Pages

Saturday, October 12, 2019

அவ(ளு)லும், நானும்....

அவல் உப்புமாவும்,
கூடவே கூட்டும்...

"அவல் உப்புமாவா" என ஆவலோடு வருபவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.  அவலை  சுத்தப்படுத்தி, சட்டென ஒரு தடவை நீருற்றி ஒரு அலம்பு அலம்பி வடித்து  அதை ஊற வைத்து விதவிதமாய் உப்புமா செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.!

 பொதுவாக தட்டை அவல், லேசான அவல் என்றால் அலம்பும் போதே ஊறிவிடும்.  ஆனால், கெட்டி அவலென்றால் ஒரு ஒரிரு வினாடிகள் குளியலைப் பொருட்படுத்தாது நம்முடன் ஒத்துழைக்கும். நான் இங்கு உப்புமாவிற்காக, எடுத்துக் கொண்டிருப்பது எதையும் சற்று தாங்கும் திடமான மனதுடையவைதான்.

இந்த உப்புமா செய்வதற்காக கொஞ்சம் கொத்தமல்லி விரைகள், தேவையான காரத்திற்காக மி. வத்தல், கொஞ்சம் மிளகு, சீரகம், சுவைக்காக கடலைப் பருப்பு ஒரு டீ ஸ்பூன், உளுத்தம்  பருப்பு ஒரு டீ ஸ்பூன் முதலியவற்றை எடுத்துக் கொண்டேன்.

கறிவேப்பிலை நான்கு ஆர்க்கு சுத்தப்படுத்தி அலம்பி வைத்த பின், ஒரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சாமான்களை  போட்டு வறுத்து, கடைசியில் கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்த சாமானகள் நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உ. ப இரண்டொரு சிட்டிகை பெருங்காயம் (இல்லை  சிறு துண்டு பெருங்காயம்) தாளித்து கொண்டு, ஊற வைத்த அவலைப் போட்டு, தேவையான உப்பையும்  ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு, இந்த அரைத்து வைத்த பொடியிலிருந்து காரத்தின் அளவை பொறுத்து கொஞ்சம்  கொஞ்சமாக சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். அந்த காரம்,  உப்பு, எண்ணெய் சேர்த்து மணம் வீசும் நேரம் அடுப்பை நிறுத்தி, ( இந்த இடத்தில் அடுப்பை அணைக்கவும் என்றுதான் முதலில் எழுதினேன். "உப்புமா ரெடி செய்து சாப்பிடும் நேரத்தில் அடுப்பை போய் அணைத்தால் என்ன ஆவது?  அப்புறம்  "அவள் பறந்து போனாளே"..! என நான் பாடும்படி இருக்கும் என அவல்  கடுமையாக எச்சரிக்க, " நிறுத்து" என்று நான் சற்று  கடுப்பாக, " உனக்காக இவ்வளவு நேரம் உன்னுடன் ஒத்துழைத்தேன். சின்னதாக ஒரு  அறிவுரைக்கு இவ்வளவு கடுப்பா? அதையே அங்கேயும் போடு" என்றது புன்னகையுடன் திடமனதினை உடைய அவல்...! வேறு வழி.! அவச்(ல்) சொல்லால் என்னை பயமுறுத்தியதால் "நிறுத்தி" அங்கே பேசாமல் அரங்கேறியது. ஹா. ஹா ) உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி பின்னர் பறிமாறவும்.


வறுக்க தயாராக, வறுபடும் எண்ணத்தை  தங்களுக்குள் உண்டாக்கியபடி, "கடனே" என புகைப்படத்திற்கு போஸ் தரும் க. ப, உ. ப, சீரகம், கொ. ம. விரைகள். மி. வ, மிளகு முதலியவை.


மனதிடத்தை தன்னுள் ஊற வைத்தபடி, நமக்காக எதையும் தாங்கும் மனோ நிலையில், நீரில் மூச்சடக்கி ஊறிக் கொண்டிருக்கும் அவல்.


முன்பெல்லாம் "ஒருவருக்காக செய்யும் நற் பயன்களை பெற்ற பின்  தூக்கி எறியப் படுபவர்களை எனக்கு உதா"ரண" மாய் காட்டி, காட்டி என்னையும், "ரண"ப் படுத்தினீர்கள். இப்போது என்னை நல்ல விதத்தில் பயன்படுத்துவது கண்டு சந்தோஷம் அடைகிறேன்." என மலர்ச்சி காட்டி காத்திருக்கும் கறிவேப்பிலை.


" வறுக்கும் வேதனை பொறுக்கும் எங்கள் வலிகளின் விலை என்ன? " கேள்வி கேட்கும் சாமான் வகையறாக்கள்.


" இப்படி போட்டு வறுத்த பின்பாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..! இப்போதும் வெறும் மெளனந்தானா? என மெளனம் கண்டு முகம் சிவக்கும் அதே சாமான் வகையிறாக்கள்.


" தட்டில் மாற்றி குளிர வைத்தால் நாங்கள் சமாதானமாகி விடுவோம் என்ற நம்பிக்கையா? விடுவோம்...விடுவோம்.. ஆனால், எங்களுக்கும், மின் விசிறி போட்டு கொஞ்சம் உபசாரம் செய்யுங்கள்.. இல்லையென்றால், கொதிக்கும் சூட்டை சற்றேனும் குறைக்க விட மாட்டோம்..! என பிகு செய்யும் அதே சா. வகை.


"மறுபடியும் எண்ணெயுடன் கடாய்.. இதே வேலைதானா ? அவர்கள் போதாதென்று நாங்களுமா ? கோபத்தில் தன் கூடவே  உ. பாவை துணைக்கழைத்து கொண்டு படபடக்கும் கடுகு...


இவர்களின் கோபங்களை குறைக்க மனதிடத்தை ஊறி வளர்த்துக் கொண்ட அவலை (அவ(ள்)ல் வருவாளா..?) என கேட்டு  காத்திராமல் அழைத்து வந்து கடாயில். சேர்த்ததும்,  கோபம் தணிந்த கடுகு படபடப்பு அடங்கி அமைதியானது. 


வெந்தணலில் வறுத்த சூட்டை மின் விசிறியின்  சில்லென்ற காற்றில் பறக்க விட்டு, மனம் குளிர அனுபவித்தபடி இருந்த சந்தோஷத்திலேயே, மிக்ஸியில் பொடியாகி வந்ததும் தெரியாமல், குதூகலமாக தட்டில் ஒன்று கூடி குவிந்திருக்கும் மி. வ, உ. ப  க. ப., மி, சீ, கொ. ம. வி.


அழகுள்ள இந்த பிரபஞ்சத்திற்கு அணிகலன்களாக  இயற்கையும் ஒளி வீசி நட்பாகி களித்திருப்பது போல், அவலுடன் நட்பாக ஒன்று கூடி களித்த பொடிகள்.


முழுமை பெற்ற நிலையில், அவ(ள்) ல் தயாரிப்பு..(இல்லை.. இல்லை என் தயாரிப்பான, ) உப்புமா.


இது வேறு கதை. பொடித்த பொடி அதிகமாக தோன்றவே, பாதியை அவலுடன் சேர்க்காமல் எடுத்து வைத்திருந்தேன். அன்றைய காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்த அவலுக்கு தொட்டுக் கொள்ள ஏதும் தேவையில்லையெனினும், மதியத்திற்கு தயாரான  சாதம்" என்னால் தனியாக  பவனி வர இயலாது" என்று மிகவும்  கவலைப்பட்ட காரணத்தால், 


போரடித்துக் கொண்டு கு. சா. பெட்டியில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த காரட், பீன்ஸ்  கோஸிடம் சாதத்திற்கு துணையாக வர "சம்மதமா" எனக் கேட்டவுடன்,


சம்மதித்த அவைகளுடன் அந்த மீதமிருந்த பொடிகளுடன் கொஞ்சம் தேங்காயை அரைத்து விட்டு ஒரு கூ..ட்..டா..க.....


நாம பேசாமல் குளிர் காய்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். "சம்மதமா.. ! உங்களுக்கு சம்மதமா..! நீங்கள் எங்களுடன் வழித்துணையாக கூட வர சம்மதமா?" என்று" கண்ணால்" பாடி மயக்கி கூட்டாக ஆக்கி விட்டு எத்தனை படங்களாக இஷ்டத்துக்கும் "சுட்டு சுட்டு" வேறு பொசுக்குகிறார்கள்?

போகட்டும்... ! எப்படியிருந்தாலும், "ஒன்பது வாட்டி மாத்தி, மாத்தி படமெடுத்ததை வேஸ்ட்டாக்காமல் விட மாட்டா இந்த கமலாக்கா.. ! " என்று தேம்ஸ் பட்டமகிஷி வந்து காரசாரமாக கமெண்ட்ஸ் தரப் போறாங்க பார்.!! என்று கூடி பேசி மகிழும் கூட்டணிகள்.( ஹா. ஹா. ஹா.)

ஆகா....! இப்படி ஒன்னு இருக்கோ.. ! ஆனாலும் வளைத்து வளைத்து எடுத்ததை ஒன்று கூட விட மனமில்லை பாருங்கள். கோர்வையாகத்தானே இணைத்து எழுதியிருக்கிறேன். பார்த்து, படித்து தரும் பாராட்டுகளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றிகள்... 🙏... 

49 comments:

  1. அவல் உப்புமா மகாத்மியம் அருமை...
    பாட்டும் பதமுமாக பதிவும் மிக இனிமை!...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /அவல் உப்புமா மகாத்மியம் அருமை...
      பாட்டும் பதமுமாக பதிவும் மிக இனிமை!./

      வெறும் உப்புமா என்றாலும், அதன் மகாத்மியத்தை உணர்ந்து அருமையான கருத்து தந்துள்ளதற்கு மகிழ்ச்சி.

      பாட்டும் பதமுமாக பதிவை இனிமை என்று ரசித்து கருத்து தந்துள்ளதற்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இந்த முறையில் அவல் உப்புமா பண்ணினால் அவலைப் புளியில் ஊற வைத்துப் பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து வைப்பேன். பின்னர் நல்லெண்ணெயில் தாளிதம் செய்து பொடியைப் போட்டுக் கிளற வேண்டும் எங்க வீட்டில். புளி அவல் என்போம். நீங்கள் சொன்ன மாதிரியும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். ஸ்ரீரங்கத்தில் மெலிதான அவல் கிடைப்பதில்லை. கெட்டி அவல் தான். ஆகவே இரண்டு மணி நேரம் முன்னாலேயே ஊற வைத்துவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நானும் புளியில், தயிர் அல்லது மோரில் ஊற வைத்து வெறும் மி.வ, கடுகு, உ. ப தாளிப்புடன்தான் செய்வேன் இல்லையெனில், வெறும் தண்ணீரில் ஊற வைத்து, மிளகு, சீரகம் தாளித்து சம்பா அவலாகவோ , வெறுமனே தாளித்து தேங்காய் அல்லது, வெங்காயம், இல்லை, காரட் துருவி ஏதேனும் ஒன்றுடன் சேர்த்தோ, சமயத்தில் மூன்றும் சோர்த்தோ செய்வேன். இல்லையெனில் வெல்ல அவல் (தேங்காய் பூரணம் மாதிரி செய்து) செய்வேன்.இப்படி பல ரகங்கள் அன்றைய தினம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தோ, வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்தை பொறுத்தோ அது அமையும்.

      புள்ளியில் ஊற வைத்து செய்வதை புளி அவல் என்றுதான் நாங்களும் சொல்வோம். இங்கு தட்டை அவல், கிடைக்கிறது.தூசி இருந்தால் புடைத்து எடுத்து விட்டு அப்படியே தாளிப்பில் போட்டு கொஞ்சம் அடிக்கடி நீர் தெளித்து புரட்டி விட்டாலே வெந்து விடும். கெட்டி அவல், மூழ்கும் வரை தண்ணீர் விட்டால் அரை மணியில் பொலபொலவென ஊறி விடும். சிகப்பு கெட்டி அவல் பல மணிநேரம் ஊறினாலும் தான் ஊறி விட்டதாகவே காட்டிக் கொள்ளாது. தங்கள் அன்பான கருத்துக்களும், எங்கள் வீட்டு தயாரிப்புடன் ஒத்துப் போகின்றன. அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. புளி என்று எவ்வளவு திருத்தினாலும், புள்ளியில் வந்துதான் நிற்கிறது. ஹா. ஹா.ஹா. அந்த "ள்"க்கு குத்துப்பட்டே வழக்கம் போலிருக்கிறது..

      Delete
    3. மஹாராஷ்ட்ரா முறையில் காந்தா போஹா, ஆலூ போஹா என வெங்காயம் மட்டும் சேர்த்தும், உருளைக்கிழங்கு மட்டும் சேர்த்தும் பண்ணுவோம். இரண்டும் சேர்த்துப் போட்டும் பண்ணுவது உண்டு. எல்லாக் காய்களும் போட்டு மிக்சட் வெஜிடபுள் அவல் உப்புமாவும் பண்ணுவோம். அவல் அவசரத்துக்குக் கை கொடுக்கும்.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தாங்கள் மீள் வருகை தந்து தந்த கருத்துக்களுக்கு மகிழ்ச்சி. ஆமாம் அவலில், காய்கறிகள் வெங்காயம் சேர்த்து பண்ணும் போது நன்றாக இருக்கும். அந்த டேஸ்ட்டும் எங்களுக்குப் பிடிக்கும். அவல் அவசரத்துக்கு கை கொடுக்கும் கைதான்..! தங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நீங்கள் செய்து படம் எடுத்துப் போடுவதை விடச் சிறப்பு கற்பனை வளம் பொங்க அதைக் குறித்து எழுதி இருப்பது தான். நல்ல ரசனை உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் எழுதிய எழுத்துக்களை கண்டு பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் என் எழுத்தினை வளப்படுத்தும் உதவும் என நம்புகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அவல் உப்புமா, கூட்டு செய்முறையைவிட எழுத்து அருமை. அவல் உப்புமா நிறம்தான் கலவரப்படுத்துகிறது... காரம் அதிகமோ என்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அவலுடன் பொடிகள் சேர்ந்ததில் கலர் சற்று கலவர படுத்துகிறதோ என்னவோ? ஆனால் அன்றைய தினம் மிளகுடன் சேர்ந்து காரம் விறுவிறுப்பாக நன்றாக இருந்தது அதனால்தான் நானும் அதிகமான பொடியை குறைத்து உபயோகித்தேன். காரம் வேண்டாமெனில் வறுக்கும் போதே அளவுகளை குறைத்து அரைத்து உபயோகப்படுத்தினால், போச்சு..!

      தங்களின் அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. முதலில் விவரணை...    பிறகு ரிவிஷன் போல படங்கள்...      அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /முதலில் விவரணை... பிறகு ரிவிஷன் போல படங்கள்... அருமை/

      எல்லாம் தங்களிடமிருந்து கற்று வரும் பாணிகள்தாம்..! என் எழுத்துகளை ஊக்கப்படுத்துவற்கும், அருமை என்ற பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அவலை மோரில் ஊறவைத்து, புளியில் ஊறவைத்து ஏதோ நாங்களும் உப்புமா செய்வோம்.    இப்படி பொடியெல்லாம் போட்டு அலங்கரித்ததில்லை, வண்ணம் கூட்டும் எண்ணம் வந்ததில்லை.  "ஒருமுறை சுவைத்தாலே போதும்" என்று பாட வைக்கிறது படங்கள்! 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் மோரில், அல்லது புளியுடன் ஊற வைத்துதான் செய்வேன். இது சற்று மாறுதலுக்காக... ஒரு முறை செய்து நன்றாக இருந்தது. மறுமுறையும் படத்திற்காக, பதிவிற்காக செய்தேன்.

      /வண்ணம் கூட்டும் எண்ணம் வந்ததில்லை. "ஒருமுறை சுவைத்தாலே போதும்" என்று பாட வைக்கிறது படங்கள்! /

      ஒரு முறையேனும் சுவைக்காக செய்து பாருங்கள். மறுமுறையில் மீண்டும் வண்ணம் கூட்டும் எண்ணம் தானாகவே வருமென நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.

      வந்து தந்த அன்பான கருத்துக்களுக்கு மீண்டும் மிக்க நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கூட்டில் வேறு அந்தப் பொடி கூட்டணி அமைத்து விட்டனவா?  தேமுதிக தோற்றுவிடும் போல!   ஆனாலும் கூடுதல் பயன் கண்டு,  பயம் காட்டாமல் எளிதாகச் செய்யும் வண்ணம் பதிவிட்டிருக்கும் உங்களுக்குத் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. >>> பயம் காட்டாமல் எளிதாகச் செய்யும் வண்ணம்.. <<<

      ஆக,
      உப்புமா சாப்பிடுவதை விட
      உப்புமாவைச் செய்வதற்கு ஒரு தகிரியம் வேணும்!..

      அதைச் சொல்றீங்களா?..

      அங்கே Fb ல் உப்புமா புராணம் ஒன்று ஓடிக்கொண்டு இக்கின்றதே!..

      Delete
    2. ஹா. ஹா. உப்புமாவுக்கு அவ்வளவு பயமா? (சாப்பிட சரி.. செய்வதற்கு கூடவா?) ஆனால் தைரியமாக இந்த உப்புமாவை செய்து சாப்பிடலாம். எளிதில் ஜீரணிக்க இந்த பொடி வகைகள் கை கொடுக்கும்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கூட்டணிகள் கூட்டாக சேர்ந்து செயல்படுவதில்தானே பெருமை..எனக்கு அரசியல் தெரியாது.. நம்ப கூட்டணி கூட்டைச் சொன்னேன்.

      /ஆனாலும் கூடுதல் பயன் கண்டு, பயம் காட்டாமல் எளிதாகச் செய்யும் வண்ணம் பதிவிட்டிருக்கும் உங்களுக்குத் பாராட்டுகள்/

      செய்து, பார்த்து சாப்பிட்டதால், கூடுதல் பயனா? ஹா.ஹா.ஹா. உப்புமா எனினும், பயப்படாமல், வந்து பாராட்டி, எளிதாக செய்யும் வண்ணம் இருக்கிறது என்ற கருத்துகளுக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. >>> பாட்டும் பதமுமாக..<<<

    பதிவுக்குள் பாட்டு இருந்தது..
    உப்புமாவுக்குள் பதம் இருந்தது!...

    ஆகா!..

    ReplyDelete
    Replies
    1. /பாட்டும் பதமுமாக.. /

      எழுத்தின் பதத்திற்கு நன்றி.. நேற்றைய எ. பியின் தாக்கம் சில பாட்டுக்களையும் பதிவுடன் அழைத்து வந்தது. நன்றி எ. பிக்கும்.

      Delete
  9. அனைவருக்கும் என் அன்பான காலை வணக்கம்.
    அவள் உப்புமாவை ரசித்து கருத்திட்ட/கருத்திட்டு வரும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். காலை வேலைகள் காலைச் சுற்றுவதால், பிறகு தனிதனியாக அனைவருக்கும் பதில் தருகிறேன். கொஞ்சம் தாமதத்தை பொறுத்துக் கொள்ளவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. கமலா அக்கா சாப்பாடு சுவை என்றால் அதை நீங்க சொல்றீங்க பாருங்க அந்தச் சுவைல கூட ரெண்டு வாய் உள்ள போய்டும் போல...இப்பல்லாம் எங்க வீட்டு காரட், கோஸ் பீன்ஸ் எல்லாம் கமலா அக்கா போலவே பேசுது!!!!!!!! ஹா ஹா ஹா ஹா..

    இப்படிப் பொடி போட்டுச் செய்வது என் மாமியார். அவங்க பெரும்பாலும் தனியா சேர்க்காம எந்த டிஷ்ஷும் செய்யமாட்டாங்க அது ரேர். எங்கள் பிறந்த வீட்டிலோ கேரளத்து முறை திருநெல்வேலி முறை என்று தனியா எதுக்கு வேண்டுமோ அதுக்கு மட்டும் தான்...சென்னைக்கு வந்த புதிதில் வித்தியாசமே தெரியாது எனக்கு எல்லாத்திலும் தனியா வாசனை வீசுவதாக இருக்கும் ஹா ஹா ஹாஹ் ஆ...அப்புறம் அதுவும் கற்றுக் கொண்டு...

    இந்த அவல் முறைல கொஞ்சம் புளி சேர்த்துச் செய்வதுண்டு.

    உங்கள் முறையையும் செய்துவிடுகிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நானும் பொதுவாக புளி ஜலத்தில் ஊற வைத்துச் செய்வேன். இப்படி வறுத்து பொடித்து அதில் போட்டு செய்யும் போது புளியோதரை மாதிரி இருக்கும். இந்த தடவை சற்று வித்தியாசத்திற்காக கொத்தமல்லி விரைகள்.. மற்றபடி மேலே அனைவருக்கும் கூறியிருக்கிறேன் பாருங்கள்..
      ஆனாலும் சிலவற்றில் தனியாவை தவிர்த்து செய்வதில் சில சுவைகள் மாறுபடும்.

      தாங்கள் புகுந்த வீட்டு சமையலை பழக்கப்படுத்திக் கொண்டு அந்த பாணியிலும் நீங்கள் செய்து வருவது பெருமைக்குரிய விஷயம்.

      இதைப்போல் செய்து பார்க்கிறேன் என்று சொன்னதற்கு மிகவும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள். மிளகு வாசம் பிடித்தமானவர்களுக்கு இந்த முறை பிடிக்குமென நினைக்கிறேன்.

      வந்து தந்த அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. படங்கள் அழகாக இருக்கு கலமா அக்கா அதுவும் விவரமாக..

    சோள அவல், ராகி அவல், சிறு தானிய அவல் எல்லாத்துலயும் செய்யலாம் அக்கா. இங்கு நன்றாகக் கிடைக்கிறது. இந்த அவல்கள் எல்லாம்.

    சூப்பரான சுவையை ரசித்தேன் கமலா அக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சோள அவல், ராகி அவல், சிறு தானிய அவல் எல்லாத்துலயும் செய்யலாம் அக்கா. இங்கு நன்றாகக் கிடைக்கிறது. இந்த அவல்கள் எல்லாம்/

      ஓ.. அப்படியா! இதுவெல்லாம் நான் வாங்கும் போது கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். தகவல்களுக்கு நன்றி.

      படங்கள் நன்றாக உள்ளதென கூறியதற்கும், பதிவை ரசித்ததற்கும் மீண்டும் என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. ஆவ்வ்வ்வ் ஒரு அவல் உபுமாவில் இவ்ளோ விசயம் இருக்கோ.. எனக்கும் செய்ய ஆசை வந்துவிட்டது.. செய்கிறேன். என்னிடம் சிவப்பு அவல் இருக்கு.

    ஆனா உங்கட அவல், அரிசி சைஸ்ல இருக்கே.. என்னிடம் இருப்பது பெரிய சைஸ்ஸாக இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /ஆவ்வ்வ்வ் ஒரு அவல் உபுமாவில் இவ்ளோ விசயம் இருக்கோ.. எனக்கும் செய்ய ஆசை வந்துவிட்டது.. செய்கிறேன். என்னிடம் சிவப்பு அவல் இருக்கு./

      பின்னே..! அவல் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே நிறைய வெரைட்டிங்கிற விஷயம் இருக்கு. நீங்களும் செய்து பாருங்கள். இந்த சிவப்பு அவல் கொஞ்சம் லேசாக இருந்தால் சட்டென ஊறி விடும். டேஸ்ட்டும் இது வெள்ளை அவலை விட நன்றாக இருக்கும். அதிலேயே கெட்டி அவல் ஒருநாள் வாங்கி வந்து விட்டேன். மறுநாள் காலை ஊற வைத்து இந்த மாதிரி செய்யலாமெனில். ஊறிற்று... ஊறிற்று.. ஊறிக்கொண்டேயிருந்தது. வாயில் போட்டால் கடித்து சாப்பிடும்படி இருந்தது. அப்புறம் அதை நைட் டின்னருக்குதான் வைத்துக் கொண்டேன். ஹா.ஹா.ஹா.

      இது அவ்வளவு பெரிதாக இல்லை ஊற வைத்த பின்னும்... ஆனால் பூ மாதிரி உதிரியாக வந்தது. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. //ஆனால், எங்களுக்கும், மின் விசிறி போட்டு கொஞ்சம் உபசாரம் செய்யுங்கள்.. இல்லையென்றால், கொதிக்கும் சூட்டை சற்றேனும் குறைக்க விட மாட்டோம்..! //

    ஹா ஹா ஹா நல்லவேளை ஏசி போடச் சொல்லி அடம்பிடிக்கவில்லை :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஹா ஹா ஹா நல்லவேளை ஏசி போடச் சொல்லி அடம்பிடிக்கவில்லை :)/

      வறுத்த கோபத்தில் சற்று முகம் கடுப்பாகி, கடுகடுவென இருந்தாலும், அவர்களெல்லாம் என்னிலை உணர்ந்தவர்கள். "இவர்கள் வீட்டில் இல்லாத ஒன்றை எப்படி கேட்பது? என்ற பக்குவம் கற்ற விவேகவாதிகள்...! ஹா.ஹா.ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. ஆனா எனக்கொரு டவுட்டூ கலலாக்கா.. ஊறிய அவலுக்கு இவ்ளோ தண்ணி சேர்த்திருக்கிறீங்களே.. திரண்டிடுமே... அதனாலதான் முடிவுப்படம் போடவில்லையோ நீங்கள் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    ரவ்வை உப்புமா எனில் தண்ணி அளவு போதும், அவலுக்கு.. பொருபொரு என வந்திருக்காதே.. எனக்கு செய்து முடிச்சு சாப்பிடும்போது எடுத்த படம் தேவையாக்கும்:))

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் நான் மேலேயும் கீழேயும் மிக்ஸ்ட் பண்ணிக் குழம்பிட்டேன்ன்.. மேலே இருக்கும் அவலை கீழே இருப்பதுள் கொட்டியிருக்கிறீங்கள் என நினைச்சுட்டேன்ன்ன்..

      ஓ அவ்ளோ தான் அவல் உப்புமாவின் கதையா:)).. ரொம்பச் சின்னதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பூ கூக்குரல் கர்ர்ர்ர்ர்:)))

      Delete
    2. வணக்கம் சகோதரி

      ஓ.. நீங்கள் முதலிருந்தே சரியாக படிக்கவில்லையோ .! நான் முதலில் தெளிவாக செய்முறைகளை விளக்கிப் பின் படங்களுக்கு விளக்கங்களாக வார்த்தைகளையும் சேர்த்து தந்திருக்கிறேனே .!கடையில்தான் ஊறிய அவலை சேர்த்து உப்புமாவாக்கி இருக்கிறேன்.

      /ஓ அவ்ளோ தான் அவல் உப்புமாவின் கதையா:)).. ரொம்பச் சின்னதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பூ கூக்குரல் கர்ர்ர்ர்ர்:)))/

      ஹா. ஹா. ஹா. "மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது" என்பது போல் பதிவின் சாராம்சம் சின்னதாக இருந்தாலும், அதைப் பற்றிய கருத்துக்களை இவ்வளவு சேகரித்து தந்திருக்கிறது பாருங்கள்...! அதுதான் விஷேசம். (விஷயம்)

      அன்போடு இதற்கு வந்து கருத்த தந்த உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் என்றும் என் மனம் நிறைந்த நன்றிகள் .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      ரவைக்கு கரெக்டா எடுக்கும் அளவுக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டால் எனக்கு சரியாக வரும். அவலை வடிகட்டி அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டால் அரைமணியில் பொலபொலவென ஊறி கரெக்டா வந்துடும். நான் அவல் ஊறிய பிற்பாடு தண்ணீர் எதுவும் சேர்க்கவில்லை. ஊற வைக்கத்தான் மேலே சொன்னபடி தண்ணீர் சேர்த்து வைத்திருக்கிறேன்.

      /எனக்கு செய்து முடிச்சு சாப்பிடும்போது எடுத்த படம் தேவையாக்கும்:))/

      ஹா.ஹா.ஹா ஹா. செய்தவுடன்தான் வாய்க்கும், கைக்கும் சண்டை வந்து விடுமே... அப்பறம் எப்படி படமெடுப்பது.? ஹா ஹா. கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. //இது வேறு கதை.//

    ஓ இதை நான் கவனிக்கவில்லையாக்கும்.. படம் பார்த்துக் கொமெண்ட் போட்டுவிட்டுத்தான் படிச்சேன் எழுதியதை..:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      கவனிக்காமல். பின் கவனித்து படித்து, கமெண்ட் போட்ட களைப்பை பொருட்படுத்தாமல் மீண்டும் வந்து கமெண்ட் தந்த தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.:)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. //போகட்டும்... ! எப்படியிருந்தாலும், "ஒன்பது வாட்டி மாத்தி, மாத்தி படமெடுத்ததை வேஸ்ட்டாக்காமல் விட மாட்டா இந்த கமலாக்கா.. ! " என்று தேம்ஸ் பட்டமகிஷி வந்து காரசாரமாக கமெண்ட்ஸ் தரப் போறாங்க பார்.!! என்று கூடி பேசி மகிழும் கூட்டணிகள்.( ஹா. ஹா. ஹா.)//

    ஹா ஹா ஹா கடசி மூன்று படங்களிலும், கரண்டியில கூட மாற்றமில்லையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா

      /ஹா ஹா ஹா கடசி மூன்று படங்களிலும், கரண்டியில கூட மாற்றமில்லையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))/

      பின்னே! நீங்கள் தேம்ஸில் குதித்து விடுவேன் என அடிக்கடி பயமுறுத்துகிறீர்கள். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், குதித்து கொண்டிருக்கும் தங்களை மீட்டு வரவழைக்கத்தான் கூட்டணிகள் பேசுவதை ஒட்டுக் கேட்டு எழுதி வைத்தேன். அதன்படி தாங்கள் குதிப்பதை மறந்து வந்து தந்த அன்பான கமெண்ட்களுக்கு நன்றி. ஆனால்

      "எப்படியோ! இவர்கள் உஷாராக எழுதி வைத்திருந்தாலும், வரும் பட்டங்களின் நாயகி வந்த பின் கூர்மையாக கவனித்து கரண்டி மாறாததை கண்டுபிடித்து விட்டார்கள் பார்த்தாயா? அதுதான் எங்கள் அதிராவின் சாமர்த்தியம்.." என கூட்டணிகள் குசுகுசுவென இன்னமும் பேசி சிரித்து மகிழ்வதும் எனக்கு கேட்கிறது. ஹா. ஹா. ஹா.

      புதிதான பட்டம் இன்றுதான் இனிமேல்தான் மாறப்போகிறதா? வந்து பார்த்தேன். விழா மேடை வெறிச்சோடி இருக்கிறதே... !!

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. ஆஹா சொல்லிச் சென்ற விதம் ரசித்து, ருசிக்க வைத்தது.

    வரிசையான படங்கள் செய்து பார்ப்பவர்களின் ஐயத்தை தீர்க்கும்.

    காலையில் படித்து விட்டேன் சகோ கருத்துரை போட்ட நினைவில் சென்று விட்டேன் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ கில்லர்ஜிக்கும் வயசாகிட்டுதாம்ம்ம் ஹா ஹா ஹா:)..

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      படங்களையும், செய்முறைகளையும் ரசித்து பதிவை பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      எதற்கு மன்னிப்பெல்லாம்..! நான் வலைத்தளம் ஆரம்பத்திலிருந்தே தாங்கள் முதலில் வந்து கருத்துக்கள் தந்து விடுவீர்கள். இன்று இன்னமும் கவனிக்கவில்லையோ என தகவல் சொன்னேன். வேறு ஒன்றுமில்லை. உடனே பதிவுக்கு வருகை தந்து கருத்துப் பதிந்தமைக்கு மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      எனக்குதான் பதில் கருத்து தர தாமதமாகி விட்டதென வருத்தப் படுகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க... வாங்க.. நினைவு சறுக்கல்கள் எந்த வயதிலும் எழுவது இயல்புதானே!

      ஆமாம்... அதற்குள் தங்கள் பட்டம் மாறி விட்டதே! எவ்வளவு வேகம்.! பட்டமளிப்பு விழாவை காண வருகிறேன். நன்றி. நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. அவல் உப்புமாவை இந்த முறையில் செய்ததில்லை. சாதாரண வெஜிடபிள் கூட்டு செய்முறையை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறீர்கள். நன்று!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      அவல் உப்புமா எப்போதும் போலில்லாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக முயற்சி செய்ததில் உருவானது. நீங்களும் எப்போதும் பலவிதங்களில் சமையலில் கலக்குபவர்தானே..! வந்து பதிவை படித்து ரசித்து சுவாரஸ்யமாக உள்ளதென கூறியது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      பதிவுக்கு வந்து கருத்துக்கள் தந்தமைக்கும், மனமாற பதிவை பாராட்டியமைக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. ஆஹா ...என்ன சுவையான பதிவு கமலா அக்கா ...


    சமையலும் , பாட்டும் , பேச்சும் , [படமும் என களை கட்டுதே ...

    ரொம்ப அருமையா இருக்கு ...என்னமோ எனக்கும் உப்புமா அவ்வளவா பிடிப்பது இல்லை அதனால் எங்கள் வீட்டில் எப்பவாவது தான் இந்த சமையல் ...


    ஆன அவல் இருக்கும் பாயசம் , தோசை என இனிமையாக செல்லும் ...

    உங்கள் வர்ணனைகள் மிக அழகு கா , படிக்கும் போது சிரிப்போடு வாசித்தேன் ...


    வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. தங்களுக்கும் உப்புமா பிடிக்காதா? முக்கால்வாசி பேர்களுக்கு இந்த டிபன் பிடித்தமானது இல்லை போலும்..! எனக்கென்னவோ செய்வதற்கு மிகவும் ஈசியாக இருப்பதால், கொஞ்சம் பிடிக்கிறது. வீட்டிலும் ஈசி காரணத்தைச் சொல்லி பிடிக்க வைக்கிறேனோ எனவும் தோன்றும். மாதத்திற்கு நான்கு முறையாவது இந்த டிபன் வந்து விடும்.

      பதிவை மிகவும் ரசித்து, கருத்துக்கள் தந்தமைக்கும் பாராட்டிற்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் மிகவும் சந்தோஷத்தை தருகிறது. என் பதிவுகளுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன். . மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. ஆஹா....அவல் உப்புமா...அருமை. இந்த மாதிரி பொடி போட்டு செய்தது இல்லை. கதம்ப சாதம் மாதிரி கதம்ப அவல் உப்புமா செய்து பார்த்து ருசிக்க வேண்டும் சகோ. ரசனையாக நீங்கள் சொல்லும் பாணி தனி தான் சகோ அழகு. பொடிக் கூட்டும் கூடுதல் சுவை.
    தொடர்கிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அவல் உப்புமாவை ரசித்து நீங்கள் பின்னூட்டம் இட்டது கண்டு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தேன். தாங்கள் வைத்த "கதம்ப அவல் உப்புமா" என்ற பெயரும் நன்றாக உள்ளது. உங்களைப் போன்றவர்களின் ஊக்கமிகு பின்னூட்டங்கள் என எழுத்தை முன்னேற்ற உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

      பதிவை கண்டு ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கும், தங்களது பாராட்டிற்கும் என் மனமார்ந்த மகிழ்வோடு கூடிய நன்றிகள் சகோதரி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete