Pages

Friday, October 25, 2019

பேய் வகைகள்....

நான்..

" ஆவி என்றால் பேய்தானேப்பா?" என்றான் என் மகன் விவேக்.

ஆமாம்..! அதற்கென்ன இப்போது? அர்த்த ராத்திரியில் இப்படி பிதற்றாமல் படுத்து தூங்கு..! என்றேன் சிறிது கண்டிப்பாக.

இல்லேப்பா.. ! சூடான காஃபி, டீ, ஏன் சமைக்கும் பொருட்களிலிருந்து பிரிந்து வெளிப்படும் புகையை "ஆவி பறக்குது" என்கிறோம். அது போல் உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அதையும் "ஆவி" பிரிந்து விட்டது என்கிறோம். அதனால்தான் அப்படி பிரிந்த "ஆவிகள்" புகை மாதிரி வடிவில் வந்து உலாத்துகிறதோ?  அதைத்தான் பேய்கள் என நாம் பெயர் வைத்து அழைக்கிறோம்.. இல்லையா? தன் கண்டு பிடிப்பில் அப்பா அசந்து சிக்கி விடுவார் என்ற நம்பிக்கையுடன் அவன் பேசினான்.

எனக்கும் லேசாக கண்ணெதிரே புகைகள் வருவது மாதிரி ஒரு நிமிடம் தோன்றியது.

"வேண்டாம் இந்த ஆராய்ச்சி..!  எப்போதும் இதைப்பற்றிய பேச்சா? இப்போது இரவு நடுநிசியை எட்டிப் பார்க்கிறது. பேசாமல் தூங்கு...! என்னை தொந்தரவு செய்யாதே..! என்றபடி திரும்பி அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக் கொண்டேன்.

இவன் இப்படித்தான்.. !  சிறு வயதில் ஏதோவொரு பயங்கரமான பேய் கதையை நண்பனின் உறவு யாரோ அருமையாக சொன்னார்கள் என என்னிடம் அதைவிட பயங்கரமாக வந்து சொன்னதோடு நிறுத்தாமல். மேலும், மேலும் என்னையும் அந்த மாதிரி கதைகளை சொல்லச் சொல்லி வறுப்புறுத்தினான்.

நானும் குழந்தை ஆசைப்படுகிறானே என்று எனக்குத் தெரிந்த பேய்களை யெல்லாம் உதவிக்கு அருகில் அமர்த்திக் கொண்டு, கற்பனை சாற்றையும் கதையெனும் கலவையோடு கலந்து வைத்துக் கொண்டு ஓரிரு தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், என் கதையே சிலசமயம் நான் தனியே இருக்கும் போது வந்து பயமுறுத்தி, எக்காளமிட்டு, முகத்தோடு முகம் வைத்து உரசிச் செல்வது போல் பிரமை கொடுத்து தோள் தட்டி ஆரவாரப்படுத்தி, தனியே வீட்டிலிருக்கவும் விடாமல், வீட்டிலிருந்து வெளிப்பட்டு வெளியுலக ஜனசந்தடியில் கலந்த பின் வெறுப்புடன் அடங்கிப் போகும். அது வேறு கதை...!

வளர வளர அவனுடன் பேயும் வளர்ந்தது. (அதாவது பேயைப்பற்றிய சிந்தனைகள்) அதற்கு நம்மைப்போல் கால் உண்டா? கால் இருந்தால், அது நடந்து வராமல் ஏன் பறந்து வருகிறது? இல்லை.. அது பறக்கும் போது நமக்கு இல்லாத அந்த சிறகை விரிக்குமா ?  பேய் வருதற்கு முன்பு ஏன் காற்று பயங்கரமாக அடிக்கிறது? காற்று பேயின் தூதனா? இல்லை விசுவாசியா? இல்லை, காற்றுக்கும் பேயைக் கண்டால் பயமா? அதுதான் அதற்கும் முன்னாடியாகவே ஓடி வந்து அச்சுறுத்தி ஒளிகிறதா?

 ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு பேய்கள் வரும் முன் அந்த வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகள், திரைச்சீலைகள் என அனைத்தும் ஏன் படபடக்கிறது? அவற்றுக்கெல்லாம் பேயின் அறிகுறி கண்ணுக்கு புலப்படுமா ? அப்புறம் ஏன் அதையெல்லாம் உயிரற்ற பொருட்கள் எனச் சொல்கிறார்கள்?

இதெல்லாம் அவனிடமிருந்து என்னை தினசரி  துளைத்த கேள்விக் கணைகள்.  பொதுவாக பிறப்பிலேயே" புதன்"  உச்சத்திலிருந்தால் அறிவாளி என்ற ஜோதிடத்தின் கூற்றையும் என்மகன் மெய்படுத்தினான். படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி பள்ளியில் முதன்மையானவனாக விளங்கியதால், அவனை கண்டிக்காது,  அவனின்  "புதனருளால்" வந்த "கேள்விகளுக்கும்" தக்கபடி எனக்குத் தெரிந்த பதில்களைக் கூறி, சிலசமயம் தெரியாத கேள்விக்கு கோபத்தை அடக்கி வாசித்து அவனின் ஆராய்ச்சித் துறையை வளர்த்து வருவதில் நானும் ஒரு பங்காகியும் அங்கம் வகித்தேன்.

இப்போது பள்ளி முடிக்கும் தறுவாயிலும், தொணதொணவென்ற அவனின் கேள்விகள் பழக்கமாக விட்டதெனினும், "இவன் இன்னமும் நன்றாக வளர்ந்து நல்லதொரு நிலைமையை எட்டிப்பார்த்து பிடிக்க வேண்டுமேயென்ற உண்மையான தந்தை பாசம்... வாட்டிப்பார்க்க சற்று கடுமை காட்டி  அவனிடமிருந்து வரும் கேள்விகளுக்கு இப்படி முகம் திருப்பிப் போகச் செய்தன." என் புறக்கணிப்புகள்.

கொஞ்சம் போல மறுபடியும் அவனை திரும்பி பார்த்ததில், அவன் விழித்துக் கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருப்பது புரிந்தது. "விவேக்..! இப்போ தூங்கப் போறியா இல்லையா?  என  மறுபடியும் சிறிது கண்டிப்பு காட்டியதும் அவன் மறுபக்கம் திரும்பி படுத்து தூங்க ஆரம்பித்தான். அவனுடைய கேள்விகளின் தாக்கத்தில், கதவையும் ஜன்னல்களையும் பார்த்தபடி இயல்புடன் வந்த தூக்கமும் வராமல், பேய்களின் வரவை எதிர்பார்த்தபடி  கழித்த எத்தனையோ நாட்களில்,  அன்றும் ஒரு நாளாக  ஐக்கியமாகி சேர்ந்து கொள்ள அன்றைய தூக்கத்தையும் தொலைத்தேன்.

விவேக்...

அம்மா இல்லாத என்னை அப்பா நல்லபடி அம்மாவுக்கும் அம்மாவாக இருந்து பார்த்துக் கொள்கிறார் என்பதை நானும் அறிவேன். நானும் ஏதேதோ அசட்டுத்தனமான கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றும் பொறுமையாக பதில் சொன்னபடி என்னையும். என் தேவைகளையும் கவனித்தபடி, தானும் அலுவலகம் சென்று தன்னையும் பார்த்துக் கொண்டு அப்பா இஸ் கிரேட்.. என் படிப்பு பாதித்து விடக்கூடாதே என்பதுதான் அப்பாவின் மொத்தக் கவலை. ஆனால் எனக்கு படிப்பின் மீது அக்கறை எதுவும் குறைந்து விடவில்லை.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் என் சிறு வயது பிராயம் நடந்து கொண்டிருந்த போது அம்மாவுக்கு உடம்பு முடியாமல், இருந்தது. . ஏதேதோ சிகிச்சைக்கு பிறகு ஒருநாள் அம்மா என்னையும்  அப்பாவையும் விட்டுச் சென்று விட்டாள். அம்மாவின் உடலை அனைவரும் தூக்கிச் செல்வதை பார்த்து நான் "அம்மாவை எங்கேப்பா கூட்டிப் போகிறார்கள்? இன்னொரு டாக்டர் வீட்டுக்கா?" என அப்பாவிடம் கேட்ட போது, "அம்மா குணமாகி மறுபடியும்  ஒருநாள் வருவாடா..! அது வரைக்கும் உன்னையும், வீட்டையும் என்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு போயிருக்கா.." அவ வர்ற வரைக்கும், எனக்கு நீதான் அம்மா... உனக்கு நான்... " என்று வார்த்தைகள் அடைக்கும் குரலில் கூறிவிட்டு அவர் வாய் விட்டு தேம்பி அழுதது இன்று வரை என மனதில் நிழல் படமாக பதிந்த ஒன்று.

வயது ஏற ஏற அம்மா வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டாள் என்ற மட்டும்  புரிந்தது. பக்கத்து வீட்டிலிருக்கும் பாட்டி வேறு " உன் அம்மா எதையோ பார்த்து பயந்து விட்டாளாடா...! அதனால்தான் உடம்பு தேறாமல் அதுகூடவே அவளும் சென்று விட்டாள்." என்னும் போது "அது யார் பாட்டி? சொல்லு... சொல்லு..! " என்ற என் தொணதொணத்த  கேள்விக்கு" வேற யார்? பேய்தானாடா" என்று சொல்லிய பிறகே இந்த என் தேடல் தொடங்கியது.

மேலும் என் கேள்விகளுக்கு பயந்தோ என்னவோ அந்தப் பாட்டியும் சொல்லிக் கொள்ளாமல்,  "அம்மா மாதிரியே"  ஒரு நாள் சென்று விட்டாள். நானும் என் பள்ளி மாணவர்களுடன்  "அம்மாவை அழைத்துச் சென்றப் பேயைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை கண்ட உறவுகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டதால்,  அப்பாவும் நானும்  என் மனமாற்றத்திற்காக இங்கிருந்து போய் விடலாம்" என்ற அவர்களின் யோசனைகளின்  பேரில், அந்த இடத்தை விட்டு அப்பாவுக்கு வேலை மாற்றல் கேட்டுக் கொண்டு இந்த ஊருக்கு வந்து விட்டோம்.

இங்கு வந்த பின்னும் என் நண்பன் வீட்டில் கேட்ட பேய் கதைகள் அடி மனதில் ஆழமாக பதிந்தவை. எப்படியும் "நான் பயமின்றி அந்தப் பேய்களைப் பற்றி தெரிந்து கொண்டு என் அம்மாவை அதனிடமிருந்து எப்பாடுபட்டாவது, மீட்டு அழைத்து வர வேண்டுமென்ற எண்ணம் என் வாழ்க்கையின் லட்சியமாக  மனதில் பிடிவாதமாக அமர்ந்து விட்டது."

நாட்கள் செல்ல என் அம்மா  "மரணம்" என்ற இடத்திற்கு சென்று விட்டதையும், மரணித்தவர்கள் மீண்டும் வர இயலாது என்பதனையும் மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டேன். ஆனாலும் அம்மாவை மீட்டு வர வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மாறவேயில்லை. அதன் விளைவே அவ்வப்போது பேயின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சி.

அப்பாவும், என் படிப்பு வாழ்வின் நலன் குறித்து சற்றே கண்டிக்க ஆரம்பித்து விட்டார். "சின்ன குழந்தையல்ல.. நீ..!  என் எதிர் காலத்தின் வாரிசாக கடவுளால் நியமிக்கப்பட்டவன். உனக்கென  ஒரு வாழ்வு, அதனைக்குறித்த தேடல் என வாழ்க்கை சக்கரத்தை விரிவாக்கி கொள்ள வேண்டுமேயன்றி, கடந்ததை, கடந்து கொண்டிருப்பதை "மனப்பேயின்" காலடியில் சமர்ப்பித்து, அப்பேயின் வலைக்குள் சிக்கி விடாதே... !" என்ற அறிவுரைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்.

என்றாலும். அம்மாவை நினைவு கூறும் சஞ்சலங்கள் பேய் ஆராய்ச்சியின் வடிவில் வடிகாலாக சிறு சிறு சமயங்களில் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கிறது.. அவ்வேளையில் அப்பாவிடம் இந்த மாதிரியான பேய்களின் சாராம்சத்தை பற்றி இரவு, பகல் பாராது பேச தூண்டுகிறது. அப்பா சொல்படி மாற்றங்கள் நடந்தால் நல்லதுதான்..!

நான்...

நான் நினைத்தபடி விவேக் பள்ளி இறுதியாண்டில் மாநிலத்திலேயே முதலானவனாக தேர்ச்சிப் பெற்று  கல்லூரி படிப்பை நல்லபடியாக முடித்து  வேலைக்கு அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடமிருந்த பழைய ஆராய்ச்சி குணமெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்திலேயே அவனிடமிருந்து விலகியே விட்டது. அதற்கு காரணமாக இருந்த என் நண்பனுக்குதான், நான் நன்றி சொல்ல வேண்டும்.

"உன்னிடம் தனிமையில் பேசும் போதெல்லாம், பேய் பிசாசுகள் பற்றிப் பேசும் உன் மகன் மனதில் ஏதோ ஆழமான காயம் உள்ளது. அதனுடைய தாக்கந்தான் அவன் நண்பர்கள், படிப்பு, விளையாட்டு, உன்னுடனான நேரங்களை சந்தோஷமாக செலவில் என்று போக, மிச்ச நேரத்தை உன்னுடன் அதைப்பற்றி பேசி உன் மூலமாக சமாதானமடைந்து கொள்கிறான்.
ஒரு அதிர்ச்சி வைத்தியமாக இப்படிச் செய்து பாரேன். .! " என்று அவன் சொன்ன வைத்தியத்தை செய்துப் பார்த்த பின் விவேக்கிடம் சற்று மாறுதல் தெரிய ஆரம்பித்தது.

முன்பு போல் கேள்விகளை, சிந்தனைகளை குறைத்திருப்பது தோன்றியது. நல்ல மதிப் பெண்கள் எடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மனம் ஒத்த கருத்துக்களுடன் முன்னேறி, இதோ இன்று நல்ல இளைஞனாக வளர்ந்திருக்கிறான். இவனுக்கு இப்படியே ஒரு திருமணத்தை முடித்து விட்டால் தந்தையாக, தாயுமாக இருந்து வளர்த்த என் கடமை செவ்வனே முடிந்து விடும்....

என்னுடைய மனதின் பூரிப்பில் கண்கள் நிறைந்தது. என் பர்சில் வைத்திருந்த மனைவியின் படத்தைப் பார்த்து, "என் கடமையை செய்யும் நல்ல நேரத்துக்கு நீயும், இதுவரை எனக்கு துணையாக  இருந்தது போன்று, இனியும் துணையாக இருந்து அவனை ஆசிர்வதித்து  அவன் வாழ்க்கையை சிறக்க வை....!" எனக் கூறிய போது கண்கள் இன்னமும் நிறைந்தன.

இவன் நினைப்பில் அன்னையின் பிரிவு தெரிய கூடாதென்றுதான் அவள் நினைவுகளை உண்டாக்கும் அவளது புகைப்படத்தைக் கூட மறைத்து வைத்து வாழப் பழகியிருந்தேன். அவனும் இதுநாள் வரை அம்மாவைப்பற்றி எதுவும் கேட்க வில்லை. அவள் இறந்து போன போது அவளைப் பற்றி கேட்டதுதான்...! அதன் பின் இந்த  விளையாட்டாக பேய் கதைகள் கேட்டு, கேட்டு அவன் சிந்தனையின் போக்கையே வேறு பாதையில் திருப்பி விட்டது. இனி அனைத்தும் நல்லவிதமாகத்தான் நடக்கும். ஊர் உறவுகளுடன் பேசி உறவிலேயே பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டியதுதான்...  !
.
விவேக்...

நான் இப்போது  நல்ல  ஸ்திரமான வேலையிருக்கிறேன் என அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. என்னைப்பற்றி நண்பர்களிடமும்  உறவுகளுடமும் சிறப்பாகத்தான் எப்போதும் பேசுகிறார். இப்படிப்பட்ட அப்பாவை, எனக்காக வாழும் அப்பாவை அன்றைய தினம் இழக்கப் பார்த்தேனே..! இனி காணும் கனவுகளில் கூட இதை மாதிரி ஒரு அசட்டுத்தனமான கனவு வராமல் இருக்க வேண்டும்.

பள்ளி இறுதியாண்டு நடந்து கொண்டிருக்கையில்  இப்படித்தான் ஒரு நாள் தேர்வுக்குத் தேவையானதை படித்து முடித்து படுதுறங்கப் போகும் நள்ளிரவு அப்பாவிடம்  இந்த பேய்கள் சம்பாஷணை நடத்தி விட்டு கண்ணயர்ந்த கொஞ்ச நேரத்தில், என் முன் வந்து அன்பாக ஏதேதோ பேசியபடியிருத்த  அப்பாவே தீடிரென ஒரு கொடுர பேயாக மாறி காட்சியளித்தார்.

அவர் முகம் படு விகாரமானதை நான் புரிந்து கொள்வதற்குள், "எப்ப பார்த்தாலும் பேய் பற்றியே பேசுகிறாயே..! பேய் எப்படியிருக்கும் என்று கேட்டாயே..! பார்த்துக் கொள். நான் ஒரு  பேயாக மாறிவிடுகிறேன். உனக்கு பேயின் கை வேண்டுமா? அல்லது காலா? இல்லை கண்களா? என்றவர் ஒவ்வொரு அங்கமாக அவர் உடலிலிருந்து பிய்த்து எடுத்துத் தந்தவர், இந்தா...! இதையும் வைத்துக் கொள். என கண்கள் இருந்த இடத்தில் ஒட்டையாக இருந்த தலையை திருக்கி ரத்தமும் சதையுமாக என்னிடம் தந்ததும், வாய் விட்டு அலறி விட்டேன். "அப்பா... அப்பா.. நீங்கள் அப்பாவாக மட்டும் எனக்கு எப்பவுமே இருந்தால் போதும். நீங்களாவது என்னுடன் எப்போதும் இருங்கள். அம்மாதான் பேயாக மாறி என்னை விட்டு போய் விட்டாள் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது கொண்டே இருக்கிறது. இப்படி நான் தினமும் பேயைப் பற்றி பேசிப்பேசி நீங்களும் பேயாக மாறி விட்டீர்களா? இனி உங்களிடம் இதைப்பற்றி பேசவே மாட்டேன்." என்று நான் வாய் விட்டு கத்தியதெல்லாம் தொண்டைக்குள் சிக்கி தடுமாறியபடி நெஞ்சையடைக்க, கண் விழித்ததும், அருகில் அப்பாவை காணாது, எதிரே மறுபடியும் ஒரு பேயுருவம்  கோரமாக கைகளை விரித்தபடி அருகில் வரவும், மீண்டும் அலறி, நான் படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்.

மறு நாள் அப்பா அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அழைத்துப் போய் பூசாரியிடம் முகத்தில் நீர் தெளிக்க வைத்து, வீபூதி குங்குமமிட்டு "உங்கள் பையன்  எங்கோ பயந்திருக்கிறார். மூன்று தினங்கள் அம்மன் அபிஷேக நீர் தெளித்தால் சரியாகி விடும்." என்று அவர் பயமொன்றுமில்லை எனச் சொன்னதை நினைத்து  சந்தோஷமடைந்து கொண்டார்.

நானும் என் கனவை, கனவுக்கு பின் கண் விழித்ததும் பார்த்ததை எதுவுமே அப்பாவிடம் சொல்லவில்லை. அவரும் "எங்கு எப்படி பயந்தாய்..?  என்ற விபரம் கேட்கவில்லை. என்னைப்பார்த்ததும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவருக்கு  தோன்றியுள்ளது." ஏன்?"என நானும் கேட்கவில்லை. எனக்கும் அநாவசியமாக அவரை பயமுறுத்த விருப்பமில்லை. இப்படியாக அந்த சம்பவம் நடந்து முடிந்த பின் நான் படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த, இதோ...! இன்று முழு மனிதனாக வளர்ந்து நிற்கிறேன். அப்பாவும் என் திருமணதிற்கு சம்மதம் கேட்க. நானும் சரியென்றதில், பெண் பார்க்கும் படலங்கள் ஆரம்பித்துள்ளன.

 நான்..

நல்லபடியாக ஜாம்ஜாமென்று விவேக்கிற்கு திருமணம் செய்து விட்டேன்.  உறவிலேயே, அவனுக்கு ஒன்று விட்ட அத்தைப் பெண்.  இரு மனம் கூடி கலந்து பேசி திருமணத்திற்கு மனம்  ஒத்து என் மருகளாய் வந்தாள் என் தங்கை பெற்ற அன்பு மகளாம் காவேரி. .

அன்பும், அனுசரனையும், அவள் இரு கண்களாக இருக்கக்கண்டு என் மனம் உவகையடைந்தது. கிராமத்தில் படித்து வளர்ந்து வந்ததால் அந்த பண்பாடு விவேக்கை  இன்னமும் வளர வைக்கும் என்ற நம்பிக்கை மனதுள் வேரூன்றியது.

இருவரும்  ஊர் உறவு விருந்துக்கு என்று சென்று திரும்பி வந்து தேனிலவும் சென்று வந்து விட்டு விவேக் பழையபடி அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான். நாட்கள் நல்லபடியாக மருமகளின் அன்பான கட்டுக்கோப்பில் நகர்ந்து கொண்டிருந்தன.

தனிமை சிறையும்,  தனிச்சூழலும், மனைவி பிரிந்ததிலிருந்து விவேக்கை அண்டி அரவணைத்து வாழ்ந்த காலங்களை நினைவு படுத்தினாலும், "இனி இதுதானே அவனுக்கும், நமக்குமான வாழ்க்கைச் சுழற்சி. " என்பதையும் அடிக்கடி  ஞாபகப்படுத்தி ஒரு விதமான வருத்தத்தை மனதில் தேக்க வைத்துச் சென்றதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு விடுமுறை நாளின் மகிழ்வான காலைப் பொழுது. "விவேக் எங்கேமமா?" எழுந்து பல் துலக்கி மருமகள் சூடாக கொண்டு வந்து தந்த காஃபியை பருகியபடி கேட்டேன்." ஏதோ நண்பரைப் பார்க்க வெளியில் சென்று விட்டு வரும் நேரந்தான் மாமா..! என்றாள்." ஏன் ஏதாச்சும் பேசனுமா?"என்றவளிடம்," இல்லேம்மா உன் கிட்டேத்தான் பேசனும்.  விவேக் எப்படிம்மா? உன்கிட்டே நல்லபடியாக அன்பாக பேசி பழகுறானா? இதை நான் கேட்க கூடாது. அந்த மகராசி இருந்திருந்தா அவ எல்லாத்தையும் பாத்துப்பா..! ஆனா அவ இடத்திலேயும், நானே இருந்து அவனை வளர்த்ததாலே நானே கூச்சத்தை விட்டு கேட்கிறேன்...! என்றேன் தயக்கமாக.

"அதுக்கென்ன மாமா..! ஒரு குறையும் இல்லை எனக்கு.. ஆனா பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகனும்." அப்படீன்னு எங்கம்மா அடிக்கடிச் சொல்வாங்க.. ..! என்று அவள் சொன்ன பதில் என்னை திடுக்கிடச் செய்த ஒரு நொடியில்...

"ஆமாம்மாம்..! பேய் பிசாசை மறந்துடலாம்னு நினைக்கிற நேரத்திலே அதுவே மீண்டும் வந்து உன்னை மறக்க மாட்டேன்னு ஒட்டிக்கிட்டா நான் எந்த மரத்திலே ஏறுவதாம்" என்றபடி வெளியில் சென்றிருந்த விவேக் வரவும், மருமகளின் கண்களில் அப்பியிருந்த வெட்கம் கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அவள் அவசரமாக உள்ளே ஒடினாள்.

என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்ட திருப்தியில், நான் செய்தி தாளில் மூழ்கும் போது, அவளைத் தொடர்ந்து சென்ற  விவேக்கின் சிரிப்பொலி உள்ளேயிருந்து கேட்டது. கூடவே துணைக்கு மருமகளின் சிரிப்பொலியையும் உடனழைத்து கொண்டது. இனி கவலையில்லை..! விவேக்கிற்கு அவன் தாய் மீண்டும் கிடைத்து விட்டாள். நிறைந்த மனது செய்தித் தாள்களை புறந்தள்ள, செருப்பை மாட்டியபடி, "நான் கொஞ்சம் காலாற நடந்து வருகிறேன் விவேக்...!" என்றபடி வாசல் படியிறங்கினேன்.

"கொஞ்ச நாட்களாக நான் அமைதியாய் இருப்பதாகவும், எனக்கு நானே என்னுள்ளேயே  ஏதோ பேசிக் கொள்வதாகவும்" என் நண்பரிடம் என் மகன் புகார் தந்து, "இந்த மாதிரி அவரைப் பார்த்ததேயில்லை..! அவரை பழையபடி சந்தோஷமாக பார்க்க நான் என்ன செய்ய வேண்டுமென ஐடியா கேட்டதாக " என் நண்பர் சொல்லவும், "என் கையில் ஒரு பேரனோ, பேத்தியோ வளர வந்து விட்டால் எனக்கு ஏது அமைதி? என்று நீ சொல்ல வேண்டியதுதானே. !" என நான் சொல்லவும், "இதை உன்னிடம் கேட்டா நான் சொல்லுவேன். அவனுக்கான இந்த பதிலை அப்போதே தந்து விட்டேனே...! " என்றார் கடகடவென்ற சிரிப்புடன்.

அவர்  விடைபெற்று சென்றவுடன் மனது லேசாக கனத்தது." அவன் கேள்விக்கு மற்றொரு பதிலும்  இப்போது என்னுள் இருக்கிறது என்று கூற தயக்கமாக உள்ளது நண்பா...!  உன்னிடம் கூட கூற முடியவில்லை. என்னே தானே பேசத் தூண்டுகிறது..! பேசவும் வைக்கிறது.. அது வேறு ஒன்றுமில்லை..! அது தனிமைப் பேய்...!" என்றேன் சிறிது முணுமுணுப்பாக....!!!!

முடிந்தது....

நட்புறவுகள் அனைவருக்கும் என அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

40 comments:

  1. தன் கதையில் தானே ஆழ்ந்து தானே தான் படைத்த பேய்க்கு பயப்படும் ரகமா?  ஹா...   ஹா...  ஹா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து தந்த கருத்துக்களுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      பேய் என்பதே மனதின் கற்பனை தானே.. ! நாம் ஒவ்வொருவரும் உயிருடன் இருக்கும் போதே நிறைய பேய்கள் நம்முடன்தான் வாசம் செய்கின்றன. "பணப்பேய், ஆசைப்பேய், சுயநலப்பேய்" என்று நம்மை சுற்றி வட்டம் போடுகின்றன. ஆனால் கதைக்காக விவரித்து சொல்லும் போதும், படங்கள், அனுபவவாயிலாக பார்க்கும் போதும் கொஞ்சம் கூடுதல் பயம்..ஹா. ஹா. ஹா. கதையே (இது எல்லாம் ஒரு கதையா? என ம. சா. வேறு வந்து இடிக்கிறது.) ரசித்துப் படித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. காற்றுக்கும் பயமா?  முன்னாடியே வந்து சொல்லி ஒளிந்து கொள்கிறதா?

    ஹா..  ஹா... ஹா...  நல்ல கற்பனை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கற்பனையில் கதையை கண்ட மேனிக்கு எழுதியிருக்கிறோமே..! என நினைத்தேன். தாங்கள் ரசித்துப் படித்ததில் மிக மகிழ்வு அடைந்தேன். கற்பனை எல்லாமே புதனருளால், இல்லையில்லை நம் எ. பியின் புதனருளால் மனதுள் எழுந்தவை. ஹா.ஹா. ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வித்தியாசமான கதை.   வேறு மாதிரியும் எதிர்பார்த்தேன்.    உளவியல் ரீதியாக ஒரு பேயையும் எதிர்பார்த்தேன்!   அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வித்தியாசமான கதை என்று ரசித்தமைக்கு நன்றி.

      /வேறு மாதிரியும் எதிர்பார்த்தேன். உளவியல் ரீதியாக ஒரு பேயையும் எதிர்பார்த்தேன்! /

      தாங்கள் எதிர்பார்த்தபடி உண்மையான பேயையும் கதைக்குள் எங்கேயாவது கொண்டு வந்து விடலாமாவென யோசித்தேன். பேய் பிடிவாதமாக என் கற்பனை கதைக்குள் வர மறுத்து விட்டது. ஹா.ஹா.ஹா. சரி போனால் போகட்டும் என நானும் விட்டு விட்டேன். அடுத்த முறை தவறாது வர வேண்டுமென கூறியுள்ளேன். பார்க்கலாம்...!என்று கூறி சென்றுள்ளது.

      தங்களின் பாராட்டிற்கு பணிவுடன் கூடிய மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மனைவி இழந்த நிலையில் மகனைப் போற்றி வளர்த்த அந்தத் தந்தை போற்றுதலுக்குரியவர்.  அப்படி ஓரிருவரை நான் நிஜ வாழ்விலும் அறிவேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மனைவி இழந்த நிலையில் மகனைப் போற்றி வளர்த்த அந்தத் தந்தை போற்றுதலுக்குரியவர். அப்படி ஓரிருவரை நான் நிஜ வாழ்விலும் அறிவேன்./

      ஆமாம்.. நானும் என் சுற்றத்தில் அப்படிப்பட்டவர்களை அறிவேன். அவர்களுடையது ஈடு எதுவும் செய்ய இயலாத தியாகம்.

      அருமையான கருத்துக்கு மீண்டும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வரவுக்கும், தீபாவளி நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மகிழ்வான தீபாவளி நல்வாழ்த்துகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. பேய்க்கதை... நன்றாகவே இருக்கு... என்னஙோ பேய் உங்களைத் தூங்க விடாமல் இந்தக் கதையை எழுதவைத்திருக்கிறது.

    உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாகவே இருக்கிறது என்ற வார்த்தை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

      /என்னஙோ பேய் உங்களைத் தூங்க விடாமல் இந்தக் கதையை எழுதவைத்திருக்கிறது./

      ஹா. ஹா. ஹா. உண்மை போலிருக்கிறது. தினமும் பத்து மணிக்கு மேல்தான் இந்த கற்பனை உதித்து கதையானது. ஆனால் நீங்கள் சொல்லி ஊர்ஜிதபடுத்தியதும், இனி இரவில் சரியான தூக்கம் வருமா என சந்தேகமாக உள்ளது. ஹா. ஹா.ஹா.

      பதிவுக்கு வந்து தந்த அருமையான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வித்தியாசமான சிந்தனை கதை...
    தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வித்தியாசமான கதை என கதையை ரசித்து படித்தமைக்கும் தீபாவளி வாழ்த்துகளுக்கும், மகிழ்வுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. பேய் கதை அருமை.
    அழகான குடும்ப கதையாக இருக்கிறது.

    //அது வேறு ஒன்றுமில்லை..! அது தனிமைப் பேய்...!" என்றேன் சிறிது முணுமுணுப்பாக....!!!!//


    பேரனோ, பேத்தியோ வந்து தனிமை பேயை விரட்ட வேண்டும்.
    விவேக்கின் பேய் பய இருளை போக்கி மகிழ்ச்சி ஒளியை கொண்டு வந்து விட்டார் அப்பா.
    அவரின் தனிமை பேயும் அகற்று விட் வாழ்த்துக்கள்.
    தீபாவளி சமயம் நல்ல கதை மன இருளை போக்கி ஒளி தீபத்தை ஏற்றுவோம்.



    எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை அருமை என்ற பாராட்டிற்கு என மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்.

      /பேரனோ, பேத்தியோ வந்து தனிமை பேயை விரட்ட வேண்டும்./

      உண்மை. வரட்டும் அவரின் தனிமை நீங்கி அவர் மகனை அன்போடு வளர்த்த மாதிரி அந்த பேரக் குழந்தைகளையும் அறிவுச்சுடராய் வளர்க்கட்டும். அழகான குடும்ப கதையாய் உள்ளது என்ற பாராட்டிற்கு மிக்க நன்றி. நான் இந்த கிறுக்கல் கதை எப்படியிருக்குமோ என சற்று வருத்தப்பட்டேன். நீங்கள் அனைவரும் வந்து நன்றாக உள்ளது எனக் கூறியமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.உங்கள் அனைவருக்குமே எனது நன்றிகள் சகோதரி.பதில் கருத்தட சற்று தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். மாலை ஏழு மணிக்கு மேல் வெளியே சென்று விட்டு இப்போதுதான் வந்தேன்.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பதிவு சுவாரஸ்யமாகவும், சற்றே பயத்துடனும் படிக்க முடிந்தது.

    //என் பர்சில் வைத்திருந்த மனைவியின் படத்தைப் பார்த்து, "என் கடமையை செய்யும் நல்ல நேரத்துக்கு நீயும், இதுவரை எனக்கு துணையாக இருந்தது போன்று, இனியும் துணையாக இருந்து அவனை ஆசிர்வதித்து அவன் வாழ்க்கையை சிறக்க வை....!" எனக் கூறிய போது கண்கள் இன்னமும் நிறைந்தன//

    சிலரது வாழ்வில் இது உண்மையே...

    இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      கதை ஸ்வாரஸ்யமாக இருந்தது என்றமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

      /சிலரது வாழ்வில் இது உண்மையே.../

      உண்மைதான் சகோதரரே. நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் ஒன்று சொல்கிறேன். கதைக்காக இந்த வார்த்தைகளை எழுதும் போது எனக்கு தங்கள் நினைவுதான் வந்தது. தாய்க்கும் மேலாக இருந்து தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு தங்கள கடமையை சிறப்பாக செய்து முடித்த தங்களின் நினைவுதான், இந்த கதைக்கு கரு என்னுள் வரும் போதும் வந்தது.

      தங்களைப் போல என் உறவிலும் (என் கணவருடைய அண்ணா) இப்படித்தான் தன் குழந்தைகளை (தாயில்லா குழந்தைகளை) போற்றி வளர்த்தார். கற்பனை கதை என்றாலும் கதையை உணர்ந்து அருமையான கருத்துக்கள் தந்ததற்கு மிக்க நன்றிகள். மாலை வெளியில் சென்ற மையால் பதிலிட
      தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பேய் கதை சிரிக்க வைக்கிறது.

    இனிய தீபாவளி வாழ்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களை சிரிக்க வைத்த பேய் கதை என்றமைக்கு மகிழ்ச்சியடைந்தேன். சிரிப்பு நோய் போக்கி மன உற்சாகம் தரும் அருமருந்தல்லவா..!

      இனிய தீபாவளி வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. இனிய தீபாவளி வாழ்த்துகள் கமலா...
    பதிவிற்கு பிறகு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தீபாவளி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள். தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

      அவசரமேயில்லை. நிதானமாக வந்து கதையை படித்து பின் அருமையான கருத்துக்களை தாருங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. சிறந்த பதிவு

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் பாராட்டிற்கும், இனிய தீபாவளி வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நேற்று கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டிய நிலை.. தாமதமாக வந்து பதில் தருவதற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. மகனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தந்தையை வாங்குகிறேன். விரைவில் பேரனோ, பேத்தியோ வந்து அவர் தனிமைப் பேயை துரத்தட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விரைவில் பேரனோ, பேத்தியோ வந்து அவர் தனிமைப் பேயை துரத்தட்டும்./

      ஆமாம். அவர் தனிமைப் பேய் அகல நானும் பிரார்த்திக்கிறேன்.

      கதையை ரசித்துப் படித்து கருத்துக்கள் தநததற்கு மிக்க நன்றிகள் சகோதரி

      நேற்று முழுவதும் (மாலைவரை) கொஞ்சம் வெளியில் சென்று விட்டேன். அதனால் தங்களுக்கு பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்
      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. என்ன கமலாக்கா படக்கதை ரேஞ்சுக்கு மாத்தி மாத்திக் கதை எழுதத் தொடங்கிட்டீங்க... தீபாவளிக்குப் பேய்க் கதையோ.. நல்லா இருக்கு புதன் கிழமைக்கேள்வியில் ஆரம்பித்து வைத்த பேய்.. வலையுலகை ஒரு சுற்றி சுற்றி வருது ஹா ஹா ஹா.

    இருப்பினும் அதிரா வரமாட்டா எனத் தெரிஞ்சுதானே போஸ்ட் போட்டீங்க கர்ர்ர்:))..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /புதன் கிழமைக்கேள்வியில் ஆரம்பித்து வைத்த பேய்.. வலையுலகை ஒரு சுற்றி சுற்றி வருது ஹா ஹா ஹா./

      ஆமாம்.. புதன் பேயார் என்னையும் பாதித்து விட்டார். கற்பனையில் வந்து ஒரு கதையையும் தந்து விட்ட அவருக்கு நன்றி.

      உங்கள் அனைவரின் உற்சாகம் தரும் கருத்துரைகளால்தான், நானும் வலையுலகில் சுற்றி வருகிறேன். அவரை பார்க்க வந்ததற்கும், என்னை பாராட்டியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் கருத்துரைகள் படித்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

      /இருப்பினும் அதிரா வரமாட்டா எனத் தெரிஞ்சுதானே போஸ்ட் போட்டீங்க கர்ர்ர்:))../

      நிஜமாகவே நீங்கள் வர வேண்டுமென நான் பிராத்திக்காத தெய்வம் இல்லை. அது போல் நீங்களும் வந்து கருத்து தந்தது மிகவும் மகிழ்வாக இருக்கிறது அதிரா. உங்களுக்கு மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. பேய் பற்றிய கற்பனை அழகு.. அருமையாக எழுதியிருக்கிறீங்க. சின்ன வயதில் பிள்ளைகளுக்கு இப்படிக் கண்ட நிண்ட சந்தேகங்கள் எழுவது இயல்புதான், சிலருக்கு ஆராட்சியாக கேள்விகள் வரும், சிலருக்குப் பயத்தில கேள்விகள் வரும் ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சிலருக்கு ஆராட்சியாக கேள்விகள் வரும், சிலருக்குப் பயத்தில கேள்விகள் வரும் ஹா ஹா ஹா./

      உண்மைதான். பேய்கள் பற்றிய கதைகள், சந்தேகங்களை சிறு வயதில் நாமும் உறவுகளுடன், நட்புகளுடன் அலசியுள்ளோம். தங்கள கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. பேய் கதை
    சிறுவயதில் அனைவருக்கும் ஒரு ஆர்வம்,அச்சம், பயம்...

    இருட்டை பார்த்தால் அங்கே ஏதோ...என பிரமை...
    பேய் எப்படி இருக்கும் என பேசுதல்....பேச்சு ஸ்வாரஸ்யமாய் வளர்ந்து கொண்டே போய்...அப்புறம் படுத்தால் வருமா நித்திரை.

    அரண்டவனுக்கு கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! அப்படிங்கிற பலமொழி எல்லாம் நிஜம் தான்.

    தாயும் தந்தையுமாய் அப்பா...
    இயல்பாக மகன், எதார்த்தமான கதை,நடை...
    சில இடங்களில் சிரிப்பான பேய் கதை...
    உடனிருப்பான் நண்பன்....
    மகனை கல்யாணம் செய்து கொடுத்து விட்டு தாய்க்கும் ஏற்படும் உணர்வு...
    ஏதோ...வெறுமையான உணர்வு....தனிமைப் பேயே...கொடிது ...கொடிது...

    அழகாக கதை எழுதுகிறீர்கள் கமலா....வாழ்த்துகள்...மேலும் மேலும் எழுதுங்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் மீண்டும் வந்து கதையை முழுமையாக படித்து அற்புதமாக கருத்துரைகள் தந்துள்ளீர்கள்.

      /அரண்டவனுக்கு கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! அப்படிங்கிற பலமொழி எல்லாம் நிஜம் தான்./

      ஆமாம்.. உண்மை.. நம் மனதுள் வரும் பய பேய்க்கு துணை வருவது இருட்டுத்தான்..இருட்டில்தான் சிறு வயதில் நிறைய பயந்துள்ளோம். இப்போதும் இருட்டில் கொஞ்சம் தனிமையும் சேர்ந்தால் சற்று பயந்தான்.. ஹா. ஹா. ஹா.

      அழகாக எழுதுகிறீர்கள் என்ற பாராட்டிற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி. எல்லாம் வலையுலக நட்புகளாகிய நீங்கள் அனைவரும் தரும் ஊக்கமும், உற்சாகமுமான கருத்துரைகள்தான் காரணம். தொடர்ந்து வந்து என் எழுத்துக்களுக்கு ஆதரவு தாருங்கள்.

      நான் தங்களுக்கு பதிலளிக்க சற்று தாமதமாகி விட்டதற்கு வருந்துகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. அட? பேயார் வந்திருக்காரா? முதல்லேயே கவனிக்காமல் போயிட்டேன். 2,3 நாட்களாக மதியம் உட்கார முடியலை. இப்போ நீங்க என்னோட பதிவில் கொடுத்த அழைப்பைப் பார்த்துட்டுத் தான் வந்தேன். இது ரொம்ப நல்ல பேயாக இருக்கும்போல! ஜாஸ்தி படுத்தலை. அப்பாவின் தியாகம் அருமை. இது போல் அப்பாக்கள் நிறையவே பார்த்தாச்சு! நன்றாகக் கோர்வையாக எழுதுகிறீர்கள். பையர் பேயை விரும்புவதின் உண்மையான காரணத்தை அவன் அப்பாக் கடைசிவரை தெரிஞ்சுக்கலை போல! அப்பாவுக்குத் தனிமைப்பேய் விரட்டுவதைப் புரிந்து கொண்டு விரைவில் ஒரு பேரனோ , பேத்தியோ பெற்றுக்கொடுக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் அழைத்து நினைவுபடுத்திவுடன் வந்து கதையை படித்து அருமையான கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு வேளை நீங்கள் என் பதிவு வந்ததை கவனிக்கவில்லையோ என்றுதான் நினைவுபடுத்தினேன். என் பதிவுக்கு நீங்கள் எப்போதும் உடனடியாக வந்து விடுவீர்களே..! ஆனால் இன்னமும் உங்களை காணோமேயென்றுதான் தங்கள் பதிவுக்கு வரும் போது கூறினேன். தவறாக நினைக்க வேண்டாம்.

      /பையர் பேயை விரும்புவதின் உண்மையான காரணத்தை அவன் அப்பாக் கடைசிவரை தெரிஞ்சுக்கலை போல! /

      கதையை நன்கு படித்து புரிந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
      ஆமாம்.. அப்பாவின் தனிமைப் பேய் அகல அவருக்கு ஒரு பேரனோ, பேத்தியோ வரட்டும்.. அழகான தங்கள் கருத்துக்கு மீண்டும் என் பணிவான நன்றிகள்..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. மிகவும் வித்தியாசமான கதை. பேயை வைத்து அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நலமா சகோ.? தங்கள் பணிகள் அனைத்தும் நல்ல விதமாக நடந்திருக்கும் என நம்புகிறேன்.இந்த தடவை மழையினால் தங்களுக்கு பாதிப்புக்கள் இருந்தனவா?

      என் பதிவுக்கு வந்து தந்த கருத்துரைகள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என எழுத்தை வளப்படுத்தும் என நம்புகிறேன். கதை நன்றாக உள்ளதென கூறியமைக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. ஆஹா! எபி பேய் உங்கள் தளத்திலும் விசிட் செஞ்சு உங்களைக் கதை எழுத வைத்துவிட்டாரா?!! பேய் என்றாலே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதென்னவோ தெரியவில்லை. சினிமாவில் வரும் பேய் இல்லை ஹா ஹா ஹா எல்லோரும் பேய் என்றால் பயப்படுத்தித்தானே கதை சொல்வாங்க எனக்கு என்னவோ தெரியவில்லை பேய் என்றால் அது நல்ல நட்புடன் இருப்பதான ஒன்று...(நம் மனப் பேய்!!!!)

    கதை ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க...அக்கா அந்த நண்பர் என்ன தெக்கினிக்கி சொல்லி விவேக் பேயை மறந்தான்>!!!

    அப்பாவும் மகனும் அவரவர் ஆங்கிளில் நல்லா எழுதியிருக்கீங்க கமலாக்கா உங்களுக்கு மிக அருமையாக எழுத வருகிறது.

    சீக்கிரம் அப்பாவிற்கு ஒரு பேத்தியோ பேரனோ கிடைக்கட்டும்.

    பாராட்டுகள் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் சகோதரி..நாம் எ. பியின் நட்புகள் என்பதினால், புதன் பேயார் என்னையும் பற்றி கொஞ்சம் எழுது என்றதினால், இக்கதை பிறந்தது. நம் பேயார் நம்மை எப்போதும் பயமுறுத்தமாட்டார். ஏனென்றால் அவர் நம் அனைவருக்கும் தோஸ்த்:)..

      அந்த நண்பர்தான் பயங்கரமான பேயாக வேடமணிந்து (முள்ளை முள்ளால்,எடுக்க வேண்டும்... வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்.என்ற தெக்கினிக்கி.. அவ்வளவுதான்...!) பயமுறுத்தச் சொல்லி, அதன்படிதான் தன் மகன் பயந்து திருந்தியுள்ளான் என அவர் நினைத்து கோவிலுக்கு அழைத்துப் போய் அபிஷேக நீர் தெளித்து செய்திருக்கிறாரே..!

      கதை நன்றாகவே இருக்கிறது என்ற தங்களது வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. பாராட்டிற்கும் மிக்க நன்றிகள். அவருக்கு சீக்கிரமே பேரனோ, பேத்தியோ பிறந்து தனிமை அகலட்டும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. மிக அருமை கமலா அக்கா ...


    விவேக் ன் பேய் பற்றிய சந்தேகங்கள் மிக சுவாரஸ்யம் ...ரசித்து வாசித்தேன் ...

    இருவரின் மன நிலையையும் கூறிய விதம் மிக அழகு ..


    வாழ்த்துக்கள் அக்கா

    அழகான கதையை வாசிக்க தந்தமைக்கு நன்றிகளும் ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை ரசித்து வாசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து என் பதிவுகளுக்கு வந்து உங்கள் ஆதரவுகளை தந்து என் எழுத்துக்களை ஊக்குவித்து வருவதற்கும் நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete