Pages

Sunday, October 16, 2022

விதி எனப் பட்டதே ...



படங்கள் நன்றி. கூகுள். 

இறைவனே மனித அவதாரங்கள் எடுத்து மனிதர்களுக்காக மனிதனாக வாழ்ந்து காட்டிய நேரங்களில் எத்தனையோ இடர்களை சந்திக்க வேண்டியிருந்ததை இதிகாசங்களில் படிக்கும் போது இறைவனால் படைக்கப்பட்ட மனித குலமாகிய நாம்  அவரவரக்களுகான விதிகளை மாற்றி வாழ்ந்து விட முடியுமா? 

"தங்களுக்கு வினையை தேவாள் தாங்களே வருத்திக் கொண்டாள்" என்ற வரிகள் லலிதாம்பாள் சோபனத்தில் வரும். 

அப்படி தேவர்கள் தங்களுக்கே அவ்வப்போது வினையை வருத்தி பெற்று கொண்டனர். தேவர்களுக்கு தெய்வாம்சமான சக்திகள் இருந்தும் ஆசைகள் அதிகமானதால்தான் அவர்களும் அவர்களின் எதிரியாகிய அரக்கர் குலத்தவர்களால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்தார்கள் என புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஆக இந்த விதி, வேளை என்பதெல்லாம் நிஜமானதுதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அல்லவா? 

விதியை மதியால் வென்றவர்களை (அக்காலத்து விக்கிரமாதித்தன் போன்ற  மன்னர்கள்) பற்றி படிக்கும் போது சிறிது இது குறித்து சலனம் வரலாம். ஆனால் அதுவும் அவர்களுடைய நல் விதியின்பாற்  சம்மந்தபட்டதுதான் அவ்வாறு யோசிக்கவும், அவர்களை வெற்றி பெறவும் வைத்துள்ளது. ஆக நல்லது, கெட்டவை அனைத்துக்கும் இந்த விதிதான் காரணமானது. 

ஆஹா....! இந்த விதி புலம்பலை இப்போது நாம் கேட்பது எங்கள் விதியோ என நீங்கள் யோசிக்கும் முன், விஷயத்திற்கு வருகிறேன். 

சிவகாமியின் பந்தம் என்ற கதைப் பகிர்வு முதல் பகுதி எழுதி வெளியிட்டு விட்டு, அதன் மறுநாளே இரண்டாவதையும் வெளியிட்டு விட வேண்டுமென  நினைத்தேன்.எனக்கும் ரொம்ப நாட்கள் கதைக்கு நடுவே இடைவெளி விட பிடிக்காது. (அது வழக்கம் போல் நீளமாக அமைந்து விட்டதால், இப்படி இரண்டு பாகமாக பிரிக்க எனக்குள் ஒரு முடிவு. "தெரியுமே...! நீங்களாவது சுருக்கமாக எழுதுகிறதாவது" என்று அவசரப்பட்டு கூறி  விடாதீர்கள். அது என்னவோ எழுத எழுத கதை நீள்வது எனக்கென்று அமைந்த விதி. அதை பொறுமையாக படிப்பது உங்கள் விதி. இடையில் நான் என்ன செய்வது.? அப்பாடா.. ஒரு வழியாக இந்த விதியை இப்போதைக்கு துணையாக அழைத்துக் கொண்டு விட்டேன். :.)))) ) ஆனால், என் முடிவை அந்த விதி முழு மனதோடு ஒப்புக் கொள்ள வேணடுமே.... 

நேற்று காலை அவசரமாக குடும்பத்தடன் வெளியில் செல்ல ஒரு முடிவு. அதற்கு நான் போக வேண்டுமென்று இல்லை. ஆனால்,"அந்த தேவர்கள் தங்களை வருத்திக் கொண்ட மாதிரியான ஒரு கால கட்டத்தில்" நானும் சென்றேன். (அதுதான் ஆசை.) ஆசைக்குப் பலன் உடனடியாக கிடைத்தது.  வீட்டிலிருந்து இறங்கி ரோடை கிராஸ் செய்த போது நடுவில் கோடு போட்டாற் போல் இருக்கும் தடுப்பில் கால் இடறி விழுந்து வலது கால் முட்டி அந்த தடுப்பு கல்லில் பட்டு நல்ல பலத்த அடி.  நல்லவேளை...!! அந்த தடுப்பை தாண்டி, அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ விழுந்திருந்தால் ஏதாவது ஒரு வாகனத்தால் எனக்கு அடிபட்டிருக்கும். (வாகனத்திற்குந்தான்) (இன்னும் என் விதியின் பலாபலன்கள் என்னவெல்லாம் காண இருக்கிறதோ.. !! அதனால் வாகனங்கள் வந்து மோத அந்த விதி இடம் தரவில்லை.)  எப்படியோ சமாளித்து, கீழே விழுந்து எழுந்த  அவமானத்துடன் எழுந்து அவர்களுடன் சென்று வந்து விட்டேன். நேரமாக நேரமாக வலி பொறுக்க (எனக்குத்தான் எதையும் தாங்கும் பொறுமைசாலி என்ற பட்டத்தை நானே தந்து பெருமையுடன் கர்வத்தின் எல்லைக்கே வந்து நின்று கொண்டிருக்கிறேனே.. ..! அதனுடைய விளைவால் எவருக்கும் வலியை காண்பிக்கவில்லை. ) இயலாமல் வீடு வந்ததும் முட்டி வீக்கம், காலை அசைக்க முடியாத நிலையில் நேற்றெல்லாம் கழிந்தது. வந்தவுடன் அயோடக்ஸ் வைத்தியம் செய்தும் பயங்கர வலிதான். 

சுவாமி ஐயப்பனை தன் பொய்யான தலைவலிக்காக புலிப்பால் கொண்டு வரச் செய்தாள் பந்தள தேசத்து மகாராணி. அதுவும் அவரது தெய்வீக ரூபத்தை மக்களுக்கு காட்டி உணர்த்திட நேரம் பார்த்து காத்திருந்த அவரின் நல் விதியால்தான் நிகழ்ந்தது. இல்லையென்றால் அந்த தெய்வ குழந்தையை வளர்க்கும் பேறு பந்தளநாட்டு மஹாராஜனுக்கு கிடைத்திருக்குமா? அதுவும் அவரது நல்விதி. 

இப்படியாகப்பட்ட நல்லவர்களின் நல் விதியை நினைத்தவாறும், நானும்,என் வலியின் கொடுமையால், எனக்கென்று அமைந்த என் விதியை நொந்தவாறும் தன் அம்மாவின் விருப்பப்படி புலிகளுடனே நாட்டுக்குள் நுழைந்த அந்த ஹரிஹரசுதனை மனதுக்குள் வணங்கியவாறு, இந்த மெய்யான வலி விரைவில் போக வேண்டுமென வேண்டியபடி, "புளிக்கரைசலை" கரைத்து கொதிக்க வைத்து இரு தடவைகள் பற்று போட்டுக் கொண்டேன். 

இன்று கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் வலி, வீக்கம் உள்ளது. அத்துடன் வீட்டு வேலைகளுக்காக எழுந்து ந(க)டந்து கொண்டிருக்கிறேன். மகளுக்கும் உடல் நிலை சரியில்லை. ஜுரம். (அதுவும் ஒரு விதிதான்.) இல்லையென்றால் அவளின் அன்பான உபகாரங்கள் கிடைத்திருக்கும். 

ஆக" நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் (விதி) ஒன்று நினைக்கும்" என்பது போல் உடனடியாக கதையை பகிர இயலவில்லை. முதல் பகுதிக்கு வந்த உங்களனைவரது கருத்துக்களுக்கும் உடனடியாக பதில் கருத்து தர இயலவில்லை. மன்னிக்கவும். 

இன்றைய தெய்வங்கள் சார்ந்த பதிவுகளுக்கு சென்று கருத்தளித்து விட்டு வணங்கி வந்தேன். நாளை நல்லபடியாக வலி கொஞ்சம் குறைந்தால் நல்லது. இப்போது சொல்லுங்கள். கதைப்பகிர்வுக்கு பதிலாக இந்தப்பதிவை இன்று என்னை எழுத வைத்திருப்பதும் என்னுடைய விதிதானே...! "ஆஹா.. இப்போது எங்களை இதை படிக்க வைத்திருப்பதும் எங்கள் விதிதான்... என நீங்கள் நினைப்பதும் எனக்குப் புரிகிறது.))) . 

எனினும் உங்களுடன் பகிர்ந்து கொண்டால், என் துன்பங்களின் சுமைகளும் குறைந்து சற்று இலகுவாக மாறுவதாக உணர்கிறேன். அதனால் பகிர்ந்து விட்டேன். அதறகும் மன்னிக்கவும். 

உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.

நாளைய பாடு இதற்கும் வரும் கருத்துகளுக்கு பதில் தர முடியாத சூழ்நிலையை உருவாக்கினால் அதற்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. 🙏. 

33 comments:

  1. தங்களது கால்வலி விரைவில் நலம் பெறட்டும். வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். விரைவில் சரியாக வேண்டும்.
      உங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே. .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கால்வலி உடனே குணமாகப் ப்ரார்த்திக்கிறேன். கதையை மெதுவாக வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள.

      கால் மூட்டு வலி சீக்கிரமாக முற்றிலும் குணமாக பிரார்த்திக்கும் உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி.

      தங்கள் யோசனைக்கும் நன்றி. பார்க்கலாம். இந்த பதிவுலகிற்கு வந்து உங்களனைவரிடமும் இப்படி பேசி பகிர்ந்து கொள்வதுதான் இப்போதைய என் வலிக்கு இதமாக உள்ளது. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. முதலில் உடல்நலனே முக்கியம்... பதிவுகள் அப்புறம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். தங்கள் கருத்து உண்மைதான். இன்று கொஞ்சம் பரவாயில்லை. இருப்பினும், தங்கள் அன்பான கருத்தின்படி உடல்நலனை கவனித்துக் கொள்கிறேன். தங்கள் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கால்வலி விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.
    //நல்லவேளை...!! அந்த தடுப்பை தாண்டி, அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ விழுந்திருந்தால் ஏதாவது ஒரு வாகனத்தால் எனக்கு அடிபட்டிருக்கும். (வாகனத்திற்குந்தான்) //
    நல்லவேளை இறைவன் காப்பற்றினார், உங்களையும், வாகனத்தையும்.

    இடுக்கன் வருங்கால் நகுக! என்பது போல கஷ்டபடும் சமயத்திலும் நகைச்சுவை உணர்வுடன் வலியை தாங்கி கொண்டு பதிவு.

    //மகளுக்கும் உடல் நிலை சரியில்லை. ஜுரம். (அதுவும் ஒரு விதிதான்.) இல்லையென்றால் அவளின் அன்பான உபகாரங்கள் கிடைத்திருக்கும். //

    மகள் நன்றாக இருந்தால் உங்களுக்கு உதவியாக இருந்து இருப்பார்.

    //ஆக நல்லது, கெட்டவை அனைத்துக்கும் இந்த விதிதான் காரணமானது. //

    ஆமாம், நடப்பது எல்லாம் விதித்தபடிதான்.

    //புலிகளுடனே நாட்டுக்குள் நுழைந்த அந்த ஹரிஹரசுதனை மனதுக்குள் வணங்கியவாறு, இந்த மெய்யான வலி விரைவில் போக வேண்டுமென வேண்டியபடி, "புளிக்கரைசலை" கரைத்து கொதிக்க வைத்து இரு தடவைகள் பற்று போட்டுக் கொண்டேன்//.

    உடம்பை பார்த்து கொள்ளுங்கள். புளிக்கரைச்சல் பற்று போட்டு கொண்டாலும் . கல் உப்பை மூட்டையாக கட்டி அதை தோச்சைக்கல்லில் நல்லெண்ணேய் விட்டு சூடி செய்து கைபொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் இரத்த கட்டு இருந்தால் சரியாகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இடுக்கன் வருங்கால் நகுக! என்பது போல கஷ்டபடும் சமயத்திலும் நகைச்சுவை உணர்வுடன் வலியை தாங்கி கொண்டு பதிவு./

      ஆம்.. உறவுகள், மற்றும் பிறரிடம் எதையும் சொல்ல தயக்கம், கூச்சம் என்ற காரணத்தினாலேயே என் வாழ்க்கையில் எத்தனையோ வலிகளை தாங்கி பழக்கமாகி விட்டது.அப்போதும் இந்த மாதிரி நகைச்சுவையுடன் பேசித்தான் என் வலிகளை சற்று குறைத்துக் கொள்ளுவேன். இந்த மாதிரி சமயங்களில் கூட வீட்டு வேலைகளின் சுமைகளை அவர்களுக்கு தராமல், நானே சிரமபட்டேனும் செய்து வலிகளை கடந்து வந்து விடுவேன். அது என் நல்ல சுபாவமோ, கெட்டதோ எனத் தெரியாது. ஆனால் என் மனதிற்குள் ஒரு திருப்தி எழும். அப்படியே பழக்கமும் ஆகி விட்டது. ஒரு உண்மையான தோழியாக இதை உங்களிடம் சொல்கிறேன்.

      இப்போது பதிவுலகத்திற்கு வந்த பின்னும் எத்தனையோ அடிகள் வலிகள். அந்த நேரத்தில் இந்த மாதிரி நகைச்சுவையுடன் மனம் விட்டு உங்கள் அனைவருடனும் எழுதி பகிர்ந்து கொள்ளும் போது வலிகளின் வேதனைகள் குறைவது போல ஒரு உணர்ச்சி வருகிறது. இதனால் உங்கள் அனைவரையும் மனதால் சிரமபடுத்துகிறேனோ எனவும் எண்ணிக் கொள்வேன். அப்படி இருந்தால் என்னை அனைவரும் மன்னித்து கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

      /உடம்பை பார்த்து கொள்ளுங்கள். புளிக்கரைச்சல் பற்று போட்டு கொண்டாலும் . கல் உப்பை மூட்டையாக கட்டி அதை தோச்சைக்கல்லில் நல்லெண்ணேய் விட்டு சூடி செய்து கைபொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் இரத்த கட்டு இருந்தால் சரியாகி விடும்./

      சரி சகோதரி. உங்கள் ஆலோசனைபடியும் செய்கிறேன். இரண்டு நாளாக வெந்நீர் ஒத்தடம் தருகிறேன். உப்புக் கிளி கட்டி வெந்நீரில் முக்கி எடுத்து தரலாம் என்றிருந்தேன். இப்போது நீங்கள் சொன்னதும் இந்த முறையும் நினைவுக்கு வந்தது. அவ்விதம் செய்கிறேன் சகோதரி. தங்கள் அன்பான ஆலோசனைக்கு மிக்க நன்றி சகோதரி.

      இன்று கொஞ்சம் விண்விண்ணென்று தெறிக்கும் வலி குறைந்துள்ளது. ஆனால் கால் கீழே பதித்து நடக்க இயலவில்லை. அப்போது வலி உள்ளது. இந்த மாதிரி ஒத்தடங்கள் தந்தால் மேலும் இரண்டொரு நாளில் வலி குறையுமென நினைக்கிறேன்.

      எதுவுமே நடக்க இருப்பது நடந்துதான் தீரும். அதை மாற்ற முடியாதல்லவா.. இதில் வரும் ஆழமான நம்பிக்கைதான் எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்ளவும் நம்மை தயார்படுத்துகிறது என நான் நினைக்கிறேன். தங்கள் அன்பான விசாரிப்புகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நல்லெண்ணெய் கொஞ்சம் விட்டு கல் உப்பு மூட்டையை சூடு செய்து

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      புரிகிறது சகோதரி. தங்கள் ஆலோசனைபடியே செய்கிறேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கதை காத்திருக்கட்டும். முதலில் கால் சரியாகட்டும். எப்படி கவனிக்காமல் சென்று காலில் இப்படி அடிபட்டுக் கொள்கிறீர்கள்? சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கதை காத்திருக்கட்டும். முதலில் கால் சரியாகட்டும்./

      ஆம். தங்கள் அன்பான அக்கறையான கருத்துக்கு நன்றி கால் சரியாக வேண்டுமென்றுதான் நானும் பிரார்த்தித்தபடி உள்ளேன். எனக்கு வலது புறம் (சற்று தொலைவில்தான்) வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை கடந்து விடலாமென்று விரைவாகச் சென்றும், இடையிலிருக்கும் அந்த தடுப்பில் ஏறும் போது செருப்பு தடுக்கியோ, இல்லை வழுக்கியோ எப்படியோ அடிபட்டு விட்டது. அடிபடும் வரை இப்படி நடக்குமென்று சிறிதும் உணரவில்லை. நல்லவேளை..! வேறெந்த வீபரீதமும் நடக்கவில்லை. எல்லாம் விதிதான் வேறு என்ன செல்வது?

      உங்களை இருதினங்களாக எங்கும் காணவில்லையே என யோசித்தும் கொண்டிருந்தேன். அதிக வேலைய, இல்லை வெளியூர் பயணமோ என நினைத்திருந்தேன். இன்றுதான் தங்கள் கணினி இன்னமும் சரியாகவில்லை என்ற நிலை புரிந்தது. அப்படியும் என்னை விசாரிக்க வந்தமைக்கும், தங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. "அலுவலகத்தில் அதிக வேலையோ. . "என எழுதினேன். எழுத்துப்பிழை வந்து விட்டது.

      Delete
  7. கமலாக்கா....கதை போகிற படி...போகட்டும்...வர படி வரட்டும்...இப்போது முக்கியம் உங்கள் கால் வலி. முதலில் கவனித்துக் கொள்ளுங்கள்...அது மிக முக்கியம்....

    இனி கவனமாக நடங்கள் கமலாக்கா...ரோட்டைக் கடக்க வாகனங்கள் வந்ததோ அவசர அவசரமாகக் கடந்தீங்களோ?

    நல்ல காலம் இத்தோடு போச்சு...இறைவனுக்கு நன்றி. எல்லாம் விரைவில் சரியாகிவிடும் கமலாக்கா நாங்கள் எல்லொரும் பிரார்த்திக்கிறோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /இப்போது முக்கியம் உங்கள் கால் வலி. முதலில் கவனித்துக் கொள்ளுங்கள்...அது மிக முக்கியம்./

      ஆம். கால் வலி சரியாக வேண்டும். இன்று கொஞ்சம் வலி பரவாயில்லை. ஆனால் இயல்பு நிலை வர சில நாட்களுக்கு மேலாகுமோ என தோன்றுகிறது. காலை ஊன்றும் போதும், நடக்கும் போதும் கடும் வலி உள்ளது. உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளில் படிபடியாக வலி குறைந்து விட்டால் நல்லது கதையை எழுதி முடித்து விட்டேன். அதை இரு பகுதிகளாக பிரித்துப் போடுவதற்குள் இப்படி ஒரு நிகழ்வு. நடப்பதெல்லாம் நாராயணன் செயல்தானே.. ..!!

      ஆம். எனக்கு வலதுபுறம் வந்து கொண்டிருக்கும் வாகனத்தை கடந்து விடலாம் எனச் வேகமாக சென்ற போதும், இப்படி நடுவில் இருக்கும் தடுப்பில் கால் வைத்து ஏறும் போது, செருப்பு தடுக்கியோ, வழுக்கியோ விழப்போகிறேன் என கனவிலும் நினைக்கவில்லை. என்னவோ ஒரு நொடியில் நடந்து விட்டது. மேலும் எந்த வீபரீதமும் ஏற்படுத்தாமல் இறைவன்தான் காப்பாற்றினார்.

      எல்லாம் விரைவில் சரியாகி விடும் என்ற தங்கள் அன்பான வார்த்தைகள் எனக்கும் ஆறுதலை தருகிறது. தங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. //விதியை மதியால் வென்றவர்களை (அக்காலத்து விக்கிரமாதித்தன் போன்ற மன்னர்கள்) பற்றி படிக்கும் போது//

    நான் விதியை படுபயங்கரமாக நம்பும் ஒராள், அதனால விதியை வென்றவர்கள் என்பதை விட, அப்படி வெல்ல வைத்ததும் விதியேதான் எனத்தான் நான் எடுத்துக் கொள்வதுண்டு:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /நான் விதியை படுபயங்கரமாக நம்பும் ஒராள், அதனால விதியை வென்றவர்கள் என்பதை விட, அப்படி வெல்ல வைத்ததும் விதியேதான் எனத்தான் நான் எடுத்துக் கொள்வதுண்டு:))/

      அதேதான் என் கருத்தும். பதிவிலும் அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். நாளைய காலை பிளான் என இன்று இரவு எதுவும் எடுக்கக் கூட மாட்டேன். "பிழைத்து கிடந்தால், பார்ப்போம்" என்ற வாசகந்தான் முதலில் சொல்ல வேண்டுமென வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் சொல்படி சொல்லி வாழ்ந்து வருபவள். அதனால் விதி மேல் எனக்கும் அசாத்திய நம்பிக்கை. அதன்படிதானே அனைத்தும் நடந்து வருகிறது. . உங்கள் நம்பிக்கையும் அவ்வாறே இருக்கிறதென்று உங்களுடன் வலையுலகில் பழகிய நாட்களில் இருந்தே எனக்குத் தெரியும். விதியை மீறி நம்மால் என்ன செய்ய முடியும்.?

      தாங்கள் தொடர்ந்து என் தளத்திற்கு வந்து கருத்துக்கள் தருவது எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது சகோதரி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. // நீங்களாவது சுருக்கமாக எழுதுகிறதாவது" என்று அவசரப்பட்டு கூறி விடாதீர்கள்.//

    ஹா ஹா ஹா அதிரா அவசரப்படாமலேயே சொல்கிறேனாக்கும்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஹா ஹா ஹா அதிரா அவசரப்படாமலேயே சொல்கிறேனாக்கும்:))/

      ஹா ஹா ஹா. அவசரப்பட்டு மட்டுமில்லை..அந்த உண்மையையே நிதானமாகவே சொல்லி விடுவீர்கள் என்றும் தெரியும். நானே அதை பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறேனே...!! .ஹா ஹா ஹா. ஆனாலும் நீங்கள் அனைவரும் என் நீளமான எழுத்தை விரும்பி எந்நாளும் ஏற்றுப் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு பரிபூரணமாக உள்ளது. அந்த விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள். :))) தங்களின் அன்பு கருத்துக்கள் ஏற்படுத்திய சிரிப்பலைகளினால் என் வலி சற்று குறைந்துள்ளது சகோதரி. அதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ஓ நீங்கள் கதை எழுதப்போகிறீங்கள் என நினைச்சேன், கால் தடக்கி விட்டதோ, ஆனா பலரும் செய்யும் தப்பு, அப்படியே வலிக்காதமாதிரியே நடிச்சு அலுவலை முடிப்பது, இதனால இன்னும் மோசமாகிடவும் வாய்ப்பிருக்குது, இப்பகூட போய் ஒரு எக்ஸ்ரே எடுப்பது நல்லது, பின்பு கை வைத்தியங்களைப் பண்ணலாம் என்பது என் கருத்து. சீக்கிரம் நலமாகிட வேண்டுகிறேன் மனதார.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கதைதான் ஒரு பகுதியிலேயே பாதியிலேயே நிற்கிறதே...! அதை முடிக்கும் போது அதைக்குறித்த தங்களின் கருத்துரைகளையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன். அதற்கு நடுவில்தான் இந்த விதியின் ஆர்ப்பரிப்பு.

      /ஆனா பலரும் செய்யும் தப்பு, அப்படியே வலிக்காதமாதிரியே நடிச்சு அலுவலை முடிப்பது, இதனால இன்னும் மோசமாகிடவும் வாய்ப்பிருக்குது,/

      ஆகா.. கொஞ்சம் பயமுறுத்துகிறீர்களே சகோதரி. ஹா ஹா ஹா.
      எனக்கு எந்த ஒர் உபாதைக்கும் மருத்துவரிடம் செல்லவே பயம். வலிகளைக் கூடத் தாங்கி கொள்வேனே தவிர மருத்துவரிடம் சென்று காண்பித்து என்று யோசிக்கவே பயமாக இருக்கும். இப்போது விதி வசமாக வந்திருக்கும் இந்த கால் மூட்டு வலி இந்த கை வைத்தியத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி விட வேண்டுமென்ற என் பிரார்த்தனைகளையும், உங்கள் அனைவரின் நம்பிக்கையான பிரார்த்தனைகளையும் மலை போல் நம்புகிறேன். தங்கள் அன்பான பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. விதியே விதியாய் விதைத்ததும் விதி..
    விதிக்குள் விதியாய்
    விளைந்ததும் விதி..

    விதியே விதி என
    விரைந்ததும் விதி..
    விதியே விதி எனக்
    கரைந்ததும் விதி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      விதிக் கவிதை நன்றாக உள்ளது. உண்மைதான். விதிக்கு முன் நாம் என்றுமே சாமானியமானவர்கள். இது வீதியில் நடந்த விதியின் விளையாட்டு. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இத்தனை துன்பத்துக்கு இடையே இறைவனின் நினைப்பு வரப்ரசாதம்..

    விரைவில் வலி தீர்ந்து நலம் பெறுவீர்கள்..

    இறைவன் துணை உண்டு..
    கவலை வேண்டாம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இத்தனை துன்பத்துக்கு இடையே இறைவனின் நினைப்பு வரப்ரசாதம்/

      ஆம். . அந்த ப்ரசாதத்தின் மகிமை என் உள்ளத்தின் உரம். இதை என்னுள் எப்போதும் தக்கவைப்பதும் அந்த விதிதான். அதற்கே என் வாழ்நாள் முழுக்க அதற்கு நன்றி கூற வேண்டும்.

      /விரைவில் வலி தீர்ந்து நலம் பெறுவீர்கள்..
      இறைவன் துணை உண்டு..
      கவலை வேண்டாம்./

      தங்கள் அக்கறை நிரம்பிய ஆறுதலான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. விரைவில் சரியாகிவிடும் கமலா அக்கா ...முடிந்தால் மருத்துவரையும் ஒரு முறை கண்டு வாருங்கள் ...

    கதைக்கு இன்னும் நேரம் வரவில்லை ...மெதுவாக வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது அன்பான கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் என மனமார்ந்த நன்றி சகோதரி. தாங்கள் கூறுவது போல் முடிந்தால் ரொம்ப முடியவில்லையென்றால்..) மருத்துவரை பார்க்கிறேன்.

      /கதைக்கு இன்னும் நேரம் வரவில்லை ../

      ஆம்.. எழுதி முடித்த கதையை சரி கொஞ்சம் சரி பார்த்து வெளியிட வேளை வரவில்லை போலும். வரட்டு ம். தாங்களும் வந்து படித்து கருத்துகள் கூறினால் மகிழ்வடைவேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. விரைவில் சரியாகட்டும் எனப் பிரார்த்திக்கிறேன். ஆனாலும் நீங்கள் உங்களை மிகவும் வருத்திக்கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆர்த்தோஹெர்ப் தைலம், மாத்திரைகள் இரண்டையும் வாங்கி வைத்துக்கொண்டு இரவு படுக்கையில் தைலத்தைத் தடவிக்கொண்டு ஒரு மாத்திரையையும் போட்டுக் கொள்ளுங்கள். வலி விரைவில் குறையும். நான் பொதுவாக விளம்பரங்களைப் பார்த்துட்டு எதுவும் வாங்கினதே இல்லை. ஆனால் இந்தத் தைலம்/மாத்திரை சென்ற வருஷம் 3 மாசம் கால் வீக்கத்தால் படுத்தப்போ ஆங்கில மருத்துவர் பரிந்துரைத்தார். நல்ல பலன் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் நலமாக உள்ளீர்களா? தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      உங்களின் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிகுந்த நன்றி சகோதரி.

      /ஆனாலும் நீங்கள் உங்களை மிகவும் வருத்திக்கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. /

      ஆம்... இது பத்தொன்பது வயதில் புக்ககம் வந்ததிலிருந்து "என்ன இப்படி லேசான வலிகளைக் கூட உன்னால் தாங்க முடியாதா? என்ன வளர்ப்பு இது? என உறவுகள் சொல்லிச்சொல்லி மனதுக்குள் ஆழமாக வந்த உரம். என்ன நடந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாத பக்குவமாக வளர்ந்து விட்டது. நீங்களும் உங்கள் பதிவுகளில் உங்களின் அப்போதைய மன நிலைகளைப் பற்றி கூறும் போது அதில் நானும் என்னை கண்டு கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மனப் பழக்கந்தானே காரணம்.

      தாங்கள் பரிந்துரைத்த மருந்துகளை பையனிடம் சொல்லி வாங்கிக் கொள்கிறேன். இன்று கொஞ்சம் வலி குறைகிற மாதிரி தோன்றுகிறது. நடக்கும் போது சிரமமாக உள்ளது. காலை மடக்க இன்னமும் சரிவர இயலவில்லை. முட்டி எலும்பு ஆகையால் வலி ஒருவாரத்திற்கு நம்மை பதப்படுத்தி விட்டுத்தான் அகலும்.

      காலையிலிருந்து இங்கும் நெடவொர்க் பிரச்சனை. அதனால்தான் பதில் தாமதமாகத் தருகிறேன். தங்கள் அக்கறையான மருந்து பரிந்துரைக்கும், மனமார்ந்த பிரார்த்தனைகளுக்கும் எப்போதும் என் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. 60 மாத்திரைகள் 300 ரூபாய்க்கும் கீழே தான் வரும். தினம் ஒரு மாத்திரை இரவில் போட்டுக்கலாம். அல்லது இருவேளையாக ஒரு மாசம் எடுத்துக்கலாம். பின்னால் தேவையானால் தொடரலாம். ஆனால் தைலம் கைவசம் எப்போவும் வைச்சுக்கோங்க. நல்ல பலன் அளிக்கிறது உண்மையாகவே!

      Delete
    3. எனக்கும் புக்ககத்தில் எல்லா வேலைகளையும் நானே தனியாகச் செய்து பழக்கம் தான். மருத்துவர் சொல்லுவது அப்போது சக்திக்கு மீறி உழைத்தது இப்போ உடம்பெல்லாம் ரணமாக மாறி விட்டது என்கிறார். இப்போ இரண்டு வருஷங்களாக வேலைகளைக் குறைத்துக் கொண்டிருப்பதோடு உதவிக்கு ஒரு பெண்மணியும் வருகிறார்.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தங்களது, வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மீள் வருகை தந்து மருந்து பற்றிய விபரங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. நானும் இப்போதுதான் .அதன் விபரம் கூகுளில் பார்த்தேன். கண்டிப்பாக பலனளிக்கும் எனத்தெரிகிறது. எங்கள் மகனிடம் கூறுகிறேன். இந்த பங்கஜ கஸ்தூரி தயாரிப்பில் லேகியம் என் உறவினர் ஒருவர் சாப்பிடுகிறார். நானும் முக்கால்வாசி ஆயுர்வேத மருந்துகள்தான் எடுத்துக் கொள்வேன். தாங்கள் சொல்வது போல் தைலம் எப்போதுமே நல்ல உபயோகமாக இருக்கும். பயனுள்ள மருந்துகளை பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      /எனக்கும் புக்ககத்தில் எல்லா வேலைகளையும் நானே தனியாகச் செய்து பழக்கம் தான். மருத்துவர் சொல்லுவது அப்போது சக்திக்கு மீறி உழைத்தது இப்போ உடம்பெல்லாம் ரணமாக மாறி விட்டது என்கிறார்./

      உண்மைதான்.நீங்கள் பதிவுகளில் அது குறித்து சொல்வதை படித்திருக்கிறேன். என்னசெய்வது? சிறு வயதில் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போது, இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்து விடுகிறோம். அது இப்போது உடல் நலனை பாதிக்கிறது. அப்போதெல்லாம் நாம் பெரியவர்களை மதித்து அவர்கள் சொல்பேச்சுக்கு அடங்கி வாழ்ந்திருந்தோம் .அந்த காலங்கள் இப்போது வராது. இப்போதுள்ள காலகட்டத்தில் வேலைகளுக்கென பல சௌகரியங்கள் வந்ததில் பெண்களும் பலகீனமாக ஆகி விட்டார்கள் எனத் தோன்றுகிறது. ஆயினும் இறைவன் நம்மை நலமாக பார்த்துக் கொள்வான். அந்த நம்பிக்கை என்றும் மாறாமல் உள்ளது. மீள் வருகை தந்து ஆறுதலாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete