Pages

Friday, September 6, 2024

விநாயகர் அருள்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். 


ஸ்ரீவிநாயகப் பெருமானே சரணமப்பா. சரணம்.
 🙏. 

1) கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.🙏. 

இதன் பொருள். 

யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், நமக்கு வரும் இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின் திருவடிகளை வணங்குவோம்.🙏. 

2) மூஷிக-வாகன மோதக-ஹஸ்த

காமர-கர்ண விலம்பித-ஸூத்ரா |

வாமன-ரூப மஹேஸ்வர-புத்ர

விக்ன-விநாயக பாத நமஸ்தே ||🙏. 

இதன் பொருள்:

எலி வாகனத்துடன் கையில் வைத்திருக்கும் மோதகப் பிரியராகவும்,  பெரிய விசிறி போன்ற காதுகளுடனும், மற்றும் நீண்ட புனித நூலை அணிந்திருப்பவரும், வாமனரைப்போல உயரம் குறைவாக இருப்பவரும். மற்றும் ஸ்ரீ மகேஸ்வரரின் மகனுமாகியவரும், தனது பக்தர்களின் தடைகளை உணர்ந்து அதை  நீக்கும் வல்லமையுடையவருமான ஸ்ரீ விக்ன விநாயகரின் பாதங்களை வணங்கிக் கொள்வோம். ஸ்ரீ விக்ன விநாயகருக்கு அனேக கோடி நமஸ்காரம். 🙏. 

3) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா! 🙏. 

இதன் பொருள்.

நாம் அனைவரும் தெய்வமாக வழிபடும் (கோமாதா) பசுவின் பாலும், சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற தேனீக்களால் தேர்ந்தெடுப்பட்டு சேர்த்த நல்ல தேனும், சுவையான கரும்புகளின் கனிச்சாற்றைக் கொண்டு நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை காய்ச்சி எடுத்த பாகும், அதற்கு தோதாக அதனுடன் சேர்க்கப்படும் அரிசி, பருப்பு வகைகளும் கலந்து உனக்குப் பிடித்தமான பல இனிப்புகளை செய்து நான் உனக்குத் தருவேன்.

அழகெல்லாம் ஒரு சேர நிறைந்தவரும், மதிநுட்பம் மிகுந்த யானையின் முகத்தைக் கொண்ட எம்பெருமானே, நீ அதற்குப் பதிலாக மூவகையான சங்கத்தமிழ் எனும் அமிழ்தத்தை எனக்குப் பரிசாக தருவாயா? . 


பிரபல பாடகர் சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்களை மெய்யுருகி கேட்டால், நம் கண் முன் இறைவனே வந்து நிற்பது போல் உணர்வோம் . அந்த அளவிற்கு  அமைந்தது அவரின் குரல் வளம். 🙏 அது அவருக்கு அந்த ஆண்டவன் தந்த வரப்பிரசாதம். 🙏 இந்தப் பாடலும் இன்றைய நல்ல நாளில், நமக்கு பக்தி பரவசமூட்டும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்து விநாயகபெருமான் நம் கண் முன் வருவதை உணர்ந்து  தரிசிப்போம் 🙏

விநாயகர் குறித்து என் அறிவுக்கு எட்டிய விதத்தில் தந்திருக்கும் இப்பதிவை ரசிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

நன்றி கூகுளுக்கும். 

22 comments:

  1. கொழுக்கட்டை தின வாழ்த்துகள். இந்த கொழுக்கட்டை என்னை இந்த ஜென்மத்தில் படுத்துகிறது பாருங்கள் ஒரு பாடு... அம்மம்மம்மா....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /கொழுக்கட்டை தின வாழ்த்துகள்./

      ஹா ஹா ஹா. இது நல்லாயிருக்கே ..! தங்களுக்கும் கொழுக்கட்டை தின வாழ்த்துகள். இன்றிலிருந்து அது தங்களை பாடாய் படுத்துவதை நிறுத்த ஸ்ரீ விக்னேஸ்வரர் அருள் புரியட்டும். நானும் வேண்டிக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கேசெட் காலத்தில் என்னிடம் 'நித்ய பாராயண ஸ்லோகம்' என்கிற கேசெட் இருந்தது.  ஜெயேந்திரர் முன்னரை வழங்கியபின் S P பாலசுப்ரமணியம் ஸ்லோகங்கள் சொல்வார்.  ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ஜெயேந்திரன் சிறு தலைப்பு கொடுப்பார்,, தொடக்கத்தில் 'விநாயகர் ஸ்தோத்ரம்' என்பார்.  அப்போது தலைவர் சுக்லாம் பரதரம் என்று தொடங்கி விநாயகர் ஸ்தோத்ர துணுக்குகளை படுவார்.  அது இப்போதும் மனதில்....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களிடமிருந்த கேசட் நன்றாகத்தான் இருந்திருக்கும். சின்ன சின்ன ஸலோகங்களும், அதன் விளக்கமும் கேட்கும் போதே அந்த ஸலோகங்களும் மனதில் பதியும். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      எனக்குத்தான் பதில் கருத்துச் சொல்ல தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பாலும் தெளிதேனும்...   இந்த லஞ்சம் கொடுக்கும் வழக்கத்தை அவ்வையார்தான் தொடங்கி வைத்தாரோ...  'இதெல்லாம் நான் உனக்கு தாரேன்...  நீ எனக்கு அதெல்லாம் தா'ன்னு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /இந்த லஞ்சம் கொடுக்கும் வழக்கத்தை அவ்வையார்தான் தொடங்கி வைத்தாரோ... 'இதெல்லாம் நான் உனக்கு தாரேன்... நீ எனக்கு அதெல்லாம் தா'ன்னு!/

      ஹா ஹா ஹா அதானே..! அப்போதே இறைவனிடமிருந்து இந்த துவக்கம் போலும்...! தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களுக்கும் என் அன்பான விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள். (தாமதமாக) நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. காலையிலேயே கொழுக்கட்டைகளைத் தயார் செய்ய ஆரம்பிக்காமல் பதிவு போட வருகிறீர்களே..

    இன்று இனிப்பு உப்பு கொழுக்கட்டைகள் உண்டா? சுலபமா உருட்டிச் செய்துவிடுவீர்களா இல்லை மோதகம் மாதிரியா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /காலையிலேயே கொழுக்கட்டைகளைத் தயார் செய்ய ஆரம்பிக்காமல் பதிவு போட வருகிறீர்களே../

      ஹா ஹா ஹா. இதோ..! அதற்குத்தான் விநாயகர் அருளால் அடுக்களைக்குள் செல்லப் போகிறேன். இனி கொஞ்சம் மதியம் வரை பிஸியாகத்தான் இருக்கும். கைப்பேசியை தொடக் கூட முடியாது. மோதகம்தான் செய்யப் போகிறேன். இனிப்பு மட்டுந்தான். வரலக்ஷ்மி விரதத்திற்கு மூவகைகள் செய்தாகி விட்டது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. விநாயகனே வெல் வினையி வேரறுக்க வல்லான்..... விநாயகனே வினை தீர்ப்பவனே.... பாடல் போட்டாலே கொட்டகையில் படம் போட ஆரம்பித்துவிடுவார்கள் என்ற நினைப்புதான் வரும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. அப்போது இந்தப்பாடல் ஒலிக்காத இடமில்லை. கோவில் திருவிழாக்களில், மைக் கனெக்ஷன் ஸ்பீக்கர் கனெக்ஷன் தந்ததும், இந்தப்பாடல்தான் முதலில் ஒலிக்கும். பிறகுதான் மற்றயவை.

      நேற்று முழுவதும் வெளியில் சென்று விட்டமையால், உங்கள் கருத்துகளுக்கு என் பதில்கள் தாமதம். மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. மோதகம் மோமோஸ் போன்று உடையாமல் விரிசல் இல்லாமல் இன்று வரட்டும்.
    விநாயகர் எனது இஷ்ட தெய்வம், சிறு வயதிலிருந்து. காரணம் முழு முதற்கடவுள் என்பது...
    சந்தைக்கு சென்று சீசன் பழங்களான நாவல், விளாம்பழம், கொய்யாப்பழம், ஈச்சம்பழம், சீத்தாப்பழம் போன்ற பழவகை, எருக்கம்பூ மாலை, அருகம் புல் இவற்றை சேகரிப்பது என்னுடைய டூட்டி.
    அதே போல் சதுர்த்தி அன்று காலை மனைப்பலகையை எடுத்துக் கொண்டுபோய் சந்தையில் சுடச்சுட அச்சில் இருந்து தரப்படும் விநாயகரை ஒட்டவைத்து, அவருக்கு குடையும் வைத்து வாங்கி வருவதும், பின்னர் கரைக்க வேண்டிய நாளில் சிலையை கொண்டு போய் ஆற்றில் விடுவதும் என் வேலை. இந்த வேலைகளை, ஆர்வத்துடன் செய்த காலமது.ஹூம்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். மோதகம் உடையாமல் வர வேண்டும். கொஞ்சம் இனிப்பு அதிகமானலும் விரிசல் விட்டு விடும். ஆனாலும், உளுந்தம் பூரணம் கொழுக்கட்டை யை விட இது கொஞ்ச நேரம் அதிகமானால், வெல்லத்தண்ணிர் விட்டுக் கொள்ள ஆரம்பிக்கும் இயல்புடையது. அவ்வப்போது செய்து சாப்பிட சுவை.

      தங்களின் வழக்கப்படி விநாயக சதுர்த்தியன்று செய்யும் செயல்களை நினைவு கூர்ந்து எழுதியது மகிழ்வாக இருந்தது. இதைச் செய்யும் போது ஒரு ஆனந்தம் நமக்குள் வருடந்தோறும் உண்டாவது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். இன்றும் தங்களின் வழக்கம் பிரகாரம் கொண்டாடினீர்களா? தங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

      தங்களின் உடனடி கருத்துக்கு நேற்றும் வெளுயில் சென்ற காரணத்தால் பதில் தர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் சகோ.

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு அருமை காணொளிகள் கண்டு ரசித்தேன் ‌

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      தங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ (ஆனால், தாமதமாக மன்னிக்கவும்.)

      பதிவை ரசித்து காணொளிகளை கண்டு நல்லதொரு கருத்தை தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்.
    பதிவும் பாடல்களும் அருமை.
    பாடல்களும் அதற்கு விளக்க உரைகளும் நன்றாக இருக்கிறது.
    மகன் வீட்டுக்கு வந்து விட்டேன். இனிமேல்தான் இங்கு பூஜை. வேலை நடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பதிவும், பாடலும் அருமை என்ற கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      தாங்கள் மகன் வீட்டுக்கு வந்து விட்டதை படித்து மகிழ்வுற்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீவிநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடியிருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். உங்களின் விநாயக சதுர்த்தி பதிவையும் விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      வெளியில் சென்று விட்ட காரணத்தால் தாமதமாக பதில் கருத்து தந்தமைக்கு மன்னிக்கவும் சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பிரணவ ஸ்வரூபன் பர்த்டே இனிதாக நடந்து முடிந்திருக்கும்!

    இந்த பிரபஞ்ச சக்தி! புதிபுதிதாய் ஆகும் அதை புரிந்து கொள்வது கடினம்! நம்ம தோஸ்து இந்தப் பிரணவ ஸ்வரூபன்!

    பாடல் அருமை.

    ஔவையாரே அவர்கிட்ட டீல் போட்டிருக்காங்க பாருங்க!!! ஹாஹாஹாஹா......

    நானும் கொழுக்கட்டை ஓ ஸாரி மோதகம் செய்தேன்...கார மோதகம் தான் தோஸ்துக்கு ஸ்வீட் கொடுக்கலை நம்ம வீட்டில்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /பிரணவ ஸ்வரூபன் பர்த்டே இனிதாக நடந்து முடிந்திருக்கும்!/

      ஆம் பிரணவ ஸ்வரூபன் (ஆஹா அருமையான பெயர்) பிறந்த நாள் நன்றாக நடந்தேறியது சகோதரி உங்கள் வீட்டிலும் அவரின் பிறந்த நாள் விமர்சையாக நடந்தேறியிருக்குமென நினைக்கறேன். தாமதமான வாழ்த்துகள்.

      பிரபஞ்ச சக்தியை பற்றி சொன்னது உண்மை. நம் எல்லோரின் தோஸ்தும் இவர்தான்.

      ஆம். ஔவையார் செய்த பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், அவர் நல்லவைகளை தந்து நன்மைகளை பெறச் சொன்னார். மக்கள் அதை இன்று வரை உணரவில்லை. நான் இந்த தடவை வரலஷ்மி பூஜை க்கு மூவகையான கொழுக்கட்டைகளைத் செய்து விட்டமையால், இந்த தடவை இனிப்பு மோதகம் மட்டும் செய்தேன். பிறகு புளியோதரையும், தேங்காய்சாதம், , எள்ளுசாதம் சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், சுண்டல் போன்றவைகளுடன் சிறப்பாக செய்தேன். தாங்கள் தங்களின் வேலை பளுவில் என் பதிவுக்கு வந்து நல்லதொரு அன்புடன் தந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சற்றே தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். சில நாட்களாக மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை. இன்று தான் மொத்தமாக படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /சற்றே தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்./

      அதற்கென்ன.. பரவாயில்லை. தாமதமெல்லாம் இல்லை. . தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே. இதோ..! நானும் அதை விட தாமதமாக பதில் தருகிறேன். அதற்கு தாங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். .

      மற்ற நண்பர்களின் பதிவுகளை நானும் நான்கைந்து நாட்களாக படிக்க இயலாத சூழ்நிலைகள் எனக்கும் உருவாக்கி விட்டன. இனிதான் படிக்க வேண்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete