வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே.
அந்தக் காலத்தில் மருந்தும், விருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். .அதன் அர்த்தம் உண்மையில் உணர்ந்து சொல்லப் பட்டதுதான் போலும் .
எதிர்பாராமலோ இல்லை, எதிர்பார்த்தோ, விருந்தாளிகள் வீட்டிற்கு வந்து விட்டால்,((அது போல் எதிராளி அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சரி..இதே நிலைமைதான். .. ) அன்று முழுவதும் உபசாரம் காலை, மதியம், இரவு என தடபுடலாக இருக்கும். தனக்கு தெரிந்த சமையல் ஐட்டங்களை எல்லாம் வந்த விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டுகளை எப்படியாவது பெற்று விட வேண்மென்ற அவா அன்று முழுவதும் ஓய்வில்லாமல் வீட்டிலிருப்பவர்களை உழைக்கச் செய்து விடும்.
வரும் மறுநாளுடன் இரண்டொரு நாட்களில் கொஞ்சம் நார்மலாகி, வெளியில் எங்காவது கோவில், குளம், பூங்கா, சினிமா என்ற பயணங்களுடன் மாறுதலுக்கு ஒரு பொழுது அவர்களுக்கு (கவனிக்கவும்.. வந்து சந்தோஷிக்கும் விருந்தினர்களுக்கு அல்ல....) பிடித்தமான உணவகங்களுக்கு அழைத்துச் செல்லல், அங்கு அவர்களுக்கு (இங்கும் விருந்தாளிகளுக்கு அல்ல....) பிடித்தமான உணவை வாங்கி தருவது என பொழுது முடிந்து விடும்.
மூன்றாவது, நான்காவது நாளில், இல்லை ஐந்தாவது நாளில், காலை எழுந்திருக்கும் போதே வந்த விருந்தினரை விட வீட்டிலிருப்பவர்களுக்கு ஒரு சோம்பல், இனம் புரியாத ஒரு கடுப்பு இவைகள் அன்றைய சூரிய உதயத்துடன் அவர்களுக்குள்ளும் உதயமாகி விடும். இரண்டொரு நாள் உபசாரத்தின் பலனாக அன்று சிம்பிளான உணவே போதுமென அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.
மறுநாள் வந்தவர்கள் பெட்டியை கட்டும் போது, "இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு போகலாம்... அதற்குள் காலில் கஞ்சியை கொட்டிக் கொண்ட மாதிரி என்ன அவசரம்? எப்போது வந்தாலும் இப்படித்தான் நீங்கள் அவசரப்பட்டு செல்கிறீர்கள்....அடுத்த முறை வரும் போது ஒரு வாரம் தங்குகிற மாதிரி வாருங்கள்.... இன்னும் நிறைய இடங்களுக்கு உங்களை சுற்றிப்பார்க்க அழைத்துப் போக வேண்டுமென நினைத்தோம் ...தெரியுமா? " என்ற உபசார வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். (அதுவும் அவர்கள் கிளம்புவதை உறுதி செய்து கொண்ட பின்தான்...:) ) ) வந்த விருந்தாளிகளுக்கும் தெரியும். இது வெறும் உதட்டளவில் இருந்து வரும் வாய் வார்த்தைதான்... உள்ளத்திலிருந்து வரவில்லை என்பது.... அவர்களும் புன்னகையுடன்" அதற்கென்ன....! அடுத்த முறை வரும் போது தங்கி விட்டால் போச்சு....! நீங்களும் எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் அரக்கப்பரக்கத்தான் கிளம்பி விடுகிறீர்கள். நிதானமாக தங்கிச் செல்லும்படி ஒரு முறையாவது வாருங்கள்." என்று அன்பொழுக மறுமொழி சொன்னாலும், உள்ளுக்குள் எங்கே அந்த மாதிரி வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வும், எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தபடி இருக்கும். இவர்களுக்குள்ளும் அதே உணர்வு இருக்கையில் எப்படி அந்த மாதிரி செல்வார்கள்.
ஆக விருந்தோம்பல்கள் இந்த மாதிரியான எண்ணங்களுடன் நாட்களை கடத்தி விடும் என்பதை நிஜமாக என் அனுபவத்தின் மூலமாக நான் இங்கு சொல்லவில்லை. (நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.... :) ) இது விருந்தோம்பல்கள் செய்தவர்கள், விருந்தோம்பலில் திளைத்தவர்கள் என ஒவ்வொருவரும் கதையாகவோ/ கற்பனையாகவோ, எழுதி/ சொல்லி, கேள்விபட்டதை மட்டுந்தான் சொல்கிறேன்.
முன்பு இந்த விருந்தோம்பலை குறித்து ஒரு கதை எப்போதோ சிறுவயதில் படித்தது நினைவுக்குள் வருகிறது.
ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வேறு உறவுகள் இரண்டொரு நாள் தங்கிச் செல்வதாக வரும் கடிதம் (அந்த காலத்தில் கடிதந்தானே. ) கண்டு, அவர்கள் வருவதையும், அவர்களுக்கு உபசாரங்கள் செய்வதை விரும்பாதவர்களாவும் , அவர்கள் கடிதம் போட்டதே வந்து சேராத மாதிரி காட்டிக் கொள்வதற்காவும் அவர்கள் வருவதற்குள் பக்கத்து ஊரிலிருக்கும் வேறு ஒரு உறவினர் வீட்டுக்கு இரண்டு நாட்கள் தங்கி வரலாமென அவசரமாக கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அங்கு அவர்களும், அன்றுதான் இதைப்போல் எண்ணம் கொண்டவர்களாக அருகிலிருக்கும் ஊரில் உள்ள வேறொரு சொந்த உறவின் வீட்டுக்கு கிளம்பி போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டொரு நாள் ஆகுமென கூறிச் சென்றதாகவும், பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று தங்க விருப்பம் கொண்ட அந்த உறவு யாரென இவர்கள் விசாரிக்கும் போது, பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த வரையில் ஊர், பெயர் எனச் சொன்னது தாங்களாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். வேறு வழியின்றி திரும்ப கிளம்பி தங்கள் வீட்டிற்கே சென்றால், அங்கு "இரு பக்க மேளமே" என எண்ணி அக்குடும்பத்தின் தலைவரும் தலைவியும் பேசிக் கொள்வதென்று கதை மிகவும் நகைச்சுவையாக இருக்கும். கதையின் பெயர் "விருந்து சாப்பாடு." என நினைக்கிறேன். யார் எழுதியது என்றெல்லாம் நினைவில்லை. எங்கள் அம்மா பள்ளி கோடை விடுமுறை நாட்களில், இது போன்ற நகைச்சுவை கதைகளை படித்து சொல்வார்கள். எழுத்தின் சுவாரஷ்யத்தில் நாங்களும் மறுபடி படிப்போம். அதனால் ஏதோ நினைவிலுள்ளது.
அதே போல் சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதை ஒன்றும் நினைவில் உள்ளது.
ஒரு புதிதாக திருமணமான மாப்பிள்ளை தன் மாமியார் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு விருந்தோம்பலுக்கு செல்வார். அவர் மனைவியும் தன்னையும், கணவரையும், விருந்துக்கு அழைக்க வந்த தன் தாய் தந்தையருடன் தங்கள் வீட்டுக்கு வரும்படி வறுப்புறுத்தி கணவரை அழைத்து விட்டு, தன் தாய் தந்தையாருடன் தன் அம்மா வீட்டிற்கு ஒரு வாரம் முன்பாகவே சென்றுள்ளார். எனவே இந்த மாப்பிள்ளை அடுத்த வாரத்தில் ஒருநாள், தன் அம்மாவிடம் தான் ஒரு வாரத்திற்கும், மேலாக அங்கு சென்று தங்கி விட்டு வரும் போது தன் மனைவியையும் அழைத்து வரப் போகிறேன் எனச் சொன்னதும், தாயின் முகத்தில் தெரிந்த கவலை கண்டு, "என்னம்மா. . நான் அங்கு சென்று கொஞ்ச நாட்கள் போல தங்குவது உனக்கு பிடிக்கவில்லையா? எனக் கேட்டதும், "மகனே, நீ உன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதில், எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் " விருந்தும், மருந்தும் மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் "என்ற (மூத்தோர் சொல்வாக்கு) பழமொழி உனக்கு தெரியாதா? அதை நினைத்தேன் கவலை வந்தது" என்றாள் தாய்.
"அம்மா. அவர்கள் வீட்டில் அனைவரும் வருந்தி, வருந்தி அழைக்கிறார்கள். நம்மை விட அதிகப்படியாக வயல் வரப்பும், கன்றும், மாடுமாக இருக்கும் அவர்களை விட, நாம் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்தான்.. ஆனாலும் அவர்கள் விரும்பிதானே இங்கு வந்து மணமுடித்தார்கள். எனவே அங்கு எனக்கென்றும் ராஜ உபசாரந்தான் நடக்கும். எனவே வீணாக கவலைப்படாதீர்கள்." என சமாதானபடுத்தியதும், அம்மா சொல்வாள்.
" மகனே, உன் நம்பிக்கைக்கு ரொம்ப சந்தோஷம். உனக்கு நல்ல உபசாரங்கள் செய்வார்கள் என நானும் நம்புகிறேன். நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு கிடைக்கும், பெருமைகள் என்னை மிகவும் சந்தோஷபடுத்துவதைப் போன்று உன் அவமானங்கள் என்னை காயமும் படுத்தும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். சரி.. போய் விட்டு வா.... ஆனால், அங்கு உனக்கு இலையில் என்று வெறும் சோறும், பருப்பில்லாத குழம்பும், அலட்சியமாக வந்து அமர்கிறதோ அன்று கிளம்பி வந்து விடு... அதற்கு மேல் அங்கிருந்தால் உனக்கும் சரி, எனக்கும் அங்கு மதிப்பில்லை.. " என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தாள்.
இவர் அங்கு கிளம்பி போனதிலிருந்து இரண்டொரு நாள் அந்த மாமியார் வீட்டில் உண்மையிலேயே ராஜ உபசாரந்தான். காலை விதவிதமான பலகாரங்களுடன், மதியம், இரவென தலைவாழை இலை போட்டு, சிறப்பான உணவுகள் பறிமாறியதுடன், வெள்ளி டம்ளரில் பாயாசமுமாக அமர்க்களமான உபசாரங்களுமாக திணறிப் போனார் நம் மாப்பிள்ளை.
மனைவியின் அன்பிலும், மாமனார். மாமியாரின் மரியாதையிலும், மனைவியின் உடன் பிறந்தவர்களின் அன்பான கேலி குறும்பு கலகலபேச்சுகளிலும் இவர் உலகத்தையே மறந்து விட்டார் என்று கூடச் சொல்லலாம்.( இதில் தன் அம்மாவின் நினைவு எங்கிருந்து வரும். அந்த நேரம் வானத்திலிருந்துதான் நீ உதித்தாய் என யாராவது சொன்னால் கூட ஆமென்று தலையாட்டி ஆமோதித்து விடுவார்.)
மேலும் வந்த இரு தினங்களில், இனிப்புகள், வடை பாயசத்தோடு என உணவுகள் தினுசு, தினுசாக இல்லையென்றாலும், வாய்க்கு ருசியாக பலவித காய்களோடும், கனிகளோடும் உபசாரமாக இருந்தது
அந்த நாட்களும் மறுநாளுக்கு நகர அன்று அதுவரை உணவருந்தும் வேளாவேளைக்கு மாமனாரோ, இல்லை, புடவை தலைப்பை இழுத்து போர்த்தியபடி மரியாதையுடன் வந்தழைக்கும் மாமியாரையோ தவிர்த்து அந்த ஐந்தாவது நாள், அவர்களின் கடைக்குட்டி பையன் வந்து மாப்பிள்ளை தங்கிருந்த அறையை தட்டி, "வாங்க.. தட்டு போட்டாச்சு. அப்பா சாப்பிட அழைக்கிறார்.. " என அழைத்ததும்தான் கொஞ்சம் அங்குள்ள இங்கிதம் புரிய ஆரம்பித்தது நம் மாப்பிள்ளைக்கு.
அது வரை தலைவாழை இலையிருந்த இடத்தில் ஒரு தட்டும் டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. தட்டில், வெறும் சோறும், பருப்பில்லாத ஒரு புளிக்குழம்பும் ஆங்காங்கே காய்ந்தும், சில இடங்களில் காயாதபடிக்கு ஒரு சுட்ட அப்பளமும் வந்தமர்ந்தவுடன் தன் அன்னையின் நினைவு லேசாக வந்தது நம் மாப்பிள்ளைக்கு.
அதுவரை அவர் முதலில் இலையில் கை வைத்து சாப்பிட ஆரம்பிப்பதற்காக பல தடவைகள் அவருக்காக காத்திருந்த மாமனார், "வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க.. என்றபடி, அன்று சாப்பிட்டு முடிந்தற்கான அறிகுறியுடன் எழுந்து கையலம்ப பின்பக்கம் போனார். அருகிலிருந்த மனைவி," அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அதான் இன்னைக்கு சமையல் சரியில்லை. இவ்வளவுதான்....இன்னைக்கு அம்மாவால் பண்ண முடிஞ்சது.. " என்றபடி சொன்னாலும், "இது பண்ணியதே பெரிய விஷயம்" என்ற அலட்சியம் வெளியில் கிளம்பி கொண்டிருந்த மாமியாரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
" அதன் பின் அன்று மாலையே வலுக்கட்டாயமாக, உடனடியாக தன்னுடன் தீடிரென கிளம்ப மறுத்து சில நாட்கள் கழித்து, தன் தந்தையுடன் வந்து சேருகிறேன்.. " என்ற தன் மனைவியை, மேலும் வறுப்புறுத்தாது அவள் விருப்பப்படி அவளை அங்கு விட்டு விட்டு தன் அம்மாவின் அறிவுரையை நினைத்து வியந்தபடிக்கு தன் ஊருக்கு அந்த அன்பான தாய்க்கு மகனாகிய அந்த மாப்பிள்ளை வந்து சேர்ந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ. .. ...?
இந்தக் கதை ஒரு மனிதரின் மான அவமானங்களை குறிப்பிடுவதற்காக எவராலோ கற்பனை செய்யப்பட்டு செவி வழி கதையாக சுற்றி வந்ததோ, அதுவும் தெரியாது. ஆனால், விருந்து என்பது செய்பவர்களுக்கும், சாப்பிடுவர்களுக்கும் பொதுவாக நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்று எடுபடாது என்பதை புரிய வைக்கிறது.
அது சரி...! இதற்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம் எனப் பார்த்தால், அந்த காலத்திலிருந்தே உடல் நிலை பாதிக்கும் போது, மூன்று வேளையோ, இல்லை அதிகப்படியாக மூன்று நாட்களுக்கோ மருந்தை கையாள சொல்லி, மருத்துவர்கள் தருவார்கள். அதற்குள் அந்த நோயும் அந்த மூன்று வேளை, இல்லை மூன்று நாட்கள் மருந்துக்கு கட்டுப்பட்டு, படிப்படியாக நம்மை விட்டு அகன்று விடும். விருந்தும் தினசரி ஒரேடியாக விதவிதமாக திகட்டும்படி சாப்பிட்டால், வயிறு ஒவ்வாமை வந்து விடும். அதனால், இந்த விருந்துக்கும், மருந்துக்கும் ஒரு முடிச்சு போட்டு அந்தக்கால பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்தனர். (அப்பாடா.. கடைசியில் பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி ஒருவழியாக விளக்கம் தந்து விட்டேன் என நினைக்கிறேன். :) )
இதில் சில உபாதைகளுக்கு சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலரை நலம் விசாரிக்கும் போது," ஏதோ இந்த மருந்துகளின் துணையால்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். " என்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேதோ உபாதைகள் வந்து படுத்திக் கொண்டேயிருக்கும். (சற்றேறக்குறைய என்னைப் போல என வைத்துக் கொள்ளுங்களேன். . ) எதற்கென்று மருத்துவரை அணுகி, எதற்கென்று மருந்து சாப்பிடுவது? அப்படியே போனாலும், நம் பாலாஜிக்கு விவேக் (கடவுள் அல்ல... ஆனால், அவரும் அப்படித்தான் சொல்வார். :)) சொல்வது போல் "ஏதாவது ஒண்டிரண்டு உபாதைகள் எனச் சொன்னால் பரவாயில்லை. உன் வியாதிகளுக்கு ஒரே ஒரு மருந்துதான் தீர்வு" எனச் சொல்லி விடுவார்களோ என கொஞ்சம் தயக்கமாக உள்ளது.... :) எப்படியோ எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமாக வாழ அவரவர்களுக்காவும், மற்றவர்களுக்காகவும் இடைவிடாது இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.🙏.
ஏதோ எனக்குள் தோன்றிய சாதாரண எண்ணங்களை பகிர்ந்துள்ளேன். இப்போதுள்ள இந்த காலகட்டத்தில் மேற்சொன்ன கதைகளின்படி எதுவும் நடவாது. நகைச்சுவையாக எழுதி பகிர்ந்ததை நகைச்சுவைக்காக படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.