Wednesday, May 27, 2020

சாதிப்பதும் ஒரு சந்தோஷமே..

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்..! ஆமாம்..! இதிலென்ன அதிசயம்? என நீங்களும் நினைக்கலாம்.  ஆனால்" அந்த கோஸ் என்னை எத்தனை விதமாக  அந்த கால முனிவர்கள் மாதிரி, என் சம்மதம் எதுவுமின்றி உன் சாபங்களினால் உருமாற்றி, உனக்கு சாதகமாக பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறாய்.... உன்னை வேறு விதமாக  உனக்கு முக்கியத்துவம் தந்து டிபன் மாதிரி செய்யட்டுமா? என இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டது நினைவில் இருக்கிறது.. ஆனால், எப்போதும் மதிய சாதத்தின் துணைக்கு மட்டுமே என்னை தூதாக  அனுப்புகிறாய்..!" என்று  அதன் முறை வரும் போது முணுமுணுத்து முகம் சுளித்தது..

சரி..  அது ஏதாவது கோபத்தின் மிகுதியில் சாபங்களை பதிலுக்கு மாறி தந்து விட்டால், சிரமமாகி விடுமேயென அன்றைய தினம் அதன் ஆசையை நிறைவேற்றினேன்.

இட்லி அரிசியை ஒரு டம்ளர் களைந்து ஊறவைத்து, பின் தனியாக து. பருப்பு  க. பருப்பு உ. பருப்பு மூன்றையும் அரைடம்ளர் வீதம்  ஒன்றாக களைந்து ஊற வைத்தேன். நான்கு மணிநேரம் ஊறிய அரிசியுடன்  உப்பு, மி. வத்தல், பெருங்காயம் சேர்த்து அடைக்கு அரைக்கிற மாதிரி  கெட்டியாக அரைத்துக் கொண்டேன்.பருப்பு கவலையையும் கெட்டியாக மிக நைசாக அரைக்காமல், அரைத்து அத்துடன் கலந்து வைத்துக் கொண்டேன்.



கோஸிடம் நெருங்கி (கோஸை சமாதானபடுத்தி "இன்று நீதான் மெயின் ரோல், கவலைப்படாதே. உன் விருப்பப்படி இன்று நீ காலை டிபனுக்கு தயாராக்க படுவாய்.. உனக்கு மகிழ்ச்சிதானே ..!! இன்றிலிருந்து  உன் புகழ் ஓங்கிச் செழிக்கட்டும்." .  என்ற வீர வசனம் பேசி வாளை, இல்லையில்லை கத்தியை கையில் எடுத்தேன்.) அதன் வீர பிரதாபங்களை மேலும் சொல்லவும், அதுவும் மகிழ்ச்சியாக சம்மதித்தது.



அப்புறமென்ன.. பொடிதாக நறுக்கிய கோஸை நன்கு கழுவி வடிகட்டியில் ஒரு நிமிடம் இரு..! என சொல்லி விட்டு, ஒரு கடாயில், கடுகு உ. ப தாளித்து விட்டு அதனுடன் கோஸுடன் நறுக்கி வைத்த இரண்டு பெ.ரிய வெங்காயத்தை வதக்கிக் கொண்டு, அதை தனியாக  எடுத்து வைத்தப்பின் கோஸை போட்டு உப்ப், மஞ்சள் தூளும் சேர்த்துப் போட்டு, அது  நன்றாக வேகும் தருவாயில், வதக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்துப் போட்டு இரண்டையும் "ஊர் வம்பு பேசி சற்று நேரம் மகிழ்ந்திருக்கிறீர்களா?" என கேட்டதும், அவைகளும் மகிழ்வுடன் சம்மதித்தன.




அதன் பின் அரைத்து வைத்திருக்கும் மாவில் கொஞசம் எடுத்து, நன்கு ஆய்ந்து அலம்பி போட்ட கொத்தமல்லி தழைகளையும் போட்டு ஒரு திருப்பு திருப்பி  அரைத்தமாவுடன் கலக்கிய பின் மாவை  இட்லி தட்டுக்களில் பரப்பி குக்கரில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். கொத்தமல்லி தழைகளை பொடிதாக நறுக்கியும் மாவில் கலக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் சாப்பிடும் போது அதையெல்லாம்  அகற்றிய ஆக வேண்டுமென அடம் செய்வதால்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை. முக்கால்வாசி அனைத்திலும் அரைத்தே கலக்கி விடுகிறேன்.எங்கள் வீட்டின்  பெரிய குழந்தைகளுக்கும் இதுதான் மிகவும் பிடித்துள்ளது.




ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், வேக வைத்த இட்லிகளை உதிர்த்து விட்டு, மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்றாக உதிர்ந்து உப்புமா மாதிரி வந்ததும். ஏற்கனவே வம்பு பேசிஅரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கோஸ், வெங்காய ஜோடிகளை "உப்புமா கலவையில் சேர்ந்து  கோஸ் உப்புமா என்ற தனிப்பெயருடன் மிளிர வருகிறீர்களா"? எனக் கேட்டதும் அவைகள் சம்மதிக்கவே அதையும் அந்த அரிசி பருப்பு உப்புமாவுடன் , கலந்து விட கோஸின் முகத்தில் தனி பெருமிதம் ஒன்று தெரிந்து என்னை கவர்ந்தது.


இது நம்மை கவரும், என்னுடன் பேசி ஜெயித்த கோஸின் முகப்பெருமிதத்தை நன்கு கவனிப்பதற்காக...!


நிச்சயமாக இது உங்களையும் கவரத்தான் போகிறது என்பது தெரிந்த உண்மை..

உண்மை என்றதும், அந்த   உண்மை  "கோஸ் டிபனான உண்மை கதையை சொல்லாமல், சாட்சிக்கு மட்டும் என்னை அழைக்கிறாயா" என கேட்டு முறைத்தது. 

சரி.. சரி.. முறைக்காதே..! 
" சொல்லத்தான் போகிறேன்.  சொல்லத்தான் எழுதினேன். 
வாயிருந்தும்  உண்மைதனை
சொல்லாமல் இருப்பேனா..! ஆகா.. 
சொல்லத்தான் போகிறேன்.. 
என நான் ராகம் போட்டு இழுக்கவும்,

போதும்.. நிறுத்து..! இன்று வெள்ளி யில்லை...நாளை வெள்ளி முளைக்கும் முன், கோஸின் பெருமையையும் கூடவே உன் பிரதாபத்தையும்  பிரகடனபடுத்தும் வழியைப்பார்..! என்றபடி முறைத்துக் கொண்டிருந்த உண்மை சற்று கோபம் தணிந்து நான் உண்மையை கூறப்போகும் மகிழ்வில் விடைப் பெற்று அகன்றது.

அது வேறொன்றுமில்லை..! இது எ.பியில் (இரண்டு வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்.)" திங்க"ப் பதிவில் அதன் ஆசிரியர் சகோதரர் கெளதமன் அவர்களின் மருமகள் செய்து பதிவிட்ட பதிவு இந்த கோஸ் உப்புமா. 

இதைப் பார்த்துதான் நான் அடிக்கடி கோஸிடம் சொன்னதை அது  நினைவில் வைத்துக் கொண்டு இந்த தடவை என்னை வறுப்புறுத்தி தான் "டிபனான பெருமையை" அடைந்தது.

கோஸின் பெரும் ஆவலை தணித்து வைக்க உதவிய எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள் அனைவருக்கும், கெளதமன் சகோதரர் அவர்களின் மருமகளுக்கும் எனது, மற்றும் கோஸின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏.

கோஸை அதன் விருப்பபடி இன்று இப்படி வடிவமைத்து காட்டியமைக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அத்துடன் சேர்த்து  என் சுய பிரதாபத்தையும், இங்கு கொஞ்சம் அளக்கலாமென நான் நினைத்ததை உண்மை எப்படியோ கண்டுபிடித்து சொல்லி விட்டது.

இது என்னுடைய இரண்டாவது சதம்.. முதல் சதத்தை சுலபமாக அடித்து விட நிறைய சந்தர்ப்பத்தை தந்த இறைவன் நான் இரண்டாவதை அடித்து முடிக்க அவ்வளவாக தக்கத் தருணங்களை தராது இத்தனை நாளை நிதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். போகட்டும்..!

இது குறித்து எனக்கு எந்த வருத்தமோ, மகிழ்வோ இல்லை. இருப்பினும் ஆட்டத்தில்  தொடர்ந்து நின்று ஆடவைத்து சாதிக்க வைத்தமைக்கு அந்த ஆண்டவனுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
ஆனாலும், இரண்டு வருடங்களாக கணினி வசதி இல்லாமல், கைப்பேசி மூலமாக, பதிவுலகில் நவரச சுவைகளையும் அழகாய் பகிர்ந்து வரும் அனைவருக்கிடையில், எந்தவொரு சுவையும் இல்லாது ஏதோ எனக்குள் தோன்றியதை எழுதி வரும் எனக்கு நிறைய நட்புறவுகளை "அவன்" பரிசாக தந்தமைக்கு முன், என் இரண்டாவது சதத்தின் காலதாமதம் எனக்கொரு பொருட்டாகவே தோன்றவில்லை. எனினும் இந்தப் பதிவின் மூலம் அதை வெளிப்படுத்தும் போதில்,  அந்த இறைவனுக்கும், அவன் தந்த பரிசான நட்புறவுகளுக்கும் என் பணிவான நன்றியையும், அன்பையும் அந்த கோஸின் பெருமித மனப்பான்மையுடனும், கூடவே மனமார்ந்த மகிழ்வுடனும் சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி அன்பான சகோதர சகோதரிகளே....! நன்றி. 🙏. 

Tuesday, May 19, 2020

ஒரு கதை பிறந்த கதை.


சில கதைகள் எப்போதோ படித்தாலும் மனதை விட்டு அகலாமல் இருக்கும். ஆனால் யார் எழுதியது, எப்போது, எங்கே என்பது கூட சுத்தமாக மறந்து விடும்.

இந்த தோசை இருக்கிறதே. அதற்கு யார் ஆசையுடன் அந்த ஆசையையும் சேர்த்து பெயராக வைத்தார்களோ  தெரியவில்லை..?  "ஆசை வெட்கமறியாது" என்பது போல், "தோசைக்கு இடம் கொடுக்குமாம் சொனை கெட்ட  வயிறு." என்றொரு பழமொழி உண்டு. எவ்வளவு ருசித்து தின்றாலும்  "இன்னும் ஒன்னே ஒன்னு சூடாக போட்டுக்கோ..."என்ற குரலுக்கு மறுபேச்சின்றி இணங்கி விடும். அதுதான் ஆசையின் பெயருடன் சற்று இணைந்தே இருக்கும் இந்த" தோசை" யின் சிறப்பு...

தோசைகள்  அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைய வகைகளில் உருப்பெறும்.  ஆனால்  வார்க்கும் வகைகளில் ஒருவரையொருவர் குற்றம் சொல்வது மட்டும் தவறாது இடம்பெறும்.

சிலருக்கு குண்டாக  தோசை வார்த்தால் பிடிக்காது. சிலருக்கு ஒல்லியாக இருந்தால், என்ன இப்படி காற்றில் பறக்கிற மாதிரி தோசை வார்த்திருக்கிறாய்.. எத்தனை தின்றாலும், வயிறே நிறைய மாட்டேன் என்கிறதே...! என்பார்கள்.

சிலருக்கு பட்சணங்கள் மாதிரி மொறு, மொறு என பல்லில் கடித்து சாப்பிடுகிற மாதிரி இருக்கனும். சிலருக்கு பஞ்சு மாதிரி மிருதுவாய், அதே சமயம் மிழுங்கும் போது தொண்டையை அடைக்காத மாதிரி வேண்டும்.

தோசைக்கே இப்படியென்றால், அதனுடன் கலந்து கூடும் துணைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவர் விதவிதமாக சட்னிகள்தான் அதற்கு பொருத்தமெனவும், மற்றொருவர், இட்லி மிளகாய்ப்பொடிதான் தோசைகளுக்கும் சாலச்சிறந்தது எனவும், இன்னுமொருவர் நல்ல சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் இல்லாத தோசை ஒரு தோசையா? எனவும், பிறிதொருவர்  காய்கறி, மசாலா கலந்து செய்யும் குருமாதான் இதற்கு உடன்பாடு எனவும், மீதமிருப்பவர் அதென்ன.. ஒன்றை விட்டு ஒன்றைச்சொல்வது? இவை எல்லாம் இருந்தால்தான் தோசைக்கே ஒரு அழகு. இல்லையெனில், எவ்வளவுதான் ருசியான தோசையாக அமைந்தாலும், அது வெறும் "சை"(த்) தான் எனவும் அவரவர்கள் வாதிட்டு அவர்களே வெல்வார்கள். இது அவரவர் தோ (தே) சா சுதந்திரம். ஹா.ஹா.

ஏதோ மனதில் அகலாத கதை என்று சொல்லிவிட்டு இவள் தன் இஷ்டத்திற்கு காது குத்தி கொண்(ன்று)டு இருக்கிறாளே என நீங்கள் நினைக்கும் முன் அகலாமல் அமர்ந்திருக்கும் கதைக்கு வருகிறேன்.

கதை..

ஒருவர் தன் சொந்த வேலை விஷயமாக ஒரு ஊருக்கு தன் நண்பரோடு பயணிக்கிறார். அந்த நண்பருக்கும் அவருடன் சென்று வந்தால் அவரின் வேலைக்கும்  சில ஆதாயம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. . அந்த ஊரில் அவர் சந்திக்க  நினைக்கும் வீட்டை அடைந்ததும் அவருக்கும். நண்பருக்கும் ஏகப்பட்ட மரியாதை. அந்த வீட்டிலிருப்பவர்கள் ஒரளவு வயதான கணவனும், மனைவியும் மட்டுந்தான்..!

 வேலைக்காக சென்றவரும், அவ்வீட்டிலிருக்கும் பெரியவரும் ஏதோ ஒரு வகையில் உறவுதான். எனவே குசலபரிபாலனம் முடிந்த பின் இருவருக்கும் சாப்பாடு தயார் செய்ய தன் மனைவியிடம் சொல்லவும்,  அந்த மனைவி நல்ல முறையில் உணவு தயாரித்து இருவருக்கும் அன்போடு பரிமாறி அவர்கள் இருவரின் நன்றியையும் பெறுகிறார்.

இரவு வீட்டின் கூடத்தில் பிராயாணித்து  வந்த  அலுப்பு நீங்க  ஆனந்தமாக படுத்து உறங்கி காலை எழுந்தவுடன் அருமையான காஃபியை குடித்த பின் அவர்கள் இருவரும் அவர்கள் வந்த வேலையை சுமூகமாக அந்த வீட்டு  பெரியவர்  முடித்து தருவதாக சொன்ன செய்திக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவித்த பின் தங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும், "இருங்கள்.. என்ன அவசரம்? காலை டிபனை முடித்து விட்டு கிளம்பலாம்..! "என அந்த அன்பான கணவருடன் சேர்ந்து அவர் மனைவியும் மிகவும் வறுப்புறுத்தியதில் அவர்களும்  மனம் மாறி சம்மதித்து விடவே, இவர்களுக்கு குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து கொடுத்தார் அந்த வீட்டுப் பெரியவர். 

இவர்கள் குளித்து வந்தவுடன் தோசையின் மணம் நாசிக்குள் சென்று  வயிற்றில் பசியை உண்டாக்கியதையும் வாழை இலையில்.  தோசைகளுடன் தேங்காய் சட்னி பரிமாறி, வாசனையான எண்ணெயுடன் குழைத்த மிளகாய் பொடியை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என அந்த பெரியவரின் மனைவி, ஒரு தாயின் பரிவுடன் கேட்டு, கேட்டு உபசரித்ததையும், அவர் வார்த்தெடுத்த தோசைகளின் அழகை இருவரும் ரசித்ததையும் இருவரும் அந்த கதையில் மனதுக்குள் விவரிக்கும் அழகே தனி... அதைப் படிக்கும் அந்த நேரத்தில் நமக்கே ஆழ்ந்த பசி வந்து கண்களை கட்டும். அதுவும் தோசைகளை அடுக்கி வைத்து பரிமாறிய அந்தம்மா மாதிரி நமக்கும் யாராவது சுவை மிகுந்த தோசைகளை தட்டில் போட்டு தர மாட்டார்களா என மனம் ஏங்கும். 

இருவரும் முந்தைய நாளின் கூச்சமின்றி வேண்டிய அளவு தோசைகளை சாப்பிட்ட பின் மீண்டும் ஆவி பறக்கும் காஃபி குடித்து.ஆசுவாச படுத்திக் கொண்டு  இருவருக்கும் நன்றி சொல்லி கிளம்பும் போது, "மதியம் இவர்கள் ஊர் சென்று சேர நாழியாகி விடும். தோசைகள் நிறைய வார்த்திருந்தால் ஆளுக்கு நாலு தோசை இலையில் கட்டி பார்சல் செய்து கொடேன். வழியில்  சாப்பிட்டு பசியாறட்டும்.." ! என்ற கணவரின் பேச்சுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த அந்த மனைவி சமையலறை உள்ளே சென்று வாழையிலையில், தோசைகளை  வைத்து கட்டித் தந்த அந்த பார்சலை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... 

அவர்களே " இந்த மாதிரி ருசியான தோசைகளை இனி வாழ்நாளில் எப்போது சாப்பிட போகிறோம்..? பேசாமல் ஊருக்கு கிளம்பும் போதும் நாலு தோசைகளை கேட்டு வாங்கியே செல்லலாமா? "என்ற மனரீதியில் யோசித்ததையும், ஊருக்கு திரும்பும் போது பிரயாணத்தில் இருவரின் மனநிலையும், யோசனையும் ஒன்றாக இருந்ததையும் அவர்கள் பேசிக் கொள்வதை கதாசிரியர் அவ்வளவு அழகாக விமர்சரித்திருப்பார். 

இந்தக் கதையில் நான்  சம்பவங்களை கோர்வையாக தந்துள்ளேனா இல்லை சற்று என் கற்பனைகளையும் கலந்து விட்டேனா என தெரியவில்லை. கதையில் கதை எழுதியவர்,  "பெரியவர் இவர்கள் வருகையை அவ்வளவாக விரும்பாத மாதிரியும், அவர் மனைவியை நல்ல மனதுடையவராகவும்  காட்டியிருப்பாரா" என்பது இப்போது விமர்சித்த பின்  குழப்பமாக உள்ளது. எப்படியிருந்தாலும்  படிக்கும் போது அதுவும் ஒரு வகையான சுவாரஷயமே ..!

(என்னடா இது..! மனதில் அகலாத என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாது இவ்வளவு குழப்பங்களா? என நீங்கள் குழம்பலாம். எப்போதுமே ஒரு விஷயம் மனதை விட்டு அகலாமல் இருப்பதால்தான் ஒரு குழப்பமே உருவாகிறது.  ஹா. ஹா. ஹா.)

கதை எழுதியவர் வந்து படித்து அவர் எழுதிய  கதையைக் கூறி, இதில் சிலது மாறியுள்ளது.. நான் எழுதியதில் இப்படி இருக்கும்... என்று சொன்னால்தான் உண்டு. ஆனால் அதுவும் நடக்க வாய்ப்பில்லையோ எனவும் மனம் நினைக்கிறது.

நன்றாக நினைவில் நிற்கும் கதையிது என சொல்லி விட்டு மாற்றி விட்டேனோ என ஏன் பேதலிக்கிறார் என நீங்கள் எண்ணலாம். "கரு தோசையின் சிறப்பை வர்ணிப்பதும், அதை ஊருக்கு கிளம்பும் கடைசிவரை நின்று வாங்கிச் செல்லும் நிகழ்வுகள்தான்." இடையில் சில மாறுதல்களை நான் விமர்சித்தது கொண்டு வந்திருக்குமோ எனத் தெரியவில்லை. இந்த கதை என்றோ படித்தது. இதை வேறு யாரேனும் படித்து ரசித்திருக்கலாம். ரசித்தவர்கள் இந்தக் கதையின் தலைப்பையும், எழுதியவர் யாரென்ற பெயரையும் தெரிவித்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.

இன்று என் பதிவுக்கு உபகாரமாக அன்று  இந்தக் கதையை அருமையாக எழுதியவருக்கும், நான் என் பதிவில் எழுதியதை சலிப்பின்றி படித்த  என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏. 🙏.

பி. கு. இன்னமும் ஒரு கதை அகலாமல் மனதில் உள்ளது. வேறு வழியில்லை. பதிவுலக சட்டப்படி நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும். ஹா. ஹா. ஹா.  நன்றி.. 🙏. 😀😀

Thursday, April 30, 2020

சிகப்பு பூசணியும், சில கதைகளும்.

பறங்கிக்காய் ..


வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று சிகப்பு பூசணி

இதன் மருத்துவ குணங்கள்.

 இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ.,ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
நன்றி  ஆ. விகடன்.

இது நிறைய நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தையும் உள்ளடக்கியது. உச்சி முதல் உள்ளங்கால் வரை  அனைத்திற்கும் நலம் பயக்கும் வண்ணம் இதன் பயன்கள் சிறந்து விளங்குகிறது.

இந்தப் பூசணியில் அந்தக்காலத்தில் தோல் நீக்கி, உள்ளிருக்கும் விதைகள்அடங்கிய பகுதியை நீக்கி, கெட்டியான காய் பகுதியை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் சற்றும் யோசிக்காமல் அருகிலிருக்கும் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அற்புத உணவாக போகும். இல்லையென்றால் , குப்பைகளோடு மக்கி சிறந்த உரமாகிப் போகும்.

இந்த இடத்தில் அனைவருமே அறிந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தடவை விதுரர் இல்லத்திற்கு அவரைக் காண சென்ற போது, வந்த கிருஷ்ணரை அன்போடு வரவேற்று, அவருக்கு உண்ண வாழைப் பழங்களை விதுரர் உரித்து கொடுக்கலானார். கிருஷ்ணரின் அழகில், அவருடைய தேஜஸில் மெய்மறந்து அவருடன் பேசிக்கொண்டே உரித்தப் பழங்களை கீழே போட்டு விட்டு  வெறும் தோலை மட்டும் கொடுக்க கிருஷ்ணரும் அதை அமிர்தமாய் உண்ணவே, ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து கண்ணீர் பெருகியோட விதுரர் மன்னிப்பு கேட்டதும், கிருஷ்ணர், "இதற்கெல்லாம் வருத்ப்படுகிறீர்களே..! கோகுலத்தில் வளர்ந்த போது, தாய் யசோதை பழங்களை எங்களுக்கு கொடுத்து விட்டு அதன் தோல்களை எங்கள் ஆவினங்களுக்கு கொடுக்க, அது சுவைத்து உண்ணும் போது  எனக்கும் அந்த தோல்களின்பால் மிகவும் ஆசை உண்டாயிற்று. ஒருநாளேனும் இப்படி தோல்களை மட்டும் சாப்பிடும் ஆசையை கட்டுக்குள் வைந்திருந்தேன். இன்றுதான் அந்த  ஆசையும் உங்களால் நிறைவேறியது."என்றாராம்.

அப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தோல்களை சாப்பிட்டிருக்கும் போது, நாமெல்லாம் சாப்பிட கூடாதா என்ற எண்ணம் எவரோ ஒருவருக்கு வந்ததும் இந்த பூசணி தோல்களின் மகத்துவமும், அதனுள் இருக்கும். A. to. Z  சக்திகளும், என் புத்தியிலும்  பரவி விடவே அன்றிலிருந்து நானும்  தோல்களை கால்நடைகளுக்கு தருவதில்லை. இரண்டாவதாக கால்நடைகளும், நான் சென்னை வந்த பின் வீட்டிற்கு அருகில் கூப்பிடு(ம்) தூரத்தில்  கண்களுக்கு தென்படவுமில்லை.

அம்மா வீட்டில் இருந்த போது அருகில் ஒருவர் நிறைய ஆவினங்களை வளர்த்து வந்தார். அந்த ஆவினங்களுக்குதான், எங்கள் வீட்டிலிருந்து, தினமும் அரிசி அலம்பிய கழனி, சாதம் வடித்த கஞ்சி, சற்று சேதமாகும்  பழங்கள்,காய்கறிகள், இந்த காய்கறிகளின் தோல்கள் என  சத்துக்கள் பலவும் தானமாக போகும். பதிலுக்கு வாசல் தெளிக்க எச்சிலிட என பசுவின் சாணம் எங்களுக்கு பண்டமாற்றாக கிடைக்கும்..

சென்னை வந்த பின் வாடகைக்கு இருந்த ஒட்டு குடித்தனத்தில், ஆவினங்களை  கண்ணில் காணாது, நீரிலிருந்து   வடித்த சாதங்கள் என்று பிரிக்காமல், அரிசி வானெலி குக்கரில் கலவையாக சாதமாக,  (அப்போதுதான் வெங்கலப்பானையில் சாதம் தவிர்த்து, வானெலி குக்கரில் சாதம் வைத்து சாப்பிட்டேன்.) அரிசி அலம்பிய நீரை, "கோகுலத்து பசுக்களா ... ஓடி வந்து குடியுங்கோ.. " என்று என் பாட்டி சொல்லித் தந்த முறையில் சொல்லி பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதில் சமையல் செய்த பாத்திரங்களை முதலில்  கழுவ வைத்துக் கொண்டு, (எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு) வாழ்க்கையை ஓட்டி விட்டாகி விட்டது.

அப்போது இந்த காய்கறிகளின் (சவ், சவ், சிகப்பு பூசணி பீர்க்கங்காய் ,) தோல்களும் , சுவையான உணவாகிப் போயின.( ஆனால் என்னைப் போன்றவர்களின் சேவைகளினால்தான் ஆவினங்கள் பிளாஸ்டிக் கவர்களின் மேல் நாட்டம் கொண்டு விட்டது என எவரேனும் குற்றம் கூறி விடாதீர்கள். ஹா. ஹா. ஹா.)

சரி.. நாம் இப்போது நம்மினங்களுக்கு இந்த பறங்கியின்  முழு உபகாரத்தைப் பற்றி விளக்குகிறேன். இந்த காயை வாங்கி நன்றாக கழுவி, விட்டு, கொஞ்சம் தோலுடன் பட்டையாக எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் பகுதியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.


பாக்கியிருக்கும்  கெட்டியான பகுதிகளை சிறு துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியான பாத்திரத்திலோ , இல்லை, கடாயிலோ சிம்மில் வைத்து சரியான பக்குவத்தில்  வேக வைத்துக் கொள்ளவும். பூசணி நன்றாக வெந்து குழைந்து விட்டால் கூட்டு பார்ப்பதற்கு கூ(பா) ழாகி விடும். (அப்படியே பாழானாலும் விட மாட்டோம் அது வேறு விஷயம்...! ) அத்துடன் தேங்காய் துருவல், மி. வத்தல்,  சீரகம் ஒரு ஸ்பூன், தனியா ஒரு ஸ்பூன், ஒரு ஈர்க்கு அலம்பிய கறிவேப்பிலை அத்தனையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும், அரை ஸ்பூன் அரிசி மாவு கலந்து விட்டு, மற்றொரு கொதி வந்ததும், ஒரு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கடுகு, உ. ப தாளித்து கூட்டாகிய அதில் கொட்டி இறக்கினால், அந்த கூட்டின் வாசனைக்கு, வானத்து  தேவர்கள், (பொதுவாக வானத்தில்தான் தேவர்கள் உள்ளதாக எத்தனைப் படங்களில் தவறாது பார்த்திருக்கிறோம். :) ) "இங்குதான் நாம்  விரும்பி உண்ணும் அமிர்தம் உள்ளதா? " என்று பேசிக்கொண்டபடி வானத்தின் மேலிருந்து இறங்கி வருவதை  உணரலாம்.


பின் வேறு ஒரு கடாயில், மி. வத்தல் நான்கைந்து, ஒரு ஸ்பூன் கடுகு, தலா உ. ப, க. ப ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொண்டு, கோலி அளவு புளி, தேவையான உப்புடன், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு நாம் மேலே  ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும், பறங்கிக்காயின் தோல் +உள்ளிருக்கும் விதைகள் அடங்கியப் பகுதியையும் சேர்த்து அரைத்து எடுத்தால், பறங்கித்துவையல் தயார்.

சூடான சாதத்தில் நெய் சேர்த்து இந்த துவையலை கலந்து கொண்டு அந்தப் பறங்கி  கூட்டையும் தொட்டுக்கொண்டபடி டூ இன் ஒன் பாணியில், சாப்பிடும் போது, இதற்கு நிகர் இதுவே எனத் தோன்றும்.

இந்த இடத்திலும் நாயன்மாரின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதுவும் யாவரும் அறிந்த கதைதான்.

இளையான்குடி மாற நாயனார் சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர். செல்வந்தராக இருந்த போது  தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்து பெருமகிழ்ச்சியடைந்த வந்த அவரது பெருமையை உலகிற்கு உணர்த்த  எண்ணம் கொண்ட  சிவனாரின்  லீலைகளினால், அவர் வறுமைப் பிடியில், சிக்கியப்போதும், தினமும் ஒரு அடியார்காவது எப்படியோ உணவளித்து சிவத் தொண்டாற்றி வந்தார். 

அப்போது விடாது பெய்யும் ஒரு அடைமழை காலத்தில்  ஒரு நாள் காலை தொடங்கி இரவு வரை சிவனடியார் எவரையும் காணாது. அதனால் தானும், தன் மனைவியும் எதுவும் உண்ணாது, விசனத்துடன் சிவநாமத்தைச் சொல்லி உறங்க எண்ணிய போது, சிவனே ஒரு அடியவர் கோலத்தில். மழையில் நனைந்தபடி, அவர் இல்லத்தை அணுகி, "பசிக்கிறது உணவு ஏதேனும் கொடு" என்றவுடன் பதறி எழுந்தார். 

அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து மாற்று உடுப்பு தந்து உபசரித்த பின், இரவில் அவர் பசி போக்க என்ன தயாரிப்பது என்ற கவலையில், மழையில் நனைந்தபடி ஓடி, தன் வயலில் அன்று மதியம் விதைத்த செந்நெல் விதைகளையும், வளர்ந்து மழையில் சாய்ந்திருந்த கீரைகளையும் சேறோடு மிதந்து கொண்டிருந்ததை திரட்டி/பறித்து வந்து தம் மனைவியிடம் தந்ததும், அந்த அம்மையார், பொறுமையாக அடுப்பெரிக்க விறகில்லாமலிருந்தும், வீட்டின் மேற்கூரையின்  ஓலைகளை பிரித்தெடுத்து அதைக் கொண்டு அடுப்பெரித்து, தன் கணவர் கொண்டு வந்து தந்த நெல் விதைகளையும், நீரால் சுத்தம் செய்து உரலில் குத்தி அரிசியாக்கி, கீரைகளை ஆய்ந்து விதவிதமான வகைகளில், அறு சுவையோடு சமைத்தார். அத்தனையும் விரைவில் முடித்து அன்போடு சிவனடியாருக்கு உணவு  படைத்தவுடன், அவர்களது அன்பைக் கண்டு ஆனந்தமடைந்த சிவபெருமான் உமாதேவி சகிதம் காட்சி தந்து, இளையான்குடி மாற நாயனாரையும், அவர் மனைவியையும், தம்முடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார். 

இப்படி ஒரே காயை வைத்து பல விதமாக செய்யும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்து வீட்டில் சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் முன்னதாக கூறிய சிவனடியார் கதையில்  பலன் ஏதும் எதிர்பாராத அன்பு மட்டுந்தான் கலந்திருந்தது. நான் செய்வதில், சோம்பேறித்தனம்  கஞ்சத்தனம், எப்படி உள்ளதென அனைவரும் சிலாகித்து பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கும் குணம் இப்படி பலதும் உள்ளதெனவும் கூறிக் கொள்வேன்.

இன்று உங்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு பூசணி பதிவையும் போட்டு விட்டேன். கண்டு, ரசித்த கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏 . 

Friday, April 17, 2020

காலத்தின் மாற்றம் - 2

 சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் நம் கலாசாரமாகிய எச்சில் பத்து பற்றி உண்மை நிறைந்த விஷயங்களை  மிகவும் அழகாக எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

நான் ரசித்துப் படித்தேன் என்பதை விட நாங்கள் வாழ்ந்த அந்த காலத்திற்கு சென்றும் வந்தேன். ஆனால், இந்த விஷயங்களில் இருந்த கட்டுப்பாடுகள் நம் முன்னோர்களான  பெற்றோர்களின் வயதான ஒரு கால கட்டத்திலேயே சற்று தளர்வடைந்து விட்டது எனவும் சொல்லலாம். ஏனெனில். கல்வி, கல்விக்கேற்ற பதவி, அதை வகிக்கும் இடங்கள், அந்தந்த இடங்களின் சூழ்நிலைகள், அந்த சூழ்நிலைக்கேற்ப நாகரீகமான வாழ்வுக்கு தேவையான  பணத்தேவைகள், புதுமையை விரும்பும் இளைய தலைமுறை மக்களின் மன மாற்றங்கள், அதனால் சடாரென்று அவர்களால் எடுக்கப்படும்  தீடிர் முடிவுகள், இத்தனையும் நம் சுவையான  பழைய கலாச்சார எழுத்துக்களை  கொண்ட  பல பக்கங்களை வேகமாக புரட்டி, வாழ்க்கைப் புத்தகத்தின் புது பக்கங்கங்களில் தன் நாகரீகம் என்ற மையினால் புதிது புதிதாக எழுத ஆரம்பித்து விட்டன என்பதும் நிதர்சனமான உண்மை.

நிறைய இடங்களில், இன்னமும் பழைய கட்டுப்பாடுகள் கட்டுக்குலையாமல் இருக்கலாம் / இருக்கட்டும். அவர்களின் கட்டுப்பாட்டு  செயல்களுக்கு என் பணிவான வந்தனங்கள். அவைகளை இப்போதைய காலகட்டங்களிலும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பான நன்றிகள்.

நான் இந்த பதிவை எப்போதோ எழுதியது. "காலத்தின் மாற்றம்" என்ற தலைப்பில் பகுதி ஒன்றை மட்டும் வெளியிட்டேன். இரண்டாவதாக எழுதியது டிராப்டிலேயே  தான் வெளியாகும் "காலத்திற்கு" காத்திருந்தபடி தவமியற்றி கொண்டிருந்தது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை பார்த்ததும் இதை வெளியிடும் ஆசை வந்தது. இதுதான் எதற்கும் ஒரு நல்லபடியான  " நேரம் காலம்" என்பது வர வேண்டும் என நம் பெரியோர்கள்  சொன்னதும்  உண்மையாக  இங்கு பலித்துள்ளது. .

காலத்தின் மாற்றம் 1

இது முதல் பகுதிக்கான சுட்டி. இதை கிளிக்கி  படிப்பவர்களுக்கு முதலில் என் அன்பான வந்தனங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது காலத்தின் மாற்றம். 2.


நான் சென்ற பதிவில் குறிப்பிட்டபடி நாகரீகத்திற்கு ஏற்ற மாதிரி பெண்கள் எப்படி வாழ்வில் மாறுதல்களை சந்தித்து  வந்தார்கள்/வருகிறார்கள். என்பது குறித்து எழுத ஆரம்பித்தேன். 

        நான் கூறியபடி என் பாட்டி காலத்தில் கணவன் உட்பட வீட்டின் பெரிய மனிதர்கள் யார் வந்தாலும், முக்கியமாக ஆண்கள் வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் வீட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக அந்த குடும்ப தலைவரின் மனைவி, (அல்லது அந்த வீட்டின் மருமகள்கள்) எழுந்து நிற்க வேண்டும். வந்தவர்கள் உடை மாற்றி, தாக சாந்தி செய்து, சிரம பரிகாரம் செய்து, வெளியில் சென்று வந்த விபரங்களை பற்றி (அவர்களுக்கு மனமிருந்தால்,,) அவர்கள் கூறுவதை செவிமடுத்து, அது சாப்பிடும் வேளையானால், அவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்கள் படுத்து உறங்க ஆரம்பித்த பின்தான், இந்த மனைவியானவள். (மருமகள்கள்) தன் வயிற்றில் எழும் பசியை போக்கி, கால் கடுக்க நின்ற கால்களுக்கும் சிறிது ஓய்வை தர வேண்டும். (அதற்குள் ,வேறு வேலைகள் (கட்டளைகள்) வீட்டின் பெரியவர்கள் மூலமாக, முளைத்து, பசியையும் ஓய்வையும் சிறிது நேரம் தள்ளி வைக்கும்.) இல்லையெனில் நன்கு படுத்து உறங்கி கொண்டிருக்கும் நபர் அந்த காலத்தில் மின் விசிறிகள் இல்லாததால், “ஐயோ! இந்த வேர்வையில் தூக்கம் கலைகிறதே! இந்தாடி பெண்ணே! கொஞ்சம் விசிறி கொண்டு வீசி வீடேன்!” என்று கத்த மறுபடியும் கால் கடுக்க நின்றபடி அவர் தலை, முதல் கால் வரை காற்றை பெறச் செய்யும் வைபவத்தை நிகழ்த்த வேண்டும். அவர் அந்த காற்றில் நித்திரை உலகில் மீண்டும் பயணித்த பின்பும் அவர் மறுபடியும் இந்த உலகத்துக்கு எரிச்சலுடன் வந்து விடக் கூடாதேயென்று, மிகுந்த பொறுமையுடன் சேவை செய்து கொண்டிருக்க, வந்த பசி வயிற்றில் இரைச்சலுடன் மோதி, தோல்வியுடன் ஓட, பின் வந்து போன பசிக்கு சிறிது உணவை அளித்து விட்டு பிற வேலைகளை முடித்துக் கொண்டு இந்த மனைவியானவள், (மருமகளானவள்) தன் உடலுக்கு கொடுக்கும் ஓய்வுக்கு நிகராக வேறு ஒரு பொருள் இந்த உலகில் கண்டிப்பாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என்றெல்லாம், என் பாட்டி தான் வாழ்ந்த வாழ்வை சொன்னதை கேட்டு உங்களுடன் பகிர்ந்த எனக்கே மூச்சு முட்டுகிறதே! பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்?           
      
        
          அந்த காலத்தில் இளவயதின் தன் அனுபவங்களை சொல்லி வளர்த்ததாலோ, இல்லை, பார்த்து வளர்ந்ததாலோ, என்னவோ! என் அம்மா காலத்திலும். அதே மரியாதையை பெரியவர்களுக்கு தந்து வாழ்ந்து வந்தார்கள். என் தந்தைக்கும் தந்தை வீட்டின் பெரிய உறவுகளுக்கும், என் அம்மாவும் அதே மரியாதையை தந்தார்கள். ஆனால், பாட்டியின் காலத்தை விட சற்று பரவாயில்லை! என்று சொல்ல கேட்கும் எனக்குத்தோன்றும். ஆனாலும், எனக்கு தெரிந்து என் அம்மா என் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொண்டார்கள். எனக்கு விபரம் தெரிந்து என் தந்தை வெளியே சென்று விட்டு வீட்டினுள் நுழைந்ததும், என் அம்மாவுடன் சேர்ந்து என் பாட்டியும் (அம்மாவின் அம்மா) மருமகனுக்காக மரியாதை நிமித்தம் சிரமத்துடன் எழுந்து நிற்பார்கள். (பழக்கதோஷம்! விடுவதற்கு மனம் இடம் தரவில்லை!)  
      
            “அதெல்லாம் ஒன்றும் எழுந்து நிற்க வேண்டாம். மரியாதை மனதிலிருந்தால் போதும்! செய்கையில் தேவையில்லை! என்று என் தந்தை எவ்வளவோ தடுத்தும் கேட்க மாட்டார்கள். இதற்காகவே என் தந்தை வெளியிலிருந்து வரும் போதெல்லாம் சிறிது நேரம் வாசல் திண்ணையில் அமரந்து விட்டுதான் வருவார். (அதற்குள் வீட்டினுள் படுத்துக்கொண்டோ, இல்லை கீழே அமர்ந்து ஏதாவது வேலையிலோ ஈடுபட்டிருக்கும் என் பாட்டி, வாசலில் அமர்ந்திருக்கும் மருமகனை கண்டதும் வருகையை உணர்ந்தவளாய், அவசரப்பட்டு எழுந்து நிற்காமல் நிதானமாக எழுந்திருக்க முயற்சிப்பார்கள் இல்லையா?) இந்த இடத்தில் மாமியாரை தன் அம்மாவாக நினைத்து மதித்த என் தந்தையை நினைக்கும் போது இப்போதும் என் மனம் நெகிழ்கிறது.
            
             இதையெல்லாம் பார்த்து பார்த்து வளர்ந்தலோ, என்னவோ! என்னிடமும் அந்த குணம் திருமணமாகி புகுந்த வீடு சென்ற பின்பு நிறைய வருடங்கள் வரை ஒட்டிக்கொண்டிருந்தது. பெரியவர்களை கண்டதும், எழுந்து நிற்பது, அவர்கள் அருகில் சரிசமமாக அமராதிருப்பது, அவர்கள் உணவு அருந்தும் வரை, நின்று கொண்டே பறிமாறுவது, போன்ற செயல்களை சிரத்தையுடன் செய்து வந்தேன். (“அட! ரொம்பத்தான் தற்பெருமை!” யாரோ சொல்வது காதில் லேசாக விழுவதால், இத்துடன் நிறுத்துகிறேன்.)  காலப்போக்கில் வருடங்கள் உருண்டோட, இயலாமை காரணமாக “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று மனதை தேற்றி மாறக் கற்று கொண்டேன்.    

              அதன் பிறகு வந்த காலங்களில் தங்கள் புகுந்த வீட்டின் பிற உறவுகளுக்கு, எதிரிலேயே தங்கள் கணவனுக்கு இணையாக அமர்ந்து நாலு பேர் முன்பாக தோள் தட்டி பேசி மகிழ்ந்த என் புகுந்த வீட்டின் மற்ற பிற உறவுகளை கண்டு வியந்துதான் போனேன். காலந்தான் எப்படியெல்லாம் மாறி விட்டது? என்று ஆச்சரியப்பட்டு போனேன். (உண்மையைச் சொல்கிறேன்! நாமும் திருமணம் ஆன புதிதில், இப்படியெல்லாம் இல்லாமல் போய் விட்டோமே! என்ற சின்ன தாக்கம் அக்கணம் எனக்குள் வந்து போனதை தடுக்க இயலவில்லை/) என்  கணவரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. என் கணவரும் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்பவர்தான். “நீ செய்வது சரிதான்!” என்பது போல் பதில் வரும். எதற்கு வம்பு! என்று அமைதியுடனே காலத்தோடு விரைய கற்று கொண்டேன்.
    
             என் காலத்திலேயே கணவரை பேர் சொல்லி அழைக்கும் நாகரீகம் வந்து விட்டது. மரியாதைகள் மங்க ஆரம்பித்து விட்டது. “தலை தட்டுவது மாதிரி எப்படித்தான் கணவன் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ? நம் காலத்திலெல்லாம் இப்படியா?” என்று என் அம்மாவும், மாமியாரும் சொல்லிச் சொல்லி அங்கலாய்பார்கள். அவர்களின்  நியாயமான வருத்தம் என்னையும் தொற்றிக்கொள்ளும். (உண்மையாகவே சொல்கிறேன்!!!. நம்புவது உங்கள் விருப்பம்.)  

            இப்படியாக என் காலம் கழிந்து கொண்டிருக்க, நம் அடுத்த தலைமுறையின் காலங்கள் உதயமாகி விட்டன/ இவர்களின் கலாசாரத்தை மட்டுந்தான் என்னால் கண்டுணர முடியும் என நினைக்கிறேன். அதன் பிறகு மாறும் பழக்க வழக்கங்கள் எவ்வளவோ! யாருக்குத்தெரியும்? பொதுவாக இப்போதுள்ள ஆண்களும், பெண்களும் காலத்திற்கு தகுந்த மாதிரி, அன்றிலிருந்தே, நிறைய மாறுதலுக்கு தயாராகி விட்டார்கள். 

           காலங்கள் மாற மாற மாறும் கலாசாரத்தையும் ஜீரணித்து கொண்டு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். வேறு வழி? இல்லையென்றால் பிரச்சனைகள் பெரிதாகி ஒருநாள் வெடிக்கும். வெடித்த குப்பைகளின் அசுத்தத்தின் இடையே வாழ்வதை விட, விட்டு கொடுக்கும் சுபாவங்களை, (இதில் யார் விட்டுக் கொடுப்பது? சந்தேகமற நாம்தான்.. ஹா ஹா ஹா. மேலும் நமக்குத்தான் இது தெரியும்...) வளர்த்துக்கொண்டு, அதனிடேயே வாழ்வது பெருமையல்லவா? அந்த காலந்தான் அனைவருக்கும் (என்னையும் சேர்த்துதான்) யோசிக்கும் தன்மையையும் தந்தருள வேண்டும்.

முந்தைய பதிவினையும், இப்போதைய பதிவினையும் படித்தவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். 🙏. 

Saturday, April 11, 2020

துணைகள்.

கத்திரிக்கா...பச்சை கத்திரிக்கா...

இந்த கத்திரிக்காய் சில பேருக்கு உயிரை விட பிரதானமானது. அப்படி  உயிரைக்கூட சமயத்தில் துச்சமாக கருதி துணிச்சலாக இருப்பவர்களிடம்," நீ இன்று சாப்பிட வர தாமதாமாகும்னு சொன்னியா. .! அதனாலே இன்று செய்த கத்திரிக்காய் கறி தீடிரென வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு போட்டு தீர்ந்து விட்டது.. கொஞ்சந்தான் இருக்கு.. உனக்கு ரொம்ப பிடிக்குமென்று தெரியும். நாளை மறுபடி இதே மாதிரி செய்கிறேன். அப்போது வேண்டியதை போட்டுக்கோ" என்று வீட்டுக்குள் வந்து சாப்பாட்டறையில் அமர்ந்தவுடன் அவர்களின் அம்மாவோ, இல்லை வீட்டிலுள்ளவர்களோ பாசத்துடன் சொன்னாலும், மனம் கேட்காது வருத்தத்தில் தளர்வடைந்து விடும்.

நாளை வரை காத்திருக்க பொறுமை இல்லாமையா? இல்லை நாளை மறுபடியும் இந்த கத்திரிக்காய் சமையலில் இடம் பெறுமா என்ற சந்தேகமா? இரண்டில் ஏதோவொன்று  அவர்களின் மனவுறுதியை குலைத்து, தளர்வடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த கத்திரிக்காய்.

இந்தளவிற்கு இந்த கத்திரிக்காயின் பிரதாபங்களை நிறுத்தி என் செய்முறையை பார்ப்போமா?
அன்று நான் என்னிடமிருந்த நீளமான பச்சை கத்திரியையும், சதாரண வயலட் கத்திரியையும் சேர்த்து களமிறக்கினேன். இரண்டையும் நன்கு கழுவி வட்ட வட்ட துண்டுகளாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டேன். ஒரு பெரிய கோலி அளவு புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்தெடுத்த நீரையும், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான உப்பும் கலந்து அதில் கத்திரிக்காய் துண்டுகளை ஊற வைத்தேன் .


கடந்த வியாழக்கிழமை எங்கள் ப்ளாக்கில் மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள "எது பொருத்தம்" என்ற  விவாதம், இல்லையில்லை.. "எது சூப்பர் என்ற கருத்துக்கள்... ஆகா..! என்னப் பொருத்தம்.. நமக்குள் இந்தப் பொருத்தம்" என்று அழகிய பாட்டு பாடியப்படி ஓடிக் கொண்டிருப்பதை, கேட்டு மகிழ்ந்து  போனஸாக இருக்கட்டுமென இன்னொரு படமும் "இடையில் நானும்" என்றபடி கூடவே வந்து விட்டது. இவை இரண்டும் இரட்டை குழந்தைகளாம்... எங்களைப் பிரிக்கக்கூடாது என ஒரே சண்டை வேறு .! வேறு வழியின்றி இரண்டாகப் போட்டு விட்டேன்." (ஒரு படத்தையே எத்தனை முறை?" என முறைப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்...🙏. கூப்பி கேட்டுக் கொள்கிறேன். ஹா.ஹா.ஹா.)


மூன்று ஸ்பூன் கொத்தமல்லி விரைகள், ஒரு ஸ்பூன் தலா, க. ப, உ. ப, து. ப (மூன்று பருப்புகளையும் ) என ஒரே அளவு எடுத்துக் கொண்ட பின், வேண்டிய சிகப்பு, மிளகாய் அவரவர் காரத்திற்கு தகுந்தாற்போல்  எடுத்த அத்தனையும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்தெடுத்துக் கொண்டேன். பின் அதை ஒரளவு கரகரப்பாக அரைத்து அந்த பொடியையும் அந்த புளி ஜலத்தில் ஊறிக் கொண்டிருக்கும் கத்திரிக்காயுடன் பிசறி ஊற வைத்தேன்.




ஒரு அரைமணி நேரம் அத்தனையும் சேர்ந்து ஊறியதும், கடாயில் கொஞ்சம் ந. எண்ணெய் ஊற்றி கடுகு, உ. ப தாளித்து கொண்டு அதில் இந்த கத்திரிக்காய்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்தபடி காய்களை பிரட்டி கொடுத்தால், சிறிது நேரத்தில் பிரவுன் கலருக்கு மாறும். அப்போது பெருங்காய பொடி சேர்த்து இன்னமும எண்ணெய் விட்டு நன்றாக திருப்பி கொடுத்தபடி இருக்க சற்று மொறு, மொறு கத்திரிக்காய் கறி ரெடி.


இது எப்போதோ எழுதி, கொஞ்சம் முடிக்காமல் இருந்து விட்டேன்.  எ. பியில் அன்றைய தினம்  மோர் சாதப்பதிவை பார்த்ததும், கூடக்குறைய சேர்த்து / குறைத்து நேற்றைய  அதற்கு துணையாக என் பதிவில். வைத்து அலங்கரிக்க விரும்பினேன். அது  "நான் மட்டும் தனியாகவா ? அதுவும் இந்த "அமைதி நிலைமையில்"  என்னை மட்டும் போய்   ஆர்ப்பரிக்க சொல்கிறாயா?" என சற்று கோபத்துடன் படபடக்க,  சரி..! சரி..! கோபப்படாதே..! என அதை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி விட்டு, அன்று  எங்கள் வீட்டில் இரவு "அதே வெறும் மோர் சாதத்திற்கு" தொட்டுக் கொள்ள  செய்த குடமிளகாய் கறியையும் உடன் அனுப்ப முடிவு செய்தேன்.


குடமிளகாய் 2, வெங்காயம், பெரிதாக 1 என் கணக்கில் எடுத்து கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி, கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணேய் விட்டு கடுகு  உ. ப தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கியவுடன், குடமிளகாயையும், சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கூடவே இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் அதன் மேல் பூ மாதிரி தெளித்து ஒன்று போல் கலந்த பின் கொஞ்சம் சமையல் எண்ணெய் தாராளமாக விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை தட்டு போட்டு மூடி வைத்தேன். அவ்வப்போது திறந்து ஒரு பிரட்டலில் நன்கு வெந்து கறி மிகவும் அழகாக ஒன்று சேர்ந்து வந்தது.


சரி.. இரண்டையும் ஒன்று சேர்த்து வெற்றித் திலகமிட்டு "நல்லபடியாக போய் வாருங்கள்" என அனுப்பி வைக்கும் நேரத்தில், மழை. காற்று தன் என்ற நண்பர்களின் துணையோடு, நெட் என்ற பகைவன் (எனக்கு அவன் எப்போதும் நண்பனாயினும், அப்போதைக்கு என் பதிவை முழுமையாக்க ஒத்துழையாமல் தடை செய்தவன் பகைவன்தானே.. ! ஹா.ஹா.ஹா.  ) வந்து அனுப்ப தடை விதித்து  விட்டான். சரி..! போகட்டும் மறுநாள் கடமைகள் முடிந்த கையோடு அனுப்ப அமர்ந்தால், அதே நேரம்... அதே பகைவன்.... அதற்கும் மறுநாளாகிய  நேற்று மதியம் வாழைத்தண்டை ஏதாவது செய்து விட்டு  பதிவை முடித்து விடுவோம் என்று ஆரம்பித்த போது, "குடமிளகாயோடு உங்கள் வீட்டுக்கு நானுந்தானே வந்தேன்...! என்னை மட்டும் அவர்களோடு அனுப்ப உனக்கு என்ன  தயக்கம்?" என பரிதாபமாக கேட்டதில், அதை உருமாற்றி  வடிவமத்த "வாழைத்தண்டு குனுக்கையும்" அதன் முக மலர்ச்சி ஒத்துழைக்க ஒரு படமெடுத்து இவர்களுடன் இணைத்து விட்டேன்.


இப்படியாக எ. பியின் அல்லது  "எங்கள் குடும்பத்தின்" மோர் சாதத்திற்கு இணையாக கிளம்பி வந்திருக்கும் இவர்களை வாழ்த்தி பாராட்டுக்கள் தருவீர்கள் என நம்பிக்கையில், இன்று அதேநேரம் பகைவன் வருவதற்குள் என் பதிவுக்கு இவர்களை அனுப்பி விட்டேன். பாராட்டுக்கள் அளிக்கும் அனைவருக்கும் என்னுடையது மட்டுமின்றி இவர்கள் சார்பிலும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

இப்படி👌என்றா, இல்லை இப்படியா👍. இல்லை அதற்கும் ஒருபடி மேலாகவே இப்படியா👏. எவ்வாறாயினும்🙏 இப்படி ஆர்வம் மேலிட காத்திருக்கிறேன்.