Pages

Thursday, October 31, 2024

இருள் களையும் விழா. .

 


                            தீப ஒளித்திருநாள்

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துகள். 

தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே. 

நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரம்  எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டவும்,  சத்திய வழியில் தவறாது செல்லவும்,  ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு புரிய வைத்தார். 

ஒரு சமயம் உலக மக்களை  தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து  வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று  தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள்  செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு பெற்று பின் உயிர் துறந்தான். இந்த கதையின்படி  அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.

ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன்  வரவேற்று,  வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து  லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன்  குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு.  ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும்  இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து  நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம். 

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான்  முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.

 " ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். 

அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும்  நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.  ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? 

இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர்  தத்தம் வீடுகளில்   நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப் பழககம் முற்றிலும்  வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று  விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர்  கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு. 

மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று  மாலை முதல் வீட்டு வாசல் படியில் இருபக்கமும்  இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை  மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுவதும் வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம்  வீட்டு பெரியவர்கள்  மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது  மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது  இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட  வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

பி. குறிப்பு... இது எ. பிக்காக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அவசரமாக ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஏதாவது எழுதச் சொன்னதில் தீபாவளி கட்டுரை என்ற பெயருடன் உருவானது. மறுநாள் தீபாவளியன்று எ. பியிலும் வெளி வந்ததற்கு எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள்  அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். அப்போது அந்தப் பதிவுக்கு  கருத்துக்கள் அளித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் வலைப் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென இது அதே அவசரத்துடன் (வேறு எதாவது எழுத  வீட்டின்்வேலைகள் இடம் தரவில்லையெனினும், என் சோம்பலும், ஒரு காரணம்.) வெளியாவது. 

மறக்க இயலாத தீபாவளி நினைவுகள்....! படித்த அன்றிலிருந்து  ஒவ்வொரு தீபாவளியன்றும் பிரபல எழுத்தாளர் கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வர தப்புவதில்லை. நல்ல எழுத்து. அனேக மாற்றங்களினால் காலங்கள் எவ்வளவு  மாறினாலும் என்  மனதை விட்டு நீங்காத கதை. 

அனைவருக்கும் என் அன்பான நன்றிகளுடன் மனம் கனிந்த இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள். 

Saturday, October 26, 2024

காரண காரியங்கள்

இந்தப்பதிவுச்செடி இங்குமுளைத்தற்கு உதவியாக இருந்தது சென்ற சனியன்று எ. பியில் வெளிவந்த "சாப விமோசனம்" என்ற கதை. அதைப் படித்த பின் நான் அதற்கு சொன்ன கருத்துக்கு பதிலாக வந்த இந்த பதில் கருத்துக்கள்தான் இதன் காரண விதைகள்.

நானும் இன்று காலையிலேயே நல்ல புகழ் பெற்ற இந்த  எழுத்தாளரின் கதைகளை படித்து விட்டேன். ஆனால், கருத்து சொல்ல யோசனையாக உள்ளது. (மாறுபட்டு விட்டால் என்ன செய்வதென்ற மனக்குழப்பங்கள்.) இது நான். 

கவலையே படாதீர்கள்... தயங்காதீர்கள்.. அதுதான் வேண்டும். மாறுபட்ட கருத்துக்கள்தான் வேண்டும்...இது சகோதரர் ஸ்ரீராம். 

கமலாக்கா தயங்கவே வேண்டாம். மாறுபட்ட கருத்துகள் வேண்டும். அப்போதுதான் சிந்தனைகள் பிறக்கும் யோசிக்கும் திறன் வலுவடையும்.

சும்மா ஒரே குட்டைல இருந்தால் மனமும் மூளையும் நாறிப் போகும்!! கமான் கமலாக்கா உங்கள் கற்பனை, எண்ணங்கள் கருத்துகள் சிறகடிக்கட்டும். இது சகோதரி கீதாரெங்கன். 

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே & சகோதரி. உங்களிருவரின் ஊக்குவிப்புக்கு என் மனதில் பட்டதை எ. பியில் கருத்து சொல்ல ஆரம்பித்தேன். அது பதிவாக நீண்டு விட அதை இங்கேயே கொண்டு வந்து சிறைப் பிடித்து தங்க வைத்து விட்டேன். வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

இவ்வகையான புராண கதைகள் பல விதங்களில் பலரால் அலசப்படுவது இந்த கதைகளின் சுவாரஸ்யந்தான் காரணமா? இல்லை. மனிதர்களாகிய நம் மன விகாரங்களின் வேறுபாடுகளா?

அகல்யை ஒரு கற்புக்கரசி. சிறந்த அழகி. அவள் பெயர் காரணமே அதைதான் குறிக்கிறது தர்மம் வழுவாத ரிஷி பத்தினி. தேவலோக தலைவனான இந்திரனின் மனதில் ஏற்பட்ட காமம் அவள் தலையெழுத்தை மாற்றி, தன் கணவரின் வாயாலேயே கடுமையான சாபம் பெற்று கல்லாக (ஆனால், அவள் பெயரிலேயே கல் உள்ளதே.! அதுவே அவளுக்கு ஒரு பிறவி சாபந்தான் போலும்..!) போகச் செய்தது. 

பின்னர் இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரின் கால் (பாத துளிகள்.) அவள் மேல் பட்ட விநாடி அவள் மீண்டு சாபவிமோசனம் பெற்று, பழைய நிலைக்கு உருப்பெற்றாள். (இது இறைவனின் அவதாரமாக அவதரித்த ஸ்ரீ ராமரின் மகத்துவத்தை காட்டக் கூடியது.) அதன் பின் கௌதம மகரிஷி அவளை ஏற்றுக் கொண்டார் என்பது வரைதான் புராண காலத்து இப்பத்தினி பெண்மணியின் சிறப்பாக நாம் நம் வீட்டு பெரியவர்களின் கதை சொல்லி வளர்க்கும் திறனோடு பால காண்டமாக சொல்லி நாம் அறிந்தது.

அதன் பின் அகல்யை கல்லாக மாறவில்லை. தன் சாப விமோசனத்திற்காக மனம் கல்லாக இறுகி ஸ்ரீ ராமனின் வரவுக்காக காத்திருந்தாள். தவிரவும், அவளும், தன் பால்ய வயதில் மனதில் பல ஆசைகளை வளர்த்துக் கொண்டிருந்தாள்..! என்கிற மாதியான கதைகளை கேட்(படிக்)கும் போதெல்லாம், புராணங்களில் வரும் கதை மாந்தர்களை நாம் (மனிதர்கள்) எப்படியெல்லாம் மாற்றியமைத்து கதைகளை கயிறாக...! ஒரு நூலாக....! (அப்படி திரிக்கும் நூல் என்ற பெயரைத்தான் நாம் தயாரிக்கும் புத்தக வடிவிற்கும் "நூல்கள்" என வைக்கிறோமோ..?:)) ) திரிக்கிறோமோ என எண்ணும் போது, புராணங்களில் மேல் நமக்கிருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வங்கள் ( நமக்கு மட்டுமென்ன.. எதையும் முழுதாக நம்பும் ஆர்வங்களா? ஆயிரம்  சந்தேகங்களுடன் கூடிய ஆர்வ கோளாறுகள்தான். :)) ) இனி நம் சந்ததிகளுக்கு சுத்தமாக வராதோ என்ற நினைப்பும் எழுகிறது.

இளவயதில் தான் பழகி, தனக்கு பிடித்த இந்திரனையே தன் திருமண பிராயத்தில் "தன் விருப்பம் இவர்தான்.." என சொல்ல முடியாத மனநிலையில் இருந்திருக்கிறாள் அகல்யை. ஆனால், தன்னைப் படைத்த தந்தையான பிரம்மதேவர் கௌதமரை அவளுக்கென வரித்த போதும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. மாறாக அன்றே அவள் மனது கல்லாகி போனது. (மானசீக காதல்கள் அப்போதே அந்த புராண காலத்திலேயே தோற்றுப் போய்யுள்ளது.)

பிரம்மதேவர்  தான் படைத்த பெண் ஒரு சிறந்த தவமுனிவருக்கு பயனுள்ளவளாக இருக்க வேண்டுமென நினைத்தாரே ஒழிய அப்பெண்ணின் உள்ளத்து மனநிலையை கேட்டறியவில்லை. (அவரின் "தான் சொல்வதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற குருட்டு நியதிகள் இன்று வரை நம்மையும் (அவர் படைத்த மனிதர்களாகிய நம்மையும். ) விடாது துரத்துகின்றன.:)) 

இந்திரன், கௌதமர் இருவருமே அகல்யையை மணமுடிக்க ஆசைப்பட்டால்,  பிரம்மன் இந்திரனுக்கும், கௌதமருக்கும் இடையே வைத்த ஒரு சுயவரப் போட்டியின்படி, முன்னும் பின்னும் ஒரே முகம் கொண்ட ஒரு பசுவை வலம் வந்த பின் சாட்சியுடன் முதலில் வருபவருக்கு அகல்யை பரிசாக கிடைப்பாள் என்ற முடிவு. கௌதமரும் முன்னும், பின்னும் ஒரே முகமுடைய ( அந்த பசு தன் வயிற்று சிசுவை அந்நாள் வரை சுமந்து பின் அதை ஈன்று பெறும் தருணம். ) ஒரு பசுவை நாதரின் யோசனையின் பேரில் கண்டு அதை  மூன்று முறை சுற்றி வந்து நாதரின் சாட்சியோடு  போட்டியில் வென்று அகல்யையை கைப்பிடித்தார். 

இந்திரன் தன்  ஐராவதி வாகனத்தில் மூவுலகும் சுற்றி அப்படிபட்ட பசுவைத் தேடி அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய போது கௌதமருக்கு, அகல்யை உரிமையாகி இருந்தாள்.  (பல பல யாகங்கள் செய்து இந்திர பதவியை தன் வசம் பெற்றிருந்த இந்திரனுக்கு அவ்விதமான பசுவைப் பற்றிய சூட்சுமம் தெரியாதா? இல்லை நாரதர்தான் இந்திரனுக்கு எதிரியா?) எல்லாம் பிரம்மன் போட்ட முடிச்சு. அவர் கணக்கு என்றும் தப்பாது. அந்த மாயைதான் இன்று வரை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாறு(வேறு)பாடில்லாமல், நடமாடி கொண்டுள்ளது. 

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கின்படி அகல்யை கௌதமருக்கு மனைவியாகி ஒரு நல்ல சதி தர்மத்துடன் நடந்து வந்தாலும், அவள் மனதில் இந்திரனின் மேல் தான்  ஆசைப்பட்டதையும், தன் பிதாவாகிய பிரம்மன் அது தெரிந்திருந்தும், தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காது கௌதமருக்கு பாணிக்கிரணம் செய்து தந்தது முதல் அவள் மனது கல்லாகி போனதென இப்போது ஒரு கதையில் படித்தேன்.

பெண்ணின் மனது எத்தனை முறைதான் கல்லாகும்படி அக்கால சூழ்நிலைகள் அவளை பாடாக படுத்திருக்கின்றன. அதன்பின் இந்திரனின் செய்கையால், அதைக்கண்டு கணவர்  சபித்ததினால் அவள் உயிருள்ள கல்லாகி போனது வேறு. அதுதான், ( இப்படி கல்லாகி போவது) ஏற்கனவே அவளுக்கு பல முறை பழக்கமானது ஆயிற்றே..!  

இந்திரனும், தன்னை மணப்பதற்காக அகல்யை காந்தர்வ முறையைச் சொல்லி வறுப்புறுத்திய போது கூட "அவசரம் கூடாது. தர்ம நியதிப்படி பெரியவர்களின் ஆசிகளோடுதான் நாம் மணந்து கொள்ள வேண்டுமென" அறிவுரை கூறினாராம். இதுவும் அந்த கதையில் தான் படித்தேன். 

இப்போது எ. பியில் சனியன்று வெளிவந்த பிரபல  எழுத்தாளர் புதுமை பித்தன் அவர்கள் எழுதிய "சாப விமோசனம்"  என்ற கதையில் அகல்யை ஸ்ரீ ராமரின் மூலம் சாப விமோசனம் பெற்றபின், நிறைய இன்னல்களையும், தன்னோடொத்த பிற ரிஷி பெண்களின்  அவச்சொற்களையும் அவமானத்தோடு சந்தித்த பிறகு மனம் வெறுத்து துவண்டு போயிருக்கும் போது, அந்நிலையில் அவள் மிகவும் அல்லலுறுவதை கண்டு ஒரு நாள் அவளைத் தேற்ற வரும் கணவனின் அன்பையும், அருகாமையையும்  உணருங்கால்  அவள் மனது மீண்டும் கல்லாவது போல் கதை  வடித்து தந்துள்ளார். நல்ல எழுத்து. சிறந்த உவமானங்கள். 

இந்நிலையில் இடையே கௌதமர் அகல்யை இருவருக்கும் ஒரு மகன் பிறந்து சதானந்தர் என்ற பெயருடன் மிதிலையின் மன்னர் ஜனகருக்கு அரசசபையில் தத்துவ விசார ஆலோசகராக இருந்து வருவதோடு துறவு வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார். அவரும் தந்தை தாய் படும் தீர்க்க இயலாத  மனதின் துக்கங்களை கண்டு தன் மனம் வாடுகிறார். 

இவர்களுக்கு ஒரு மகளும் இருப்பதாக மற்றோர் இடத்து கதையிலும் படித்தேன். அந்த மகளின் பெயர் அஞ்சனை. இவரது மைந்தர்தான் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆவார். 

கற்பில் சிறந்த பஞ்ச கன்னிகைகளில் முதலில் இடம் பெறுபவர் அகல்யைதான். அதன்பின் சீதை, திரௌபதி, தாரா, மண்டோதரி இவர்கள். இதில் தங்கள் கற்பின் திறனை வெளிப்படுத்த தன்னை தீயில் இட்டு அது பூக்களாக்கி குளிர்வித்து தர தங்கள் கற்புத்திறனை உலகிற்கு மெய்பித்தவர்கள் சீதை, திரௌபதி, தாரா ஆகியோர். அகல்யை தன்னை சுற்றியுள்ளவர்களால் தன் வாழ்நாள் முழுவதும், மனம் கல்லாகி இறுகி இருந்தாள் என்றால், மண்டோதரியும் தன் கணவனின் குறுகிய செயல்களில் மனம் குன்றி, அவர் மீது பாசம் மிகுந்த மரியாதையை தந்த போதும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டவள். 

ஆக பெண் எனப்பட்டவள் அந்த காலங்களில் தங்கள் சூழலின்படி பல விதமான சுக துக்கங்களை அனுபவித்தே வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியாக  பரசுராமரின் தாய் ரேணுகா தேவி, அனுசுயாதேவி, தமயந்தி, சந்திரமதி, பக்த மீரா, சக்குபாய் என ஆசிரமங்களின்  பெண்களும், ராஜவாழ்வில் பிறந்த பெண்களுமாக தொடர்ந்து அல்லல்களும், இன்னல்களும் பட்டுக் கொண்டேதான் இருந்தனர். 

இன்றைய காலத்திலும், இப்படி கஸ்டபடும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படி அல்லாமல், இந்தப் பிறவியில் நல்லவிதமாக வாழும் பெண்கள்.  தன் வாழும் வாழ்விற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

நான் மெத்த படித்தவளும் இல்லை. பல புராணங்களை ஆழ்ந்து படித்து விவாதித்து அலசியதுமில்லை. ஏதோ என் சிற்றறிவுக்கு புலப்பட்டதை இங்கு  எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் தவறிருந்தால், படிக்கும் அனைவரும் மன்னிக்கவும். 🙏.

படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.