Friday, August 28, 2020

காக்கும் கடவுள்..

 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா.

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்  வசிக்கும் அனைவரிடமும்  பணம் வசூலித்து  சென்ற வருடம் கொண்டாடிய பிள்ளையார் சதுர்த்திவிழா.  பிள்ளையார் சதுர்த்தி முடிந்த ஒரு வாரத்தில்,  ஒரு ஞாயறன்று, (அன்றுதான் அனைவரது வீட்டிலும் எல்லோரும் அலுவலகம், பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருப்பார்கள்.) காலை பூஜையுடன் ஆரம்பித்து, அன்று மாலை நடைபெற்ற சிலை கரைப்பு வரை அனைவருக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடுநடுவில் நடத்தி, (பெரியவர்களுக்கு என்று  சில நிகழ்ச்சிகள். . சின்னவர்களுக்கு என்று தனியாக ) மிக  சின்ன குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ்  ஸ்லோகம் சொல்வது, என பங்கேற்க வைத்து  இறுதியில் ஓவியம், கலர் வரைபவர்களுக்கென்று ஊக்கமளித்து, இறுதியில்  அனைவருக்கும் பரிசு தந்து ஒரே உற்சாகமாக அன்றைய நாளை கொண்டாடினோம்.  


இதில் எங்கள் வீட்டு சின்னக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் தங்கள் ஓவிய திறமையை காட்டிய  சில படங்கள்.. உங்கள் பார்வைக்காக..! 








இத்தனையிருந்தும் அன்று மதிய உணவு இல்லாமலா?  மதிய உணவாக இதெல்லாம்.. . இன்னும் சில அயிட்டங்கள் தட்டில் இடமில்லாததால்,( வயிற்றிலும்)  வாங்கிக் கொள்ளவில்லை. . 



அனைவரும்  சாப்பிட்டான பின்  இந்த ஓவிய போட்டிகள்.. . பெரிய குழந்தைகள் பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்து பிள்ளையாரை  அழகாக வரைந்தனர்


இது சென்ற தடவையே பகிர வேண்டுமென படங்கள் எடுத்து வைத்திருந்தேன். வழக்கப்படி எழுத இயலாமல், இந்த வருடம் ஸ்ரீ விநாயகர் ஆக்ஞையால், எழுத முடிகிறது. எல்லாம் அவன் செயல்.. அவனன்றி ஒர் அணுவும் அசையாது அல்லவா. ..!

இந்த தடவை இந்த மாதிரி கொண்டாட்டம் இந்த தொற்றினால் இல்லாமல் போய் விட்டது.  அவரவர்கள் வீட்டில் சத்தமின்றி பிள்ளையார் போய் அமர்ந்து தனக்கு தேவையான பூஜைகளைப் பெற்றுக் கொண்டு  அமைதியாக சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

எங்கள் வீட்டிலும் தனியாக பிள்ளையார் சிலை வாங்கவில்லை. வீட்டில், பூஜையறையில், என் மாமியார் காலத்திலிருந்து இருந்து வரும் கற்சிலை விநாயகர்தான்  இந்த தடவை நாங்கள் செய்த பூஜைகளை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 

இவர்தான் அது... 


இந்த தடவை இவரை சிறப்பான பூஜைக்காக வரவேற்க காலை வாசலில் போட்ட இளசும்  பழசுமான கோலம். 


நாங்கள் செய்த பூஜைகளை ஏற்றபடி இன்முகத்துடன் அமர்ந்திருக்கும் அவர். 


அவருக்காக தயாராகி கொண்டிருந்த  அவருக்கு மிகவும் பிடித்தமான, நமக்கும் மிகவும் பிடித்தமான பிரசாதம். 

 
பஞ்ச பூதங்களும் இணைந்து பூரணத்துவம் பெற்று அழகான அகிலமாய்  உருவானதைப்போல வெல்லம், தேங்காய், இருவகை பருப்புகள். ஏலக்காய் ஆகிய ஐந்தினால் இணைந்து திரண்ட வெல்லப்பூரணம்... .  


அண்டமெல்லாவற்றையும் தன் வயிறேனும் பேழைக்குள் அடக்கியபடி, அவைகளுக்கு தீங்கெதுவும்  வராமல் காத்து ரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகத்துடன், விநாயகரின் அரும்பெரும் கருணையை காட்டும் விதமாய் பூரணத்தை தன்னுள்ளே அடக்கியபடி காட்சியளிக்கும் கொழுக்கட்டைகள். 


வீட்டில் சின்ன குழந்தைகள் இருப்பதால் அவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் என்பதால், என்னால் இயன்ற வரை கூடவே கொஞ்சம் நைவேத்தியமாக, புளியிட்ட அவல். உளுந்து வடை, கொண்டைக்கடலை சுண்டல், மகாநேவேத்தியம், பருப்பு என செய்தேன். கூடவே சாம்பார் வைக்க நினைத்து, மணியாகி விடவே, அதை மதியத்திற்கு ஒத்தி வைத்து விட்டு அவசரத்திற்கு குலதெய்வ சிற்றுண்டியும் நைவேத்தியத்தில் அன்று இடம் பிடித்தது. பிள்ளையார். "இன்று பார்த்து ரவை உப்புமாவா என வியப்படையாமல்  ஒரு வித்தியாசமாக இருக்கிறதே. .! " என மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 


ன்னும் அவருக்கு புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், எள்ளோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், ஆமைவடை என்னும் பருப்பு வடை, நான் செய்துள்ள தேங்காய் பூரண கொழுக்கட்டையுடன், காரக் கொழுக்கட்டை எள்ளு இனிப்பு கொழுக்கட்டை, லட்டு. பாயாசம், போன்ற இனிப்புகள் எல்லாம் செய்து அவரை உண்ண வைக்க எனக்கு ஆசைதான். "முன்பு இந்த மாதிரி நிறைய வகைகள் செய்து கொண்டிருந்தேன். இப்போது இயலவில்லை.... எனவே இதையெல்லாம் மானசீகமாக உனக்கு நைவேத்தியத்தில் இணைத்து அர்ப்பணிக்கிறேன்." என நான் மானசீகமாக அவரிடம் பேசியதை அவரும் ஆமோதித்த மாதிரி தலையாட்டி நான் செய்து வைத்த சிற்றுண்டிகளை சுவைக்க ஆரம்பித்தார். 

இவ்விதமாக இந்த தடவை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளினால் விநாயக சதுர்த்தி வைபவம் நல்லபடியாக நடைப்பெற்றது. ஒவ்வொன்றிக்கும் ஒரு தூண்டுகோலை தந்து நம்மை ஊக்குவிப்பவன் இறைவன். விநாயக சதுர்த்திக்கு முன்பே சென்ற வருட பழையதை எழுதி பின் இந்த வருடம் வீட்டில் கொண்டாடிய  விநாயக சதுர்த்தி பதிவையும் இணைக்க வேண்டுமென ஆரம்பித்து எழுத நேரமில்லாமல் பாதியில் எழுதி  வைத்திருந்த என்னை சகோதரர் நெல்லைத் தமிழன் வடிவில் விநாயகர் வந்து இன்று என்னை முழுவதுமாக  எழுத வைத்தார். "பிள்ளையார் பதிவை எழுதவில்லையா?" என்று கேட்டு நான்  எழுதி முடிக்க ஊக்கப்படுத்திய  விநாயகருக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் என் மனம் நிறைந்த  நன்றிகள்.🙏 . 🙏. 

சற்றே பெரிய பதிவாகி போன இதைப்படித்து கருத்திடும் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், என் பணிவான நன்றிகள். 🙏. 🙏. 

ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. அண்ணனும்,தம்பியுமாக அகில உலகங்களையும், உலகில் வாழ் அத்தனை உயிர்களையும் காத்து ரட்சிக்கட்டும். 

Monday, August 17, 2020

கண்ணன் கேட்ட பதிவு.

 கிருஷ்ணாய நமஃ.. 

"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.."  தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை  பார்க்கிறார்.

"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து  எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு  புத்தி சொல்லப் போக  என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத  மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி  விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார். 

" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. !  உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம்.  எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே  அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு  அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான். 

" பார்த்தாயா...!  மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...!  ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு... 

"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர்  கண்களில் அதே சிரிப்பு. 

சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும்  எப்படியாவது பதிவை  பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில்  வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு  நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...! 


தன் அழகான பாதங்களை பதித்து  மெள்ள மெள்ள  வீட்டினுள்ளே  நடந்து வந்த கிருஷ்ணர். 

பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த  தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை... 


" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..

இப்போதுதான் திருப்தியாக உள்ளது.  நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்."  என்கிறான் அதே சிரிப்புடன் அந்த  யசோதை பாலகன்.


அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்... 

ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ... 

எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏.