Pages

Friday, November 6, 2020

கொலு நினைவுகள்...

வருடாவருடம் தொன்றுதொட்டு வரும் பண்டிகைகளை  நினைவு தெரிந்த நாளிலிருந்து நாமும் அலுக்காமல், சளைக்காமல் சந்தோஷமாக, மிகுந்த உற்சாகமாக கொண்டாடித்தான் வருகிறோம். இதில் ஏதாவது மனக்குறைகள் வந்து விடும் போது  (அதுதான் வராமல் இருக்குமா? இல்லை, அதை வரவழைத்துக் கொள்ளாமல்தான் நாம் விடுவோமா ? அதுதானே மனித மனத்தின் இயல்பு.. .:)) அடுத்த தடவை இன்னமும் சிறப்பாக  அந்த பண்டிகைகளை கொண்டாடி விட வேண்டுமென்ற ஒருவிதமான கற்பனை  எண்ணங்களைை அந்த வருடத்திலிருந்தே வளர்த்துக் கொள்வதும் நம் பழக்கமாயிற்றே.....! இதனாால்  நேர்மறை எண்ணங்களோடு அடுத்த வருட வரையிலான நாட்கள் நம்மோடு ஓடி வரும் என்ற நம்பிக்கையும் நம்முள்...! அது போல், அந்த நம்பிக்கை, நம் பலத்தின் ஆணிவேராக இருந்து, வரும் வருடத்தையும்  கண்மூடி திறப்பதற்குள் விரைவாக அழைத்து வந்து நம்மிடம் ஒப்படைத்து விடும் .

நவராத்திரி கொலு வைபவங்கள் என்றுமே எனக்குப் பிடித்தமானது. வருடாவருடம்  கொலு வைக்கும் பழக்கம் அம்மா வீட்டிலிருந்தே உண்டு. இங்கு புகுந்த வீடு வந்த பின்னும் அம்மா சீதனமாக தந்த பொம்மைகளை கொண்டு கொலு வைக்க மாமியார் தந்த உத்தரவின் பேரில் வைத்து வந்தேன். அவ்வளவாக வருடங்கள்தோறும் பொம்மைகள் வாங்காவிடினும், சில வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றிரண்டாக வாங்கிச் சேர்த்து தொடர்ந்து வைத்து வந்தேன். கடந்த ஏழெட்டு வருடங்களாக ஏதோ தட்டிப் போய் விட்டது. இந்த தடவை தெய்வாதீனமாக எல்லாப் பண்டிகைகளும் உண்டெனினும் படிகள் அமைத்து கொலு வைக்க இயலவில்லை.  வீட்டில் சின்ன குழந்தைகளாக (பேரன் பேத்திகள்) இருப்பதால், கொலுவை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் கொஞ்சம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் வைக்கலாம் என்ற எண்ணம். அடுத்த வருடம் அதற்கு நேரம் நல்லபடியாக வாய்க்க வேண்டும் என பிரார்த்தித்தபடி. இந்த வருட நவராத்திரி நாட்களை  அம்மன் ஸ்லோகங்கள், தினமும் என்னால் முடிந்த நிவேதனங்களுடன், கொண்டாடி எப்போதும் போல், சரஸ்வதி பூஜை புத்தகம் வைத்து பூஜித்து, விஜயதசமி மாவிளக்கு வைத்து பூஜை செய்து நிறைவாக பண்ணினோம். 

இது எங்கள் அண்ணா வீட்டு கொலு படங்கள். அருகிலிருந்தால் நேரில் சென்று கொலுவை ரசித்து தரிசனம் செய்து ஆசிகள் பெற்று வருவேன். இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு தூரம் செல்லவும் முடியாது. எனவே அவர் இந்த தடவை நான் பார்க்க வேண்டுமென்று எடுத்தனுப்பிய படங்களை "எங்கள் வீட்டு"  கொலுவாக, (வழக்கப்படி தாமதமாக . ஆனால் நல்ல வேளை தீபாவளி முன்னர்.. ) பகிர்கிறேன். இதை என்றோ எழுதி வைத்து விட்டேன். அதை வெளியிடவும், "அவன்" நினைக்கும் நேரந்தானே எப்போதும் சரியான நேரமாக அமையும்.....! கொலுவைப் பார்த்து 👌ரென்று  ரசிப்பவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 


கொலுவிருக்கும் பொம்மைகள்... 




















இது அதையே காணொளியாக தொகுத்தது.  சரியாக வந்திருக்குமென்று நம்புகிறேன். 

இதையும் பார்த்து ரசித்தவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 

55 comments:

  1. தாமதமானால் என்ன? பார்த்து ரசிக்க எப்போவும் நாங்கள் தயார். மிக அழகாய்ப் படம் எடுத்திருக்கிறார் உங்கள் சகோதரர்.அடுத்த வருடம் உங்கள் வீட்டில் நிறைவாகக் கொலு வைக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அது சரி, கொரோனா காலத்தில் சமூக இடைவெளி மனிதர்களுக்குத் தான் என உங்கள் அண்ணா முடிவு பண்ணிட்டார் போல! ஹிஹிஹி, பொம்மைகள் எல்லாம் இட நெருக்கடியில் தத்தளிக்கின்றன போல! முன்னர் படி கட்டிப் பொம்மைகள் வைக்கையில் எங்க வீட்டிலும் இப்படித்தான் இட நெருக்கடியில் பொம்மைகள் சண்டை எல்லாம் போட்டுக்கும். சில சமயங்களில் படிகளில் இருந்து உருண்டும் விழுந்து வைக்கும். :)))) அண்ணா வீட்டுப் பொம்மைகள் சமர்த்துப் பொம்மைகள் போல!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் முதல் வருகை தந்து பதிவை சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
      என் பதிவை நான் அந்தந்த விஷேடங்கள் முடிந்த பின் தாமதமாக தந்தாலும், நீங்கள் அனைவரும் வந்து பார்த்து அருமையான கருத்துரைகள் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அடுத்த வருடம் எங்கள் வீட்டில் கொலு சிறக்க தாங்கள் கடவுளிடம் பிராத்தனைகள் செய்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      /கொரோனா காலத்தில் சமூக இடைவெளி மனிதர்களுக்குத் தான் என உங்கள் அண்ணா முடிவு பண்ணிட்டார் போல! ஹிஹிஹி, பொம்மைகள் எல்லாம் இட நெருக்கடியில் தத்தளிக்கின்றன போல!/

      ஹா.ஹா.ஹா. நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

      /எங்க வீட்டிலும் இப்படித்தான் இட நெருக்கடியில் பொம்மைகள் சண்டை எல்லாம் போட்டுக்கும். சில சமயங்களில் படிகளில் இருந்து உருண்டும் விழுந்து வைக்கும். :)))) அண்ணா வீட்டுப் பொம்மைகள் சமர்த்துப் பொம்மைகள் போல!/

      ஹா.ஹா.ஹா. பாராட்டுகளை அண்ணாவிடம் தெரிவித்து விடுகிறேன். (குறிப்பாக இன்னமும் சமத்து குழந்தைகளாக பொம்மைகளை இருக்கச்சொல்லி.. :))

      அங்கும் இடப் பிரச்சனைதான்.. முன்பு பெரிய ஹாலில் படிகள் அமைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு இங்கு போல் சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டு, கொலுவை பத்திரமாக பாதுகாக்க சிரமம். பின் ஸ்டோர் ரூமில் அலமாரியில் குழந்தைகளின் (அவர்கள் சற்று பெரியவர்களானதும்) கைக்கு எட்டாத உயரத்தில் வைத்தார்கள். பிறகு எல்லா பொம்மைகளும் "நான்" "நீ" என வருடாவருடம் போட்டியிட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்ததில்,இடப்பற்றாக்குறை வந்து விட்டது. மறுபடியும் ஹாலுக்கு மாற்றவும் இயலவில்லை. இதுவென்றால் தனி ரூமில் உள்ளதால், தினசரி கொலு பூஜைக்கும், குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பிற்கும் சௌகரியமாக பழகி விட்டது. இன்னமும் விஸ்தாரமாக வைத்தால் பெரிய கொலுவாக இருக்குமென நானும் நினைத்தேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஒரேயடியாக நிறைகள் மட்டுமே இருந்துவிட்டால் போர் அடித்து விடும்!  எனவே சிறு குறைகளும் இருக்கவேண்டும்- வாழ்வு சுவாரஸ்யமாக...!  

    எங்கள் வீட்டில் கொலு விக்கும் வழக்கம் இல்லை.  நாங்களும் வைக்கத்துணியவில்லை.  9 நாட்கள் இவற்றிக்கு கொண்டாட அசாத்தியப்பொறுமையும், திறமையும் வேண்டும்.  தட்டிப்போய் விட்டால் மனம் சஞ்சலமுறும்.  

    தாமதம் என்று இதைச் சொல்லமுடியாது!  இன்னமும் ஆட்டோக்காரர்கள், வாகனதாரிகள் ஆயுதபூஜை கொண்டாடி வருகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கொலுவை நாங்கல்லாம் "விக்க"மாட்டோமுல்ல! :))))) வி.எ. காலம்பரயே ஊத்திண்டேன். ஆனால் அப்போச் சொல்ல நேரம் இல்லை. போயிட்டேன். இப்போத் தான் சொல்ல நேரம் வாய்ச்சது!

      Delete
    2. வைக்க... கர்ர்ர்ர்...

      Delete
    3. ஹாஹாஹா, ஹிஹிஹிஹி, ஹுஹுஹு!

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். உண்மை குறைகள்தான் நிறைகளின் திருப்தியை மறக்கடிகாமல் சுவையூட்டி காட்டும்.

      /9 நாட்கள் இவற்றிக்கு கொண்டாட அசாத்தியப்பொறுமையும், திறமையும் வேண்டும். தட்டிப்போய் விட்டால் மனம் சஞ்சலமுறும்/

      உண்மைதான்.. கொலு நாட்கள் முழுவதும் பொழுதுகள் சரியாக இருக்கும். ஒருநாளைக்கு இன்னமும் சில மணி நேரங்கள் இருக்கக் கூடாதா எனத் தோன்றும். நீங்கள கூறுவது போல மனச் சஞ்சலங்களும் அதிகம். என்ன செய்வது?

      இன்னமும் மக்கள் ஆயுதபூஜை கொண்டாடி வருகிறார்கள் என்பதை தங்களால் அறிந்து கொண்டேன். உங்களின் அன்பான கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      இப்போது பதில் கருத்துக்கள் தட்டச்சு செய்யும் போதே நானும் வி.எ (இரவு நேரம் வந்து விட்டதால்) ஊற்றிக் கொள்ள வேண்டியதாய் உள்ளது. ஹா.ஹா.ஹா ஆனால் நீங்கள் காலம்பரயே ஊற்றிக் கொண்டதால், மிகவும் சுத்தமாக என்னுடைய வார்த்தைப் பிழைகளையும் கண்டு பிடித்து விடுவீர்கள். ஹா.ஹா. நன்றி சகோதரி.

      Delete
  3. வகைவகையான பொம்மைகள்...    கீதா அக்கா சொல்லி இருப்பதுபோல நெருக்கி அடித்து நின்றாலும் படிகளில் மட்டுமல்ல, நம் மனத்திலும் இடம் பிடித்து விடுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கொலுவை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. மனதில் இடம் பிடித்த கொலு என்ற பாராட்டிற்கு மிக்க நன்றி சகோ. என் அண்ணாவிடம் உங்கள் பாராட்டை கூறி விடுகிறேன். அவரும் மகிழ்ச்சியடைவார் . அவர் சார்பிலும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தாமதமாக வந்தாலும் நிறைவான கொலுப் பதிவு.
    அன்பு கமலா ,,,
    தங்கள் சகோதரரின் கொலு பிரம்மாண்டம்.
    இத்தனை பொம்மைகளையும் மீண்டும் பாதுகாப்பாக உள்ளே வைக்க வேண்டுமே.

    வித விதமான பொம்மைகள். வண்ணக்கலவைகளுடன்வீடு
    முழுவதும் நிறைதிருக்கின்றன.

    மிக மிக அழகு மா. காணொளி தொகுப்பும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நிறைவான கொலு பதிவு என்ற ஊக்கம் தரும் வார்த்தைகள் மகிழ்வூட்டுகின்றன.

      /தங்கள் சகோதரரின் கொலு பிரம்மாண்டம்.
      இத்தனை பொம்மைகளையும் மீண்டும் பாதுகாப்பாக உள்ளே வைக்க வேண்டுமே/

      ஆமாம்.. அதுதான் பெரிய வேலை. கொலு வைப்பதற்கும் ஒரு வாரம் முன்பே வைக்கும் இடத்தை சுத்தப்படுத்துவது, வண்ணமயமாக அலங்கரித்தல், கொலு பொம்மைகள் இடம் பார்த்து அடுக்குதல் என வேலைகள் ஆரம்பித்து விடும். அது நிறைவுற்றப் பின் வரும் வாரம் முழுமையும் பொம்மைகளை துணியிலோ, பேப்பர்களிலோ மடித்து வைத்து அதற்கென இருக்கும் பெரிய பெட்டியில் பத்திரப்படுத்துதல் என வேலைகள், அலுப்பையும் பொருட்படுத்தாது நடந்து முடியும் போது தீபாவளி வந்து விடும். நானும் ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் கொலு வைபவங்களை சிரத்தையோடு கொண்டாடி வந்தேன்.

      காணொளியை கண்டு ரசித்தமைக்கும் நன்றி சகோதரி. என் அண்ணாவிடம் தங்கள் பாராட்டை தெரிவிக்கிறேன். அவர் சார்பிலும், உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. தங்கள் வலைப்பதிவுப் பக்கம் மிக அமைப்பாக இருக்கிறது.
    அன்பு வாழ்த்துகள் கமலா மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் வலைப்பதிவு பக்கம் நன்றாக உள்ளதென மனமாற பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். உங்கள் வாழ்த்துகளுக்கும் என மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கொலு படங்கள் சிறப்பு.
    மனித மனங்களின் எண்ண ஓட்டங்களை அழகாக சொன்னீர்கள். தாமதமான கொலுவிழா வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப்படித்து கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோ. தங்கள் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. உங்களின் ஆன்லைன் கொலுவை பார்த்து ரசித்தேன்... வெயிட்டிங்க் ஃபார் பட்சணம்

    ReplyDelete
    Replies
    1. Sorry மதுரைத் தமிழன். உங்களுக்கு முன்னால் கியூவில் இன்னும் சிலர் (நான் உட்பட) இருக்கிறோம். பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை என்பது போல. அதனால் எங்களுக்குக் கிடைத்த பிறகு உங்க turn. ஹாஹா

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /உங்களின் ஆன்லைன் கொலுவை பார்த்து ரசித்தேன்... வெயிட்டிங்க் ஃபார் பட்சணம்/

      ஹா.ஹா.ஹா. அதையும் அனுப்பி வைத்தால் போச்சு.கொலுவை பார்த்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிகுந்த நன்றியும் கூட..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் நெல்லை சகோதரரே

      ஹா.ஹா.ஹா. பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகளை நினைவு வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. (இந்நேரம் அவரே (பிள்ளையா) அதை மறந்து அடுத்த ஆகஸ்டு மாதத்தில்தான் நினைவு கூறுவார். ஹா.ஹா.) மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. இதாரு இதாரு நெல்லையும் மதுரையும் போட்டியா ஹலோ நாங்கல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா முன்னாடி போய் நின்னுக்குவோமாக்கும் லேடிஸ் ஃபர்ஸ்ட்!!! நீங்க ரெண்டுபேரும் அப்பால தள்ளி நில்லுங்க...நல்ல காலம் அல்லி ராணி வரலை...!!!!!

      கீதா

      Delete
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இந்தப் பதிவில் பகிர்ந்த எங்கள் வீட்டு கொலுவை உடனடியாக வந்து ரசித்துப் பார்த்து கருத்திட்டவர்களுக்கு என் அன்பான பணிவான நன்றிகள். ஒவ்வொருவருக்கும் தனியாக பதில் தர இன்று இரவுக்குள் வந்து விடுவேன். உங்கள் அன்புக்கு என்னென்றும் என் நன்றிகள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. இதனைப் பார்த்ததும் கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் நாங்கள் ஆர்வமாக பல ஆண்டுகளாக வைத்து அழகு பார்த்த கொலு பற்றிய நினைவுகள் மனதில் தோன்றின. மறக்க முடியாத அந்த நாட்களை இப்பதிவு மூலமாக மறுபடியும் நினைத்துப் பார்க்க வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களின் பழைய நினைவுகளை, கும்பகோண இல்லத்தின் கொலு விழா நிகழ்வுகளை என் பதிவு மலரச் செய்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கருத்துக்கள் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கொலுவை ரசித்துப் பார்த்து தந்த விளக்கங்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அருமையான் கொலு.
    காணொளியும் பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

    நிறைய பொம்மைகள் இருக்கிறது. கோலங்கள் பலகையில் அழகாய் வரைந்து இருக்கிறார்கள்.

    உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது?

    அடுத்தவருடம் உங்கள் வீட்டுக் கொலுவை பதிவிட வாழ்த்துக்கள், இறைவன் அருள்வார் அடுத்த வருடம் கொலுவைக்க.

    பாட்டு கச்சேரி பொம்மைகள் அழகு. செட்டியார் பொம்மைகள் நிறைய இருக்கே! பீங்கான் டீசெட் என்னிடம் இருப்பது போல் உங்கள் வீட்டிலும் இருக்கிறது. பொம்மைகளை கண்டு ரசித்தேன்.

    கோவில் கொலு மற்றும் உறவினர்கள் வீட்டு கொலு படங்கள் வலை ஏற்றி விட்டேன், பதிவு போட வேண்டும். நீங்கள் சொல்வது போல் தீபாவளிக்குள் போட்டு விட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பதிவை ரசித்து, கொலு பொம்மைகள் அனைத்தையும் ரசித்துப் பார்த்ததில் மிக்க மகிழ்வடைகிறேன். காணொளியையும் கண்டதற்கு மிக்க நன்றிகள்.

      இப்போது நான் நலமாக உள்ளேன் சகோதரி. அடுத்த வருடம் எங்கள் வீட்டிலும் கொலு வைக்க தாங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தது குறித்து சந்தோஷமடைகிறேன். உங்கள் பிராத்தனைகள் கண்டிப்பாக பலிக்கும்.

      கொலுவில் ஒவ்வொரு பொம்மைகளாக கண்டு ரசித்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி. அந்த கால பொம்மைகளும் ஏராளமானவை இருக்கின்றன.( அம்மா இருக்கும் போது வைத்து அழகு பார்த்தவைகள்.) அதன் பின்னர் என் அண்ணாவும், வருடந்தோறும் பொம்மைகள் வாங்கிச் சேர்த்துக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் மன்னி இன்னென்ன பொம்மைகள் வாங்கினோம் எனச் ஃபோனில் சொல்லுவார்கள். நானும் அதை இப்படி போட்டோகளில் பார்த்து ரசிப்பேன்.

      கோலங்கள் பலகையில் நிறைய போட்டு ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொன்றாக கொலு முன்னாடி வைப்பார் என் அண்ணா. நான் திருமங்கலத்தில் இருக்கும் போது ஒரு தடவை அங்கு சென்று கொலுவை தரிசித்து வந்தேன்.(அந்த வருடம் உறவினர் தவறியதால் எங்கள் வீட்டில் கொலு இல்லை) மற்றபடி எங்கள் வீட்டிலும் நானும் கொலு வைப்பதால், அந்த கொலு நாட்களில் எங்கும் செல்ல முடியாததாகி விடும். இங்கு வந்த பின் செல்லவே இயலவில்லை. இப்படி போட்டோக்கள் அனுப்பி பார்த்து ரசித்துக் கொள்ளும் காலம் இப்போது வந்துள்ளது. என் அண்ணா மன்னியிடமும் உங்களின் கருத்துக்களை சொல்கிறேன். அவர்களும் மிகுந்த மகிழ்வடைவார்கள். உங்களுக்கு அவர்கள் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      விரைவில் நீங்கள் சேகரித்த கொலு படங்களையும் பதிவிடுங்கள். உங்கள் பதிவுகளையும் காண ஆவலாக உள்ளேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. முதல்ல கொலு படங்களைப் பார்த்ததும் போன வருடத்தில் எடுத்த படங்களோ என்று நினைத்தேன்.

    கொலுவும் அருமை. படங்களும் அருமை.

    நிறைய பொம்மைகள், நெருக்கமாக இருப்பதுபோல எனக்குத் தோன்றியது.

    கோலங்கள் மிக அழகு.

    இனிமையான படங்களும் நினைவுகளும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கொலுவை ரசித்துப் பார்த்து தந்த உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

      ஆமாம்.. இடப்பற்றாகுறையினால் பொம்மைகள் நெருக்கமாக உள்ளன. நிறைய பொம்மைகள் உள்ளதால், மிகவும் விரிவாக அடுக்கி வைத்தால் இன்னமும் பெரிய கொலுவாக காட்சி தரும்.அதற்கு தகுந்தாற்போல் இடமும் பெரியதாக வேண்டும்.

      கோலங்களை ரசித்ததற்கு மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களை என் அண்ணாவிடம் தெரிவிக்கிறேன். அவர் சார்பிலும் உங்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. அருமையான அழகான கொலு...

    நேர்மறை எதிர்ப்பார்ப்பு எண்ணங்கள் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கொலுவை ரசித்துப் பார்த்து தந்த உங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      பதிவையும் படித்து நேர்மறை எண்ணங்களை சிறப்பென்றதற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்த எண்ணங்கள்தானே நம் அன்றாட பலம். உங்கள் பதிவுகளிலும் அதைத்தானே வலியுறுத்தி எழுதி வருகிறீர்கள். உங்கள ஊக்கம் மிகுந்த கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. எத்தனை எத்தனை கலை கண்டோம்
    இன்ப வெள்ளமே பொங்கிட
    அதில் கண்டோம்..
    அத்தனை அத்தனை அழகுறும்
    எண்ணம்.. - அவை
    அமுதுறும் தமிழ் மண்ணின்
    மாறாத வண்ணம்..

    சித்தனும் செல்வனும்
    சீர்கொண்ட அழகு..
    செல்வி மீனாட்சியுடன்
    சிறுகளிறும் அழகு..
    மாயவன் மலர்க் கமலை
    மாறாத அழகு..
    மங்கையவள் மலர் சூட
    மணக்கோலம் அழகு..
    தாய்மடியில் சேய் துயில
    தனித்ததோர் அழகு..
    தவங்கொள்ளும் சிவசாமி
    அழகுக்கு அழகு..
    கமலையும் விமலையும்
    கண்கொண்டு நின்றார்..
    கவலைகள் ஏன் உனக்கு
    கதி நான் என்றார்..
    கலைகளே களிப்பென
    திகழ் காலம்..
    தெய்வமே கலைகளாய்
    வரும் காலம்..

    வெல்லுவது பெண்மை எனச்
    சொல்லுவது உண்மை..
    பெண்மை எனில் சக்தி
    சக்தி எனில் முக்தி..
    பேர்கொண்டு சீர்கொண்டு
    ஊர் ஆண்ட சக்தி..
    புயல் என்ற நடை கொண்டு
    பொய்யர் தம் படை வென்று
    புல்லர் தம் தலை கொண்டு
    பூதலம் ஆண்டதும் சக்தி..

    சக்தியின் பெயர் கொண்டு
    சங்கடங்கள் வெல்வோம்..
    சக்தி சிவ சக்தி என்றே
    சந்ததமும் சொல்வோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆகா.. எத்தனை அழகான கவி.. இன்பத் தமிழில், அள்ள அள்ள குறையாத உங்கள் கற்பனையில் தோன்றிய வார்த்தைகளை கொண்டு செதுக்கிய அற்புதமான கவிதைப் பாடலை ரசித்து படித்தேன். மறக்க முடியாத கவித்துவ பாடலை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

      இந்த வருட கொலுவுக்கு சிறப்பளித்த உங்கள் கவிதையை கண்டு என் அண்ணா வீட்டிலும் அனைவரும் மகிழ்வார்கள். அவர்கள் சார்பிலும் என் நன்றிகள்.

      /சக்தியின் பெயர் கொண்டு
      சங்கடங்கள் வெல்வோம்..
      சக்தி சிவ சக்தி என்றே
      சந்ததமும் சொல்வோம்./

      உண்மை. அருமையான வரிகள். அவள் நாமம் கூறி என்றும் நலமுடன் வாழ்வோம். தங்கள் பாடலுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. @ துரை, அருமையான பாடலால் கொலுவைச் சிறப்பித்துள்ளீர்கள். கொலுவில் உள்ள முக்கியமான தெய்வங்களையும் குறிப்பிட்டுப் பாடி உள்ளீர்கள். எனக்கு இந்தப் பாடல் வந்தது தெரியாது, கோமதி அரசு சொல்லி இருக்கிறார்கள். அதனால் உடனே வந்தேன். பாடலுக்கும் அதன் கருத்துக்கும் பாராட்டுகள்/ நன்றி.

      Delete
    3. தங்களது அன்பின் பாராட்டுரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      Delete
    4. துரை அண்ணா அட்டகாசம் போங்க!!! எப்படி இப்படி டக்கு டக்குனு கவிதை வந்து கொட்டுது!!! நல்ல காலம் கீதாக்காவுக்குப் பிடித்த உலக்கைநாயகன் பாடினாப்ல சொல்ல நினைக்கையில் வார்த்தை முட்டுதுனு இல்லாமல் கவிதை கொட்டுது!!!

      அருமை துரை அண்ணா ரசித்தேன்..

      அண்ணா எல்லாரும் வீட்டுல கொலுவுக்குப் போய் பாடுவாங்க நீங்க ஆன்லைன்ல அவங்க கொலுவைப் பார்த்து பாடியாச்சு!!! அடுத்து மேல போய் லைன்ல நின்னு சுண்டல் பிரசாதம் வாங்கிக்குவோம்!!

      கீதா

      Delete
    5. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      சகோ துரை செல்வராஜ் அவர்களின் கவிதை நீங்கள் சொன்னது போல படு அமர்க்களமாக இருந்தது.

      /அண்ணா எல்லாரும் வீட்டுல கொலுவுக்குப் போய் பாடுவாங்க நீங்க ஆன்லைன்ல அவங்க கொலுவைப் பார்த்து பாடியாச்சு!!! அடுத்து மேல போய் லைன்ல நின்னு சுண்டல் பிரசாதம் வாங்கிக்குவோம்!! /

      ஹா.ஹா.ஹா. இந்த தடவை எல்லாமே ஆன்லைனில்தான்..போலும்...அதனால் பிரசாதமும் லைனிலா? உங்களது ஊக்கம் நிறைந்த உற்சாக கருத்து மகிழ்வளிக்கிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கோலாகலமான கொலு...
    காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கொலுவை ரசித்துப் பார்த்து தந்த கருத்துக்களுக்கும், அருமையான மிக அழகான பாமாலை சூட்டி கொலுவில் வீற்றிருக்கும் அன்னை பரமேஸ்வரியை மகிழ்வுற செய்ததற்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. தங்களது அன்பினுக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சி.. இன்னும் அழகாக செய்திருக்கலாம்... வேலை முடித்த களைப்பு... தூக்கம் கண்களைச் சுழற்றிய வேளையில் தட்டச்சு செய்தது..

      மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி...

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      அருமையான கவிதையை படைத்து ஒரு சிறந்த கதம்பமாலையென எங்கள் வீட்டு கொலுவுக்கு சமர்பித்துள்ளீர்கள். ஆனால். தங்களின் தன்னடக்கம் வியப்பைத்தருகிறது. நான்தான் உங்களுக்கு பலமுறை நன்றிகள் கூற வேண்டும். எனக்கும் மகிழ்வாக உள்ளது. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. தொகுப்பு அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவு தொகுப்பு அருமை என்றதற்கும், வாழ்த்துக்கள் கூறியமைக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அத்தனையும் அண்ணாவீட்டுக் கொலுக்களோ... சூப்பராக இருக்கிறது... பல வருடங்களாகச் சேர்த்திருப்பினம் போல இருக்கே... இதைப் பாதுகாத்து வைப்பதற்கே தனி அறை வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நலமாக உள்ளீர்களா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். நீங்கள் வந்து எங்கள் அண்ணா வீட்டு கொலுவை ரசித்து கருத்துக்கள் இட்டிருப்பது மிகுந்த மகிழ்வாக உள்ளது.

      ஆமாம்.. அவர்கள் பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும் புதிதாக பொம்மைகள் வாங்கி சேர்த்து வருகிறார்கள்.இதை பாதுகாக்கவும் அங்கு ஒரு அறை தனியாக உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. வீடியோவும் அழகு. நாங்களும் 10 நாட்களும் கொண்டாடுவோம்... சமத்துப் படைத்து எல்லாம் ஆனால் கொலு வைக்கும் பழக்கமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்குத்தான் உங்களுக்கு பதிலளிக்க தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்.

      காணொளி நன்றாக உள்ளதென கூறியமைக்கு நன்றி. நீங்களும் நவராத்திரி கொண்டாடுவது மிக்க மகிழ்வாக உள்ளது.
      சில வீடுகளில் பொம்மைக்கொலு வைத்து பழக்கம் இருக்காது.. அதனால் பரவாயில்லை. பொம்மைகள் வைக்காவிட்டால் என்ன..? இறைவனை நினைத்து கொண்டாடும் பண்டிகைகள் என்றுமே மனதிற்கு உற்சாகம் தரும் சிறப்புத்தானே..!

      சென்ற பதிவுக்கு தங்களை மிகவும் எதிர்பார்த்தேன். சென்ற பதிவுக்கு நீங்கள்தான் வந்திருக்கிறீர்கள் என்று நினைத்து ஒரு காமெடியாகி விட்டது தங்களுக்கு முடிந்தால் அங்கும் ஒரு பார்வையிடவும். கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஓ அப்பூடியோ .. தோஓஓஓஓஒ சென்று பார்க்கிறேன்...

      Delete
    3. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க..சகோதரி.. என் வார்த்தைக்கு அன்புடன் மதிப்பளித்து சென்ற பதிவையும் வந்து பார்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

      அங்கேயும் கருத்துக்கள் அளித்து என்னை மகிழ்வுற செய்து விட்டீர்கள். உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. கமலாக்கா கொலு சூப்பர்!!! சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு அண்ணா வீட்டு கொலு. ரொம்ப நல்லா படம் எடுத்திருக்கிறார்.

    நீங்க எப்ப போட்டாலும் நாங்க பார்க்கத் தயார். பாருங்க நானும் லேட்டுத்தான்...வித்தியாசமாக முறையில் அடுக்கப்பட்டிருப்பது அழகா இருக்கு பார்க்க. எனக்கும் பொம்மைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் வைக்க முடியலை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கீதா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். வந்து விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      கொலுவை ரசித்துப் பார்த்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனம் மிகவும் மகிழ்வடைந்தது.
      அண்ணாவிடம், உங்களின் ரசிப்பையும், பாராட்டுகளையும் கண்டிப்பாக தெரிவிக்கிறேன். அவர்கள் சார்பில் உங்களுக்கு எனது நன்றிகளும்..

      பொம்மைகள் என்றால் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்வாக உள்ளது. இங்கு எங்கள் வீட்டிலும். வைக்க இயலாத சூழ்நிலைகளில், பல வருடங்கள் சென்று விட்டன. அடுத்த தடவை வைக்கும் சூழல் உண்டாகட்டும். உங்களுடன் விபரமான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. நாந்தான் எப்போதும் லேட் மாஸ்டர். :((கொலு வெகு அழகு. எத்தனை விதமான பொம்மைகள்! பல வருடங்கள் வாங்கி சேர்த்திருக்கிறார்கள். படி கட்டி வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். துரை சாரின் கவிதை சூப்பர்! 

    ReplyDelete
  20. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    தாமதமானால் என்ன? தாங்கள் பதிவை ரசித்து தந்த நல்லதொரு கருத்துக்களும், பாராட்டுகளும் மன மகிழ்ச்சியை தருகிறது.

    ஆமாம்.. படிகள் அமைத்து கொலுவை வைத்திருந்தால், இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். துரை சகோவின் கவிதை மிகவும் அமர்க்களமாக இருந்தது. அனைவருமே ரசித்திருக்கின்றனர். தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  21. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    தாமதமானால் என்ன? தாங்கள் பதிவை ரசித்து தந்த நல்லதொரு கருத்துக்களும், பாராட்டுகளும் மன மகிழ்ச்சியை தருகிறது.

    ஆமாம்.. படிகள் அமைத்து கொலுவை வைத்திருந்தால், இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். துரை சகோவின் கவிதை மிகவும் அமர்க்களமாக இருந்தது. அனைவருமே ரசித்திருக்கின்றனர். தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  22. அன்பின் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      என் தளம் வந்து நீங்கள் அளித்த உங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களுக்கு என் அன்பான நன்றிகள். உங்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் என்றும்..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete