Friday, March 2, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 2)

வளர்ப்பு மகனின் அன்பான அரவணைப்பு  அவளுடைய  மனக்காயத்தை சிறிது குணப்படுத்தியது.  "நான் இருக்கிறேன். அம்மா ! நீ அழுதது போதும். இனி உன் கண்களில்  கண்ணீரின்  நிழல் கூட படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று உருக்கமாக சொன்ன சொல்லில்,  இதயம் கரைந்து  விழிகளில் நீர் எட்டிப்பார்த்தது. அவன் கைகளை பிடித்து,  அவனை லேசாக அணைத்தபடி , அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..நீ.எனக்ககுன்'னு, இருக்கிற  தைரியத்தில் தான் எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்கடா!  போதும் !  நீ ஒருத்தனாவது, ஆயுசோட இருக்கனும்டா!''என்று அழுது கொண்டே சொன்னவள் தன்னை  சிறிது நேரத்தில் ஆசுவாசபடுத்திக்கொண்டாள். காலம் மெள்ள நகர்ந்தது.. தன் சொந்த மகனைப்போல்  படிப்பில் இவன் ஆர்வமாக படிக்காவிடினும்,  படிப்புகேற்றபடி  அவன் வேலைதேடி  சோர்ந்து போனதும் , அவனை தட்டிக் கொடுத்தபடி,. ஆறுதலுடன் தேற்றினாள்.


ஒருநாள் தான் நண்பர்களுடன்  சேர்ந்து பிஸினஸ்  தொடங்க போவதாக கூறியதும், தன் கணவரின் சேமிப்பிலிருந்து  அவன் கேட்ட தொகையை எடுத்து தந்து ஊக்கப்படுத்தினாள்.  சற்று சறுக்கலும், சொஞ்சம் செழிப்புமாக  அவன் வளர்ந்து வரும் போது, சொந்தத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து  அவனுக்கு திருமணம் செய்து விட்டால்,  "அக்காடா'' என்று நிம்மதியாக இருக்கும் வாழ்நாளை  கழித்து விடலாமே  என்று  தோன்றியது..வடக்கே வேலை விசயமாக சென்று வருகிறேன் என்று போனவன் அப்படியே தன் உறவையும், ஊட்டி வளர்த்த அன்பையும் முறித்துக் கொள்வான் என கனவீல் கூட நினைக்கவில்லை. நாள் செல்லசெல்ல அவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை..அறிந்தவர் தெரிந்தவர் கேட்கும்போது கூட ,அவனை விட்டுக்கொடுக்காமல், " வருவான். ! வாழ்க்கையில் ஜெயித்து விட்டு நீ கொடுத்த பணத்தை பன்மடங்காக்கி உன்னிடம்  கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். அதை நிறைவேற்றும்  மனதோடு இருக்கிறானோ என்னவோ"!  என தனக்காவும் சேர்த்து சொல்லி சமாதானபடுத்திக் கொள்வாள்.


காலம் யாருக்காகவும் காத்திராமல் இயல்பான வேகத்தில் ஓடிய ஒரு நாளில்., நாத்தனாரின் கணவர் வகை சொந்தமான ஒருவர் ஒரு நாள் இவளை இங்கு சந்தித்த போது.. " உங்களுக்கு விசயமே தெரியாதா?  அவன் வடக்கிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நல்ல வசதியோடு வாழ்கிறான்.ஒரு குழந்தைக்கும் தந்தையாகி விட்டான். " என்ற செய்தியை கூறியதும் அவள் சற்று அதிர்ச்சியடைந்து போனாள். வாழ்க்கையில் எத்தனையோ  இடிகளை பொறுத்துக் கொண்டவளுக்கு இந்த இடி சற்று நேரே தலையில் விழுந்த பிரமையை ஏற்படுத்தியது. ஆனாலும் பொறுத்துதான்  ஆகவேண்டும்! வேறு என்ன செய்வது என்ற மனநிலையை உண்டாக்கி கொண்டாள். "பெற்றவனை பிரித்து அழைத்துக்கொண்ட ஆண்டவனுக்கு வளர்த்தவனை பிரிக்க கஸ்டமா என்ன ?"என்று தோன்றிய நிலையில், இறைவனிடம் சென்று நாலு கேள்வி கேட்டு புலம்ப தூண்டிய மனதை " உன் விதி! அவன் என்ன செய்வான்?" எனக்கூறி சாமாதானபடுத்திக்கொண்டாள்.

பழைய நினைவுகளுடன் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் "அத்தை" என அழைத்துக்கொண்டே கோகிலா வரவும் எழுந்து அமர்ந்தாள் .

"அத்தை உடம்புக்கு என்ன ? நீ இன்னைக்கு வரல்லைன்னு இல்லத்திலே சொன்ன உடனே ஓடி வர்றேன். நீ அங்கேதானே இந்த நேரத்திலே இருப்பேன்னு உன்னைப் பார்க்க நேரே அங்கேதான் போனேன் . என்னாச்சு?" என்றபடி படபடத்த அவளை  நோக்கி லேசாக புன்னகைத்தாள் பார்வதி.

"எனக்கு ஒன்றுமில்லை கோகி! காலையிலே லேசா தலை சுத்தின மாதிரி இருந்திச்சு.  எப்பவும் சாப்பிட்ட உடனே போயிடுவேன்..இன்னிக்கு என்னமோ கொஞ்சம்... ஒன்னுமில்லே! என்னாலேயும் அங்க போகமே ஒருநாள் கூட இருக்க முடியாது.. ஏதோ உன் புண்ணியத்திலே பழசை மறந்து நான் நிம்மதியா இருக்க ஆண்டவன்  வழி பண்ணியிருக்கான். அதை கெடுத்துக்கிற மாதிரி நா நடந்துப்பேனா? நாளைக்கு கண்டிப்பா நா அங்கேயிருப்பேன். என்றாள் சிறிது தடுமாறிய  குரலில்.

"ஐயோ அத்தை! இப்போ உன்னை நா ஏன் அங்கே போகலைன்னு கேக்கவா வந்தேன். உனக்கு என்னாச்சோ, ஏதோன்னு ஓடி வந்திருக்கேன். உனக்கு முடியலைன்னா  நீ பேசாமே எங்கூட வந்து தங்கிடு. நா எப்போதிருந்தே அதைதான் சொல்றேன். நீதான் பிடிவாதமா அதை தட்டி கழிச்சிட்டு இப்படி இல்லத்துலே சேவை செய்யற வேலையை  ஏத்துண்டு தன்னந்தனியா இப்படி கஸ்டப்படறே ...நா உன்னை.... "என்று மேற்கொண்டு பேசிச் சென்றவளை கைகளை பிடித்து  தன் தளர்ந்த கைகளில் ஏந்திக் கொண்டாள் பார்வதி.

"எனக்கு தெரியாதா கோகி!  எவ்வளவோ மனோபலத்துடன் இருந்த நான் கையிருப்பும் கரைஞ்சி அதுக்கப்புறம் என்ன பண்ண போறொம்னு திகைச்சு நின்ன வேளையிலே தெய்வம் மாதிரி நீ வரல்லைன்னா, என் வாழ்க்கை அதோகதியா ஆயிருக்கும்.நீ எப்படியோ என்நிலை தெரிஞ்சி  இங்கே வந்து உன் கையோட கூட்டிக்கிட்டு போவேன்னு ஒத்தகாலோடு நின்னதையும் என்னாலே மறக்க முடியுமா?  நீ கூட்டுக்குடும்பத்திலே மூத்தவளா நின்னு எல்லோரையும் எப்படி கட்டி காப்பாத்திகிட்டு வர்றேங்கிறதே அப்பதான் நா தெரிஞ்சிகிட்டேன். இதிலே நா வேறே!  உனக்கு பாரமா அங்கேவர மாட்டேன்னு நா பிடிவாதமா நின்னதும், மாசாமாசம் என் செலவுக்கு நீ பணம் குடுக்கப் போக, அப்பதான் எனக்கு அந்த யோசனை வந்தது. உன் வீட்டுகாரரோட நண்பர்  ஆரம்பிச்சு நடத்திகிட்டு வர்ற இல்லத்திலே ஒரு வேலை கேட்டப்போ, எனக்கு வயசானாலும் பரவாயில்லைன்னு அங்கேயிருக்கிற குழந்தைகளை பாத்துக்கிற வேலை வாங்கி கொடுத்தே!   நா இப்போ கவலை இல்லாமே சாப்பிடவும் செய்றேன். குழந்தைகளை பார்த்து அவங்க சந்தோஸத்தை பார்த்து  அவங்களை மாதிரியே கவலை இல்லாத ஒரு மனுஸியா வாழ்ந்துகிட்டும் வர்றேன். இதெல்லாம் உன் தயவில்லாமே எனக்கு கிடைச்சிருக்குமா?  போகட்டும்! எது வரைக்கும் வாழ்வு போறதோ அது வரைக்கும் போகட்டும்!  இவ்வளவு கஸ்டபடுத்தின ஆண்டவன் என் கடைசி நிமிஷத்தை எப்படி....அவளை முடிக்க விடாது அவள் வாயை பொத்தினாள் கோகிலா.

"போதும் அத்தை! கடைசி புராணமெல்லாம்! இப்ப என்ன உனக்கு  தெம்பு இருக்கிற வரை, இல்லையில்லை! உனனோட சந்தோஸத்துக்கு மட்டுந்தான் நீ இந்த வேலையிலே சேர விட்டேன் .நீ இப்ப உம்னு சொன்னா கூட என்னோட அழைச்சிண்டு போய் உன்னை ராஜாத்தி மாதிரி பாத்துப்பேன். வர்றியா?" எங்கண்ணா பண்ணிய தப்பை நான் செய்ய மாட்டேன். அவனை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு! உன்னை பத்தரமா பாத்துக்குவான்னு அம்மா சொல்லி சொல்லி பூரிச்சிட்டிருந்தா!  ஆனா அவன் இப்படி உன் தலையிலே கல்லைத்தூக்கி போடுவான்னு யார் கண்டா? அம்மா இருக்கிற கடைசி காலம் வரைஅதை சொல்லிண்டேயிருந்தா!  அவன் எங்கேயிருக்கானோ!  ஆனா உனக்கு அவன்பண்ணின பாவத்துக்கு வேண்டாம்! கடவுள்பாத்துப்பான்! ஆனா நா இப்ப கடவுள் புண்ணியத்திலே நா நல்லாயிருக்கேன். உன்னை கண் கலங்காமே பாத்துக்க வேண்டியது  என் பொறுப்பு. நீ எதுக்கும் கவலை படாதே! " என்றாள் கோகிலா லேசாக கண் கலங்கியவாறு.

" கோகி  எதுக்கு பெரியவார்த்தை யெல்லாம் சொல்றே! யாரும் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணலே! அததது நடக்கிற விதத்திலே நடந்துதான் தீரும். யாருமே எந்த செயலுமே மனசாற நினைச்சு பண்றது கிடையாது.  ஏதோ நினைப்புலே அவங்க அறியாமே பண்றது  கூட தெய்வ சங்கல்பந்தான். அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேதான் ஆகனும். நா அவனை இப்படியெல்லாம் நினைச்சதே கிடையாது எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கட்டும்.. என்று பார்வதி கூறியதும், "உன் மனசு யாருக்கும் வராது அத்தை!" என்றபடி அவளை அன்போடு அணைத்துக் கொண்டாள் கோகிலா.
(தொடரும்...)

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 1


9 comments:

 1. நம்மீது அன்பு செலுத்தியவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டாலும் என்றும் மனதளவில் மிகவும் நெருக்கமாகவே இருப்பார்கள். இதனை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்களது உடனடி முதல் வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்,

   Delete
  2. வாழ்வில் அன்பு காட்டியவர்களை,அவர்கள் நம்மை பிரிந்து வெகு தொலைவில் சென்று விட்டாலும் என்றுமே மறக்க இயலாது.தங்கள் அனுபவம் முற்றிலும் சரியானதே! கதையினை தொடர்நது படித்து வருதற்கு மிக்க நன்றிகள்.

   Delete
 2. மறுபடியும் வேகமாக சம்பவங்கள். புரிந்த வரை ஏமாற்றி விட்டுப் போன பையன் பிராயச்சித்தம் தேடி வந்து கொண்டிருக்கிறான். இந்தப் பெண் கோகி அவன் அக்கா. சரியா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   இரண்டாம் பகுதிக்கும் வருகை தந்து கருத்துரை வழங்கியது மகிழ்வாக இருக்கிறது.என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

   தங்களின் கணிப்பு சரிதான்!ஆனால் அக்கா இல்லை! தங்கை! கதையில் பார்வதியின் வளர்ப்பு மகனின் தங்கை நான் என அவளே ஓரிடத்தில் குறிப்பிடுகிறளே!

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. வாழ்வில் எதிர்பார்ப்பு அதிகமாகி ஏமாற்றமானால் அதிக வலியைத் தரும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் சரியான கருத்துக்கள் தந்தமைக்கும் என் மகிழ்வான நன்றிகள்.

   தாங்கள் கூறியுள்ளது போல் வாழ்க்கையின் வலிகள் இவ்விரண்டால்தான் உற்பத்தியாகின்றன. தொடர்வதற்கு நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. எது வரைக்கும் வாழ்வு போறதோ அது வரைக்கும் போகட்டும்! //

  அருமையாக சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   முடிவின் எல்லையை என்றேனும் ஒருநாள் சந்தித்துதானே ஆக வேண்டும்.
   பாராட்டியமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete