Tuesday, April 29, 2014

பதிவை பார்த்து வந்ததால் பறந்து வந்தமர்ந்த பதிவு...




பார் என்று சொன்னதினால்,
பழனி முருகனை பார்க்க போனேன்!
பார் புகழ ஆகா விடினும், என்
" பா " விரும்பும் பண்புள்ளங்களை,
பரிசாக  " தாவென " வேண்டலாமென,
பரபரக்கும் உள்ளத்துடன்,
பறந்து ஓடி தரிசித்தேன் .
             வந்த நோக்கம் அறிந்தந்த
வண்ணமயிலழகன் வாசல் தனில்
வந்தமர்ந்தபடி, வாய் நிறைய சிரிப்புடன்,
வகையாய் பேச ஆரம்பித்தான் .
          இணையம் பார்த்ததின் விளைவால்,
இவ்விருண்ட வேளையென்றும் பாராமல்,
நீண்ட தொலைவென்றும் எண்ணாமல்,
நீ இங்கு வந்ததின் காரணமறிவேன் .
              “ என்னிடம் எதுவுமில்லை ! “என நான்
எடுத்தியம்பியதை ,எழுதிவிட்ட, அந்த
பண்புள்ளத்தின்  பகிர்வுதனை,  நீ
பலகாலம்  படித்தாலும், மனப்
பக்குவமடைய போவதில்லை!
பாதி இரவென்றும் பாராமல்  ,
பரிசை வேண்டி பகர வந்தாய் !
     மனதிலுள்ளதை, படித்து விட்டானே! இந்த
மால் மருகன் என்ற மயக்கத்தில்,
மமதையுடன் நான் இங்கு வரவில்லை! அதை
மரியாதையுடன் தெரிவித்து விரைய வேண்டி,
                இல்லை! முருகா!   
விபரம் அறிய விரைந்து வந்தேன். என்
விதியால் அதை உணர்ந்து கொண்டேன் .
வினைகள் அகற்றும் உன்னருளால், என்
விதியை மாற்றக் ௯டாதா ?
          தருமியின் தவத்தை கண்டுணர்ந்து,
தவித்த மனதுடன் உன் தந்தை வந்துதவ,
தருமியின் தத்தெடுத்த புதல்விக்கு, அருமை
தனயன் வந்துதவக் ௯டாதா ? என்றதும்,
        அந்த, 
பாங்கான கேள்விக்கும் அவனிடம்,
பதிலேதும் வாராததால், 
பண்பட்ட உள்ளத்துடன்
பணிவாக விடை கேட்டு, பின்
படியிறங்க பாதம் வைத்தேன்.
       “ அவரவர் வினைக் கயிற்றை ,
அவரவர்தான், அறுக்க வேண்டும். உன்
நல்வினை , தீவினைக்கு
நானொன்றும்  செய்யலாகது !
காலம் கனிந்து வரும் !    
கனிவுடன் காத்திருப்பாய்! ”
     அசீரீரியாய் குரல் வந்து
அயர்வெல்லாம் களைந்தெறிய ,
பழனி முருகனை பார்த்த
பரவசத்தில் பறந்தோடி வந்து விட்டேன் .

3 comments:

  1. ரசனையான பகிர்வு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் தங்கள் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்... தனபாலன் அவர்களே!!!

      Delete
  2. உடன் வருகைக்கும் தங்கள் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete