Tuesday, December 17, 2024

அழகின் பிரம்மாண்டங்கள்.

சென்ற  வருட தொடக்கத்தில்,    (ஒரு வேளை இது அதற்கும் முந்தைய வருட தொடக்கமா என்பது சரியாக நினைவில் இல்லை.:)) ) குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்ததும் குடும்பத்துடன் மைசூர் இரண்டு மூன்று நாட்களுக்குள் சென்று வருவதாக திட்டம் தீட்டி சென்று வந்தோம். சனிக்கிழமை  அதிகாலை கிளம்பி, திங்கட்கிழமை மாலை வாக்கில் வீடு திரும்பி விட்டோம். காலையில் செல்லும் வழியில் குழந்தைகளுக்காக ஒரு பார்க் (ஜி.ஆர்.எஸ் பார்க். அதில் நீர் நிலைகளில் விளையாட்டுக்கள். அதற்கு உள்ளே செலவதற்கே ஒரு நபருக்கு ரூ1000 கட்டணம் வசூலித்தார்கள். கிளம்புவதற்கு முன் கூட்டியே  ஆன்லைனில் மகன் அதற்குரிய கட்டணம் கட்டி  ஏற்பாடு செய்து விட்டார். ) சென்று விட்டு மாலைக்குள் தங்குமிடமாக ஒரு தரமான ஹோட்டல் ரூமில் இடம் அமர்த்திக் கொண்டுதான் சென்றோம் மாலையில் வேறு எங்கும் சுற்ற முடியாதென்பதால் குழந்தைகளும் (பேரன், பேத்திகள்) நீரில் ஓடியாடி    விளையாடி அலுப்பாக இருப்பதால், இரவு உணவை அருகிலிருக்கும் வேறொரு உணவகத்தில் முடித்துக் கொண்டு வந்து,ஓய்வெடுத்து மறுநாள் காலை மைசூர் அரண்மனை செல்லலாமென முடிவு செய்தோம் .

மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை முதலில் சாமுண்டி கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு அரண்மனை செல்லலாம் என நினைத்தால், அந்த ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியில் உள்ளவர்கள். "ஞாயிறு கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வார. நாட்களான நாளை காலை செல்லுங்கள்" எனக் கூறியதால், கோவிலுக்கும் செல்லும் முடிவை மாற்றி வைதது அரண்மனை செல்ல முடிவாகியது. 

சரி... அன்று அரண்மனை செல்லாமென்றால், ஞாயிறு அரண்மனை உள்ளே சுற்றிப்பார்க்க அனுமதி இல்லையாம். அதற்கு பதிலாக அன்று மாலை செயற்கை தீப அலங்கராங்களுடன் ஒளிமயமான அரண்மனையை பார்க்கலாம் என்றதும், காலை வேறு ஒரு சில  இடங்களுக்கு சென்று விட்டு, மதியம் உணவு முடிந்ததும் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு மாலை அரண்மனையை காணச் சென்று. அரண்மனை மின்னொளி அலங்காரங்களை சுற்றிப் பார்த்து விட்டு. அறைக்கு திரும்பினோம். அந்த காட்சிகளை இன்றைய பதிவாக படங்களுடன் தந்துள்ளேன. இது புகைப்படங்களுடன் இணைத்து ஒரு வழியாக பதிவாக்கி அப்போதே கொஞ்சம் எழுதி வைத்ததை, இப்போதும் வெளியிடாது விட்டால், மேலும் ஒரு மாமாங்கம் ஆகி விடுமென்பதால், இன்று பாக்கி எழுதாததை முடிந்த வரையில் எழுதி முடித்து இணைத்து  வெளியிடுகிறேன். :)) 



















இது என் கைப்பேசியில் எடுத்தப் புகைப்படங்கள். அங்கு அன்று ஒரே கூட்டம். அத்தனை இருளிலும், மக்கள் வெள்ளமாக அரண்மனை முழுக்க ஒளிரும்  ஒளிக்காட்சியை காண வந்திருந்தார்கள். நாங்கள் கொஞ்ச. தூரம் வரை தட்டித் தடுமாறிதான் நகர்ந்து சென்றோம். ஆனால், அரண்மனை உள்ளே சென்று அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பம் இனி எப்போது வாய்க்குமோ தெரியவில்லை... ? 

அங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதிகள் உண்டா.?இல்லை கைப்பேசி முதற்கொண்டு காமிராக்களை வெளியில் பத்திரப்படுத்தி விட்டுதான் உள்ளே செல்ல வேண்டுமா..? தெரியவில்லை. இப்போது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசி என்னிடம் உள்ளது. ஆனால் அது முன்பொரு தடவை (பல, பல வருடங்களுக்கு முன்பு.) மைசூர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சென்ற போது என் கையில் இல்லை. ஏதோ இந்த அரண்மனை மின்னொளி காட்சியை மட்டுமாவது இப்போது எடுக்க முடிந்ததே என மனம் மகிழ்வுற வேண்டியதுதான்..! 

ஒரு தடவை நாங்கள் இங்கு வந்த புதிதில் (பல வருடங்களுக்கு முன்பாக) சென்ற மைசூர் பயணத்தில் அரண்மனை உள்ளே  சென்று சுற்றிப் பார்த்துள்ளோம்.  அப்போது இந்த மாலை தீப அலங்காரங்கள் எல்லாம் இல்லையென நினைக்கிறேன். ஒரு நாளில் மாலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அரண்மனையை சுற்றிப்பார்க்க அனுமதி இருந்தது. ஆனால், அப்போது ரசிக்கும் ஆவலும், நேரமும் குறைவோ என்று இப்போது என் மனதில்  தோன்றுகிறது. 

அப்போது ஒரே நாளில் மைசூரில் பிரசித்தியான சில இடங்களை மட்டும் சுற்றி விட்டு மறுநாள் களைப்புடன் திரும்பி வந்து விட்டோம். இப்போது இரு தினங்கள் அங்கு தங்கியும் அரண்மனை உள்ளே சென்று பார்க்கும் நேரம் வேறு பல அனேக திட்டங்களுக்கிடையே நழுவி விட்டது. 


ஒரு பழமொழி உண்டே..! கல்லுக்கும், நாயிக்குமான ஒரு பழமொழி....! அது போலத்தான். ஆனால், இதற்கும் தகுந்த ஒரு கதை உள்ளதை இன்றுதான் கூகுளில் ஒர் இடத்தில் படித்தேன .(பழமொழிகளின் உண்மையான விளக்கத்தை உணர்த்தும் கதை).

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் பொதுவாக  நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.

அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சில நாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர்.

அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறுதான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி.

கதை விளக்கத்திற்கு நன்றி. கூகுள்.

இந்தப்பதிவை படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

34 comments:

  1. எப்போதோ எடுத்து வைத்து வெளியிடாத பதிவை எங்களுக்காக சிரமப்பட்டு வெளியிட்டதற்கு நன்றி அக்கா.  படங்கள் எல்லாம் தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து படங்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே. ஆம். எப்போதோ (இருவருடங்கள் ஆகி விட்டன என நினைக்கிறேன்.) எடுத்த படங்கள்தான். உடனே வெளியிட வேண்டி இதற்கு ஒரு பதிவை எழுதி படங்களை சேர்த்து வைத்து விடுவேன். ஆனால், அதை முடிக்க இயலாதபடிக்கு ஏதோதோ வேலைகள் வந்து விடும். அதற்குப்பின் பல பதிவுகள் தாமாகஉருவாகி விடும். இப்படித்தான் போகிறது.

      நீங்களும் இந்த அரண்மனையை பல தடவைகள் கண்டு ரசித்திருப்பீர்கள். அனைவருக்குமே இது புதிதல்ல...! ஆனாலும் இது என் பதிவிலும் இருக்கட்டும் என்பதற்காக இந்தப் பதிவு. இருப்பினும் தாங்கள் முதலில் வந்து நல்ல கருத்துகளை தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இது மாதிரி சுற்றுலா சமயங்களில் நமக்கு நேரம் கிடைப்பது வார இறுதிகளில்.  அதே நேரம்தான் பெருமாபாலன இடங்கள் மூடி வைத்திருப்பார்கள்!  எப்படி கண்டு களிப்பது!  எனக்கும் கூட்டமான இடங்கள் அலர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      ஆம்.. சுற்றுலா என வரும் போது அந்தந்த நேரங்களில் நாம் விரும்பிய இடத்திற்கு போக முடியாதுதான். நாம் போகும் சமயங்களில் நாம் விரும்புவதை காணுப் சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விடும். எனக்கும் கூட்டம் என்றால் அலர்ஜிதான். அதுவும் இரவு நேரம். திரும்பி விடலாமென்ற என்று கூட யோசித்தோம். ஆனால், உள்ளே செல்ல கட்டணம் கொடுத்து சென்று விட்டோம் என கொஞ்ச நேரம் கூட்டங்களை சமாளித்தோம். பின் ஒரு அரை மணியில் கூட்டம் கலைந்து கொஞ்சம் ப்ரீயாக இருந்தது. குறிப்பிட்ட ஒரு நேரத்திற்குப் பின் உள்ளே இருக்கவும் அனுமதியில்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. செந்தில் கவுண்ட்டர் காமெடி ரசித்தேன்.  "நேத்து பணம் கொடுக்கும்போது என்னடா சொன்னே" என்று வாடிக்கையாளர் கேட்கும்போது கவுண்ட்டரின் உடனடி பதில் : "பத்தலன்னு சொன்னேன்"

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      அப்போதெல்லாம் கவுண்டமணி, செந்தில் காமெடி வசனங்களை நம் வீட்டிலும் சொல்வது வாடிக்கைத்தானே..! இயல்பாகவே நம்மையும் மீறி கலகலப்புக்காக அந்த வசனங்கள் வந்து விடும். அது ஒரு நகைச்சுவை களில் முத்திரை பதித்த காலம். அந்த நகைச்சுவைகளுக்காக திரைப்படங்கள் நன்கு ஓடிய காலம். . நீங்கள் இங்கும் காமெடியை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் பொருள் தெரிந்தததுதான்.  எனக்கு வேறொரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இதன் பொருள் நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன். நான் ஏதோ அந்த கீமெடி சீன்களைத் தேடப்போய் இது கண்ணில் படவே படித்தேன் படித்ததை பதிவுக்கு பொருத்தமாக இருக்கவே பகிர்ந்தேன்.

      நினைவுக்கு வந்த அந்த பாடலின் வரிகளையும் அடுத்துப் பகிர்ந்து விட்டீர்கள். நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் பொருள் தெரிந்தததுதான்.  எனக்கு வேறொரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

    "தெய்வும் என்றால் அது தெய்வம் வெறும் சிலையென்றால் அது சிலைதான்...  உண்டென்றால் அது உண்டு...   இல்லையென்றால் அது இல்லை!"

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆகா.. உடனே அந்தப்பாடலை சொன்னதற்கு நன்றி. என்ன பொருத்தம் இல்லையா? அருமையான பாடல்..
      எனக்கு இந்த நாய், கல் வசனத்தை கேட்டதும் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது "கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே .." என்ற பாடல் மனதில் ஓடியது. ஆனால், இதை விட தாங்கள் பகிர்ந்த பாடல்தான் அந்த பழமொழிக்கு பொருத்தமாக உள்ளது. அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. போட்ட கமெண்ட்டுகள் நின்று விட்டன. (இப்போதைக்கு) ஆண்டவனுக்கு நன்றி.  இந்த நேரத்திலேயே இன்னொன்றைக் கேட்டு விடுகிறேன்.  மெயில் பாக்ஸ் க்ளீன் செய்து விட்டீர்களா?  இல்லையென்றால் ஒரு புது அக்கவுண்ட்டாவது தொடங்கி எனக்கும் அல்லது எங்களுக்கும் தெரியப்படுத்தவும்!  போட்ட கமெண்ட்ஸ் நிற்கவில்லை என்பதை தெரிவிக்கவாவது அல்லது அவை என்னென்ன கமெண்ட்ஸ் என்று தனியாக தெரியப்படுத்த  அனுப்பவாவது ஒரு மெயில் அக்கவுண்ட் தேவையாச்சே....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

      இன்னமும் முழுதாக க்ளீன் செய்யவில்லை. ஆனால் மகளிடம் சொன்னேன். அவளும் தன் வேலை நேரங்களுக்கு இடையே என் போனில் இருக்கும் படங்களை சிறியதாக்கி தரும் ஒரு வழியை கண்டு பிடித்து அத்தனை போட்டோக்களையும் சிறியதாக்கியவுடன் என் முந்தைய ஒரு பதிவுக்கு உங்களின் மெயில்களை காட்டின. நான்தான் அதை உங்களுக்கு தெரிவிக்க மறந்து விட்டேன். மன்னிக்கவும். ஆனால் இன்னமும் வரும் மற்ற மெயில்கள் ஏதும் வெளி வர மறுக்கின்றன.

      உங்களின் யோசனையை அவளும் தெரிவித்தாள். அதற்கும் ஒரு நேரம் வரவேண்டும். அத்துபடி கண்டிப்பாக முயற்சிக்கிறேன். இன்று தங்களின் அத்தனை கருத்துக்களும் தடையின்றி வந்து என் பதிவில் அமர்ந்தமைக்கு நானும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். தங்களின் நல்ல அறிவுரைகளுக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வணக்கம் கமலா அக்கா ...

    அழகான படங்கள்,என்ன மைசூரு என்றால் அனைவருக்கும் ஏதேனும் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும் எனக்கும் தான், நானும் சிறு வயதிலிருந்து பலமுறை சென்று வந்துவிட்டேன் ..ஒவ்வொரு முறையும் ஒரு மாதரி ஆனால் அவை எல்லாம் சிறு வயது நியாபகங்கள்...

    ஆனால் இந்த light பார்க்கும் நேரத்திக்காக காத்திருக்கிறேன் .. பசங்களுடன் விரைவில் சென்று வர வேண்டும் .. உங்கள் படங்கள் அழகு ...

    https://youtube.com/shorts/1PweVSR5w5E?feature=share இது எனது youtube link நேரம் கிடைக்கும் பொழுது வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      /என்ன மைசூரு என்றால் அனைவருக்கும் ஏதேனும் நினைவுகள் கண்டிப்பாக இருக்கும்/

      ஆம்.. குடும்பத்துடன் சென்று வரும் போது அந்த நினைவுகள் மறப்பதில்லை. தாங்கள் என் பதிவை ரசித்து நல்ல கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க மகிழ்வடைகிறேன் சகோதரி.

      நீங்களும் சிறுவயதிலிருந்து பல முறைகள் மைசூர் சென்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இப்போதுதான் இந்த தீப அலங்காரம் செய்திருக்கிறார்கள் போலும். உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடுமுறையில் ஒரு முறை போய் வாருங்கள். குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் யூடியூப் லிங்க் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கண்டிப்பாக வருகிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. மைசூர் அரண்மனை என்று சொல்லி, வெளியிலிருந்தே படங்களை எடுத்து ஜகஜோதியாக ஒரு பதிவையும் வெளியிட்டுவிட்டீர்கள். பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      காலையில் உங்களை காண முடியவில்லை என நினைத்ததும், நீங்கள் ஸ்ரீரங்கம் சென்றிருப்பீர்களோ என நினைத்தேன். இந்த வாரந்தானே பிரயாணம் உள்ளது என எபியில் சொல்லியிருந்தீர்கள். நலமுடன் சென்று ஸ்ரீ ரங்கநாதனை தரிசித்து வாருங்கள்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் தெய்வ தரிசன கோவில்கள் புகைப்படங்களுக்கு முன்பு என்னுடையது சாதாரணம். கைப்பேசியில் எடுத்தது. (அதுவும் நல்ல கூட்டத்தில்) உங்கள் பாராட்டுதலுக்கும் என் பணிவான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. மைசூர் அரண்மனையை பகல் பொழுதில் உள்ளே சென்று பார்க்கலாம், கூடவே அந்த வளாகத்துக்குள்ளேயே இருக்கும் மூன்று நான்கு கோவில்களையும். புகைப்படங்களும் உள்ளே எடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம் பகலில் அரண்மனை உள்ளே சென்று பார்க்கலாம். முன்பு செல்லும் போது கூட அப்படித்தான் அந்த அழகை ரசித்தோம். ஆனால், இப்போது ஞாயறு அன்று மட்டும் உள்ளே செல்வதற்கு (பகலில் கூட) இயலாதாம். அதனால்தான் இரவு அந்த மின் அலங்கார காட்சிகளை மட்டும் பார்த்து வந்தோம்.

      அரண்மனை உள்ளே புகைப்படங்கள் எடுக்கலாம் என்ற தகவல்களுக்கு நன்றி. இனி சென்றால் படங்கள் எடுத்துப் பகிர்கிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    முதன் முதலாக 1983-ல் மைசூர் சென்று வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து படங்களை அழகாக உள்ளதென பாராட்டியமைக்கு மகிழ்வுடனான நன்றி சகோதரரே.

      நாங்கள் 83 ல் சென்னையில் இருந்தோம். இங்கு வந்த பின் இது இரண்டாவது தடவையாக மைசூர் சென்று வந்தோம். இனியும் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தால் சென்று வரலாம். எல்லாம் தெய்வ சித்தம்.

      தாங்கள் இப்போது தேவகோட்டையில்தான் உள்ளீர்களா? உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மைசூர் அண்மனை மற்றும் சில இடங்கள் முன்னர் இரு முறை பார்த்திருக்கிறேன். இப்பவும் போக வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அதற்கான வாய்ப்பு எப்ப கிடைக்குமோ தெரியவில்லை.

    படங்கள் செமையா இருக்கு கமலாக்கா

    ஆமாம் இப்பலாம் தீம் பார்க்குகள் டிக்கெட் விலை கூடுதல்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பதிவை ரசித்து படங்களையும் பாராட்டியமைக்கு என் மனம் மிகவும் மகிழ்வடைந்தது. உங்களுக்கு அன்பான நன்றி சகோதரி

      சமயம் கிடைக்கும் போது நீங்களும் ஒரு முறை மைசூர் சென்று வாருங்கள்.தங்களின் கூற்றுப்படி மனதிற்கு ரிலாக்ஸாக இருந்ததென்னவோ உண்மைதான்.

      ஆம் ஆனாலும் தீம் பார்க் விலை அதிகந்தான். நான் எந்த நீரில் இறங்கவேயில்லை ஓடி விளையாடும் குழந்தைகளை போட்டோ எடுத்தபடி சிலவற்றில் காலை மட்டும் நனைத்தேன். அதற்கு 1000 ரூபாய்.. என்ன செய்வது? .அந்த பார்க்குக்குள் உள்ளே நுழையவே பணந்தான் பிரதானம். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. ஆனால் இது ஒரு நல்ல மாற்றம் தினப்படியான வேலைகளில் இருந்து ஓய்வு ரிலாக்ஸேஷன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். அன்றைய மூன்று நாட்கள் "காலை எழுந்தவுடன் சமையல்" என்றில்லாமல் ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது. ஆயினும் எப்போதடா வீடு வந்து மோர் சாதமாவது சாப்பிடலாம் என்றளவிற்கு ஹோட்டல் வெறுத்து விடுகிறது. எல்லாம் அக்கரைப் பச்சை கதைதான். ஆனால், வெளியில் சுற்றும் போது மனதிற்கு ரிலாக்ஸாக இருக்கிறது என்பது உண்மை. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. இப்போதும் வெளியிடாது விட்டால், மேலும் ஒரு மாமாங்கம் ஆகி விடுமென்பதால், இன்று பாக்கி எழுதாததை முடிந்த வரையில் எழுதி முடித்து இணைத்து வெளியிடுகிறேன். :)) //

    ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்.....எனக்கு ஒரு ஜோடி!!!

    நீங்களாவது வெளியிட்டுவிட்டீர்கள். நான் இருக்கேனே இன்னும் அப்படியே வைத்திருக்கிறேன் எடுத்த வற்றை வெளியிடாமல்...

    எங்கண்ணன் நெல்லைக்கு நல்லா தெரியும் அதான் என்னை கலாய்த்துக் கொண்டே இருப்பார்!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஹா ஹா ஹா. உங்களுக்கு ஜோடியாக அமையவும் நான் பெரும் பேறு பெற்றுள்ளேன். ஆனால் உங்களின் அருமையான எழுத்துக்களுக்கு நான் ஜோடியாகி விட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் மலை என்றால் நான் ஒரு சிறு மடு. அவ்வளவே சகோதரி.

      நீங்களும் நேரம் கிடைக்கும் போது எழுதியதை முடித்து வெளியிட்டு விடுங்கள். நாங்கள் படிப்பதற்காக காத்திருக்கிறோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. உங்க கைப்பேசியின் காமெரா கண்கள் ரொம்ப நல்லாருக்கே கமலாக்கா. அதுவும் இரவுக் காட்சிகள் நல்லா வந்திருக்கு!

    //அங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதிகள் உண்டா.?இல்லை கைப்பேசி முதற்கொண்டு காமிராக்களை வெளியில் பத்திரப்படுத்தி விட்டுதான் உள்ளே செல்ல வேண்டுமா..? தெரியவில்லை.//

    எடுத்துச் சென்று புகைப்படங்கள் எடுக்கலாமே கமலாக்கா. நம்ம நெல்லை போட்டிருந்தாரே எபி யில் வளைச்சு வளைச்சு எடுத்து!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஏதோ நான் தட்டுத் தடுமாறியபடி எடுத்த புகைப்படங்களை நீங்கள் பாராட்டியதில் உங்களின் பெருந்தன்மை தெரிகிறது. ஹா ஹா ஹா.

      உங்களைப் போல புகைப்படங்களும் அருமையாக எடுக்க என்னால் இயலவில்லை. தவிரவும், நெல்லை சகோதரரை என் லிஸ்டில் சேர்க்க வேண்டாம். அவர் தனி. அவர் படங்கள் தெளிவு. அருமையான கோணங்கள் பார்த்து எடுப்பார்.

      ஆயினும் மைசூர் செல்லும் போது அரண்மனை உள்ளே சுற்றிப்பார்த்து படங்கள் எடுக்க ஆசைப்படுகிறேன். நிறைவேறும் வாய்ப்பை அந்த இறைவன் அருளட்டும். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. அக்கா மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்! பாருங்க நீங்க போய் வந்து பகலில் எடுத்த படங்கள்னு போடுவீங்க!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      உங்கள் வாக்குப் பலிக்கட்டும். நாங்களும் அரண்மனையைப் பார்த்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகிறது. நடுவில் குழந்தைகள் இரண்டு மூன்று முறை சென்று வந்தார்கள். அப்போது அதில் நாங்கள் இல்லை. இன்னொரு முறை சந்தர்ப்பம் அமையட்டும். ஆனால், பிறகு உங்கள் அனைவருக்குந்தான் தலைவலி.. என் அட்டகாசமான பதிவை இங்கு பதிந்து விடுவேனே..! கூடவே என் கைப்பேசியில் எடுத்த போட்டோக்களோடு...! ஹா ஹா ஹா. தங்களது அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. பதிவு மிக அருமை கமலா ஹரிஹரன்!
    புகைப்படங்களும் அழகு.
    மைசூரைப்பார்க்க இரண்டு நாட்கள் எப்படி சரியாக வரும்? எந்த இடத்துக்குப்போனாலும் அதன் சிறப்புக்குத் தகுந்த மாதிரி போதுமான நாட்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இடையே நம் வயதுக்குத்தகுந்த மாதிரி ஓய்வும் கொடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அடுத்த நாளுக்கான பயணத்தை ரசிக்க முடியும்!
    இன்ங்கேயும் அப்படித்தான்! துபாய் உலகப்புகழ் பெற்ற இடமென்பதால் ஐந்து நாட்கள் பயணத்தில் நிறைய பேர் வருவார்கள். இங்கே சுற்றிப்பார்க்கவும் ரசிக்கவும் 15 நாட்கள் கூட போதாது. ஐந்து நாட்கள் எப்படி அனைத்தையும் ரசிக்க முடியும்? அப்படி வருபவர்கள் ஒரே நாளில் நாங்கள் ஐந்து இடங்களைப்பார்த்துக்கொள்கிறோம் என்பார்கள். ஆனால் எந்த இடைத்தையுமே ஒழுங்காக முழுவதையும் ரசிக்க முடியாமல் அடுத்த இடத்துக்கு ஓட வேண்டும்.
    பணத்தையும் செலவழித்து எதையும் ரசிக்க முடியாமல் போவது எத்தனை வருத்தமான விஷயம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      உங்களது வருகையும் கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆம்.. இருதினங்கள் போதவேயில்லை. ஆனால், எங்கள் மகன், மகள் அலுவல வேலையை ஒட்டி உடனே திரும்பி விட்டோம். நீங்கள் சொல்வது போல் இன்னமும் இருதினங்கள் அங்கு இருந்திருந்தால், மறுநாள் அரண்மனை உள்ளே சென்று சுற்றிப் பார்த்து அத்தனை அழகையும் ரசித்திருக்கலாம். மற்றொரு தடவை வரலாம் என மகன் கூறி விட்டார்.

      துபாயின் அழகைக் காணவும் நீண்ட நாட்கள் அங்கு தங்க வேண்டும். எங்கள் இளைய மகனும், மருமகளும், ஒரு தடவை அவர்கள் தங்கியிருந்த நார்வேயிலிருந்து இங்கு வரும் போது துபாயில் ஓரிரு நாட்கள் தங்கி அங்குள்ள அழகான இடங்களை பார்த்து விட்டு பின் இங்கு வந்தனர். ஆனால் நிறைய இடங்களை சுற்றிப்பார்க்க நாட்கள் போதாது. என்றுதான் கூறினார்கள். உங்கள் விளக்கமான கருத்திலும் அறிந்து கொண்டேன்.

      /பணத்தையும் செலவழித்து எதையும் ரசிக்க முடியாமல் போவது எத்தனை வருத்தமான விஷயம்!/

      உண்மை. திட்டமிடல்கள் அவசியம். அதற்கு நம் நேரங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு வகுத்துக் கொள்ள வேண்டும்.

      தங்களது அன்பான கருத்துக்கும், பதிவை ரசித்து பாராட்டி உள்ளதற்கும் என் அன்பான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. நான் எங்கும் போகவில்லை, வீட்டில் தான் எப்படி உங்கள் பதிவு எனக்கு தெரியாமல் போய் இருக்கிறது என்று ஆச்சிரியமாக இருக்கிறது.

    ஜி.ஆர்.எஸ் பார்க்கில் பேரன், பேத்திகள் நன்றாக விளையாடி களித்தது அறிந்து மகிழ்ச்சி.


    மைசூர் அரண்மனை படங்கள் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் காட்சிகளை கண்டு ரசித்தேன்.

    அரண்மனை மின்னொளி அலங்காரங்களை நன்றாக எடுத்து இருக்கிறீர்கள். பயண திட்டம் எல்லாம் நாம் எப்படி போட்டாலும் மாற்றங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது.
    ஏதோ பிள்ளைகளுடன் வெளியில் மகிழ்ச்சியாக போனோம் என்ற ஒருவகை திருப்திதான்.

    நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் அந்த சொல்வழக்கு ஏன் வந்தது என்பதற்கான விளக்கம் தெரிந்ததுதான்.

    கவண்டமணி, செந்தில் நகைச்சுவைக்காட்சி அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      மறுபடியும் எங்களுக்கு இப்போது அமைந்த பயணங்களில் உங்களது கருத கருத்து பதில் அளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      ஆம் நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுடன் வெளியே சென்று வந்த மகிழ்வு கிடைக்கிறது.

      நாய், கல் பற்றிய சொல்வழக்கின் காரணம் அறிந்திருப்பதற்கு மகிழ்ச்சி. நான் இப்போதுதான் படித்தேன். அதனால் உடனே பகிர்ந்தேன்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தந்திருப்பதற்கு என் மகிழ்வான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete