் அமைத்து கொடுத்திருக்கும் வசதி வாய்ப்புகளை (பணத்தை) சேமிக்கிறோம். சேமிப்பு என்பது தவறல்ல! கடந்த காலங்களில் தவற விட்டவைகளை, எதிர் காலத்திலாவது பெறமுடியுமா என்ற கேள்விக்குறிகளோடு, நிகழ் காலத்திலேயே முடிந்தவரை அனுபவித்து விட வேண்டுமென்ற தீவிரமான ஆ(நிரா)சைகளோடு வாழ்ந்து வரும் நாம்  அதே சமயம் சேமிப்பும் ஒரு அத்தியாவசியம் என்ற உணர்வோடு அதிலும் கவனம் செலுத்துகிறோம்.

சேமிப்பு என்பது இருவகைப்படும். ஒன்று மேலே சொன்ன காரணங்களுக்காக ஒரு குடும்பத்தின் தலைவனோ, தலைவியோ, தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் துன்புறுத்தாது, நிகழ்கால தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்தபடி சேமிப்பது, மற்றொன்று தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்தி, நிகழ்காலங்களை சோகத்தில் தள்ளி அதன் கனவுகளை தகர்த்தெறிந்து விட்டு "நாளைக்காக" என்று சேமிப்பது. முதலாவது சிக்கனமென்றால், இரண்டாவது கஞ்சம் ! இரண்டிலும்  தவறுகள் நிகழலாம். ஆனால் பின்னதில் ஒரு துளியேனும் மகிழ்ச்சி கீற்றை சந்திக்காமலே போகும் வாய்ப்புகள் உள்ளது. எப்படியோ சேமித்தல் நலமாகி பலனை நல்கினால்
மொத்தத்தில் அனைவருக்கும் நலமே!


மஹா பாரத காலத்தில்  ஒரு சமயம்  விதுரரை சந்தித்து பேச கண்ணன்அவர் இருப்பிடம் சென்றான். கண்ணனை கண்ட மாத்திரத்தில் விதுரருக்கு தலை கால் புரியாத மகிழச்சி. தன்னை நாடி வந்த பரந்தாமனுக்கு  ஏதேனும் விருந்தளித்து பசியாற்றி அனுப்பவேண்டுமென்ற ஆர்வத்தில், அங்குமிங்கும் ஓடியதை கண்ணன் ," விதுரா ! ஏன் இப்படி ஓடி நேரத்தை கழி்க்கிறாய்? நான் கொஞ்ச நேரம் இங்கு தங்கி உன்னுடன் அளவளாவவே  வந்தேன். உன் கையால் சிறிது பழங்களை தந்தால் கூட போதும். என் பசி ஆறிவிடும். நீ சிறிதும் சிரமபட வேண்டாம். "" என்றதும், விதுரருக்கும் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கும் அந்த பேறுக்காகவே, அந்த யோசனை சரியெனபட்டது. பரந்தாமனின் அருகிலேயே அமரந்து அவரின் பொலிவான முகத்தையும்,  அவர் திறம்பட பேசும் பாங்கையும் ரசித்தபடி வாழைப்பழங்களை உரித்து கொடுக்க ஆரம்பித்தார். கண்ணனும் அவர் அளித்ததை தட்டாமல் அமுதமென உண்டு கொண்டேயிருந்தார்.

கண்ணனும் ஒரு கால கட்டத்தில் தன் பேச்சை நிறுத்தி விதுரரிடம் ஏதோ கேட்கவே சுய நினைவு எய்திய விதுரர் பழத்தட்டை யதேசையாக நோக்கியதும் திடுக்கிட்டுப் போனார். பதறிப் போன குரலில், "கிருஷ்ணா! மாபெரும் தவறிழைத்து விட்டேனே! இந்தப் பாபத்தை எங்கு சென்று போக்குவேன்? நீ அருகிலிருந்தும் கூட  தவறிழைக்கும் என் செய்கையை சுட்டிக்காட்டி திருத்த முயலக்கூடாதா? மகா பாபியாகி விட்டேனே!" என்று மனம் நொந்த அழுகையுடன் கதறவும், கிருஷ்ணர் விதுரரின் அருகில் சென்று ஆதரவாக ஆலிங்கனம் செய்து கொண்டார். "விதுரா! என்ன பிழை செய்து விட்டாய் என்று இப்படி புலம்புகிறாய்? என சிரித்துக் கொண்டே கேட்கவும்,  "பரந்தாமா!  இப்படி ஒன்றும் அறியாதவன்  போல் கேட்கிறாயே!  இந்தப் பழத்தட்டை பார்!  பழத்தை இங்கு போட்டு விட்டு வெறும் தோல்களை உனக்கு தந்திருக்கிறேன். நீயும் ஒன்றும் சொல்லாமல் அனைத்தையும் உண்டிருக்கிறாய்! நான் அறியாமல் செய்து கொண்டிருக்கும் பிழையை நீ ஒரு கண்ணசைவில் சுட்டிக் காட்டியிருந்தால், இதை தவிர்த்திருக்கலாம் இல்லையா? இனி வரும் வாழ்வில் இந்த என் செய்கை....விதுரர் தான் ஒரு ஆண்மகன் என்பதை மறந்து விம்மி அழ ஆரம்பித்தார்.

கண்ணன் விதுரரின் கைகளை தன் கைகளில் அன்புடன் ஏந்தியவாறு அவர் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்தபடி, "விதுரா! இதோ பார்! சற்றேனும் உன் செயலுக்கு வருந்தாதே!  உன் அன்பு நான் அறியாததா? நீ என் மீது எவ்வளவு அன்புடன் இருந்திருந்தால் மெய்மறந்து உபசாரம் செய்திருப்பாய் எனபதை நான் அறியாதவனா?  உனது யாதும் கடந்த நிலை எனக்கு தெரியாததா?  இரண்டாவதாக கோகுலத்தில் வளரும் சமயம் என்அன்னை யசோதாதேவி  பழங்களை எனக்கும் அண்ணன் பலராமனுக்கும் ஊட்டி விட்டு தோல்களை பசுவினத்திற்கு அளிப்பார்கள். அப்போதிலிருந்தே  எனக்கு அந்த ஆவினம் உண்ணும் பழத்தோல்களை நானும் உண்ண ஆசை! அதை இன்றுதான் உன் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்! ஆகவே நீ எனக்கு ஒருவிதத்தில் நன்மைதான் செய்துள்ளாய். என் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்துள்ளாய் என்பதை நினைவில் வைத்துக்கொள்!  இதில் வருந்த ஏதும் இல்லை"  என்றான் சற்று குறும்பும் கலந்த குரலில்.

கண்ணனின் சமாதான பேச்சில் மயங்கிய விதுரரும் சற்றே மனம் விட்டு இளநகை புரிந்தார்.. அங்கே அன்புக்கு, கண்ணன் மேல் விதுரர் கொண்ட பக்திக்கு மரியாதை கிடைத்தது. தவறுகள் அன்பெனும் மாயையால் முழுதாக மூடப்பெற்று குற்றங்குறை என்ற ஏதும் இல்லாத மனப்பாங்கு உருவாக்கபட்டது. பரந்தாமன் மேல்  உண்மையான பக்தி செலுத்தினால் அறியாமல் செய்த தவறுகளை அவன்  கையில் சுழலும் சக்கராயுதத்தின் மூலம் துடைத்தெறிந்து அழித்திடுவான். என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு படிப்பினை. ஒரு உதாரணம்.

நான் 70, 80 களில் ஒரு வார இதழில் கதை ஒன்று படித்தேன். அதை எழுதியவர் பெயரோ கதா பாத்திரங்களின் பெயரோ நினைவில் இல்லை. வார இதழ் கூட  (குமுதம் என்று நினைக்கிறேன்.) சரியாக நினைவில்லை! ஆனால் இன்னமும்  கதையின் கரு மட்டும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

திருமண வயதை கடந்த  (அதாவது 30 க்கும் மேல் ! அந்த காலத்தில் 30 வயதில் திருமணமாகமல் வீட்டில் ஒரு பெண் இருந்தால், ஊர் உறவுகள் பேசும்.! அண்டை அசல் பேசும்! ஏன் ஊரிலிருக்கிற வாயில்லா ஜீவன்கள் கூட பேசும்! போகிற வருகிற இடமெல்லாம் பெண்ணுக்கு எப்போ திருமணம்? கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க? என்ற பேச்சுக்கள் அடிபடும்.அது இயல்பான ஒன்று ! ) பெண் தனது தந்தையுடன் வாழ்ந்து  வருகிறாள். தாயார் சிறு வயதிலேயே தவறியதால், குடும்ப  பொறுப்புகள் அனைத்தும் திறம்பட செய்து வீட்டை நிர்வகிக்கும் திறமைசாலி. அவளது தந்தை பெண் திருமண வயதை எட்டியதிலிருந்து வரன் தேடிக் கொண்டேதான் இருக்கிறார். ஜாதகம் சரியாக அமையும் இடத்தில் பெண் பிடிக்காமல் போகும். இரண்டும் பிடித்தமாகும் இடத்தில் இவர்களது "வசதிகள்" (பொருளாதாரம்)  ஒத்து வராமல் போகும். இப்படியாக தட்டிப்போனதில் தந்தையின் கவலைகள் பெருகியதை கண்ட மகள் ஏதாவது ஒரு இடத்தில் நல்லபடியாக வரன் அமைந்தால், தந்தையின் மனச்சுமை குறையுமே என்ற ஆதங்கம் அதிகமாக, தரகர் வந்து சொல்லிச் செல்லும் மாப்பிள்ளையின் ஜாதகத்திலிருந்து, அடுத்தடுத்து நிகழும் சம்பிரதாய நிகழ்வுகளுக்காக, தன்னை படைத்தவனிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பித்தபடி வேண்டிக் கொள்வதை ஒரு கடமையாக்கி கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு சமயம்  அப்படி வந்த ஒரு மாப்பிள்ளையின் ஜாதகம் நன்றாக பொருந்தியிருந்தது அவர்கள் வீட்டிலும் பையனின் தாயார் மட்டுந்தான் ! தங்கள் மகனை அவன் தந்தை தவறியதிலிருந்து அந்த தாயார் வளர்த்து வருதால் பையன் தாய் சொல்லை தட்டியேதில்லை. அவர்களும் பெண் வீட்டில் எதையுமே எதிர் பார்க்க மாட்டார்கள்.  கல்யாண செலவைக்கூட அவர்களே ஏற்றுக் கொள்வார்கள்! ஏனெனில்  அந்த அம்மாவும் கஸ்டபட்ட நிலைமையில்தான்  தன் மகனை வளர்த்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் பண கஸ்டம் என்பது எங்களுக்கும் தெரியுமெனவும்  பையனின் அம்மா கூறி விட்டதாகவும், அந்த பையனும் எதையும் அம்மா விருப்பபடி கேட்டு கேட்டு செய்வதாகவும், தான் திருமணத்திற்கு பார்க்கும் பெண்ணைக்கூட தன் தாயே தேர்ந்தெடுக்கும் உரிமையை தாய்க்கு  தந்து விட்டதாகவும் , குடும்ப பாங்காக,  தன் தாய் பேச்சை தட்டாமல் இருக்கும்  பெண் யாராக இருந்தாலும் சரி! தாய்க்கு பிடித்து விட்டால் எனக்கும் சரிதான் என அந்த பையனே சொல்லி விட்டதாகவும், தரகர்  வந்து சொன்ன போது இந்த பெண்ணுக்கு மனதுக்குள் உல்லாச பறவையொன்று சிறகடித்து பறந்தது.

கடைசியில் ஒரு நாள் அந்த அம்மா மட்டும் வந்து பெண்ணைப்பார்த்து பிடித்து விட்டால், உடனே நிச்சயதார்ந்தான்!  அது மட்டுமல்ல! என்  மருமகளின் குடும்ப பொறுப்பையும் சமையலையும் ரசித்து , ருசித்து பார்க்கிறேன் என்று அவர்கள் வீட்டிலிருந்து கடிதம் (அந்த காலங்களில் கடிந்தானே!) வர, தந்தைக்கும் மகளுக்கும் சந்தோஸம் எட்டிப் பார்த்தது. வரும் அன்று வீட்டை பார்த்து பார்த்து சுத்தம் செய்ததோடு, அன்று அவர்கள் வீட்டிலேயே  பசியாறி விட்டும் போகலாம் என்பதினால், வடை பாயாசம் செய்து விருந்தாக சமைத்து வை என்று சொல்லி விட்டு வெளியில்  சென்ற  தந்தையின்  கட்டளைபடி  சமைக்க ஆரம்பித்தவளுக்கு, சின்ன சந்தேகம் உதித்தது. செட்டு கட்டாக குடும்பம் நடத்தி தன் மகனை வளர்த்து படிக்க வைத்தவருக்கு, வந்த முதல் நாளிலேயே அமர்களமாக சமையல் வகைகளை செய்து  பறிமாறினால்,  அதை ஆடம்பரமாக கருதி விட்டால் என்ன செய்வது என சந்தேகம் எழ, ஒரு சாம்பார், ரசம், வாழைக்காய் பொரியல், அப்பளம் என அளவோடு தயார் செய்து வைத்தாள். தானும் மிகவும் எளிய ஆடை அலங்காரங்களுடன் தயாராகி, வரும் விருந்தாளியையும் வெளியில் சென்றிருக்கும் தந்தையையும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சொன்னபடி வந்த பையனின் அம்மா அறிமுக படலம் முடிந்ததும்,. வீட்டின் நேர்த்தியை பார்த்து பாராட்டினார். அவளுடைய எளிய நடை உடைகளை கண்டு வியந்தார். ஓய்வு நேரத்தில்  அவள் செய்திருந்த கலைப் பொருள்களை கண் கொட்டாது பார்த்து சான்றிதழ் தந்தார். பையனின் அம்மா வருதற்கு முன்பே ஓட்டமாய் ஓடி வந்திருந்த பெண்ணின் தந்தை பார்த்துபார்த்து அவருடன் பவ்யமாக பேசியபடி தன் பெண்ணின் திறமைகளை அவவப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சாப்பிடும் போது முகம் முழுக்க மகிழ்வுடன் " சமையல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.இந்த பொரியல் என் மகன் விரும்பி சாப்பிடுவான். உன் கைமணம் பிரமாதம்! இதற்கே என் மகன் மயங்கி விடுவான்." என்றெல்லாம் சிறிதும் வெட்கப்படாமல் கூறி, தன்   பெண்ணை வெட்கப்பட வைத்ததைக் கண்டு தந்தை திருமண நிச்சயமே நடந்து விட்டதை போல மகிழ்ந்தார். வெகுவாக தன் சமையலை பாராட்டியதும் நாண மிகுதியில் நின்றிருந்தவளிடம் பையனின் அம்மா "வாழைக்காய் பொரியலுடன் காரமாக மற்றொரு பொரியல் செய்திருந்தாயே அது என்னம்மா?" எனக் கேட்கவும், வாழைக்காய்  தோல்களை வீணாக்காமல் அதையும் தான் புதுவிதமாக  புது பாணியில்  சமைத்திருப்பதை சொல்ல. "பேஷ் எனக்கேற்ற மருமகள்தான் நீ"! என்று தனியான ஒரு பாராட்டுரைத்து, இன்னும் ஒரு வாரத்தில், நாள் பார்த்து என்மகனுடன் வந்து நிச்சயம் செய்து விடுவோம் என்று நம்பிக்கை விதைகளைத் தூவி விடை பெற்றுச் சென்றார். அப்போதே வீடு திருமணக் களையை கட்டியிருந்தது போன்ற ஆனந்தத்தில் தந்தை மிதக்க, மகளும் தந்தையின் மன சஞ்சலம் நீங்கியது கண்டு பெருமகிழ்ச்சியடைந்தாள்.

வாரம் ஒன்றின் மேல் கடந்து சில தினங்களாயினும், தகவல் ஒன்றும் வாராமலிருக்க தானே கடிதம் எழுதி விசாரிக்கலாமா  என தந்தை யோசிக்கையில்  அவர்களிமிருந்து கடிதம் வந்தது. பெண்ணின் பெருமைகளை குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நேர்த்தியை, அமைதியான சுபாவத்தை, சமையல் திறத்தை அனைத்தையும் மீண்டும் ஒருமுறை புகழ்ந்து எழுதியிருந்த பையனின் அம்மா, "உங்கள் பெண்ணை எனக்கு மிகவும் பிடித்துள்ளது .ஆனால் அவளை மருமகளாக அடையும்  பாக்கியம் எனக்கில்லை! உங்கள் பெண்ணின் திறமைகளை கூறி என்மகனுடன் எத்தனையோ விவாதம் செய்து விட்டேன். ஒரு காயுடன் அந்தக் காயின் தோல்களை வைத்து திறமையாக சிக்கனமாக உணவு தயாரிக்கும் பாங்கையும் சுட்டிக் காண்பித்து விட்டேன். ஆனால், இப்போதுதான் நாம் நல்ல நிலையில் இருக்கிறோமே அம்மா! மறுபடியும் உங்களை மாதிரியே சிக்கனத்தை உபதேசித்து, என் நிகழ்கால கனவுகளை கலைக்கும்படியாக ஒரு பெண் தேவையா? தயவு செய்து  வேறிடம்  பாருங்கள்! இந்த ஒரு விசயத்தில் மட்டும் உங்கள் பேச்சை கேட்காததற்கு மன்னியுங்கள்! எனறு கூறி விட்டான். அவனை வறுப்புறுத்த முடியவில்லை! தயவு செய்து நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் பெண்ணின் குணத்திறகும்,, திறமைகளுக்கும்  நல்ல இடம் கிடைக்கும்!"என்றபடியாக முடிந்திருந்த கடிதத்தை கண்டதும் படித்துக் கொண்டிருந்த தந்தை அதை வெறித்தோடிய முகத்துடன் நழுவ விட்டதும், அதை எடுத்து வரி விடாமல் கண்களை ஓட விட்டவள்,  மனம் கனத்து கண்களில் ஓடத் துடித்த கண்ணீருக்கு சட்டென்று தடை போட்டவளாய், தந்தையை பார்த்தாள்..வாடிப்போயிருந்த தந்தையை கண்டதும் கண்களின் விளிம்பில் விடாமல் ஓடிச் சிதற துடித்துக் கொண்டிருந்த கண்ணீர் அவள்அனுமதியின்றி கண்ணங்களில் வழிந்து மறைந்தது.

இந்த கல்யாண சந்தையில் மாமியாரை பார்ப்பதா? இல்லை! கணவனாக வருகிறவனை கவனிப்பதா? ஒருவரை திருப்திபடுத்தி சந்தோஸபடுத்தியதற்கு பரிசாய் மற்றவரின் அதிருப்தியை  பெற வேண்டியுள்ளதே!  என்று மனதில் எழுந்த எண்ணத்தின் விளைவாய் இளநகை ஒன்றை சிந்தியபடி கடிதத்தை கிழித்தெறிந்து விட்டு தற்சமயம் தந்தையை தேற்றுவதே தன் பணி என்பதை உணர்ந்தவளாய் தந்தையை சமாதானபடுத்த முனைந்தாள்.

இந்தக்கதை என்னுள் இன்றளவும்.மறையவேயில்லை.  நான் எழுதும் போது சற்று மிகை படுத்தி  வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம்.  ( தந்தை பாத்திரம்  என் கற்பனையில் உதித்தாக கூட இருக்கலாம். .ஆனால்  கதையின் கரு இதுதான்.) நான் எழுதிய இந்த மூன்று விசயங்கஞக்கும் சம்பந்தம் இருக்கிறதாவென்றும் எனக்குத் தெரியவில்லை. என் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன். இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்!

8 comments:

  1. நல்ல ஒரு விஷயத்தை அருமையான பழைய கதை ஒன்றுடன் தந்தது பிரமாதம். பாவம் அந்தப்பெண். வாழைக்காய்த் தோல் அவளுக்கு எதிரி ஆகி விட்டது. அவளை அடைய அந்தா ஆணுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான்.

    சிக்கனம் பற்றி சொல்லும்போது எல் ஐ ஸி பற்றிச் சொல்லும் ஜோக் நினைவுக்கு வருகிறது. எதிர்கால நலனுக்காக நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழாமல் சேர்த்து வைத்து, எதிர்காலத்தில் வரும் வியாதிகளைச் சமாளிக்க உதவும் சேமிப்பு என்று சொல்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      என் பதிவுக்கு உடனடி வருகை தந்து பதிவை ரசித்து பாராட்டி கருத்து தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      எல் ஐ. ஸி ஜோக் ஹா, ஹா.ஹா. உண்மையும் கூட ஓரளவு மனதில் மகிழ்வோடு நிகழ்கால வாழ்க்கையை வாழ்ந்தால் எதிர்கால வியாதிக்கு தடைபோடலாமே. கருத்துக்களுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். பதிவினைத் தந்துள்ள உத்தி அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்கள் வெளியூர் பயணம் முடிந்த கையோடு என் பதிவினை கண்டு படித்து ரசித்து பாராட்டியமைக்கு மகிழ்வடைகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அருமையான உவமைக்கதைகள். சிக்கனம் மனிதனுக்கு அவசியமே ஆனால் கஞ்சத்தனம் அவசியமில்லை என்பது எமது கருத்து.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சிக்கனம் அவசியம் கஞ்சத்தனம் அவசியமில்லை! நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சிக்கனம் தேவை. கஞ்சத்தனம் தன்னைதானே வருத்திக்கொண்டு பணம் சேர்ப்பது. தேவையில்லை. இது பற்றி எடுத்துக் கட்டியுள்ள உவமைக் கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன.

    ReplyDelete
    Replies
    1. வணகக்கம் சகோதரரே

      என் வலைத்தளத்திற்கு முதல் வருகை தந்திருக்கும் தங்கள் வருகை இனிதாகட்டும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete