Pages

Friday, October 4, 2019

அன்பு மலரும் போது...

இதுவும் நான் என் பதினேழில், பிதற்றியதுதான். இத்தனை நாளாக வெளியிடவில்லை. இந்தக் கதையின் சம்பவங்களை இப்போதுள்ள காலகட்டத்திற்கு யாராலும் ஏற்றுக் கொள்ள இயலுமா? என வந்த சந்தேகங்களின் காரணங்கள் வெளியிட தாமதித்ததுவா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமய காலங்கள் இதன் போக்கை மாற்றி எழுத அனுமதித்தாலும், எனக்கு என்னவோ என் டைரியிலிருந்து சில பக்கங்களை புரட்டி, கிழித்து ஒளித்து திசை மாற்றிப்போட மனது ஒப்பவில்லை. 

இப்பொழுது அந்த எழுத்துக்களை அப்படியே பதிக்கும் போது   எழுதிய "அன்றைய தினங்களில்"  இந்தக் கதைக்கான சிந்தனைகளின் சுவையை சுவாசித்த என் மனம் "இன்று" அந்த மலரும் நினைவுகளையும் சுவைத்து ரசிக்கிறது. அது தவறா? இல்லை சரியா? என்பதை உணர்ந்து படிக்கும் நீங்கள் என் சந்தேகங்களைப் தெளிவாக்குவீர்கள் என சந்தேகமற நம்புகிறேன். கதையை
படிப்பதற்கு என் நன்றிகளும்... 

அன்புடன், 
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 



சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்து கொண்டாள் சுமி.

ஒரு மணி நேரத்தில் "ஒருவருக்கு" சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் "அந்த ஒருவரின்" வீட்டில் இருப்பாள். அதன் பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே "அன்பு" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் நடந்து வருவது  அழகுக்கே சவால் விடுவது போல் இருந்தது சுமிக்கு.

"சுமி" என்றபடி நளினி ஓடி வந்து சுமியை தழுவிகொண்டாள்.

ஓ! நாளையிலிருந்து இவள் அன்பில் திளைக்க  முடியாது. இன்று மட்டும்தான்! இனி எப்போதோ? சுமியின் கண்கள் மழை மேகங்களாக மாறுகின்றது.

"நளி, என்ன இது? அங்கே உன்னை எல்லோரும் தேட போறா, நீ இங்க வந்து உக்காந்திருக்கியேமா.."

"சுமி, பிறந்ததிலிருந்து என்னோட சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துகிட்ட நீ இப்ப மட்டும் வரமாட்டேங்கிறியே இது நியாயமா?" நளினி குரல் தழுதழுக்க கேட்டாள்.

"நளி இத்தன வருஷமா நீ என்ன புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? இந்த சமூகத்திலிருந்து, அதாவது ....இந்த ஜனங்களோட உள்ளத்திலிருந்து நான் விலக்கபட்டுடேன் நளி. இனிமே இவங்க மத்தியிலே வந்து என்னால உட்கார முடியாது. என்னோட வாழ்க்கைங்கிற பாலிலே இந்த  "ஊனமிங்கற " உப்பு விழுந்துடுச்சு நளி. அது இனிமே சுத்தமான தயிராகாவும், சுவையான மோராகவும் வெண்ணையாகவும் நெய்யாகவும் மாறமுடியாது. பழைய பாலாகவும் லாயிக்கியில்லை. இப்ப புரியுதாமா நான் ஏன் உன்னுடைய திருமணத்துக்கு வரலைன்னு" என்று கேட்டு விட்டு விரக்தியுடன் சிரித்தாள் சுமி.

நளியின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

"சுமி! ஐ'ம் சாரி! நான் உன்னோட மனசை புண்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடு!"

"நோ நளி! நோ.. அப்படியெல்லாம் சொல்லாதே!"

"சுமி! இங்கேயே உங்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்" என்றபடி நளினி சுமி தடுப்பதற்குள் அவள் காலடியில் சரிந்து விட்டாள்.

பதறிபோய் அவளை தூக்கி அமர்த்திய சுமி, "நளி! உனக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது.. நீ நீடூழி வாழனும். அதோட ஒரு வேண்டுகோள் நளி! நீ எங்கே இருந்தாலும், என்னைக்கும், ஐ மீன் ...... ஐ மீன் என் உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நீ என்மீது  செலுத்தும் அன்பு மாறவே கூடாது நளி" கடைசி வார்த்தைகளை தழுதழுத்தபடி கூறினாள்.

"சுமி! இதை நீ சொல்லனுமா?"

" நளினா"! என்ற குரல் சிவபூஜையில் கரடிபோல், அந்த அன்பு சுவரின் நடுவில் விரிசில் கண்டது போல் எழுந்தது.

"நீ இங்கேயா வந்திருக்கிறே! உன்னை எங்கெல்லாம் தேடறது. மணமேடையிலே உட்காரவேண்டியவ இந்த நொண்டிகிட்டே வந்து உட்காந்திருக்கியா?" கோபமாக கேட்டாள் நளியின் தாய்.

"அம்மா" மகள் பார்வையில் தெறித்த உக்கிரத்தில் தாய் மகளை பார்த்து "வா" என்றவாறு மேற்கொண்டு ஏதும் பேசாது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"சுமி! எனக்காக அம்மாவை.........."

"நளி! இந்த ஊனம் எனக்கு ஏற்பட்ட நாளிலிருந்து இந்த மாதிரி சொல்றவங்களுக்காக நீ மன்னிப்பு கேட்டுகிட்டு தான் இருக்கே.. ஆனா! என் இதயம் எல்லாத்தையும் தாங்கி தாங்கி பழகிப்போச்சு. நீ போயிட்டு வாம்மா" என்றாள் சுமி.

கண்களை துடைத்தபடி நடந்தாள் நளினி.

"ஏய்! நொண்டிக் கழுதை! சமையலறைக்கு வந்து கொட்டிக்கிட்டு போயேன். பெரிய மகாராணி! கையிலே கொண்டு வந்து தட்டை வைக்கனுமாக்கும்," சித்தியின் குரல் பன்னிரண்டு மணி வெயில் மாதிரி தகித்தது.

"சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் மகாராணி தான். இதோபார் என்னுடைய சிம்மாசனம்." என்று சிரித்தபடி கூறியவாறே தன் சக்கர நாற்காலியை தட்டி காண்பித்தாள் சுமி.

"கால் இல்லைன்னாலும் வாயாவது இருக்கே", முகத்தை நொடித்தவாறு உள்ளே சென்றாள் அலமேலு.

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இவர்களுக்கு இதயமே இல்லையா! அந்த இதயத்திலே இருக்கும் அன்பெனும் ஊற்று அடைத்துப் போய் விட்டதா? அதை எப்படி அடைத்தார்கள்!

இதயத்திலிருக்கும் காயத்தை ஆற்ற முயற்சி செய்யாவிட்டாலும் போகிறது. அதை இப்படியா கிளறி விட வேண்டும்.

"அம்மா" என்றபடி வேதனையுடன் நிமிர்ந்தாள் சுமி.

"அம்மா"... அந்த அம்மா மட்டும் இப்போது இருந்திருந்தால் சுமியின் கால்களாகவே மாறியிருப்பாள்.

அந்த பாக்கியந்தான் அவள் செய்யவில்லையே! செய்திருந்தால் ஏழாவது வயதில் பெற்ற தாயைபறிகொடுத்து விட்டு ஒரு மாத விஷக்காய்ச்சலின் விளைவால் இந்த நிலைக்கு வந்து இப்படியெல்லாம் எல்லோரிடமும் பட வேண்டியதிருக்காதே.!!

பக்கத்து வீட்டில் இருக்கும் நளினி மட்டும் சுமியின் உலகத்தில் இருந்திடாவிட்டால் அவள் இந்த உலகைவிட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். பிறந்ததிலிருந்து இருவருக்குமிடையில் இறுகிய பாசம் அந்த எமனால் கூட பிரிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

சுமியின் தந்தையை சொல்லிக் குற்றமில்லை. மந்திரவாதியின் கையிலிருக்கும் மந்திரகோல் மாதிரி சித்தியின் கையில் அகப்பட்டுக்கொண்டு திணறுகிறார்.

ஏதோ இவளுக்கென்று செய்யும் கடமைகளில் தந்தை சற்று கண்டிப்பு காட்டுவதால், அச்சமயங்களில் சித்தியும் ஏதும் குற்றம் குறை சொல்லாது வாளாதிருக்கிறாள்  அவளுக்கு தனக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போய் நாளாகி விட்டதாலும், தன்னிடம் வெறுப்புடன் கூடிய அன்பையும், தந்தையின் கண்டிப்பிற்காக அவ்வப்போது காட்டுகிறாள் என்பது சுமி அறிந்ததுதான்.!!

 இவளின் தேவைகளை சமயத்தில் அறிந்து அவள் செய்வதால், சித்தியின் "சுள்"ளென்ற பேச்சுக்கள் சிலசமயத்தில் வெப்பமாய் தகிப்பதை இவளாகவே சமாதான நீருற்றி அணைத்துக் கொள்வாள்.

தன் வாழ்க்கையில், அறிவு சார்ந்த விஷயங்களுக்கும், அன்புக்கும் நளினி ஒருத்திதான் கடவுள் தனக்காக கொடுத்திரும் வரம் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையில் தைரியமாக  இருந்த சுமிக்கு அவளின் பிரிவு கொஞ்சம் வேதனையை தந்தது.

தனக்கென்று இறைவன் அளவிட்டு கொடுத்திருப்பதை பெற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். வேண்டாம் என்று மறுத்தாலும், வருவதிலுள்ள அளவீடுகள் கூட்டிக் குறையப் போவதில்லை என்ற தத்துவ எண்ணங்கள்  அவளுக்கு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனதையும்  தாராளமாக தந்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்தவள் சித்தியிடமிருந்து மீண்டும் ஒரு சத்தம் வரவே, ஒரு பெருமூச்சுடன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போனாள்.

"அலமேலு! சுமித்ராவுக்கும் கல்யாணத்தை எப்போ நடத்த போறே?" வாசலில் எதிர் வீட்டுகாரி சித்தியிடம் அக்கறையுடன் விசாரிப்பது துல்லியமாக சுமியின் காதில் விழுந்தது.

"ஆமாம்! அது ஒன்னுதான் அவளுக்கு கொறைச்சல்! எவன் வந்து இந்த நொண்டியை கட்டிக்கப் போறான்?"

ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது சுமிக்கு.

மறுநிமிடம் சற்று வாய்விட்டு சிரித்துகொண்டாள் சுமி. நொண்டி,.. நொண்டி, நொண்டி.. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் இந்த வார்த்தையையும் உபயோகிக்க தவறுவதில்லை சித்தி. சொல்லிவிட்டு போகட்டுமே! இல்லாததையா சொல்லுகிறாள்? உண்மையை தானே சொல்லுகிறாள் உண்மைக்கு ஏன் வருத்தப்படவேண்டும்.

காலமும், இளமையும் போட்டி போட்டுகொண்டு பறந்தது. காலம் சுமியின் தலையில் ஆங்காங்கே சில வெள்ளிக் கம்பிகளை உண்டாக்கி இருந்தது. இளமை அவளது அழகிய முகத்தில் சற்று முதிர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாக நளினியிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவள் திருமணமாகி சென்றதிலிருந்து சுமிக்கு வாரம் இருமுறை கடிதம் எழுதிக்கொண்டு இருந்தாள். நாளாக நாளாக அவளது கடிதம் வருவதும் அரிதாகிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றதடவை அவளிடமிருந்து வந்த கடிதத்தில் அவள் தாயாகும் விபரம் குறித்து எழுதி இருந்தது சுமிக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. திருமணத்திற்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து அவள் தாயாகும் பேறு பெற்றிருப்பதால் அவளின் நலம் குறித்து சுமியும் அடிக்கடி விசாரித்து வந்தாள். ஆனால் தற்சமயம் அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததாலும், அவளைப்பற்றி விசாரித்துக்கொள்ள இயலாமல் அருகிலிருந்த அவளது பெற்றோர்களும் அவளுக்கு திருமணமான ஓரு வருடத்திலேயே, வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டதாலும்,  வேறு எவரிடமும் எதுவும் கேட்கமுடியாமல் தோழியின் நினைவை மௌனத்திலேயே கரைத்து வந்தாள் சுமி.

வாசல் கதவை தட்டும் ஓசை கேட்டது.

"வெளியில் சென்றிருந்த சித்திதான் வந்துவிட்டாளோ?"

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போய் கதவை திறந்தாள் சுமி.

உள்ளே நுழைந்த நளினியின் கணவன் மகேந்திரனை பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும், திகைத்துப் போனாள்  சுமி.

"வாருங்கள், எதிர்பார்க்கவே இல்லை.. நலந்தானே? அமருங்கள்.. வார்த்தைகள் சமந்தமில்லாமல் குளறி குளறி வெளிவந்தன சுமிக்கு.

"என் நளி சௌக்கியந்தானே?"

அவன் அவளை மெளனமாக ஏறிட்டு நோக்கிய விதம் அவளை என்னமோ செய்தது.

"நளினி நம்மையெல்லாம் மோசம் பண்ணிவிட்டு நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாள் சுமித்ரா!"

என்ன? அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்த முன்னால் சாய்ந்தவளை தாங்கி பிடித்துக் கொண்டான் மகேந்திரன்.

"சற்று அமைதிபடுத்திக் கொள் சுமி!"

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுமி.

"சுமி" அதேகனிவு! "அவள் மட்டுமே அழைக்கும் சொல்!" கண்ணீர் அணை உடைந்து சிதறியது.

"நீங்கள் ஏன் எனக்கு தெரியபடுத்தவேயில்லை?" விம்மலுக்கிடையிலும் கோபத்துடன் எழுந்தது சுமியின் குரல்.

"என்னை மன்னித்துவிடு சுமித்ரா! மூன்று மாததிற்கு முன்பு ஒரு புதிய ஜீவனை இந்த உலகத்திற்கு தந்துவிட்டு அவள் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டாள். இறப்பதற்கு இரண்டு நாள்முன்பு இந்த கடிதத்தை என்னிடம் கொடுத்து, "என்றைக்கு உன்னிடம் இதை நான் சேர்பிக்கிறேனோ, அன்றுதான் தான் இறந்ததைப் பற்றியும் கூற வேண்டுமென்று நிபந்தனை போட்டாள்". என்ன செய்வது? அவள் கட்டளைப்படிதான் என்னால் நடக்க முடிந்தது." என்றபடி கடிதத்தை சுமியிடம் கொடுத்தான் மகேந்திரன்.

சுமியின் கைகள் கடிதத்தை பிரித்தன; கண்கள் படித்தன.

"என் ஆருயிர் தோழி சுமிக்கு,

இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி.... என் திருமண நாளன்று நீ சொன்னது நினைவு இருக்கிறதா? என் வாழ்க்கைங்கிற பாலிலே ஊனமிங்கிற உப்புகல் விழுந்து திரிந்து போய்விட்டது. அதை இனி சாக்கடையில் தான் கொட்ட வேண்டுமென்று சொன்னாய்.!! ஆனால் அது என் சுமியின் வாழ்க்கை.! அந்த வாழ்க்கைப் பால் திரிந்தே போயிருந்தாலும் சரி, அதை நான் உபயோகபடுத்தி கொள்வேனே தவிர சாக்கடையில் கொட்டவிடமாட்டேன். புரியவில்லையா சுமி?

என் குழந்தைக்கு என் ஸ்தானத்தில் நீ வர வேண்டும். நீண்ட நேர விவாதத்திற்கு பின், அவரிடம் சம்மதம் வாங்கி விட்டேன். நீயும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும். என் தோழியை எனக்கு தெரியாதா? இதை நீ செய்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்."

இப்படிக்கு
உங்களை என் மாறா அன்புடன் வாழ்த்திக் கொண்டிருக்கும்,
உன் "நளி".   


கடிதத்தை படித்துவிட்டு கதறியழுதாள் சுமி...

"சுமி! இந்த மனிதர்கள் இதயத்தில்தான் அன்புங்கிற மலர் மலருகிறது. அந்த மலர் சில சமயங்களில் தியாக கனியாக கனிந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி நளி. ஆனால் ஒவ்வொருவர் மனதிலே அந்த மலர் மலராமல் வெறும் மரமாகவே மாறிடறாங்க," குரலடைக்க கூறினான் மகேந்திரன்.

"உண்மைதான்! அன்னிக்கு ஒருநாள் நா அவக்கிட்ட ஒருவேண்டுகோள் விடுத்தேன். இப்போ அவ ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டு என்கிட்டேயே......". முடிக்க முடியாது விம்மினாள் சுமி.

"சுமி! அவளே போனபிறகு எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமே யில்லை. ஆனாலும் அவளோட ஆத்ம திருப்திக்காகத்தான் சம்மதிச்சேன். அவ கட்டளைக்காகத்தான் தலை வணங்குகிறேன். நா கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே சுமி! என்னை மணக்க உனக்கு சம்மதந்தானே!" உணர்ச்சியற்ற குரலில் கேட்டு கொண்டே அவள் எதிரே தன் கரத்தை நீட்டினான் மகேந்திரன்.

அவன் கண்களில் தெரிந்த வெறுமை அவளை அவன் சொன்னது உண்மை என நம்ப வைத்தது....

"என் நளினியின் திருபதிக்காக நான் என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்ற சுமி தன் சம்மதத்தை தெரிவிக்கும் பாவனையில் அவன் கைகளில் தன் கையை பதித்தாள்.

அங்கே அன்பு மலர் மலர்வது கண்டு மேலேயிருந்து அந்த தியாகக்கனி நிறைவுடன் சிரித்தது.

நிறைந்தது. 

26 comments:

  1. வணக்கம் சகோ,
    அன்பானவர் எல்லா காலங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    உலகம் இயங்கும்வரை அன்பு மலர்ந்து கொண்டே இருக்கும்.

    கதையை அழகாக நகர்த்தி இருக்கின்றீர்கள் ஆனால் நளினியின் மரணத்திற்காக காரணத்தை சற்று அழுத்தமாக சொல்லி இருந்திருக்கலாம்.

    கதையை திருத்தி எழுத வேண்டிய அவசியம் இல்லை இன்றளவும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அன்பானவர் எல்லா காலங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

      உலகம் இயங்கும்வரை அன்பு மலர்ந்து கொண்டே இருக்கும்./

      உண்மை.. அன்பு மலர்கள் மலர்வதற்கு தடைகள் இல்லை. கதை நன்றாக இருப்பதாக ரசித்துப் படித்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      இது ஆரம்ப எழுத்துக்களை உள்வாங்கி மலர்ந்த கதை. கண்டிப்பாக நிறைய இடங்களில் கோர்வை அமைந்திருக்காது. கதையை மாற்றி எழுத வேண்டாம். இது இன்றளவும் பொருந்தும் என்ற தங்கள் அன்பான கருத்துக்கு மீண்டும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இப்போதெல்லாம் ஊனம் என்பது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் எழுதப்பட்ட காலத்தில் அது ஓர் மாபெரும் குறை! கதை இந்த முடிவைத் தான் நோக்கி நகர்கிறது எனப் புரிந்தாலும் இன்னமும் சீக்கிரம் எதிர்பார்த்தேன். ஆனால் நளினிக்குக் குழந்தை பிறக்கும்வரை தள்ளிப் போய்விட்டது. நளினியின் மரணத்தின் காரணத்தைச் சொல்லி இருந்திருக்கலாம். என்றாலும் உங்கள் முயற்சி மிகச் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் கதையை ஆழ்ந்து படித்து கருத்திட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. நான் எழுதிய காலத்தில், அக்குறை பெரியதாகவே கருதப்பட்டது. இரண்டாவதாக என் எழுத்துக்கள் பிற அனுபவங்களை தொட்டறியாதது. அதனால் சில தவறுகள் தானாகவே எழுந்துள்ளது. சுருக்கமாக எழுத நினைத்து நிறைய விஷயங்கள் கதையிலிருந்து நழுவி விட்டது. இப்போது கொஞ்சம் சம்பவங்கள் வளவளவென்று வருகிறது. எப்படியும் நான் இன்னமும் கத்துக்குட்டித்தான். ஹா.ஹா.ஹா. எனினும் என் அப்போதைய முயற்சி சிறப்பாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கதையின் முடிவை எதிர்பார்க்கலை. நளினி கணவன் தானே வளை அடைய நினைத்தானோ என்று தோன்றியது. ஆனாலும் கதை நெருடல்தான். நளினி கணவன் தக்க துணையோடும், குழந்தையோடும்தான் சுமியைப் பார்த்து கடித்த்தைக் கொடுத்திருக்கணும்.

    கதை நல்லா வந்திருக்கு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கதையின் முடிவை எதிர்பார்க்கலை/

      கதையை எப்படியாவது முடித்தாக வேண்டுமே! தோழியை சார்ந்து தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்த சுமிக்கு ஒரு நல்ல வாழ்வை கொடுக்க வேண்டுமே! நெருடல் பல இடங்களில் உள்ளது. அக்காலத்திலேயே மருத்துவம் ஓரளவு முன்னேறி விட்டது. துணைக்கு எவரையும் சாராத தன்னம்பிக்கை பலம் கொண்டு வாழ்ந்து வரும் காலம் தோன்றி விட்டது. ஆனால் என் கதை நாயகி மனதளவில் எதையும் பொருட்படுத்தாது தைரியமாக வாழ்ந்தாலும், எதற்கும் பிறரை நாடும் ஒரு நிலைமை... அதன் விளைவு நளினி தன் அன்பு முழுவதையும் சுமிக்கு தாரை வார்த்து விட தயாராகிறாள் என்பதாக கதை. அவளே வந்து சொல்லியிருந்தாலும், சுமி ஏற்றுக் கொள்வளா என்பது
      கடினம். இரண்டாவதாக எனக்கு சுருக்கமாக எழுத ஆசை. (இப்போது எனக்கு அந்த ஆசைப் போய்விட்டது. என்னை சருக்கமாக எழுதச் சொல்லத்தான் அனைவருக்கும் ஆசை வந்து விட்டது. ஹா.ஹா.ஹா.)
      கைப்பேசி வசதி இல்லாத கடிதப் போக்குவரத்தை மட்டும் நம்பியிருந்த காலத்தின் கதை.

      தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கமலா அக்கா வணக்கம்..

    உங்க கோஸ் பிட்லே எபியிலும் பார்த்து கமெண்டினேன்..இங்கு பார்த்தேன் கமெண்டலை ஹா ஹா ஹா

    சரி உங்க கதையின் முன்னுரை மட்டுமே பார்த்தேன்...கொஞ்சம் அப்பால வரேன் ஓகேயா...இரவு ஆகிடும்...கொஞ்சம் வெளியில் போகும் கடமைகள்....நெட் படுத்தல், கணினி படுத்தல் என்று தொடர்கிறது...

    பதிவு கூடப் போட முடியலை....பதிவு எழுதவும் நேரம் எனக்கு நிறைய எடுக்கும்...நான் கொஞ்சம் ஸ்லோ கோச் வேறா (எழுதுவதில்தான்...) ...கருத்து அப்புறம் வந்து போடுகிறேன் கமலாக்கா...ஓகேயா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கோஸ் பிட்லையை எ. பியில் படித்து ரசித்து தந்த கருத்துரைக்கு மிக்க நன்றிகள். இங்கும் மீண்டும் படித்துப் பார்த்து கமெண்ட்ஸை எல்லாம் ரசித்ததற்கு மகிழ்ச்சி.

      தங்கள் கைவலி பூரண குணமா? தங்களின் உற்சாகமளிக்கும் கருத்துரையின்றி இத்தனை நாள் அனைவருக்குமே மனசு சோர்ந்து கிடந்தது. தற்சமயம் எ. பிக்கும், அனைவர் பதிவுக்கும் நீங்கள் வந்து கருத்துரைகள் இடுவது மகிழ்வாக உள்ளது. கடவுளின் நல்லாசிகள் தங்களுக்கு பூரணமாக கிடைக்க மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      பதிவுகள் எழுததான் எனக்கும் நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது. இங்கும் மழை சமயங்களில் பெய்வதால், நாம் ஏதாவது எழுதவோ, இல்லை கருத்துரையாவது எழுதலாம் என நேரத்தை ஒதுக்கி அமரும் போது நெட்டும் படுத்துகிறது. அதனால்தான் நான் அவ்வப்போது பழையனவற்றை தேர்ந்தெடுத்துப் போடுகிறேன். தங்கள் தளத்திலும் புது இடுகைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களுடைய திறமை மிகுந்த எழுத்துகளுக்கு தங்களுடைய பதிவுகள் என்றுமே பிரகாசிக்கும்.

      தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் வந்து கருத்திடுங் கள். அவசரமேயில்லை.. தங்களுடைய அன்பான கருத்துக்கு மீண்டும் மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கமலா அக்கா நெட் வந்திட்டது.... கதையை வாசித்துவிட்டேன்...போகும் முன் கமெண்டும் போட்டுட்டு ஓடிவிடுகிறேன்....

    அப்போது எழுதியது என்றெல்லாம் நினைக்க வேண்டாம் கமலா அக்கா...போடுங்கள் இதில் என்ன இருக்கிறது....

    கதையில் தொடர்ந்து கொண்டே வந்த போது கொஞ்சம் முடிவு புரியத் தொடங்கிவிட்டது.

    நளினி இறக்கும் வரை கதை நன்றாகவே வந்திருக்கிறது அக்கா. முடிவு மட்டும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் என்று தோன்றியது. அதாவது சுமி குழந்தைக்குத் தாயாக இருக்க நளினி விழைந்தாலும்....அது சரி நளினிக்குத் தான் இறக்கப் போகிறோம் என்று முன்னரே தெரியுமா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது...அது மட்டும் முடிவில் தெளிவு படுத்தியிருக்கலாம் அக்கா. ஆனால் உங்களுக்குக் கதை மிக அழகாக எழுத வருகிறது.

    இனி உங்கள் பழைய கதைகளையும் இப்போது தூசு தட்டும் போது உங்களுக்கே தோன்றும் சில மாற்றங்கள் தேவை என்று. இல்லையா? அதை உட்படுத்திப் போட்டுருங்க அக்கா...

    எந்தக் காலத்தில் எழுதினால் என்ன கதை கதைதானே!!! தைரியமாகப் போடுங்கள் கமலா அக்கா

    பாராட்டுகள் வாழ்த்துகள் அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கதையை வாசித்துவிட்டேன்...போகும் முன் கமெண்டும் போட்டுட்டு ஓடிவிடுகிறேன்..../

      அடேடே..! உடனே படித்து கருத்துக்களும் தந்து விட்டீர்களே! மகிழ்ச்சி...ஆனால் ஓட வேண்டாம்.. தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து கமென்ட் தந்து எனக்கு ஊக்கமும். உற்சாகமும் கொடுங்கள்.நன்றி.. ஹா.ஹா. ஹா.

      அப்படியா! வாசிக்கும் போதே முடிவு புலப்பட ஆரம்பித்து விட்டதா? இது கதைகள் எழுத ஆர்வங்கள் உதித்து வந்த புதிதில் ஆவலாக புறப்பட்டு எழுந்தது. கொஞ்சம் கோணா, மாணான்னு இருக்கும். (இப்ப மட்டுமென்ன..! ரொம்பத்தான் அறிவுக் கொழுந்தாக்கும்..! என்று மனசாட்சி இடிக்கிறது. ஹா.ஹா. )

      அப்போது பிரசவங்கள் கொஞ்சம் கஸ்டங்களையும் சுமந்து வரும். என் உறவுகளின் சிரமங்களையும் அம்மா வாயிலாக கேள்விப்பட்டுள்ளேன். அதனால் என் கற்பனைக்கேற்றவாறு குழந்தையை கவனிக்கும் பொறுப்புடன், சுமிக்கு ஒரு நல்ல வாழ்வையும் தன் மூலமாக தர, நளினிக்கு தன் மரணத்தைப் பற்றிய கவலையை கூடவே தந்து விட்டேன்.நீங்கள் கூறியது போல் மெருகேற்றி இருக்கலாம்.. ஆனால் அப்போது சுருக்கமாக வந்த கதை நீண்டு விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டு விடுகிறேன்.(இப்போதெல்லாம் எனக்கு இதை சேர்க்கலாமா, அதையும் எழுதி விடலாமா, என்று எழுத எழுத ஒரே வளவளவென்றுதான் வருகிறது. ஏனோ தெரியவில்லை.! அனுபவங்கள் முத்தி விட்டது போலும்..ஹா.ஹா.ஹா.)

      /எந்தக் காலத்தில் எழுதினால் என்ன கதை கதைதானே!!! தைரியமாகப் போடுங்கள் கமலா அக்கா

      பாராட்டுகள் வாழ்த்துகள் அக்கா/

      உங்களுடைய ஊக்கத்திற்கும், வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுகளுக்கும் என்னுடைய மகிழ்வான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அன்பின் வெளிப்பாட்டிற்கு எல்லை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.! தூய அன்பிற்கு எல்லைகளே கிடையாது.
      கதையின் அன்பை புரிந்து கொண்டு தந்த கருத்துரை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.தங்கள அருமையான கருத்துக்கு மீண்டும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. சுமி, நளினி நட்பு சிறு வயது முதல் ஏறபட்டது என்றால், நளினியின் தாய் இப்படி நொண்டி என்று கூப்பிடுவது மனதுக்கு வருத்தமாய் இருக்கிறது.

      //இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி.//

      என்ன காரணம் செத்து பிழைத்து இருக்கிறாரா முன்பு.
      நளினியின் கணவன் சுமி என்று அழைத்தபோதே தெரிந்து விட்டது. கதையின் போக்கு.

      சுமிக்கு ஒரு அன்பான துணை தேவைதான். நளினியின் குழந்தைக்கு அன்பான சித்தி கிடைத்து விட்டார்.

      கதை நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு.
      வாழ்த்துக்கள்.



      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கூடவே இருந்து பழகினாலும், மகள் அவளே உலகம் என்பது போல் இருக்கும் காட்சியை கண்ட தாயின் கடுமை மிகுந்த பேச்சு. அந்த காலத்தில் ஒரு சில மனித வர்க்கங்கள் இப்படித்தான் முரட்டுத்தன்மை காட்டுவார்கள்.

      நெடுநாள் கழித்து குழந்தை உண்டானாதால், நளினிக்கு குழந்தைப் பிறப்பை பற்றிய பயம் அவளை சோர்வடைய செய்திருக்கலாம்.

      அவள் எண்ணங்களில் சுமியின் மீதான முழுமையான அன்பு, அவள் வாழ்வு தனக்குப்பின் தன்னால் ஒளி பெற வேண்டும் என்ற விருப்பம், தன் ஸ்தானம் தனக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிடுமென்ற பட்சத்தில், என்றேனும் வேறு எவரிடமும் அது சென்று விடாமல், சுமிக்கு கொடுத்த நிறைவு தனக்கு வரட்டும் என்று நினைத்து எழுதப்பட்ட கடிதம். என்று ஏதோ எனக்கு அப்போது தோன்றிய மாதிரி எழுதி விட்டேன். படித்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி.

      தங்கள் ஊக்கமிகும் கருத்துரை என்னை சந்தோஷம் அடையச் செய்கிறது. தங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. //எனக்கு என்னவோ என் டைரியிலிருந்து சில பக்கங்களை புரட்டி, கிழித்து ஒளித்து திசை மாற்றிப்போட மனது ஒப்பவில்லை//

    அனைத்தும் அந்த அந்தக் கால கட்டங்களுக்குப் பொருந்தும், பின்னர் காலம் மாறுகையில் சிலது பொருந்தும், சிலது பொருந்தாது, அதனால, அந்நேரத்துக்கு அது சரி என எடுக்க வேண்டுமே தவிர, ஏன் மாற்றியமைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா

      வாங்க..! வாங்க..! உங்களைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மாற்றாமல்தான் கதையை அப்படியே தந்திருக்கிறேன். காலத்திற்கேற்ப கதையை மாற்றினால் கதையின் நீளம் அதிகமாகி விடுமோ என்ற பயமும் இப்படி சிந்தித்தற்கு ஒரு காரணம். தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. ஆவ்வ்வ்வ் கதை படிச்சு விட்டேன், மிக அழகாக எழுதியிருக்கிறீங்க... முடிவில் சோகம் இருந்தாலும், நளினியை விட சுமிக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதால், நமக்கு சுமித்திரா தான் முக்கிய பாத்திரமாக தோன்றுகிறா, அதனால நளினியின் இழப்பை விட சுமிக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது எனும் மகிழ்ச்சிதான் மேலோங்கி நிற்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து ரசித்து நன்றாக இருந்தது என்று சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது.

      என் பதினேழில் ஏதோ மனதில் தொன்றிய கருவை வைத்து கிறுக்கிய (அப்போது எல்லோரும் என்னை "என்ன... எப்போ பார்த்தாலும், ஏதோ யோசித்துக் கொண்டே பேப்பர்களில் கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்? பெரிய எழுத்தாளி என்ற நினைப்பா? எல்லோரையும் போல இயல்பாக இரு..! என்று கூறுவார்கள்.) கதைக்கு இன்று வலைத்தளம் மூலமாக கிடைத்த நட்புறவுகளின் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் கிடைக்கும் போது." "என்ன தவம் செய்தேனோ?" என மனது ஆனந்தம் கொள்கிறது. பதிலுக்கு" நன்றி" என்ற சொல்லைத் தவிர உங்களுக்கெல்லாம் வேறு எதை சமர்பிக்கப் போகிறேன். வந்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. எதை, இக்காலத்துக்குப் பொருந்தாது என நினைச்சீங்களோ தெரியவில்லை, இதில் வரும் அனைத்தும் இக்காலத்துக்குப் பொருந்தும்.. ஒன்றைத்தவிர.. அதாவது சுமியை கண்ட படி திட்டுவது.. இக்காலத்தில் அப்படி இல்லைத்தானே... இன்னும் இக்காலத்தில் கொஞ்சம் வலது குறைந்தவராக இருப்பின், அவர்களைத்தான் மிக அன்பாக கவனிக்கிறோம்.. முன்பு அப்படி இல்லை.

    நான் சின்னனாக இருந்தபோது ஒரு 25 வயது போய் இருந்தார், வாய் பேசமாட்டார், மூளையும் சரியாக இல்லை... அவரை ஊரில் எல்லோருமே ஊமை என்றுதான் அழைத்தார்கள்.. அது ஒரு பெயராகவே மாறியிருந்தது.. ஆனா இக்காலம் அப்படி இல்லையே... நிறைய மாறி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      இதற்கு தாமதமாக பதில் அளிப்பதற்கு முதலில் மன்னிக்கவும்.

      /இதில் வரும் அனைத்தும் இக்காலத்துக்குப் பொருந்தும்.. ஒன்றைத்தவிர.. அதாவது சுமியை கண்ட படி திட்டுவது.. இக்காலத்தில் அப்படி இல்லைத்தானே... இன்னும் இக்காலத்தில் கொஞ்சம் வலது குறைந்தவராக இருப்பின், அவர்களைத்தான் மிக அன்பாக கவனிக்கிறோம்.. முன்பு அப்படி இல்லை./

      அதேதான்..! முன்பை விட இப்போது மருத்துவ வசதிகள் பெருகி விட்டன. ஒரு பெருங்குறையை கூட எளிதில் குறைத்துக் காண்பிக்கும் வசதிகள்.என வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. நீங்கள் கூறுவது போல் குறைகளை சுட்டிக்காண்பிக்காத பாங்கு வந்து விட்டது. அதைதான் இந்த காலத்திற்கு ஒவ்வாத கதையாக இருக்குமென வெளியிட அஞ்சினேன்.

      என் பிறந்த வீட்டிலிருக்கும் போது நீங்கள் கூறியபடி இருக்கும் ஒருவரை ஊமையன் என்றே அனைவரும் அழைப்பதுண்டு. இத்தனைக்கும் அவர் தாய் தந்தை வைத்த அழகான பெயர் சுப்பிரமணியன். அவரின் குறை காரணமாக அவர் மறைவு வரை அந்த ஊமையன் என்ற பெயரே நின்று நிலைத்து விட்டது. என்ன செய்வது? காலந்தான்! தங்களின் அழகான தெளிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அன்பு எந்த எல்லைக்கும் போகும் என்பார்கள்.  தோழிக்காக நளினியின் மனம் எந்த அளவு யோசித்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.  குறை உள்ளவர்களை அப்படி வசைப்பாடும் மனமும் சித்தி உட்பட அனைவருக்கும் வருகிறதே..     அந்த அப்பா கூட ஏற்கெனவே சுமித்ராவுக்கு திருமண ஏற்பாடு செய்ய முயற்சிக்கவே இல்லை என்பதும் சோகம்.

    கதை என்று யோசித்தாலும் எங்காவது ஒரு துளி நிஜம் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.  எங்கோ பார்த்த ஒரு சிறு அனுபவம் கதையாகி இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதைக்கு தங்கள் கருத்தைத்தான் எதிர்பார்த்து கொண்டேயிருந்தேன். நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      சில சமயங்களில் நெருங்கிய உறவுகளே சிறு எதிர்ப்பாகும் சூழ்நிலை அமைந்து விடுகிறது. அதைதான் நம் விதி என்கிறோம்.

      /கதை என்று யோசித்தாலும் எங்காவது ஒரு துளி நிஜம் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். எங்கோ பார்த்த ஒரு சிறு அனுபவம் கதையாகி இருக்கலாம்!/

      கண்டிப்பாக.. எங்கோ எப்போதோ மனதை அழுத்திய சம்பவங்கள் நம் மனதில் பதிவதாலேயே அதைச்சுற்றி எண்ணங்கள் சுழழும் போது அவை கற்பனையோடு கலந்து எழுத்தாக்கி விடுகின்றன. மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள். நல்ல கருத்துகளுக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. ஆகா...
    அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்..

    இதனைப் போய் பிதற்றல் என்கின்றீர்களே!..

    பிதற்றலே இப்படி என்று வைத்துக் கொண்டால்...
    தாங்கள் எழுதுதற்கு என்று எழுந்தால் -

    பிரமிப்பாக இருக்கிறது...

    எழுதுங்கள்.. இன்னும் எழுதுங்கள்..

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் என் தளத்திற்கு வந்து கதையின் படித்து அழகான விளக்கமாய் கருத்துக்கள் தந்து என்னை தெளிவுபடுத்தியது மகிழ்ச்சியை தருகிறது.

      /எழுதுங்கள்.. இன்னும் எழுதுங்கள்../

      உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் என்னை உற்சாகமடையச் செய்கின்றன. கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேன் சகோதரரே. அன்பான கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அப்போ எழுதியதா ....மிக அருமையா இருக்கு ...

    அந்த காலத்தின் நிலை ..இன்றும் சில இடங்களில் உண்டு ...

    அன்பு என்னும் மாய கோல் கொண்டு ஒரு தேவதை மாற்றிய பாதை ...நலமாகவே இருக்கும் ...

    வாழ்த்துக்கள் கா அருமையான கதைக்கு..

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    /அன்பு என்னும் மாய கோல் கொண்டு ஒரு தேவதை மாற்றிய பாதை ...நலமாகவே இருக்கும் .../

    ஆம்.. இனி சுமித்திராவுக்கு அவள் செல்லும் பாதைகள் அனைத்தும் நலமே..! கதையை ரசித்துப்படித்து நல்லவிதமாக கருத்துக்கள் தந்தமைக்கும், இனிய பாராட்டுதலுக்கும் என் அன்பான நன்றிகள்.

    தாங்கள் கருத்திட்டிருப்பதை தாமதமாக கவனித்தேன். அதனால் பதில் கருத்திடவும் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete