Friday, November 28, 2025

கவிதைகளின் தொகுப்பு

சித்திரை திருநாள் சிறப்பான திருநாள். 


பள்ளி விடுமுறை 
நாட்களோடு, 
பகலவன் வெருட்டிய 
வெப்பங்களோடு, 
சைக்கிள் வட்டங்களை 
உருட்டியோட்டி கை கால்கள் 
சலித்துப் போனோம்.

அந்த வெப்பமதின் 
தாக்கத்தை தணிக்க, 
ஆண்டவனை தாங்கி நிற்க 
சின்ன மரச்சட்டங்களை 
ஒருங்கிணைந்து
சத்தமில்லாது அழகுத் தேராக்கி,
சடுதியில் இழுத்து வந்து
கோவில் வாசலோடு 
நிலை சேர்த்து, 
இறையருளை வேண்டிடவே, 
அவனருளால் இந்த 
அவனியெங்கும்
அருள் சிறந்து 
நன்மழை பொழிந்து
அமர்த்திடுமே அந்த 
அனலையெல்லாம்.

ஆதலால் சித்திரை மாதத்து 
விழாக்கள் என்றும் 
ஆண்டுகள்தோறும் 
சிறப்பாகிப் போனதிங்கே....! 

சித்திரைத் திருநாளில் 
தேரோடும் வீதியிலே 
விழி மூடும் நேரத்திலே
வாடாமல் வடம் பிடித்து 
இழுத்து வந்து  நிலை சேர்த்த 
அந்நாளைய பெருமைதனை அங்கலாய்த்து தினம்  பேசி
நீங்கள் தளர்ந்திருக்கும் 
இந்நிலை  இன்று  நாங்களறிவோம்..! . 

வயதாகியதில் வரும் 
இயலாமையால், 
இப்போது வாட்டமுடன் 
நீங்கள் அமர்ந்து விட, 
தேரின் பெரும் வடம் பிடித்து 
எங்கள் தேயாத 
இளமைதனை பறைசாற்றி வாலிபராகும் வரங்கள் வேண்டியே நாங்களின்று 
இவ்வடம் பிடித்தோம். 

இளையவர்களின் பலங்கள் இனி புரிந்திடவே, 
இதுவும் ஒரு முயற்சியன்றோ..! 
வயதில் மூத்தோர்  
விட்டு தந்திட்டால், 
வரும் எங்கள் வாழ்வில் 
ஒரு சுழற்சியன்றோ..! 




மகிழ்வின் மூல(தன)ம். 

சின்னஞ்சிறு  வயதெனினும்,
உயரமெனும் சிகரத்தை 
எட்டி விட்ட களிப்பில்,
உன் சிந்தையிலே 
தெரியுது பார் உவகை ...! 

முத்துப்பல் தெரிய நகை புரியும்   
உன் முகத்தினிடை மகிழ்வில்,
உன் மூச்சு காற்றினிலே 
படருது பார் மலர்ச்சி .. ! 

கைத்தூக்கி காட்டிடும்  
வெற்றிச்சின்னம்..! 
கண்களிலே  தெரியுமந்த 
மகிழ்வலைகள்..! 

அத்தனை வடிவத்திற்கும் 
அற்புத காரணம்... !
உன் கள்ளங்கபடமற்ற உள்ளமதினிலே..!
நீ  இட்டு வளர்த்த 
உன்னதமான மூலதனம்..!
உன் சிரிப்பென்ற ஒன்றுதான்...! 

மேற்கண்ட இரு படத்திற்கும் யாரேனும் ஏதேனும் கவிதை எழுதுங்கள் என அவர் பதிவில் அழைத்தவர் நம் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள். இது கடந்த நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். (சரியாக தெரியவில்லை.) இந்த மாதிரி  அழைப்புக்கள் எனக்கு ஒரு வரப்பிரசாதம். உடனே சில நாட்களில் யோசித்து எழுதி விட்டேன். (உடனே கண் இமைக்கும் நேரத்தில் எழுத நான் என்ன ஸ்ரீராம் சகோதரரா..?இல்லையே..! ) ஏனெனில் இது போல் கவிதைகள் புனைய எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். (அதை படிக்கும் எங்களுக்கும் அது (அதுதான் அந்த ஆர்வம்) உண்டாக வேண்டாமா என தயவு செய்து கேட்காதீர்கள்:))   ) ஆனால் அனுப்ப மனம் வரவில்லை. 

நம் கவிதையெல்லாம் ஒரு சிறந்த கவிதையா என்ற யோசனைகள் வளர்ந்து பலமானதில்,என் எழுத்தோடு, அந்தப் படங்களும் டிராப்டில் பல வருடங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டன. அதன்பின் யார் முன்வந்து அவர் தந்த
அப்படங்களுக்கு சிறப்பாக கவிதை எழுதினார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை.(அவர்தான் சொல்ல வேண்டும்.) 

என்னை உங்கள் அப்போதைய பகிர்வான படங்களுக்கு கவிதைகள் எழுத வைத்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் சகோதரரே. 🙏. 


இன்று எ.பியில் ஒரு மரம், பல பறவைகள் படத்திற்கு ஏற்ற கவிதைகளை நம் எ. பி குடும்ப நட்புகள் அனைவரும் சிறப்பாக புனைய, என் மனமும் உடனே எழுத இயலாத ஆதங்கத்தில் ஒரு புழுவாக நெளிந்தது .எப்படியும் ஒரு நாலுவரியாவது எழுதிட வேண்டுமென அது பிடிவாதம் செய்ததில், பல வேலைகளுக்கு நடுவில் அதற்கும் எப்படியோ  மதியத்தில் யோசித்து ஒரு கவிதை எழுதி  விட்டேன்.

இன்றைய மரம் பறவைகளுக்கான என் கவிதை. 

தன்னம்பிக்கை கொள் மர(ன)மே

பிறந்தவுடனே சில காலத்திய

பிணைப்பென்றாலும்

எங்களைப் போன்ற சிறு 

ஜீவன்களாகிய

பறவைகளுக்குத்தான் புரியும்

பந்தமும் பாசமும்  வெறும்

பகட்டானதா, இல்லை
 
பரிகாசமானதாவென்று..! 


பற்றில்லா இலைகள் 

தன் வழக்கமான

பழக்கத்தில் பற்றறுத்து

பாதை மாறிப் போனதந்த 

வருத்தத்தைப் போக்க உன்

வேர்களுக்கு துணையாக

வேறெந்த உறவையும் நாடாது 

உன் வேதனையில் பங்கெடுக்க 

வேண்டி வந்து அமர்ந்துள்ளோம்


வருந்தாதே அன்பு மரமே.!  

உன் மனவலி(மை) கண்டும் 

இங்கு வந்திறங்கி உள்ளோம்.

இலைகள் இல்லாத போதினிலும்

இவைகளின் அன்புக்கு விலை

ஏதுமில்லையென உன்

உள்மனதுக்குள்

சற்று இறுமாப்புக் கொள்...!


கறுத்த மேகங்கள் மனமிறங்கி

மழையும், குளிருமாய் வந்து

விரட்டிடும் விரைசலில், 

விரைவில் துளிர்த்திடும்

பசுந்தளிர்கள். தங்களின் பரிசாக

உன் மேல் தன் பங்களிப்பாக 

பாசப் போர்வையை 

போர்த்தியதும்

பளபளவென மின்னும் உன்

அற்புத அழகை ஆராதனை 

செய்வதற்கு தினந்தினம் 

அப்போதும் நாங்கள்

தப்பாமல் வருவோம்.


அக்கணம் எங்கள் வாழ்வின்

ஆனந்த குடியிருப்பிற்கு

அங்கலாய்ப்புடன் கூடிய 

ஆட்சேபனைகள் ஏதும் 

கூற மாட்டாய்..! மாறாக

அமைதி கொண்டு வரவேற்பாய் 

என்ற ஆனந்தத்தில் இப்போது 

ஆழ்ந்து லயித்துள்ளோம்

நானோ ஒரு தருமி. இருப்பினும், சிறப்பாக அங்கு  கவிதையை செதுக்கியவர்கள் இதையும் படித்து பாண்டிய மன்னனாய் ஒரு நல்ல கருத்தை முன்வைத்தால் பெருமகிழ்ச்சியடைவேன்.

இப்போது பழையது, புதியது என அனைத்தையும் சேர்த்து தொகுத்து இங்கு என் பதிவிலேயே  வெளியிட்டுள்ளேன். 

அனைவரும் வந்து படித்தால் நலம். படித்த பின் கவிதைகளுக்கு ஒரு நல்ல கருத்துரை தந்தால், அது என் எழுத்துக்கும் ஒரு நல்ல பலம். 🙏. நன்றி சகோதர சகோதரிகளே..! 🙏. 

Monday, November 24, 2025

 வெந்தய கஞ்சி.

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் இந்த வெந்தயம், உடலுக்கு நலம் தரும் ஒரு அருமையான மருந்தின் வகையையும் சார்ந்தது. 

வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.

நன்றி கூகுள். 


இந்த வெந்தயத்தை ஒரு கால் டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு, நன்கு அலம்பி விட்டு நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் நீரிலேயே சற்று நேரம் ஊற வைக்கவும். 



அத்துடன் கால் டம்ளர் பாசி பருப்பும், அதை அளவு பச்சரியும் எடுத்து கொண்டு இவ்விரண்டையும் நன்கு அலம்பிய பின், ஊற வைத்த வெந்தய கலவையையும் போட்டு குக்கரில் பா. பருப்புக்கும் அரிசிக்குமாக சேர்த்து ஒரு ஒன்றரை, அல்லது, இரண்டு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து வைத்து நன்கு நாலைந்து விசில் வரும் வரை வைக்கவும். 



குக்கர் விசில் விட்டு ஓ.கே என்று சொன்னவுடன் குக்கரில் வேக வைத்த இந்த மூன்றையும் எடுத்து நன்கு மசித்து எடுத்த படம் முதலாவது. இத்துடன் தேவையான அளவு நீர் சேர்த்து, மறுபடியும் குழைவாக இருக்க வேண்டி அடுப்பில் சிம்மில் வைத்து அடிப் பிடிக்காமல், பத்து நிமிடம் வரை கிளறவும். (படம் இரண்டாவது.) 
பிறகு அத்துடன் தேவையான வெல்லம் (சிலருக்கு வெல்லம் கொஞ்சம் அதிகமாக இருந்தால், பிடிககும். சிலர் குறைவாகவே சேர்த்து கொள்வார்கள். ஆயினும் அதிக வெல்லம் சேர்த்தால் அதன் பெயர் கஞ்சி என்பதிலிருந்து மாறி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 


வெல்ல வாசனை போனதும். (வெல்லம் நன்கு கரைந்ததும் வெல்லத்தின் பச்சை வாசனை அகன்று விடும். அதுதான் வெல்ல வாசனை போகும் பக்குவம். ) (ஆனால், வெல்லத்தில் கற்கள் மற்றும் அசத்தங்கள் இருந்தால்,   (இதை நாம் பார்த்தவுடனே தெரிந்து விடும்.) வெல்லத்தை கொஞ்சமாக நீர் சேர்த்து சுட வைத்த பின் அது நன்றாக கரைந்ததும் வடிகட்டி அந்த வெந்தய அரிசி, பருப்பு கலவையில் கலந்தும் விடலாம். இதுதான் ஒரு  சிறந்த முறை. சமயத்தில் வெல்லம் நன்றாக இருந்தால், இந்த வடிகட்டலுக்கு தேவையிராது.) அந்த பச்சை வாசனை போனதும், இரண்டு டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து  விடவும். 


பால் சேர்த்த பின் நன்கு ஒரு கொதி வந்ததும், ஏலக்காய் பொடி (தேவைபட்டால்)  சேர்க்கவும். ஆயினும் ஏலம் சேராத அந்த வெந்தய ருசி மாறாது  அப்படியே பருகலாம். 


பாலோடு சேர்ந்து கொதித்த இந்த கஞ்சியை சற்று சூடாகவே குடிக்கலாம். சூடு ஆறிய பின்னும் அருந்தலாம். அது இன்னமும்  சுவையாக இருக்கும். வெல்லம் வேண்டாம் என்பவர்கள் வெல்லத்தை தவிர்த்து வெறும் பால் மட்டும் சேர்த்து குடிக்கலாம். அவரவர் விருப்பம். 

இந்த கஞ்சி உடல் சூட்டிற்கு, வாய் புண், வயிற்றுப் புண் போன்றவைக்கும் மிக சிறந்தது. ஒரிரு நாட்கள் விட்டு விட்டு இவ்விதம் அருந்தி வந்தால், வாயில், அல்லது நாக்கில் உடல் சூட்டினால் உண்டாகும் இந்தப்புண்களின் நோவிலிருந்து விடுபடலாம். என் அனுபவத்தில் இது ஒரு கை கண்ட மருந்து.

இரு நாட்களுக்கு முன் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பதிவில் பல பாயாசங்களின் பதிவை கண்டதும், நானும் இதை பல மாதங்களுக்கு முன்  படங்களுடன் தொகுத்து, எழுதி வைத்ததை ஒதுக்கி வைத்து விட்ட நினைவு வந்தது. உடனே தேடி எடுத்து பகிரலாமென பகிரகிறேன். கூடவே நீண்ட நாட்களாக பதிவுகளை போடாதினால், பதிவுகளை போடவும் மறந்துவிடுமென தோன்றியதால் இந்த உடனடி முடிவு. இதைப் படிப்பவர்களுக்கு, என் அன்பான நன்றிகள். 🙏. 

Friday, August 15, 2025

நாங்களே எங்களைப் பற்றி...!

 முருகா.. முத்துக்குமரா.. வேலவா... 

இந்த வருடம் ஆடி மாதத்தில் மிகவும் விஷேடமாக இரண்டு கிருத்திகை நட்சத்திரம் வந்திருக்கிறது இரண்டிலுமே முருகப்பெருமானின் கோவில்களில் பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை, காவடிகள் எடுப்பதென பூஜைகள் செய்து, விரதமிருந்து  கொண்டாடி வருகின்றனர்.ஒரு சில பிரபல  கோவில்களில் மாதத்தின் முதலில் வந்த கிருத்திகையன்றும், சில பிரபல கோவில்களில் நாளையும் என பக்தர்கள் பக்தியுடன் முருகனை போற்றித் துதித்து  கொண்டாடுகின்றனர். 

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரமே நம் முருகனுக்கு உகந்த நாள் என்றால், ஆடி மாதமும், தை மாதமும் வரும் கிருத்திகை மிகச்சிறந்தது என அனைவரும் அறிந்ததே..! தமிழ் வருட முதலில் வரும் ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை தட்சிணாயண புண்யகாலத்தில் வருகிறதென்றால் மற்றொன்று தைக்கிருத்திகை உத்திராயண புண்யகாலத்தில் தை மாதத்தில் வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. 

சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முருகப் பெருமானை வளர்த்தெடுத்ததால் சிவ பெருமான் இவர்கள் ஆறு பேரையும் சிறப்பிக்கும் விதமாக அவர்களை கார்த்திகை நட்சத்திரமாகவும், அன்றைய நாள் முருகனுக்குரிய விரதமாக போற்றப்படவும் வரமளித்தார். அதனால் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை வேண்டிய விரதம் இருந்தால் கார்த்திகை பெண்களின் அருளாளும், முருகப் பெருமானின் அருளாளும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஆறுமுகமும், அழகிய விழிகளும், நீண்ட புருவமும், நீறிடும் நெற்றியும், பன்னிரு கண்களும், பரந்த தோள்களும், பவளச் செவ்வாயும் பார்த்தால், பார்த்த உங்களின் பார்வையை அகற்றத் தோன்றாமல், இருக்கச் செய்யும் முருகப் பெருமானாகிய நான். ..! 
முருகன் என்றால் அழகன் என்ற மறு சொல்லும் எனக்குண்டு. அந்த அழகில் மயங்கி என்னை நாடி வரும் உங்களை நிலைத் தடுமாறி விடாமல் அணைத்துக் கொள்வதே என் தந்தை, தாய், நான் தோன்றிய நாள் தொட்டு எனக்கிட்ட கட்டளை. அதன்படி நான் நித்தமும் செயலாற்றி வருகிறேன். 


எங்கள் இறைவனின் கையிலிருக்கும் வீரம் மிகும் வேலும் மயிலாகிய நாங்களும் உங்களுக்கு என்றுமே துணையென  இருப்போம். வாருங்கள்..! அந்த கந்த வேளின், அவர் கையில் நிரந்திர வாசம் செய்யும் வேலோடு தரிசனம் பெறலாம். அதற்காகத்தான்,  இந்த வரவேற்புக்காகத்தான் கோவிலின் வாசலிலேயே நாங்கள் தினமும்  காத்திருக்கிறோம். 


இதோ..! கோவிலுக்கு முன்பாக முகஸ்துதி கூறி, வரவேற்ற என் தம்பியின் வாகனமான  மயில்களை கடந்து பல படிகள் ஏறி  வந்ததும் நான்தான் பஞ்சமுக கணபதி என்ற பெயருடன் இங்கே குடிக் கொண்டுள்ளேன். என் தம்பி கந்தனுக்கு நான் எப்போதுமே ஒரு பக்கபலம். அவனை நாடி, தேடி வரும் பக்தர்கள் என்னைத்தான் முதலில் வழிபட வேண்டுமென்பது அவன் விருப்பம். அவன் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாதபடிக்கு என்னை அவனது  அன்பினால் கட்டி வைத்திருக்கும் ஆசைமிகும் தம்பி அவன். அவனுக்காக இங்கு நான்தான் முதலில் அமர்ந்துள்ளேன். 


என்னை நீங்கள் மதித்தாலும் சரி, மிதித்தாலும் சரி, அதைக்குறித்து சற்றும் கவலைப்படாமல், சந்தோஷமாகவே உங்களை எங்களின் தெய்வமான முருகனிடம் கொண்டு சேர்த்து  அவனருளை நீங்கள் பெற உதவுவேன் அதற்கெனவே அமைக்கப்பட்ட நான் இப்பிறவியில் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ..! "எனக் கூறும் அழகான படிக்கட்டுகள் நாங்கள். 

ஆனால் ஒன்று "படியாக நான் மாற வேண்டும். மெய்யடியார்கள் திருப்பாதம் முத்தாட வேண்டும்." என்ற பாடலின்படி என்றும் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும்,இப்படி படிகளாக மட்டும் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்." 


உங்களுக்கு படியேற உதவிய நாங்கள் மலையில் குடிகொண்டிருக்கும் என்னப்பன் முருகனை சந்தித்து அவரை தரிசித்த மகிழ்வோடும், நிம்மதியுடனும், இறங்கி வரவும், (உங்களை இறக்கி விடவும்) என்றென்றும் உதவியாக இருக்கிறோம். 

எனக்கு காவலாக எப்போதும் என் நலனுக்காக என்னுடனே இருக்கும் என் அண்ணனுக்காக மலை மேலேயும் அவர் அமர்ந்து  கொண்டிருக்கும் சன்னதியின் விமானம் இது..! 


ஐயனும் அம்மையும் என்றுமே என்னருகில்தான். தந்தையின் துணையுடன், தாயின் அரவணைப்புடன் இங்கு எப்போதுமே என் ராஜ்ஜியம். 


கொடிய அசுரர்களை அழிக்க எனக்கு வேல்  வழங்கி, ஆசிர்வதித்த எங்கள் தாயின் ஆயுதமான சூலமும், அதனுடன் இணைந்து, தந்தையின் கையில் இணை பிரியாது அமர்ந்திருக்கும் உடுக்கையையும் கொண்டு, அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் சேர்ந்து செய்து அமைக்கப்பட்டதால், இது இந்த கோவிலையே அழகுறச் செய்து பெருமிதப்படுத்துகிறது. 


இது தந்தை, தாயின் அடையாளம். "வேலுண்டு வினையில்லை" என என்னை நீங்கள் குறிப்பிடுவது போல், "சூலமும், உடுக்கையும்" , அவர்களின் கையிலிருக்கும் வரப்பிரசாதங்கள். அவர்களை பக்திப் பா(பரவ)சத்தோடு வழிபடும் போது, உங்கள் முற்பிறவியின் சூழ்நிலைகளால்,  உங்களுக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும் இந்த "உடுக்கை" அடித்து நொறுக்கி, விலக்கி வைக்கும். உங்கள் தீவினைகளை குறித்தந்த பயங்களை அந்த "சூலமும்" அச்சமின்றி போகுமாறு அகற்றி அப்புறபடுத்தும். அதைக் குறிப்பிட வேண்டியே அவர்கள் இந்த ஆயுதங்களை கையிலேந்தி உங்களை அன்போடு காத்து வருகிறார்கள். 


இது தந்தை, தாயின் இருப்பிடம்/ வசிப்பிடம். முதலில் மலையேறும் போதே கீழே அண்ணனை தரிசித்த கையோடு, பிறகு படியேறி அப்பா, அம்மாவை கண்டு மகிழ்ந்து பிறகு என்னைப் பார்க்க வருவதுதானே முறை. என்ன சொல்கிறீர்கள்.? 


இமயமலையைப்  போன்ற அமைப்போடு பக்தர்கள் உருவாக்கி தந்திருக்கும் இந்த இடத்தை காணும் போது எங்கள் தாய் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். 
 

கொஞ்சம் என் இருப்பிடத்தை சுற்றியுள்ள இயற்கையையும் உங்கள் ரசனைப்படி ரசித்து விட்டும் வரலாம். 


இதோ..! மலை மேலேயும் என்னருகில் அண்ணன் கணேசன் ஆசையுடன் குடி கொண்டுள்ள இடம். அவரை காணாது அப்படியே என்னிடம் வருவதற்கு நானும் விரும்ப மாட்டேன். எனவே அவரை பிரியத்துடன் வணங்கி பின் அவர் ஆசைப்படி அவர் சன்னதியை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு மேலே வாருங்கள். 


"என் அண்ணன் இல்லாமல் நானா? எங்கும் எத்திசையிலும், எத்தனை விதமான வடிவங்களுடன் அவர் என்னைச் சுற்றிலும் தெரியுமா?" என்ற சந்தோஷமும் எப்போதும் எனக்குண்டு. 


எத்தனை விதமான வடிவங்களில் அவர். "பிடித்து வைப்பதெல்லாம் பிள்ளையார்" என்ற சொல்லுக்கு ஏற்றபடி அவர்  பக்தர்களின் கைவண்ணங்களினால் விதவிதமான வடிவெடுத்தபடி என்னருகில் அமர்ந்திருக்கிறார். 


எத்தனை முறை சுற்றி வந்தாலும், எந்த வடிவத்திலும் அவரைக்காண வரும் பக்தர்கள் சலித்துக் கொள்வதில்லை. என்பது நிஜம். என்னைச் சுற்றிலும் அவர்தான் ஆர்வத்தோடு, அங்கிங்கெனாதபடி ஆக்கிரமித்திருக்கிறார். 


சற்று மேலே அண்ணாந்து பார்த்தால், இதோ..! என் ஆறுபடை ஸ்தலங்கள் அழகாக வரையப்பட்ட  உருவங்களோடு ஒன்றிணைந்த  ஓவியங்கள்


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


மலை மேலேறி, கோவிலின் பல இடங்களை சுற்றியப் பின்னர் என் கருவறை தரிசனமும் உங்களுக்கு இல்லாமலா?  வள்ளி, தெய்வானையின் ஆசிகளோடு என் பரிபூரண ஆசிகளும் என்றும் உங்களுக்காக....!


இக்கோவிலை குறித்த தரிசன பகிர்வு முருகன் அருளால், இன்று என் பதிவில் வடிவுகொண்டு வந்தமை(வந்தமர்)ந்ததும் நிச்சயமாக ஒரு தெய்வ சங்கல்பந்தான்.  இப்பதிவின் மூலம் அனைவருக்கும் ஆடிக்கிருத்திகை முருகனின் தரிசனமும் பரிபூரணமாக கிடைத்திருக்குமெனவும் "அவனருளால்"நம்புகிறேன்.🙏. 

அண்ணனோடு என்றும் உறைபவா சரணம்.🙌. 
முருகா சரணம். 🙌
முக்கண் மைந்தா சரணம்.🙌
உமையவள் குமரா சரணம்.🙌
கார்த்திகை பாலா சரணம்.🙌
சரணம். சரணம். சரணமப்பா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, July 18, 2025

ஆசைகளின் கோர முகங்கள்.

இது இலக்கணத்துடன் இயைந்து வந்த மரபு கவிதை அல்ல.!!!! மாறாக மனதில் சிலகணத்தில் பிறந்து வந்த புதுக்கவிதை. பிடிப்பதில்லையென ஒதுக்(ங்)குவதை விட படித்தால் புரியும் இதன் பாதை. எனவே படிக்கும் உள்ளங்களுக்கு என் பணிவான.🙏. 

தோல்வி கண்டு துவள வேண்டாம்...! 

தோல்வியே வெற்றிக்கு

தோதான முதற்படியென

தோழமைகள்  பரிந்துரைகள் தந்தபடி

தோளணைத்து கூறினாலும், 

தோல்வி கண்ட மனம் 

வேதனைகள் பலவோடு

துவண்டுதான் போகிறது. 


முன்னூறு நாட்கள், சுமந்தெடுந்து 

முழு நிலவெனவே பெற்ற மகள்

போட்டியின் இறுதி நாட்களுக்குள்

போராடி வெல்ல வேண்டுமென்ற

என்  ஆசையின் உன்மத்தம் கண்டு 

தன் ஆ(மா)றாத அன்பை, ஒரு

சேயின் கடமையாக்கி தான் 

சேர்த்த கைப்பணத்திலிருந்து  

இரு முன்னூற்று பணம் எடுத்தீந்து 

அவசர அஞ்சலில், அவசரமாக 

வெளியிட்டும், அது வெளியீடுகளில் 

வெளிவராது போன காரணத்தால், 

தோல்வி கண்ட மனம் வேதனையில்

துவண்டுதான் போயிற்று. 


எழுத்துலகில் இதுவரை எழுச்சியுடன்

பெற்ற வெற்றிகளே போதுமென்று

பேசாமலிருக்கத் தெரியாத இந்த 

பேதையவள் மனதில் மட்டுமின்றி 

இரு விழிகளில் இருந்தும், 

பெருமழையொன்று  பெருகிப்

பெய்ததைக் கண்டு  சிறிதும் அந்த 

"கலைமகளும்" கலங்கவில்லை. 

அலைமகளும் அறியவில்லை.

மலைமகளும் உணரவில்லை. 

நிலமகளும் நிச்சலனமின்றி எனை

நீண்ட  பொழுதாகிய இரவுதோறும்

நித்திரையும் கொள்ள விடவில்லை.


இத்தனைக்கும் காரணம் நம்

இச்சையென்ற ஆசைப் பேய்தான். 

இனியேனும், இச்சைக் கொண்டு

அதனின் கோர பிடி(முகங்)களில்

அகப்படாது தப்பிக்க ஓர் வழியை

அருளி  ரட்சித்திடு இறைவா..!🙏. 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பின்வரும் இந்தக்கதை நான்  எப்போதும் போலில்லாமல், வார்த்தைகளை அளவோடு அளந்து வைத்து எழுதிய கதை. எழுதிய அளவில் எந்தவித குற்றமும் இல்லை. ஆனால், என் துரதிர்ஷ்டம் காரணமாக அதிர்ஷ்டகாற்றும், தன் அளவை குறைத்து என் பக்கம் வீசாமல் போனது யார் செய்த குற்றம் என யோசித்ததில், என் மனம் கதையோடு மேலே உள்ள இந்த ஒரு கவிதையையும், சேர்த்து வடித்து தந்துள்ளது. 

இனி என் மனதில் எழுந்த இந்த கவிதைக்கா(க)ன, (கவிதையை காண) காத்திருந்த கதை. 

                   பந்து

வீட்டின் நடுவில் இருந்த அந்தக்கூடம் கலகலப்பாக சந்தோஷமாக இருந்தது.  

அண்ணா..! நான்தான் உன்னிடம் முதலில் உருட்டி விட்டேன். எனக்குத்தான் நீ மறுபடி போட வேண்டும்.." 

"இல்லையில்லை...! வரிசையாகத்தான் வரும். ரமணி பாவம்..! அவனுக்கு ஒரு தடவை கூட பந்தை நாம் இன்னமும் தரவேயில்லை...! பார்..! அண்ணன் பாலுவின் அன்பில் விழியால் கசிந்தான் ரமணி.

"இப்படியெல்லாம் விளையாடினா இது தப்பாட்டம்.. " நண்பனுக்கு ஆதரவாய் விச்சு கூறினான்

"நாங்க அப்படித்தான் விளையாடுவோம். இல்லையா சுசி.." சித்தப்பா மகன் சுரேஷ் செல்லமாக கோபித்து கொண்டான்.   

அங்கே ஒரு பெரிய பந்துவை உருட்டி விளையாடும் யுத்தமொன்று நடந்து கொண்டிருந்தது. அந்த கூடத்து அறையில் குழந்தைகளை வெய்யிலில், வெளியே செல்ல தடை போட்டு, வீட்டினுள்ளேயே விளையாட சொல்லி விட்டு, சமையலறை,மற்றும் கிணற்றுடன் அமைந்த பின்கட்டு புறக்கடையென வீட்டில் உள்ளவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் சுமூகமாக அரங்கேறி கொண்டிருந்தன.

பாட்டி, தாத்தாவுடன் அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி என கூட்டு குடும்பங்களாக சேர்ந்திருந்த வரை இந்த கூடம் பெற்ற சந்தோஷங்களை நான் மட்டுந்தான் அறிவேன். காலப்போக்கில் அவர்களை விட்டு விலகிய மனச் சோர்வை அந்த வீடு மட்டுமின்றி, அந்த கூடமும் நிறைய அடைந்ததென்னவோ உண்மையென அவர்கள் ஒவ்வொருவரின் இழப்பும் எனக்கு உணர்த்தியது. 

இதற்கு நடுவில், தங்கை சுசி, நல்லபடியாக கல்யாணமாகி போனதோடு, அவள் கணவர், வீடு என்ற தனிப்பட்ட சொந்தத்தில் இந்த வீட்டை நாளாவட்டத்தில் கொஞ்சம் மறந்தே போனாள் எனவும் சொல்லலாம். 

தம்பி ரமணா, அவனும் அலுவலக வேலையாய் வேற்றூருக்கு பிரிந்து போனான். "அவன் குடும்பம் என் குடும்பத்துடன் மனமொத்து வர மறுக்கிறதென்பதை" வாரந்தோறும் ஒரு வருத்தமாக ஆரம்பத்திலெல்லாம் கடிதாசியில் கொட்டித் தீர்த்தான்.

என் மனைவி மங்களத்தை குற்றம் சொல்லவே முடியாது. எங்களுக்கு திருமணமானதிலிருந்து கூட்டுக்குடும்பம் ஏற்படுத்திய பக்குவத்தில், அனுசரித்து வாழப் பழகி போயிருந்தாள். ஆனால், எல்லோருக்கும் அதே திறமைகள், பக்குவமான பரந்த மனதுகளென அமைய வேண்டும் என்பதில்லையே..!

காலங்களின் விரைசல்களில். வாழ்வனைத்தும் கண்ணாமூச்சி விளையாட்டைப் போல ஒளிந்தும், மறைந்தும் போயின. அப்படி மறைந்து போனவைகளில் என் மனைவி மங்களமும் துரதிர்ஷ்டவசமாக இணைந்து போனாள். இத்தனை வயதிற்கு நானும், இந்த கூடமும் மட்டும் இப்படி நிலையாய் நிலைத்து நிற்போமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 

எங்கள் ஒரே மகனும், கற்ற படிப்பு பெற்று தந்த தகுந்த உத்தியோகத்தில் வெளிநாட்டில் வாசம் செய்ய போனவன்தான்...! அத்தோடு நானும், அவன் மகனான என் பேரக் குழந்தையாடு கொஞ்சி குலாவி வாசம் செய்ய கொடுப்பினைகள் இல்லாதவனாகிப் போனேன். தனிமையில் தவிக்கும் என் நலம் விசாரிப்புக்காக வாங்கித் தந்த கைப்பேசியில் அவ்வப்போது அழைப்பான். "அது ஒப்புக்காக பேசுவதற்காக" என்றுதான் எனக்கு தோன்றும்.  

என் தாத்தா கட்டிய வீட்டிற்கும், அவரின் அன்பினால் வளர்ந்து திரிந்த இந்த ஊருக்கும் என்னை விட்டு பிரிய மனமில்லை. அதுதான் தனியாளாக நின்ற போதும், பழைய வீட்டில் வாசம் செய்த நினைவுகளே என் நிரந்திர சுவாசமாயின. 

இப்போது ஆளரவமின்றி சந்தடியில்லாத அந்த கூடமும் அதன் வெறுமையை பொறுமையாய் சகித்து கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றியது. 

கைப்பேசி அழைத்தது. வழக்கப்படி நலம் விசாரிக்க மகன்தான் அழைப்பான் என்ற எண்ணத்தில் சுவாரஸ்யமின்றி எடுத்தேன்.

"அப்பா.. எப்படியிருக்கிறீர்கள்.? இந்த தடவை உங்கள் தனிமையை போக்க நாங்களே அங்கு வருகிறோம்." என்றான் எடுத்த எடுப்பிலேயே....! 

குரலில் வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் அதிகமாக தொனித்தது.

"சரி....! சரி..! எப்போது? என்றேன். என் குரலின் சுரத்தின்மையை உணர்ந்தவன் போல்," கூடிய விரைவில் அப்பா..! அத்தோடு நீங்களே எதிர்பாராத ஒன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரப்போவதொன்று நடக்கவும் போகிறது. காத்திருங்கள்...! வருகிறேன் அப்பா..! என்றவன் வேறேதும் பேசாது, தொடர்பை துண்டித்து விட்டான். 

அப்படியென்ன எனக்கு மகிழ்வு தரப்போகும் விஷயத்தை இவன் தரப் போகிறான்.. ? வேலை கிடைத்ததும், தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு என் பேச்சை மீறி,பணம், கௌரவமென வெளி நாட்டு வேலையை ஏற்று சென்ற போதே என் மனதையோ, மகிழ்ச்சியையோ பற்றி மதிக்காமல் சென்றவன்தானே..! 

என் மகிழ்ச்சிகளின் வேர்களைதான் ஆழமுடன் நேசித்த உறவுகளான இவர்கள் வெட்டியெறிந்து விட்டுப் போய் ஆண்டுகள் பலவாகி விட்டனவே..! இனி வந்து எவ்வளவு பேசி சென்றாலும், அவை பசுமை கொண்டு துளிர்த்துத்தான் விடுமா என்ன..? 

நாட்கள் நகர்ந்ததில், சொன்னபடி வந்தது அவன் மட்டுமல்ல..! என் தம்பி ரமணாவும், அவன் மனைவியும், அவர்களின் பத்து வயது பேரனும். ரமணாவை பார்த்ததும், பழைய நினைவுகள், உடைப்பெடுக்க ஆரம்பித்தன

" அப்பா..! இனி நாங்கள் இங்குதான், இந்த வீட்டில்தான், உங்களுடன் நிரந்தரமாக வாழப்போகிறோம். எங்களின் ஏற்பாட்டின்படி சித்தப்பா தங்கியிருந்த ஊருக்கு நேற்றே நாங்கள் வந்தடைந்தோம். . நேற்றெல்லாம், உங்களைப் பற்றித்தான் சித்தப்பா நிறைய பேசிக் கொண்டிருந்தார். 

என் தம்பி மணியும், அதான், நம் சித்தப்பாவின் பையன்.... தன் வேலையையும் இவ்வூருக்கு மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் ஒரு மாதத்தில் இங்கு வந்து விடுவான். அதுதான் அவன் பையனையும் இப்போதே எங்களுடனேயே அழைத்து வந்து விட்டோம். நானும் இங்கேயே என் படிப்புகேற்றபடி, ஒரு வேலையை தேடிக் கொள்ளப் போகிறேன். இங்கே நம் பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி இனி ஒன்றாக படித்து வளரட்டும் அப்பா..! இதோ...! பார்த்தீர்களா உங்கள் பேரன் மகேஷை...! " 

அவன் பேச, பேச ஆச்சரியங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அழுத்தி இனம் புரியாத சிறு ஆனந்தத்தை என் மனதில் துளிர விடச் செய்ததென்னவோ உண்மைதான். .! எளிதில் கரைந்து விடக் கூடாதென்று இருந்த "மனமென்ற வைராக்கிய மலை" உளிகள் ஏதுமின்றி என்னுள் உடைய துவங்கின. 

ரமணா அருகில் வந்து கண்களில் நீர் வடிய" இத்தனை வருடங்களாக உன்னுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாததற்கு என்னை மன்னித்து விடு அண்ணா" என்று கூறியபடி என்னை அணைத்துக் கொண்டான். உடன் பிறந்து, ஒன்றாக வளர்ந்த பாசம் வென்று கலங்கிய கண்களை மறைக்க, அவன் தழுவலில் சங்கமித்தேன். 

அவன் மனைவி தன் கைகளை கூப்பியபடி," என்னையும், மன்னித்து விடுங்கள் அண்ணா..! இது நாள் வரை உங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பை புரிந்து கொள்ளாத அரக்கியாக இருந்து விட்டேன். நீங்கள் இப்போது மன்னித்து எங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக நினைத்து மீதி நாட்களை கழிக்க முடியும்..மன்னிப்பீர்களா? " என குமுறிய போது, வழக்கமாகவே இரக்கப்பட்ட மனது கரைந்து அவளின் தவறுகளை மறக்கத் தூண்டியது. 

இதுவரை என்னைப் பார்த்தறியாமல், இப்போது என்னையே பார்த்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனான மகேஷை, "அருகில் வா" வென கூறி, அவனை தழுவிய போது நான் மறுபடி புதிதாக பிறந்த ஒரு சந்தோஷத்தையும் அடைந்தேன்.

"மகேஷ் என் செல்வமே...! எப்படி இருக்கிறாயப்பா..? என் குரல் உடைத்துக் கொண்டு வெளியேறியது." தமிழில் நான் பேசினால் உனக்குப் புரியுமா..?" என்ற என் சந்தேகத்தை கேட்கும் முன், நல்ல தமிழில், "தாத்தா..! இனி என் பெயர் மகேஷ் இல்லை....! பாலு... இது உங்கள் பெயர்தானே தாத்தா..! தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்க வேண்டுமாம்.. இதுதானே நம் குடும்பத்தின் பழக்கம்..? என்றபடி என் காதில் தேனைப் பாய்ச்சினான். 

"நான் தமிழ் நல்லா பேசுவேன் தாத்தா..! பேசுறேனா ..? என அவன் லேசாக முறுவலித்து கண் சிமிட்டிய போது, அவனில் என் பழைய சிறு வயது பாலுவை கண்டேன். 

" அம்மாவிடம் கத்துக்கிட்டேன். எனக்கு உங்களுடன் இருக்கத்தான் ஆசை. அதான் அப்பாவை வறுப்புறுத்தி  இங்கேயே வந்து விட்டோம். இனிமே இங்கேதான் நான் படிக்கப் போறேன். பிறகு பெரியவன் ஆனாலும், நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன் தாத்தா..!" தெளிவாக பேசி என்னை வாய் விட்டு அழ வைத்தான் மகேஷ். இல்லையில்லை... அந்த குட்டி பாலு....!

இளைய தலைமுறைகள் ஒரு அற்ப சுவை காண திசை மாறி பயணித்தாலும், அவர்களிடையே தேங்கியிருக்கும் மாறாதந்த பந்தபாசங்கள், கயிற்றால் தன்னைத்தானே பிணைத்துக் கொண்டு, பழைய பாரம்பரிய சுகங்களை பெற என் வீட்டின் வாசலை வந்தடைந்ததில், மனம் நிறைந்த நன்றியுடன் மருமகளை பார்த்தேன். அவள் முகத்தில் "என் மங்களத்தின்" அனுசரிக்கும் சாயல் தெரிந்தது. 

சந்தோஷத்தில் மகன், பேரன்கள், தம்பி குடும்பமென வீடு பழைய கலகலப்பை பெற்ற போது பால்ய நண்பன் விச்சுவும், அவன் மகள், மருமகன், குழந்தைகள் என குடும்ப சகிதமாக, மீண்டும் அவ்வூருக்கே குடி வந்து என்னை முழுமையான ஆனந்தத்தில் ஆழ்த்தினான். ஆனால், என் மனதின் ஒரு ஓரம், மங்களத்தின் பிரிவை எண்ணி வருத்தப்பட்டது. "அவள் இருந்திருந்தால் இப்போது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்.." என்பதை நினைக்காமல் இருக்க இயலவில்லை. 

" தாத்தா..! இதை வைத்துக் கொண்டு நாம் விளையாடலாமா.. ? என்றபடி ஒரு பெரிய பந்தை காலால் உருட்டியபடி வந்தான் மகேஷ். 

ஓ.. ....! என்றபடி நான் மகிழ்வானதை கண்டதும்," தாத்தா..! இந்த பந்து மாதிரிதானே நம் வாழ்க்கையும்....! இந்தக்கூடத்தில் உருட்டி உதைத்து விட்டால் எதிர் திசை நோக்கி ஓடுமே தவிர சுவரில் மோதி, இல்லை, நம்முடன் விளையாடும் மற்றொருவரின் உருட்டலுக்கு கட்டுப்பட்டு நம்மிடமே வந்து விடும் இல்லையா..? இப்போ நான் உங்களிடம் வந்து சேர்ந்த மாதிரி....! ஆனால், இப்பந்தை இப்படித்தான் ஆட வேண்டுமென்ற விதிமுறைகளை மாற்றினால், பந்தின் தன்மை தவறாக மாறி விடுமல்லையா தாத்தா... ?" 

நான் நெக்குருகி போனேன்.

"வயதுக்கு மீறிய எத்தனை அறிவாற்றலடா உனக்கு..!" மனது பெருமிதத்தில் விம்மியது." 

"உன்னைப் பேரனாக நான் இப்படி பார்க்க வேண்டித்தான், திடமான இந்த வீட்டையும், என்னையும், என் தாத்தா நல்ல சிரத்தையுடன் உருவாக்கி, என் மனமதையும் சிறப்பானதாக செதுக்கி வைத்திருக்கிறார் போலும்..! அதற்கேற்றபடி உடலுக்கு போதுமான வலுவையும் அந்த ஆண்டவன் தந்து விட்டான்.... எல்லாம் அந்த இறைவனின் கட்டளையப்பா...!" கண்கள் குளமாக குனிந்து அவன் கன்னத்தில் பாசமுடன் முத்தமிட்டபடி அவனை கொஞ்சி விட்டு நிமிர்ந்தேன் . 

அப்போது வெளியில் காலாற சென்று விட்டு திரும்பி வந்த தம்பி ரமணா, விச்சு இருவரையும், அன்போடு அவர்களின் கைப்பிடித்து வரவேற்றேன். என் மகனும், தம்பி மகனும் உள்ளிருந்து வந்து அவர்களிடம் அன்புடன் பேசவாரம்பித்தனர். அன்பிற்கு அடைக்குந்தாழ் என்ற ஒன்று என்றுமில்லையென என் உள்ளம் உறுதியுடன் கூறியது. 

சமையல் அறையிலிருந்து வந்த உணவின் நறுமணங்கள் எங்களின் பசியை தூண்டவே, "சாப்பிட வாருங்கள் அப்பா..!" என்ற மருமகள்களின் அன்புக்கு கட்டுப்பட்டு சமையல் அறைக்குள் சென்றோம். 

எங்கள் பேரன்கள், நண்பனின் பேரன் பேத்திகள் என அந்தக்கூடமும் முக மலர்வுடன் பழையபடி பந்தாட்டத்திற்கு தயாரானது. பல பல வருடங்களுக்குப் பிறகு அந்த கலகலப்பு அதனிடமும் தொற்றிக் கொண்டதை நான் மகிழ்வான மனதோடு மானசீகமாக உணர்ந்தேன். 

கதை நிறைவுற்றது. 


இதை அன்றே எழுதி வைத்து விட்டேனே தவிர நம் சொந்தக்கதையையும், சோகப் புலம்பல்களையும் வெளியில் சொல்வானேன் என எதையும் வெளியிட விருப்பமின்றிதான் இருந்தேன். ஆனால், இவ்வார செவ்வாய் கதையில் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் "முன்கதை சுருக்கமான" எழுத்தை கண்டதும், நாமும் நாம் பெற்ற அனுபவத்தை வெளியிடலாமே எனத் தோன்றியது. 

உடனே, சிறு தூவானத்திலும்/ மெலிதான சாரலிலும் கூட பெருமழையின்  நறுமணத்தை நுகர்ந்து பார்க்கவும் சிறு ஆசையும் வந்தது. என்ன இருந்தாலும் மறுபடியும் இந்த  உயிருள்ளவரை "ஆசைப்பேயின்" வசந்தான் சிக்குவோம் என்பதும் யாவரும் உலகறிந்த விஷயந்தானே..! அதன்படி சிக்கி விட்டேன். சிக்கலின் நூலறுபடாமல், சிதைந்து கனத்த மனதின் வலி மறைந்து போகும்படிக்கு கதை குறித்த நல்ல கருத்துக்களை வழக்கம் போல என் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். கவிதையோடு கதையையும் படித்து ரசிக்கும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என்றும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Wednesday, July 9, 2025

மலர்களின் படங்களும், பாடலும்

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

இளமங்கை வாழ்வில்

தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா


காதலின் ராணி

கலை தரும் வாணி

காதலின் ராணி

கலை தரும் வாணி

என் இதய வானில்

இன்ப ராணி, ராணி ராணி மகராணி

ஊரினில் உறவை தேடிடும் நினைவு

பருவ தேரினில் ஆடும்

தெய்வத்தின் கனவு

ஊரினில் உறவை தேடிடும் நினைவு

பருவ தேரினில் ஆடும்

தெய்வத்தின் கனவு

ஆசையின் பாசம்

பேசிடும் உரிமை

தன்மானத்தில் விளையும்

உலகினில் பெருமை

காதலின் ராணி

கலை தரும் வாணி

காதலின் ராணி

பூங்கொடி முகத்தில்

புன்னகை வெள்ளம்

அமுத தமிழிசை பாடும்

கவிதைகள் சொல்லும்

தலைமுறை புகழின்

குல நலம் காப்போம்

ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா

பாரத வீரர் மார்பினில் இணையும்

பாவையின் மனமே கனிபோல் கனியும்

வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்

அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்

மலர்களின் ராஜா

அழகிய ரோஜா. 


இப்பாடலின் வரிகளை படிக்கும் போதே எங்கோ எப்போதோ கேட்டு ரசித்த நினைவு உங்களுக்கும் வருமென நினைக்கிறேன். 

இநதப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்.. வள்ளி தெய்வானை இது 1973 ல் வெளிவந்த திரைப்படமாம்.முக்கிய கதாபாத்திரத்தில் ரவிசந்திரன், பிரமிளா நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் : என். எஸ் தியாகராஜன் பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா இந்தப்பபாடலை எழுதியவர் : தேன்கட்சி பாரதிசாமி. இந்த பாடலுக்கு ஏற்றபடி ஆடிப்பாடி நடித்திருப்பவர்கள் நடிகர் சசிக்குமார், மற்றும் நடிகை எம் பானுமதி. 

எங்கள் வீட்டு மாடியில் இங்கு குடியிருக்கும் ஒருவர் மாடித்தோட்டம் மாதிரி மொட்டைமாடியில் ஒரு பகுதியில் அமைத்திருக்கிறார். அதில் அழகான மலர்கள், காய்கள் எனப் பூத்து காய்த்திருந்தது. எனக்குத்தான் இதைப்பார்த்ததும் புகைப்படங்கள் எடுக்க ஆசை வருமே. அதன்படி அதையெல்லாம் எடுத்ததும் இந்தப்பாடல் (மலர்களின் ராஜா) எப்போதோ சிலோன்  வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்ததுதான். (கருப்பு வெள்ளை படந்தான்) மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உடனே பாடல், மற்றும் இந்தப் படத்தைப் பற்றிய விபரம் அறிய கூகுளில் முயன்றேன். அங்கு கிடைத்ததை பதிவாகவும் பதிந்திருக்கிறேன். இந்தப்பாடலில் இறுதி வரிகள் நம்தேசம் சம்பந்தபட்டதாக வருகிறது. படம் பார்த்தால்,அந்த வரிகளுக்கு என்ன சம்பந்தம் என்பது புரியுமோ என்னவோ..! எனக்கு இந்த பாடல் காட்சிகள் அன்றி பாடலை முழுதாக கேட்க பிடித்திருந்தது. (ஆனாலும், பாடலை காட்சிகளுடன் கீழே பதிவின்  கடைசியில் பகிர்ந்திருக்கிறேன். அனைவரும் கேட்டு ரசிக்கவும்.) அதனால் இங்கு பகிர்கிறேன். நீங்களும் இதை ஏற்கனவே கேட்டிருப்பீர்களோ என்னவோ..! ஒருவேளை நம் ஸ்ரீராம் சகோதரர் கண்டிப்பாக கேட்டு ரசித்ததிருப்பார் என நினைக்(நம்பு)கிறேன். 

இதில் தேசிய கொடிப்படம் மட்டும் கூகுளிலிருந்துதான் (பாடல், அதன் விபரங்களுக்கும் கூகுளுக்கு நன்றி. ) எடுத்தேன் மற்றபடி நான் மொட்டை மாடி தோட்டத்தில் எடுத்த அழகான மலர்களின் (சில படங்கள் என் ரசனைக்கேற்ப ஏற்கனவே என் கைப்பேசியில்  எடுத்ததையும் சேர்த்திருக்கிறேன் . ) படங்களுக்குப் பொருத்தமாக இந்தப் பாடல்  வரிகளை இணைத்து ஒரு புது முயற்சியாக இந்தப்பதிவு.

மலர்களின் ராஜா



அழகிய ரோஜா

  

இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா


காதலின் ராணி
கலை தரும் வாணி


என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி


ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு. 


ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை


தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை


காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி


பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்


தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்


ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்






மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா



பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்



வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்


அதை வென்றிட 
வேண்டும் 
தேசிய கீதம்


மலர்களின் ராஜா
அழகிய ரோஜா



இதோ அந்த அருமையான பாடல். 


என்ன நட்புகளே ....! படங்களையும், பாடலையும் பார்த்து, கேட்டு ரசித்தீர்களா? அப்படியாயின் ரசித்தமைக்கு மிக்க நன்றி. 🙏.