Pages

Sunday, March 1, 2015

கனவு 2 ( இரண்டு )

நல்ல அசதியான தூக்கம்..!  கண்கள் மூடியிருக்க இருளாக இருந்தது.ஆனாலும் எங்கிருந்தோ வந்த சிறு வெளிச்சத்தில் நிறைய உருவங்கள் தெரிந்தது. கனவுமாதிரியும் இருந்தது, ஆனால் அது கனவாகவும் தோன்றவில்லை.! இல்லையில்லை, நிஜமான உருவங்கள்தான், எல்லா கடவுள்களும் வாய்மூடி மெளனித்து ஆனால் இள நகையுடன் அமர்ந்திருக்க, கொஞ்சம் தள்ளி மனித உருவங்களாய் சிலரது உருவங்கள், அட! நமக்கு தெரிந்த உருவங்களாய் இருக்கிறதே.! என்று அருகில் நான் சென்று பார்க்க அனைவருமே ஒட்டு மொத்தமாக,கண் திறந்து வருக.! வருக!  என்றார்கள்.

நானும் புன்முறுவலுடன் வந்தனம் செய்து விட்டு, “உங்களையெல்லாம் இங்கு பார்ப்பேன் என்று கனவில் ௬ட நினைக்கவில்லை.!” என்று ஆரம்பித்தேன்.

இப்போது மட்டும் என்ன? அதில்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.!” அருகிலிருந்து  சரேலென ஒருகுரல் என்னை தாக்கியது. யார் சொல்வது என்று பார்ப்பதற்குள், “என்ன  இப்போதெல்லாம்  எழுத்துலகில், எங்களை பற்றியெல்லாம், இல்லையில்லை! எங்களைப் போலெல்லாம் எழுதி, நீங்கள்  மறு சுழற்சி செய்கிறீர்களாமே.? “கணீரென்ற குரல் காதுக்குள் வந்து விழுந்தது.

அட யார்.? நம்ப முண்டாசு கவிஞர்..!  “ஐயா நலமா.?ஆமாம். ஏதோ உங்கள் புண்ணியம்.. உங்கள் பேர் சொல்லி நாங்களும் வாழப் பார்க்கிறோம்..! என்ன இருந்தாலும், தங்களை போல் நாங்கள் எல்லாம் வர முடியுமா.? “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?” என்று தாங்கள் எதிர்பார்த்தபடி, இன்று எங்கள் சுதந்திரத்தின் தாகங்கள் தீர்ந்துஎன்று  நான் ஆரம்பித்த உடனே தொண்டையில் ஏதோ அடைத்த மாதிரி பேச்சே வரவில்லை.!  “மறுபடியும் தாகமா.?” அவர் குரலில் தொனித்தது, ஏளனமா? கோபமா? என்று ஒரு கணம் யோசிப்பதற்குள், எப்படி? நீங்களெல்லாம் எப்படி? என்றார் அதே குரலில்.....!  தொண்டையை செருமியபடி, “நீங்களின்அர்த்தத்தை  நான்  உள்வாங்கியபடி, “நீங்கள் எதிர்பார்த்தபடி பெண்ணுலகம் இப்போது புதுமையாக முன்னேறி இருக்கிறது. புதுமை பெண்களாகநாங்கள் புவனத்தில்முடிப்பதற்குள்பார்த்தேன்! பார்த்தேன்! பார்த்துகொண்டேதான் இருக்கிறேன்.”என்ற குரலின் முரட்டுத்தனத்தில், மேற்கொண்டு பேச எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.!

யாகவராயினும் நா காக்க ! என்ற அமைதியான குரலில் சற்று தெளிந்து நான் திரும்ப, ஏடுடன் என்னை  ஏறிட்டார் வள்ளுவனார்..! திருவள்ளுவரா.! சரி..! சரி..! முதலாமவருடன் சற்று சமாதானமானதும் அப்புறமாக பேசலாம் !என்று முடிவெடுத்துப் பின் இவரை கண்ட மகிழ்வில், ”வணக்கம் ஐயா! தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! தங்கள் குறள் வழியில் நாங்கள் நடக்கிறோம்.! ஒவ்வொன்றும், சிறு வயதிலிருந்தே கற்ற சிறந்த குறளின்படி .. முடிப்பதற்குள் இவரும் இடைப் புகுந்தார்.

சரி.! சொற்க் காத்து சோர்விலாள் பெண்!” என்ற குறள் நினைவிலுள்ளதா.? என்று தேர்வில் கேட்பது போல் அவர் வினவவும், “தெரியுமே.! என்றபடி அவசரமாக, தற்காத்துத் தற்கொண்டான்ப் பேணி..என்று ஆரம்பிக்க, “நிறுத்து! உனக்கு தெரியுமென்பது எனக்கும் தெரியும். நீங்கள் அவ்வழியில் நடக்கிறீர்களா.?” என்றபடி பதிலை எதிர்பாராத முக பாவத்துடன் அவர் ஏட்டைப் புரட்டியபடி சிந்தனையில் மூழ்கிப் போனார். “என்னடா இது.? எதைப் பேச வந்தாலும் அனைவரும் ஏதோபொடிவைத்தே பேசுகிறார்களே.! என்று என் மனம் புலம்ப,  இருப்பினும் துணிவை வரவழைத்தபடி, “ஐயனே.! எனக்கு உங்களைப் பற்றி, நீங்கள் அக மகிழ்ந்து தமிழுக்கு தந்த விலை மதிப்பில்லாத, ஈரடி செய்யுள் குறித்து ஏதேனும் திறம்பட நான் எழுதி வரும் என் உலகில் எழுத வேண்டும் என்ற அவா.! தாங்கள்தான் மேலும் உதவி செய்ய வேண்டும்..! மேலும்.. நான் என் உலகம்  என்று ,சொல்ல  வந்தது,” நான் முடிப்பதற்குள், இடைமறித்தவர், "அதுதான் தமிழ் என்றுமே மணமாக  இருக்க, மணக்க, மணக்க ஒருவர் என் குறள் அணைத்தினையும், மனனம்  செய்து அதற்கு தக்கபடி ஒவ்வொரு சிறப்பான கட்டுரைகளை எழுதி,திருக்குறளினால், என்னையும் பெருமை படுத்தி,தானும் பெருமையுடன் உயர்ந்து  வருகிறாரே.! அதையும் கெடுக்கலாம் என்ற  நினைப்பா.? என்றபடி, “இவருக்கு ஏதோ உதவி வேண்டுமாம்.! என்று அருகிலிருந்தவரிடம், ஏதோ முணுமுணுத்து விட்டு, “அப்பாடா…! எவ்வளவு நேரம்  அமர்ந்திருப்பது.! கால்கள்  மரத்தே போய் விட்டது.! இதில்  இந்த  அம்மையாரின்  தொந்தரவு வேறு.! என்றபடி எழுந்து மறைந்தே போனார்..

திடும்மென அவர் மறைந்து விட்ட அதிர்ச்சியோடு முண்டாசு கவிஞர் இருந்த இடம் நோக்க, அவர்  எப்போதோ காணாமல் போயிருக்க, அருகிலிருந்தவரை பார்த்தேன்.. இவர்அட ..! நம் தேசத்தின் தந்தை.! சுதந்திர இந்தியாவுக்காக தன் வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர்.. அத்தனையும் மறந்து அவரை கண்ட மகிழ்வோடு, பேச ஆரம்பித்தேன். நலம் குறித்த உரையாடல் முடிந்ததும், "சிவனே என்று அமர்ந்திருந்தவரை இப்படி எழுந்து போக வைத்து விட்டாயே.! அப்படி என்ன கேட்டாய்.?" என்று வினவ, நான் விளக்கமளித்தேன். ௬டவே உங்களைப் பற்றியும் பரபரப்பாக எழுத எனக்கு உதவுவீர்களா.? என்ற கோரிக்கையை வைத்ததும், தடி ஊன்றி எழுந்து நின்றார். ஏற்கனவே ஒருவர் கண்ட கனவில், என்னை சந்தித்து   நிறைய கேள்விகள் கேட்டு, பதிலளித்து அவர் திறமையை கண்டு வியந்து, அவர் அன்பை தட்ட முடியாமல் அவரின் நண்பர்களையும் கண்டு அளவளாவி அந்த மகிழ்வோடு இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை முறியடிக்கலாம் என்று இன்று என்னைத் தேடி வந்தாயா.? அவர் எழுதாததையா நீ எழுதப் போகிறாய்?, இல்லை அவர்கள் அளவுக் கெல்லாம் உன்னால் சிந்தித்து எழுத முடியுமென்று நினைக்கிறாயா.? என்று கேள்வி மேல் கேள்வி வந்து விழவும், அவர் என்னிடம் நம்பிக்கையில்லாமல் பேசியதைக்௬ட கண்டு கொள்ளாமல், அவர் குறிப்பிடுபவரை அறிந்து கொண்ட மகிழ்வில். ம்.!“அவர்தானே! அவரை நான் அறிவேன் அவர் பெயர்….” என்று நான் கேட்டு ஊர்ஜித படுத்துவதற்குள், “ஆமாம்இந்த காந்திஜீயின் , இரும்பான  மனதேயே கவர்ந்த அவரும் ஒரு காந்தஜீதான்..! அதில் சந்தேகமேயில்லை.! என்றபடி என்னை சட்டை செய்யாமல், வேகமாக நடந்து மறைந்தார்..!

காணும் அனைவரும் இப்படிபொசுக் பொசுக்கென்று மறையும் வேதனையில், இன்னமும் தெரிந்த முகங்கள் யாரென்று கவனித்துஎழுதும் ஆற்றலை வளர்க்க விரும்பிய போது, தள்ளாத வயதிலும், திடமான முகத்துடன் கண் மூடி மந்திரங்கள் ஜெபித்தபடி, “முருகா.!” என்று வாய் விட்டு அரற்றியபடி திரும்பினார். அந்த அம்மையார். அட.! இவர்  நம் தெய்வத்தை வாய் நிறைய அழைக்கிறாரே.! இந்த அம்மையார்  ஔவையார்தான் சந்தேமேயில்லை.! என நினைத்து  “வணக்கம் தாயேநானும் தங்களைப் போல் என்னப்பன் முருகனை தினமும், என்பதற்குள்  கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து, தானும் தன் என்று கணீரென்ற குரலில் பாடி முடித்தார். நாம் வாய்த் திறப்பதற்குள், முந்தி கொண்டாரே, என்ற கவலையில் ஏதும் கேட்கத் தோன்றாமல் மெளனித்திருக்க, "குழந்தாய்.! முருகனிருக்க பயமேன்.! முருகனை நேசிக்கிறாய்..! ௬டவே தமிழையும் நேசிப்பதாய் அர்த்தம் அல்லவா.! முருகனும், தமிழும் உன்னை அரவணைப்பார்கள்.! என்றபடிமுருகா! அனைவரையும் காப்பாற்று.! என்று அவரும் நடந்து மறைய, இளநகையுடன் அமர்ந்திருந்த தெய்வங்கள்  அனைவருமே, “சர், சர்என்று காணாமல் போக, நான் மட்டும் இருளில் தனித்திருந்து  திருதிருவென தவிக்க, பளீரென்ற மயிலுடன் முருகன் ௬டவே முகம் தெரியாத ஒருவருடன்விர்ரென்று வந்திறங்கினான்.

முருகா.! முருகா..! நீயாவது என்  தனிமையை விரட்ட வந்தாயே.!  நீதான் எனக்கு என்றும் துணை.! நீ என்றுமே உன்னை மறவாத வரத்தை தந்தருள வேண்டும்.! என்று என் வாய் அரற்ற ஆரம்பிக்க, “சரி.! சரி! நான் ஒருவன்தான் உன்னை பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால்., அன்றே உனக்காக இரக்கப்பட்டு தொலைத்து, உன் அழகு தமிழை சகிக்க கற்று கொண்டேன். என்னுடன் இவரும் மாட்டிக்கொண்டார். இப்போது ௬ட வழியில் சந்தித்த அவ்வைக்காகத்தான்  வந்தேன். சொல்லு! என் பெயர் சொல்லி என்ன எழுதி வைத்திருக்கிறாய்.?” என்றவன். “வேறு வழியில்லை! சகித்துதான் ஆகவேண்டும். என்னுடன் சேர்த்து  நீங்களும்.” என்று அருகிலிருந்தவரிடம் முணுமுணுத்தான். அது அவனை பொறுத்தவரை முணுமுணுப்பாயினும், எனக்கு நன்றாய் கேட்டது.

நீயாவது என்னை புரிந்து கொண்டாயே முருகா.! என்றபடி, மனதில் எழுதி மனனம் ஆகியிருந்ததை, ஒப்புவிக்க ஆரம்பித்தேன்.

முருகா
.
அன்றிலிருந்து, இன்றுவரை  நான் இப்பூவுலகில்,
ஆணவமின்றி ஆசைப்படுவது ஒன்று தான்..  முருகா.!
இயல்பான   தமிழால்,   உன்னழகு  நடையோடு,
ஈன்ற  என் கவியை,  புவியில்  சிறப்பாக்குவாய்….முருகா..!
உலகம் முழுவதுமே, போற்றிப் புகழ வேண்டுமென,
ஊமை  நான்கனவெல்லாம் கண்டதில்லையேமுருகா..!
எண்ணுவதெல்லாம்  எளிதாக உணர்த்தும் எழுத்தினிலே,   
ஏற்றங்களை மட்டுமேபெரிதாக்க வேண்டினேன்முருகா…!
ஐயம்  களைந்து  உன் அருமைகளை  தினம் சொல்ல,
ஒப்புதல்தாவென உன்  மலர்த்தாள்பற்றினேன்முருகா..!
ஓங்கி  உயர்ந்திருக்கும்  உன் புகழை என்நாவிசைக்க,
ஔவையாய்  என்னைஅரைநொடியாவது  மாற்றுவாய்…. முருகா..!
அஃத்தொன்றையே, இப்பிறவியில் அருந்தவமாய் நான் பெற்றிடவே,
அல்லும், பகலும்  உன் அடி பணிந்து  துதிக்கின்றேன்..!  முருகா..!

என்று நான் எழுதி வைத்ததை மனப்பாடமாக  ௬றியதும், போதுமா.? சகித்தாயிற்றா.? என்று அருகில் அவரைப் பார்த்து கேட்ட முருகன், என்னைப் பார்த்து, “இனி இவரையும் இடைவிடாது தொழு.! ஏனென்றால் இவர் அருள் இல்லையென்றால் உன் அறுவை எழுத்துக்கள் எதுவும் மேடையேறாது.! என்றான்.

முருகா.. ஒரு சிறு ஐயம்இவர் யார் எந்த ஆண்டவர் என  தெரிந்து கொள்ளலாமா? என்றேன்.

இவர்தான் ௬குளாண்டவர்..! இனி எந்தவொரு எழுத்தையும் இவரை வணங்கியே பிரசுரித்து விடு.! என்னை தொந்தரவு செய்யாதே.! என்றபடி மறுபடியும் விருட்டென்று, மயிலுடனும் வந்தவருடனும் பறக்க,” இவர்தான் ௬குளாண்டவரா ? என்று நான்  பிரமித்து அத்தனை தெய்வங்களையும் கண்ட மகிழ்வுடன்  இருட்டிலிருந்து தீடிரென்று வெளிச்சம் கண்ணில் பட கண் ௬ச விழி  மலர்ந்தேன்.

என்னம்மா.! பதிவு எழுதுகிறேன், பதிவுஎழுதுகிறேன்  என்று பையித்தியமாய் ராத்திரியெல்லாம் , , ன்னாவெல்லாம் சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டாய்? என்று மகன் உலுக்கிய மாதிரி இருந்தது. கண்ணைத் திறந்தால், கண்டது அனைத்துமே கனவென்று புரிந்தது. சரி.! மேலும் சிலரை கனவினில் கண்டதாக சேர்த்து  இதையே ஒரு பதிவாக எழுதலாமே என்று தோன்றியது .  இதற்குகனவு 2 “ (கனவு 1 ல் ஏற்கனவே முருகனுடந்தான் பேச்சும், வார்த்தையும்) என்று பெயரிட்டு கொஞ்சம்  கற்பனை குழைத்து கட்டிடமாக்கினாலென்ன  என்று  தோன்றியது. கற்பனையாக, கனவில் வந்தவர்களுக்கும், கனவுடன் வந்தவர்களுக்கும் நன்றி…! முடிவில் கொஞ்சம் கற்பனை கலந்து இதையே ஒரு அறுவை  (வழக்கப்படி நீள் பதிவாகத்தான்) பதிவாக எழுதி விட்டேன். மனதில் முருகனை நினைத்து எழுதி வைத்திருந்த கவிதையையும், இந்த பதிவிலேயே இணைத்து விட்டேன். படித்தவர்களுக்கு நன்றி.! (பொறுமையுடன் என்று சொல்லவும் வேண்டுமோ..?)

4 comments:

  1. ரசித்து, ரசித்து படித்தேன் கனவு நீண்டு போனதின் அர்த்தம் புரிந்து விட்டது நான்கு நாட்களாக வலைப்பூவில் காணமுடியவில்லை 80ம் இதனால்தானோ.... ஏற்கனவே கனவில் வந்தாரா ?
    ஆத்திச்சூடி கவிதை அருமை எட்டையபுரத்துக்கவிஞனோடு, நமது அப்பத்தா ஔவாயாரும் வந்திருக்கின்றார்கள் முடிவில் முருகன் வந்து கூகுள் ஆண்டவரைப்பற்றி கேட்டுப்போயிருக்கின்றார் அருமை. வாழ்த்துகள் சிறப்பான புதுமையான சிந்தனை

    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள்..சகோதரரே..

      வள்ளுவனாரும் , தேசப்பிதாவும் கனவில் வந்ததை சுட்டிக் காட்ட மறந்து விட்டீர்களே.!

      என்ன இருந்தாலும் ,நகைச்சுவை என்ற பெயரில், புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் பூனையாகிறேன் நான்.

      நீங்கள் அனைவரும், எனது பதிவை மனதார பாராட்டி ஊக்க மளிப்பதால்தான் , என் சிந்தனைகளை வளர்க்கலாமா.? என யோசிக்க முடிகிறது.. எனவே பாராட்டுதலுக்கு மறுபடியும் நன்றிகள்..!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. முருகா...! ஆகா...!

    ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்...

    பாராட்டுக்கள்...

    கனவுகள் தொடரவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுக்களுடன், ௬டிய வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..

      நீள் பதிவாக இருப்பினும், ஒவ்வொரு வரியையும், ரசித்துப் படித்த தங்கள் பொறுமைக்கு என் நன்றிகள்.!

      தங்கள் பாராட்டுதல்கள், என் எழுத்தை தொடரும் கனவுகளை அதிகமாக்குகிறது.. நன்றி.!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete