Pages

Sunday, January 28, 2024

தவத்தின் பலன்.

தவமும், வரமும். 

பூமி தோன்றியவுடன் புத்தம் புதிதாக  தானும் தோன்றிய, பச்சை பசேலென்று இருந்த இயற்கை வனப்புகள் அனைத்தும் காலச்சுழற்சியில் தன்  பொலிவிழந்து  மங்கி காட்சியளித்தது.  என்னதான் கால மாறுதல்கள் அதன் மதிப்பை உணராமல் சீரழிக்க தன் பெருங்கரங்கள் கொண்டு உதவினாலும்,தான் இறைவனால் படைக்கப்பட்ட போது இருந்த தன் அழகுகள் இவ்வாறு மங்குவதற்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை  இயற்கையன்னை கடவுளை சந்திக்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தன் குறைகளைச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டது. 

ஒவ்வொரு வீட்டிலும், குடும்பங்கள் சில பல, இடங்களிலும் தமது முந்தைய தலைமுறைகளின் பேச்சுக்கு மதிப்பளித்து இயற்கை சம்பிரதாயங்களை போற்றியபடி வாழ்ந்து வந்தாலும், செய்கைப் பூச்சுக்கள் அந்த இயற்கையின் சாராம்சத்தை அவ்வப்போது ஆசைதீர அள்ளிப் பருகி, தன்  ஆடம்பரங்களையும், அதன் விளைவால் பார்ப்பதற்கு பகட்டாக தோற்றமளித்த பொலிவுகளையும் பிறர் பார்த்து மெச்சும்படிக்கு  தக்க வைத்தபடி வளர்ந்து, கூட்டு குடும்பங்களின் கூட்டுறவான ஆணிவேரை சற்று ஆழமாக  பதம் பார்த்துக் கொண்டும், விருட்சமாக வளர்ந்து பெருகி அசையாதிருக்கும்  தன் சுயநலத்தின் பேரில் காலூன்றியபடியும் நிமிர்ந்து நிற்கவும் தொடங்கின. 

இவ்வாறு முடக்கப்பட்ட இயற்கை அம்சங்களும்,  கடவுளை காணும் போதெல்லாம், தன் மீது காலப்போக்கில்  திணிக்கப்பட்ட செயற்கை கவசத்தை அகற்றுமாறு வேதனையுடன் வேண்டிக் கொண்டது. 

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பெரு நகரங்களும், கிராமங்களால் சூழப்பட்ட சிறு நகரங்களும், பெரு நகரமாக ஆசை கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் சிறு நகரங்களும், இத்தகைய சூழலில் வளரலாமா, வேண்டாமா என சீட்டுக்குலுக்கி முடிவெடுக்கும் நிலையில் உள்ள பிற பகுதிகளும், பணத்தினால் ஏற்படுத்திக் கொள்ளும்  வசதிகள் ஒன்றையே பிரதானமாக கொண்டு வளர்ந்து, பெருநகரங்கள், கிராமங்களான நகரங்கள் அனைத்தும் வெவ்வேறு பல நாடுகளாகி, தங்களுக்குள் பல பிரிவுகள் ஏற்படுத்திக் கொண்டு, மனிதர்களின் கலாசாரம், பண்பாடு இவற்றை மாற்றியமைப்பதே தன் குறிக்கோளாக்கி, பூமிக்குள்ளேயே பிரிந்து போய் சந்தோஷப்பட்டுக் கொண்டது

இப்படி பிரிந்த பண்பாடுகளில் மக்களின் ஆர்வங்கள் காரணமாக யார் உயர்ந்தவர்கள்/தாழ்ந்தவர்கள் என்ற விகிதாசாரங்களில் பூமி செய்வதறியாது திகைப்புற்று திணறி கொண்டிருந்தது. மனிதர்கள் காலம் தந்த வசதியினால் ஒருவரை ஒருவர் இழிந்தும், பகைத்தும்  கொண்டார்கள். ஏழ்மை, வறுமை பகைமை பேதமை போன்றவைகள் உருவாயின

பணத்துக்காகவும், அது தந்த வசதிகளுக்காகவும் மனிதர்கள் எந்த பாதகங்களையும்,  அஞ்சாமல் செய்தார்கள். இது போக சுயநலங்கள் என்றவொன்று அவர்களின் இயல்புகளாகிப் போயின. தோன்றியவுடன் இயற்கையிலேயே அவர்களுடன் தோன்றிய பாசம், பந்தம், கடமை என்பதெல்லாம் வெறும் புரளி, கற்பனை என்ற மனோபாவங்கள் எளிதாக அவர்களிடம் குடி புகுந்தன. விலங்குகளின் குணங்களோடு மனித மனங்களும் ஒத்துப் போவதை கண்டு விலங்குகளே சில சமயங்களில் அதிர்ச்சியடைந்தன. 

இயற்கை தன் வலுவிழந்த போதும், இயற்கை மாறி கலாசாரங்களின் விதி முறைகள் மாறிய போதும், மனிதர்கள் தன்னையொத்த  மற்றவர்களால் வஞ்சிக்கப்படும் போதெல்லாம் எழுந்த வேதனை ஒலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொஞ்ச கொஞ்சமாக ஒரு" மாய உருவம்" திடகாத்திரமாக வளர்ந்து வந்தது. "அது" தன் நிலையில் என்றும் அழிவில்லாமல்  நிலைத்திருக்க வேண்டி இறைவனை நோக்கி கடுமையான  தவம் செய்ய ஆரம்பித்தது.

 ஆழமான "அதன்" தவத்தைக்கண்ட இறைவன் அதன் முன் காட்சியளித்து "நீ வேண்டும் வரம் என்ன?" என்றார். "முதலில் எனக்கு அழிவில்லாத வரம் வேண்டும். நான் வேதனைகளிலிருந்து பிறந்து வந்திருக்கிறேன்.அதனால் நான் யாரை அண்டி தீண்டினாலும், அவர்கள் வேதனையடைய வேண்டும்." என்றது.  சரி.. ! அவ்வாறே ஆகட்டும்... "என்றபடி வரத்தை தந்து விட்டு இறைவன் மறைந்தார். 

மீண்டும் முன்னைவிட பலத்துடன் "அது" பலகாலம் இறைவனை நோக்கி தவமிருக்கவே வந்த இறைவன் "இப்போது எதற்காக என்னை நினைத்து தவமிருந்தாய்?" எனக் கேட்கவும், "இன்னமும் என் தவங்கள் பூர்த்தியாகவில்லை. வரங்களும் என் விருப்பமான முறையில் கிடைக்கவில்லை." என "அது" குறை கூறவே "இப்போது சரியாக கேட்டு பெற்றுக் கொள்" என இறைவன் கூறவும்  "நான் உனக்கு நிகராக செயல்பட வேண்டும்... உன்னைப் போல் உயிர்களை படைப்பதில் எனக்கு சிறிதும் ஆர்வமில்லை. . ஆனால்  அழித்தலில் என் வஞ்சம் தீரும்படி என்னைக் கண்டு மானிடர் அனைவரும் அஞ்சி நடுக்க வேண்டும். இயற்கையை இழிந்த பாவத்திற்கு, அவர்களுக்கு வரும் இயற்கை முடிவு என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் திணரும் நிலை என்னால் உருவாக்கப்பட வேண்டும். என்ற "அதன்" குரலில் இருந்த காட்டமான வெஞ்சினத்தைக்கண்டு இறைவனே சற்று மன தடுமாற்றத்துடன் கலக்கமுற்றார்.  

"ஏன் இந்த வரம்.? மானிடர்களுக்கு அவரவர் விதிப்படி, நன்மை, தீமைகளை பெற்று வாழும் நிலைதான் அவர்கள் பிறந்தவுடனேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டதே..! மேலும் தவறுகள் செய்யாதவர்களும் தண்டனை அனுபவிப்பது நீதிக்கு புறம்பானதல்லவா...! அப்படியிருக்க இந்த வரத்தை நான் எப்படி உனக்குத் தருவது?" என்றார் இறைவன். 

அப்படியில்லை...! வேதனைகளிடமிருந்து பிறந்த என் நோக்கம் மானிடர்களை துன்புறுத்துவதுதான்.. . அதற்காகத்தான் இப்படி கடுந்தவமிருந்து வருகிறேன். இந்த வரம் நீ தராமல் போனால், இன்னமும் கடுந்தவமியற்றுவேன். எப்படியும் என் தவத்தின் பலனுக்கு பரிசளிக்க நீ வந்துதான் ஆக வேண்டும். . அதுதான் வழக்கமான தவத்தின் நியதி..."என்று ஆக்ரோஷமாக"அது" கூச்சலிட்டது.

" அது" கேட்ட வரங்களை வேறு வழியின்றி தந்த இறைவன்," சரி இனி என்னை அழைக்காதே.. " என்றபடி செல்ல முற்பட்ட போது, தடுத்து நிறுத்தியது "அது" ...   "இரு..இரு... இவ்வளவு பராக்கிரமங்களை பெற்ற எனக்கு ஒரு நல்ல பெயர் இல்லை பார்...அதையும் உன் வாயால் வைத்து அழைத்து விடு... இந்த வரத்தையும் தந்து விட்டு போ..." என்று வேண்டவும், "இதோ பார்....உன் தவத்தை மெச்சி உனக்கு வேண்டும் வரங்களை தந்தாகி விட்டது. இதுவும் என்னையும் மீறி தன்னிச்சையாக நடைபெற்ற செயல். இதில் உனக்கென ஒரு பெயர் வைத்து அழைக்கும் மன நிலையில் நான் இல்லை. உன் விதிப்படி உனக்கான பெயரை நீ விரும்பி நாடும் மானிடர்களே வைத்துக் கொள்வார்கள். இனி நீ அழைத்தாலும், உன்னால் சிரமப்பட்டு மன/உடல் நோகும் மானிடர்களே அழைத்தாலும் நான் வருவது சிரமமே.... ஏனெனில் இது விதியின் உக்கிர பிரவேசம்.  இந்த பிரவேசத்தில், பிரபஞ்சத்தில் அதன் வீரியங்களை யாராலும் தடுக்க இயலாது. உன் இந்த தவங்களும், வரங்களும் அது தீர்மானித்தவை. இதற்கு ஒரு முடிவென்பதையும் அதன் நேரம் வரும் போது அதுவேதான் தீர்மானிக்க வேண்டும். அப்போது அதன் அழைப்பில் பக்கபலமாக நான் அனைவரையும் காக்க அதனுடன் வருவேன். அப்போது நீ பெற்ற வரங்கள் பலனற்றுப் போகலாம். உன் பராகிரமங்கள்  தூள் தூளாகிப் போகலாம். எனவே இனி என்னை மறுபடியும் அழைக்கும் முயற்சியில் அடிக்கடி இறங்காதே. . " என்று சற்று கோபத்துடன் சொன்ன  இறைவன்  அடுத்த நொடியில் மறைந்தார். 

தவத்தினால் பெற்ற வரங்களை விதியின் வருகையை ஒரு பக்கம் எதிர்பார்த்தபடி, செயலாற்ற தொடங்கியது" அது."  அதன் பிடியில் அதன் வேண்டுதல்படி சிக்கி மானிடர்கள் மீள வழியின்றி தவித்தனர். செய்த, வினைகள், செய்யப்படுகிற வினைகள் செய்யப் போகும் வினைகளின் விளைவுகள்  இப்படி எதற்கும் அஞ்சாத மானிடர்கள், இதற்கு அஞ்சி ஒளிந்து கொண்டனர். "அது"வும்  இறைவன் கூற்றுப்படி தனக்கு மனிதர்களாலேயே ஒரு பெயர் கிடைத்த மகிழ்வில், தன் அரக்கத்தனமான செயலின் விபரீதத்தை பற்றி சிறிதும் கவலையில்லாமல், "அலை, அலையாக "அதனுள் எழுந்த  சந்தோஷங்களில் மூழ்கியபடி பூமியில் உலா வந்தது. 

 நாமும் இறைவன் வரவு குறித்தும், "அது" முற்றிலும் அழியப்போகும் தருணம் குறித்தும் இறைவனை மனமுருக சிந்தனையில் இருத்தி வேண்டிக் கொண்டேயிருப்போம். எத்தனை தூரம் "அவனால்" படைக்கப்பட்ட மானிடர்கள் துன்புறுவதை பொறுப்பான் "அவன்." 

அந்த விதியும், "அவன்" மனவருத்தம் உணர்ந்து, அவன் சொல் கேட்டு விரைவில் மனம் மாறி அவனுடன் இணைந்து வரும். நம்புவோம். 🙏. 


மனதின் வேதனைகளில் இந்தப் பதிவை எப்போதோ இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எழுதினேன். இதில் ஏகப்பட்ட  மாற்றங்கள் இப்போது வந்திருக்கலாம். இப்போது இந்த நோயைப் பற்றிய பயங்கள் மக்களுக்கு பழகி விட்டதென்றாலும், அது மறுபடி, மறுபடி எழுந்து வந்து "நான் இன்னமும் இருக்கிறேன்" என்றபடி  பயமுறுத்திப் போகிறது. நெருக்கடியான சூழல்களில், மக்கள் கூட்டம் அலை மோதும் பிரதேச பகுதிகளில் மீண்டும் முகம் மூடி அலைய வைக்கிறது. தோன்றியதிலிருந்தே இயல்பாக வரும் சாதாரண ஜலதோஷங்கள் கூட நீடித்து பலவிதமான  தொந்தரவுகளைத் தந்தபடி அதன் பெயரை நினைத்து தடுமாற வைக்கிறது. ஆனாலும், ஆண்டவன் மேல் நாம் எந்நாளும் கொண்டிருக்கும் நம்பிக்கையை  தவிர்க்காமல்  இருந்தால் நல்லது. 

இந்தப் பதிவை படித்து அருமையான இந்தப்பாடலை கேட்பவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் .. 🙏... 

18 comments:

  1. இந்த பாடலை நேற்று கேட்டேன், தவறாக பூவை எண்ணி விடுவதால் 100 பாட்டு முடிந்து விட்டது என்று நினைத்து வேறு பாடல் பாடி மரணதண்டனை பெற்று விடுவார். விதி வலியது என்று நினைத்து கொண்டேன்.

    நீங்களும் பதிவு அப்படித்தான் எழுதி இருக்கிறீர்கள்.
    மீண்டும் கொரோனா வந்து இருக்கிறது என்கிறார்கள்.
    முககவசம் நல்லது என்று சொல்கிறார்கள்.

    //அந்த விதியும், "அவன்" மனவருத்தம் உணர்ந்து, அவன் சொல் கேட்டு விரைவில் மனம் மாறி அவனுடன் இணைந்து வரும். நம்புவோம். 🙏.//

    நம்புவோம் .

    ஞானிகள் போல தத்துவ ஆராய்ச்சி செய்து பின் தெளிவு பெற்றது போல இருக்கிறது உங்கள் பதிவு.

    //இறைவனால் படைக்கப்பட்ட போது இருந்த தன் அழகுகள் இவ்வாறு மங்குவதற்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை இயற்கையன்னை கடவுளை சந்திக்கும் போதெல்லாம் வருத்தத்துடன் தன் குறைகளைச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டது.//

    ஆமாம் அங்கலாய்க்கமட்டுமே முடியும் இனி இந்த் செயற்கை கவசத்தை அழிக்க முடியாது முயன்றால் மங்கும் அழகை கொஞ்சம் மெருகு ஏற்றலாம்.

    //"நான் உனக்கு நிகராக செயல்பட வேண்டும்... உன்னைப் போல் உயிர்களை படைப்பதில் எனக்கு சிறிதும் ஆர்வமில்லை. . ஆனால் அழித்தலில் என் வஞ்சம் தீரும்படி என்னைக் கண்டு மானிடர் அனைவரும் அஞ்சி நடுக்க வேண்டும். இயற்கையை இழிந்த பாவத்திற்கு, அவர்களுக்கு வரும் இயற்கை முடிவு என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் திணரும் நிலை என்னால் உருவாக்கப்பட வேண்டும். என்ற "அதன்//

    இயற்கை வரம் கொடுத்தவனிடமே மேலும் மனிதர்களுக்கு கஷ்டம் கொடுக்க கேட்பது இயற்கை எவ்வளவு மனம் நொந்து , போய் இருக்கிறது என்று தெரிகிறது.
    மனிதன் ஏற்படுத்திய சீரழிவுக்கு மனிதன் தானே பதில் சொல்லவேண்டும்.
    மகரிஷியின் கவிதை நினைவுக்கு வந்தது.

    //உயிர் தனையே விதி என்றும் அதன் சிறப்பாம்
    உணரும் ஆற்றல் நிலையை மதி என்று கொள்//

    உங்கள் மதி நன்றாக வேலை செய்கிறது.


    விதி, சந்தர்ப்பம், மதி

    விதி என்ற வேகமின்றேல் நிகழ்ச்சியில்லை,
    விளைவறிந்தும் விளைவுகள் யூகங்கொண்டும்,
    மதியாற்றும் தொழிலுண்டு விதியினூடே
    மரம் ஒன்று சாய்ந்தொருவன் மேலே வீழ
    கதி என்ன? இதுவே சந்தர்ப்ப மாகும்
    காரண காரிய விளைவை ஆழ்ந்து நோக்க ,
    புதிர் போன்ற இவ்விடயம் புரிந்து போகும்;
    புவிவாழ்வில் மதி ஆற்றல் அளவும் தோன்றும்.

    மயக்கமும் தெளிவும்

    விதி வகுத்த வழியே என் வாழ்க்கை என்று
    வெகு நாட்களைக் கழித்தேன். அனுபோகத்தில்
    எதிலுமே திருப்தியின்றி இன்பம் துன்பம்
    எனும் சுழலால் எண்ணத்தில் வேகம் மீறி
    மதி உயர்ந்து மதியறிந்த போது அங்கே
    மதியாயும், விதியாயும் மாய்கை, ஞானம்,
    பதி, பாசம், பசு வென்ப தனைத்துமாகி
    பலதாயும் ஒன்றாயும் நானே நின்றேன்.

    தத்துவ விசாரம் தொடரட்டும்.
    வாழ்க வளமுடன்



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. நேற்றும் என்னால் உடனடியாக உங்களுக்கும் அனைவருக்கும் கொஞ்சம் வேலைகளின் பிஸியா ல் பதில் தர இயலவில்லை. தங்களின் விரிவான ஆறுதலான கருத்திக்கு மிக்க நன்றி. பிறகு விரிவாக பதில் தருகிறேன்.
      உடனடியாக வந்து நல்ல கருத்துக்களை தந்த எல்லோரும் மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்களின் விரிவான கருத்து கண்டு மனம் மகிழ்ந்தேன். நீங்கள் உடனடியாக வந்து கருத்து தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. எனக்குத்தான் உடன் பதில் தர முடியாமல் போய விட்டது. பெரிய மகன் குடும்பம் ஒரு திருமணத்திற்காக ஊருக்குப் போய் விட்டு நேற்று திரும்பியதில் இன்று இரவு வரை அவர்களுடன் நேரம் சரியாகப் போய் விட்டது. அதனால் பல வேலைகள் வந்ததினால், யாருக்குமே பதில் தர இயலவில்லை. மன்னிக்கவும்.

      /மீண்டும் கொரோனா வந்து இருக்கிறது என்கிறார்கள்.
      முககவசம் நல்லது என்று சொல்கிறார்கள்./

      ஆம். அதுதான் பயமாக உள்ளது. ஒரு ஜலதோஷம் கூட சட்டென குணமாகாமல் நாட்பட்ட இழுக்கிறது. அது வேறு பயத்தை உண்டு பண்ணுகிறது.

      /மகரிஷியின் கவிதை நினைவுக்கு வந்தது.

      //உயிர் தனையே விதி என்றும் அதன் சிறப்பாம்
      உணரும் ஆற்றல் நிலையை மதி என்று கொள்///

      வேதாந்த மகரிஷி அவர்களின் உரைகளை இங்கு சொல்லி முப்பது கண்டு மகிழ்வடைகிறேன். தங்கள் உதாரணங்கள் படிக்க மிக்க மன மகிழ்வை தந்தன. எத்தனை தத்துவ கருத்துக்களை தாங்கள் ஜீரணித்து உள் வாங்கி வைத்திருக்கிறீர்கள். உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. உங்கள் நட்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      தங்கள் பாராட்டுக்கள் எனக்கு மகிழ்வை தருகிறது. தங்களது ஆழம் மிக்க நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நம்ம பிரச்சனைகளுக்கெல்லாம் நாம் விதியின் மேல் பழியைத் தூக்கிப் போட்டு விடுகிறோம். போன பிறப்பில் நாம் கொண்டுவந்த மூட்டைகளை எங்கு வைக்கப்போகிறோம்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /போன பிறப்பில் நாம் கொண்டுவந்த மூட்டைகளை எங்கு வைக்கப்போகிறோம்?/

      அதைத்தானே ஊழ்வினைப்பயன் என அனுபவித்து வருகிறோம் . அதைத்தானே விதி எனவும் சொல்கிறோம். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கடவுள் வாழ்த்தையும் ஒரு பாடலாகச் சேர்த்துக்கொண்டதால், அவசரப்பட்டு 100 பாடல்கள் முடிந்தது என்று காதலி வந்ததும், அவளைப் பார்த்து அவள் மீது பாட ஆரம்பித்த காதலன், காதல் நிறைவேறாமல் போனதை அருமையாக பாடலாக இயற்றியிருக்கிறார்கள், பாடியிருக்கிறார். பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம் முதல் வாழ்த்துப் பாடலை கணக்கில் கொண்டு நூறு பாடல்களை பாடி விட்டதாக அம்பிகாபதியை நினைக்க வைத்ததும் விதிதான். என் செய்து? அவர்கள் நல்ல காதலுக்கு ஒரு உதாரணமாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக ஏற்பட்ட விதி போலும்..!!

      பாடல் தங்களுக்கும் பிடிக்கும் என்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மிகவும் தத்துவார்த்தமான பதிவு சகோ கொரோனாவைக் குறித்த தங்களது கட்டுரை சிறப்பாக வந்து இருக்கிறது.

    அதற்கு ஏற்றாற்போல் திரைப்படப் பாடலும் அருமை.

    மீண்டும் இந்த அரக்கன் உலகுக்கு வந்து விடாமல் இறைவன் காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவு நன்றாக வந்திருப்பதாக கூறியமை கண்டு மகிழ்வடைகிறேன் சகோ. அதற்கு பொருத்தமாக பாடல் பகிர்வும் நன்றாக உள்ளது என சொன்னதற்கும் நன்றி.

      /மீண்டும் இந்த அரக்கன் உலகுக்கு வந்து விடாமல் இறைவன் காப்பாற்றுவார் என்று நம்புவோம். /

      ஆம். இறைவன்தான் அனைவரையும் காத்தருள வேண்டும். நம்புவோம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஆம்.  நேற்று நானும் இந்தப் பாடலை ஜெயா டிவி என்று நினைக்கிறேன் அது வீட்டில் வைத்திருக்க, என் காதிலும் விழுந்தது.  எனக்கு அப்போது ஒன்று தோன்றியது.  அமராவதிக்கு தன் தந்தை ஏமாறுவதும் பிடிக்கவில்லை.  காதலனையும் வெளிப்படையாகக் காட்டிக்  கொடுக்காமல் அதை மறைமுகமாகச் செய்து, நாமும் அவனோடு சென்று விடலாம் என்றெண்ணி காரணமாகவே அப்படி செய்கிறாள் என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன்!  ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்களும் யதேச்சையாக இந்தப்பாடலை கேட்டீர்களா ? மகிழ்ச்சி. உங்கள் வியாழன் பதிவிலும் முதல் பகுதி சில சமயங்களில் எப்படியோ என் அன்றாட நிகழ்வுகளுடன் ஒத்து வருவதை கண்டு நானும் வியந்திருக்ககிறேன்.

      /அமராவதிக்கு தன் தந்தை ஏமாறுவதும் பிடிக்கவில்லை. காதலனையும் வெளிப்படையாகக் காட்டிக் கொடுக்காமல் அதை மறைமுகமாகச் செய்து, நாமும் அவனோடு சென்று விடலாம் என்றெண்ணி காரணமாகவே அப்படி செய்கிறாள் என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன்/

      தங்கள் ஊகங்களுக்கு ஏற்ப கதையை திசை திருப்பலாம். அதில் ஏதும் தப்பில்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. விதிக்கான உண்மையான காரணம் தெரியும் நாளில் நிறைய பிம்பங்கள் உடையலாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      விதிக்கு காரணம் என்பது கிடையாதே..! அது பாட்டுக்கு வந்து நல்லதையும், கெட்டதையும் காண்பித்து விட்டுப் போகும். நம் மனதில் அப்போதைக்கு எந்த காரணத்தையும் சுட்டிக் காண்பிக்கவும் தெரியாது செய்து விட்டு பின் புலம்ப வைப்பதுதான் அதனின் வேலை. கருத்துக்கு நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. முதலில் படிக்க ஆரம்பித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து கொள்ள சற்று நேரமானது!  தவறாக நினைக்கவேண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /முதலில் படிக்க ஆரம்பித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து கொள்ள சற்று நேரமானது! தவறாக நினைக்கவேண்டாம்!/

      இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? பூமி மாதிரியே தலைசுற்ற வைத்து விட்டேனோ ? ஹா ஹா ஹா. கடைசியில் ஏதோ புரிகிற மாதிரி எழுதியிருக்கிறேனா என்பதை தெரிவியுங்கள். :))) நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நல்ல பகிர்வு. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நல்ல பகிர்வு என்ற தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      /நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்./

      ஆம். அந்த நம்பிக்கைத்தான் நாம் இயல்பாக தினசரி இயங்க உதவுகிறது. நல்லதே நடக்கட்டும் . தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம் சகோதரரே

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    உண்மை. தொடர்ந்து கெட்டதை அது நிகழ்த்தினால், நம் மனமும் உடைந்து விடும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete