மண்ணை தின்ற கண்ணன்
மடிமீது அமர்ந்த போது,
மலர்ந்த முகத்துடன் அவனை
கடுஞ்சொல் கூறாது அன்போடு
கட்டியணைத்துக் கொண்ட
அம்மா,
கோபியர் கோள்கள் பலகூற,
கோபப்படாது சாந்தமாக பதிலுரைத்தபின்,
கோபாலனை பாசமாக கண்டித்து, உன்
கோபத்தை அன்பில் கரையவிட்ட
அம்மா,
கண்ணனை வளர்ப்பதில் பொழுதோடு உன்
கருத்தனைத்தையும் மொத்தமாக செலவிட்டு
நீ இந்த மண்ணில் பிறந்ததே உன் மைந்தன்
கண்ணனுக்காகத்தான் என்று மெய்பித்த
அம்மா!
உன் மகன் விழிசிவந்து
அழப்போகும் தருணத்தில்
அனைவரும் வியக்கும் வண்ணம் உன்,
புன்னகையால் அவன் இதழ்களிலும்,
மென்னகையை தவழ விட்ட தாயே!
யசோதை தாயே!
காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
கண்மணித் தாயை உன்னில் நான்
காண்கிறேன்!
தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்
எனக்காக, உன்,
மடிமீது தலைவைத்து,
மன சாந்தி நானடைய
உன் கண்ணனோடு
ஓரிடம் எனக்கும்
ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!