Pages

Sunday, June 17, 2018

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..


இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும்  ஒவ்வொரு  நாட்டிலும்,  நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் 
இந்த தினம் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, ஜப்பான், இந்தியா  ஆகிய நாடுகளில் மட்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று  தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது.  ஒவ்வொரு வீட்டடிலுமுள்ள அங்கத்தினருக்கு (அன்னை, தந்தை  பெற்றோர்கள் குழந்தைகள் சகோதர சகோதரிகள்) , என ஒரு வருடங்களில் வரும் ஒவ்வொரு  மாதங்களிலும், குறிப்பிட்ட தேதியில் ஒவ்வொருவருக்கும் உரிய தினமாக அறிவித்து கொண்டாடபட்டு  வருகிறது. 

அதன்படி இன்று தந்தையர் தினம்

தாய் தந்தை இருவருமே நம் முகத்தின் இரு விழிகள். ஒரு மனித முகத்தில் இரு விழிகளையும் ஒரே நேர்  கோட்டில் ஆண்டவன் படைத்த காரணமே இரு விழிக்குள்ளும் பாரபட்சம் என்ற வேறுபாடு வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான். ஆனால், பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் நமக்காக பார்த்து பார்த்து செலவு செய்து நம் நலனுக்காக பாடுபடும் அப்பாவை சில வீடுகளில் இரண்டாவதாகத்தான் கருதுகிறார்கள். தந்தையின் கண்டிப்பு சற்று பிடிக்காத காரணத்தால், என்றுமே அவர் நம் நல்லதுக்காகத்தானே சொல்லுவார் என்ற எண்ணம் சிறிதுமின்றி அவரை, அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், அலட்சியபடுத்துகிறார்கள். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என நாலு பேரை நம் பிறப்பிலிருந்து ஒரு சிறந்த பார்வையில், வைத்துப் பார்க்கிறோம். 
கடைசியில் இருக்கும் தெய்வம்தான்  மனித இனத்தை தலைமைச்சிற்பியாய் இருந்து செதுக்கி சரியான பரிமாணத்திற்கு கொண்டு வர, (மாதாவை) அன்னையின் மூலம் சிறந்த தகுந்த சிலை செய்வதற்கான கற்களை தேர்ந்தெடுக்கவும்,  (பிதாவை) தந்தையின் மூலம் அக் கற்களை வடிவமைத்து செதுக்க தேவையான பொருளீட்டவும், (குருவை) கல்வி கேள்வி அறிவுகளை கற்பிக்கும் ஆசிரியர் மூலம் உளி கொண்டு கற்களை  பின்னமில்லா அழகிய சிற்பமாக செய்யவும் செய்து, உலகில் உலா வரவும் பயன்படுத்திக் கொள்கிறான். இதில் மாதா, பிதா, குரு மூவருக்கும்  அவன் (தெய்வம்) தலைமைச் சிற்பியாய் இருந்து அவர்களையும் வேலை வாங்கி கடைசியில் நின்று கண்காணித்து பெருமை யடைகிறான். மற்ற  இருவரும் அவன் கட்டளைக்கிணங்கி உளி கொண்டு செதுக்கும் போது ஏற்படும் வலியினை, வெறுத்து நாம் சிற்பமாக மாறத் தயங்கினால், நஷ்டம் சிற்பத்திற்கேயன்றி, உளிக்கல்ல!. அதனால் ஏற்படும் கோப தாபங்களின் காரணமாக,  பெற்றெடுத்த உறவுகளை  மன சஞ்சலபடுத்தாமல், அவர்களின் சிறப்புகளை உணர்ந்து வாழ்வோமாக...இன்று நாம் அந்த பரிபூரண அன்பை  நம்மை பெற்றவர்களுக்கு தந்தால் நாளை நம் குழந்தைகளிடமிருந்து அது நிச்சயமாக  திருப்பி நமக்கு கிடைக்கும்.

எனவே எப்பொழுதும், உறுதியாக நிலைத்திருக்கும்  வாசகங்கள்.... 

தாயிற் சிறந்த கோவிலுமில்லை ..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. 

தந்தையர் தினப் பதிவுக்காக நான் எழுதியதுடன் நான் படித்து பிடித்த கதை ஒன்றையும் இத்துடன் பகிர்ந்துள்ளேன். அனைவரும் படிப்பதற்கு மிக்க நன்றி. 

வலையுலக சகோதரர்கள் அனைவருக்கும் என்றுமே தந்தையர் தின நல்வாழ்த்துகள். 


படித்ததில் பிடித்த கதை.
========================
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி... மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பதுதானே அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது .இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை .கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.

குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக. மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. 

“நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின் பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார். 

நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித் தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
அந்த மகன்.



தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.



அன்னையர் தினம் எழுதும் போது யதேச்சையாக 100வது பதிவாக அமைந்தது. நடுவில் ஒரு வருட காலங்கள் எதுவும் எழுதவில்லை. மறுபடியும் துவங்கும் காலத்தில் தந்தையர் தினம் பற்றி எழுதும் போது, யதேச்சையாக பார்க்கிறேன். இது 150 தாவது பதிவு.  தந்தையின் ஆசிகளை பெற்ற ஒரு மகிழ்வு...ஒரு நெகிழ்வு.. அனைத்தும் கிடைத்திட்ட ஒரு  திருப்தி...... தங்களின் அன்பான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் காத்திருக்கும் உங்கள் சகோதரி... 
மிக்க நன்றி....

   =======🌼==🌼====🙏====🌼==🌼=======


31 comments:

  1. ஆவ்வ்வ்வ்வ் இம்முறையும் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. என்னை ஆரும் வெல்லவே முடியாது:)).. பூஸோ கொக்கோ?:) ஹையோ ஓவரா சவுண்டு விட்டிட்டமோ?:) சந்திராஸ்டமம் வேறு நடக்குதாமே எனக்கு:) எதுக்கும் அடக்கி வாசிப்போம்:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் முதலில் வருகை தந்தமைக்கு என மனப்பூர்வமான மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் சவுண்டு எனக்கு இனிமையான சங்கீதமாக உள்ளது. எனவே சந்திராஷ்டமம் பற்றி கவலை வேண்டாம்.:)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மிக அழகாகச் சொல்லிட்டீங்க.. அம்மா அப்பா பற்றி.. உண்மைதானே.. யாரும் எதிலும் குறைவில்லையே.. அப்பாவுக்கென சில பொறுப்புக்கள் கடமைகள்.. அதுபோல அம்மாவுக்கும். இருவர் இன்றி நாம் பிறந்திருக்க முடியாதே.

    தந்தையின் சிக்கனக் கதை அருமை... அட்வைஸ்கள் எப்பவும் கசக்கும்தானே?:)). அதுக்கு நாம் யாரும் விதி விலக்கல்ல:)), ஆனால் அந்த அட்வைஸ்கள் நமக்கு எவ்வளவு உதவியிருக்குது என்பதை காலம் கடந்துதான் நாம் உணர்கிறோம்:(.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்திட்டேன்.. அனைத்து அப்பாக்களுக்கும் அப்பா ஆகப் போகிறவர்களுக்கும்.. அப்பாக்கள்தின வாழ்த்துக்கள்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..
      அன்னை தந்தையே அன்பின் எல்லை.. .
      பெற்றோர்களின் அன்புக்கு ஈடேது?

      /தந்தையின் சிக்கனக் கதை அருமை... அட்வைஸ்கள் எப்பவும் கசக்கும்தானே?:)). அதுக்கு நாம் யாரும் விதி விலக்கல்ல:)), ஆனால் அந்த அட்வைஸ்கள் நமக்கு எவ்வளவு உதவியிருக்குது என்பதை காலம் கடந்துதான் நாம் உணர்கிறோம்:(/

      உண்மையாக கூறியுள்ளீர்கள்.யார் அட்வைஸ் சொன்னாலும் முதலில் அவரை நம் எதிரி லிஸ்டில் சேர்த்து விடுவோம். அது நம்முடைய இயல்பான குணம் (இது முதலில் மனம் எடுக்கும் முடிவு. அப்புறமாக புத்தி இருந்தால் அறிவுரையின் நன்மைகளை அலசி ஆராய்ந்து நமக்கு உணர்த்தும்) இல்லையா.. காலம் கடந்து உணரும் போது எவ்வளவு பயன்கள் வீணாகி போயிருக்கும்..மன வருத்தங்கள் கூடியிருக்கும்.. அதைப்பற்றி யார் கவலைப்படுவது? தங்களின் அருமையான கருத்துகளுக்கும் தொடரும் தங்களது வரவுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. முதலில் 150 வது பதிவுக்கு வாழ்த்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துக்கள் என் எழுத்துக்களை மேலும் முன்னேற்றும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இந்தச் சிறுகதையை முன்னரே படித்திருக்கிறேன் என்றாலும் மறுபடி முழுமையாக வாசித்தேன். என் அப்பா நினைவுக்கு வருவார். எல்லோருக்கும் அப்படித்தான் இல்லையா? கண்கள் கலங்கும். என் அப்பா நினைவு வந்தது... பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் முன்னரே படித்துள்ளதற்கு நன்றி. எனினும் இப்போதும் முழுமையாக வாசித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.என் பதிவு தங்கள் அப்பாவை நினைவில் கொண்டு வந்ததா? ஆழ்ந்த வருத்தங்கள்... எனக்கும் எழுதும் போது கண்கள் கலங்கின. அவரின் பேச்சுக்களை மதித்து நடந்திருந்தாலும், கதையை படிக்கும் சமயத்தில், நாமும் இந்த மாதிரி சில சமயங்களில் மனசுக்குள் கோபப்பட்டு அவரை வருத்தப்பட வைத்திருக்கிறோமோ என எண்ண வைத்தது. இன்று அதை பற்றி நினைத்து வருந்தும் பொழுதினிலும், அப்பாக்களின் ஆசிகள் கண்டிப்பாக நம் அனைவருக்கும் எந்த நாளும் துணையாக வரும். அதில் எவ்வித மாற்றமேதுமில்லை. தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. எல்லாத் தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். எனக்குக் குறிப்பா இந்த தினங்கள் கொண்டாடுவது அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் ஊரோடு ஒத்து வாழ வேண்டுமே! :))))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்களின் வரவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி.

      இந்த மாதிரி தினங்களை நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறித்தானே கொண்டாடுகிறோம்.அந்தக் காலத்தில் நம் குழத்தைகளுக்கு முதல் வருடப்பிறப்பிற்கு ஆயுஷ்ஹோமம் சிறப்பாக பண்ணுவோம். அதன் பின் வருடங்கள் தோறும் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று அருகிலுள்ள கோவிலுக்கு சென்று அவர்கள் பேரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வருவோம். ஆனால் தற்சமயம் பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாட அனுமதிக்கிறோம்.( இல்லை.. அனுமதிக்கற மாதிரி மெளனமாக இருக்கிறோம்.அவர்களின் ஆசையை கெடுப்பானேன் என்ற நலலெண்ணத்தில்.. ) இப்படித்தான் இந்த தினங்கள் "நான்.. நீ.." என போட்டி போட்டுக்கொண்டு நம்மிடையே வந்து விட்டன. அதனால்தான் தாங்கள் கூறுவது போல் "ஊரோடு ஒத்து வாழ்". தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. முதலில் 150-ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    இனிய தந்தையர் தின வாழ்த்துகளும்...

    அறிந்த கதையாயினும் இன்றைய தினத்தில் பொருத்தமானதே...

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      படித்த கதையாயினும், மீண்டும் படித்து இந்த தினத்திற்கு பொருத்தமானதே என்று சொன்னற்கும், 150 தாவது பதிவுக்கு வாழ்த்துகள் தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

      தங்களின் ஊக்கமிகு கருத்துகள் என் எழுத்தை செம்மையாக்கும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. 150-ஆவது பதிவு..
    இன்னும் பலநூறு பதிவுகளை வழங்கிட வேண்டும்...

    அன்பின் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்...
    பொறுப்புள்ள தந்தையை அடையாளம் காட்டியது - பதிவு!..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இன்னும் பலநூறு பதிவுகள் வரவேண்டுமென்ற தங்களின் நல்மனதுக்கு தலை வணங்குகிறேன்.
      தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துரைகளும். வாழ்த்துகளும் என் எழுத்தை சிறக்கச் செய்து தங்கள் வாழ்த்தை பலிக்கச்செய்யும் என நம்புகிறேன்.

      பதிவை பாராட்டிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    நான் அப்பா செல்லம். அப்பாவைப் பற்றி எப்போதும் எங்க அப்பா இப்படி என்று தான் பேசிக் கொண்டே இருப்பேன் என் கணவரிடம், என் குழந்தைகளிடம்.அம்மா கண்டிப்பு, அப்பா செல்லம் எங்கள் வீட்டில்.

    கதை மிக அருமை.
    சரியான சமயத்தில் கதையை பகிர்ந்து கொண்டீர்கள்.
    தந்தையர் தின வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /நான் அப்பா செல்லம். அப்பாவைப் பற்றி எப்போதும் /எங்க அப்பா இப்படி என்று தான் பேசிக் கொண்டே இருப்பேன் என் கணவரிடம், என் குழந்தைகளிடம்.அம்மா கண்டிப்பு, அப்பா செல்லம் எங்கள் வீட்டில்./

      தங்கள் வீட்டில் தாங்கள் அப்பா செல்லமாக இருந்தது மிகவும் மகிழ்வை தருகிறது சகோதரி... பழைய நினைவுகளை நம் குடும்பத்தில் சொல்லி மகிழும் போது சந்தோஸமாகத்தானே இருக்கும். சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். அவர்களும் மகிழ்ந்திருப்பார்கள்.

      கதையை பகிர்ந்த விதத்தை கூறி. பாராட்டும். வாழ்த்துகளும் தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.

      எனக்கு நேற்று நேரமே கிடைக்கவில்லையாததால், உடன் வர இயலவில்லை. இன்றும் தாமதமாக அனைவருக்கும் பதில் அளிப்பதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. தகப்பனின் தோளில் உலகத்தை காணும் படம் அழகு அது போன்ற படங்களை நான் நிறைய எடுத்து இருக்கிறேன்.

    அதை போடலாம் இன்று.
    தந்தையின் மார்மீதும், தோள்மீதும் விளையாடும் குழந்தைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      படங்கள அழகு என்று பாராட்டியமைக்கு நன்றி. உங்கள் பதிவிலும் அழகழகான படங்கள் பகிர்ந்துள்ளமைக்கு மகிழ்ச்சி.

      நேற்று உங்கள் பதிவில் சொன்னபடி அனைத்து தந்தையர் படங்களும் பகிர்ந்து அனைவரின் பாராட்டுகளும் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. முதலில் 150-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    நேர்காணல் பற்றிய கதை முன்னரே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்தேன் - ரசித்தேன். அப்பா சொல்லும்போது பிடிக்காது என்றாலும் நல்லதற்குத் தான் சொல்கிறார் அப்பா என்பதை புரிந்து கொள்ளும் போது தான் அப்பாவின் அருமையும் புரியும்.

    தந்தையர் தினத்திற்கான ப்திவு மிகச் சிறப்பு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      கதையை முதலில் படித்திருந்தாலும், என தளத்திலும் படித்து ரசித்தமைக்கு நன்றிகள்.

      /அப்பா சொல்லும்போது பிடிக்காது என்றாலும் நல்லதற்குத் தான் சொல்கிறார் அப்பா என்பதை புரிந்து கொள்ளும் போது தான் அப்பாவின் அருமையும் புரியும். /

      உண்மைதான். அப்பாவுடன் அருமை, நல்லதை உணர்ந்த பின்தான் புரியும். அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

      பதிவு சிறப்பு என்ற பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      தாமதமாக வந்து பதில் அளிப்பதற்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அன்பு கமலா,
    எங்கள் வீட்டிலும் என் தாத்தா,அப்பா எல்லோருமே
    சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.
    என் கணவரும் அப்படியே.
    குழந்தைகள் அப்படியே பின் பற்றுகிறார்கள்.

    உங்கள் கதை மிக அருமை. 150 ஆவது பதிவிற்கு மனம் நிறை
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்களின் அன்பு வருகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

      /எங்கள் வீட்டிலும் என் தாத்தா,அப்பா எல்லோரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.
      என் கணவரும் அப்படியே.
      குழந்தைகள் அப்படியே பின் பற்றுகிறார்கள்./

      தங்கள வீட்டில் சிக்கனத்தை பின் பற்றுவது குறித்து சந்தோஸம் அடைந்தேன். எங்கள் வீட்டிலும் அதிக ஆடம்பரம் கிடையாது. நம் சந்ததிகளின் வாழ்வாதாரத்தை உத்தேசித்து சிக்கனமாக செலவு செய்து வாழ்வது சிறப்புதானே..
      சிக்கனம் வீட்டை காக்கும் நாட்டை காக்கும் என பெரியவர்கள் சொல்லி வளர்த்தபடிதானே வாழ்ந்து வருகிறோம்.
      பெருமையாக உள்ளது.

      கதைக்கு பாராட்டு தெரிவித்து 150 தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நான் தாமதமாக வந்து பதிலுரைப்பதற்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! மேலும் மேலும் எழுத வாழ்த்துகிறேன்.
    அன்னையர் தினம், தந்தையர் தினம், இவையெல்லாம் சமீபத்ததில் வந்தது. நம் நாட்டில் அம்மாவையும், அப்பாவையும் நினைவு கூறும் தினம் என்பது வேறு.
    பெரும்பாலும் தந்தையின் தியாகம் போற்றப்படுவதில்லை.
    இண்டெர்வியூ கதை ஏற்கனவே படித்திருந்தாலும், உங்கள் டைமிங் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்கள் முதல் வரவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

      /அன்னையர் தினம், தந்தையர் தினம், இவையெல்லாம் சமீபத்ததில் வந்தது. நம் நாட்டில் அம்மாவையும், அப்பாவையும் நினைவு கூறும் தினம் என்பது வேறு.
      பெரும்பாலும் தந்தையின் தியாகம் போற்றப்படுவதில்லை./

      உண்மைதான் சகோதரி. இந்த தினங்கள் இப்போதுதான் உருவானவை.
      காலத்திற்கேற்ப நாமும் வளைந்து போக வேண்டி உள்ளது. தந்தையின் அன்பு சிலவிடங்களில், சிலநேரங்களில் புறக்கணிக்கப்படுகிறது. அவரின் கண்டிப்பான பேச்சினால் இருக்குமோ.. ஆனால் அந்த கண்டிப்புத்தான் நம் வாழ்க்கையை நேர் நிறுத்தி, சீர் திருத்தி அமைத்து தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      கதையை முன்பே படித்திருந்தாலும், என் தளம் வந்து படித்து ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நான் தாமதமாக வந்து பதில் அளிப்பதற்கு வருந்துகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. 150 வது பதிவிற்கு வாழ்த்துகள். மேலும் மேலும் நிறைய எழுத வேண்டுகிறேன்.

    தந்தையர் தின தங்களின் பதிவு என்னை பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டது. என் அப்பா, அம்மா இருவரையும் நிறைய மிஸ் பண்ணுகிறேன்...என்ன செய்வது கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...அறிவுக்கு புரிகிறது...ஆனால் மனம் மட்டும் விட மறுக்கிறது...

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /தந்தையர் தின தங்களின் பதிவு என்னை பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டது. என் அப்பா, அம்மா இருவரையும் நிறைய மிஸ் பண்ணுகிறேன்...என்ன செய்வது கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...அறிவுக்கு புரிகிறது...ஆனால் மனம் மட்டும் விட மறுக்கிறது.../

      என பதிவு தங்கள் பழைய நினைவுகளை தோற்று வித்ததற்கு வருந்துகிறேன்.
      என் பெற்றோர் என நினைவுகளில்தான் இப்போது.. வருத்தமாகத்தான் உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி எழுத்தாளி ஆக வேண்டுமென அப்போது அவர்களிடம் கூறுவேன். இப்போது எழுதும் சமயத்தில் அவர்கள் இல்லை. ஆசிகளை மட்டும் எதிர்பார்க்கிறேன். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்... நம் பெற்றோர்களின் ஆசிகள் நமக்கு என்றும் தப்பாமல் கிடைக்கும் சகோதரி. கவலைப்படாதீர்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. 150 வது பதிவுக்கு வாழ்த்துகள்...சகோ


    அருமையான பகிர்வு...


    இன்றே தங்கள் தளம் கண்டேன் ...இனி தொடர்கிறேன்...

    அன்புடன்
    அனுபிரேம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தங்களின் முதல் வருகையை ஆனந்தத்துடன் வரவேற்கிறேன்.

      இனி தொடர்கிறேன் என்றதற்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
      நானும் விரைவில் தங்கள தளம் வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. முதலில் 150 வது பதிவிற்கு எங்கள் இருவரின் வாழ்த்துகளூம்.

    தந்தையர் தினத்திற்கு ஏற்ற கதை.

    அக்கதையை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் இங்கும் வாசித்தோம். அருமையான கதை.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  16. வணக்கம் இருவருக்கும்

    தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

    படித்த கதையாயினும், மீண்டும் என் தளத்துக்கு வந்து ரசித்து படித்து கருத்துக்கள் இட்டிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் எனமனம நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete