Friday, June 5, 2015

இனிப்புடன் ஆரம்பம்...



வலைத்தளம் ஆரம்பித்து எழுத (கிறுக்க) வந்த போதே  என் தமயந்தி பாகத்தையும்  (ஆண்கள் சமையல் என்றால் நள பாகமாகும் போது பெண்களின் சமையலை தமயந்தி பாகம் என்று சொல்லக்  ௬டாதா..? ) அவ்வப்போது வெளியிட எண்ணம் கொண்டேன். ஆனால் அது உண்மையாகவே தமயந்தி பாகமாகிவிட்டால் என்ன செய்வது என அமைதி காத்து விட்டேன். (ஏனெனில், அரச குடும்பத்தில் பிறந்து செல்வ செழிப்பில் வாழ்வின் முதல் அத்தியாயத்தை கழித்த தமையந்தி சமையல் அறையே எவ்விடம் உள்ளது என அறியாதவளாகத்தானே இருக்க முடியும். அதன் பின்புதானே சமைப்பது..!) ஆனால் அரசனாகப்பிறந்தும், விதியின் பரிசாக ஆய கலைகள் அறுபத்திநான்கிலே ஒன்றான சமையல் பக்குவத்தில் கைமணமாக செய்து முடிக்கும் திறன் நளனிடம்  இயல்பாகவே வரப்பிரசாதமாக குடி கொண்டிருந்தது. நளனுக்கு நிகர் வேறு யாருமில்லை (இன்றளவும்) என்னும் வண்ணம் நள பாகமென்றஅடை மொழி அந்த அரசனிடமிருந்து சுவையாக சமையல் செய்யும் அனைவரிடமும்  ஆண் பெண் பேதமின்றி ஒட்டிக்கொண்டது. ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஆண்கள் உணவு தயாரிக்கும் போது பொதுவாக “இன்று நள பாகந்தான்என்று அலுத்துக் கொள்வது மாதிரி சொல்லிக்கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் சுவையான பாகந்தான்நள பாகம்”. அந்த மாதிரி சுவையான உணவு கலையில் பல சகோதரிகள் வலைத் தளத்தில் கலக்கி கொண்டிருக்க, என் சமையல் குறிப்புக்கள் தமையந்தி பாணியில் அமைந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் இது நாள்வரை கைகளை கட்டி விட்டது. இன்று ஒரு மாற்றத்திற்காக இந்தப்பதிவில் என் சமையலையும் சற்று இனிப்பாக ஆரம்பிக்கட்டுமா.?
வேறு வழியில்லை.! சகித்துதான் ஆகவேண்டும். விதிதான் அவ்வளவு சுலபமாக எல்லோரையும் விட்டு விடுமா என்ன.? (உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)


மைசூர் பாகு….


 கடலை மாவு சலித்தது இரண்டு கப்

சர்க்கரை நாலு கப் (மாவுஒன்றுக்கு இரண்டு சர்க்கரை என்ற கணக்கில் சொல்லியுள்ளேன். இனிப்பு அதிகம் தேவைபடுகிறவர்கள்  ௯ட அரைக் கப் எடுத்துக் கொள்ளலாம்.)

நல்ல நெய் இரண்டு கப் (அவ்வளவு கொழுப்பா உனக்கு ..?என்று என்னை கேட்பவர்கள்) அதிகம் என நினைத்தால் அரைக் கப் குறைத்துக் கொள்ளவும். வாயில் போட்ட மறுநிமிடம் கரைய வேண்டுமென நினைத்தால் அந்த மாதிரி கேள்வி ஏதும் கேட்காதீர்கள்.!

ஒரு வட்ட( ஓவல் ) வடிவ சற்று ஓர விளிம்பு உயரமாக உள்ளத் தட்டில் (அதன் விளிம்பின் சுவர்களில் நன்கு படியுமாறு ) தட்டு முழுவதும் உட்பக்கம் நெய் விட்டு பரவலாக தடவி வைத்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான் ! இனி மைசூரை (ஊரை இல்லைங்க) கிண்ட போகலாமா?

கடலை மாவை ஒரளவு பச்சை வாசம் போகும் வரை சற்று நிறம் மாறும் வரை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை ஒரு தட்டில்  கொட்டிக் கொண்டு அதே கடாயில் சர்க்கரையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அது மூழ்கும் வரை (ஒரு கப்) தண்ணீர் விட்டு கிளறினால் சற்று நேரத்தில் சர்க்கரை கரைந்து கொதி வரும். அப்போது வறுத்து வைத்திருக்கும் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். இரண்டு கலவையையும் சேர்ந்து கை விடாது கிளறும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற கிளற இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக வரும் போது, ஏற்கனவே நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி சமன்படுத்தி சற்று ஆறிக் கொண்டுள்ள போதே, வில்லைகள் செய்து வேறு ஒரு பெரிய தட்டில் அதை கவிழ்த்தால், சூடான சுவையான மைசூர் பாகு கட்டிகள் தயார்.

இந்த மைசூர் பாகு இருக்கிறதே.! அது வாயில் விண்டு போட்டால், (முதலில் விண்டு போடும் அளவுக்கு இலகுவாக இருக்க வேண்டும். கை விரல்களின் எலும்பை உடைத்து விடும் அளவுக்கு இரும்பை ஒத்ததாக இருக்க ௯டாது. கிளறும் போது விள்ளும் பதத்தை அதுவோ, இல்லை நாமோ கொஞ்சம் மறந்து விட்டாலும் இரும்பு கட்டிகளாகும் நிலை சாதாரணமாக சொல்லிக் கொள்ளாமல் உருவாகி விடும். எனவே எச்சரிக்கை.!) வாயில் கரைய வேண்டும். கண்கள் இரண்டும் கடாயிலிருக்க கவனம் முழுதும் மைசூரில் இருக்க வேண்டும். நான் சொல்வது நாம் செய்யும் மைசூர் பாகில்இருக்க வேண்டும். அதை விடுத்து சென்ற தடவை சென்று வந்த எழில் மிகும் பிருந்தாவனத்தையும், அருள் தரும் சாமுண்டிஸ்வரி கோவிலையும், கண் கவரும் அரண்மனை அழகையும், இன்னும் விழிகளில் மிச்சம் மீதி இருக்கும் உண்மையான மைசூர்அழகையும் அசை போட்டபடியிருந்தால், மைசூருக்கே சென்று கல் கொண்டு உடைத்தாலும் நாம் செய்யும் மைசூர் பாகு உடையாது. (இப்படி ஆதியில் யாராவது செய்து பார்த்துதான் இதற்கு இந்த நாமகரணம் உருவானதோ என்னவோ.? அது வேறு விஷயம்.)

அந்த காலத்தில் முன்பெல்லாம் வார மாத பத்திரிக்கை இதழ்களில் தீபாவளி சிரிப்பு வெடிகள் என்றால், புது மாப்பிள்ளையும், இந்த மைசூர் பாகும்  அனாசயமாக இடம் பெற்று விடும்.

அந்த வகையில் ஒரு நகைச்சுவை 
தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டாடி விட்டு தன் வீட்டிற்கு திரும்பும் போது கணவன் மனைவியிடம் ௬றுகிறான்.

நான் தீபாவளிக்கு எதிர்பார்த்து வந்த மாதிரி உங்க வீட்டிலே சீர் செனத்தி ஏதும்தான் கிடைக்கலே. விரல்லே இருக்கறதே தெரியாத மாதிரி ஒரு மோதிரமும், ஊர் போய் சேர்றதுக்குள்ளே கிழிய மாதிரி ட்ரெஸூம் எடுத்து கொடுத்து உங்க அப்பா தீபாவளியை ஓட்டி விட்டுட்டார். உங்கம்மா செஞ்ச தீபாவளி பலகாரத்துலே, அந்த மைசூர் பாகையாவது ஒருநாலு ௬ட கேட்டு வாங்கிக்கோ.” என்று கணவன்அன்பாய்மனைவியிடம் கட்டளை போடுவான்.

மனைவிஏனாம்!  நேத்தைக்கு ௯ட ரெண்டு போட்டுக்கோங்கன்னு அம்மா ஆசையா போட வந்தப்போ, எனக்கு ஏற்கனவே பல் வலிஅத்தைன்னு, சொல்லி அம்மாவை வருத்தப்பட வச்சேளே.! இப்ப ௯ட வேறே கேட்டு வாங்கனுமாக்கும்.? என்று அழகாய் நொடிக்க,

அட! ஒரு காரணமாய்தாண்டி சொல்றேன்.! கல்யாணத்துக்கு சீரா உங்கப்பா கொடுத்த கட்டிலின் கால் ரெண்டு சரியில்லை.! படுத்தா ஆடிண்டேயிருக்கு இப்போ  உங்கம்மா செஞ்ச  மைசூர் பாகை முட்டு கொடுத்தாவது ஆட்டத்தை நிறுத்தினா  மனுசன் இனியாவது நிம்மதியா தூங்குவேனில்லையா.? என்று மேலும் கணவன் கிண்டலடிப்பான்.

இப்படியான  நகைச் சுவைகளை மனதில் நிறுத்தியபடி, வீட்டுக்கு வந்திருக்கும் என் பெண்ணிற்காக நானும் இந்த மைசூர்பாகை செய்து (இதற்கு முன் நிறைய தடவை செய்து மைசூரூக்கு மிக அருகேயோ, இல்லை, அதையும் தாண்டியோ, ஓடிய அதை விடாமல் பிடித்திழுத்து பெயர் சூட்டு விழா நடத்தியாயிற்று. ) வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டோம். (நல்ல வேளை! விடுமுறைக்கு வந்திருந்த என் மாப்பிள்ளைக்கு பல்வலி ஏதுமில்லை.! மைசூரும் வாயில் போட்டதும், (எங்களுருக்கு கொஞ்சம் அருகில் இருப்பவள்  இவள் என்று இரக்கப்பட்டதால்அதுஎன் பெயரை காப்பாற்றி விட்டதோ என்னவோ?)  நன்றாகவே கரைந்தது. மாப்பிள்ளையும் ஊருக்கு போகும் போதுபார்சல்ஏதும் கேட்கவில்லை!



நீங்களும் இதை எடுத்துக்கொண்டு கரைகிறதா, நன்றாயிருக்கிறதா ?என்று சொல்லுங்களேன். ரொம்பவும் நன்றாகவேயிருக்கிறது என்று சொல்லபவர்களுக்கு (“பல்வலிஎன்று பொய்யாக ஏதேனும் ௯றித் தப்பிக்க மட்டும் செய்யாதீர்கள் ..!) இதுமாதிரி சமையல்களை சுவையாகச் செய்து அவ்வப்போது பரிசாகத் தருகிறேன்.
                                      சாப்பிட்டவர்களுக்கு  நன்றி.!

           மறுபடியும் வேறு ஒரு சமையல் டிப்ஸுடன் வந்து சந்திக்கிறேன்.

21 comments:

  1. ஆஹா...பேஷ்..பேஷ்...ரெம்ப நன்னாயிருக்கே....
    வாயில் போட்டால் கரைந்து ஓடுகிறது வயிற்றூர்க்கு..... மைசூர்க்கு போக முடியாது இல்லையா...? அதான்.ரெம்ப அருமையா செய்து இருக்கேள்....வாழ்த்துக்கள்....சகோ...தொடரட்டும்...... உங்களின் சமையல் ராஜ்யம்....!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் இட்டமைக்கும், வாழ்த்துரைத்தற்கும் என் பணிவான நன்றிகள்.

      \\வாயில் போட்டால் கரைந்து ஓடுகிறது வயிற்றூர்க்கு..... மைசூர்க்கு போக முடியாது இல்லையா...? அதான்.//

      எடுத்து சாப்பிட்டு நகைச்சுவையுடன் அருமை எனச் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி..

      என்ன இருந்தாலும், உங்கள் சமையல் ராஜ்யம் மாதிரி என்னால் அமைக்க முடியாது சகோ..உங்கள் பாணியே அலாதி.! இருந்தாலும் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது சிறு ஆசை என்னுள்ளும் எழுகிறது. அவ்வளவுதான்.! மற்றபடி தங்கள் சமையல் பதிவுகளுக்கு நான் ஒரு அடிமை அரசி. தங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களுடன் நன்றிகளும் சகோதரி.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. முன்னுரையும் செய்முறையும்
    அதைப் பகிர்ந்த விதமும் பின்னுரையும்
    நல்ல விருந்தை சாப்பிட்ட உணர்வைத் தந்தது
    பகிர்வுக்கும் தொடவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் பணிவான நன்றிகள்.

      தங்களின் ஊக்கமிகும் பின்னூட்டங்கள்தான் என் எழுத்துக்களுக்கு வேராக அமைந்துள்ளது. இனியும் தொடர நல்வாழ்த்துக்கள் தந்து கருத்து இட்டதற்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஹா...ஹா...ஹா.. சமையல் குறிப்பை ரசிக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். மைசூர்ப்பாகு பதம் பார்த்து இறக்குவது கை வரும் கலைதான்! தொடர்ந்து செய்யும் பழக்கத்தில்தான் வரவேண்டும். திருமணமான புதிதில் என் அக்காவின் கணவர் தீபாவளி சமயத்தில் எங்களுக்குக் கடிதம் போட்டிருந்தார். அப்போதெல்லாம் கடிதம்தானே? "சசி தீபாவளிக்கு மைசூர்ப்பாகு செய்திருந்தாள். ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்தோம்!" கொஞ்சம் முன்பதமாக எடுத்து விட்டாள் போல!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் பணிவான நன்றிகள்.

      உண்மைதான் சகோதரரே.! இந்த மைசூர்ப்பாகு பதம் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி நம்மை பதம் பார்த்து விடும். ஆனால் போரடிக்காமல் செய்து பழக பழக ஒரு வழியாக பிடிபடும். அதற்குள் வீட்டில் அனேக அதிருப்திகளும், "சுத்த போர்ம்மா" எப்ப பாத்தாலும் இதேதானா .? என்ற நமக்கு எதிரான போர் கொடிகளும் எழாது இருக்க வேண்டும்.

      தங்கள் அனுபவத்தை நகைச்சுவையாக விவரித்தமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள். தற்சமயம் தங்கள் சகோதரி மைசூர்ப்பாகு செய்வதில் முன்னேறி திறமைசாலியாக நல்ல பெயரை வாங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். விரிவான கருத்துரைக்கு நன்றிகள்.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நகைச்சுவையுடன் சொன்ன விதம் ரொம்பவே இனித்தது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் பணிவான நன்றிகள்.

      நகைச்சுவையை ரசித்தவாறு இனிப்பை எடுத்துக் கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அருமை மைசூர் பாகுவை கட்டிலுக்கு அடியில் முட்டுக்கொடுத்த நகைச்சுவையை மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் அருமை என்ற பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.

      நகைச்சுவையாக பதிவிட்டு அனைவரையும் மகிழ வைக்கும் பாணியில் தங்களை மிஞ்ச முடியுமா.? இருப்பினும் என்
      நகைச்சுவையை ரசித்து வாழ்த்துக்கள் ௬றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. முன்னுரையும் பின்னுரையும் சமையல் குறிப்பும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தஙகள் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.
      தங்களைப் போன்றோரின் வருகை என் மகிழ்வை அதிகரிக்கச் செய்கிறது. தொடர்ந்தால, மிகுந்த மகிழ்வடைவேன். நன்றி.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கொஞ்சம் பிஸியாக இருந்த படியால் மைசூர்பாகை முதலில் சாப்பிட வர முடியவில்லை சகோ. கடைசியில் வந்தாலும் இருந்த மைசூர் பாகை எடுத்து கொண்டேன். வாயில் போட்டதும் கரைந்து விட்டது. superb !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தஙகள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.

      நிதானமாக வந்தாலும், ரசித்து இனிப்பை எடுத்துக் கொண்டு superb என்று பாராட்டிய தங்களுக்கு என் அன்பான நன்றிகள் சகோ.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. சமையல் குறிப்பும்அருமை!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் அருமை என்ற பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. எனது இன்றைய பதிவு ஸ்ட்ராபெரி ஜாம் . உங்கள் ப்ளாக் லிஸ்டில் ஏனோ வரவில்லை. கருத்திட வாருங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்கள் பதிவை கண்டவுடன் வந்து கருத்துரை வழங்கி விட்டேன் சகோதரி.
      மீள் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. தமாஷா எழுதியிருக்கீங்க. படிச்சதே போதும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்களின் முதல் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.

      தொடர்ந்து வந்து கருத்துக்கள் இட்டு என் எழுத்தை செம்மையாக்க வேண்டுகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. வணக்கம் சகோதரரே.

    தங்கள் அன்பான வருகைக்கும், ஓராண்டை நிறைவு செய்யும் தங்கள் "குழலின்னிசை வலைப்பூ" பற்றிய தகவல் தந்து எங்களை மகிழச் செய்ததற்கும் என் பணிவான நன்றிகள். வாழ்த்துக்கள் சகோ! என் தாமததத்திற்கு மன்னிக்கவும்,
    தாமதமானலும் அன்புடன் தங்கள் தளம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறேன் சகோதரரே.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete