Pages

Monday, December 11, 2023

விழுவதும், எழுவதும் ஒரு வரமேதான்.

அனைவரும் நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 

அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான வணக்கங்கள். 

நான் எழுதுவது பதிவும் அல்ல.. ஒரு கடிதம்...அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல... என் உள்ளம்.... (சிவாஜியின் பழைய பாட்டு நினைவுக்கு வருகிறதா? :)))))) ) 

அனைவரும் நலமாக உள்ளீர்களா? ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் இரு(வ)ந்து கொண்டேதான் இருக்கிறதல்லவா? வானிலை மாற்றங்கள் வேறு புயல், வெள்ளமென மிகுந்த சிரமங்களை தந்து விட்டன. உங்கள் அனைவரின் பதிவுகளையும் அவ்வப்போது படித்துக் கொள்கிறேன். உடன் வந்து பதில்கள் தர இயலவில்லை. மன்னிக்கவும் .🙏. 

என் சென்ற பதிவுக்கு உடனடியாக வந்து ஆறுதலாக கருத்துரைகள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். அதற்கு பாதிக்கு மேல் விரைவாக பதில் கருத்துக்கள் தர இயலவில்லை. அதற்கும் உங்களனைவரின் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். 🙏. நேரம் கிடைக்கும் சமயம் கண்டிப்பாக தருகிறேன். 

அப்போது வேலைகள்....வேலைகள் என நாட் முழுவதும் ஆக்கிரமித்து கொண்டதில் நேரங்கள் பறந்து விட்டன. மகன் குடும்பம் வருகையால், வேலைகள் சரியாக இருந்தன. ஒரே குடும்பமானாலும், அவரவர் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் அடிமைத்தனதிற்கு உடன்பட்டு வீட்டின் பல மாறுதல் வேலைகள் கைகளை கட்டிப் போட்டு சிறைப் பிடித்து விட்டன. பின் வந்த நாட்களில் தீபாவளி சிறப்புகள் என நாட்கள் பறக்க இடையில் எபியில் தீபாவளியன்று அனைவருக்கும் ஒரு வாழ்த்துக்களை பகிர்ந்தேன். (சகோதரர் நெல்லைத் தமிழரின் பதிவு அன்று.)  .மறுநாளிலிருந்து அவ்வப்போது அனைவரின் பதிவுகளை படித்து அனைவருக்கும் கருத்துக்கள் தர வேண்டுமெனவும் அப்போது நிஜமாகவே  நினைத்தேன். 

தீபாவளி நல்லவிதமாக கழிந்த அன்று மாலை அனைவரும் குடும்பத்துடன் வெளியே செல்லலாம் என சென்றோம்.(ஆசைப் பேய் என்னையும் உடன் அழைத்துச் சென்றது.) மல்லேஷ்வரம் பகுதியில் சாலையோர கடைகளையும், மக்கள் வெள்ளத்தையும் கண்டு களித்தபடி செல்லும், போது. ஒரு மேடான பகுதியில், (ஸ்பீடு பிரேக்கர்) கால் இடறி நான் கீழே விழுந்ததில் இடது காலில் நல்ல அடி. இத்தனைக்கும் நான் ஒன்றும் அத்தனை ஸ்பீடாக நடக்கவில்லை.:)))) (இப்படி எத்தனை தடவைதான் விழுந்து  புதையல் எடுக்க வைப்பானோ இறைவன். தெரியவில்லை.) சாலையில் விழுந்த அவமானத்துடன் எழுந்து கால் உதறி அருகிலிருந்த ஒரு கடையின் படிகளில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெள்ள நடந்து எப்படியோ வலி பொறுத்தபடி, சற்று தொலைவில் நிறுத்தியிருந்த காரில் ஏறி வீடு வந்து விட்டேன். இரவு முழுவதும் இடது கால் வலி பின்னியெடுக்க தூங்கவேயில்லை .( தீபாவளி சிவராத்திரியாக மாறி விட்டது. :))))) மறுநாளிலிருந்து  குழந்தைகள் அனைவரிடமும் காட்டிக் கொள்ள இயலாமல், நான் தவித்த தவிப்பை அந்த இறைவன் ஒருவனே அறிவான்.  (அதற்குரிய மாத்திரை மருந்து என் இயல்பான உடல்நலத்திறகு வேறு பக்கவிளைவுகளை தரும் என்பதால் நானோ எப்போதுமே மருத்துவரிடம் செல்ல அஞ்சுகிறவள்.) குழந்தைகள் ஒரு வருட இடைவெளியில் சந்தோஷமாக ஊருக்கு வந்திருக்கும் போது இப்படியாகி விட்டதே என்ற வேதனை மனதை வாட்ட அதன் பின் வந்த நாட்கள் அதே வலியுடனே பறந்தன. அப்படியும் என்னவோ நொண்டியபடி வீட்டு வேலைகள் நடந்தேறின. அதில் அவர்களுடன் இறைவன் ஆணைப்படி நாங்களும் செல்ல வேண்டிய இறைவழிப்பாட்டிற்கான ஊர்களுக்கு (எங்கள் குலதெய்வம் கோவில் உட்பட) செல்ல முடியாததால் அவர்கள் மட்டும் கிளம்பிச் சென்றனர். நான் எப்போதும் போல், வலி நிவாரண தைலங்கள்,வெந்நீர் ஒத்தடமென தந்தபடியும், காலை வலியினால் நொண்டியபடியும் வீட்டில் நடமாட்டமாக கழி(ளி)த்துக் கொண்டிருக்கிறேன். இதில் உங்களனைவரின் பதிவுகளை அதன் பின் தொடர்ச்சியாக படிக்கவும் இயலவில்லை. (வலிகள் மிகுந்த மனது தான் காரணம்.) மன்னிக்கவும். 🙏. 

இப்போது டிசம்பர் 12 வந்தால் ஒரு மாத காலமாகும் அந்த இடது கணுக்கால் வலி வீக்கம் குறைந்து சற்று மட்டுப் பெற்று வருகிறதென்றாலும், இன்னமும் "நான் உள்ளேன் அம்மா" என தினமும் ஆஜர் கூறியபடி உள்ளது. 

இவ்வாறு என்னையும் உடன்  அழைத்துச் செல்ல முடியாததால் மன வருத்தமடைந்திருந்த மகன் மருமகள் இருவரும் அவர்களின் இறை சுற்றுலா திட்டத்தில் இப்போது வேறு ஒரு மாறுதல் பிளான் செய்து இன்னமும் அவர்கள் செல்லாத ஊர்களுக்கு திருச்சியிலிருந்தபடி அழைப்பு விடுத்திருக்கின்றனர்." அப்போது வேண்டாமென தடுத்த இறைவன் இப்போது அவர்கள் வாயிலாக இன்னமும்  விடாமல் அழைக்கிறான். " என்ற எண்ணத்தில் நாங்களும் இங்கு  பிராயணத்திற்கு யத்தனம் செய்கிறோம். இனி அனைத்தும் நல்லவையாக நடந்திட இறைவன் அருள வேண்டும். எப்படி இந்த  பிராயணங்களை சந்தித்து இறைவனை காணப்போகிறேன் என மனது சிறிது  சஞ்சலபட்டாலும், "இறைவன் என்னை அவன் ஆணைப்படி நடத்துவான்" என்ற நம்பிக்கையும்  உள்ளது. 🙏. 

இப்படியாக இந்த வருட ஆரம்பத்தில், வலது காலில் பட்ட  அடியுடன் ஆரம்பித்து, இறுதியிலும் இடது கால் அடியுடன் இந்த ஒரு வருட காலம் நகர்கிறது. கொஞ்ச வருடங்களாக இப்படி கால்களில் அடிபடுவது ஒரு தொடர் கதையாகவம் உள்ளது. வரும் புத்தாண்டிலிருந்தாவது இந்த தொந்தரவுகள் நீங்கிட இறைவன் அருள்வான் என நினைக்கிறேன். நம்புகிறேன். 

இதுவும் உங்கள் அனைவருடனும் பகிரும் ஆசையால் எழுந்த பதிவுதான். மனதிற்கு பிடித்த நட்புகளிடம் மனம் விட்டு பேசினால் ஒரு மனபலம் வருமல்லவா...? 

அனைவருக்குமே. 

தேக பலம் தா.. 

பாத பலம் தா.. 

என்று இறைவனை வேண்டியபடி உள்ளேன். 

"நமோ, நமோ நாராயணா" பாடல் தினமும் மனதில் ஒலித்தபடி உள்ளது. 

அதில் வரும், "நலம், துயர் என்பதெல்லாம் லீலையே ஹரிநாராயணா" என்ற வரிகள் எத்தனை சாஸ்வதமானவை. எனக்குப் பிடித்த பாடல் இது. 

வரும் 24 ம் புத்தாண்டு நல்லபடியாக பிறந்து அனைவரையும் மகிழ்விக்க பிரார்த்தனைகள் செய்கிறேன். 

பி. கு. இதை படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். இந்தப் பதிவிற்கும், தங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் உடனுக்குடன் பதில் தர சற்று தாமதமாகும் எனவும் சொல்லிக் கொள்கிறேன்.(அப்படியே தந்து விட்டால் நல்லது. அனைத்தும் "அவன்" லீலையே..) அதற்கும் சேர்த்து தங்கள் அனைவரின் மன்னிப்பை கோறுகிறேன்🙏. . 

என்னை மறவாத அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் எப்போதும் என் பணிவான நன்றிகள்.

27 comments:

  1. அடடா....முக்கியமான நேரத்தில் காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டதே...இதனால் கோவில்களுக்குச் செல்வதும், மகன் குடும்பத்தோடு இருப்பதும் பாதிக்கப்பட்டுவிட்டதே... இப்போது வலி மட்டுப்பட்டுவருவது கண்டு மகிழ்ச்சி.

    திரும்பவும் கோவில்கள் என்றால், பிராகாரங்களில் ரொம்பவே நடக்கவேண்டிவருமே.... (கும்பகோணம் அருகில் சில கோவில்களில், எப்போடா இறைவன் சன்னிதி வரும் என்று தோன்றும் அளவு ராஜகோபுர வாசலிலிருந்து சன்னிதி ரொம்ப தூரத்தில் இருக்கும். இதில் அம்பாள்/தாயார் சந்நிதி போகணும் என்றால் இன்னும் சுற்ற வேண்டியிருக்கும்)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடியாக வந்து பதிவை படித்தமைக்கும் கருத்துக்கள் தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். இது தீடிரென எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து மாதிரியான அடி. எல்லாம் ஒரு நேர்ந்தால்... என்ன செய்வது? அதனால் அவர்களுடன் மகிழ்வான பொழுதுகளை கழிக்க இயலவில்லை. முதலில் அவர்கள் சென்ற ஊர்களுக்கு( திருநெல்வேலி உட்பட) செல்ல இயலவில்லை. மீண்டும் திருச்சிக்கு வந்த மகனும், மருமகளும், இப்போது கும்பகோணத்தில் நவகிரஹ கோவில்களுக்குத்தான் அழைத்துள்ளனர். அவர்களுடன் இரு வாரங்களுக்கு முன்பு சென்ற பல கோவில்களுக்கு ( எங்கள் குலதெய்வம் கோவிலுக்கும்) நான் வர இயலவில்லையே என மிகவும் வருத்தப்பட்டு இதற்காகவாவது வாருங்கள் என அழைத்துள்ளார்கள்.

      நீங்கள் சொல்வது போல் அனைத்தும் பெரிய கோவில்கள் தான். காலில் வலி, வீக்கம் வராமல் சென்று இறைவனை தரிசித்து வர இறைவன் அருள வேண்டும். நலமாக சென்று வந்த பின் அந்த அனுபவங்களை இறைவன் அருளால் எழுத முயற்சிக்கிறேன்.

      தங்களது அன்பான அக்கறையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. பிழைத் திருத்தம்..... எல்லாம் என் நேரந்தான் . விதி வலியது அல்லவா?

      Delete
    3. நான் எல்லாமே ஒரு காரண காரியத்தை உத்தேசித்துத்தான் இருக்கும் என்று எடுத்துக்கொள்வேன். பெரிய பிரச்சனை வராமல் விட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள். நவகிரஹ தலங்களுக்கு உங்கள் பயணம் நன்றாக நடக்கட்டும்.

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். உண்மைதான் எந்த ஒரு காரணமுமின்றி எந்த ஒரு செயலும் நடக்காது. நானும் அப்படித்தான் நினைப்பேன். இந்த மட்டுக்காவது ரத்த காயங்களின்றி சுளுக்கு, நரம்பு பிசகு என ஒரு இரண்டு மாத காலங்களுக்கு வீக்கம் வலியுடன் நகர்த்த வைக்கிறானே இறைவன் என நான் கீழே விழும் போதெல்லாம் அவனுக்கு நன்றியும் கூறிக் கொள்வேன். நவகிரஹ கோவில்கள் சென்று வந்த வேளையாவது இனி இதுபோல் அடிக்கடி கீழே விழாமல் நாட்கள் நகர வேண்டும். யாருக்கும் தொந்தரவு தராமல் இருக்கும் வரை கண், கால்களுக்கு பங்கம் ஏதுமின்றி வைத்து விடு இறைவா என வேண்டிக் கொண்டேதான் இருக்கிறேன்.
      தங்களது ஊக்கமிக்க தன்னம்பிக்கை வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. எதிர்பாரா இந்த மாதிரி நிகழ்வுகளால் நம் தினப்படி வேலைகளுமே பாதிக்கப்பட்டுவிடும்.

    நான் பஹ்ரைனில் இருந்தபோது, என் காரைச் சுத்தம் செய்ய இவ்வளவு ரூபாய் கொடுக்கணுமா, நானே அவ்வப்போதுதானே காரை எடுக்கிறேன் என்று நினைத்து நானே சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அப்படி ஒருநாள் சுத்தம் செய்யும்போது, காரின் பக்கவாட்டில் இருந்த சிறிய குழியில் சட் என்று கால் நுழைந்து பயங்கரமாக சுளுக்கிக்கொண்டது. காலை வைத்து நடக்கவே முடியலை. இரண்டு வாரங்கள் கஷ்டம்.

    நம்மை அறியாமலேயே சிறிய விபத்துகள் பெரிய விளைவுகளைக் கொண்டுவந்துவிடுகின்றன

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /எதிர்பாரா இந்த மாதிரி நிகழ்வுகளால் நம் தினப்படி வேலைகளுமே பாதிக்கப்பட்டுவிடும்./

      ஆம். தினமும் செய்யும் வேலைகள் தாமதபடுவதுடன், வலியினால் உண்டான வேதனையும், வாழ்வை கசக்கச் செய்து விட்டது.

      தாங்களும் தனியாக பஹ்ரைனில் இருக்கும் போது ஏற்பட்ட கால் சுளுக்கு அறிந்து வேதனை உண்டாயிற்று. வலியினால் எவ்வளவு சிரமபட்டிருப்பீர்கள் என என்னால் உணர முடிகிறது. இதெல்லாம் நாம் எதிர்பாராத ஒரு நொடியில் நடந்து முடிந்து விடுகிறது. பின்னர் கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே அந்த வலியுடன் நமக்குள் தோன்றிக் கொண்டேயிருப்பதையும் தவிர்க்க இயலாது. எல்லாம் விதியின் சதியாலோஜனைகள்.

      /நம்மை அறியாமலேயே சிறிய விபத்துகள் பெரிய விளைவுகளைக் கொண்டுவந்துவிடுகின்றன/

      உண்மை. தீபாவளியன்று காலை குழந்தைகளுடன் மிக மகிழ்வுடன் இருந்த நான் மாலை கீழே விழுந்து அடிபட்டு வலியுடன் வேதனையடையப் போகிறேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அந்த நாளைய பின் விளைவுகளை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். இதற்குத்தான் அதிக மகிழ்வும், ஆபத்தை உண்டாக்கி விடுமென அந்த காலத்து பெரியவர்கள் அறிவுரைகள் கூறுவர்.

      சிரிப்பும், இனிப்பும் புளிப்பும் சிறிதுள என்பார் எங்கள் பாட்டி.

      தங்களின் ஆறுதலான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. என் அம்மா இதையே, சிரிப்பும் புளிப்பும் சில காலம் என்பார். அதாவது சின்ன வயசில்தான் எப்போதும் சிரித்திருப்பதும், புளிப்பை அதீதமாக விரும்புவதும் இருக்கும். அதனால் அதனைக் கண்டுகொள்ளக்கூடாது. வயதாகிவிட்டால் சிரிப்பும் குறைந்துவிடும், புளிப்பை நாடுவதும் குறைந்துவிடும் என்பார். இந்தக் காலத்துல 'இனிப்பை'யும் இதோட சேர்த்துக்கணும் போலிருக்கு

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      உண்மைதான்.. எங்கள் பாட்டியும் "சிரிப்பும், புளிப்பும் சிறிதுள" என்றுதான் சொல்வார்கள். இனிப்பையும் உடன் சேர்த்தது. இந்தப் பாட்டி. (நான்தான்) இப்போதுதான் இனிப்பும் சிறு வயதுகாரர்களுக்கும் ஒத்துக் கொள்வதில்லையே...! நீங்கள் உங்கள் அம்மா சொன்னதாக சொன்ன அதே காரணந்தான் அவர்களும் (எங்கள் பாட்டியும்) சொல்வார்கள். ஆனால், ஒரளவு வயது வந்த பின் அதீத மகிழ்ச்சியை காண்பிப்பதற்காக வாய் விட்டு வீடு அதிர நகைக்கக் கூடாது, மெதுவாக நடக்க கற்றுக் கொள்ள வேண்டுமென கண்டிப்புடன் வளர்த்தார்கள். அதனால், அவர்களின் பழக்கங்கள் எனக்கும் தொற்றிக் கொண்டது. அதனால்தான் நாம் என்றாவது மகிழ்ச்சியை அதிகமாக காட்டுவதும், கொஞ்ச நேரத்தில் ஏதேனும் ஒரு துன்பத்திற்கு வழிகோலும் என நான் நினைப்பேன். மொத்தத்தில் நாம் பெரியவர்களின் சொல் பேச்சு கேட்டு நடந்தோம் .

      தாங்கள் மீள் வருகை தந்து தந்த கருத்திற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இறைவன் அழைக்கிறான். கோவிலுக்கு நல்லபடியாகப் போய்விட்டு வாருங்கள். பிறகு ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் அத்தனை கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      ஆம்.. இறைவன் அழைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவுகள் இன்றி பயணம் செய்து இறை தரிசனம் நல்லபடியாக பெற்று வரவும் அவனருளைத்தான் வேண்டியபடி உள்ளேன்.

      தங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மகன் குடும்பம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் காலில் அடிபட்டது அறிந்து வருத்தம்.
    உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.
    மகன் , மருமகள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக போய் வாங்க.
    இறைவன் நல்லபடியாக தேகபலம், பாத பலம் தந்து அருள்வார்.

    //இனி அனைத்தும் நல்லவையாக நடந்திட இறைவன் அருள வேண்டும். எப்படி இந்த பிராயணங்களை சந்தித்து இறைவனை காணப்போகிறேன் என மனது சிறிது சஞ்சலபட்டாலும், "இறைவன் என்னை அவன் ஆணைப்படி நடத்துவான்" என்ற நம்பிக்கையும் உள்ளது. 🙏.//

    இறைவன் நல்லபடியாக வழிநடத்துவார். நல்லவையாக நடத்திட இறைவன் அருள்வார்.
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் வருடம் அனைவருக்கும் நல்லதாக அமையட்டும் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். மகன் குடும்பம் இம்மாத இறுதியில் ஊருக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்கள். இனி அடுத்த வருடம் இறுதி வரை அவர்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன செய்வது? அவர்கள் சூழ்நிலைகள் அப்படி... ..!
      நம்மையும் இப்படி நல்லபடியாக ஒரு முடிவெடுக்க வைப்பவன் "அவன்" தானே..!

      /இறைவன் நல்லபடியாக வழிநடத்துவார். நல்லவையாக நடத்திட இறைவன் அருள்வார்.
      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் வருடம் அனைவருக்கும் நல்லதாக அமையட்டும் வாழ்க வளமுடன்./

      ஆம். உண்மை அனைத்தையுமே நல்லபடியாக இறைவன் நடத்தித் தர வேண்டுமாய் நானும் பிரார்த்தனைகள் செய்தபடி உள்ளேன். அவனன்றி எதுவும் அசையாது அல்லவா?

      தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்கும், மன தைரியம் வரும்படியான எழுத்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. // அந்த எண்ணங்களின் அடிமைத்தனதிற்கு உடன்பட்டு //

    இந்த வரிகளின் அர்த்தம் நான் நினைபபதுதானா என்று தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பொதுவாக இந்த அடிமைத்தனம் என்ற வார்த்தைக்கு பதிலாக அபிப்ராயபேதங்கள், கருத்து வேறுபாடுகள் என்ற வார்த்தைகள் பொருத்தமாக அமைந்திருக்கும். இது எல்லா குடும்பத்திலும், கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என அவர்களிடையே சகஜமாக உருவாவதுதானே...! உலகில் உள்ள மக்களிடையே இதில் எங்கும் என்றும் வேறுபாடே கிடையாது.

      தாங்கள் நினைப்பது என்னவென்று தெரியவில்லை. ஒவ்வொருவரின் நினைப்புகளும், சிந்தனைகளும், எண்ணங்களும் சற்று வேறானதுதானே..! நான் இயல்பாக மனித மனங்களில் தோன்றும் இந்த வார்த்தைகளை உபயோகிக்கிறேன். வேறு ஒன்றுமில்லை.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. .

      Delete
  6. பரவாயில்லை.  மகன், அதைவிட மருமகள் உங்கள் வருகையை எதிர்நோக்கி பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  மெதுவாக ஆனால் கவனமாக எல்லா இடங்களுக்கும் சென்று வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். உண்மைதான்.. எங்கள் மருமகளின் திட்டப்படிதான் இந்த பயணம் நடைப்பெறப் போகிறது. அவர்தான் அவர்கள் சென்ற கோவில் களிலிருந்து கைப்பேசியில் உரையாடும் போது, எங்களுடன் நீங்கள் வரவில்லையே என எனக்கு வருத்தமாக உள்ளது. மீண்டும் நாங்கள் திருச்சிக்கு வந்து சில நாட்கள் ஒய்வெடுத்தப் பின் கிளம்பிச் செல்லும், கும்பகோணம் கோவில் களுக்கு நீங்களும் எங்களுடன் வாருங்கள் என மிகவும் வறுப்புறுத்தி அழைத்தார். அவரின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகளும், தன்னம்பிக்கை தந்த உரையாடல்களும் , கால் வலியுடன் இருந்த என்னையும் இறை தரிசனங்களுக்கு செல்ல அழைத்துச் செல்கிறது. இறைவன் அந்த கால் வலியை பெரிதாக்கி தராமல், முற்றிலும் குணமாக்கிட வேண்டுமெனவும் நானும் தினமும் பிரார்த்தனை செய்தபடி உள்ளேன்.

      இப்போது தங்களது ஆறுதலான அறிவுரைகள் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வாருங்கள்...

    நலமே நல்கும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இறைவன் அருளால், தமிழ்நாட்டு கோவில்களை கண்டு இறை தரிசனம் பெற வருகிறேன். தங்களின் நலமே நல்கும் என்ற வார்த்தைகள் எனக்கு மனதைரியத்தை தருகின்றன. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இத்தனை சங்கடங்களுக்கு இடையிலும் இன்முகம் காட்டுவதே நமக்குக் கிடைத்திருக்கும் சந்தோஷம்..

    வரம் சாபம் என்றெல்லாம் தனித்தனியாக இல்லை..

    அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று கண்ணன் இருக்கும் போது இஷ்டமாவது ஏது!.. கஷ்டமாவது ஏது!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இப்போது தங்களுக்கு காய்ச்சல் முற்றிலும்குணமாகி உள்ளதா? உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

      /இத்தனை சங்கடங்களுக்கு இடையிலும் இன்முகம் காட்டுவதே நமக்குக் கிடைத்திருக்கும் சந்தோஷம்/

      ஆம்.. இறைவன் இன்முகந்தான் காட்டுகிறான். இறைவனின் விருப்பம் எதுவோ அதுதானே நடக்கும். நடப்பவை நல்லதாக நடக்க என்றும் நாம் செய்யும் பிரார்த்தனைகளை அவனறிவான்.

      அழைத்தவர் குரலுக்கு ஒடி வரும் கண்ணன் அனைவருக்கும் நன்மைகளையே தரட்டும்.

      தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. எழுதுங்கள்..
    எழுதுங்கள்..

    தமிழ் வாழ வைக்கும்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள் என்றும் என்னை எழுத வைக்கும். என்னை கண்டிப்பாக எழுதவும் வைப்பான் அந்த இறைவன். தமிழ் வாழ்க. நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. ஒரு மடங்கும் வீல் சேர் வாங்கிக் கொண்டால் பெரிய கோயில்களில் மகனோ மருமகளோ தள்ளி செல்லலாம். கால் வலியும் மிச்சம்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. இப்போது கணுக்கால், குதிகால் வீக்கம் குறைந்துள்ளது. வலியும் சற்று குணமாகி உள்ளது. கார், பஸ்ஸில் செல்லும் போது காலை தொங்கப் போட்டபடி சென்றால் வலி உண்டாகுமென நினைக்கிறேன்.ஆனால், காலை நீட்டியபடி, படுத்தபடி செல்லும் பஸ்தான் போக வர. கோவில்களிலும், மெள்ள நடந்து இறை தரிசனம் பெற்று விடலாமென்ற நம்புகிறேன். பார்க்கலாம்..

      தங்கள் அன்பான அக்கறையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. வணக்கம் சகோ
    தாங்கள் கால் வேதனையிலிருந்து விரைவில் பூரண நலமடைய எமது பிரார்த்தனைகள்.

    தொடர்ந்து தங்களால் இயன்றவரை எழுதுங்கள்.
    வாழ்க வளத்துடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இப்போது கணுக்கால் வலி, வீக்கம் சற்று குறைந்துள்ளது. ஊருக்கெல்லாம் சென்று இறை தரிசனம் கண்டு விட்டு வந்த பின் இனி தொடர்ந்து பதிவுகள் எழுதுகிறேன்.

      தங்களது ஊக்கம் மிகுந்த ஆலோசனைகளுக்கும் தங்களின் அன்பான பிரார்த்தனைகளுக்கும் என் பணிவான நன்றிகள் சகோ .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete