Wednesday, February 14, 2024

பறவையின் சுதந்திரம்

சுதந்திரம் என்றாலே பொதுவாக பறவைகளைத்தான் மனிதர்களாகிய நாம் ஒப்பிடுவோம். "இந்தப்பறவை மாதிரி சுதந்திரமாக இருக்கனும்.. இந்தப் பறவைகளைப் பார்..! வானத்திலே தன் மனம் போன போக்கில் பறந்து திரிந்து எப்படி  உல்லாசமாக வாழுகிறது. இப்படி நம்மால் வாழ இயலவில்லையே.." என பறவைகளை உவமானபடுத்தி பெருமூச்சு விடுவோம். ஆனால், "ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்தார் இறைவன்." என்பது போல ஆறு அறிவுகளையும் ஒவ்வொரு இனத்திற்கும் இவ்வளவுதான் எனவும், அளந்ததோடு மட்டுமின்றி இப்படித்தான் வாழவேண்டுமென்ற நியதியையும் இறைவன் தந்துள்ளார். 

பறவையை கண்டான் விமானம் படைத்தான்" என மனிதன் அதனிடமிருந்து சுயநலமாக நம் வசதிக்காக கற்றுக் கொண்டதும் அதிகம்."கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது. அதனால் கூட்டை விட்டு பறந்து விட்டது.." என தங்கள் பேச்சை கேட்காத பிள்ளைகளை பெற்றோர் அந்தப் பறவைகளை துணைக்கழைத்து வசை பாடுவதும் அதிகம். ஆனால். பல பறவைகள் புத்திசாலிகளாய் சுயநலமிக்க மனிதனின் உணர்வை புரிந்து கொண்டவையாய் மனிதனை விட்டு விலகிப் போவதும் இப்போதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. 

நம் அன்புக்கு கட்டுப்பட்டு நம்முடனே நம்மைக்கண்டதும் பாசத்துடன் ஓடி வரும் போதும், நம் விரோதத்தை புரிந்ததுவாய் நமக்கு தொந்தரவுகள் தராமல் வேறிடம் பார்த்து குடி பெயரும் போதும் அதனின் நல்ல மனதை வெளிப்படையாக  எடுத்துக் காட்டுகிறது. அறிவுகள் அளவென பெற்ற  அதனிடமிருந்து இந்த ஆறறிவு பெற்ற மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். 

நம் பறவை நேசர் சகோதரி கோமதி அரசு அவர்களின் சமீபத்திய பறவை பதிவுக்கு நான் கருத்து தெரிவிக்கும் போது, இப்படி எதிர் வீட்டில் முட்களை (பிளாஸ்டிக் மாதிரிதான் தெரிகிறது.) வைத்திருக்கிறார்கள் என்று பதிலாக சொன்னதும் அவர் சட்டென மனம் கலங்கி விட்டார்.

இப்போதுதான் புதிதாக கட்டியிருக்கும் அவர்கள் வீட்டில் இந்த புறாக்கள் வந்தமர்ந்து அசுத்தப்படுத்துகிறது என்றுதான் அவர்கள் இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள். எனினும் அதனுடைய வாழும் இடமான பல மரங்களை அழித்து நம்முடைய சுயநலத்திற்காக, கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக  வசிக்க வேண்டி இப்படி தனி இருப்பிடமாக அமைத்துக் கொள்ள நாமும் முயற்சித்து விட்டோமே எனவும் தோன்றுகிறது. 

இதையெல்லாம் பார்க்கும் போது மனது நொந்தாலும், உயிர்களை படைத்த இறைவன் அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்தபடிதான் இருப்பான் எனவும் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்...! வேறு என்ன செய்வது? 


இப்படி எங்கும் முட்கள், எதிலும் முட்கள் என்றால் எங்குதான் வந்து அமர்வது?
 

இப்படி நாம் ஆசுவாசமாக வந்தமரக் கூட தடையாக ஏதோ வைத்திருக்கிறார்களே என யோசிக்கிறது போலும்...! நம் வேதனைகளை வாய் விட்டு சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்வார்களா எனத் தெரியவில்லையே...!! என மனதில் நினைத்தபடி அமர்ந்துள்ளது. 

மற்றொருவர் வீட்டை படம் எடுப்பது மிகத் தவறு. இந்தப் பறவைகளின் கூடு... அதன் வாழுமிடங்கள்... என அது நம்மோடு இணைந்து வருவதாலும், கோமதி அரசு சகோதரியின் பறவைகள் பதிவை படித்த தாக்கத்தினாலும், இப்படி படங்கள் எடுத்து விட்டேன். (இன்னும் நிறைய கோணத்தில் அது வழக்கப்படி வந்தமர்ந்த இடங்களில் எல்லாம் , இந்த முட்கள் வைத்தப்பின் எப்போதும் போல் வந்து அமர இடமின்றி தவித்த அந்த புறாக்களோடு எடுத்திருந்தேன். அவற்றையெல்லாம் அழித்து விட்டேன்.) ஏனெனில் இதற்கே இறைவன் என்னை மன்னிக்க வேண்டிக் கொள்கிறேன். அதோடு அவர்களும் (அந்த மற்ற வீட்டு உரிமையாளர்களும் மானசீகமாக ) மன்னிக்கட்டும்.


இப்போதும் சற்று ரிலாக்ஸாக அவ்வப்போது இவ்விரண்டும் வந்து முட்கள் இல்லாத இடமாக அமர்ந்து பேசி மகிழ்கிறது. 


"என்ன இடர்கள் வந்தாலும், நாம்  ஒருவருக்கொருவர் துணையாக வாழும் வரை பிரிவென்பதே இல்லாமல் இப்படியே சேர்ந்து இருப்போம்..." எனக் கூறி மகிழ்கிறதோ?


"இப்படி போட்டோக்கள் எடுத்து எங்களுக்கு என்ன நியாயங்கள் கிடைக்கப் போகிறது?" என்பதுதான் எங்கள் கேள்வி. இறைவன் இவ்வுலகில் பிறந்த உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வழி காண்பித்து  துணையாக இருப்பதைப் போல எங்களுக்கும் துணையாக இருப்பார் என நம்புகிறோம். நீங்களும் எங்களுக்காக பிரார்த்தனைகள் செய்து கொள்ளுங்கள். அது போதும்.." என்கிறதோ நம்மைப் பார்த்து. 

இன்றைய தினத்திற்காகவும் இந்தப்பதிவு. பொதுவாக காதல் என்ற சொல் பலருக்கும் தவறாகத் தெரிவதுதான். அந்த சொல்லிற்கு அன்பு, பாசம், பந்தம் போன்றவைகளும், பக்க வாத்தியங்கள் போல் பக்க பலமாக இருந்துதவி செய்கின்றன. இந்தச் சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டால், காதல் என்பது ஒரு அருமையான இசை. இந்த பாசம் மிகுந்த பறவைகளை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. வாழ்க இந்த காதல் புறாக்கள். 

இதைப்படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

30 comments:

  1. நீங்கள் எடுத்துள்ள போட்டோக்களால் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த அநியாயம் நடபபது மற்றவர்களுக்கு தெரியப்படுத்தப் படுகிறது.  பாவம் புறாக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். உண்மைதான். புறாக்களைப்பார்க்கும் போது பாவமாகத்தான் இருக்கிறது. பறவைகளைப் பொறுத்து மட்டில் படங்கள் எடுத்து அவற்றிற்கு நேரும் / நேர்ந்த அநியாயங்களை பகிர்ந்தது சரிதான் ஆனால், அவர்களது (வீட்டு உரிமையாளர்கள்) உத்தரவின்றி எடுத்தது நியாமில்லைதான். எனவும் தோன்றுகிறது. அதனால்தான் அவர்களின் மன்னிப்பையும் பதிவில் மானசீகமாக கேட்டிருக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மனிதன் இந்த உலகம் தனக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறான்.  ஒன்றில்லாமல் மற்றோன்று இல்லை என்பது அவன் மூளைக்கு எட்டுவதில்லை.  சமாளித்துக் கொள்ளலாம் என்கிற இறுமாப்பு.  ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒவ்வொரு கடமை வழங்கப்பட்டுள்ளது.  அந்தச் சங்கிலி அறுந்துவிடும்போது வாழ்க்கைச் சுழற்சி தடுமாறும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /மனிதன் இந்த உலகம் தனக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறான். ஒன்றில்லாமல் மற்றோன்று இல்லை என்பது அவன் மூளைக்கு எட்டுவதில்லை...... அந்தச் சங்கிலி அறுந்துவிடும்போது வாழ்க்கைச் சுழற்சி தடுமாறும்.. /

      நல்லதொரு புரிதல். வாழ்க்கைச்சுழற்சி தடுமாறித்தான் போகிறது. விரைவாக ஆங்காங்கே புதிது புதிதாக எழும் கட்டிடங்களால், மரங்கள் அழிகின்றன. சூரியன் அதிக வெப்பத்தைத் தர ஆரம்பித்து விட்டான். காற்று முன்பு போல் சுகாதாரமாக இல்லை. புதுப்புது வியாதிகள் சட்டென உற்பத்தியாகிறது. பூமியில் நீர் பஞ்சம் வந்து விட்டது.

      இப்போது நாங்கள் இருக்கும் பகுதியில் எந்த தடவையுமில்லாததாக இந்த தடவை அதிக நீர் பஞ்சம் வந்தே விட்டது. பெங்களூருக்கா இந்த நிலைமை என ஆச்சரியப்பட வைக்கிறது. நீங்கள் சொல்வது போல் வாழ்க்கை சுழற்சி தடுமாற வைக்கிறது.

      தங்கள் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பறவையைப் பார்த்து சுதந்திரம் என்று பாடும் மனிதன் அதன் சிரமங்களை உணர்வதில்லை. பறவைக்கு மனம் என்று ஒன்று இருந்து, நினைக்கும் சக்தியும் இருந்தால் நம்மைப்பற்றி - மனிதர்கள் பற்றி - என்ன நினைக்குமோ! இக்கரைக்கு அக்கரை பச்சை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /பறவைக்கு மனம் என்று ஒன்று இருந்து, நினைக்கும் சக்தியும் இருந்தால் நம்மைப்பற்றி - மனிதர்கள் பற்றி - என்ன நினைக்குமோ! இக்கரைக்கு அக்கரை பச்சை!.

      ஆம்.. உண்மை. அக்கரை பச்சைதான்.. ஆனாலும் அவைகளுக்கு மனம் என்ற ஒன்று இருந்திருந்தால், நம்மை திட்டி தீர்த்திருக்கும். இப்படி எங்கும் அண்ட விடாது செய்கிறார்களே என்ற கோபதாபங்கள், மனதுக்குள் தினம் பொங்கி எழ அவைகளும் பல நோய்களோடு சிரமபட்டிருக்கும். நல்லவேளை அவைகளாவது நிம்மதியாக இருப்பதை கொண்டு வாழட்டுமென இறைவன் அவற்றிற்கு மனதையோ, அதன் மூலமாக சிந்திக்கும் திறன்களையோ தரவில்லை போலும்.

      காகம் கூட நாளைக்கு வேண்டுமென தனக்கென கிடைத்த உணவை அங்கு இங்கென பதுக்கி வைக்குமாம். இந்தப் புறாக்கள் நாளைப்பற்றி கவலையுறாது இன்று கிடைப்பதை மட்டும் உண்ணுமாம்.. எங்கோ, எதிலோ படித்த நினைவு.

      உடனடி வருகை தந்து தாங்கள் தந்திருக்கும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ஹப்பாடி..  கமெண்ட்ஸ் காணாமல் போகாமல் நின்று விட்டன.  இந்த நாள் இனிய நாள்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஹா ஹா ஹா.. அழகான அந்த புறாக்களின் தயவில் கமெண்ட்ஸ்கள் காணாமல் போகாமல் இன்றைய நாள் நல்ல நாளாக அமைந்து விட்டது. நல்லதுதான். பொறுமையாக பதிவை படித்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஒவ்வொருவர் பார்வையில் இது மாறுபடும். பால்கனி, சுவர்களில் க்க்கா போவது, புறாவின் சப்தம், இறகுத் துணுக்குகள் வீட்டுக்குள் வருவது எனப் பல பிரச்சனைகள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தாங்கள் சென்றிருந்த கோவில் யாத்திரைகளை நல்லபடியாக முடித்து விட்டு வந்து விட்டீர்களா?

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. அவை சுவர்களை, பால்கனியின் தரை பகுதிகளை அசுத்தப்படுத்துவது சிலருக்கு எரிச்சலைத் தரும். மேலும் குழந்தைகள் விளையாடும் இடத்தில், அவற்றின் எச்சங்கள், இறகுகள், வியாதியை உண்டாக்கும் என்று வேறு படிக்கிறோம். கேள்விபடுகிறோம். அதனால்தான் அவற்றின் வரவை தடுக்கின்றனர். அவைகளுக்கும் மற்ற பறவைகள் மாதிரி மரங்களில் சென்று வாழத் தெரியாது போலும். மனிதர்களின் வீடுககளில்தான் தானும் கூடு கட்டி வாழுமிடமாக தேர்ந்தெடுக்கிறது. என்ன செய்வது.?

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கோவில் யாத்திரைகள் நல்லபடியாக முடிந்தது. கிட்டத்தட்ட 3400 கிமீ, 8 நாட்களில், முழுவதும் ஏசி பேருந்து பயணம். யாத்திரை முடிந்து ஊர் திரும்பியதும் இரண்டு நாட்கள் நல்லாவே தூங்கினேன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே.

      தங்கள் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் கோவில் யாத்திரைகள் நல்லவிதமாக சென்று இறை தரிசனங்கள் பெற்று வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்கு ஓய்வெடுங்கள். பேருந்து பயணங்கள், ஆங்காங்கே நடந்து சென்றதென உடல் அலுப்பாக இருக்கும். உங்கள் யாத்திரை அனுபவ பதிவுகளை ஞாயறில் விபரமாக அறிந்து கொள்ள காத்திருக்கிறேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நாங்கள் ஷாப்ட்களில் நெட் போட்டிருக்கிறோம். இல்லைனா புறாக்கள் குடும்பம் நடத்தி ஒரு இச்ச் உயரத்திற்கு தரை முழுதும் க்க்கா போய் வைக்கிறது. எலிகளுக்கு அடைப்புகள் வைப்பதில்லையா? அணில்கள் போன்றவற்றிர்க்குத் தடுப்புகள் அமைப்பதில்லையா? அதுபோலத்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். தாங்கள் சொல்வது உண்மைதான். அவைகள் அசுத்தப்படுத்துவதை யாருக்குத்தான் சுத்தப்படுத்த இயலும்..? அதுவும் இந்த அப்பார்ட்மெண்ட்வாசிகள் என்கிற போது... இங்கும் அவரவர் பால்கனி ஜன்னல்களுக்கு அனைவரும் நெட் வசதிகள் செய்து கொண்டுள்ளனர். எங்கள் வீட்டில் கண்ணாடி கதவுகள் வீடு கட்டும் போதே மகன் பொருத்தியுள்ளார். காலையில் காற்றுக்காக கதவை திறந்தவுடன் புறாக்கள் பால்கனி உள்ளே வந்து விடுகின்றன. அது பழையபடி வந்த வழி திரும்பத் தெரியாமல், சில சமயம் தவித்து விட்டு பின் செல்கின்றன.

      எலிகள், அணில் மட்டுமின்றி இதர ஜீவ ராசிகளும் நம்மை அண்டிதான் வாழ வேண்டுமென்பது அதன் தலையெழுத்து. ஆனாலும், இந்த அவசர யுகத்தில் அவைகளோடு போராட இயலவில்லை என்பதுதான் உண்மை.

      தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. பறவைகளின் படங்கள் எல்லாம் அருமை. பறவைகள் இப்போது இடம் தேடி தவிப்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. எல்லோரும் நானும் இரண்டு பால்கனிகளில் வலை தடுப்பு போட்டு விட்டேன். என்ன செய்வது புறாக்களை பிடித்து வந்து அதை கொன்று பூனை பால்கனியை அசுத்தம் செய்கிறது.

    முட்டை இட கண்ட இடத்தை தேர்ந்து எடுத்து அது கீழே விழுந்து மனதை மேலும் வருத்தமடைய செய்கிறது.

    புறாக்கள் முன்பு கோவில், மசூதி, தேவாலயங்கள் அதற்கு அடைக்கலமாக இருந்தது. இப்போது மனிதர்கள் குடியிருக்கும் இடங்களை நோக்கி படை எடுத்து இருக்கிறது.

    மகன் ஊரில் மரங்க்கொத்திப் பறவைகள் அமர்ந்து நாசம் செய்யாமல் இருக்க ஆந்தை சிலை, மற்றும் நீங்கள் காட்டி இருப்பது போல முட்கள் அமைத்து இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. புறாவின் எச்சங்கள், இறகுகள் என ஒவ்வொன்றிக்கும் ஒரு உபாதைகள் வருமென கூறுகிறார்கள். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடென்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி உள்ளது.

      /புறாக்களை பிடித்து வந்து அதை கொன்று பூனை பால்கனியை அசுத்தம் செய்கிறது./

      அது வேறா..? மிக கஸ்டந்தான்.

      தாங்கள் உங்கள் பதிவில் அன்று கூறியதும் எங்கள் பெட்ரூம் ஜன்னல் வழியே பார்த்த போது எதிர் வீட்டில் புறாக்கள் வராமல் இருப்பதற்காக முட்கள் வைத்த காட்சிகள் மனதை சங்கடபடுத்தின. ஆனால் அவர்களின் புதிதாக கட்டிய வீட்டை அவற்றின் தொந்தரவுகளிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமே.. என எண்ணி மனச்சமாதானமடைந்து கொண்டேன்.

      /புறாக்கள் முன்பு கோவில், மசூதி, தேவாலயங்கள் அதற்கு அடைக்கலமாக இருந்தது. இப்போது மனிதர்கள் குடியிருக்கும் இடங்களை நோக்கி படை எடுத்து இருக்கிறது./

      ஆம் நானும் பார்த்துள்ளேன். ஆனாலும் இப்போது இங்கு புறாக்களின் வரவு அதிகமாகி விட்டது. புறாக்களும், கழுகுகளுந்தான் இங்கு அதிமாக உள்ளன. ஒரு அமாவாசையன்று கூட காகங்களை பார்க்க இயலவில்லை. நானும் இங்கு வந்ததும் புறாக்களுக்கு சாதம், தண்ணீர் என வைத்து வந்தேன். மகன் இங்கு வரும் போது வேண்டாமென தடுப்பார். அவர்கள் இருக்கும் ஊரில் இவ்விதம் பறவைகளுக்கு அன்னம் வைப்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்களாம். நீங்கள் அரிசோனாவில் இப்படித்தான் என சொல்வதை போலத்தான் அவரும் சொல்வார்

      பறவைகள் நம்மை விட்டு புகலிடமாக எங்குதான் செல்லுமோ ..? அவைகளின் நிலையும் கஸ்டந்தான். .தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. /
    "என்ன இடர்கள் வந்தாலும், நாம் ஒருவருக்கொருவர் துணையாக வாழும் வரை பிரிவென்பதே இல்லாமல் இப்படியே சேர்ந்து இருப்போம்..." எனக் கூறி மகிழ்கிறதோ?//

    அப்படித்தான் சொல்லி மகிழ்கிறது.பிரிவு என்ற சொல்லே வேண்டாம். இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

    நாய்கள் வயிறு தொந்திரவு வந்தால் புற்களை தின்ரு வாந்தி எடுக்கும், அது போல இந்த புறாக்கள் துளசி மற்றும் மணி பிளண்ட் செடி இலைகளிய கொத்தி தின்று பச்சையாக கழிந்து வைத்து போகிறது.

    செடிகளை கொத்தி சேதபடுத்துகிறது. ஒரு பால்கணி மட்டும் துணி காய போட பறவைகளுக்கு உணவு வைக்க திறந்து வைத்து இருக்கிறேன். அதையும் மூட மனம் வரவில்லை.


    /அந்த சொல்லிற்கு அன்பு, பாசம், பந்தம் போன்றவைகளும், பக்க வாத்தியங்கள் போல் பக்க பலமாக இருந்துதவி செய்கின்றன. இந்தச் சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டால், காதல் என்பது ஒரு அருமையான இசை. இந்த பாசம் மிகுந்த பறவைகளை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. வாழ்க இந்த காதல் புறாக்கள். //

    ஆமாம், காதல் என்பது ஒரு அருமையான இசைதான்.
    எல்லோரிடமும் அன்பும், அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்து வாழ்வோம்.

    நம்மை விட பறவைகள் படும் பாடு அதிகம். நினைத்த இடத்திற்கு சுதந்திரமாக பறப்பது போல காட்சி அளித்தாலும் அதற்கு வழியில் இடையூருகள் நிறைய காத்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்துப்படித்து தாங்கள் தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      /நாய்கள் வயிறு தொந்திரவு வந்தால் புற்களை தின்ரு வாந்தி எடுக்கும், அது போல இந்த புறாக்கள் துளசி மற்றும் மணி பிளண்ட் செடி இலைகளிய கொத்தி தின்று பச்சையாக கழிந்து வைத்து போகிறது./

      தகவல் எனக்கு புதிதாக உள்ளது. ஆனால் எங்கோ படித்த மாதிரியும் உள்ளது. புறாக்கள் துளசி, மணிப்பிளாட் இலைகளை கத்தி சாப்பிட்டு விடும் என கோள்விபட்டுள்ளேன். ஆனால் அவை இந்த காரணத்திற்காக அதை உணவாக எடுத்துக் கொள்ளும் என்பது தெரியாது. தகவலுக்கு நன்றி சகோதரி.

      /எல்லோரிடமும் அன்பும், அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்து வாழ்வோம்./

      ஆம் அது ஒன்றே நாம் இந்தப் பிறவி எடுத்ததன் பலன் என கருதுவோம். அன்பிருக்கும் இடத்தில் தெய்வம் குடி கொள்ளும் என்பது நா ம் அறிந்த வாசகந்தானே..!

      /நம்மை விட பறவைகள் படும் பாடு அதிகம். நினைத்த இடத்திற்கு சுதந்திரமாக பறப்பது போல காட்சி அளித்தாலும் அதற்கு வழியில் இடையூருகள் நிறைய காத்து இருக்கிறது/

      ஆம் உண்மை.. அத்தனையையும் தாண்டி அவை ஜீவிக்க தினமும் போராடுகிறது. இறைவன் எல்லோருக்கும் எப்படியும் படியளித்து விடுவார்.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பல இடங்களில் இப்படியான பிளாஸ்டிக் முட்கள் உண்டு. தலைநகர் தில்லியில் சாலைகளில் இருக்கும் விளக்குக் கம்பங்களில் கூட இப்படியான முட்கள் இருக்கின்றன. பறவைகள், விலங்குகள் என பலவற்றையும் கஷ்டப்படுத்துகிறோம் - நகரமயமாக்கம் என்ற பெயரில்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /தலைநகர் தில்லியில் சாலைகளில் இருக்கும் விளக்குக் கம்பங்களில் கூட இப்படியான முட்கள் இருக்கின்றன/

      அப்படியா பாவம்....! நம் சுயநலத்திற்காக ஏனைய ஜீவராசிகளை துன்புறுத்துகிறோம். இறைவன்தான் நம் தவறுகளை மன்னிக்க வேண்டும். நகரமயமாக்கம் என்ற மனிதனின் ஆசையில்தான் மரங்கள் காணாது போய் பறவைகளாகிய அவைகளும் நம்மிடம் தஞ்சமடைகின்றன. நாமும் அவைகளை பராமரிக்க நேரமின்றி, இப்படி முட்களை வைத்து விரட்டுகிறோம்.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.நேற்று கொஞ்சம் வேலைகள் மிகுதியால் நேற்றே பதில்தர இயலவில்லை. மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வணக்கம் சகோ
    பறவைகளின் உள்ளுணர்வை வெளிப்படுத்தியது தங்களது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து ஆதரவாக கருத்துக்கள் தருவதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. பிளாஸ்டிக் முள்ளு வைத்தைவங்களை நான் குற்றம் சொல்லவில்லை. யாரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால்..பொதுவாக நான் யோசிப்பது இது.

    கமலாக்கா, நமக்கு முன்னால் வாழ்ந்தவைதான் ஜீவராசிகள். நாம் வந்த பிறகு அவற்றின் இடங்களை ஆக்ரமித்துக் கொள்கிறோம். மனிதன் நாம் சுயநலக்காரர்கள்.

    யானையைக் கொண்டாடுவோம், பசுவை வணங்குவோம் ஆனால் வேறு விலங்குகளைத் துரத்துவோம், எருமையைத் திட்டுவோம். கருடன் பறவையைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்வோம் ஆனால் நமக்குத் தொந்தரவு உள்ள பறவைகள் என்று சிலவற்றை விரட்டுவொம் வெறுப்போம். நாயைத் துரத்துவோம், ஆனால் பரிகாரம் என்று சொல்லிவிட்டால் பைரவ்ர் கோயில்களாகச் செல்வோம்!

    எல்லா ஜீவராசிகளுக்குள் இருக்கும் உயிரும் ஒன்றுதான். வெளித்தோற்றம் தான் வேறு. எல்லா உயிர்களும் ஒன்றுதான் இறைவன் முன்னில்.

    மனிதர்கள் செய்யாத அட்டகாசங்களா? புறாவுக்கோ இல்லை வேறு பறவைகளுக்கோ வேலி போடுபவர்கள் மற்ற வீட்டிலுள்ளவர்களுக்கு உபத்திரவ்ம் கொடுக்காமல் இருக்கோமா இல்லை பொதுவெளியில் செய்யாமல் இருக்கோமா?

    குடியிருப்பவர்களைக் குற்றம் சொல்லவில்லை ப்ளாஸ்டிக் கம்புகள் வைத்தவர்களை நான் குற்றம் சொல்லவில்லை இது அவரவர் விருப்பம் பார்வை.

    ஆனால் பொதுவாக மனிதர்கள் நாம் 6 அறிவில் எல்லாவற்றையும் டாமினேட் செய்கிறோம்....புறாவும் இறைவனின் படைப்புதானே! அப்படித்தானே நாம் சொல்கிறோம் இந்த உலகின் ஜீவ ராசிகள் அனைத்தும் இறைவன் படைப்பு என்று!!

    அவற்றின் இடங்கள் பறிபோவ்தால்தானே நம்மை அண்டி வருகின்றன. அவை மரங்களில் அதிகம் வாழ்வதில்லை கட்டிடங்களில்தான் வாழும் குறிப்பாகப் பாறை இடுக்குகள் கோயில் கோபுரங்கள் என்று.

    இறைவனின் படைப்பு என்று சொல்லிக் கொண்டே....
    நாம் பேசுவது ஒன்று செய்வது ஒன்று முரண்!

    ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் பூசாரி அல்லது ஆன்மீக வாதி சொல்லட்டும் புறாவுக்கு உணவு வழங்கினால் இந்த நன்மை அந்த நன்மை புண்ணியம் என்று....எப்படி அக்ஷ்யதிருதியை என்று வந்ததோ அது போல யாரேனும் சொன்னால்.....எல்லா புறாக்களும் கொண்டாடப்படும்! புறாக்கள் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும்...

    பேருந்தில் பயணிக்கிறோம், பொது வெளியில் கூட்டங்களுக்கிடையில் நடக்கிறோம்... பலருடைய மூச்சுக்காற்று நம் மீது படும்..அதுவும் நெருக்கமான கூட்டங்களில் கோயில்களில்....அப்போது நமக்கு வியாதி வராதா?
    பொதுவில் மக்கள் விடும் சிகரெட் புடை, குடி நாத்தம்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்கள் விளக்கமான கருத்தைக்கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு இந்தப்பதிலுக்கு முன் நானும் பெரிய பதிலாக டைப் அடித்துக் கொண்டிருந்தேன். வெளியிடும் நேரத்தில் அது மாயமாக மறைந்துவிட்டது. தங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையே.. அருமையான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. படங்கள் எல்லாம் மிக அழகு.

    இரு புறாக்கள் அழகாக ஜோடியாக இருப்பது அழகு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து, ஜோடிப்புறாக்கள் படங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் என் எழுதும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. பறவைகளுக்குச் சுதந்திரம் என்கிறோம்....ஹாஹாஹாஹா நிச்சயம் இல்லை.

    இயற்கையின் படைப்பில் எல்லாமே ஒன்றைச் சார்ந்துதான் மற்றொன்று. இயற்கைச் சங்கிலி...அது அதில் ஏதேனொன் ஒன்று அறுந்தாலும் பிரச்சனைகள்தான். அப்படி உடைவதால்தான் நாம் பல பிரச்சனைகளைச் சந்தித்துவ் வருகிறோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்களுடைய அழகான கருத்துக்கள்.

      /இயற்கையின் படைப்பில் எல்லாமே ஒன்றைச் சார்ந்துதான் மற்றொன்று..... அப்படி உடைவதால்தான் நாம் பல பிரச்சனைகளைச் சந்தித்துவ் வருகிறோம்./

      உண்மை...குறிப்பாக சுயநலமிக்க தனித்தனி வாழ்வுகளாக மனித நேயத்தை மறந்து வருகிறோம். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. பறவைகளை வரவிடாது தடுப்பது அவரவர் விருப்பம்.

    ஜோடிப் புறாக்கள் அழகாக இருக்கின்றன.

    எங்கள் வீட்டு கிச்சன் குக்கர் வெப்பத்தை வெளியேற்றும் குழாயின் உள் ராபின் குருவி இரண்டு வருடங்களுக்கு மேலாக மாறிமாறி குஞ்சு பிறந்து வாழ்ந்து வருகிறது.அவையும் வாழ்ந்து போகட்டுமே. நாங்கள் அடுப்பு வெப்பம் வெளியேற யன்னலை திறந்து விட்டு சமைக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆம்.. அது அவரவர்கள் விருப்பந்தான் .. எல்லோரும் அவைகளை நேசிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே..!

      ஜோடிப்புறாக்கள் படங்கள் நன்றாக உள்ளதென கூறியமைக்கு என் அன்பான நன்றி சகோதரி.

      /எங்கள் வீட்டு கிச்சன் குக்கர் வெப்பத்தை வெளியேற்றும் குழாயின் உள் ராபின் குருவி இரண்டு வருடங்களுக்கு மேலாக மாறிமாறி குஞ்சு பிறந்து வாழ்ந்து வருகிறது.அவையும் வாழ்ந்து போகட்டுமே. நாங்கள் அடுப்பு வெப்பம் வெளியேற யன்னலை திறந்து விட்டு சமைக்கின்றோம்./

      நல்ல மனது உங்கள் அனைவருக்கும். பறவைகளுக்காக தங்களது சிரமங்களை கூட தாங்குகிறீர்கள்.

      நாங்களும் இங்கு ஒரு தடவை அப்படித்தான் மைனாக்களுக்கு இரக்கப்பட்டு விட்டு வைத்திருந்தோம். அது வேறு மாதிரி அமைந்து விட்டது. குஞ்சாக இருந்த பறவை உள்ளுக்குள்ளேயே இறந்து விட வீடு முழுவதும் நாற்றம். வேறு வழியின்றி ஆட்களை அழைத்து அதை மாற்றி நான்காயிரம் வரை செலவழிக்க வேண்டியதாயிற்று. அது ஒரு கதை.

      தங்களின் ஊக்கம் மிகுந்த அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete