Pages

Monday, July 13, 2026

மணம் வீசும் கதம்ப மாலை

 கதம்பம்.

பொதுவாக கதம்பமென்றால், பல் சுவை நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்துத் கலை நிகழ்ச்சியாகத்  தருவது, தத்தம் ஊர்களில் கிடைக்கும் பல்வேறு மணம் வீசும் மலர்களை கதம்ப மாலையாக்கி கட்டி இறைவனுக்குச் சூட்டுவது, பெண்கள் வீட்டின் விஷேடங்களுக்காக அந்த கதம்ப மாலைகளில் வீட்டை அலங்கரிக்கவும், கதம்ப மலர்ச் சரங்களைச் சூடி தங்களை அலங்காரம் செய்து கொள்வது  போன்றவையாலும் அப்பெயர் பெற்றது. 

மேலும், பல்வேறு காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து சமைத்து கதம்ப உணவும் தயார் செய்யலாம். இதையும் கதம்பச்சாப்பாடும், எனவும், எல்லாவிதமான காய்களை சேர்த்துச் செய்யும், கூட்டுக்கு கதம்ப கூட்டு எனவும், கதம்ப சாம்பார் எனவும் வகைப்படுத்தி ரசிப்போம். உண்போம். 

இங்கு (பதிவுலகில்) நம் பதிவுலக நட்புகளும், கதம்பமென்ற பெயரில், பல செய்திகளை தொகுத்து வாரம் ஒருமுறையோ, இல்லை மாதமிருமுறையோ தருகின்றனர். முன்பிருந்தே அவ்விதம் அடிக்கடி நானும் ஏதாவது எழுத நினைப்பேன். (ஆமாம்..! ஒரு செய்தியையே ஒழுங்காக முடித்துத் தர இயலவில்லை. இதில் உனக்கு பல செய்திகளை கதம்பமாக கட்டி எழுதும்  ஆசை வேறா? என என் மனது பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து  கண்டிக்கிறது./ கர்ஜிக்கிறது.😡 👺. :)) ) ஆனால், என்னால் இப்போதெல்லாம் என்னவோ எழுதவே இயலாமல் போய் விட்டது. அத்தோடு, சென்ற பதிவுக்கு முன் பதிவுக்கு வந்தவர்களை வரவேற்கவும், அவர்கள் கருத்துக்கு பதில் கருத்து தரவுமே அவகாசங்கள் ஏதும் இல்லாமல் போய் விட்டதை நினைத்து உண்மையிலேயே மிகவும். வருத்தமடைகிறேன்.இந்த இடத்தில் என் சகோதர சகோதரிகள் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும். 🙏. 

ஆனால், முன்பு போல் என் நட்பு பதிவர்களின் அனைத்து தளங்களுக்கும் சென்று கருத்துக்கள் மட்டும் அளித்து வருகிறேன்.அதுவே சில சமயங்களில் ஒரிரு பதிவுகளுக்கு என் பல பிரச்சனைகளில் செல்ல இயலாமலும் போய் விடுகிறது. அதற்கும் மன்னிக்கவும். 

சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தன் சிறப்புமிக்க கவிதைகள், அசத்தலான சிறுகதைகள், போன்றவைகளை  பதிவர்களாகிய நாங்கள் நேசிக்கும் "எங்கள் விருப்பமான எ. பியில்" வியாழனன்று சிறந்த பலர் படிக்காத செய்திகளை தொகுத்து கொடுப்பதுடன், செய்தியின் இணைப்பை இணைத்தும் தருகிறார். வெள்ளியிலும் அவ்வாறே அவர் பதிவு அலங்கரிக்கப்படுகின்றன. அமர்க்களப்படுகின்றன. அதிசயக்கப்படுகின்றன. ஆச்சரியப்படுத்தவும் வைக்கின்றன. 

அது போலவே வார முதல் நாளான திங்களில், "தின்ன தின்ன ஆசை" பிறக்கும் வண்ணம் பலரின் கைவண்ணங்களையும், அவரின் சொந்த தயாரிப்புகளையும் அவர் தளத்தில் பகிர்வதை காண முடியும்.

பின் மறக்கவியலாத பல சிறந்த எழுத்தாளர்களின்  பொக்கிஷங்களுடன், எழுத்தின் சிறப்பை உணர்த்(தி)த வரும்  இன்றைய (பதிவர்கள்) எழுத்தாளர்களின் பட்டியலோடு, மறுநாளைய செவ்வாயும் அங்கு மலர்கிறது. இங்கும் பல நேரங்களில் அவர் எழுதிய அற்புதமான கதைகளும், அன்று  கொடிகட்டிப் பறக்கும். 

நவகிரஹங்களில் படிப்பறிவான புதனின் பார்வையோடு, பதிவர்களின் பண்பட்ட கேள்வி பதில்கள், பக்குவப்பட்ட, பல உள்ளங்களின் தொகுப்பாக வெளி வரும் புகைப்படங்கள், சிறந்த சிந்தனை சிறதல்களுடன் வெளி வரும் கதைகள், அனுபவங்கள் என சகோதரர் கௌதமன் அவர்களின் முயற்சியில், மணம் வீசும் மலரொன்று புதன்தோறும் தன் மணம் பரப்பி நம் மனங்களை கொள்ளை கொள்ளும். 

வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி, ஞாயறாகிய இரு நாட்களும்  பல்சுவை களஞ்சியமாக திகழ்ந்து வரும் சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் தெய்வ பக்தியுடன் கலந்த  அறிவு பூர்வமான எழுத்துக்கள் அங்கு மலர்ந்து மணம் வீசுகின்றன. அவரால் அவர் சிறப்பாக சென்ற இடங்களில் எல்லாம் படமெடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நடமாடும் உண்மை சித்திரமாக அங்கு ஒளி வீசி கொண்டிருக்கின்றன. தெய்வீக பக்தியுடன், நாம் பார்த்தறியாத பல இடங்களிலுள்ள,பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை அறிமுகப்படுத்துவதிலும், பழங்கால சரித்திரங்களை நன்கு படித்தறிந்து அலசுவதிலும் இவருக்கு நிகர் இவரே. 

மேலும்  வாரம் ஒரு சிறந்த கதையாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் அதே சனிதோறும் எபியில்  பங்களிக்கிறார். பல சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை அவரால் படித்தறிய முடிகிறது. அவருடன் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் சகோதரர் ஜீவி அவர்களும் கைகோர்த்து கொண்டு பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தந்து படிப்பவர்கள் மனதை சந்தோஷமடைய வைக்கிறார்கள். 

இதில் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் தன் வலைத்தளத்தில், பல அனுபவங்கள்,அவர் எழுதிய சிறுகதைகள், ஆன்மிக கட்டுரைகள் என பகிர்ந்தளிக்கிறார். 

அதுபோல், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் தன் வலைப்பூவில், உளவியல் சம்பந்தமான கட்டுரைகள், அருமையான, யதார்த்தம் மிகுந்த பல சிறுகதைகள், தான் பார்த்து ரசித்த இடங்களின் இயற்கை வனப்புக்களைப் பற்றிய கட்டுரைகள், சிறந்த கற்பனை கதைகள் என எழுதி படிக்கும் வாசகர்களை மகிழ்வுறச் செய்கிறார். 

தன் வாழ்வின் சிறப்பான அனுபவங்களை, கதையாகவும், கவிதையாகவும் ஒருசேர திரட்டித் தந்து நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல மனமும், பண்பு நிறைந்த குணமும் கொண்டவரான சகோதரர் கில்லர்ஜி அவர்களின் பதிவை நாம் படிப்பதே ஒரு வரமென நினைக்க வேண்டுமென்ற வண்ணம்  அவரின் அற்புதமான கற்பனைகள் அவர் பதிவுகளில் சிறகடிக்கின்றன. என் ஆரம்பகால வலைத்தள வருகையிலிருந்து இன்று வரை என் எந்தவொரு பதிவுகளுக்கும் தவறாமல் வந்து படித்து, சிறந்த கருத்துகளை தந்து, என் எழுத்துக்களை ஊக்கமுற செய்தவர் இவர். இவரின் அன்பான நட்பும் என்னை மேன்மையுற செய்கிறது. 

தாம் "சந்தித்ததை, சிந்திக்கச் செய்யும்" வண்ணமாய் தன் எழுத்தால் கம்பீரநடை போடும் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்கள் தான் இதுவரைச் சென்ற பயணங்களின் கட்டுரைகள், மற்றும் பல செய்திகளைச் சொல்லும் கதம்பங்கள், தன் நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாக தம் நட்புகளின் அருமையான  எழுத்துக்கள் என அனைத்தையும் அவர் தம் வலைப்பூவில்  பகிர்ந்தளிக்கிறார். 

அவரின் துணைவியான ஆதி வெங்கட் அவர்களின் சிறப்பான பகிர்வுகளும், புதுமையான சமையல்களுடன் கலக்கி வரும் அவரின் எழுத்துக்களும் அவர் வலைப்பூவை சிறப்புறச் செய்கின்றன. அவர்களது குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக திகழ்கிறது.

சகோதரி கோமதி அரசு அவர்கள், அவர்கள் "பக்கமாக" அவர்கள் வலைப்பூவில் பல பதிவுகளுடன் சிறப்பாக பங்களித்து வருவதை வாழ்த்தவோ, பாராட்டவோ வார்த்தைகளே கிடையாது. அவர் பறவைகளின் நேசராக, பாசம் மிகுந்த அன்னையாக, நட்புகள், உறவுகள் அனைவரையும் எப்போதும் "வாழ்க வளமுடன்" என்ற அன்பான ஒரு  வார்த்தையாலேயே கட்டிப் போடும் அழகை விவரிக்க என்னிடம்  வார்த்தைகளே இல்லை. மாறாக என் பணிவான வணக்கங்களை அவருக்குத் தெரிவித்து மகிழ்கிறேன். 

சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் வலைத்தளம் மிக பிரசித்தி பெற்ற வலைத்தளம். அவரது "எண்ணங்களாக" அவரது பதிவுகளில் மலரும் மலர்கள் அனைத்தும் அதிக நறுமணமுள்ளவை.  அதில் அவரின் வாழ்வியல் அனுபவங்கள், ஆன்மீகம், சிறப்பான சமையல் என அவரின் பங்களிப்புகள் ஏராளமானவை. அவரது திறமையை பார்த்து அப்போதிலிருந்து இப்போது  வரை வியக்கிறேன். மதிக்கிறேன். அவர் என் நட்பானதை நினைத்து  மனது கொள்ளாத பெருமிதமும் அடைகிறேன். 

மேலும் வலைத்தளத்தில் தாம் அறிந்தவற்றை, நமக்குப் புரியும்படி தமது தெள்ளிய தமிழில், யார் மனமும் கோணாதபடிக்கு சிறந்த பதிவுகளை தந்து வரும் கோதரர் துரைசெல்வராஜ் அவர்களது எழுத்துக்களும் சிறந்த வகையை சார்ந்தவை. எத்தனை நயமான  குடும்ப கதைகள், கவிதைகள், என இவரின், கற்பனை சிந்தனைகளிலிருந்து தோன்றி வந்துள்ளது என்பதை கணக்கிடவே இயலாது. அது தவிர ஆன்மீகம், இறைபக்தி என்ற ஊற்று இவரின் மனதில் புறப்பட்டு, எழுத்தால் அது ஏனைய பதிவர்களை தெய்வ பக்தியில் மனம் குளிரச் செய்வதும் இவரின் வாடிக்கைகளில் ஒன்று. இவரின் எழுத்துக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். 

பதிவர்கள் வரிசையில், நீண்ட காலமாக தன் அனுபவங்களை, கதைகள் மாதிரியும், அவ்வப்போது உண்மை நிகழ்வாகவும், அன்புடன் சொல்லி வரும் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களது திறமையை மனம் நிறைந்து எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் அவர்களின் ஆன்மீக பதிவுகள், சமையல் பதிவுகள் என தம் பதிவை அலங்கரிப்பதில் வல்லவர். மொத்தத்தில் இவர் அன்பே உருவானவர். இவருடன் சமீப காலமாக நான் பெற்ற நட்பும், என்னை பெருமையடைய வைக்கும். 

அதிரடியாக வந்து பல கருத்துக்களை, பதிவுகளுக்கு தந்து தன் நகைச்சுவைப் பேச்சால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சகோதரி அதிரா அவர்களின் வலைப்பூவும், மறக்கவொண்ணா அவரின் பல திறமைகளை பறைசாற்றும். திறமையான அவரின் சமையல், பல அறிவார்ந்த விஷயங்கள், என பகிர்ந்தளிப்பதே அவர் பதிவுகளின் நோக்கம். அவரின் பதிவுகளை படிப்பதே நம் அறிவுக்கு விருந்தாக அமையும். மேலும் தன் நகைச்சுவைப் பேச்சால் நம் இதயங்களை கட்டிப் போடும் நுணுக்கங்கள் அறிந்தவர். வலையுலகில் இவரின் நட்பும் நான் செய்த பெருந்தவமே. 

இன்னமும் நான் முதலில் வலைத்தளமொன்றை ஆரம்பித்த போது, என் ஒவ்வொரு பதிவுக்கும் விடாமல் வந்து ஊக்கம் மிகுந்த கருத்துக்களைத் தந்து என் எழுத்துக்களை சிறப்புறச் செய்த "திருக்குறள் வித்தகர்"சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், மற்றும், கவிதையிலும்,,பல நல்ல கருத்துள்ள பதிவுகளாலும் தன் வலைத்தளத்தை செவ்வனே நடத்தி வரும்  சகோதரர் யதோ ரமணி அவர்கள், மற்றும் சிறந்த தன் வலைத்தளத்தில் பல செய்திகளையும், சிறப்பான கட்டுரைகளையும் தம் அனுபவங்களையும்  பகிர்ந்து வரும் சகோதரர் திரு.   DR.B.ஜம்புலிங்கம் வர்கள் என அனைவருக்கும்  என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு.🙏. 

இது போக நான் எப்போதேனும் படித்து ரசித்த பதிவுகள்,மற்றும் அதன் உரிமையாளர்களான பதிவர்களுக்கும்,அதுபோல் என் பதிவுக்கும் அவ்வப்போது வந்து என்னை என் எழுத்துக்களை உற்சாகப்படுத்தி சென்றிருக்கும் அன்பான பதிவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

மேலும் நான் வலைத்தளம் ஆரம்பித்த போது வந்து கருத்துக்கள் தந்த பல பதிவர்கள் எதனாலேயோ அவர்களால்  வர இயலாமல் போய் விட்டது என் துரதிர்ஷ்டமே. 

இப்போது இவர்களின் அறிமுகங்கள்  ஏன் என அறிமுகமானவர்களுக்கே ஒரு கேள்வி வரலாம். என் வலைத்தள பிரவேசத்திற்குப் பின் எனக்கு கிடைத்த, என்றுமே வாடாத மணம் வீசும் மலர்கள் இவர்கள். அதனால் இவர்களைக் கொண்டே சிறந்ததொரு கதம்பமாக மாலை சூடி இங்கு  தொடுத்துள்ளேன். 

ஏனெனில் நான் என் வலைத்தளமென்ற ஒன்றை  ஆரம்பித்து, இந்த வருடத்துடன் பதினாறு வருடங்களாகி விட்டன. இது வரை நான் எழுத்துலகில்  சாதித்தது (வெறும் பூஜ்யந்தான்)  ஒன்றுமில்லையென்றாலும், இந்த காலகட்டத்தில், சிறப்பு மிக்க இத்தனை வலைத்தள நட்"பூ"களைப் பரிசாகக் பெற்றுள்ளேன். இன்று வரை இவர்கள் அனைவரும் நான் ஏதோ கோணல்மானலாக எழுதி வரும் என் எழுத்துக்களுக்கு உரமாக,உயிராக இருந்துள்ளனர்./ இருக்கின்றனர். அதனால், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த ம் ர் மாலை என் மனதில் ஒரு பதிவாக உருவானது. 🙏. 

இப்படியொரு கதம்பமாலை தொடுத்ததில் என் கவனப்பிசகாக ஏதேனும் தவறிருந்தாலும், குறையிருந்தாலும் அனைவரும் என்னை மன்னிக்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏. 

29 comments:

  1. வணக்கம் அனைவருக்கும்.

    இந்தப்பதிவு யார் யார் கண்களில் படப் போகிறதோ தெரியவில்லை. சில சமயங்களில் நாம் போடும் புதுப்பதிவுகள் சில நாட்களேனும் மறைந்திருந்தே மயக்கம் காட்டுகின்றன. "பதினாறு" என்றவுடன் சில பாடல்களும் மனதில் வந்தன.அவற்றைத் தேடி தொகுத்துத் போடுவதற்குள் என் பொறுமை எல்லை மீறி விட்டது. சகோதரர் ஸ்ரீராம் பதினாறு என்ற வார்த்தைக்கு தகுந்ததாக பாடல்களை பொருத்தமாக சொல்லி விடுவார்.. ("பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா" , என்ற பாடலும்," பருவம் பதினாறிருக்கும் இளவயது மங்கை" என்ற பாடலுந்தான் என் நினைவுக்குள் வருகின்றன.

    இதற்காவது வரும் கருத்துகளுக்கு (வந்தால்) உடன் பதில் தெரிவிக்கும் நேரத்தை, எனக்குத் தா என இறைவனும் வேண்டிக் கொள்கிறேன். 🙏 இதையும் பதிவில் எழுத நினைத்தேன். நீளம் மிகவோ என கருதி முதல் கமெண்டில் நானும் வந்து விட்டேன். நீளமாக இருந்தாலும். பொறுமையுடன் படிக்கும் நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. என்ன திடீரென்று எல்லா பதிவர்களையும் பட்டியலிட்டு விட்டீர்கள்?  எனக்கு அதிக வார்த்தைகளும் வரிகளும் கிடைத்திருக்கின்றன.  இப்படி ஒருவர் மனதில் இடம்பெற்று பாராட்டுகளை வாங்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.  என்னையும், கௌதமனையும், எபியையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.  புது வகையான சிந்தனையில் உதித்த பதிவு.  இந்தப் அப்பதிவில் இடம்பெற்றிருக்கும் மற்றும் நமது நண்பர்களுக்கெல்லாம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உடனடியாக வந்து பதிவை ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      /புது வகையான சிந்தனையில் உதித்த பதிவு. இந்தப் அப்பதிவில் இடம்பெற்றிருக்கும் மற்றும் நமது நண்பர்களுக்கெல்லாம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்./

      புது வகையான சிந்தனை எனபதிவை ரசித்திற்ருப்பதற்கும், இதில் வரும் அத்தனை பதிவு நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதற்கும் மிக்க நன்றி. சிந்தனைகள் எல்லாம் உங்களிடமிருந்து கற்றவைதான். எனினும் உங்களைப் போல வராது. நீங்களெல்லாம் மலையின் உயரங்களில்... நான் இன்னமும் உயரவில்லை. "சப்பாத்தி சப்பாத்திதானா ரொட்டி ரொட்டிதான்" எனும் நாகேஷ் அவர்களின் பாட்டும் நினைவுக்கு வருகிறது. தங்களின் ஊக்கம் மிகுந்த முதல் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எங்களது பிறந்த நாளும் சென்ற மாதம் வந்து சென்றது.  இந்த வருடம்தான் நாங்கள் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டோம் என்று நினைக்கிறேன்!  திரு கௌதமனும் மறந்து விட்டார் போல..  அல்லது 'அட என்ன இதில்' என்று விட்டு விட்டாரோ என்னவோ.. 

    நம் இருவருக்கும் ஒரே வயது!

    ReplyDelete
    Replies
    1. நானும் சொல்ல விட்டு போய் விட்டேன்.
      ஜூன் 1 ஆம் தேதி 2009 எழுத ஆரம்பித்தேன்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      எ. பி வலைத்தளம் ஆரம்பமான முதல் வருடத்தைப் பற்றி நீங்களோ, சகோதரர் கௌதமன் அவர்கள் சொல்லி படித்துள்ளதாக நினைவு.. நானும் ஆரம்பித்த மாதத்தைச் சொல்லவில்லை. வருடம் 1911 என்ற நினைவுதான். அதைத்தான் வருட கணக்கில் கணக்கிட்டு பதினாறு எனச் சொன்னேன்.சில மாதக்கணக்கில் நம் வயதில் வித்தியாசம் இருக்கலாம்.

      உ(எ)ங்கள் ப்ளாக் வலைத்தளத்தின் பல ஆதரவுகளும் என்னையும் இத்தனை வருடங்கள் தூக்கி நிலை நிறுத்தி உள்ளது அதற்கான நன்றி நவின்றல்கள்தாம் இன்றைய என் பதிவின் உதயம். எங்கள் ப்ளாக் தலை சிறந்து சிறப்பாக வாழ என் வாழ்த்துகளும் எப்போதும் உங்களுக்கு உண்டு. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் கோமதி அரசு சகோதரி.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      உங்கள் "திருமதி பக்கங்கள் வலைத்தளம்" , உங்கள் அன்பு கணவரால் இந்த அருமையான பெயர் சூட்டப் பெற்று, இன்று வரை சிறப்பாக நடந்து வருவதை நீங்களும் ஒரு பதிவாக இட்டு எங்களிடம் தெரிவித்ததை படித்த நினைவு உள்ளது.

      ஆம் ஜூன் 1 தேதி 2009 லேயே ஆரம்பித்த சிறந்த மூத்தப்பதிவர் நீங்கள். எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து, பல உலக விஷயங்கள், மற்றும் ஆன்மீகம், அனுபவங்களை தொகுத்து வழங்கியவர்கள் நீங்கள். உங்களின் இத்தனை வருட பங்களிப்புக்களுக்கு என் பணிவான வணக்கங்கள் சகோதரி. உங்கள் கருத்துக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பதினாறுக்குரிய பாடல்கள் இரண்டையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்.  வேறு பாடல் எதுவும் எனக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை.  ஆனால் வேறொன்று நினைவுக்கு வருகிறது.

    வாழ்த்துச்சொல்.

    ஆமாம்..  வாழ்த்து!   பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துவார்கள் இல்லையா, அது..  உங்கள் பதிவுகளும் சிறந்த முறையில் தொடர்ந்து வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நேற்று பாதி கருத்துகளுக்கு மேல் பதில் அளிக்க இயலவில்லை. நேரம் சரியாக போய் விட்டது. . அதனால் இன்று தாமதமாக தருகிறேன். மன்னிக்கவும்.

      உங்கள் வாழ்த்துச் சொல்லுக்கு மிக்க நன்றி. ஆம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவார்கள். அந்த பதினாறும் நாம் வாழ்வில் பெற வேண்டிய ஒவ்வொரு செல்வத்தை குறிப்பவை. தங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. 16 வயதுப் பாடல் ஒன்று 'படைத்தான் பிரம்மதேவன்..  பதினாறு வயதுக்கோலம்..

    இன்னொன்று தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நீங்கள் சொல்லியிருப்பதும் நல்ல பாடல்கள். சகோதரி கோமதி அரசு அவர்களும் ஒரு பாடலை குறிப்பிட்டுள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. என் அப்பா லெட்டர் எழுதும்போது துளி இடத்தையும் வீண் செய்ய மாட்டார்.  போஸ்ட் கார்டில், இரண்டு இன்லேன்ட் லெட்டரில் எழுதக்கூடிய விஷயங்களை நுணுக்கி நுணுக்கி எழுதி விடுவார்.  அது போலவே இன்லேண்ட் லெட்டரிலும் சைட்  ஃபிளாப்பிலும் எழுதி, கடிதத்தை ஒட்டிய  அனுப்புனர் முகவரி இருக்கும் இடத்திலும் கூட எழுதுவார்.

    அதுபோல நீங்கள் பதிவை எழுதி விட்டு, போதாது போதாது என்றால் இன்னும் எழுதுவேன்..  இதுவும் போதாதென்றால் என்று பாடுவது போல பின்னூட்டத்தில் பதிவைத் தொடர்ந்து விட்டீர்கள்.

    ஒருவேளை அது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு வரவழைக்கும் ஐடியாவாகக் கூட இருக்கலாம்!  ஆனால் உங்கள் மெயிலோ திறக்க முடியாமல் நிரம்பிக் கிடக்கிறது என்றீர்களே என்றும் யோசிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் அப்பாவைப் போலத்தான் நாங்களும். ஒரு கடிதத்தில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுதுவோம். (ஆனால் முகவரி எழுத இருக்கும் இடத்தில் எழுதுவதில்லை.)

      இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது ஒரு கனா காலமாக போய்விட்டது. வாட்சப்பிலேயே நல்லது கெட்டது என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் காலமாகி விட்டது.

      /நீங்கள் பதிவை எழுதி விட்டு, போதாது போதாது என்றால் இன்னும் எழுதுவேன்.. இதுவும் போதாதென்றால் என்று பாடுவது போல பின்னூட்டத்தில் பதிவைத் தொடர்ந்து விட்டீர்கள்./

      ஹா ஹா ஹா. பதிவில் சொல்ல நினைத்ததை விட்டுப் போனதை எப்படி சொல்வதென்று அதனால் முதல் கருத்தாக என்னுடையதை பகிர்ந்து விட்டேன்.

      /ஒருவேளை அது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை உங்கள் மெயிலுக்கு வரவழைக்கும் ஐடியாவாகக் கூட இருக்கலாம்! ஆனால் உங்கள் மெயிலோ திறக்க முடியாமல் நிரம்பிக் கிடக்கிறது என்றீர்களே என்றும் யோசிக்கிறேன்/

      ஆமாம்.. அந்த ஐடியாவெல்லாம் இல்லை. :)) மெயில் பாக்ஸ் வேறு பார்க்கவே இயலவில்லை. புகைப்படங்களால் நிரம்பி உள்ளது. என கூகுள் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. தேவையில்லாதவற்றை நீக்கி விடு என்கிறாள் மகள். இது போதாதென்று பேத்தி வேறு புகைப்படங்கள், வீடியோ என எடுத்து நிரப்புகிறாள்.:)) பார்க்கலாம். தேவையில்லாதவற்றை நீக்க வேண்டும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கதம்ப மாலை சரம் அருமை. அதில் அன்பினும் நாரால் எங்களை எல்லாம் கட்டி வைத்து விட்டீர்கள்.
    உங்கள் நட்பு அனைவரையும் அழகாய் சொல்லி வாழ்த்தி மகிழ்ந்து விட்டீர்கள்.
    உங்கள் விரிவான பின்னூட்டத்தால் அனைவரையும் மகிழ்விக்கும் உங்கள் நட்பு கிடைத்ததில் எங்களும் மகிழ்ச்சி, பெருமை.வீட்டுபொறுப்புகளுக்கு இடையே கைதலபேசியில் இவ்வளவு விரிவான பின்னூட்டம் போடுவது கடினம் அதை நீங்கள் செய்கிறீர்கள்.
    அது மட்டுமல்ல பன்முக திறமை பெற்றவர்கள்.

    இராகங்கள் 16 பாடல் நினைவுக்கு வந்தது என்று பதினாறாய் சுறு சுறுபாக அனைவர் பதிவுக்கும் வந்து பின்னூட்டம் இடுங்கள். நிறைய பதிவுகள், கதை, கட்டுரை, சமையல் குறிப்பு , கதைகள் என்று பதிவிடுங்கள் கமலா.

    உங்கள் வலைதளத்திற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    பயணம் இனிதாக தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கதம்ப மாலை சரம் அருமை. அதில் அன்பினும் நாரால் எங்களை எல்லாம் கட்டி வைத்து விட்டீர்கள்./

      ஆகா..! மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். இதனால்தான் பதிவில் உங்கள் எழுத்துக்கள் என் மனம் கவர்ந்தவை என்றேன்.உங்களுக்கு எப்போதும் என் பணிவான நன்றி.

      /இராகங்கள் 16 பாடல் நினைவுக்கு வந்தது என்று பதினாறாய் சுறு சுறுபாக அனைவர் பதிவுக்கும் வந்து பின்னூட்டம் இடுங்கள். பதிவுகள், கதை, கட்டுரை, சமையல் குறிப்பு , கதைகள் என்று பதிவிடுங்கள் கமலா./

      கண்டிப்பாக.. பதிவை திரட்டி கைப்பேசியில் அடக்கி ஒடுக்கி எழுத இப்போதெல்லாம் சற்று இயலாமல்தான் போகிறது (நேரம்+உடல் நலபாதிப்புக்கள்) ஆனால், எழுத வேண்டுமென்ற ஆர்வம் மட்டும் தினமும் நிறைய உள்ளது. தற்போதைய பயணங்களில் கோவில்களுக்குச் சென்று வந்த பதிவுகளை எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டேதான் இருக்கிறேன். என்னவோ முடியவில்லை. அதனால்தான் தினமும் உங்கள் அனைவரின் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டங்கள் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சகோதரி உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு.

      "ராகங்கள் பதினாறு" பாடல் எனக்கு மிகப் பிடித்தமான பாடல். அதில் எஸ் பி பியின் குரலை மிக ரசித்து கேட்பேன். பாடலுக்கு ரஜினி அவர்களின் ஸ்டைலும், முக பாவங்களும் நன்றாக இருக்கும். மறக்க முடியாத பாடலை இங்கு நினைவுபடுத்தியமைக்கும் மிக்க நன்றி.

      என் வலைத்தள பயணம் தொடர்வதற்கு உங்களின் அன்பான வாழ்த்துகள் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. உங்கள் வணக்கத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவுக்கு வந்து நல்ல கருத்துக்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. திண்டுக்கல் தனபாலன், தேவகோட்டை ஜி, அதிரா இவர்கள் எல்லாம் மீண்டும் பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.
    உங்கள் பதிவு அவர்களை வரவழைத்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆம்.. நம் நட்பான இந்தப் பதிவர்கள் எப்போதும் போல பதிவுகள் எழுத வந்தால் மகிழ்வடைவோம். சகோதரர் கில்லர்ஜி அவர்களும் இப்போதுதான் அவரின் சூழ்நிலை காரணமாக காணவில்லை. மற்றபடி அவரும் வருவார். . சகோதரி அதிராவும் சென்ற இரு மாதங்களுக்கு முன்பு கூட எபிக்கு வந்திருந்தார். என்னிடமும் கருத்தில் பேசினார். அனைவரையும் நானும் உங்களைப் போல எதிர்பார்க்கிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ​நீண்ட நாட்களுக்குப்பின் தங்களுடைய இன்றைய பதிவைக்கண்டேன். யாரையும் புண்படுத்தாமல் நல்லதையே சுட்டி பாராட்டும் தங்கள் மனப்பாங்கு போற்றற்குரியது. என்னுடைய பெயரையும் சுட்டி பாராட்டியதற்கு நன்றி.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா.? தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. நீண்ட நாட்கள் கழித்துதான் பதிவிடுகிறேன். குறிப்பிட்டுச் சொன்னால் மாதம் ஒரு முறைதான். அதுவும். சமயங்களில் இயலாமல் போகிறது சென்ற மாதம் வெளியிட்ட பதிவுக்கும் தங்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன். முடிந்த போது வாருங்கள். இன்று உடனடியாக இந்தப்பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

      /என்னுடைய பெயரையும் சுட்டி பாராட்டியதற்கு நன்றி./

      உங்களது பெயரையும் நான் பதிவில் சுட்டி காண்பித்திருக்க எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நான் அல்லவா நன்றி கூற வேண்டும்..

      நீங்கள் எபியில் அறிமுகப்படுத்தும் கதைகள், செய்திகள் என அனைத்தையும் ரசித்துப் படிப்பேன். சென்ற வார கதையாகிய "பாலமும்" நன்றாக இருந்தது.இன்னமும் அதற்கான (அன்றைய நாளுக்கான) கருத்துதான் எபியில் தரவில்லை அன்று வெளியில் சென்று விட்டதால் நேற்றுதான் அப்பதிவை படித்தேன். அக்கதை எழுதிய எழுத்தாளரின் எழுத்துக்களை மிக ரசித்தேன்

      உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      Delete
  11. தொடர்ந்து புதிய பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

    உங்கள் ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்களின் வாழ்த்துகள் எனக்கு மிகவும், மகிழ்ச்சியையும், இன்னமும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தையும் தருகிறது.

      ஆனால் உங்களின் எழுத்தாற்றலுக்கு முன்பு நான் இன்னமும் கத்துக் குட்டிதான். எனினும் உங்கள் பாராட்டுகள் என் எழுத்துக்கு உரமாக இருந்து செயல்படுமென நம்புகிறேன். உங்களுடன் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இபதினாறு வருடங்களுக்கு பதிவுகள் குறைவு என எண்ண வேண்டாம். எத்தனையோ பணிகளுக்கு இடையில் ஆர்வத்துடன் எழுதுவது, மற்றவர்களை உற்சாகப்படுத்துவதே சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இபதினாறு வருடங்களுக்கு பதிவுகள் குறைவு என எண்ண வேண்டாம். /

      ஆம். குறைவுதான்..! ஆனால் ஒவ்வொரு பதிவையும் எழுதி, அதற்கு நீங்கள் அனைவரும் கருத்துச் சொல்ல வந்தவுடன் அதை நிறைவாகவே எடுத்துக் கொள்வேன்.

      .உங்கள் ஊக்கம் தரும் கருத்துகள் இன்னும் நான் எழுத நினைத்திருக்கும் பல பதிவுகளை வெற்றியுடன் எழுத வைக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். உங்கள் ஆதரவான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. வாழ்த்துகள் கமலா. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பலரும் எனக்கும் அறிமுகமே. இன்னமும் பற்பல எழுத்தாளர்கள், நண்பர்கள் இந்த வலை உலகில் உண்டு. அப்போவெல்லாம் போட்டிகள் நிறைய இருந்தன. திரு ஜிஎம்பி சார், ஒரு கதை எழுதிட்டு அதற்கு முடிவு நம்மை எழுதச் சொல்லுவார். அவரோட முடிவோடு ஒத்துப் போகும் முடிவுக்குப் பரிசெல்லாம் கொடுப்பார். ஒரு தரம் நான் முதல் பரிசு வாங்கி அவர் தன் கையால் வரைந்த தஞ்சாவூர் தவழ்ந்த கிருஷ்ணனை ஃப்ரேம் போட்டு அத்துடன் ஒரு புத்தகமும் அவர் எழுதி வெளிவந்தது அனுப்பி வைச்சிருந்தார். திரு கணேஷ் பாலா என்னும் இனிய சகோதரரும் பிரபலமான எழுத்தாளரே. விமரிசனங்களுக்கு என்றே ஒரு வலைப்பக்கம் வைத்திருந்தார். அதில் நானும் எழுதி இருக்கேன். அவரும் பல போட்டிகள் வைத்துப் பரிசு கொடுத்திருக்கார். அவரிடமும் பரிசு வாங்கி இருக்கேன். இப்போல்லாம் அவர்களை எல்லாம் பார்க்கவே முடிவதில்லை. இன்னும் என் ஆரம்பகால நண்பர்கள் பலர். அவர்களில் பலர் இப்போது எழுதுவதையே நிறுத்திட்டாங்க. ஆனால் அந்த இளைஞர்கள் எனக்குப் பல விதங்களில் உதவி இருக்கின்றனர். படங்கள், வீடியோக்கள் இணைப்பது, சுட்டி கொடுப்பது என எனக்குத் தெரியாத பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இப்போதெல்லாம் நானும் அதிகம் எழுதுவது இல்லை. நிறையவே எழுதியாச்சு. எண்ணங்கள் பதிவிலேயே 3000க்குக் கிட்டத்தட்ட இருக்கு. அதைத் தவிர்த்து மற்ற வலைப்பக்கங்களும் உள்ளன. அவற்றிலும் எழுதி இருப்பதால் இப்போதெல்லாம் எழுதவதற்கென்று உடலும் மனமும் ஒத்துழைப்பதில்லை.

    பதினாறு வருஷம் நிறைவடைந்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      என் அழைப்பிற்கிணங்கி, உங்களின் பல வேலைகளை ஒதுக்கி விட்டு இப்பதிவுக்கு வந்து படித்து நல்லதொரு கருத்தினை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      நீங்கள் சொல்வது போல், நான் வலைத்தளத்திற்கு வருகை தந்த புதிதில், பல சுவாரஸ்யமான போட்டிகள் கண்டு பிரமித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களுடன் சகோதரர் திரு, வை.கோபாலகிருஷ்ணன். அவர்களும் தம் தளத்தில் நிறைய பதிவர்களை ஊக்குவித்து போட்டிகள் நடத்தினார். என் தளத்திற்கு ம் வந்து கருத்துக்கள் தந்துள்ளார். அவரும் சிறந்த பதிவர்.

      நீங்கள் அன்று தக்குடு என்ற கல்லிடை ப் பதிவரைப் பற்றி எபியில் கேட்டிருந்தீர்கள். நான் வந்த புதிதில், அத்தனை பதிவர்களின் பதிவுகளிலும் அவர் பெயரில் கருத்துக்கள் நிறைய இருந்து வருவதை கண்டு, நானும் அவர் வலைப்பூவுக்கும் சென்று அவரின் பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன். கருத்தும் தந்துள்ளேன். அவர் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர். அதுவும் தம் ஊரான கல்லிடையைப்பற்றி, அங்குள்ள மக்களைப்பற்றி நகைச்சுவை ததும்ப எழுதுவார். எங்கள் நாத்தனார் குடும்பத்திற்கு அவரை தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.

      இப்படி நிறைய பதிவர்கள் இப்போது எழுதுவதை நிறுத்தி விட்டார்களா, , அல்லது வேறு பத்திரிக்கைகளில் தொடருகிறார்களா எனவும் தெரியவில்லை. உங்கள் பதிவுலக அனுபவங்களைப் பற்றி கூறியிருப்பதற்கு மிக்க நன்றி. உங்களின் பல பதிவுகளிலும், நீங்கள் சொல்லி படித்துள்ளேன்.

      உங்கள் எழுத்துக்கள் வசீகரமானவை. படிக்கப் படிக்க திகட்டாதவை. உங்களின் பல வலைப்பூவில், நான் உங்கள் "எண்ணங்களுக்கு" , நான் வந்தது முதல் தவறாது வந்து கொண்டிருக்கிறேன். இனியும் உங்களின் அருமையான பதிவுகள் கண்டு தொடர்வேன். இந்த ஆண்டு என் வலையுலக வாசத்தில் பதினாறாவது ஆண்டு என குறிப்பிட்டுள்ளேன்.அப் பதிவுக்கு உடனடியாக வருகை தந்து நல்ல கருத்துகளை கூறி வாழ்த்தும் தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. தொடர்ந்து பதிவுகள் எழுத வாழ்த்துகள். பதிவில் எங்களையும் குறிப்பிட்டு இருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      அன்பான உங்கள் வாழ்த்துகள் கண்டு மனம் மகிழ்கிறேன். இந்தப் பதிவில் உங்களை குறிப்பிடாமலா .? நீங்களும் என் வலைத்தளம் ஆரம்பம் முதற்கொண்டு என் பதிவுகளுக்கு வந்து ஊக்கம் தந்த கருத்துக்களை கூறியவர்தானே. .! உங்களின் கருத்துக்களால் என் வலைத்தள வாசம் இன்னமும் நீடிக்கிறது. தங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete