Thursday, May 1, 2014

உழைப்பாளர் தினம் – சிறுகதை
என்னங்க இன்னைக்கு வேலைக்கு போகலையா? வாசலில் சோர்வாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் மனைவி. 

     உம்ம்ம்... போகணும். என்னவோ காலையிலேயே சோம்பலா இருக்கு! இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படி? நம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறது? தினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.

     உம்ம்ம்... புரியுது அந்த காலத்திலேயே இருந்து நாம ஓடியாடி வேலை செஞ்சவங்கதானே! (பெருமூச்சுடன்) ம்ம்..இதோ கிளம்பறேன். நீ புள்ளைங்களை பாத்துக்கோ என்றபடி கிளம்ப எத்தனித்தான் அவன்.

    பாத்து போயிட்டு வாங்க! வழியல ஓரமாவே நடந்து போயிட்டு வாங்க! இப்ப நீங்க புறப்பட்டு போன தான் பொழுது போறதுக்குள்ள வீடு திரும்ப முடியும். வானம் வேற கறுத்து கிடக்கு! இந்த மழை வேற வந்துடாமே இருக்கனும்.! என்று அவன் மேல் அக்கறையுடன் பேசினாள் அவள்.

    மழையா? அது எங்கே இப்பெல்லாம் ஒழுங்கா பெய்யுது? அந்த காலமெல்லாம் போயாச்சு! இப்பெல்லாம் முந்தி மாதிரி எதுவுமேயில்லை! ஒரு இடத்திலேயும் ஒழுங்கா வேலைக்கு போக முடியலே! நேத்திக்கு ௯ட ஒரு இடத்துலே, அரிசி பருப்புன்னு மூட்டை மூட்டையா சாமான்களை, ஏத்திகிட்டும், இறக்கிட்டும் இருந்தாங்க! சரி! நமக்கு ஏதாவது ஒரு வேலை இருக்குமானு போனேன். எல்லாரும் விரட்ட மிதி படாத குறையாக ஓடி வந்துட்டேன். அதேமாதிரி அவங்கவங்க வீட்டிலேயும் அவங்களுக்கு பிடிச்ச வேலைகாரங்களை வச்சுகிட்டு சுத்தபத்தமா இருக்கனும்’னு விரும்புறாங்க! நமக்கு எங்க வேலை கொடுக்குறாங்க? என்றான் அவன்.

   புள்ளைங்களும் பாவம்! நேத்து அப்பா என்ன கொண்டு வந்திருக்காருனு ஆசையா கேட்டதுங்க! வீட்லே ஒரு குந்துமணி அரிசி ௯ட இல்லைன்னு நான் எப்படி சொல்ல முடியும்? நேத்து சின்னவன் ரொம்ப பசிக்கிதுன்னு என் காலை சுத்தி சுத்தி வந்தான். உங்களையும் காணமா! அதனாலே அவனுக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிபண்ணலாம்னு போயி அலைஞ்சதுதான் மிச்சம்.... என தன் அனுபவத்தை சோகத்துடன் ௯றினாள் அவள்.

   அப்படியெல்லாம் சின்னபுள்ளைங்கள தனியா வீட்டுல விட்டுட்டு போவாத! உனக்கும் முந்தி மாதிரி இப்பெல்லாம் முடியலை! அப்படியிருக்கும் போது ஏன் வெளியில போற? நான் போய் என்னாலே ஆனதை கொண்டு வரேனில்லியா? அவன் சற்று கோபமாக கேட்டான்.

   இல்லே! நேத்து புள்ள ரொம்ப பசின்னு சொன்னதினாலே தான் போனேன். இல்லாட்டி நீங்க தினமும் சம்பாரிச்சு கொண்டுவர்றது நமக்கு வயித்துக்கும், பாடுக்கும் சரியாதானே போறது! மத்தபடி முந்திமாதிரி நாளைக்குனு எங்கே வச்சுக்க முடியுது? ம்ம்... நீங்க இப்படி சிரமபடுறதை பாக்கும் போதுதான் எனக்கு மனசு தாங்கல! என்று அவனை சமாதான படுத்தியவள், “ஆமாம் அப்பவே என்னமோ சொல்ல வந்தீங்களே?” என்று ஞாபகபடுத்தினாள்.

   ஆமாம்! அதாவது இன்றைக்கு உழைப்பாளர் தினமாம்! நேத்திக்கு வேலைய தேட போகும் போது நாலுபேர் சொல்லிகிட்டிருந்தது காதிலே விழுந்திச்சு! அந்தகாலத்துலே, உழைப்புக்கு இவர்கள் தான்னு சுட்டிக்காட்டி பேசிட்டு இன்னைக்கு அவங்களை அவங்களே பெருமைபடுத்திக்கிறாங்க! ஏன் நாமெல்லாம் உழைக்கிற வர்க்கம் இல்லையா? எப்படியோ போகட்டும்! இந்த மட்டுக்காவது உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு உதாரணமா நம்மளை காட்டாறாங்களே!! இப்படி ஒரு தினத்தை வச்சு கொண்டாடுறாங்களே! அன்னிக்காவது நமக்கெல்லாம் ஒரு இனிப்பு, ஹும்.. ஹும்.. வேண்டாம்மா, ஒரு சின்னமிட்டாயாவது கொடுக்கலாம்ன்னு அவங்களுக்கு தோண்றதா? போகட்டும்! அவங்க நல்லாவாழ்ந்துட்டு போகட்டும்! நாமதான் அன்னியிலேருந்து இன்னைய வரைக்கும், உதைபட்டும் மிதிபட்டும் சாவறோம். ஒருநாள் வெளியிலே போயிட்டு வர்றதுக்குள்ளே அன்னைக்கு உசிறு நம்மகிட்டே இருக்குமான்னு தெரியலே! நம்ம பொழைப்பு அப்படி! படைச்சவன் அவங்களையும் நம்மளையும் அப்படி படைச்சிட்டான்! இரண்டாவது நாம் வாங்கி வந்த வரம் அப்படி! சரி! நான் புறப்படறேன். நீ பத்திரமா இருந்துக்கோ!! என்றபடி மனைவியிடம் விடைபெற்று வெளியில் வந்த அந்த கணவன் அருகிலிருக்கும் ஒரு திறந்த வீட்டின் கதவு வழியாக உள்நுழைந்து தனக்கும், தன் குடும்பத்துக்கும் உணவு தேடுவதற்கான அந்த வேலைக்கு, வீட்டினுள் மெள்ள பயணித்தான்.

2 comments:

 1. உழைப்பாளர் தினம் - உழைப்பவர்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டிய தினமாக உள்ளது உண்மை தான் என்பதை நாசூக்காகச் சொல்லியுள்ளீர்கள் .

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரரே!
  தங்கள் வருகையும் பின்னூட்டங்களும், என் எழுத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில், மனம் மகிழ்ச்சியடைகிறது.
  தங்கள் பாராட்டுகளுக்கும், கருத்து ௬றியமைக்கும் என் பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete