Sunday, July 24, 2011

பயணம்

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில்
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேரை
பார்வை உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்

பாசத் தொல்லை பொறுக்காமல்,
மாறா என் உள்ளத்தை முற்றிலும்
மாற்றிக்  கொண்டு மறுத்தளிகாமல்
பரிச்சியத்தின் பாசப்பிணைப்பை
மொழிகளில் அல்லாது
விழிவழி பரிமாறிய என்னைப் பற்றிய
விபரங்கள் அறிய நீ அழைத்த
விலாசத்திற்கு வந்தேன். என்
விதி அங்கு தான் விளையாடியது.

பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
பரிதாபத்தை உணர்ந்த உன்
பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை
பாவை நான் உணரவில்லை.
இதோ... இன்றும் உனக்காக
அதே பேருந்தில் பயணிக்கிறேன்
ஆனால் உன் வருகை தான்
அரிதாகி விட்டது.

இன்று அரிதாய் அமர கிடைத்த ஜன்னலோர
இருக்கையில் பயணித்த போது என்
விழிகள் கண்டது உன்னை.
வழித்தடம் மாறிய வேறொரு பேருந்தில்,
மற்றொரு மங்கையுடன்
மயக்கத்துடன் இருந்த நீ,
அவள் அதரங்களின்
அசைவினிடையே வரும்
ஒலி கற்றையின் ஓசையில்
ஒடுங்கி கிடந்த கோலம் கண்டு
என் சப்தநாடியும் ஒடுங்கி போனது.

உன் உள்ளத்தின் உதாசினத்தை
உணர்ந்த என் ஊமை விழிகள்
உணர்ச்சிகளை கட்டுபடுத்த இயலாது
உடைப்பெடுத்துக் கொண்டது.
மௌன மொழிகளின் மேன்மையை உணரா நீ
மன்னிக்கத் தகாதவன்.
பாசமொழிகளை பயன்படுத்தி நேசம் பரிமாறிய உன்னை அந்த
பாசமே மன்னிக்காது.

இழிவான உன் செய்கையால்
இடிந்துபோன என் உள்ளத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டுவர
இறுகிய என் மனதில் பயணித்த வரிகள்...
"நீயோ மாற்றுத்திறனாளி !
அவனோ ஏமாற்றுவதில் திறனாளி !
தீயில் விழுந்தும் கருகாமலர் நீ !
திறமையுடன் திசைதிரும்பிய தீ(ய)அவன் !
இனி உன் வாழ்வு வசந்தமாகும்!
வழியில் சந்தித்த அவன் வரவால்
விதி உனக்கு சாதகத்தை அன்றி,
பாதகத்தைத் தரவில்லை.
மனதை மாற்றிக்கொள் !
மகாராணியாக வாழ்வாய். "

மனதைரியம் கொடுத்த
தன்னம்பிக்கையில் இப்போது
நீ இல்லா பேருந்தில்
நிம்மதியாக பயணிக்கிறேன்...

No comments:

Post a Comment