Pages

Friday, December 31, 2021

வேண்டுதலும், வாழ்த்துகளும்.

என் அன்பான  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் நாளை உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் 2022ம் ஆண்டில் நம் இன்னல்கள் அகற்றி, எவ்வித தொந்தரவுகளற்ற வாழ்வை ஒவ்வொரு நாளும்  அந்த இறைவன் தந்திட வேண்டுமாய் பக்தியுடன் அவன் தாழ் பற்றி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.  

பொதுவாக வாழ்க்கை என்பது இரு தண்டவாள கம்பிகளில் பயணிக்கும் ஒரு ரயில் வண்டியை போன்றது. இதில் அத்தண்டவாள கம்பிகளைப் போல  இந்த இன்பம், துன்பம் இரண்டும் நம் வாழ்வில்  சமமாக வரலாம். இல்லை, ஒன்று சற்று மேலோங்கி, மற்றது கீழிறங்கி நம் மனதை சலனப்படுத்தியோ / சந்தோஷபடுத்தியோ/சங்கடப்படுத்தியோ/காயப்படுத்தியோ மறைந்திருந்து வேடிக்கைப் பார்க்கலாம். எதுவாக இருப்பினும் நம் பயணத்தில் கவனம் செலுத்தி, நம் பயணத்தின் பொறுப்பாளரிடம் (கடவுள்)  முழு நம்பிக்கை வைத்து  பயணத்தை தொடர்தோமானால், சுமூகமாக இந்தப் பயணம் தன் திசை நோக்கி நகரும். 

நமக்கென்று நிர்ணயத்ததை "அவன்" இந்த பயணத்தில் கண்டிப்பாக தரத்தான் வேண்டும். நாமும் அதன் விதிகளின்படி எவ்வித மாற்றங்களுமின்றி அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நாம்  ஒரு பிறவியாக இந்த உலகில் தோன்றும் முன்னே கண்களுக்கு தெரியாத எழுத்து வடிவிலிருக்கும் ஆரம்ப "விதி" களுக்கு முன் "அவனுக்கும்", நமக்குமாக எழுந்த ஒரு உடன்படிக்கை. இந்த ஒப்பந்தத்தை எவராலும் மீற முடியாது. ஆனால், ஒவ்வொருரின் மனதிலும்  பரமாத்மாவாக  ஜீவாத்மாவுடன்  அமர்ந்திருக்கும் "அவனிடம்" நம் நிறைகளை/குறைகளைச் சொல்லி சந்தோஷமோ/ வருத்தமோ அடையக் கூடிய உரிமையை மட்டும் "அவன்" பரிபூரமானமாக நமக்கு தந்துள்ளான்.அதன்படி யாவும் நலமாக, யாவரும் நலமாக இருக்க அந்த விதியின் துணையுடன், "அவன்" துணையும் நமக்கு  வேண்டுமென்ற  பிரார்த்தனையை மட்டும் தினமும்  வைத்துக் கொண்டேயிருக்கலாம். மற்றது "அவனருள்." "அவன்" விருப்பம்.  "அவன்" உரிமை.      

      சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... 

இது இன்ப, துன்பங்கள் கலந்த நம் வாழ்க்கை மாதிரி, இரு பொருட்கள் கலந்த, அனைவரும் அறிந்த ஒரு இனிப்புதான். அனைவரும் தத்தம் வீடுகளில் அடிக்கடிச்  செய்து உண்டு மகிழ்ந்த ஒரு பதார்த்தந்தான்.... ஆயினும், எப்போதோ நான் செய்த இந்த இனிப்பின் துணைபோடு, இப்போது வரும் வருடத்தை நாம் வரவேற்போமா? நன்றி. 🙏. 

மாலாடு.. 


உடைத்த கடலை அல்லது பொட்டுக்கடலை ஒரு கிண்ணம் (ஒன்றரை டம்ளர்) அளவு. 


ஜீனி  அதே டம்ளரில் முக்கால் அளவு. இதுவே போதும். ஆனால், இன்னமும் தித்திப்பாக வேண்டுமென்பவர்கள் ஒரு டம்ளர் நிறைய என்ற அளவோடு எடுத்துக் கொள்ளலாம். 


முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மிருதுவாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் பொடி செய்த ஏலக்காய் தூளையும் சேர்த்து பொடித்து கொள்ள வேண்டும். 


பின் ஜீனியையும் அதேப் போல் மிருதுவாக பொடித்துக் கொள்ளவும். 


இது நெய்யில் வறுத்து சேர்க்க முந்திரி பருப்பு. மற்றும் உலர்ந்த திராட்சை உடைத்தது. 


முதலில் கடாயை அடுப்பிலேற்றி, தணிந்த அளவு அடுப்பை பற்ற வைத்து, அந்த சூட்டில் கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். 


பின்  அத்துடன் உலர்ந்த திராட்சையையும்  போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். 


பின் அதே கடாயில் இரண்டு  குழி கரண்டி அளவு நெய்யை உருக வைத்து லேசாக புகை வரும்படி காய்ச்சிக் கொள்ளவும்.
 

பொடி செய்த உடைத்த கடலை, ஜீனியையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துப் போட்டு கலந்து வைத்து கொள்ளவும். அத்துடன் உருக வைத்த  நெய்யையும் வறுத்து வைத்திருக்கும் முந்திிரி,  திராட்சையையும் கலந்து கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருக்கும் போதே எல்லாவற்றையும் கைகளால் கலந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்


கை பொறுக்கும்  அளவிற்கு சூடு இருப்பதால் மாலாடு உருண்டை வடிவத்திற்கு அழகாக வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உருண்டை சரியான அமைப்பில் வரவில்லை எனத் தோன்றினால், அதற்கு மேலும் நெய் தேவைப்படும் பட்சத்தில் ஓரிரு ஸ்பூன் நெய்யை சூடாக்கி சேர்த்துக் கொள்ளலாம். 


சற்று அழுத்தம் கொடுத்து பிடிக்கும் போது உடையாமல் சேர்ந்து வரும். 


பிடித்து வைத்த ஒரு மாலாடு உருண்டை. 


இது மொத்த மாவையும்  அதே சூடோடு பிடித்து வைக்கப்பட்ட பல மாலாடு உருண்டைகள். 


நீங்களும் இந்த புத்தாண்டில் இனிமை சேர்க்க இனிப்பு அளவோடு இருக்கும் இந்த மாலாடு என்ற இனிப்பை எடுத்துக் கொள்ளலாமே ...! அன்புடன் எடுத்து சாப்பிட்டு பார்த்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். . 🙏.. 

35 comments:

  1. வாழ்வு முறையைப் பற்றி அழகாக சிந்தனையை கொடுத்தது தங்களது பகிர்வு அருமை வாழ்த்துகள் சகோ.

    மாலாடு இனிப்பு செய்முறை விளக்கம் அருமை.

    இனிய 2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வாழ்க்கை மாலாடு போல இனிப்பாக இருக்கட்டும்.  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.   என் பாஸும் மாலாடு செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /என் பாஸும் மாலாடு செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்/

      அப்படியா? மிக்க மகிழ்ச்சி. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கமலா ஹரிஹரன் மேடமே இனிப்பை குறைவாகச் சேர்த்திருக்கிறாரே (3/4 டம்ளர், 1 டம்ளருக்குப் பதில்). அப்போ மாலாடுபோல குறைவான இனிப்பா ஆகிடுமோ?

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      /கமலா ஹரிஹரன் மேடமே இனிப்பை குறைவாகச் சேர்த்திருக்கிறாரே/

      ஹா.ஹா.ஹா. இல்லை.. அந்த பொட்டுக்கடலையிலேயே நல்ல இனிப்பு இருப்பதால் இந்த அளவே போதும். நிறைய போட்டால் ஜீனியின் தித்திப்புத்தான் நாக்கில் முதலில் தெரியும். எப்படி போட்டாலும், இனிமை கூடுவதும்.குறைவதும் நம் கையில் இல்லை. ஆண்டவன் சித்தம். போன வருட பதிவானாலும் அன்புடன் வந்து தந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்

    மாலாடு அருமையாக செய்து உள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் பாணியில் தந்த திருக்குறள் உவமை சிறப்பானது. மாலாடு செய்முறை விளக்கம் நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கமலாக்கா இந்தப் புதுவருடம் எல்லோருக்கும் இனியதாக அமையட்டும்!

    எனக்கு மாலாடு ரொம்பப் பிடிக்கும். நீங்க ரொம்ப நன்றாகச் செய்திருக்கீங்க.

    நானும் இந்த அளவுதான் சர்க்கரை போடுவேன். அதிகமாப் போடுவதில்லை. திகட்டும்.

    முன்னாடி ஊர்ல இருக்கறப்ப நம் வீட்டில் பொரிகடலை சர்க்கரை ரெண்டையும் மெஷின்ல கொடுத்து அரைச்சு சலிச்சும் வைச்சுடுவாங்க. அப்பப்ப செய்யறது. அது போல ரவையை வறுத்து அதுவும் சர்க்கரையும் சேர்த்து, பாசிப்பருப்பு வறுத்து அது. கடலைப் பருப்பு வறுத்து அதையும் சர்க்கரையோடு சேர்த்து மெஷின்ல கொடுத்து பொடித்து ரெடியா வைச்சிருவாங்க. டக்குனு செஞ்சு கொடுக்க.

    உங்க லாடு பார்த்ததும் யும்மி...பார்சல் ப்ளீஸ்!

    என் மகன் இப்படியே சாப்பிட்டாலும் மகனுக்காக இந்த மாதிரி லட்டு செய்வதில் எல்லாம் மில்க் பௌடர் சேர்த்துச் செய்வதும் உண்டு. அந்தச் சுவையும் நன்றாக இருக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் காணவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆமாம் இந்த வருடம் அனைவருக்கும் இனியதாக அமையட்டும்.

      உண்மை.. குழந்தைகள் இருக்கும் வீட்டில், இந்த மாதிரி பொட்டுக்கடலை, ரவை, பாசிப்பருப்பு, கடலைப்பருப்புகளை ஜீனியுடன் சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டால், சத்துள்ள ஆகாரமாக சட்டென செய்து தந்து விடலாம்.

      உங்கள் மகனுக்கு நீங்கள் செய்து தரும் லாடு முறையும் நன்றாக உள்ளது. உங்கள் அருமையான கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மாநாடு இனிமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் இனிதான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      லாடு நன்றாக உள்ளதென்ற பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. எங்க ஊரில் திருமண நிச்சயதார்த்தத்தில் பெண் வீட்டில் கட்டாயமாய் மாலாடு வைக்கணும். இல்லைனா கேலி செய்வாங்க. ஆனால் புக்ககத்திலோ நேர் மாறாக அவங்க வைக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. உங்க பழக்கப்படி எந்த பக்ஷணமும் வைக்காதீங்க என்று சொல்லி விட்டார்கள். :))))) இப்போவும் தீபாவளிக்கெல்லாம் மாமியாரோ/நாத்தனார்களோ பண்ணுவதில்லை. நான் அடிக்கடி பண்ணு வேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் சில வீடுகளில் இந்த சம்பிரதாயத்தை விட மாட்டார்கள். அவங்களுக்கு பிடித்தமானததை வலியுறுத்துவார்கள். நானும் தீபாவளிக்கு அடிக்கடி இதைப் பண்ணுவேன். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்பவும் இதை அவர்களுக்காகத்தான் கொஞ்சமாக பண்ணினேன்.

      தங்களின் விபரமான கருத்துகளுக்கு மிக்க நன்றி.நான் உங்களுக்கெல்லாம் பதிலளிக்க சற்று தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. எங்க வீடுகள்ல பொட்டுக்கடலையை உபயோகிக்க மாட்டார்கள். நல்ல வறுத்த பயற்றம்பருப்புதான்

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      ஆம். சில வீடுகளில் இந்த லாடு அவ்வளவாக பிடிக்காது. பயற்றம்பருப்பு லாடும் நன்றாக இருக்கும். நெய் அதிகமாக இழுக்கும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. பயத்தம் லாடு தனி, மாலாடு தனி. மாலாடு கல்யாண நிச்சயதார்த்தத்தில் கட்டாயமாய் இடம் பெறும் ஒன்று. அந்தப் பவிஷு பயத்தம்லாடுக்குக் கிடையாது. :)

      Delete
    5. எங்கள் சமையலில் பொட்டுக்கடலை, சேமியா/ஜவ்வரிசி போன்றவை உபயோகித்தால் எல்லோரும் சாப்பிடமாட்டார்கள் (அது ஆசாரமில்லை என்பதால்)

      Delete
  9. வாயகன்ற பேசினில் மு.ப.தி.ப. போட்டு ஏலக்காய்ப் பவுடரும் சேர்த்துக் கொண்டு வறுத்து மாவாக்கிய பொட்டுக்கடலை மாவும் சர்க்கரைப் பொடியும் போட்டுக் கலந்ததும் சூடாக்கிய நெய்யைக் கொஞ்சம் பொங்கும் பதத்தில் (அதிகமானால் நெய் கருகிய வாசனை வரும்) மாவில் ஊற்றி நன்கு கலந்து வைத்து விட்டுப் பின்னர் மெதுவாகப் பிடிக்கலாம். சூடாகப் பிடிக்கணும்னு அவசியமே இல்லை. நான் தீபாவளி சமயம் முதல் முதல் மாலாடுக்கு மாவு கலந்து நெய்யெல்லாம் காய்ச்சி ஊற்றி மு.ப. தி.ப. போட்டு ஒரு தூக்கில் எடுத்து வைத்துவிடுவேன். பின்னர் சாவகாசமாகச் சாயங்காலமாய் உட்கார்ந்திருக்கும் நேரம் பிடிச்சு வைப்பேன். நன்றாகவே ஆறி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் மாலாடு குறித்தப் பக்குவம் விரிவாக நன்றாக உள்ளது. என்னை விட அழகாக கூறியிருக்கிறீர்கள். ஆமாம்.. நெய் நிறைய காய்ந்தால் கருகின வாசனை வந்து விடும். நான் கொஞ்சமாக பண்ணுவதால், உடனே பிடித்து விடுவேன். இரண்டாவதாக உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று நெய்யின் அளவும் அவ்வளவாக விட மாட்டேன்.கொஞ்சம் குறைத்துதான் விடுவேன்.அதனால் சூடு இருக்கும் போதே பிடித்து வைத்து விட்டால் நன்கு இறுகிக் கொண்டு விடும் என குறிப்பிட்டேன். நெய் தாராளமாக விட்டால் ஆறின பிறகும் பிடிக்கலாம். சமயத்தில் இதை வெறும் பொடியாக செய்து எல்லாமுமாக கலந்த பின் நெய்யை குறைத்து ஊற்றி வைத்துக் கொண்டு சத்துள்ள திண்பண்டமென குழந்தைகளுக்கு கொடுத்துள்ளேன்.

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. இந்த இனிக்கும் மாலாடைப் போல் உங்கள் வாழ்க்கையிலும் தித்திப்பு மேலோங்கி அனைவரும் மன மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மாலாடு எனக்கும் பிடிக்கும். நீங்கள் செய்தது நன்றாக வந்திருக்கிறது. புத்தாண்டு சிறப்பாக அமையட்டும்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. மாலாடு உங்களுக்கும் பிடித்தமானதா? மிக்க மகிழ்ச்சி. மாலாடு நன்றாக வந்திருப்பதாக கூறியதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்பவும் நன்றி சகோதரரே..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அன்பின் கமலமா,
    என்றும் நலமுடன் இருங்கள்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.என்றும் அமைதியும் ஆரோக்கியமும்

    நிறைந்து இருக்கட்டும்.
    மாலாடு எனக்கும் மிகப் பிடிக்கும்
    அருமையாகச் செய்திருக்கிறீர்கள். நல்ல வண்ணத்துடன் வந்திருக்கிறது.
    அன்பு வாழ்த்துகளும் நன்றியும் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மாலாடு உங்களுக்கும் பிடிக்குமென்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி சகோதரி. அவை நன்றாக வந்துள்ளன என்றதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கும், அருமையான கருத்துடன் கூடிய அன்பு மொழிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      நான் தங்களுக்கு தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும் சகோதரி. என்னவோ.. நேரமும் காலமும் பறக்கிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் அன்பான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. எனக்கு மிகவும் பிடித்தமானது.. எளிய செய்முறைக் குறிப்புகள்.. தெளிவான படங்களுடன் இனிய பதிவு..

    நலம் எங்கும் வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை குறித்த நல்லதொரு கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். தங்கள் ஊக்கமே என் ஆக்கத்திற்கு வேர். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. பொதுவா பயத்தமா லாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்கு எவ்வளவு நெய் விடணும் என்று தெரிந்தபிறகு வாங்குவதில்லை.

    பொட்டுக்கடலைமா லாடு நன்றாக வந்திருக்கிறது. இதுக்கு முந்திரி மட்டுமே போதும் திராட்சை வேண்டாம். நல்ல வாசனையா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பொதுவா பயத்தமா லாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்கு எவ்வளவு நெய் விடணும் என்று தெரிந்தபிறகு வாங்குவதில்லை./

      ஆம்.. அதற்கு, ரவா, அவல் லாடுகளுக்கு அதிகமாக நெய் விட்டு பிடிக்க வேண்டும். இல்லையென்றால் உதிர்ந்து விடும். இந்த பொட்டுக்கடலைக்குப் கொஞ்சமாக நெய் விட்டால் போதும். கொஞ்சம் சூடாக பிடித்தால் கெட்டியாகி விடும்.

      இதற்கு திராட்சை அவசியமில்லை. அன்று குழந்தைகளுக்காக பண்ணியதால் அதையும் சேர்த்தேன். நெய்யும் இதில் கொஞ்சமாகத்தான் சேர்த்துள்ளேன்.

      தங்களது கருத்துகளுக்கும், லாடு நன்றாக வந்துள்ளது என்ற கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete