Pages

Tuesday, November 30, 2021

விருந்தும், மருந்தும்.

 வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே.

அந்தக் காலத்தில் மருந்தும், விருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். .அதன் அர்த்தம் உண்மையில் உணர்ந்து சொல்லப் பட்டதுதான் போலும் . 

எதிர்பாராமலோ இல்லை, எதிர்பார்த்தோ, விருந்தாளிகள்  வீட்டிற்கு வந்து விட்டால்,((அது போல் எதிராளி அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சரி..இதே நிலைமைதான். .. ) அன்று முழுவதும் உபசாரம் காலை, மதியம், இரவு என தடபுடலாக இருக்கும். தனக்கு தெரிந்த சமையல் ஐட்டங்களை எல்லாம் வந்த விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டுகளை  எப்படியாவது பெற்று விட வேண்மென்ற  அவா அன்று முழுவதும் ஓய்வில்லாமல் வீட்டிலிருப்பவர்களை உழைக்கச் செய்து விடும். 

வரும் மறுநாளுடன் இரண்டொரு நாட்களில் கொஞ்சம் நார்மலாகி, வெளியில் எங்காவது கோவில், குளம், பூங்கா, சினிமா என்ற பயணங்களுடன் மாறுதலுக்கு ஒரு பொழுது அவர்களுக்கு (கவனிக்கவும்.. வந்து சந்தோஷிக்கும்  விருந்தினர்களுக்கு அல்ல....)  பிடித்தமான உணவகங்களுக்கு அழைத்துச் செல்லல், அங்கு அவர்களுக்கு (இங்கும் விருந்தாளிகளுக்கு அல்ல....) பிடித்தமான உணவை வாங்கி தருவது என பொழுது முடிந்து விடும். 

மூன்றாவது, நான்காவது நாளில், இல்லை ஐந்தாவது நாளில், காலை எழுந்திருக்கும் போதே வந்த விருந்தினரை விட வீட்டிலிருப்பவர்களுக்கு ஒரு சோம்பல்,  இனம் புரியாத ஒரு கடுப்பு இவைகள் அன்றைய சூரிய உதயத்துடன் அவர்களுக்குள்ளும் உதயமாகி விடும். இரண்டொரு நாள் உபசாரத்தின் பலனாக அன்று சிம்பிளான உணவே போதுமென அவர்களே முடிவு செய்து விடுவார்கள். 

மறுநாள் வந்தவர்கள் பெட்டியை கட்டும் போது, "இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு போகலாம்... அதற்குள் காலில் கஞ்சியை கொட்டிக் கொண்ட மாதிரி என்ன அவசரம்?  எப்போது வந்தாலும் இப்படித்தான் நீங்கள் அவசரப்பட்டு செல்கிறீர்கள்....அடுத்த முறை வரும் போது ஒரு வாரம் தங்குகிற மாதிரி வாருங்கள்.... இன்னும் நிறைய இடங்களுக்கு உங்களை சுற்றிப்பார்க்க அழைத்துப் போக வேண்டுமென நினைத்தோம் ...தெரியுமா? " என்ற உபசார வார்த்தைகளை  அள்ளி வீசுவார்கள். (அதுவும் அவர்கள் கிளம்புவதை உறுதி செய்து கொண்ட பின்தான்...:) )  ) வந்த விருந்தாளிகளுக்கும் தெரியும். இது வெறும் உதட்டளவில் இருந்து வரும்  வாய் வார்த்தைதான்... உள்ளத்திலிருந்து வரவில்லை என்பது.... அவர்களும் புன்னகையுடன்" அதற்கென்ன....! அடுத்த முறை வரும் போது தங்கி விட்டால் போச்சு....! நீங்களும்  எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் அரக்கப்பரக்கத்தான் கிளம்பி விடுகிறீர்கள். நிதானமாக தங்கிச் செல்லும்படி ஒரு முறையாவது வாருங்கள்." என்று அன்பொழுக மறுமொழி சொன்னாலும், உள்ளுக்குள்  எங்கே அந்த மாதிரி வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வும், எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தபடி இருக்கும். இவர்களுக்குள்ளும் அதே உணர்வு இருக்கையில் எப்படி அந்த மாதிரி செல்வார்கள். 

ஆக விருந்தோம்பல்கள் இந்த மாதிரியான எண்ணங்களுடன் நாட்களை கடத்தி விடும் என்பதை நிஜமாக என் அனுபவத்தின் மூலமாக நான் இங்கு சொல்லவில்லை. (நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.... :) ) இது விருந்தோம்பல்கள் செய்தவர்கள், விருந்தோம்பலில் திளைத்தவர்கள் என ஒவ்வொருவரும் கதையாகவோ/ கற்பனையாகவோ, எழுதி/ சொல்லி, கேள்விபட்டதை மட்டுந்தான் சொல்கிறேன். 

முன்பு  இந்த விருந்தோம்பலை குறித்து  ஒரு கதை எப்போதோ சிறுவயதில் படித்தது நினைவுக்குள்  வருகிறது. 

ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வேறு உறவுகள் இரண்டொரு நாள் தங்கிச் செல்வதாக வரும் கடிதம் (அந்த காலத்தில் கடிதந்தானே. )  கண்டு, அவர்கள் வருவதையும், அவர்களுக்கு உபசாரங்கள் செய்வதை விரும்பாதவர்களாவும் , அவர்கள் கடிதம் போட்டதே வந்து சேராத மாதிரி காட்டிக் கொள்வதற்காவும் அவர்கள் வருவதற்குள் பக்கத்து ஊரிலிருக்கும் வேறு ஒரு உறவினர் வீட்டுக்கு  இரண்டு நாட்கள் தங்கி வரலாமென அவசரமாக கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அங்கு அவர்களும், அன்றுதான் இதைப்போல் எண்ணம் கொண்டவர்களாக அருகிலிருக்கும் ஊரில் உள்ள  வேறொரு சொந்த உறவின் வீட்டுக்கு கிளம்பி போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டொரு நாள் ஆகுமென கூறிச் சென்றதாகவும், பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று தங்க விருப்பம் கொண்ட அந்த உறவு  யாரென இவர்கள் விசாரிக்கும் போது, பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கு   தெரிந்த வரையில் ஊர், பெயர் எனச் சொன்னது  தாங்களாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். வேறு வழியின்றி திரும்ப கிளம்பி தங்கள் வீட்டிற்கே சென்றால், அங்கு "இரு பக்க மேளமே" என எண்ணி அக்குடும்பத்தின் தலைவரும்  தலைவியும் பேசிக் கொள்வதென்று கதை  மிகவும் நகைச்சுவையாக இருக்கும். கதையின் பெயர் "விருந்து சாப்பாடு." என நினைக்கிறேன். யார் எழுதியது என்றெல்லாம் நினைவில்லை. எங்கள் அம்மா பள்ளி கோடை விடுமுறை நாட்களில், இது போன்ற நகைச்சுவை கதைகளை படித்து சொல்வார்கள். எழுத்தின் சுவாரஷ்யத்தில் நாங்களும் மறுபடி படிப்போம். அதனால் ஏதோ நினைவிலுள்ளது. 

அதே போல் சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதை ஒன்றும் நினைவில் உள்ளது. 

ஒரு புதிதாக திருமணமான மாப்பிள்ளை தன் மாமியார் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு விருந்தோம்பலுக்கு செல்வார். அவர் மனைவியும் தன்னையும், கணவரையும்,  விருந்துக்கு அழைக்க வந்த தன் தாய் தந்தையருடன் தங்கள் வீட்டுக்கு வரும்படி  வறுப்புறுத்தி கணவரை அழைத்து விட்டு, தன் தாய் தந்தையாருடன் தன் அம்மா வீட்டிற்கு ஒரு வாரம் முன்பாகவே சென்றுள்ளார். எனவே இந்த மாப்பிள்ளை அடுத்த வாரத்தில் ஒருநாள், தன் அம்மாவிடம் தான் ஒரு வாரத்திற்கும், மேலாக அங்கு சென்று தங்கி விட்டு வரும் போது தன் மனைவியையும் அழைத்து வரப் போகிறேன் எனச் சொன்னதும், தாயின் முகத்தில் தெரிந்த கவலை கண்டு, "என்னம்மா. . நான் அங்கு சென்று கொஞ்ச நாட்கள் போல தங்குவது உனக்கு பிடிக்கவில்லையா? எனக் கேட்டதும்,  "மகனே, நீ உன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதில், எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் " விருந்தும், மருந்தும் மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் "என்ற (மூத்தோர் சொல்வாக்கு) பழமொழி உனக்கு தெரியாதா? அதை நினைத்தேன் கவலை வந்தது" என்றாள் தாய். 

"அம்மா. அவர்கள் வீட்டில் அனைவரும் வருந்தி, வருந்தி அழைக்கிறார்கள். நம்மை விட அதிகப்படியாக வயல் வரப்பும், கன்றும், மாடுமாக இருக்கும் அவர்களை விட, நாம் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்தான்.. ஆனாலும் அவர்கள் விரும்பிதானே இங்கு வந்து மணமுடித்தார்கள். எனவே அங்கு எனக்கென்றும் ராஜ உபசாரந்தான் நடக்கும். எனவே வீணாக கவலைப்படாதீர்கள்." என சமாதானபடுத்தியதும், அம்மா சொல்வாள். 

" மகனே, உன் நம்பிக்கைக்கு ரொம்ப சந்தோஷம். உனக்கு நல்ல உபசாரங்கள் செய்வார்கள் என நானும் நம்புகிறேன். நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு கிடைக்கும், பெருமைகள் என்னை மிகவும் சந்தோஷபடுத்துவதைப் போன்று உன் அவமானங்கள் என்னை காயமும் படுத்தும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். சரி.. போய் விட்டு வா.... ஆனால், அங்கு உனக்கு இலையில் என்று வெறும் சோறும், பருப்பில்லாத குழம்பும், அலட்சியமாக வந்து  அமர்கிறதோ அன்று கிளம்பி வந்து விடு... அதற்கு மேல் அங்கிருந்தால்  உனக்கும்  சரி, எனக்கும் அங்கு மதிப்பில்லை.. " என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தாள். 

இவர் அங்கு கிளம்பி போனதிலிருந்து இரண்டொரு நாள் அந்த மாமியார் வீட்டில் உண்மையிலேயே ராஜ உபசாரந்தான். காலை விதவிதமான பலகாரங்களுடன், மதியம், இரவென தலைவாழை இலை போட்டு, சிறப்பான உணவுகள் பறிமாறியதுடன், வெள்ளி டம்ளரில் பாயாசமுமாக அமர்க்களமான உபசாரங்களுமாக திணறிப் போனார் நம் மாப்பிள்ளை. 

மனைவியின் அன்பிலும், மாமனார். மாமியாரின் மரியாதையிலும், மனைவியின் உடன் பிறந்தவர்களின்  அன்பான கேலி குறும்பு கலகலபேச்சுகளிலும் இவர் உலகத்தையே மறந்து விட்டார் என்று கூடச் சொல்லலாம்.( இதில் தன் அம்மாவின் நினைவு எங்கிருந்து வரும். அந்த நேரம் வானத்திலிருந்துதான் நீ உதித்தாய் என யாராவது சொன்னால் கூட ஆமென்று தலையாட்டி ஆமோதித்து விடுவார்.) 

மேலும் வந்த  இரு தினங்களில், இனிப்புகள், வடை பாயசத்தோடு என உணவுகள் தினுசு, தினுசாக இல்லையென்றாலும், வாய்க்கு ருசியாக பலவித காய்களோடும், கனிகளோடும் உபசாரமாக இருந்தது 

அந்த நாட்களும் மறுநாளுக்கு  நகர அன்று அதுவரை உணவருந்தும் வேளாவேளைக்கு மாமனாரோ, இல்லை, புடவை தலைப்பை இழுத்து போர்த்தியபடி மரியாதையுடன் வந்தழைக்கும் மாமியாரையோ தவிர்த்து அந்த ஐந்தாவது நாள், அவர்களின் கடைக்குட்டி பையன் வந்து மாப்பிள்ளை தங்கிருந்த அறையை தட்டி, "வாங்க.. தட்டு போட்டாச்சு. அப்பா சாப்பிட அழைக்கிறார்.. " என அழைத்ததும்தான் கொஞ்சம் அங்குள்ள இங்கிதம் புரிய ஆரம்பித்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அது வரை தலைவாழை இலையிருந்த இடத்தில் ஒரு தட்டும் டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. தட்டில், வெறும் சோறும், பருப்பில்லாத ஒரு புளிக்குழம்பும் ஆங்காங்கே காய்ந்தும், சில இடங்களில் காயாதபடிக்கு ஒரு சுட்ட அப்பளமும் வந்தமர்ந்தவுடன் தன் அன்னையின் நினைவு லேசாக வந்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அதுவரை அவர் முதலில் இலையில் கை வைத்து சாப்பிட ஆரம்பிப்பதற்காக பல தடவைகள் அவருக்காக காத்திருந்த மாமனார், "வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க.. என்றபடி, அன்று சாப்பிட்டு முடிந்தற்கான அறிகுறியுடன் எழுந்து கையலம்ப பின்பக்கம்  போனார். அருகிலிருந்த மனைவி," அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அதான் இன்னைக்கு சமையல் சரியில்லை. இவ்வளவுதான்....இன்னைக்கு அம்மாவால் பண்ண முடிஞ்சது.. " என்றபடி சொன்னாலும், "இது பண்ணியதே பெரிய விஷயம்" என்ற  அலட்சியம் வெளியில் கிளம்பி கொண்டிருந்த மாமியாரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 

" அதன் பின் அன்று மாலையே  வலுக்கட்டாயமாக, உடனடியாக தன்னுடன் தீடிரென கிளம்ப மறுத்து சில நாட்கள் கழித்து, தன் தந்தையுடன் வந்து சேருகிறேன்.. " என்ற தன் மனைவியை, மேலும் வறுப்புறுத்தாது அவள் விருப்பப்படி அவளை அங்கு விட்டு விட்டு தன் அம்மாவின் அறிவுரையை நினைத்து வியந்தபடிக்கு தன் ஊருக்கு அந்த அன்பான தாய்க்கு மகனாகிய அந்த மாப்பிள்ளை வந்து சேர்ந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ. .. ...? 

இந்தக் கதை ஒரு மனிதரின் மான அவமானங்களை குறிப்பிடுவதற்காக எவராலோ கற்பனை செய்யப்பட்டு செவி வழி  கதையாக சுற்றி வந்ததோ, அதுவும் தெரியாது. ஆனால், விருந்து என்பது செய்பவர்களுக்கும், சாப்பிடுவர்களுக்கும் பொதுவாக நீண்ட நாட்களுக்கு நிலைத்து  நின்று எடுபடாது என்பதை புரிய வைக்கிறது. 

அது சரி...! இதற்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம் எனப் பார்த்தால், அந்த காலத்திலிருந்தே உடல் நிலை பாதிக்கும் போது, மூன்று வேளையோ, இல்லை அதிகப்படியாக மூன்று நாட்களுக்கோ மருந்தை கையாள சொல்லி, மருத்துவர்கள் தருவார்கள். அதற்குள் அந்த நோயும் அந்த மூன்று வேளை, இல்லை மூன்று நாட்கள் மருந்துக்கு கட்டுப்பட்டு, படிப்படியாக நம்மை விட்டு அகன்று விடும். விருந்தும் தினசரி ஒரேடியாக விதவிதமாக திகட்டும்படி சாப்பிட்டால், வயிறு ஒவ்வாமை வந்து விடும். அதனால், இந்த விருந்துக்கும், மருந்துக்கும் ஒரு முடிச்சு போட்டு அந்தக்கால பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்தனர். (அப்பாடா.. கடைசியில் பதிவின் தலைப்புக்கு  ஏற்றபடி ஒருவழியாக விளக்கம் தந்து விட்டேன் என நினைக்கிறேன். :) ) 

இதில் சில உபாதைகளுக்கு சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலரை நலம் விசாரிக்கும் போது," ஏதோ இந்த மருந்துகளின் துணையால்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். " என்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேதோ உபாதைகள் வந்து படுத்திக் கொண்டேயிருக்கும். (சற்றேறக்குறைய என்னைப் போல என வைத்துக் கொள்ளுங்களேன். . ) எதற்கென்று மருத்துவரை அணுகி, எதற்கென்று மருந்து சாப்பிடுவது? அப்படியே போனாலும், நம் பாலாஜிக்கு  விவேக் (கடவுள் அல்ல... ஆனால், அவரும் அப்படித்தான் சொல்வார். :)) சொல்வது போல் "ஏதாவது ஒண்டிரண்டு உபாதைகள் எனச் சொன்னால் பரவாயில்லை. உன் வியாதிகளுக்கு ஒரே ஒரு மருந்துதான்  தீர்வு" எனச் சொல்லி விடுவார்களோ என கொஞ்சம் தயக்கமாக உள்ளது.... :) எப்படியோ எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமாக வாழ அவரவர்களுக்காவும், மற்றவர்களுக்காகவும் இடைவிடாது இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.🙏.

ஏதோ எனக்குள் தோன்றிய சாதாரண எண்ணங்களை பகிர்ந்துள்ளேன்.  இப்போதுள்ள இந்த காலகட்டத்தில் மேற்சொன்ன கதைகளின்படி எதுவும் நடவாது. நகைச்சுவையாக எழுதி பகிர்ந்ததை நகைச்சுவைக்காக படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

70 comments:

  1. சிரமங்களையும் நகைச்சுவையாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள்.  ரசித்தேன்.  அந்தத்தாய் பருப்பு இல்லாத சோறு என்று சொல்வதாக அல்லாமல், தட்டில் உன் முகம் தெரியும் அன்று கிளம்பி வந்து விடு என்று சொன்னதாக படித்த நினைவு.    இலையிலிருந்து தட்டுக்கு மாறி, நீராகாரம் வந்தததும் மாப்பிள்ளை கிளம்பி விடுவார்!  இது போன்ற கதைகளை ராணிமுத்துவில் பக்கங்களை நிரப்பும் கதைகளாகப் படித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டில் முகம் தெரிந்தால் கஞ்சி என்று அர்த்தம்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. தட்டில் முகம் தெரிந்ததும் கிளம்பி வந்து விடு.. அது போல் தட்டில் நீராகாரம் வந்ததும்... இப்படியும் இருக்கலாம். நீங்களனைவரும் ஏற்கனவே இக்கதைகளை படித்திருப்பீர்கள் என நினைத்தேன். நான் எப்போதோ கேட்ட இந்தக் கதையை சற்று கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன் போலும்..இது அந்த காலத்து அறிவுரை கதைகள். இப்போது அனைவரும் சரிசமமாக பார்க்கிறார்கள்..ஆனாலும், இப்போதும் மரியாதையை எதிர்பார்க்கும் இப்படிபட்ட உறவுகள் அதே பழக்கங்களை விதைத்தபடி இருக்கின்றனர். அவர்களை மாற்றுவது சுலபமில்லை. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் கில்லர்ஜி சகோதரரே.

      /சாப்பாட்டில் முகம் தெரிந்தால் கஞ்சி என்று அர்த்தம்./

      உண்மைதான்.. வந்த முதல் நாளைக்கெல்லாம் வைத்து தந்த பாயாசம் நான்காவது நாளில் வெறும் கஞ்சியானதில் வியப்பில்லையே .. வான்நிலவே தேயும் போது, மனித மனங்களுக்கும் தேய்வு இருக்காதா? தகவலுக்கு நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நானும் உங்களைப்போல மருத்துவரைச் சென்று பார்க்காமலே தள்ளி வருகிறேன்.  சில உபாதைகள் படுத்துகின்றன.  எனினும் தள்ளிப் போட்டு வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. ஏன் அப்படி.? நீங்கள் இந்த காலகட்டத்திலும், தினமும் அலுவலகம் சென்று வர இருப்பவர்கள். உரிய மருத்துவம் பார்க்க வேண்டாமா? எங்கள் வீட்டில் தினமும் இதே அறிவுரைதான் பெற்றுக் கொண்டேயிருக்கிறேன்.எனக்குத்தான் மருத்துவரை சென்று பார்க்க தயக்கம். ஆனால், எனக்கும் இது போல் ஒரு துணை இருக்கிறது என்ற செய்தி இப்போதைக்கு என் மனபலத்தை கூட்டுகிறது.. :) நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஆக விருந்தோம்பல்கள் இந்த மாதிரியான எண்ணங்களுடன் நாட்களை கடத்தி விடும் என்பதை நிஜமாக என் அனுபவத்தின் மூலமாக நான் இங்கு சொல்லவில்லை. (நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.... :) ) இது விருந்தோம்பல்கள் செய்தவர்கள், விருந்தோம்பலில் திளைத்தவர்கள் என ஒவ்வொருவரும் கதையாகவோ/ கற்பனையாகவோ, எழுதி/ சொல்லி, கேள்விபட்டதை மட்டுந்தான் சொல்கிறேன். ////////



    நிறைய இந்த வகையில் பட்டாச்சு.
    ஆனால் எங்கள் விருந்தாளிகள்
    ஐந்து நாட்களில் கிளம்ப மாட்டார்கள். மினிமம்
    ஆறு மாதம். :)
    அன்பின் கமலாமா நலமுடன் இருங்கள்.
    மீண்டும் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிம்மாவின் பின்னூட்டங்கள் பலவித எண்ணங்களை வரவழைக்குது.

      என் பெரியப்பா என்னிடம் சொன்ன, அன்பு/பாசம் என்பது மேலிருந்து கீழே பாயும் அருவி. அது எப்போதுமே மேல் நோக்கிப் பாயாது-அபூர்வ விதிவிலக்குகள் உண்டு, என்பதை நினைக்க வைக்கிறது. என் பையனுக்கு அவன் மகன் மீது இருக்கும் அன்பு என்னுடம் பிற்காலத்தில் இருக்காது என்பது நிதர்சனம்.

      மற்ற வீடுகளில் கேள்விப்படும்/பார்க்கும் அனுபவத்தை வல்லிம்மா நிறைய எழுதியிருக்கிறார்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் நலமாக உள்ளீர்களா? கண்கள் பிரச்சனைக்கு மருத்துவரிடம் சென்று வந்தீர்களா ? பழையபடி நீங்கள் இயல்பு நிலைக்கு வர இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      /எங்கள் விருந்தாளிகள்
      ஐந்து நாட்களில் கிளம்ப மாட்டார்கள். மினிமம்
      ஆறு மாதம். :)/

      ஆமாம். எங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருந்திருக்கிறது. ஆனாலும் இது இல்லற தர்மமாயிற்றே.. பதிவில் அதை பெரிதாக்கி காட்ட வேண்டாமென கூறவில்லை. பொறுமையுடன் விருந்தோம்பல்கள் செய்து நானும் நிறைய களைத்திருக்கிறேன். நல்ல செயலுக்கு இறைவன் நல்லதை தருவான் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது. உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இதில் சில உபாதைகளுக்கு சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலரை நலம் விசாரிக்கும் போது," ஏதோ இந்த மருந்துகளின் துணையால்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். " என்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேதோ உபாதைகள் வந்து படுத்திக் கொண்டேயிருக்கும். (சற்றேறக்குறைய என்னைப் போல என வைத்துக் கொள்ளுங்களேன். . )"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


    இதுதான் இப்போது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

    இறைவன் என்னை விடுவிப்பான் என்றே நினைக்கிறேன்.

    மாப்பிள்ளை கதை அறிந்ததே. பாவம்:(
    இப்போது இதெல்லாம் கிடையாது.

    எப்பொழுதுமே விழிப்புணர்வுடன் இருந்தால் நலமே.
    அருமையான பதிவுமா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இறைவன் நல்லபடியாக உங்கள் உடல் நிலை கோளாறுகளை குணமாக்கி விடுவான். கவலைப்படாதீர்கள். நானும் தாங்கள் முற்றிலும் நலமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      மாப்பிள்ளை கதை அனைவரும் அறிந்ததுதான் என நினைத்தேன். நாமனைவரும் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள்தானே.. இப்போது இத்தகைய நிலைமைகள் வராது.காலங்கள் மாறி விட்டது. நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நல்ல சுவையாக எழுதும் கலை இயல்பாகவே உங்களுக்கு அமைந்துள்ளது. இதிலும் சுவைபடச் சொல்லி இருக்கீங்க. ஆனால் இந்த விருந்தோம்பலில் நானும் நிறையப் பட்டிருக்கேன். வல்லி சொன்னாப்போல் எங்க வீட்டுக்கு வருவதெல்லாம் தொடர் விருந்தாளிகள். முன்னெல்லாம் கல்யாணம் ஆன புதுசில் சொந்தக்கார பிரம்மச்சாரி இளைஞர்களெல்லாம் எங்க வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்துட்டுத் திங்களன்று காலையில் தான் போவாங்க. வெளியூர் உறவுக்காரங்க கேட்கவே வேண்டாம். அவங்க வரும் தகவலைக் கடிதம் மூலம் சொல்வதோடு அல்லாமல் திரும்பிப் போகப் பயணச்சீட்டையும் எங்களை விட்டே வாங்கி வைக்கச் சொல்லுவாங்க. குறைந்தது ஒரு மாதமாகவேனும் இருக்கும். திரும்பிச் செல்கையில் பயணச் சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தை ஊருக்குப் போய் மணி ஆர்டர் பண்ணுவதாகச் சொல்வார்கள். நம்ம நிலைமை புரிஞ்சுக்காதவங்க. ஆனால் ஊருக்குப் போனதும் அவங்களுக்கு உள்ள பிரச்னைகளில் மறுபடி அடுத்த வருடம் வரை நம்ம நினைவே அவங்களுக்கு வராது. தொடர்கதை தான். இம்மாதிரி அனுபவங்களை எழுதினால் ஆச்சரியமாக இருக்கும். இப்படியும் மனிதர்கள் உண்டா என!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எங்க வீட்டுக்கு வருவதெல்லாம் தொடர் விருந்தாளிகள். முன்னெல்லாம் கல்யாணம் ஆன புதுசில் சொந்தக்கார பிரம்மச்சாரி இளைஞர்களெல்லாம் எங்க வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்துட்டுத் திங்களன்று காலையில் தான் போவாங்க/

      ஆகா. என்னவொரு ஒற்றுமை நமக்குள். மயிலையில், எங்களுக்கு திருமணமான புதிதில், அந்த ஒரு ரூம், ஒன்றரை ரூம் வாடகை வீட்டின் எங்கள் விருந்தோம்பலை இப்போது என் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள். (மறந்தாலதானே நினைவுக்குள் வருவதற்கு?அது அழியாமலே மனதுக்குள் பத்திரமாக இருக்கிறது. )

      அப்போது உடம்பில் நல்ல தெம்பிருந்தது. யார் உதவியையும் நாடாமல், வந்தவர்களின் முகம் சுளிக்காது பார்த்து.பார்த்து செய்து போடுகிற பலம் இருந்தது. அது எங்கள் குழந்தைகள் கல்லூரி காலம் வரை குலையாமலே இருந்தது அதன் பின்னும் குழந்தைகளின் அலுவலக நண்பர்களை உபசரிக்கும் மனத்தெம்பும் இருந்தது. அவர்கள் திருமணங்கள் முடிந்தவுடன் சம்பந்தி உபசாரங்களிலும் குறை வைக்கவில்லை. இப்போதுதான் எனக்கு படுத்துகிறது. ஆனாலும் மனதில் தைரியம் ஏற்படுத்தி கொண்டு வருகிறவர்களை உபசாரங்கள் செய்கிறேன்.

      /வெளியூர் உறவுக்காரங்க கேட்கவே வேண்டாம். அவங்க வரும் தகவலைக் கடிதம் மூலம் சொல்வதோடு அல்லாமல் திரும்பிப் போகப் பயணச்சீட்டையும் எங்களை விட்டே வாங்கி வைக்கச் சொல்லுவாங்க. குறைந்தது ஒரு மாதமாகவேனும் இருக்கும். திரும்பிச் செல்கையில் பயணச் சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தை ஊருக்குப் போய் மணி ஆர்டர் பண்ணுவதாகச் சொல்வார்கள்./

      இது கொஞ்சம் அதிகப்படிதான். நெருங்கிய சொந்தமென்றால் (நாத்தனார்,மைத்துனர்) இந்த உதவியை பண்ணலாம். ஆனால் ஒன்று, இரண்டு விட்ட உறவுகள் இப்படி உத்தரவிடும் போது எப்படித்தான் சமாளித்தீர்களோ? எத்தனை செய்தாலும், நம்மை மறந்து விடும் உறவுகள் வேதனை தருபவைதான். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நம் நேரம் என நம்மை சமாதானமாக்கி கொள்ள வேண்டியதுதான்.

      ஒவ்வொருவருக்கும் ஒரு வகையாக பிரச்சனைகள். விருந்தோம்பல்கள் குறித்து உங்கள் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இதுவே நாம் அவங்க வீடுகளுக்குப் போனால் ஓரிரு நாட்கள் தங்க முடிந்தாலே பெரிய விஷயம். போகும்போதே உடனே கிளம்பும் உணர்வை ஏற்படுத்துவார்கள். ஆரம்பத்திலிருந்தே உணவு பரிமாறுவதில் காட்டப்படும் அலட்சியம் நம்மைத் தானாகவே உடனடியாகக் கிளம்பவும் வைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. விருந்தும் மருந்தும் மேணு நாள் என, விருந்தினர்களைத் தெய்வமாக்க் கருதும் காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

      இந்தக் காலத்தில் அவர் இருந்திருந்தால், விருந்து மூணு மணி நேரம்தான், அதிலும் இரவு ப்ரைம் நேரத்தில்-தொலைக்காட்சித் தொடரின்போது போக்க்கூடாது என எழுதியிருப்பாரோ

      Delete
    2. இப்போதெல்லாம் யார் வீட்டிலும் போய்த் தங்கும்படியான சூழ்நிலை ஏற்படவே இல்லை. அதிலும் கடந்த இரு வருடங்களாகக்கொரோனா! இப்போதோ கேட்கவே வேண்டாம். புதுவகைக் கொரோனா! எங்கே போவது?

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /இதுவே நாம் அவங்க வீடுகளுக்குப் போனால் ஓரிரு நாட்கள் தங்க முடிந்தாலே பெரிய விஷயம். போகும்போதே உடனே கிளம்பும் உணர்வை ஏற்படுத்துவார்கள். ஆரம்பத்திலிருந்தே உணவு பரிமாறுவதில் காட்டப்படும் அலட்சியம் நம்மைத் தானாகவே உடனடியாகக் கிளம்பவும் வைக்கும்./

      உண்மைதான். அந்த சமயங்களில் உங்களுக்கு எவ்வளவு கஸ்டமாகத்தான் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் எப்போதுமே போகாத ஒரு உறவு வீட்டிற்கு அதிசயமாக சென்று,அதை அவர்கள் விரும்பாதவர்களாக அப்போது வெளியே சென்று எங்கள் மனதை கஸ்டபடுத்திய சம்பவம் மறக்க முடியாத ஒன்று. இத்தனைக்கும் அவர்கள் வரும் போது நாங்கள் நன்றாக உபசாரங்கள் செய்திருந்தோம். என்ன செய்வது? பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டியதுதானே இல்லற தர்மம். தங்கள் அனுபவ கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. நெருங்கிய ரத்த சொந்தங்கள் கூட நம் வீட்டில் அதிகாரம் செய்து இருந்துவிட்டு அவங்க வீட்டுக்குப் போனால் அதே அதிகாரம் நம் மீது திரும்பும். இந்த அனுபவம் எனக்கு வாழ்நாள் முழுதும் இருந்து வருகிறது. :))))))

      Delete
    5. வணக்கம் சகோதரி

      இப்படி விட்டுத் தந்து போவது சற்று கஸ்டந்தான்.. இருந்தாலும் நாம் அம்மா, அப்பா சொல் கேட்டு வளர்ந்த முறைகள் அவ்வாறு இருக்கச் செய்து விட்டன. அதே பழக்கத்தில் இப்போதைய இளைய தலைமுறைகளுக்கும் நாம்தான் விட்டுத் தருகிறோம். என்ன செய்வது? அந்தப் பழக்கங்களுக்கு நம்மை என்றும் விட்டுத்தர மனம் வரவில்லை.:) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. உங்கள் உடல் நலனை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      உங்கள் அக்கறையான பதில்களும், விசாரிப்புகளும், பரிவும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நலனை பார்த்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. எப்போது இலையில் உன் முகம் தெரிகிறதோ அப்போது கிளம்பிவிடு என்றுதான் படித்திருக்கிறேன். அதாவது சாதமும் ரசமும் மட்டும் போட்டாங்கன்னா... ஹாஹ

    நீங்கள் எழுதியிருப்பது உண்மையான விஷயம். விருந்தை விடுங்கள்... யாரேனும் வீட்டுக்கு வந்தால் ஒரு சில மணிநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்புறம் அவரவர்கள் பாட்டை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

    என் பெரியப்பாவின் குணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவருடைய கான்சப்ட்.. யாரும் விருந்தினர்கள் அல்ல. யார் வந்தாலும் வீட்டின் சமையலோ நடைமுறையோ மாறாது. விசேஷ நாட்களில் பாயாசம் என்றால் அன்றுதான் இருக்கும். வரும் பெண்கள் ;ladies..(அவருக்கு குழந்தைகள் கிடையாது) சமையலறையில் கூடமாட ஒத்தாசை அல்லது வீட்டுவேலை செய்வார்கள் (அதுதான் முறை). அதனால யார் வந்தாலும் யாருக்கும் தொந்தரவு கிடையாது. எளிமையான உணவு என்பதால் பெரிய சிரம்ம் கிடையாது. அவருடைய நண்பர் ஆனால் ஊரின் பணக்கார்ர்.. அப்போதெல்லாம் சேவை (இடியாப்பம்) பண்ணுவது அபூர்வம். அப்படிப் பண்ணும்கோது அந்த நண்பர் சாப்பிட வருகிறேன் என வருவார். நீதான் அப்பளாம் பொரிக்க மாட்டாயே என அவருக்கு அப்பளாம் பொரித்து எடுத்து வருவார். (அவர்களோடது நெருங்கிய நட்பு. இதைப்பற்றி பின்னொருநாள் எழுதறேன்)

    ReplyDelete
    Replies
    1. நெல்லை அதேதான் உங்கள் பெரியப்பாவின் கான்செப்ட்தான் என் தங்கைகள் சில உறவினர்கள் வீட்டிலும். நாங்களும் சகஜமாக வீட்டில் வேலைகளைப் பங்கிட்டுச் செய்வதுண்டு. சிம்பிள் சாப்பாடுதான். நானும் உள்ளே புகுந்துவிடுவதுண்டு.

      விருந்தினர் என்று நினைத்தால்தான் சங்கடம். வீட்டிற்கு வருபவர்களும் எதிர்பார்ப்புடன் வந்தால் சங்கடம்.

      //நீதான் அப்பளாம் பொரிக்க மாட்டாயே என அவருக்கு அப்பளாம் பொரித்து எடுத்து வருவார்.//

      இதே போன்றுதான் என் உறவுகள் நட்புகள் வட்டத்திலும். புரிதல் இருந்தால் உறவும் நட்பும் நிலைக்கும். எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தைத் தரும். சகஜமாக இருந்துவிட்டால் சங்கடமே இல்லை.

      கீதா

      Delete
    2. அதெல்லாம் சரி கீதா ரங்கன்(க்கா). உங்க வீட்டிற்கு கேக் சாப்பிட என்னைக் கூப்பிட்டு, நான் சீனி எடுத்து வருவேன் என்ற எதிர்பார்ப்பில் கேக்கிற்கு ஜீனி போடாமல் இருந்துடாதீங்க. இல்லை, நான் வந்து அவனில் வைத்து எடுத்துக்கொள்வேன் என்றும் நினைச்சுடாதீங்க

      Delete
    3. நெல்லை, ஆமாம், உங்க பெரியப்பா சொல்லுவது போல் தான் எங்க அப்பாவும். இன்னிக்கு வீட்டில் சுண்டைக்காய் வற்றல் குழம்பு+அரைக்கீரை மசியல்+குட்ரசம் எனில் வரவங்க எல்லோருக்கும் அது தான் அன்னிக்கு. சாப்பாடு இல்லைனு எல்லாம் சொன்னதில்லை. அதுக்காகப் பாயசம், பச்சடி, கோசுமலி எனப் பண்ணிப் பரிமாறியதும் இல்லை. மாமியார் வீட்டில் நேர்மாறாக யார் எத்தனை முறை வீட்டுக்கு வந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் பாயசம், பச்சடி, ஒரு கறி, கூட்டு, அப்பளம்(பொரித்து) கட்டாயம் உண்டு. அதே போல் எப்போவுமே சாம்பார் தான். ரசமும் உண்டு என்றாலும் ரொம்பச் சின்னப் பாத்திரத்தில் எனக்கும், நம்ம குடும்பத்துக்கும் மட்டும்னு வைப்பாங்க. ஆனால் எப்போவுமே கருவிலியில் இருந்தவரை அவங்களும் சரி, விருந்தினருக்கும் சரி தடபுடல் சாப்பாடு தான். சென்னைக்கு நிரந்தரமாக வந்த பின்னர் நான் மாற்றி மாற்றிச் சமைப்பது அவங்களுக்குப்பழக சில வருடங்கள் ஆகி விட்டன. :)))))

      Delete
    4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எப்போது இலையில் உன் முகம் தெரிகிறதோ அப்போது கிளம்பிவிடு என்றுதான் படித்திருக்கிறேன். அதாவது சாதமும் ரசமும் மட்டும் போட்டாங்கன்னா... ஹாஹ/

      ஹா.ஹா.ஹா. ஓ.. ரசசாதத்திலும் முகம் பார்க்கலாமா? அப்படியும் சொல்லியிருக்கலாம்.நான் ஏதோ என் கற்பனைக்கேற்றவாறு சொல்லியுள்ளேன். ஆக இது அனைவரும் படித்த கதையாக இருந்தது கண்டு மகிழ்ந்தேன்.

      /யாரேனும் வீட்டுக்கு வந்தால் ஒரு சில மணிநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்புறம் அவரவர்கள் பாட்டை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்./

      உண்மைதான்.. சமீப காலமாக அப்படி ஆகி விட்டது. முன்பெல்லாம் உறவினர்களை ரயிலடியிலோ,பேருந்து நிலையத்திற்கோ சென்று அழைத்து வருவதிலிருந்து அவர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் வரை நாள் முழுவதும் பேசி களித்திருக்கிறோம். விரும்பத்தகாத பேச்சுக்கள் என அவர்கள் கிளம்பி செல்லும் வரை வந்ததில்லை. இப்போது சிலவிடங்களில் நீங்கள் சொல்வது போல் இருக்கிறது.

      உங்கள் பெரியப்பா வீட்டின் வழிமுறைகளும் எங்கும் உள்ளது. அது நல்ல பண்பான பழக்கம் ஆனால், கூடமாட ஒத்தாசையாக சமையல் அறைக்குள் வரும் விருந்தினர்கள் வந்தால் விடலாம்.கிச்சன் பக்கம் வராமல் ஹாலிலேயே வீட்டின் மற்ற உறவுகளுடன் பேசிக் கொண்டிருப்பவர்களை அதற்கென அழைப்பது தர்மமல்லவே... சில வீடுகளில் அப்படியும் தாட்சண்யம் பார்க்காமல், இதைச் செய்கிறாயா.. அதைச் செய்கிறாயா.. என வந்தவர்களை வேலை வாங்கி விடுவார்கள். சிலருக்கு அது பிடிக்கும். சிலருக்கு அது எரிச்சலை தரும். அவர்கள் முக பாவத்திலேயே கண்டு பிடித்து விடலாம். மனமொப்பி வந்தவர்களும். வீட்டிலிருப்வர்களும் கலந்து பேதமில்லாமல் பழகும் உறவுகளும் உள்ளார்கள். மனிதர்கள் அனைவருமே நம் கை விரல்களைப் போல் பல விதங்கள்தானே..

      அதே போல் தீடிரென வரும் விருந்தாளிகளுக்கு அன்றைய தினம் வீட்டில் என்ன சமையலோ அதைத்தானே பறிமாற முடியும். அன்றைய தினம் செய்த காய்கள் போதவில்லையென்றால், ஒரு அப்பளத்தை பறிமாற எக்ஸ்ட்ராவாக பொரிப்பார்கள். மறுநாளில்தான் சமையல் தானாகவே சிறிது வித்தியாசப்படும்...

      சேவைக்கு மோர் குழம்பு பொருத்தம் இல்லையோ... எங்கள் புகுந்த வீட்டில் எப்போதும் மோர் குழம்பு தான். அம்மா வீட்டில் இனிப்பும், காரமுமாக ஐந்தாறு வகை தாளிப்புகளுடன் இருக்கும்.அதற்கு அப்பளம் பொருந்தி வரும். எனக்கு இங்கு வந்த பின் சேவைக்கு மோர் குழம்பு பழகி விட்டது.

      உங்கள் பெரியப்பா அவர் நண்பருடனான சேவை அனுபவம் குறித்து எழுதுங்கள் படிக்க ஆவலாக உள்ளேன். உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. சேவைக்கு மோர்க்குழம்புதான் செய்வார்கள். ஆனால் சிலருக்கு அதன் கூட பொரித்த அப்பளாம் வேணும்.

      எனக்கு புளிசேரி, பருப்புக் குழம்பு ஆகியவை சேவைக்குப் பிடிக்கும். அடுத்த வேளைக்கு எலுமிச்சை சேவையாக சாப்பிடுவேன்.

      Delete
    6. என் தம்பி மனைவி சேவைக்கு (கல்லிடைக்குறிச்சி சொந்த ஊர்) மோர்க்குழம்பு, அப்பளம், வடாம் பொரிப்பாள்.

      Delete
    7. வணக்கம் சகோதரரே

      சேவைக்கு மோர் குழம்புடன் பொரித்து அப்பளமும் நன்றாக இருக்கும். கலவன் சேவைகளுக்கு கண்டிப்பாக எங்கள் வீட்டிலும் அப்பளம் உண்டு. இன்று கூட எங்கள் வீட்டில் மோர் குழம்பிற்காக டிபன் சேவைதான். ஆனால் தீடிர் சேவை.பாக்கெட் சேவை. சுமாராக இருந்தது. அதில் எலுமிச்சை கலந்து செய்தால் ஒரளவுக்கு நன்றாக வந்திருக்கும். உங்கள் ரசனைகளும் நன்றாகத்தான் உள்ளது. மீள் வருகை தந்து பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    8. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கும்,புகுந்த வீட்டு பழக்கப்படி இந்த மோர் குழம்பு (பெரிய நாத்தனார் கல்லிடைக்குறிச்சி) ருசி விடாமல் பிடித்து விட்டது. சமயங்களில் அப்பளங்கள் பொரிக்கச் சொல்லி புகுந்த வீட்டிலும் உத்தரவு வரும். பிறந்த வீட்டில் எப்போதும் விதவிதமான கலவன் சேவைகள், அதற்கு அப்பளம் உண்டு.

      கல்லிடையில் இருந்துதான் உ. அ. அப்பளங்கள் நிறைய நாட்கள் சென்னைக்கு விடாமல் வாங்கி செல்வோம். மதுரை, இங்கு என வந்தபின் அந்த பழக்கங்கள் குறைந்து விட்டது. அங்கே கிடைப்பதையே வாங்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். இப்போது இங்கே அம்பிகா கிடைக்கிறது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. மருந்து என்பது மூன்று நாட்கள்தான். எந்த மருந்துமே அப்படித்தான். அதற்கு மேல் சாப்பிட்டால் பின் விளைவுகள், மருந்து நம் உடலுக்கு வீரியமாக வேலை செய்யாது.

    வாழைத் தண்டு எனப் பலவற்றையும் மருந்தாக மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

    அலோபதி மருந்துகள், உண்மையிலேயே உணவு மாதிரி தினமும் சாப்பிடுவதால், அவங்களே.. இது வியாதியைக் கட்டுக்குள் வைக்கும் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் டோசேஜை அதிகப்படுத்தி விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரை போன்றவை எப்படிச் செய்தாலும் குறைந்தது 3 நாட்கள் வரை வந்துடுதே! :))))))

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மருந்து என்பதும் மூன்று நாட்கள் மிகாமல் இருந்தால் நல்லதுதான். உண்மைதான்.. சமையலில் மருந்தாக அமையும் உணவுகளையும் தினசரி சாப்பிட இயலாது.அப்படியே சாப்பிட்டாலும் அது வேறு வகையான தொந்தரவுகளை தரும். கருத்துக்கு நன்றி.
      தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      இருவருக்கு எனச் செய்யும் போது இவ்வகை உணவுகள் நிறைய வந்து விடுகிறது. முன்பெல்லாம் எங்களுக்கு இந்த கொத்தவரங்ககாய் மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் அது உடம்புக்கு வாயு தொந்தரவு தருகிறதென்று வாங்குவதேயில்லை. ஆனால் கொத்தவரங்ககாய் நல்லதென சிலர் கூறுகிறார்கள். ஒவ்வொருவர் உடம்பு சௌகரியங்கள் ஒவ்வொரு மாதிரிதானே இருக்கும்.தங்கள் கருத்துக்கும் நன்றி.

      விட்டுப் போன கருத்துக்களை தேடி இன்று தாமதமாக பதில் தருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வாழைப்பூ, வாழைத்தண்டு, கொத்தவரை ஆகியவை சர்க்கரைக்குச் சிறந்தது என்பதால் 3 நாட்கள் வந்தாலும் வாங்கிச் சமைக்கிறோம். வாழைத்தண்டை அநேகமாகப் பச்சையாகப் பச்சை மிளகாய், இஞ்சி, உப்புச் சேர்த்துக் கடுகு, பெருங்காயம் தாளித்தால் அப்படியே சாப்பிட்டுவிடலாம்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      ஆமாம்.. துவர்ப்பான இந்த காய்கறிகள் உடம்புக்கு நல்லதென முன்பு அடிக்கடி வாங்கிச் செய்வோம்.குழந்தைகளுக்குத்தான் முன்பு அவ்வளவாக பிடிக்காது. இப்போது அவர்களும் சாப்பிடுவார்கள். ஆனால் வாழைத்தண்டை பச்சையாக சாப்பிட்டதில்லை. உசிலி, கறி, கூட்டு என சாப்பிடுவோம். வாழைப்பூவும் அப்படித்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. வாழைத்தண்டைப் பச்சையாகச் சாப்பிடுவது, ஜூஸ் எடுத்துக் குடிப்பது எல்லாம் ரொம்பவே பழைய நாள் உணவு முறையில் உண்டே! எங்க வீட்டில் வெள்ளைப் பூஷணி, பீர்க்கை, புடலை போன்றவற்றைக் கூடப் பச்சையாக அரைத்துச் சாறு எடுத்துக் குடிப்போம். திடீர்னு அது ஒரு சீசன் வரும். :))) கொஞ்ச நாட்கள் ஓடும்.புடலை, பூஷணியைப் பொடியாக நறுக்கி சாலடாகவும் சாப்பிடலாம். உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு ஊற வைத்துப் பின்னர் பிழிந்து நீரைத் தனியாக எடுத்துக் குடிச்சுட்டுக் காயை சாலடாகச் சாப்பிட்டுக்கலாம். இரண்டும் வீணாகாது.

      Delete
    7. வணக்கம் சகோதரி

      இந்த காய்கறிகளை பச்சையாக ஜூஸ் செய்து குடிப்பது என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்காது. காரட் வெள்ளரி துருவி தயிர் கலக்கி பச்சடி செய்தால் கூட நானும், கணவருந்தான் காலி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பிடிக்காது. அப்போதெல்லாம் கு.சா.பெ எல்லாம் என்னிடம் இல்லை. திருமங்கலம் வந்து பெங்களூர் கிளம்பும் சமயத்தில்தான் வாங்கினோம். அங்கெல்லாம் அடிக்கிற வெயிலுக்கு எல்லாம் வம்பாக போய் விடுமென்று அதையெல்லாம் முயற்சித்ததில்லை. எல்லாமே வேக வைப்பதுதான். அப்படியே பழகியும் விட்டது. நீங்கள் சொன்ன முறைகள் நன்றாக உள்ளது. இப்போது இளைய மருமகளுக்கு இந்த முறைகள் பிடிக்கும். அவர் விரும்பி சாப்பிடுவார். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலா ஹரிஹரன் மேடம் இணையத்தில் ரொம்ப நாள் மிஸ்ஸிங் என்பதை நெடிய பின்னூட்டங்கள் மூலம் சிம்பாலிக்காச் சொல்லியிருக்கேனோ? ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களின் நெடிய விளக்கமான கருத்துக் கள் என்னை மகிழ்வடையச் செய்தன இன்றைய இந்த பதிவுக்கு உங்களின் பல பின்னூட்டங்களை வரவேற்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சுவாரஸ்யமான கதை (பழங்கால நிகழ்வுகள் என்றே சொல்லலாம்)

    முன்னோர் வாக்கு நல்வழிப்படுத்துவதற்கே என்பதை அன்று நம்பினார்கள் இன்று அப்படி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /முன்னோர் வாக்கு நல்வழிப்படுத்துவதற்கே என்பதை அன்று நம்பினார்கள் இன்று அப்படி இல்லை./

      உண்மை. இப்போது எவரும் செவி கொடுத்து கேட்பதில்லை. பதிவை ரசித்ததற்கும். நல்லதொரு கருத்தை தந்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே

    இன்றைய பதிவுக்கு வந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். விரைவில் அனைவருக்கும் பதில் கருத்துகள் தருகிறேன். தாமதமாவதற்கு கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும். நன்றி. நன்றி. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் பாணியில் அருமையான குறள் தந்து கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். அனிச்ச மலரென வந்த விருந்தாளிகள் முகம் வாடாமல் இருக்க நாம் உபசரிப்பதே இல்லற தர்மத்தின் சாஸ்திரம். அழகான கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கமலாக்கா உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். முதலில் அது மிக மிக முக்கியம்.

    விருந்து பற்றி தெரியவில்லை. சென்றதும் உண்டு விருந்தினர் வந்ததும் உண்டு ஆனால் இப்படியான அனுபவம் இல்லை!!!

    மாப்பிள்ளை விஷயம் கூட வாசித்ததில்லை கமலாக்கா. ஒரு வேளை நான் சகஜமான நிலையில் உறவுகள் இருப்பதால் தெரியவில்லை என்று தோன்றுகிறது. விருந்தினர் என்றும் நினைக்காததால் இருக்கலாம்.

    மருந்து மூன்று நாள் என்று சொல்வது சரியே. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே!

    ரொம்பச் சுவையாக எழுதியிருக்கீங்க கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விருந்து பற்றி தெரியவில்லை. சென்றதும் உண்டு விருந்தினர் வந்ததும் உண்டு ஆனால் இப்படியான அனுபவம் இல்லை/

      மிகவும் நல்ல விஷயம். அன்பான உறவு விருந்தினர்களுக்குள் மன பேதமின்றி கூடிக் களித்து அன்னோன்யமாக இருக்கும் உங்கள் பண்பு போற்றத்தக்கது. அதேப் போல் இருந்து பழகும் உங்கள் உறவுகளும் போற்றத் தக்கவர்கள். மாப்பிள்ளை கதை காலங்காலமாய், நீதிக்கதை மாதிரி சொல்லப்படுவது. அதிலிருந்துதான் மாப்பிள்ளை முருக்கு என்ற வார்த்தை பதங்கள் உண்டானது என்னவோ.. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் அனைத்திலும் சரிசமம்.

      /மருந்து மூன்று நாள் என்று சொல்வது சரியே. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே!/

      உண்மை. விருந்தானலும், மருந்தானலும் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான். அதைத்தான் நானும் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் அன்பான விசாரிப்பிற்கும், பரிவான பேச்சுக்கும், கனிவான கருத்து விமர்சனங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. விருந்து என்று நினைக்காமல் சகஜமாக இருந்தால் தோன்றாது என்று நினைக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விருந்து என்று நினைக்காமல் சகஜமாக இருந்தால் தோன்றாது என்று நினைக்கிறேன்./

      உண்மைதான் சகோதரி. அருகில் இருந்தால் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் போது, சகஜமாக போய் விடும். நெடுந்தொலைவில் இருப்பவர்கள், நீண்ட நாள் கழித்து வருபவர்கள் எனப்பார்க்கும் போதுதான் இந்த விருந்துகள் என்ற வார்த்தையும் அதற்கான உணர்வுகளும் வருகிறதென்று நினைக்கிறேன். தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. கமலாக்கா விருந்தும் மருந்தும் மூன்று என்று சொல்லப்பட்டிருப்பது நீங்கள் கடைசியில் சொன்னதைத்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. விருந்துச் சாப்பாடு தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றிற்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடும் அது போல மருந்தும் அளவு உண்டு. அதனால்தான்...நாமே மூன்று நாள் விருந்து சாப்பாடு கல்யாணங்களில் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மிளகு ரசம், சுட்ட அப்பளம் என்று லங்கணம் போட மாட்டோமா?

    மாப்பிள்ளைக்கும் ஒரே அடியாக விருந்து வைத்தால் அவரது வயிறும் கெட்டுப் போகாதா? மகள் தானே கஷ்டப்பட வேண்டும்!!!!! அதனால் மாமியார் ரசம் அப்பளம் என்று போட்டிருப்பாங்க.

    மாப்பிள்ளைக்கு 4 அல்லது 5 வது நாள் பருப்பு இல்லாமல் குழம்பு விட்டால் மரியாதை கொடுக்கலை என்பது ஏனோ இப்படி ஒரு வழக்கு சமூகத்தில் சொல்லப்பட்டு அதைப் பலரும் நம்பி இப்போது சீரியல் பார்த்து பலரும் கெடுவது போல் அதையும் மனதில் வைத்து வேண்டாத எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவுகளைப் பிரித்துக் கொள்வதற்கு இடம் கொடுக்கிறதோ என்றும் தோன்றுகிறது அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான். எதிலும் அளவோடு இருக்க வேண்டுமென்பதையும், அப்படியிருந்தால் நம் உடலுக்கு தீங்கு வராது இருக்குமெனவும் பெரியவர்கள் மறைமுகமாக கூறியிருக்கிறார்கள்.நாம் மட்டுமின்றி இன்றைய இளைய தலைமுறைகள் அதை புரிந்து நடந்து கொண்டால் நன்மைதான்.

      /மாப்பிள்ளைக்கு 4 அல்லது 5 வது நாள் பருப்பு இல்லாமல் குழம்பு விட்டால் மரியாதை கொடுக்கலை என்பது ஏனோ இப்படி ஒரு வழக்கு சமூகத்தில் சொல்லப்பட்டு அதைப் பலரும் நம்பி இப்போது சீரியல் பார்த்து பலரும் கெடுவது போல் அதையும் மனதில் வைத்து வேண்டாத எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவுகளைப் பிரித்துக் கொள்வதற்கு இடம் கொடுக்கிறதோ என்றும் தோன்றுகிறது அக்கா./

      அப்படியும் இருக்கலாம். இதிலிருந்துதான் "மாப்பிள்ளை முறுக்கு" அதிகமாகி பல பிரச்சனைகளை சந்தித்து இப்போது மறுபடியும் குறைந்து வருகிறதோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது.:) உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. விருந்தும் மருந்தும் மிக அருமையாக இருக்கிறது பதிவு.
    நேற்று விருந்தினர் வருகையால் இங்கு வர முடியவில்லை.
    குழந்தைகளின் (இரட்டை குழந்தைகள்) பிறந்த நாள் விழா மகள் வீட்டில் நடந்தது.

    அதனல் வலை பக்கம் வர முடியவில்லை.

    எங்கள் வீட்டுக்கு விடுமுறையில் உறவினர்கள் வருவார்கள், ஊர் சுற்றி பார்ப்பார்பர்கள். நாங்களும் அவர்களுடன் போவோம்.

    அதெல்லாம் மகிழ்ச்சியான காலங்கள்.
    உறவுகள் சிலர் கூடமாட உதவி செய்வார்கள், சிலர் வேலை செய்யமாட்டார்கள், நாமே செய்ய வேண்டும்.

    நான் எங்க்த வீட்டுக்கு போனாலும் உதவியாக இருப்பேன், என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

    வெளி நாட்டில் நண்பர்கள் உறவுகள் போல ஒவ்வொரு வீட்டுக்கும் போய் உணவுகளை செய்து கொண்டு போவது ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவது, வேலைகளை பகிர்ந்து செய்வது என்று இருக்கிறார்கள்.

    கதை பகிர்வுகள் அருமை.

    இலையை சொல்வார்கள் முதல் நாள் வாழை இலை , மூன்று நாள் கழித்து தையல் இலை என்று. முதலில் விருந்தாளியாகவும், அப்புறம் வீட்டு மனிதர்களாக நெருங்கி விடுகிறார்கள், எங்களுக்கு என்று சிறப்பாக தனி உணவு வேண்டாம். உங்கள் வீட்டுக்கு எப்போதும் சமைப்பது போல் இருக்கட்டும் என்று சொல்லும் உறவுகளும் இருக்கிறார்கள்.

    மருத்தவரிடம் போக வேண்டும் என்றால் போய் வந்து விடுங்கள்.
    நம்பிக்கையாக மருத்துவரிடமும் போய் வந்து விடுங்கள்.
    உங்கள் நகைச்சுவை பகிர்வை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துகள் உண்மை. கூடமாட உதவியாக வந்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள் உள்ளார்கள். ஏதாவது செய்யப் போக அவர்கள் வீட்டு பக்குவங்கள் எப்படியோ என தயக்கம் காட்டி இருப்பவர்களும் இருக்கிறார்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி விதங்கள்.பழக,பழக நமக்கும் அனைத்தும் பழகி விடும்.

      /நான் எங்க்த வீட்டுக்கு போனாலும் உதவியாக இருப்பேன், என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்./

      உங்களின் அன்பான நல்ல மனதுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நானும் அவர்கள் விரும்பினால், அவர்கள் மனங்கோணாமல் முடிந்த வரை உதவியாக இருப்பேன். வருபவர்களும் எனக்கு உதவியாக இருப்பார்கள்.

      /முதலில் விருந்தாளியாகவும், அப்புறம் வீட்டு மனிதர்களாக நெருங்கி விடுகிறார்கள், எங்களுக்கு என்று சிறப்பாக தனி உணவு வேண்டாம். உங்கள் வீட்டுக்கு எப்போதும் சமைப்பது போல் இருக்கட்டும் என்று சொல்லும் உறவுகளும் இருக்கிறார்கள்/

      நீங்கள் சொல்வதும் சரிதான். மனமொப்பி நெருங்கி பேதம் ஏதும் பார்க்காமல், வாழ்நாள் முழுக்க நட்பாக இருக்கும் உறவுகளும் இருக்கிறார்கள்.அதுவும் இறைவன் தரும் ஒரு வரந்தான்.. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

      மருத்துவரை இந்த கால் பாதங்கள் மரத்துப் போவதற்கு போய் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டேயுள்ளேன். எப்போது அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறதோ .. பார்க்கலாம். உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி. பதிவை ரசித்தமைக்கும் என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. /நேற்று விருந்தினர் வருகையால் இங்கு வர முடியவில்லை.
      குழந்தைகளின் (இரட்டை குழந்தைகள்) பிறந்த நாள் விழா மகள் வீட்டில் நடந்தது.

      அதனல் வலை பக்கம் வர முடியவில்லை/

      அதனாலென்ன சகோதரி. உங்களுக்கு முடியும் போது வாருங்கள். உங்கள் மகளின் வீட்டில் நடைப்பெற்ற குழந்தைகளின் பிறந்த நாளுக்கு என் அன்பான ஆசிகள். உங்கள் மகளின் குழந்தைகளா? குழந்தைகள் நீடுழி சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      இவ்வளவு வேலைகளிலும் நீங்கள் உடனடியாக வந்து கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான்தான் தாமதமாக அனைவருக்கும் பதில் தருகிறேன். நன்றி.

      Delete
    3. கால் பாதம் மரத்துப் போவது நீண்ட நாள் சர்க்கரையின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எதற்கும் உடனே மருத்துவரிடம் போய் உங்கள் உடம்பைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

      Delete
    4. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      இப்போது ஒரு வருடத்திற்கு மேலாக இப்படித்தான் இருக்கிறது. நானும் கால்களில் பட்ட அடியினால் பாதங்கள், கால் விரல்கள் தொந்தரவு தருகிறதென்று சில தைலங்களை பூசி வருகிறேன். எங்கள் மன்னியும் உங்களைப் போலத்தான் சொல்கிறார். இரு வருடங்களுக்கு முன் டெஸ்ட் எடுத்ததில் சர்க்கரை இல்லையென வந்தது. ஒரு வேளை இரத்தப் பரிசோதனையில் சரிவர தெரிந்து விடுமோ? இல்லை, அதில்தான் சர்க்கரை இருப்பதே தெரியுமா? மருத்துவரிடம் போக வேண்டும். தாங்கள் மீள் வருகை தந்து அன்பான கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. நீங்கள் முன்னால் எப்படிப் பரிசோதனை செய்து கொண்டீர்கள் எனப் புரியவில்லை. சர்க்கரை இருக்கானு பார்க்க முதலில் ஜிடிடிஎனப்படும் சோதனையைப் பரிந்துரைத்தார்கள். க்ளூகோஸ் டாலரன்ட் டெஸ்ட். காலை ஆகாரமில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று அவங்க குறிப்பிடும் சோதனைச் சாலையில் அவங்க முதலில் ரத்தம் எடுத்து சேமித்து வைத்துக் கொள்வார்கள். பின்னர் க்ளூகோஸ் தண்ணீர் குடித்து ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து மீண்டும் ரத்தம் எடுப்பார்கள். இது மாதிரி சுமார் நாலைந்து தரம் க்ளூகோஸ் தண்ணீர் கொடுத்து ரத்தப் பரிசோதனை செய்து அவற்றைக் குறித்துத் தருவார்கள். கடைசியில் உடனே முடிவையும் சொல்லுவார்கள். சர்க்கரை இருக்கா/இல்லையா என! ஆனால் இப்போதெல்லாம் இந்தச் சோதனை செய்வதாகத் தெரியலை.

      Delete
    6. ஆகவே நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனையுடன் ஒரு பரிசோதனைச் சாலையில் காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுத்து ஃபாஸ்டிங் ஷுகர் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் காலை உணவு எட்டரைக்குள்ளாக முடித்துக்கொண்டு அதன் பின்னர் ஒன்றரை மணி நேரம் கழித்து மறுபடி ரத்தம் கொடுத்து உணவு உண்ட பின்னர் சர்க்கரை அளவைச் சோதிக்கணும். இதன் மூலம் உங்களுக்குச் சர்க்கரை இருந்தால் எவ்வளவு இருக்கு என்பதும் இல்லை எனில் மேற்கொண்டு என்ன காரணம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். கட்டாயம் போய்ப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

      Delete
    7. வணக்கம் சகோதரி

      நான் ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஏதோ உடல்நிலை பாதிப்பை காட்டச் சென்ற போது யூரின் டெஸ்ட் எடுத்ததில் அப்படி ரிசல்ட் வந்தது. அதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லை.பிறகு பேத்தியுடன் கடைக்கு சென்றிருந்த போது அவளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு கால் தவறி கீழே விழுந்ததில் (அதை ஒரு பதிவாக கூட குறிப்பிட்டிருந்தேன்.) வலது கால் பாதம் வீக்கம் சில மாதங்கள் வரை அவஸ்த்தைபட்டேன். பின் இடது கால் பாதமும் சொல்லி வைத்தாற் போன்று அதே போல் அடி.. வீக்கம்.. அதனால்தான் இப்போது ஒரு வருடங்களுக்கு மேலாக காலை பாதிக்கிறதோ என நான் என் வீட்டில் கூட எவரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. எங்கள் மன்னியிடம் ஃபோனில் பேசும் போது அவர்களும் உங்களைப் போல் இது சர்க்கரை பாதிப்பாகதான் இருக்கும் என்றே கூறி வருகிறார்கள். தாங்கள் மீண்டும் என் மீது அக்கறையுடன் வந்து விபரமாக சர்க்கரை பரிசோதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை விளக்கியதற்கு நன்றி. உங்கள் அன்பான அக்கறையான கூற்றுக்கள் ஆறுதல் தருகின்றன. மருத்துவரிடம் செல்லப் பார்க்கிறேன். (எனக்கு அலோபதி என்றாலே கொஞ்சம் பயங்கள் வந்து விடும்.அதுதான் மருத்துவரை நாட அடிக்கடி தயக்கம் வருகிறது. ) தானாகவே இது குணமாகி விட நானும் இறைவனை பிரார்த்தித்து கொண்டபடி உள்ளேன். உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    8. சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதம், சித்தா மருந்துகள் கூட நல்ல பலன்களை அளிக்கும். வீட்டு மருந்தாக வேண்டுமெனில் நீங்கள் ஒரு நெல்லிக்காய்+ ஒரு அங்குல நீளப் பாகல்காய்+ சின்னத் துண்டு இஞ்சி+ ஒரு சின்ன வெங்காயம் எடுத்துக்கொண்டு அதைச் சுத்தம் செய்து கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டிச் சாறாக எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சாறை மாலையில் எடுத்து வைத்து மூடி வைத்துவிட்டுக் காலையில் எழுந்ததும் பல் சுத்தம் செய்த பின்னர் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்துக் காஃபி, தேநீர் சாப்பிடலாம். ஆவாரம்பூக்கள் (நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) தேநீர் மாதிரிப் போட்டும் குடிக்கலாம். ஒரு வேளை நெல்லிக்காய்ச் சாறு எனில் மறுவேளைக்கு ஆவாரம்பூத் தேநீர் என வைச்சுக்கோங்க. உணவுக் கட்டுப்பாடு என்பது நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவையே காய்கள் அதிகம் சேர்த்துக்கொண்டு, கீரை கட்டாயம், அரிசிச் சாதம் அளவாக ஒரு கிண்ணம் எனச் சாப்பிட்டு வரலாம். அல்லது கோதுமை ரவையைக்கூடச் சாதம்மாதிரிச் சமைத்துக் கொண்டு அதில் குழம்பு, ரசம், மோர் சேர்த்தும் சாப்பிடலாம். இவை எல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நமக்கு நாமே கட்டுப்பாட்டின் மூலம் கொண்டு வரலாம். ஆனால் மருந்துகள் எடுத்துக்கொண்டாலும்/எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அலோபதி மருத்துவரைப் பார்த்து உடலில் உள்ள கோளாறு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுதல் நலம்.

      Delete
    9. யூரினில் சர்க்கரை காட்டாது பல சமயங்களிலும். ரத்தத்தில் காட்டும். ஆகவே யூரின் பரிசோதனை போதாது.

      Delete
    10. வணக்கம் சகோதரி

      நல்ல பயனுள்ள மருந்துகளாக வும், உணவின் முறைப் பற்றியும் பொறுமையுடன் விளக்கி சொல்லி உள்ளீர்கள். என் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையை கண்டு என் மனது நெகிழ்கிறது. நெல்லிச்சாறு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு மிகவும் நல்லதென்று தெரியும். தாங்கள் கூறியுள்ள முறைப்படி செய்து பார்கிறேன். இருப்பினும் நீங்கள் கூறுவது போல் ஒரு தடவை மருத்துவரை கண்டு உடலில் என்ன கோளாறு என்பதை பார்க்க வேண்டும். குழந்தைகளும் அதை வறுப்புறுத்தி வருகிறார்கள். மருத்துவரிடம் செல்வதற்குத்தான் நேரங்கள் அமைந்து வரவில்லை. தாமதமாகிறது. நீங்கள் கூறிய முறைப்படி செய்து சாப்பிடுகிறேன். உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. விருந்தினர் வந்தால் நமக்கு உடம்பில் பலம் வந்து விடும் சுறு சுறுபாக சமைத்து கொடுப்போம்.

    அப்புறம் நமக்கு இருக்கவே இருக்கு பத்திய சமையல், எளிமையான சமையல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விருந்தினர் வந்தால் நமக்கு உடம்பில் பலம் வந்து விடும் சுறு சுறுபாக சமைத்து கொடுப்போம்.

      அப்புறம் நமக்கு இருக்கவே இருக்கு பத்திய சமையல், எளிமையான சமையல்/

      நல்ல விஷயம். விருந்தினர்களை பரிவோடு உபசரித்து அவர்களுக்கு வேண்டியதை சமைத்து தந்து பேணும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துகள். உங்கள் பண்பான உள்ளம் எனக்கு தெரியாதா? உங்களின் நல்லதொரு கருத்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. //எப்படியோ எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமாக வாழ அவரவர்களுக்காவும், மற்றவர்களுக்காகவும் இடைவிடாது இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.🙏.//

    ஆமாம், பிரார்த்தனை செய்து கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்து உண்மைதான். பிரார்த்தனைகள் தரும் மனபலந்தான் ஒரளவுக்கு உடல் பலத்தையும் தருகிறது அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். எல்லாமே அவன் தருவதுதானே.. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. எங்கள் பிறந்த வீட்டில் விருந்தினர்கள் இல்லாத நாட்களே கிடையாது. அப்போதெல்லாம் எங்களுக்கு நம் வீட்டில் சின்ன வெங்கலப்பானையில் சாதம் வடித்து, சின்ன பருப்பு குண்டானில் பருப்பு போட்டு சமைக்க மாட்டோமா? என்று ஏக்கமாக கூட இருக்கும். யார் யாரோ அதிகாலை, நடு மதியம், இரவு பத்து மணி என்றெல்லாம் வந்து கதவை கட்டுவார்கள். இப்போது யோசிக்கும் போது என் அம்மா எல்லோரையும் அனுசரித்து சென்றதால்தானே எல்லோரும் ஸ்வாதீனமாக வந்திருக்கிறார்கள்? என்று தோன்றுகிறது. நாங்களும் யாரையும் தொந்தரவாக நினைத்ததில்லை. இப்போது காலம் மாறி விட்டது. நெருங்கிய உறவினர்கள் வீடுகளுக்கே ஃபோன் பண்ணி விட்டுதான் செல்ல முடியும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை படித்து தந்த கருத்துரைக்கு நன்றிகள்.

      /இப்போது யோசிக்கும் போது என் அம்மா எல்லோரையும் அனுசரித்து சென்றதால்தானே எல்லோரும் ஸ்வாதீனமாக வந்திருக்கிறார்கள்? என்று தோன்றுகிறது. நாங்களும் யாரையும் தொந்தரவாக நினைத்ததில்லை/

      உண்மைதான்.. அந்த காலத்தில் அனுசரிப்புகள், ஒருவருக்கொருவர் விட்டுத்தருவது என குடும்பங்களில் சிறந்த விருந்தோம்பல்கள் இருந்தது. இப்போது நீங்கள் சொல்வது போல் ஃபோனில் இந்த பொழுது வருகிறேன் என்ற அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுதான் செல்ல முடிகிறது. கொஞ்ச நேரம் தாமதமானாலும், அவர்கள் நமக்காக காத்திருக்க விரும்புவதில்லை. முன்பிருந்த உறவு நிலைகள் வித்தியாசப்பட்டு விட்டன. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. அழகான கதையுடன் பதிவு அருமை.. எல்லா வகையிலும் நாகரிகமாக வாழ்ந்த முன்னோர்கள் சொல்லி வைத்த நீதி என்றுமே பொய்ப்பதில்லை.. பொய்த்ததில்லை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எல்லா வகையிலும் நாகரிகமாக வாழ்ந்த முன்னோர்கள் சொல்லி வைத்த நீதி என்றுமே பொய்ப்பதில்லை.. பொய்த்ததில்லை/

      உண்மைதான். அதை உணர்ந்து அதன்படி நடக்கத்தான் எவருக்கும் மனமில்லாமல் போய் விட்டது. பதிவை ரசித்து தாங்கள் தந்த நல்லதொரு கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete