Friday, June 13, 2014

காலத்தின் மாற்றம்..


அந்த காலத்தில் பெண்களுக்கு, கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம். அந்த நிஜமான தெய்வமே நேரில் வந்து நின்று “வேண்டிய வரத்தைக் கேள்! தருகிறேன்!” என்றாலும், கணவன் சற்று கண் அசைத்தால்தான், காரிகை பேச வாய் திறப்பாள். அந்த அளவுக்கு அவளுக்கு பதி மேல் பக்தி! கணவன் நலமே தன் நலமென்று கருதி, தனக்கென்று எந்த விருப்பங்களையும், ஏற்படுத்திக் கொள்ளாமல், தன் கணவனையும் அவ(ர்)ன், வீட்டு உறவுகளையுமே, முறையே, கோவிலின் கருவறை தெய்வமாகவும், பிற பிரகார தெய்வங்களாகவும் நினைத்து வாழ்ந்து வந்தாள். அப்போது அவள் சொல்லும் பேச்சுக்கெல்லாம், பஞ்ச பூதங்களும் (காற்று, நெருப்பு, பூமி, ஆகாயம், மழை) கட்டுப் பட்டது. தெய்வங்களும் அவள் கேட்காமலே, வரங்களை அள்ளி தருவதற்கு தயாராயிருந்தார்கள். இவள்தான்  (கணவனுக்கு தேவையானதை தவிர) தனக்கென்று எதுவுமே கேட்பதில்லை!


          அந்த காலங்கள், காலத்திற்கே போரடித்ததால், சற்று மாற நினைத்ததில், பெண்களும், எண்ணத்தில் சிறிது மாறினார்கள், தங்களுக்கு தேவையானதை, உணர தொடங்கினார்கள். கணவனை தெய்வமாக நினைத்தாலும், தனக்கும் பசி, தாகமென்று ஒன்று ஏற்படுகிறது! என்பதை புரிந்து கொண்டார்கள். நாளாக, நாளாக, கல்விக் கண் எத்திக்கிலும் கண் திறக்க தத்தம் திறமைகளை, ஆணுடன் சேர்ந்து பெண்ணும் உணர தலைப்பட்டாள். கேள்விகளுக்கு, பதில் தெரியாமல், இருந்த நிலை மாறி, பதிலேதும் சொல்லாமல், மெளனித்த நிலை மாறி, பதிலளிக்கும் பக்குவத்திலும், கேள்விகளை தொகுக்கும் திறனிலும், மெள்ள மெள்ள படியேறி வந்தார்கள்.


         அந்த காலம் இன்னும் சிறிது சுற்றி மாறி வந்தமையால் ஆண், பெண் சுதந்திரத்திலும் நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. ஆணுக்கு சரிநிகர் சமானமாக படிப்பிலும், பணியிலும் பெண்கள் தங்களை வளர்த்து கொண்டதால், எப்போதும் வழிபாட்டை மட்டும் கொண்டேயிருக்கும் தன்மையை தவிர்த்து, “வாழ்வில் இனி நானும் ஒரு அங்கம், நாமிருவரும், ஒன்றிணைந்து முடிவெடுத்தால் குடும்பம் எனும் வீட்டையே கோவிலாக்கலாம்!” என்ற மனப்பக்குவத்துடன் பெண்கள் செயலாற்ற துவங்கினார்கள். காலம் களிப்புற்றது!!! தன் விளைவுகள் மனித இனத்துக்கு நன்மைகள் பலவும் செய்கிறதே! என்று இறுமாப்புடன் சற்று கர்வமும் கொண்டது!!!!
                      

                அந்த காலம் தன்னிச்சையாக சிறிது சுழல, காலச் சுழலில் சிக்கிய பெண்களின் மனமும் தன்னிச்சையாக சுழல ஆரம்பித்தன. பெற்றவர்களின் முடிவுக்கு மாறாக, தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வை தேர்ந்தெடுக்கும் துணிவை பெற்றனர். (அது தன்னை பெற்றவர்களின் மனதை துன்பபடுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்த பிறகும்! அது பற்றி சிறிதும் கவலையின்றி!!) அப்படி தேர்ந்தெடுத்த வாழ்வில் சிறிது பிரச்சனை என்றாலும், சிறிதும் விட்டுக் கொடுககாமல், விட்டு கொடுக்கும் எண்ணங்களை, பின்னுக்குத்தள்ளி தன் விருப்பபடி வேறு வாழ்வையும், அல்லது தனித்திருக்கும் வாழ்வையும், தன்னிச்சையாக பிரகடனபடுத்தும் உரிமையையும் பெற்றனர். (அதுவும், தன்னை பெற்றவர்களுக்கு வேதனையையும், நெருங்கிய உறவுகளுக்கு சங்கடங்களையும், தரும் என்பதையும் புரிந்து கொள்ளாமலே!!) சுதந்திரம் தந்த ஊக்கத்தில் மனித தன்மைகள் குறைய தொடங்க, அந்த காலமே, நாமும் சற்று அதிகமாத்தான் சுழன்று விட்டோமோ?என்று கவலை கலந்த,பயத்துடன் வேதனையடைந்திருந்தாலும், ஆச்சரியபடுவதிற்கில்லை! இது யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் தோன்றுகிறது. 


           நான் இங்கு எல்லோரையும் குறிப்படவில்லை! மாறி வரும் சில பெண்களின் மனதை மட்டுந்தான் குறிப்படுகிறேன்.(தவறெனின் வருந்துகிறேன்.)  எங்கள் நெருங்கிய உறவில் நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தால் ஏற்பட்ட மன வேதனையில் இதை எழுதிவிட்டேன். அந்த பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் வேதனையை இன்னமும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை! இருப்பினும் தங்கள் பெண் வாழ்வை தன் விருப்பபடி தேர்ந்தெடுத்தும் அந்த வாழ்வுடன் வாழாமல் இப்படி தனிமையுடன் தனித்திருக்கிறாளே! என்ற கவலையில் அவர்கள் வேதனைபடுவதை காண கஷ்டமாக இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு மாறும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்வை சிறப்புற அமைத்துக் கொண்டால்,அவளை பெற்றவர்களும் மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள். முக்கியமாக நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு பாதையில் செல்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை நாகரீகம் மாறி வருவதால் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நகைச்சுவையுடன் இந்த பதிவில் எழுத ஆரம்பித்து அதுவும் எப்படியோ மாறி விட்டது. அடுத்த பதிவிலாவது அது கை௬டி வர வேண்டும். அதற்கும் அந்த காலந்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்யுமா? பொறுந்திருந்து பார்ப்போம்!!!!! 

5 comments:

 1. நல்லா சொல்லிட்டீங்க ஆனால் யாரும் கேட்ட மாதிரி இல்லையே....!

  உண்மைய சொன்னா இப்படித்தான் இருக்குமோ

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரரே!
  தங்கள் மதல் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
  என் மனதில் பட்டதை எழுதுகிறேன். என் எழுத்தை வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.
  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 3. அருமை சகோ ... எழுத்துநடை மிக அருமை

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரரே!
  என் வலைத்தளத்திற்கு, தங்கள் முதல் வருகையும் தங்கள் முதல் பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் பாராட்டால், என் எழுத்துக்களும் இன்னும் சிறப்புற அமையும் என நம்புகிறேன். தங்கள் கருத்துப்பகிர்விற்கும், பாராட்டுக்களுக்கும், மிக்க நன்றிகள் சகோதரரே!
  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete