
ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் கரையை கவனித்துவிட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாயின.
என்ன இது?
ஏன் இந்த மாற்றம்?
அன்றாடம் தன் அழகை ரசிக்கவரும்
ஆயிரம் பேர்களில் இன்று
ஒருவர் கூட இல்லாமல்,
ஓய்ந்து இருக்கின்ற கடற்கரை,
சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்,
சூனியமான புல்வெளிதரைகள்,
ஆர்பரிக்கும்தன் சத்தத்தையே சிறிது நேரம்
அமிழ்த்திவிடும் ஆரவாரக்கூச்சல்கள்,
எதுவுமின்றி ஏகாந்தநிலையில்
ஏன் இந்த மாற்றம் ?
தனக்கு தானே கேள்விகளை தொடுத்தபடி,
தளர்வின்றி மறுபடியும் மறுபடியும்
மண்ணில் முதல் நாள் பதிந்த
மனிதர்களின் காலடிதடத்தை
அழித்து விட்டு சென்றபடி இருந்தன
அந்த கடலலைகள்.
அதற்கு தெரியவில்லை !
அதனுள் அடிமட்டத்திலிருந்து அதிர்ந்து எழும்
ராட்சத பேரலைகள்
ராப்பகல் பேதமின்றி
சுனாமி என்ற பெயரில் அனைத்தையும்
சுருட்டிக்கொண்டு போய்விடும் அவலச்செயல்களும்,
அதன் கொடூர தாண்டவங்களும்,
அதனின் விளைவால் நிகழ்ந்த
கோரமான சோகங்களும்,
விடியலில் ஆரம்பித்த விபரீதங்களும்,
விபரீதத்தின் விளைவால் எழுந்த
விரக்திகளின் வலியையும்,
விளையாட்டாய் தினமும் வந்து போகும்
அந்த அலைகள் அறியவில்லை.
இன்று அந்த அவல ஓசையையும் அதன்
இறுதி அர்த்தத்தையும் உணர்ந்த
காவலர்களின் கட்டளைக்கு பணிந்து
கண்காணாமல் ஒழிந்திருந்த மக்களின்
கலக்கமும், மனபதட்டமும்
கடற்கரையை காலியாக்கிவிட்ட
சோகம் புரியாமல் மீண்டும் மீண்டும் வந்து
சோர்வில்லாமல் கரையில் மனிதர்களை
தேய்ந்த நிலவொளியிலும்
தேடிப்போனது அந்த கடலலைகள்.
No comments:
Post a Comment