Saturday, April 22, 2023

கடலைக்காய் திருவிழா. .

ஓம் கணபதியே நமஃ. 

ஓம் நமசிவாய நம ஓம். 

வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே 

இது பசவன்குடி புல்டெம்பிள் நந்திகேஸ்வரர், தொட்ட கணபதி ஆலயம் குறித்த பகிர்வு. இந்த வருடம் பிறந்தது முதல் என்னால் வலையுலகிற்கு இயல்பாக வர முடியாத நிலைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடத்திலும் எப்போதும் போல் ஏதாவது பதிவுகள் கொஞ்சமாகவேனும் எழுத வேண்டுமென  எண்ணியிருந்தேன். அது கைகூடவில்லை. ஏனெனில் இறைவனின் விருப்பந்தானே எப்போதும் நம்மை அசைக்கும் கருவி. இருப்பினும்  இன்று என்னை எழுத வைத்த அந்த இறைவனுக்கு என் மனம் நிறைந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். 

என் நட்புகளாகிய நீங்களும்  வலையுலகில் பதிவெனும் எழுத்துகளோடு என் வரவை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

சகோதரி கோமதி அரசு அவர்கள் என்னை ஏதாவது பதிவு எழுதச் சொல்லி இரண்டு மூன்று முறை வலியுறுத்தி கூறி விட்டார்கள். அவர்களின் அன்புக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன்.(நன்றி சகோதரி. உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள்தான் மீண்டும் என் கைகளில் பதிவெனும் ஓலையில் எழுத  எழுத்தாணியை கொண்டு தந்துள்ளது.) 

எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும். 

இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. 

பாதையெல்லாம் மாறிவரும். பயணம் முடிந்து விடும். 

மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும். 

இந்த திரைப்பட பாடல் வரிகள் எனக்கு மிக, மிக பிடிததமானவை. ஏனோ இதையும் இங்கு குறிப்பிடவும் விருப்பம் கொண்டு பதிந்து விட்டேன். 

நல்லதாக இனி எழுதும் பதிவுகளின் மூலமாக இப்போதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் வந்துள்ளேன். ஆனாலும் என்னை தினமும் மறவாத உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு. 🙏. 

இந்த பசவன்குடி கோவிலுக்கு முன்பு இங்கு வந்த புதிதில் அடிக்கடி சென்றுள்ளோம். (அந்த இடத்திற்கு இரண்டு கி. மீ தொலைவிலேயே அப்போது நாங்கள் இருந்ததினால், அடிக்கடி கால் நடையாகவே நடந்து சென்று விட்டு வந்து விடுவோம்.) இப்போது இன்னமும் தொலைவில் எங்கள் ஜாகை அமைந்து விட்டபடியால், ஓலாவில் எப்போதாவது பயணித்து தொட்ட கணபதியையும், நந்திகேஸ்வரையும் தரிசித்து விட்டு வருகிறோம். நடுவில் தொற்று காரணமாக இரண்டு மூன்று வருடம் எங்குமே செல்லவில்லை. அருகிலேயே ஒரு பெரிய பூங்கா இருப்பதால், மகன், மகளின் குழந்தைகளுக்கு ஓடி விளையாட ஒரு இடமும் கிடைத்த மாதிரி இருக்குமென்பதால் இந்த மாதிரி அந்த இடத்திற்கு அன்று விஜயம். 



இது தொட்ட கணபதி ஆலயம். 



அருள் தரும் பெரிய பிள்ளையார். ஒரே பாறையில் உருவாகி பெரிதான உருவத்துடன் அருள் புரியும் இவரை கோவில் வாசலிலிருந்தே அழகாய் சேவிக்கலாம். விநாயகரே எளிமையானவர். அதிலும் இவரை சந்திப்பதும் மிக எளிது. அடிக்கடி வெண்ணெய் காப்புடன் இவரது பிரதியோக தரிசனம் அனைவரும் கிடைக்கும். 



இதுதான் அழகிய பெரிய உயரமான நந்திகேஸ்வரர். பெங்களூரை நிர்மானித்த  நிறுவனர் கெம்பே கவுடாவால் 1537 ம் ஆண்டில், 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமுமாக ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட கம்பீரமான  சிலை. 

விநாயகரை வழிபட்டு விட்டு சற்றே உயரமான பாறை மேல் படிகளின்
மூலமாக ஏறினால் இவரை தரிசிக்கலாம். எல்லா சிவன் கோவிலிலும் நந்தி தேவர் சிவனை வணங்கியபடி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.இங்கு எம்பெருமானையும், தன்னையும் வணங்கப்போகும் மக்களை வரவேற்றபடி அவர் திருக்கோலம் கொண்டுள்ளார். கோவிலுக்குள் நுழைந்ததும் கம்பீரமாக காட்சி தரும் நந்திதேவரை வணங்கிய பின் அவரை சுற்றி வலம் வரும் போது, சர்வேஷ்வரன் லிங்க வடிவில் சிறியதாக அருள் காட்சி தருகிறார். நந்தியின் பின்பக்கமாக அமர்ந்திருந்து தன் வாகனமான நந்தி தேவருக்கு முதலில் தனிச்சிறப்பை தந்து, அவரை மக்கள் முதலில் ஆராதிப்பதைக் கண்டு, அதில் ஆனந்தம் அடைந்து அருள் பாலிக்கிறார்

இங்கு நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடர்ந்து மூன்று, நான்கு நாட்களாக நடக்கும். அப்போது மக்கள் கூட்டம் எப்போதும் சாலைகளில் நடக்கக் கூட இயலாமல் இருக்கும். போக்குவரத்து பேருந்துகளும் இடம் மாற்றி சுற்றிச் செல்லுமென கேள்வி. 

முன்பு, (கிட்டத்தட்ட 300,400 வருடங்களுக்கு முன்பு) பெங்களூரின் அக்கம்பக்கம் உள்ள கிராம விவசாயிகளின் ஆதாரமான கடலைத்தோட்டத்தின்  விளைச்சல்களை தொடர்ந்து ஒரு காளை மாடு சேதமாக்கியதில், விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்ததினால், இந்த நந்தி தேவருக்கு ஒவ்வொரு  வருடமும் நிலக்கடலை அறுவடையானதும், தங்கள் வண்டிகளில் கொண்டு வநது படைத்து விட்டு, மக்களுக்கும் குறைந்த விலைகளில் போணி செய்து வியாபாரம் செய்வதாய் வேண்டிய பின், அந்தக் காளையினால் பயிர்கள் சேதமின்றி வளர்ந்து விவசாயிகள் தங்கள்  கவலைகளிலிருந்து மீண்டு நல்ல நிலையை அடைந்தார்களாம். அதிலிருந்து இந்த முறை பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறதாம்.  இதை இங்கு வந்த பின் கேள்விபட்டுள்ளேன். ஆனால், அந்த சமயத்தில் அங்கு சென்றதில்லை. 

இது இப்போது நந்திகேஷ்வரரை தரிசிக்க பெரிய விநாயகரை வணங்கி விட்டு மேலே ஏறும் போது பக்கவாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தத்ரூபமாக கடலைக்காய் திருவிழாவை காட்டும் அழகிய சிலைகள். முன்பெல்லாம் நாங்கள் சென்றபோது  இல்லை. இப்போது புதிதாக அமைத்திருக்கிறார்கள் போலும். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்த வண்ணம் சென்றோம் . இதைக்குறித்து எனக்கு தெரிந்த தகவல்களோடு, இதையும்  இங்கு பகிர்ந்துள்ளேன். 





















என்ன.. சகோதர, சகோதரிகளே, படங்களை ரசித்தீர்களா? அப்படியே அங்குள்ள பிரபலமான உணவகத்திற்கு  சென்று மசால் தோசைகள்  உண்பதற்காக வழக்கப்படி பெயர் கொடுத்து, உணவகத்திற்கு  வெளியே நிறைய நேரம் காத்திருந்த பின் எங்கள் இருக்கை கிடைத்ததும் உள்ளே சென்று தோசையை சாப்பிட்டு வீடு  வந்தோம். ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் இங்கு வந்ததும் சென்று சாப்பிட்ட அந்த ருசி நிறையவே மிஸ்ஸிங். தினசரி எல்லாம் மாறும் போது இது மட்டும் மாறாதிருக்க இயலுமா?ஆனால் விலை மட்டும் ஏற்றம். பதிவை ரசித்து கருத்திடப் போகும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏.

40 comments:

  1. Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. தாங்கள் நல்வருகை கூறியதற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இந்த ஆலயம் பற்றி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் உரையாடக் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். இங்குள்ள பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று. தாங்கள் தங்கள் சுற்றங்களின் வாயிலாக ஏற்கனவே அறிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஒரு உணவகத்தைப்பற்றி எழுதினால் பெயரைக் குறிப்பிடணும். வித்யார்த்தி பவன்தானே அது? எனக்குப் பிடிப்பதில்லை. அதுக்கு வாணிமஹால் சாலையில் எஸ்.எல்.வி ரெஸ்டாரன்ட் -உள்ளே அமர்ந்து சாப்பிடுவது, நவ்லாயிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /ஒரு உணவகத்தைப்பற்றி எழுதினால் பெயரைக் குறிப்பிடணும். வித்யார்த்தி பவன்தானே அது?/

      ஹா ஹா. ஆம் அது தாங்கள் குறிப்பிட்ட இடந்தான். தேவையில்லாமல் உணவகத்தின் பெயரைச் சொல்ல வேண்டாமென விட்டு விட்டேன். நீங்கள் குறிப்பட்ட மற்றொரு இடம் எங்கள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கும். பொதுவாக ஆங்காங்கே இருக்கும் எஸ். எல். வியில் அதிக தடவைகள் சாப்பிட்டிருக்கிறோம். ஆனால், நாங்களும் நீங்கள் குறிப்பிட்ட அங்கு சென்றிருக்கிறோமா என்பது தெரியவில்லை. விசாரிக்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மனிதர்களை, விலங்குகளை சிலையில் வடிக்கலாம்.  மனிதனுக்கு எதிரில் குவிந்து கிடைக்கும் கடலைக்காயை சிலைவடிவில் தத்ரூபமாகக் கொண்டு வருவதென்பது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது.  அற்புதம்.  நுணுக்கமான வேலை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கடலைக்காயை சிலைவடிவில் தத்ரூபமாகக் கொண்டு வருவதென்பது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது. அற்புதம். நுணுக்கமான வேலை./

      ஆம். நேரில் பார்க்கும் போது எங்களுக்கும் ஆச்சரியத்தை தந்தது. முன்பு பல தடவைகள் செல்லும் போது இவ்விதம் பார்த்ததில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் உருவாகியுள்ளது. ஒவ்வொன்றும் கலை நுணுக்கமாகத்தான் இருந்தது. நீங்களும் படங்களை பார்த்து ரசித்ததற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. சுவாரஸ்யமான படங்களுடன் அவசியமான விவரங்கள்... அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் பதிவு அருமையாக உள்ளதென கூறியது எனக்கும் மகிழ்வை தந்தது. நீண்ட மாதங்களுக்குப்பின் எழுதவே தோன்றாத பல சூழ்நிலைகளில் எப்படியோ உருவான பதிவு. இதற்கு சகோதரி கோமதி அரசு அவர்களின் ஊக்கம் தந்த வார்த்தைகள்தான் காரணம். அவர்களுக்கும் என் அன்பான நன்றி. உடனே வந்து பதிவை படித்து பாராட்டிய உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இந்த ஆலயத்துக்கு இன்னும் செல்லும் வேளை வரலை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இந்த ஆலயத்துக்கு இன்னும் செல்லும் வேளை வரலை/

      கண்டிப்பாக வரும். நீங்கள் அந்தப்பக்கம் அடிக்கடி நடைப்பயிற்சிக்காக செல்லுவது குறித்து அன்று தெரிவித்திருந்தீர்கள் .

      அனைவருக்கும் ஒரு செயலுக்கான வேளைகளை உருவாக்கும் வேலவனின் அண்ணன் வேழமுகத்தோன் அந்த ஒரு வேளையையும் தங்களுக்கு உருவாக்கித் தருவார்.

      ஒரு நாள் அவரைக் காண அந்த விநாயகப் பெருமானே உங்களை அழைப்பார். அப்போது சென்று அவரை தரிசித்து விட்டு வாருங்கள். தங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. படங்களும் விவரமும் நன்றாக இருக்கின்றன. நந்தி சிவலிங்கத்துக்கு ஏற்ற சைசில் இருக்கணும். இங்கு நந்திகேஸ்வரருக்கு முக்கியத்துவம் என்பதால் புல் டெம்பிள் ரோடு பெயர்க்காரணம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இங்கு நந்திகேஸ்வரருக்கு முக்கியத்துவம் என்பதால் புல் டெம்பிள் ரோடு பெயர்க்காரணம். /

      ஆம். இங்கு சிவனை விட நந்தி பெரியதுதான். அதனால்தான் இப்பெயர் வரக்காரணம். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கன்னடத்திலும் கடலை தானா? பதிவு நன்றாக உள்ளது. 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் உடல்நிலை சற்று சரியில்லையென நேற்று எ. பியில் வரும் போது தெரிந்து கொண்டேன். தற்சமயம் முற்றிலும் சரியாகி விட்டதா?

      ஆம். கன்னடத்திலும் கடலைக்காய்தான். சில சொற்கள் தமிழ் வடிவத்தில் பேசும் போது உணர்ந்திருக்கிறேன். எனக்கு இன்னமும் கன்னடம் பேச பழக்கமாக வில்லை. என் பெரிய மகன் அழகாக கன்னடம் பேசுவார்.

      பதிவு நன்றாக உள்ளதென்ற தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. சிலைகளின் படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.

    விநாயகரை நானும் வணங்கி கொண்டேன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து படித்தமைக்கும், படங்களை ரசித்ததற்கும் மிக்க மகிழ்ச்சி.

      தாங்களும் பெரிய விநாயகரை வணங்கி கொண்டதற்கும் சந்தோஷ மடைந்தேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. படங்களும் பதிவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /படங்களும் பதிவும் அருமை.../

      படங்களையும் பதிவையும் ரசித்துப் பார்த்து, ,படித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அருமையான பதிவு.
    கண்ணதாசனின் தத்துவ பாடல் மிகவும் பிடித்தமானது.
    வேலைகளுக்கு இடையே பதிவை அழகாய் எழுதி விட்டீர்கள்.
    பசவன்குடி பெரிய பிள்ளையாரை நான் பள்ளி சுற்றுலாவில் தரிசனம் செய்து இருக்கிறேன். அங்கு அவருக்கு போடும் தேங்காய் மாலை மிகவும் பிரசித்தம்.

    நந்திகேஸ்வரர் படம், மற்றும் விவரம் அருமை.
    கடலைக்காய் திருவிழா படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. கடலைக்காய் குவித்து வைத்து வியாபாரம் அருமை.
    பூம் பூம் மாட்டுக்காரர் சிலை அருமை. சில வருடங்களுக்கு முன் பெங்களூர் வந்த போது கங்கை அம்மன் கோவிலில் பூம் பூம் மாட்டுக்காரரை படம் எடுத்தேன்.

    குடும்பத்துடன் உணவகம் சென்று வந்தது மகிழ்ச்சி. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியே சாப்பிடுவது மட்டும் மகிழ்க்சியாக அமையும். ஓட்டல் உணவு மகிழ்ச்சி தருவது இல்லை போல சில நேரம் . உணவு ருசி மாறி கொண்டேதான் இருக்கும் நீங்கள் சொல்வது போல.

    முடிந்த போது பதிவு போடுங்கள் கமலா. என் பேரை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி. எல்லோர் பதிவையும் படித்து விரிவாக பின்னூட்டம் போட்டு நீங்களும் எல்லோரையும் ஊக்கப்படுத்தி வருகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்துப்படித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி. தாங்கள் ஏற்கனவே பள்ளிச் சுற்றுலாவில் இந்தப் பகுதியை கண்டு கொண்டதற்கும் மகிழ்ச்சி. பெங்களூரில் பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்றல்லவா?

      படங்களை ரசித்துப் பார்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. கங்கை அம்மன் கோவில் எங்குள்ளது எனத் தெரியாது. மேலும் இங்கு பேர் பெற்ற அம்மன் கோவில்கள் நிறைய உள்ளன.

      ஆமாம் அன்று மாலை சீக்கிரமே வெளியில் சென்றதால், இரவு வருவதற்குள் பசி வந்து விடுமே என அங்குள்ள அந்த ஹோட்டலுக்குச் சென்றோம் . சின்னக் குழந்தைகளும் ஹோட்டல் செல்ல ஆர்வமாக இருக்கின்றனர். இப்போதெல்லாம் இப்படி மாலை நேரம் வெளியில் செல்வதாக அமைந்தால், இரவு உணவை வெளியிலேயே சாப்பிட்டு வந்து விடுவோம்.

      இனி உங்கள் விருப்பபடி பதிவுகள் போட (எழுத) முயற்சிக்கிறேன். இந்தப்பதிவு கூட உங்களால்தான் வெளி வந்தது. நன்றி.

      எனக்கும் எழுத நிறைய விருப்பம் உண்டு. கைப்பேசியிலேயே எழுதுவதால், வீட்டு வேலைகள் அதை நிறைவேற்ற விடுவதில்லை. இன்றே பாருங்கள்.. உங்களுகெல்லாம் பதில் கருத்து தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      அடிக்கடி சமயம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளுக்கு வந்து, எழுதும் ஆவலைத் தணித்துக் கொள்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கடலைக்காய் விழா பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். பசவங்குடி நந்திகேஸ்வரர் வந்த கதையும் தெரியும். அநேகமாக பெண்களூர் வரச்சே எல்லாம் பசவங்குடி வந்து நந்திகேஸ்வரரைப் பார்த்திருக்கோம். பிள்ளையார் நினைவில் இல்லை. பின்னாட்களில் அவர் வந்திருக்கலாம். உங்கள் பதிவின் மூலம் அவரையும் தரிசித்துக் கொண்டேன்.

    கடலைக்காய் விழாச் சிற்பங்கள் அற்புதம் எனில் கடலைக்காய்களே சிற்பங்களாக ஆகி இருப்பதும் அதி அற்புதம். இதெல்லாம் முன்னாடி கிடையாது எனவும் இப்போத்தான் வந்திருப்பதாகவும் சொல்லி இருக்கீங்க. எனக்கும் முன்னாடி எல்லாம் பார்த்த நினைவு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். நீங்கள் பெங்களூர் வரும் போதெல்லாம் இந்தக் கோவிலுக்கு சென்றிருப்பதாக முன்பே ஒரு தடவை கூறியுள்ளீர்கள். விநாயகரை பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளீர்கள். ஒரு வேளை கொஞ்ச காலத்திற்கு முன்தான் அங்கு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாரோ என்னவோ..? ஆனால், நாங்கள் இங்கு மதுரை திருமங்கலத்திலிருந்து இங்கு வந்தது (2007)முதல் இவரைப் பார்க்கிறோம்.

      ஆம். இப்போதுதான் வைத்துள்ள இந்த கடலைக்காய் திருவிழா சிலைகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தது. அதனால்தான் இங்கு பகிர்ந்தேன். படங்களை நீங்கள் ரசித்து பார்த்தமைக்கு என் மகிழ்வான நன்றி. உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. நானும் ப்லாகிற்கு வருவது குறைந்து விட்டதால் நீங்கள் வரவில்லை என்பதை உணரவில்லை. விநாயகரை தொட்டு தொடங்கியிருகிறீர்கள், சிறப்பாக தொடர வாழ்துக்கள்!
    பெங்களூர் வந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இன்னமும் பசவங்குடி செல்லவில்லை. உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். இப்போது கொஞ்ச மாதங்களாக எதுவும் எழுத இயலவில்லை. இப்போதுதான் மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு வந்துள்ளேன். தாங்களும் வெளி வேலைகள், வீட்டு வேலைகள் என பதிவுலகத்திற்கு அவ்வளவாக வருவதில்லை எனவும் அடிக்கடி நீங்கள் எ. பி யில் சொல்லி அறிந்திருக்கிறேன்.

      உங்கள் அன்பான வாழ்த்திற்கு என் மனம் நிறைந்த நன்றி. நீங்களும் நிறைய விஷயங்களை அழகாக சுருக்கமாக பகிர்ந்து கொள்பவர். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். இனி நீங்களும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதுங்கள். உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்வை தருகிறது.

      உங்களுக்கும் பசவங்குடி சென்று விநாயகரை வழிபடும் வேளை விரைவில் வர அந்த விநாயகரை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. நல்ல பதிவு கமலா அக்கா,

    பசவன்குடி நந்திகேஸ்வரர் கோவில் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
    போன வருடம் கூட சென்று வந்தோம்..
    தொட்ட கணபதி அழகாக இருப்பார்.

    இந்த கடலை காய் திருவிழா பற்றி தெரிந்து இருந்தாலும் இன்னும் ஒரு முறை கூட நேரில் கண்டது இல்லை. பார்ப்போம் இந்த வருடமாவது வாய்ப்பு வருமா என்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களது தெய்வீகமான பதிவுகள், படங்கள் என உங்கள் பதிவுகளை படித்துள்ளேன். இந்தப்பதிவுக்கு உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

      தங்களுக்கும் அடிக்கடி விநாயகரை தரிசித்து வருவது மற்றும் நந்திகேஸ்வரரை தரிசித்து வருவது பிடித்தமானது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவரை பிடிக்காதவர்கள் என்று யார்தான் இருக்க முடியும். அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பார்.

      நாங்களும் கடலைக்காய் திருவிழா சமயத்தில் அங்கு ஒரு முறை கூட சென்றதில்லை. ஒரு தடவையாவது அச்சமயத்தில் சென்று வர விருப்பமிருக்கிறது. இந்த வருடம் உங்களுக்கும், எங்களுக்கும் அங்கே சென்று வர வேளை வரட்டும். இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. கமலாக்கா! நீங்க நவம்பர்ல போனீங்களா? நான் இப்ப சமீபத்துல பெரிய கணபதி, நந்திகேஸ்வரர் இருவரையும் பார்த்து ஹலோ சொல்லிவிட்டு கூடவே மாவடு வாங்கலாம்னு காந்திபஜார் போய்....வந்தேன். அப்ப நீங்க படத்தில் போட்டிருப்பது போன்ற மாறுதல்களைப் பார்த்தேன். முன்ன கிடையாதே...

    நான் போனது காலை நேரத்தில்...கொஞ்சம் தான் படம் எடுத்தேன்.

    படங்கள் ரொம்ப நல்லா இருக்கு கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் இப்போது சென்று கணபதியை தரிசித்து விட்டு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நான் இன்னமும் நவம்பரில் செல்லவில்லை. நானும் மார்ச் மாதத்தில்தான் சென்று வந்தேன்.

      /மாவடு வாங்கலாம்னு காந்திபஜார் போய்....வந்தேன். அப்ப நீங்க படத்தில் போட்டிருப்பது போன்ற மாறுதல்களைப் பார்த்தேன். முன்ன கிடையாதே.../

      ஆமாம்... நானும் மார்ச் மாதத்திற்கு முன்பாக சென்ற வருடம் ஒருதடவை வழிபட சென்ற போது இந்தச் சிலைகளை அங்கு கண்டதில்லை. மாவடு வாங்கினீர்கள்? அங்கு (காந்திபஜாரில்) இல்லாத பொருளே கிடையாது. நமக்கு வேண்டியதை அங்கு சென்றால் சுலபமாக வாங்கிக் கொள்ளலாம்.

      படங்களை ரசித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. உற்சாகமாக எழுதுங்க கமலாக்கா....நானும் கொஞ்சம் பிசியாகிவிட்டேன்....இன்னும் வரும் வாரங்களிலும்...கொஞ்சம் வேலைகள் கூடுதல்.

    ஆமாம் இங்கு நவம்ப்ர்ல கடலேகாய் திருவிழா.....இந்த முறை போக முடியவில்லை.

    ப்திதாக வந்திருக்கும் இந்தச் சிலைகள் ரொம்ப தத்ரூபமாகப் பண்ணியிருக்காங்க. நான் ரசித்துப் பார்த்தேன். ஒரு சிலதான் எடுக்க முடிந்தது. காரணம் வெயில் அடித்ததால் கோணம் சரியாக அமையலை அதனால் வெயிலுக்கு ஏற்ப சரியாக கோணம் அமைந்தது ம்ட்டும் எடுத்தென்..

    ரொம்ப நல்லாருக்கு படங்கள். தொடர்ந்து எழுதுங்க கமலாக்கா...(நான் உங்களுக்குச் சொல்வேன்!! ஆனா நான் எழுத மாட்டேன் நிறைய இடைவெளி விட்டுவிடுகிறேன்!! ஹிஹிஹிஹி)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களின் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள்தான் எனக்கு உற்சாகத்தை தரும் டானிக். நீங்களும் வேலைகளில் மும்மரமாக இருப்பதை பார்த்தேன். வேலைகளோடு வேலையாக அவ்வப்போது சில பதிவுகளை தருகிறீர்கள். இன்னமும் நிறைய எழுதி நிறைய பதிவுகளை தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

      /ப்திதாக வந்திருக்கும் இந்தச் சிலைகள் ரொம்ப தத்ரூபமாகப் பண்ணியிருக்காங்க. நான் ரசித்துப் பார்த்தேன். ஒரு சிலதான் எடுக்க முடிந்தது. காரணம் வெயில் அடித்ததால் கோணம் சரியாக அமையலை அதனால் வெயிலுக்கு ஏற்ப சரியாக கோணம் அமைந்தது ம்ட்டும் எடுத்தென்../

      அப்படியா? ஆமாம்.. புதிதாக நிறுவியிருக்கும் அந்த சிலைகள் ரொம்பவே நன்றாக இருந்தன. நீங்கள் எடுக்கும் படங்கள் எப்போதும் துல்லியமாக அழகாக இருக்கும். (காமிராவில் எடுப்பதால்) அதையும் உங்கள் பகிர்வாக நீங்கள் உங்கள் பதிவில் பகிருங்கள். நாங்கள் எங்கள் கைப்பேசியில் எடுத்தோம். அதிலும் அன்று நான் என் கைப்பேசியை வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டேன். இவை என் மருமகள் எடுத்தவை. பதிவையும், படங்களையும் ரசித்து ஊக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. அழகான படங்களுடன் சிறப்பான விவரங்கள்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
      பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. மூன்று நாட்கள் வரைக்கும் கவனிக்காமல் இருந்தது எப்படி?..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /மூன்று நாட்கள் வரைக்கும் கவனிக்காமல் இருந்தது எப்படி? /

      அதற்கென்ன..! பரவாயில்லை. பதிவு இங்கேயேதானே இருக்கப் போகிறது. அது சமயத்தில் தங்களுக்கு உடல்நல மில்லை என்று எ. பியில் கூறியிருந்தீர்கள். தற்சமயம் உடல்நிலை பூரண குணமாகி விட்டதா? தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. பிள்ளையார் எல்லாருக்கும் நல்லருள் புரிவாராக!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பிள்ளையார் அனைவரையும் காத்தருள நானும் வேண்டிக் கொண்டேன். நீங்கள் சொல்வது போல் தொட்ட கணபதி அனைவரையும் கண்டிப்பாக காத்தருளுவார். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. பெரிய பிள்ளையார் நந்திகேசவர் தரிசனம் பெற்றோம்.
    படங்கள் சிலைகள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நீங்கள் வந்து பெரிய பிள்ளையாரையும் நந்திகேஷ்வரரையும் தரிசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி. தொடர்ந்து ஒரு மாதமாக வலைத்தளம் வரவில்லையாததால் அனைத்துப் பதிவுகளிலும் உங்கள் கருத்துக்களை கவனிக்கவில்லை. அனைத்திற்கும் தாமதமாக பதில் தருவதற்கு பொறுத்துக் கொள்ளவும். அனைத்துப் பதிவுகளையும் விடாது படித்து தங்களது ஊக்கம் மிகும் கருத்துகளை பதிய வைத்திருப்பதற்கு என்பணிவான நன்றி சகோதரி. தொடர்ந்து வாருங்கள். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete