குடங்கள் காத்திருந்தன!
குடிநீரை சுமந்து செல்வதற்காக!
தண்ணீர் வண்டியும் வந்த பாடில்லை!
தாகம் தீரவும் வழியில்லை!
பாதையின் தொலை தூரத்தில்
பார்வையை பதிய வைத்து
அயற்சியை களைந்து தொய்வின்றி
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்!
பகலில் பளு சுமந்து
பழுதின்றி பணியாற்றி
குடிக்கும் குடிநீருக்காக
இரவில் கண்விழித்து
இன்னல் படுபவர்கள்.
ஒரு சாண் வயிற்றுக்காக,
எண் சாணையும் வருத்தி
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அனைத்து வர்க்கமும் பாடுபட்டால்,
அரைவயிறு சோறாவது,
அவ்வப்போது பகிர்ந்துண்ண முடியும்
ஆதரவற்ற இவர்களால்!
எப்போதோ இணைத்த தெருக் குழாய்களில்
எப்பொழுதுமே குடிநீர் வரவின்றி, அதன்
சுவாசங்கள் முற்றிலும் நின்று போனதில்
இவ்விடங்கள் தெருநாய்களின் வாசமானது
இவர்களின் பெரும் துரதிர்ஷ்டம்!
தேர்தல் பல வந்தாலும் அடிப்படை
தேவைகளை பெறவில்லை இவர்கள்!
மாலையும் மங்கிச் சரிந்துவிட்டது...
மயங்கிச் சரிந்தது கண்ணும் மனமும்...
இருள் சூழ்ந்து இனி "நாளை" என பகல்,
இருளிடம் விடை பெற்றுச் சென்றது.
இனி இரவில் சிறிது கண் துயின்றால்,
இயலாமையை சற்று விரட்டி விட்டு
பகலவன் வருவதற்குள் பதறி எழுந்து
பணி செய்ய இயலும் இவர்களால்!
காத்திருப்போரின் பொறுமை
சிதைந்து, முனங்கல்களும்
சினங்களும் தடங்கலின்றி
வெளிவந்தன..முடிவில் வந்தது....
குறை தீர்க்கும் குடிநீர் அல்ல!
குமைந்த நெஞ்சங்களின்
வெறுப்பும் வேதனையும் ஏற்படுத்திய
வெதும்பல்களின் விளைவால் வந்தது
வழி பார்த்திருந்த இவர்களின் விழி நீர்!
இவர்களின் விழிநீரை சேகரித்து
வடித்திட்டு வீதிகளின் குழாய்களில்
வாகாய் ஓட விட்டிருந்தாலும்,
அத்தனை தெருக்குழாயிலும்
அன்புடன் சிறிது நேரம்
ஆதரவாய் கொட்டியிருக்கும்.
இனி நாளை பார்த்துக் கொள்ளலாம்
என்ற( அவ) நம்பிக்கையுடன்
களைப்புடன், கனத்த மனதுடன்,
கலைந்து போனார்கள் அவர்கள்.
குடங்கள் மட்டும் மறுபடியும்
குறைவறவே காத்திருந்தன!
நாளை கண்டிப்பாக (வாரா) வரும்
குடிநீரை சுமப்பதற்காக !!!
கவிதை இன்றைய தண்ணீர் தட்டுப்பாட்டின் நிலையை சொன்னதோடு...
ReplyDeleteஅரசின் போக்கையும் தோலுறித்து காட்டியது அருமை.
வணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் என் பதிவினுக்கு முதலில் வருகை தந்தமைக்கும், சிறப்புடன் தந்த கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
இன்றைய தட்டுப்பாடுகளில் தண்ணீர் பிரச்சனையும் முதலிடம் வகிக்கிறது. இது இன்று நேற்றில்லை... என்றிலிருந்தோ, இந்த பிரச்சனை இருந்து கொண்டுதான் வருகிறது. காலம் தவறாது மழை ஒன்றுதான் இதற்கு தீர்வு. அந்த காலத்தைதான் மரங்களை வெட்டி வீழ்த்தி, அதன் முகம் சுளிக்க செய்து நாம் அப்புறப்படுத்தி விட்டோமே.
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். தண்ணீருக்காகக் கண்ணீருடன் காத்திருக்கும் மக்கள். அவர்கள் ஆசை நிராசையாகவே ஆகிறது எப்போதும்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
/தண்ணீருக்காகக் கண்ணீருடன் காத்திருக்கும் மக்கள். அவர்கள் ஆசை நிராசையாகவே ஆகிறது எப்போதும்.../
உண்மைதானே.. குடிக்கும் நீரின்றி குடங்களுடன் காத்திருப்பது எவ்வளவு கொடுமை. நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே ஏற்படும் என்று சொல்கிறார்கள். தண்ணீருக்காக அலையும் மனிதனின் இந்நிலைக்கு அவனே பொறுப்பு. பணம் ஒன்றுதான் பிரதானம் என்று நினைத்து மரங்களை வெட்டி விடுகிறான். மழை நீரைச் சேமிப்பதில்லை. மணல்களை விற்று விடுகிறான்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
/அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே ஏற்படும் என்று சொல்கிறார்கள். தண்ணீருக்காக அலையும் மனிதனின் இந்நிலைக்கு அவனே பொறுப்பு. பணம் ஒன்றுதான் பிரதானம் என்று நினைத்து மரங்களை வெட்டி விடுகிறான். மழை நீரைச் சேமிப்பதில்லை. மணல்களை விற்று விடுகிறான்.../
நிச்சயமாக அனைத்தும் உண்மை. இனி கணிசமாக மரம் வளர்த்து, பெய்யும் மழை நீரையும் சேகரித்து, இயற்கையை கட்டிக் காத்தால், நீங்கள் குறிப்பிடும் யுத்தம் வராமல் சமாளிக்கலாம். நடக்க வைப்பது ஒவ்வொரு மனிதனின் கையில்தான் உள்ளது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான கவிதை. ஸ்ரீராம் சொல்வது போல், அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காவே இருந்தாலும் இருக்கலாம்.
ReplyDeleteஇவ்வளவு கஷ்டம் இருந்தும் தண்ணீரை இன்னமும் வீணடிப்பவர்கள் நம்மில் பலர் உண்டு.
பாராட்டுகள்....
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
சகோதரர் ஸ்ரீராம் குறிப்பிடும் நிலை சற்று கவலைப்படும்படியாகத்தான் உள்ளது. பூமியின் நீர் வளத்தை நாம்தான் அழித்து வருகிறோம்.
/இவ்வளவு கஷ்டம் இருந்தும் தண்ணீரை இன்னமும் வீணடிப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. /
உண்மைதான். தண்ணீரை அநாவசியமாக செலவு செய்பவர்களைக் கண்டால் எனக்கும் வருத்தம் வரும். நாங்கள் ஊர்கள் மாற்றி வாழும் காலங்களில், இருக்கும் இடங்களில், தண்ணீருக்காக சிரமங்களை நிறைய அனுபவித்துள்ளோம்.
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தண்ணீர் கவிதை மிக அருமை.
ReplyDeleteதண்ணீர் தனக்கு மட்டும் என்று மோட்டார் போட்டு இழுத்துக் கொள்ளும் சுயநலமிகள் இருக்கும் வரை காத்து இருக்கும் மக்கள் எப்போதும் இருப்பார்கள்.
ஒரு நாள் இவர்களின் கண்ணீரும் வரண்டு போனால் !
மதுரை வந்த பின் தண்ணீருக்காக மக்களின் தவிப்பை பார்க்கிறேன், வருத்தமாய் இருக்கிறது.
மரங்களை வளர்த்து,மழை நீரை சேகரித்து, இருக்கும் நீரை சிக்கனமாய் செலவழித்தால் வரும் தலைமுறைகளும், நாமும் வளம் பெறுவோம்.
நீங்கள் பன்முக வித்தகராக இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
தண்ணீருகான போட்டிகள் எங்கும் எப்போதும் உள்ளன.
/மதுரை வந்த பின் தண்ணீருக்காக மக்களின் தவிப்பை பார்க்கிறேன், வருத்தமாய் இருக்கிறது./
உண்மைதான் சகோதரி. நானும் மதுரை அருகில் பல ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறேன். அப்போதும் தண்ணீர் பஞ்சந்தான். ஒரு நாள் விட்டு வரும் குடிநீரும் மழை இல்லாததினால் பொய்த்துப் போக, நிலத்தடி நீரும் வற்றிப்போக தண்ணீர் கஸ்டந்தான்.
லாரி தண்ணீரை எதிர்பார்த்து இருந்த காலங்கள் நிறைய.. அதனால் என மனதில் எழுந்த தாக்கங்கள் இவையாக இருக்கலாம்.
/மரங்களை வளர்த்து,மழை நீரை சேகரித்து, இருக்கும் நீரை சிக்கனமாய் செலவழித்தால் வரும் தலைமுறைகளும், நாமும் வளம் பெறுவோம்./
உண்மை. நாம் நம் தலைமுறைக்காவது, தண்ணீர் கஸ்டத்தை தராது, மரம் வளர்த்து, மழைநீர் சேமித்து, இயற்கையைப் பேணி, சிக்கனமாய் நீரை செலவு செய்து அவர்கள் வளம் பெற உதவ வேண்டும்.
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
தங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
குடங்கள் வீதிகளில்
ReplyDeleteகாத்திப்பது தெரியவில்லை...
தேர்தலின் போது வருகிறார்கள்
நம் வீதிக்கு
அரசியல் வாதிகள்...!
தண்ணீரின் அருமை பலருக்கும் தெரியவில்லை. குறைவாக உபயோகிக்க தவறுகிறார்கள்....அருமையான கவிதை சகோ
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
குடங்கள் காத்திருக்காத நிலையையும், குடிநீர் பற்றாக்குறை வாராத சூழ்நிலையும் அனைவரும் இனியாவது பெற வேண்டும் .
/தண்ணீரின் அருமை பலருக்கும் தெரியவில்லை. குறைவாக உபயோகிக்க தவறுகிறார்கள்/
அதுவும் உண்மைதான். நான் என் உறவின் வீட்டுக்கு சென்ற ஒருசமயம் "குடிநீர் சிக்கனம்.. தேவை இக்கணம்" என்ற வாசகம் அவர்கள் வீட்டு சமையலறையில் குடிநீர் வரும் குழாய்க்கு மேல் எழுதி வைத்திருந்தார்கள். அதை பார்க்கும் போதே, சிக்கனமாக உபயோகிக்கத் தோன்றியது. அதை போல் அனைவரும் தண்ணீரை குறைவாக உபயோகித்தால், பலன் நமக்கு மட்டுமின்றி நம் சந்ததிகளுக்கும் கிடைக்கும்.
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையாக எழுதியிருக்கீங்க
ReplyDeleteசகோ/ கமலாக்கா
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
பழைய பதிவென்றும் பாராமல், படித்து ரசித்து கருத்துக்கள் இட்ட தங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை சகோதரி. இந்த ஒரு குணப்பாங்கிற்காக உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளதென்பேன். நன்றி.. நன்றி..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeletespoken english material
Learning Books for spoken english
Learning Spoken english materials
Learning Spoken english from home
Home study English
English home study pack
English training books
Spoken English Study Pack
Spoken English training pack
Spoken English self study