Sunday, August 14, 2022

பழைய நினைவுகள்.

வணக்கம் அனைவருக்கும். 

இன்றைய ஞாயிறு லால்பாக் பதிவை எ. பியில் பார்த்ததும்,  சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் அந்தப் பதிவொன்றுக்கு ஜூலை 31 ல் கருத்திட்ட அன்றே நான் எழுதி வைத்த இப்பதிவு  எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இப்போது பகிர்ந்து விட்டேன். படித்து கருத்திடும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

துரை செல்வராஜூ31 ஜூலை, 2022 அன்று பிற்பகல் 5:14

ஹிந்துப் பெண்களுக்கு பூக்கள் ஒரு இடைஞ்சலா!?...

தாழை மடல் வைத்து வைத்து பின்னிக் கொண்ட ஜடைகளைப் பார்த்து ரசித்த நாட்கள் எல்லாம் இனிமேல் வரவே வராது..

உண்மைதான்.. .இந்த கருத்தை எ. பியில்  அந்த ஞாயறன்று  நம் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள்  லால்பாக் பதிவில் தனது கருத்தாக பதிந்ததை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்தன. எங்கள் அம்மா தாழம்பூ, மல்லிகை, செவ்வந்தி, மாதுளை பூக்கள் (என் இளைய பிராயத்தில் எங்கள் பிறந்த வீட்டில் மாதுளை பூக்கள் மட்டும் பூக்கும் பெரிய மரம் போன்ற செடி நீண்ட நாட்கள் இருந்தது. ஆனால் தப்பித்தவறி அதில் ஒரு காய் கூட வந்ததில்லை. இப்படியும் அதில் சில வகைகள் உண்டென விபரம் தெரிந்த அக்கம்பக்கம் உள்ள அனைவரும் கூறினார்கள். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அது பூக்களை மட்டுமே வஞ்சனையின்றி தினமும் தந்து கொண்டிருந்தது. இறைவனுக்கும் மாலை தொடுத்து சார்த்துவோம். எனக்கும், அக்கம்பக்கம் உறவின் பெண்களுக்கும், எங்கள் அம்மா ஜடையில் வைத்து தைத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும்.  சிகப்பான அதன் நிறம் கண்களை கவரும். நீளமான ஜடையில் அதை வைத்து தைத்து, மல்லிகை சரத்தை நெருக்கமாக தொடுத்து தலையில் அம்மா அழகாக வைத்து விடுவதை, பின்புறம் ஒரு கண்ணாடியில் அது தெரியுமாறு காட்டி, முன்னால் இருக்கும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வோம். அப்போது வீட்டில் காமிரா இல்லை. புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு  சென்று புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் திறனும் இல்லை. இப்படியே காலங்கள் என்றும் இருந்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் மனதில் இருந்தது போலும்... அதனால், மனமெனும் காமிராவில் மட்டும் அது அழுத்தமாக பதிந்து கொண்டு விட்டது. இப்போது அதைச் சொல்லிச்சொல்லி ரசிப்பதை தவிர வேறு வழியில்லை. ) வைத்து ஜடையில் தைத்து விடுவார்கள். அது ஒரு காலம். இப்போது பெண்கள் அனைவரும் தங்கள் கூந்தலை வெறும் ஜடை பின்னிக் கொள்வதே உலக அதிசயமாக உள்ளது. 

சகோதரரின் இந்த பதிலை பார்த்ததும் எத்தனை விஷயங்கள் நம் காலத்தில் பார்த்து கேட்டு ரசித்திருக்கிறோம் என நினைக்கையில்  எனக்கு எப்போதோ வாட்சப்பில் வந்த உறவு யாரோ அனுப்பி வைத்த இந்த வாசகங்களும் நினைவுக்கு வந்தது. சுற்றி வரும் இதை நீங்களும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் படிக்காதவர்கள் இங்கும் படித்து ரசிக்கலாம் என பகிர்ந்துள்ளேன். 

இதோ அந்த வாட்சப் வாசகங்கள். . 
 
நாம்தான் கடைசி தலைமுறைகள்....

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

2.ஓனிடா டி வி பெட்டியை பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

3.செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!

5.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.

6.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .

9.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.

10.காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

11.நண்பர்களுக்கு, உறவுகளுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

12. 10th 12th ரிசல்ட் பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்

13.கதவு வச்ச டிவி யை பாத்த கடைசி தலைமுறை நாம தான்

14.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

15.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறைதான்.

16.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

17.ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்

18.நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது நாம்தான். 

19.கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

20.நொண்டி, கிட்டிப்புள் (கிள்ளித் தாண்டு) பம்பரம், கண்ணாமூச்சி, கோலி என பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

21. 1,2,5,10,20,25,50 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

22.தியேட்டரில் மண் தரையில் உட்கார்ந்து படம் பார்த்த கடைசி தலைமுறை நாமதான்,

23.ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்ட கடைசி தலைமுறை நாமதான்,

24.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான்

25.இதையெல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகளோடு  நம் கண்ணில் சிறுதுளி கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

இதை எழுதிப் பகிர்ந்தவருக்கு என் மனமார்ந்த நன்றி. அது போல் படித்து ரசித்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் . 🙏. 

41 comments:

  1. வாட்ஸ் ஆப் செய்திகள் மனதை கனக்கத்தான் வைத்தது.

    இன்றைய பெண்கள் தலைவிரி கோலமாகத்தான் இருக்கிறார்கள் பூ வைக்க, நெற்றியில் பொட்டு வைக்க பிடிப்பதில்லை.

    கேட்டால் ஃபேஷன் என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      பதிவுக்கு தங்களின் உடனடி வருகைக்கும். கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாட்சப் பகிர்வுகளை படித்துச் சொல்லிய கருத்துக்கு மிக்க நன்றி.

      ஆம்.. எங்கு பார்த்தாலும் தாங்கள் சொல்கிறபடிதான்.. மாறி வருகிற அவர்களின் கருத்துக்களை நம்மால்தான் ஜீரணிக்க இயலவில்லை. என்ன செய்வது? காலங்கள் மாறும் என நம்பிக்கை கொள்ள வேண்டியதுதான். பதிவின் கருத்துகளுக்கு மகிழ்வுடன் கூடிய நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. நம் கலாச்சாரத்தை அழிந்துபோகச் செய்கிறார்கள் என்ற நினைவு கூட அவர்களிடம் இல்லை. வற்புறுத்துவதற்காக, கண்ணுக்குத் தெரியாத அளவில் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள்... என்ன செய்ய?

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். கண்களுக்கு தெரியாத பொட்டு வைத்துக் கொள்வதும், பொட்டே வைக்காமலிருப்பதும் ஒன்றுதான். ஆனால் இதில் அந்தக்காலம் போல அவரவர்களின் விருப்பங்களை ஏதும் சொல்லி தடை செய்ய முடியவில்லை. தங்கள் மனம் திறந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. சொல்லலாம்தான் ஆனால் யோசித்துப் பாருங்கள்..  இந்தக் காலத்தில் புடைவை ரவிக்கை அணிந்து தழைய தழைய பின்னலிட்டு, பூ அம்பாரமாய் வைத்துக் கொண்டு, தலையை எண்ணெய் தடவி அழுந்தச் சீவிப் பின்னலிட்டு, பெரிய பொட்டிட்டு (தேவைப்பட்டால் கன்னத்தில் ஒரு மைப்பொட்டிட்டு   கண்களில் குயில் வால் மையெழுதி வந்தால் எப்படி உணர்வீர்கள்?

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இந்தக் காலத்தில் புடைவை ரவிக்கை அணிந்து தழைய தழைய பின்னலிட்டு, பூ அம்பாரமாய் வைத்துக் கொண்டு, தலையை எண்ணெய் தடவி அழுந்தச் சீவிப் பின்னலிட்டு, பெரிய பொட்டிட்டு (தேவைப்பட்டால் கன்னத்தில் ஒரு மைப்பொட்டிட்டு கண்களில் குயில் வால் மையெழுதி வந்தால் எப்படி உணர்வீர்கள்/

      ஹா.ஹா.ஹா இத்தனையும் நடக்க சாத்தியமா? ஆனாலும் நாம் இதை (மனதுக்குள் கற்பனை செய்தபடி ) சொல்லி பார்த்துக் கொள்ளலாம். அப்படி நடந்தால் பழைய காலத்திற்கே சென்று விட்ட உணர்வு வந்து விடும். நடுவில் வந்த சில திரைப்படங்களில் எப்போதாவது இந்த மாதிரி கதாநாயகியை நடுவில் சித்தரித்து காண்பித்தார்கள். ஆரம்பத்திலேயே வெட்டு ஒன்று, துணடு இரண்டாக வரும் இந்தக்கால படங்களில் அப்படியேதும் வருதற்கு கூட வாய்ப்பு இல்லை. . காலம்... அதை என்னச் சொல்ல... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பழைய நினைவுகள் அருமை.
    மாதுளம் பூவில் ஜடை தைத்து விட்டது இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
    காய் காய்க்கும் என்றால் பூவை பறிக்க விட மாட்டார்கள்.
    புகைப்படம் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    மதுரையில் இன்னும் மஞ்சள் பூசும் முகங்கள் உண்டு.
    திருவிழா காலங்களில் பூ தைத்த ஜடைகளை பார்க்கிறேன்.
    எவ்வளவு விலை விற்றாலும் தலை நிறைய மல்லிகை பூவைத்து செல்கிறார்கள். சிவந்தி பூ, தாழம்பூ காலத்தில் சிவந்தியால் ஜடை அலங்காரம் உண்டு
    மண் குழப்பி வீடு கட்டி விளையாடும் குழந்தைகளும் மதுரையில் இருக்கிறார்கள் நான் அவர்களை படம் எடுத்து பதிவில் போட்டேன்.

    இன்னும் கிராமபுற குழந்தைகள் பழைய விளையாட்டுக்கள் விளையாடுகிறார்கள் நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்பு குழந்தைகள் வேண்டுமென்றால் மாறி இருப்பார்கள்.

    நாம் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் மதுரையில் குழந்தைகள் விளையாடுகிறார்கள் ஆலமரத்து ஊஞ்சல். கல்லா, மண்ணா. கண்ணாமூச்சி, குரங்கு பெடல் சைக்கிள், பன நொங்கு வண்டி, சட்டி பானை விளையாட்டு, நொண்டி, கிட்டிபுள் இன்னும் பசங்க மறக்கவில்லை.
    ஓணான் அடித்தல், கோழி குண்டு , தீப்பெட்டி போன், சிகிரெட் பெட்டி அட்டை சீட்டுகட்டு, தீபெட்டியில் பட்டுப்பூச்சி வளர்த்தல்,டயரில் வண்டி ஓட்டுதல்,பம்பரம் விடுதல்

    மயில் இறகை புத்தகத்தில் வைத்து குட்டி போடுகிறதா என்று பார்ப்பது எல்லாம் இன்றும் இருக்கிறது. இங்கு பழையது மறைய வில்லை.
    கல்யாணம், காது குத்துக்கு ஒலிசித்திரம், பழைய பாடல்கள் வைக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவிலில் காது குத்து விழா காலையிலிருந்து பழைய பாடல்கள் எம்.ஜி ஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள் ஒலிக்க விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
    ஜவ்மிட்டாய் வாட்ச் கட்டுகிறார்கள் குழந்தைகள்.
    நான் மகிழ்ந்து கொள்கிறேன் இவற்றை எல்லாம் பார்த்து பிள்ளைகள் இன்னும் பழசை விரும்புகிறார்கள்.

    நான் வியந்து போய் அவைகள் படம் எடுத்து என் பதிவுகளில் போட்டு இருக்கிறேன்.

    வெளி நாடு சென்ற நம் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுக்கள் மறந்து இருக்கலாம்.
    ஆனால் இங்கு உள்ள குழந்தைகள் இன்னும் விளையாடுகிறார்கள்.

    மக்கள் தொலைக்காட்சியில் முன்பு இது போன்ற கிராமபுற விளையாட்டுக்களை குழந்தைகளை விளையாடுவதை பகிர்ந்தார்கள். அவர்கள் பழைய பாடல்கள் வேறு பாடுகிறார்கள்.

    உங்கள் பதிவு மலரும் நினைவுகளை கொண்டு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. எங்கள் வீட்டில் வளர்ந்த மாதுளம் பூ நல்ல கெட்டியாக இருக்கும். அது காய் பிடிக்காது என்று சொன்னார்கள். அதுபோல் அதுவும் இறுதிவரை காய்களே தரவில்லை. அதிசய செடியாகத்தான் வளர்ந்து இருந்தது. ஆனால் அந்தப் பூ வைத்து ஜடையில் நெருக்கமாக தைக்கும் போது மிக அழகாக இருக்கும். நான், நீங்கள் சொல்வது போல் ஒரு புகைப்படம் எடுக்க அப்போது வீட்டில் காமிரா போன்ற எந்த வாய்ப்பும் இல்லை. புகைப்பட நிலையத்திற்கு சென்று எடுத்திருக்கலாம். அதுவும் தோன்றவில்லை.எனக்கு அப்போது மிகுந்த அடர்த்தியான முடி வேறு. அதனாலேயே எங்கள் அம்மா அடிக்கடி இந்த மாதிரி ஜடைகள் தைத்து அழகு பார்ப்பார்.

      நீங்கள் அந்தக்கால சிறார்கள், சிறுமிகள் விளையாடும் விளையாட்டெல்லாம் சொல்லி விட்டீர்கள். கேட்கவே மிகுந்த சந்தோஷமாக உள்ளது. உங்கள் பதிவுகளில், அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டுகளை விளையாடுவதைப்பற்றி நீங்கள் சொல்லியுள்ளீர்கள். நினைவிருக்கிறது. ஆனால் நான் எங்களூருக்கு செல்லும் போது (தி. லி) சில இடங்களில் பசங்க கோலி, பம்பரம் விடுதல் கிட்டிப்புள்ளி என்று விளையாடுவதை முன்பு பார்த்துள்ளேன். இப்போதெல்லாம் அது போல் காண இயலவில்லை. கிரிகெட் சுவாரஸ்யம் அவர்களிடம் தொற்றிய பின் இந்த பழைய விளையாட்டுகளை அவர்கள் தவிர்த்து விட்டார்களோ என எனக்கும் அப்போது தோன்றியது.

      நகரங்களில் வளரும் குழந்தைகள் வேறு மாதிரி.. இப்போதுள்ள குழந்தைகள் டி. வி, கம்யூட்டர் என நவீன முறைகளில் வரும் வீடியோ கேம் விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள். ஃபோனிலும் பல விளையாட்டுக்கள் வந்து விட்டன. மொத்தத்தில் காலம் மாறி விட்டது நன்றாகத் தெரிகிறது.

      என் பதிவு, தங்களின் மலரும் நினைவுகளை உண்டாக்கியது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தேன். தங்களின் விரிவான கருத்துக்கு மகிழச்சியுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இதையெல்லாம் படிக்கும்போது பழைய நினைவுகளோடு கண்ணில் சிறுதுளி கண்ணீர் எட்டிப் பார்ப்பதும்,

    அதையும் ரசித்து மகிழ்ந்த கடைசி தலைமுறையும் நாம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      படித்ததில் அனைத்தும் பிடித்ததாக இருந்ததினால்தான் இங்கும் பகிர்ந்தேன். பதிவை முழுக்க ரசித்துப்படித்து தந்த தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பதிவின் சிகரம் அந்த வார்த்தைகள்...

    அச்சிடுவதற்குள் கருத்துரை முந்திக் கொண்டது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பதிவின் சிகரம் அந்த வார்த்தைகள்../

      புரிந்து கொண்டேன். தங்கள் தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்.
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. @ கில்லர் ஜி..

    // இன்றைய பெண்கள் தலைவிரி கோலமாகத்தான் இருக்கிறார்கள் பூ வைக்க, நெற்றியில் பொட்டு வைக்க பிடிப்பதில்லை.. //

    அதற்குக் காரணம் கல்வி முறை..

    அதைக் கற்பிக்கும் பள்ளிகளின் நடைமுறை.. பள்ளியில் சேர்க்கும் போதே பிள்ளையின் பெற்றோர்
    பாழ் முண்டம் மாதிரி நெற்றியில் பொட்டு வைக்காமல் கூந்தலில் பூ இல்லாமல் சென்று கூனிக் குறுகி நிற்கின்றார்கள்..

    தீபாவளி கொண்டாட்டத்தில் மருதாணி வைத்துக்
    கொண்டதற்காக அடி வாங்கிய பிள்ளைகளும் இருக்கின்றனர்..

    ReplyDelete
    Replies
    1. கலாச்சாரச் சீரழிவை பள்ளிகள் ஆரம்பித்துவைக்கின்றன, அல்லது மதமாற்றத்திற்கான அடித்தளம் போடப்படுகிறது. வேறு என்ன சொல்ல?

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தீபாவளி கொண்டாட்டத்தில் மருதாணி வைத்துக்
      கொண்டதற்காக அடி வாங்கிய பிள்ளைகளும் இருக்கின்றனர்../

      அது வேறா? ஆனால் அதுபோன்ற சில விஷயங்களில் உண்மையென நானும் என் மகளின் பள்ளிப்படிப்பில் உணர்ந்திருக்கிறேன்.

      @ வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      நீங்கள் சொல்வதும் சரியாக இருக்குமோவென சந்தேகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

      உங்களிருவரின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அரங்கேற்றம் படத்தில் ஒரு
    வசனம்..

    ஆம்பளை என்றாலே மரத்துப்
    போச்சு.. என்று..

    அப்படி பூ, பொட்டு என்பதும் மரத்துப் போச்சு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பூ, பொட்டு என பழைய சம்பிரதாயங்களை பெண்கள் ஒட்டு மொத்தமாக மறக்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் இந்தக்கால நாகரீகங்களில் சிலர் கவரப்பட்டு இதை சற்று தவிர்க்கிறார்கள். அவ்வளவே.. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எனது கருத்தின் அடிப்படையில் கண் கலங்கச் செய்யும் பதிவு..

    இதற்கு மகிழ்ச்சி இல்லை.. நன்றி மட்டுமே..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் கருத்துதான் என் பழைய நினைவை உண்டாக்கி ஒரு பதிவாக இடச்செய்தது. அதற்கு முதற்கண் என் நன்றியை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அதில் உங்களின் ஆதங்கம் எனக்குள்ளும் எழுந்ததென்னவோ உண்மை. ஆனால் சகோதரி, கோமதி அரசு அவர்கள் சொல்வது போல், ஒரு வீட்டின் விஷேடங்கள், ஊரின் விழாக்கள் என்ற போது தலை நிறைய பூ வைத்துக் கொள்வதை பெண்கள் தவிர்ப்பதில்லை. முன்பு போல் ஜடைகள், அதில் தைக்கப்பட்ட பூ அலங்காரங்கள் என அடிக்கடி செய்து கொள்ளவில்லையே தவிர தலை நிறைய பூக்கள் வைத்துக் கொள்ள தயங்குவதில்லை. முன்பு இருந்த பொறுமைகள், நேரங்கள் இப்போது பெண்களுக்கும் இல்லை என்பதும் ஒரு விஷயம். அதனாலும் அவர்கள் இதில் ஆர்வம் காட்ட விருப்பபடுவதில்லை. என்பதும் உண்மையே..

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. //1,2,5,10,20,25,50 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,// - 2 ரூபாயை, 5 ரூபாயைக் கடைசியாகப் பார்த்த தலைமுறையும் நாம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து அதில் ஒன்றை குறிப்பிட்டு சொன்னமைக்கு மிக்க நன்றி.

      ஆம், ஆனால் இப்போது 2, 5 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளனவே. இரண்டு ரூபாய் நோட்டுக்கள்தாம் இப்போது இல்லை. ஐந்து ரூபாய் நோட்டுக்கள் கூட வேறு வடிவில் உள்ளதே.. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. என்ன என்னத்துக்கோ கடைசித் தலைமுறை நாம்தான் என்று சொல்றீங்களே... ஒரு வீட்டில் மூன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைப் பார்த்த கடைசித் தலைமுறை, உறவினர்களுடன் பழகிய கடைசித் தலைமுறை, 95 சதம் வீட்டில் செய்து சாப்பிட்ட தலைமுறை என்று பலப் பலவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். இதையெல்லாம் சொன்னால், நமக்கு வயதாகிவிட்டது என்று சொல்லிவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஒரு வீட்டில் மூன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைப் பார்த்த கடைசித் தலைமுறை, உறவினர்களுடன் பழகிய கடைசித் தலைமுறை, 95 சதம் வீட்டில் செய்து சாப்பிட்ட தலைமுறை என்று பலப் பலவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். /

      ஹா.ஹா.ஹா உண்மை. தாங்கள் கூறுவதும் சரியே..

      /இதையெல்லாம் சொன்னால், நமக்கு வயதாகிவிட்டது என்று சொல்லிவிடுவார்கள்./

      ஹா.ஹா.ஹா. இப்போது மட்டுமென்ன... "அந்த காலத்தவர்களே இப்படித்தான் ஏதாவது உவமானங்களுடன் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்" என அவர்கள் முகஞ்சுளிப்பதிலேயே நம் வயதின் அடையாளம் வெளிப்படையாக நமக்கே தெரிந்து விடுமே..:)))

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. மாதுளம்பூ எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.  பார்த்திருப்பேன்.  அதுதான் மாதுளம்பூ என்று தெரிந்திருக்காது.  கூகுள் செய்து பார்க்க வேண்டும்.  நீங்கள் பதிவில் மாதுளம்பூவை இணைத்திருக்கக் கூடாதோ....!! 4/1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் ஜடை பின்னலிட்ட விபரங்கள் சொன்ன காலம் 1965 லிருந்து 1977வரையிலான காலங்கள் . அதன்பின் அந்த மரத்திலும் சில மாற்றங்கள் வந்து தினமும் பூக்கும் பூக்களை குறைக்க ஆரம்பித்து விட்டது. அதன் அருகிலேயே காட்டு மல்லி என்ற மல்லிகைப்பூவும் போட்டியாக வளர்ந்து மணம் வீசி பலனளித்து வந்தது. அப்போது இந்த இரு செடி, கொடிகளும் எங்கள் பிறந்த வீட்டு முற்றம் முழுவதும் மணம் வீசிக் கொண்டிருந்த காலம் மறக்க முடியாதது.

      இப்போது காய்கள், பழங்களுடனான மாதுளம்பூவை கூகுள் செய்து நானும் பார்த்தேன். அதுவும் சற்று வேறுபாடாகத்தான் உள்ளது. காலம் அதனுடனும், மாறுபட்டுப் போகுமோ..? தெரியவில்லை. ஆனால் நினைவுகள் என்றும் பசுமையாக மனதுள் உள்ளது. துரை செல்வராஜ் சகோதரரின் ஜடை பற்றிய கமெண்ட்ஸை படித்ததும் அது நினைவின் மேலோட்டத்தில் வந்து விட்டது.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. ஒவ்வொரு வீட்டிலும் தப்பாது இருக்கும் படம் இந்த தாழம்பூ வைத்து பின்னலிட்டு ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட மாதரசிகளின் படம்!  எங்கள் வீட்டில் பாஸ் எடுத்துக் கொண்டுள்ளார். இருக்கிறது.  சகோதரிகள் எடுத்துக் கொண்டதில்லை 2/4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. இந்த மாதிரி ஸ்டுடியோவில் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது அந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இயல்புதான். எங்கள் வீட்டில் எனக்கு அந்த அனுபவங்கள் என் திருமணத்திற்குப் பினதான் பிறந்த வீட்டில் கை கூடி வந்தது. மன்னியுடன் சேர்ந்து குழந்தைகள் உட்பட பிறகுதான் அங்கு சென்று எடுத்து வந்தோம். அந்த ஜடை தைத்த விட்ட பொழுதினில் ஸ்டுடியோவிற்கு போக வேண்டுமென தோன்றவில்லை .தங்கள் பாஸ் அவ்வாறு எடுத்துக் கொண்டது குறித்து சந்தோஷம். இப்பவும் நம் பழைய உருவத்தை, கண்டு ரசிக்கலாமே... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. ஆமாம்..   தலையைப் பின்னுவதே இந்தக் காலத்தில் அதிசயம்தான்.  பின்னுமளவு முடி இருப்பதும் அதிசயம்தான்!  அழகு நிலையம் சென்று குறைத்து விடுகிறார்கள். 3/4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். இப்போது நன்றாக , நீளமாக, வளரும் தலை முடியைக் கூட அழகு நிலையம் சென்று குறைத்து காண்பித்து அழகு பார்த்துக் கொள்கிறார்கள். எப்படித்தான் இப்படி மனது வருகிறதோ என நானும் அவர்களைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அந்தக்காலத்தில் நாங்கள் தினசரி கூடுதலாக தலைமுடி உதிர்ந்தால், மிகவும் கவலைப்படுவோம். அந்தக் கவலையில் வேறு முடி கொட்டிப் போகும். அது வேறு.... :) இப்போது அதைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. கேட்டால், அநாவசியமாக கொட்டாமல் தடுக்கத்தான் இப்படி வெட்டி வருகிறோம் என்கிறார்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      Delete
  13. கடைசி தலைமுறை தகவல்களில் இன்னும் நிறைய நிறைய சேர்க்கலாம்.  காலம் மாறிக்கொண்டே வருகிறது.  நமக்கு இனிதாகத் தோன்றியது இந்தத் தலைமுறைக்குத் தோன்றுவதில்லை! 4/4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நமக்கு இனிதாகத் தோன்றியது இந்தத் தலைமுறைக்குத் தோன்றுவதில்லை! /

      உண்மைதான். இதுபற்றி நிறைய சொல்லலாம். ஆனால் யாரும் சொல்லி கேட்கும் மனநிலையில் இல்லை என மட்டும் புரிகிறது. தங்களிடமும் இது போல் கடைசி தலைமுறை தகவல்களின் எண்ணிக்கையை கூட்டும் கருத்துக்கள் இருப்பது புரிகிறது. ஆனாலும் இக் காலத்திற்கு ஏற்ப நாமும் மாறி வருகிறோம் என்பதும் அப்பட்டமாக புரிகிறது.என்ன செய்வது?

      பதிவை குறித்த உங்களது அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கமலாக்கா தலைப்பைப் பார்த்ததும் எனக்கு என் சிறு வயது நினைவுகள் வந்தன. ஆமாம் தாழம்பூ வைத்து ஜடை போட்டுக் கொண்டது....நல்ல பதிவு கமலாக்கா

    ஆனால் இன்னும் குழந்தைகள் எல்லாம் பூ வைத்துக் கொள்கிறார்கள், பழைய விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.

    ஆனால் பூக்கள் வெளியில் சிதறி கால்களில் மிதிபடுவதில் எனக்கு உடன்பாடு சுத்தமாக இல்லை. பூக்கள் ரசிக்கப்பட வேண்டியவை. ஆனால் கல்யாணக் கூடங்கள், கோயில்களில் அவை எப்படி மிதிபடுகின்றன என்பது என் மனம் மிகவும் வருத்தப்படும். பூக்களை மென்மையானவை என்று பெண்களுக்கு ஒப்பிடுகிறோம் இல்லையா? அப்ப பெண்கள் கசக்கி எறிப்படுவது போலத்தான் பூக்களும் எறியப்படுகின்றன.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


      ஆகா... உங்களது பழைய நினைவுகளையும் தூண்டியதா? இந்தப்பதிவு. சந்தோஷமாக இருந்தது.

      /ஆனால் இன்னும் குழந்தைகள் எல்லாம் பூ வைத்துக் கொள்கிறார்கள், பழைய விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்./

      உண்மைதான் சகோதரி.. நாகரீகங்கள் மாறினாலும், பழைய மாதிரி பூக்கள் நிறைய வைத்துக் கொள்வது ஜடையில் வைத்து தைத்துக் கொள்வது என்பது சில கிராமங்களில் தொடரத்தான் செய்கிறது.அதுபோல், சிறார்களும், சிறுமிகளும் பழைய கால விளையாட்டுகளை நகரமல்லாத கிராம பகுதிகளில் விளையாடுகிறார்கள்.

      தாங்கள் சொல்வது போல பூக்களை மிதிப்பதும், நன்றாக இருக்கிற பூக்களை கசக்கி எறிவதும் எனக்கும் பிடிக்காது. ஆம்.. பெண்களுக்கு உவமானமாக பூக்களை கவிஞர்கள் அன்றிலிருந்தே சொல்வதுதானே... தலையில் வைத்து வாடினாலும், அதை அப்படியே வெளியில் சென்று கு. தொட்டியில் போடுவதோடு, உதிர்ந்திருக்கும் பூக்களையும், அப்படியே சேகரித்து குப்பைத் தொட்டியில் போடும்படிதான் என் குழந்தைளிடமும் சொல்லி வளர்த்துள்ளேன். மேலும் வாடிய பூக்கள் செடிகளுக்கு நல்ல உரமும் கூட... தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      வேலைகள் காரணமாக இப்படி இடையிடையே வந்து பதில் கருத்துக்கள் தருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. வாட்சப் தகவல்களில் பல எனக்கென்னவோ சரியில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போதும் பிள்ளைகள் விளையாடுகிறார்கள்.

    கொஞ்ச்ம நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நகரங்களில் மண்ணில் வீடு கட்டி விளையாட மண் இருக்கிறதா? கட்டும் வீடுகளில் ஒரு துளி மண்ணேனும் இருக்கிறதா? அடுக்குமாடிகள் எவ்வளவு ஆகியிருக்கின்றன?

    இப்பவும் பிள்ளைகள் பீச்சுக்குச் சென்றால் மணல் வீடுகட்டுகிறார்கள் கோட்டைகள் கட்டி விளையாடுவதை இப்போது சமீபத்தில் கூடக் கண்டேன் சென்னை சென்றிருந்த பொது.

    இளையவர்களை ஒரே அடியாக நாம் குற்றம் சொல்லக் கூடாத் இல்லையா கமலாக்கா? அவர்களின் சூழலை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லோரும் வயிற்றுப் பிழைப்புக்காக படிப்பு, வேலை என்று நகரங்களுக்கும் வெளிநாட்டிற்கும் செல்ல வேண்டிய சூழலில் ?

    கடந்தவரை கடந்தவைதான். இந்த மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. இப்போதைய இருப்பில் உள்ளவற்றை நினைத்துச் சந்தோஷப்படுவோம் நம் குழந்தைகளுக்கு மனித நேயம் இருந்தால் அதுவே பெரிய விஷயம் கமலாக்கா இல்லையா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என்னை தாங்கள் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்களுக்கு ஒன்றுக்கு மட்டும் பதில் தந்து விட்டு, பிறவற்றிக்கு இப்போதுதான் தருகிறேன் என வருத்தமாக உள்ளது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். வீட்டில் கொஞ்சம் வேலை அதிகம். நேற்று வெளியில் செல்லும் வேலையும் சேர்ந்து கொண்டது. எப்போதும் போல், இரவு பதினொன்றுக்கு கைப்பேசியை வைத்துக் கொண்டு பதில் கருத்து தரலாம் என அமர்ந்ததும், கண்கள் அசதியில் தாமாகவே நித்திராதேவியிடம் சரணடைந்து விடுகிறது.:)) அதனால் இரண்டு நாட்களாக தாமதமாகி விட்டது. மறுபடியும் மன்னிக்கவும்.

      தங்கள் கருத்துக்கள் உண்மைதான். ஏற்றுக் கொள்கிறேன். நகர்புறங்கள் அடுக்குமாடி குடியிருப்புடன் வளர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள் வெளியே சென்று விளையாட இடவசதி இல்லாமல் போவதும் இயற்கைதான். அந்தக்காலம் போலில்லாமல், நம் குழந்தைகளும் வெளியிடம், வெளிதேசம் என சம்பாதிக்க செல்வதால், அவர்கள் குழந்தைகளும், இவ்விதமான விளையாட்டாடுகளை அறிய, பழக இயலாமல் போவதும் உண்மைதான்.

      /கடந்தவரை கடந்தவைதான். இந்த மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. இப்போதைய இருப்பில் உள்ளவற்றை நினைத்துச் சந்தோஷப்படுவோம் நம் குழந்தைகளுக்கு மனித நேயம் இருந்தால் அதுவே பெரிய விஷயம் கமலாக்கா இல்லையா?/

      உண்மை. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். அது ஒன்றுதான் இந்த காலகட்டதிற்கு அவசியமாக தேவைப்படுவது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. கமலாக்கா நான் முடி கிராப்பாக வைத்துக் கொண்டவள்தான். பூ வைத்துக் கொள்வது கிடையாதுதான். அதற்குப் பல காரணங்கள் உண்டு.

    எனவே பூ வைத்துக்கொள்வது பற்றிய விஷயங்களில் என்னால் சிலவற்றிற்குக் கருத்து சொல்ல இயலவில்லை. தப்பா எடுத்துக்காதீங்க கமலாக்கா. சிலவற்றில் நான் ஐடியலிஸ்டிக்காக இல்லாமல் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது மனம் விட்ட கருத்துக்கு நன்றி. எனக்கும் திருமணத்திற்கு முன்பு இருந்த நீண்ட முடி குழந்தைகள் பெற பெற அனைத்தும் கொட்டி விட்டது. ஒரு முப்பது வயதுக்குள்ளாக அத்தனையும் கொட்டி எலிவால் ஜடையாக மாறி விட்டது. அதைப் பார்த்து உறவுகள் அனைவரும் கேலி செய்வார்கள். அப்போது வருத்தமாக இருக்கும். அதனால் பின்னல் எதுவும் போடாமல் அதை சுருட்டி சுற்றி கொண்டையிட்டுக் கொண்டு, இப்போது முடி சுத்தம்,. :))) அதனால் இந்த மலரும் நினைவுகள் உதயமானது.

      தங்கள் எண்ணங்களை நான் எப்படி தப்பாக எடுத்துக் கொள்வேன்.? உங்கள் எண்ணங்களுக்கும் ஒரு அடிப்படை காரணம் என்ற ஒன்று உண்டல்லவா? தங்கள் மனம் விட்ட கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. கமலாக்கா , நானும் மாதுளம் பூவில் சடை வைத்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறேன். அழகாக இருக்கும். ரசிப்பேன்....

    அது போல மாதுளை முத்துகளிலும் மாலை கட்டுறாங்க இப்ப!!!!!!நோ கமென்ட்ஸ்!!!!!!ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்களும் அந்தப்பூவில் ஜடை தைத்து பார்த்திருக்கீறீர்களா? சந்தோஷமாக உள்ளது

      மாதுளை முத்துக்களில் மாலை தொடுப்பதும் சிறப்புத்தான்.

      கோவில்களில், இறைவனுக்கு மாலை அப்படி தொடுத்து சார்த்துவார்களோ? தங்களின் நல்லதொரு கருத்துக்கள் அனைத்திற்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. எத்தனை எத்தனை இன்பங்களை இழந்திருக்கிறது இளைய தலைமுறை!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். உண்மைதான்.. நாம் நம் பெற்றோர், உறவினர்கள் செய்த நற்செயல்கள், நல்ல பழக்க வழக்கங்கள் இவற்றில், சிலவற்றை நம் வாழ்க்கை திருப்புமுனையில் செய்ய தவறி விட்டோம். அதுபோல் இப்போது மாறி வரும் இக்காலத்தில், நம் இளைய தலைமுறைகளும் சில நிர்பந்தத்தினால், மகிழ்ச்சியான பல விஷயங்களை இழந்திருக்கின்றார்கள். என்ன செய்வது? எல்லாம் கால மாற்றந்தான்.

      தங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் வந்து என் பதிவை ரசித்துப்படித்து எனக்கு ஊக்கமளித்தற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete