"இடுக்கண் வருங்கால் நகுக.."என்பது ஐயன் வாக்கு. துன்பங்கள் வரும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ( இந்த இடுக்கண்ணினால், உடலை விட உள்ளம் எவ்வளவு ரணமானாலும், அதை சுலபமாக கடத்திக் கொண்டு கடந்து வருவதைத்தான் "சாதாரணம்" என்ற சொல் உணர்த்துகிறது.) ஒரளவு சிரித்த முகத்தோடு (மனபான்மையோடு) இருந்து விட்டால், மனதின் பாரங்கள் நம்மை அதிகமாக அழுத்தாமல் அது பாட்டுக்கு தானாகவே வந்த வழியோடு அகன்று விடும் என்பதே அதன் பொருள்.
இந்த துன்பங்கள் என்பது பொதுவாகவே சராசரியாக மனிதர்களின் வாழ்வில் வருவது இயற்கைதான். ஒரு மனிதர் இன்பங்களை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்தால், அவர்களுக்கு அவர்களின் வாழ்வு போரடித்து விடுமென்றுதான், இறைவன் துன்பங்களையும் நடுநடுவே சற்று எட்டிப் பார்க்க வைக்கிறார். இரண்டாவதாக அப்போதுதான் "அவன்" நினைவும் ஒரு மனிதருக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்ற உறுதியான எண்ணத்தினால்தான். இல்லையெனில், "அவனை"ப்பற்றிய நல்ல சிந்தனைகள் "அவன்" படைத்து உருவாக்கிய மனிதரின் மனதில் உதிக்காமலே போய்விடும் என்னும்படியான அப்பழுக்கில்லாத சுயநலத்தினால், தான் படைத்த மனிதரை பற்றிய பச்சாதாபத்தினால், ஒரு மனிதருக்குள் நற்சிந்தனைகளை கற்றுத்தர/ மற்றும் தோற்றுவிக்க... (அதில் "அவனே" சிலசமயம் சோர்ந்து தோற்று விடலாம்.:)))).) இப்படியான பல காரணங்களையும் கூறலாம்
ஒரு நல்வழிக்காக நெருங்கிய உறவில் நம் பேச்சை ஒருவர் கேட்கவில்லையெனில், "சாம, தான, பேத தண்டத்தையும் உபயோகித்து விட்டேன்.இன்னமும் அவர் நல்லதிற்காக நான் பேசுவதை காது கொடுத்து கேட்கவில்லை." என அவரைப்பற்றி முடிவில் அங்கலாய்ப்போம்.
சாம, தான, பேத, தண்டம் என்றால், எனக்கு தெரிந்தவரை ஒரு விளக்கம் சொல்வேன்.
சாம வேதம் இனிமையானது. இறைவனை இனிமையான பல கானங்கள் கொண்டு கூறிப் புகழ்ந்து மயக்குவித்து பாடி நம் வேண்டுதலுக்காக, உள்ளத்தின் மகிழ்வுக்காக ஆராதனை செய்வது. அதைப்போல் நம் சொல் பேச்சை கேட்பதற்காக, எதிராளியை புகழ்ந்து பேசி அவரை நயமாக நம் பேச்சினால் மயக்கி நம் பேச்சை கேட்க வைப்பது.
தானம் என்றால் நம்மால் இயன்றதைச் வாங்கித் தந்து அந்தப் பிறரை மகிழ்விப்பது. அதன் மூலமாவது அவர் நம் பேச்சுக்கு கட்டுப்படுகிறாரா என சோதிப்பது.
பேதம் என்றால், நமக்கும் எதிராளிக்கும் இடையே பல அபிப்பிராய பேதங்களை வரவழைத்து அதன் மூலம் நமக்கு அவரை சாதகமாக திசை திருப்ப வைத்து பின் பக்குவமாக பேசி சமரச சமாதானங்களின் மூலம் அவரை நல்வழிப்படுத்துவது.
தண்டம் என்றால் இத்தனைக்கும் நமக்கு வசப்படாதவரை ஒரு அடியாவது (நம் கைகளினாலோ, இல்லை ஒரு கோலினாலோ அடித்து விடுவது, இல்லை அடிப்பது போல் பாவனை செய்வது.) வைத்து விடலாம் என அடிக்கும் நிலைக்குப் போவது. அதிலாவது அவர் திருந்தி நாம் சொல்லும் பல நல்ல வழிகளுக்கு உடன்படுகிறாரா என்று முயற்சிப்பது. அதாவது நம் கோப எண்ணங்கள் இந்த நாலாவது கட்டத்தில் நம்மையும் கேட்காமல், இறுதியில் தன் முடிவுக்கு தலை வணங்கி, நம்முள் உதிப்பது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எவ்வளவு செல்வம் இருந்தாலும், அங்கு ஊழ்வினைகளின்பால் எழும் நோய்கள் ஏதுமின்றி உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதும், அதை சார்ந்துள்ள எண்ணங்களும் நன்றாக இருக்கும்.
ஒரு தலைவலி அல்லது காய்ச்சல் வந்தாலே அதன் மூலம் படும்பாடு அது வந்தவர்களுக்குத்தான் தெரியும். அதனால்தான் "தலைவலியும், திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்ற அனுபவ பழமொழி உருவானது என்பதையும் யாவரும் அறிவோம்.
ஒரு காய்ச்சலே அதன் பல விதங்களில மனிதரை அவதிக்குள்ளாக்கும் போது, அம்மை நோய் எத்தனைப்பாடாக படுத்தும் என்பதும் யாவரும் அறிந்ததே...!
அந்த காலத்தில் ஒரு வீட்டில் ஒருவருக்கு அம்மை நோய் கண்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அம்மனை மனதார வழிபடுவது. "அவள்" பத்திரமாக கருணையுடன் நோயுற்றவரை விட்டு இறங்கி செல்ல வேண்டுமென பிரார்த்திப்பது. அம்மனின் அடையாளமாக வேப்பிலையை (வீட்டு வாசல் நிலைப்படியில் கொத்தாக வைப்பது முதல்) பக்தியுடன் உபயோகிப்பது, அந்த நேரத்தில், வீட்டிலுள்ள மற்றவர்கள் வேறு எந்த வீட்டுக்கும் செல்லாமல் இருப்பது,. அக்கம் பக்கம் உறவாக இருப்பினும், அவர்கள் வீட்டிலிருக்கும் உணவுகளை அம்மை போட்டவருக்கு கொண்டு வந்து தராமல் இருப்பது, வீட்டில் அம்மை போட்டவர்களுக்கு தலைக்கு தண்ணீர் விடும் வரை நமக்கு நெருங்கிய உறவினர்களுக்கு கூட கடிதம் மூலமாக செய்தியை தெரிவிக்காமல் இருப்பது, தம் வீட்டில் செய்யும் உணவுகளையே கவனத்துடன் எண்ணெய் அதிகம் விடாமல், கடுகு மிளகாய் தாளிக்காமல், காரம், புளிப்பு, உப்பை குறைத்து, பழங்களுடன், காய்கறிகளையும், மற்ற உணவுகளையும், சூடான நிலையில் இல்லாமல், நன்கு ஆறிய பின் அவருக்கு சாப்பிட தருவது, வாசனைகள் நிறைந்த பூக்கள், சோப்பு, முகப்பூச்சுகளை எண்ணெய் போன்றவற்றை வீட்டிலுள்ள மற்றவர்களும் உபயோகிக்காமல், இப்படியெல்லாம் ஒரு விரதம் மாதிரி, கவனத்துடன் இருப்பதென, எத்தனை எத்தனை கண்டிப்புக்கள்... .! இன்னும் "அவள்" மேல் வீட்டிலுள்ளவர்கள் கொள்ளும் ஆயிரம் நம்பிக்கைகளுக்காக அவரை (அம்மை நோய் கண்டவரை) அந்த அன்னை கண்டிப்பாக பத்திரமாக நலமடைய செய்து விடுவாள்.
இப்போது எல்லாவற்றிறகும், மருந்து மாத்திரை என வந்து விட்டது போல், இதற்கும் வைத்தியங்கள் என்ற விஞ்ஞான வளர்ச்சி வந்து விட்டது. அவரவர் மன இயல்புபடி காலங்களின் மாறுதல்களுக்கு மக்கள் அடியணிய ஆரம்பித்து விட்டனர். அக்கால சில திரைப்படங்களில் கூட இந் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி நம்முள் ஒரு தெய்வீக பயபக்தியை ஏற்படுத்தியிருந்தும், விஞ்ஞானம் இயல்பாகவே வென்று விட்டதோ என்ற ஐயம் சிலசமயம் நிறையவே வருவதை தடுக்கவியலவில்லை.
என்னடா இவள்..! சம்பந்தமில்லாமல் ஏதேதோ எழுதுகிறாளே என எண்ணம் வருகிறதா? வேறு ஒன்றுமில்லை...! இந்த கொரோனா வந்து முடிந்த பிறகு, குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்வதில் ஒரு பிணக்கு வந்து விட்டது. ஆனால் அதன் பின் வந்த ஒரு வருடத்தில் குழந்தைகள் பழைய பழக்கத்திற்கு வந்து விட்டனர். சிலர் மனதில் ஏதோ சுணக்கமுடன் பெற்றோருடன் ஒத்துழைக்க தயங்குகின்றனர். அது நம் வீட்டு குழந்தையாய் இருக்கும் போது நம் மனதுக்கும் தீர்க்க முடியாத ஒரு வேதனைதான். தினம் தினம் ஒரு வகையான போராட்டந்தான்..! என்ன செய்வது? "அவன்" தரும் பயன்களை அனுபவிக்கத்தானே இந்தப் பிறவி...! அதில் சிறிதேனும் நன்மை பயக்கும் வண்ணம் மாறுதல்கள் தந்து விட தினமும் "அவனிடமே" நிறைய பிராத்தனைகள்.. என மூன்று மாதங்களாக நாட்தோறும் க(ந)டந்து வந்த/ வரும் எங்கள் வாழ்வில், அது போதாதென்று, இங்கு வந்திருந்த பெரிய மகனுக்கும், அவருக்கு சற்றே குணமாகும் தருணத்தில், அடுத்து மகளுக்கும், அன்றே அவள் மகளுக்குமென அனைவரும் அம்மை நோய்க்கு (chickenpox), ஆளாகி, அவர்கள் பத்து, பதினைந்து நாட்களாகும் மேலாக படும் அவஸ்தைகளையும் பாரென்று இறைவன் கட்டளையிட வாழ்வே மாயமென்ற சிந்தனைகள் வலுப்பெற்று தத்தளித்த காலங்கள் இப்போதும் மறக்க முடியாத காலங்கள் ஆகி விட்டன.
இதில் உலகமாதா அன்னை வீட்டில் இருப்பதை கண்டு, வருடந்தோறும் கலகலப்பாக வீடுகள்தோறும் வந்து நம்முடைய உபசரிப்புகளை ஏற்கும் கடவுளார்களாகிய, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ விநாயகர் என இந்த தடவை எவரும் எங்கள் வீட்டிற்கு வரவில்லை.
இதை நான் உடனே எழுதும் (இதையும் அப்போதே எழுத ஆரம்பித்து இப்போதுதான் முடிக்கிறேன்:)) ) போதிருந்த மன இறுக்கத்திலிருந்து மீண்டு இப்போது இங்கு (பதிவுலகிற்கு) வந்தபின் சற்றே குறைந்துள்ளதெனினும், இன்னமும் இயல்பாக இருக்க, இயல்பாக எப்போதும் போல் நீ.. ண்.. ட கருத்துரைகளுடன் அனைவரின் பதிவுகளுக்கும் உடனே வர இயலவில்லை. (அப்படியும் நீண்ட கருத்துக்களுடன் வரத்தானே செய்கிறீர்கள் என நீங்கள் அனைவரும் மனம் அலுத்தபடி நினைக்கலாம். :))) மன்னித்துக் கொள்ளுங்கள். அது என் மாற்ற முடியாத ஒரு பழக்க தோஷமாகி விட்டது.) இதில் எழுதி வைத்து இன்னமும் முடிக்காமல் இருக்கும் பல பதிவுகளும், எழுத நினைத்திருந்த பல பதிவுகளாகிய எழுத்துக்களும், என்னுடனேயே தங்கி விட்டன./ தங்கி கொண்டிருக்கின்றன. ஆனால், குறிப்பாகச் சொன்னால் படிக்கும் அந்த "இடுக்கண்"களிலிருந்து நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலமாக தப்பி விட்டீர்கள்தானே:))) அதனால்தான் இந்தப் பதிவுக்கு இந்த தலைப்பு..:))))
இருப்பினும், இந்த மாதிரி எப்பவாவது நானும் வருவேன் எனவும் . (அனைவரின் சிரிப்பிற்கும் இடையூறாக) சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால், பதிவுலக நட்புகளிடம் இப்படி மனம் விட்டு பேசினால், அதற்கிணையானது வேறு ஒன்றுமில்லை அல்லவா? வலையுலகில் இப்படிபட்ட சிறப்பான நட்புகளை தந்ததற்கே நான் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.🙏.
நடுவில் எல்லோருக்கும் வீட்டு விஷேடங்கள் (கிருஷ்ண ஜெயந்தி, to சரஸ்வதி பூஜை) என வந்து கொண்டிருந்ததால், இதையும் படிக்கும் சூழ்நிலை உண்டாக்கி யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாமென்று நினைத்தேன்.(அதற்குள் தீபாவளி விரைவில் வர யத்தனமாகி கொண்டிருக்கிறது.) அதனால் நீண்ட மாதங்கள் கழித்து வெளியிட்டிருக்கும் இந்த என் பதிவை (சொ.க, சோ. க) பொறுமையுடன் படிக்கும் உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.
வணக்கம் சகோ
ReplyDeleteபதிவு நல்லதொரு விளக்கம்.
நேரம் கிடைக்கும் போது இப்படி ஏதாவது எழுதுங்கள் இதுவும்கூட மனதை சாந்தப்படுத்தும்.
தங்களது சிந்தனையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆமாம்.. நேரம் கிடைக்கும் போது ஏற்கனவே அரைகுறையாக எழுதி வைத்திருப்பதை முடித்து எழுத வேண்டுமென்றுதான் நினைக்கறேன். தங்கள் வாக்கும் பலிக்கட்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னது... துன்பங்களையும் சற்று எட்டிப்பார்க்க வைக்கிறானா? ஒரே துன்பமாக இருந்தால் மனிதர்களுக்கு வாழ்க்கையில் வெறுப்பு வந்துவிடும் என்று அவ்வப்போது பாலைவனச் சோலைபோல இன்பத்தையும் கண்ணில் காட்டுகிறான் என்றல்லவா நான் நினைத்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
துன்பங்களை எட்டிப் பார்க்க வைக்கிறான் என்றால், ஏதோ ஒரு விதமாக நகர்ந்து கொண்டிருக்கும் தினசரிவாழ்வில், தலைகீழாக புரட்டுவது மாதிரியான துன்பங்களை தீடிரென நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இதுதான் வாழ்வின் நியதி என்றாலும், அப்போது அதை தாங்கும் மன/ உடல் வலுவையும் "அவன்" தந்து விட்டால் கொஞ்சமாவது நன்றாக இருக்கும். ஆனால், ஒவ்வொருரின் ஊழ்வினை என்ற ஒன்றை "அவனால்" எப்படி மாற்ற இயலும்?
நீங்கள் சொல்வது தான் உண்மை. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் வரும் இன்ப துன்பத்தை சமமாக பார்க்க பழகி விட்டால், நம்மை விட இந்த உலகில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் யாருமில்லை என்பதுவும் என் கருத்து. அந்த மனப் பக்குவத்தை முழுதாக எனக்கு தந்து விடு என்பதுவும் என் தினசரி பிரார்த்தனை. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அம்மை போட்டதைப் பற்றி இன்று எழுதுகிறேன். இது தவிர்க்க முடியாத பிரச்சனை.
ReplyDelete?? நெல்லை.. புரியவில்லை. எங்கு, என்ன எழுதுகிறீர்கள்?
Deleteஇங்கு கருத்தில் எழுதுகிறேன். அப்போ கொஞ்சம் பிஸி.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்களுக்கு அம்மை போட்டதைப்பற்றி விபரமாக எழுதியதை படித்துப் பார்த்து வருத்தம் கொண்டேன். விதிக்கு முன்னால், நாம் அனைவருமே செயலிழந்தவர்கள்தானே.! உங்கள் அப்போதைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சாதாரணம் விளக்கம் நெகிழ வைத்தது. துன்பங்களுக்கு பழகி விட்டோம். வரும் சிறு இன்பங்கள் மனதில் நிற்பதில்லை.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்கள் கருத்து உண்மை. அப்படி மனதில் நிற்கும் இன்பங்களும், சில துன்பங்களின் சலனங்களால் சிதைக்கப்டுகின்றன. மீண்டும் மனதை சரி செய்து கொண்டு நாம் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது, துன்ப கரங்களில் சிறைபடுகிறோம். வாழ்வே ஒரு மாயைதானே..! தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேறெங்கோ கவனமாக இருந்தால் அருகிலேயே நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் துணை ஒரு கிள்ளு கிள்ளி என்னை கவனிக்காமல் எங்கே கவனம் என்று கேட்பது போல் கடவுள் சிறு துன்ப கொடுத்து கவனம் ஈர்க்கிறார் போல!
ReplyDelete//ஒரு கிள்ளு கிள்ளி என்னை// ரொம்ப லக்கிதான் நீங்கள் எல்லோரும். நானோ, கடவுள், இவ்வளவு கஷ்டப்படுகிறானே...சரி கொஞ்சம் இனிப்பு கொடுப்போம் என்று எப்போவாவது சந்தோஷத்தைத் தருகிறார் என்று தோன்றும்..ஹா ஹா ஹா
Deleteவணக்கம் சகோதரரே
Delete/ஒரு கிள்ளு கிள்ளி என்னை/
ஹா ஹா ஹா. அப்படி கிள்ள வைத்து வேடிக்கைப் பார்ப்பதும் இறைவன் செயலன்றி வேறு ஒன்றுமில்லை.
அப்படியே... இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவரின் சிறு பிராயத்தில், அவரவரின் வினைப்பயன்கள்படி அளவு கடந்த இனிப்பை தந்தாலும், அப்போதைய வயதில் இனிப்பை இனிப்பாக கருதும் எண்ணம் பொதுவாக உண்டு.. ஆனால், நாளாவட்டத்தில் எவ்வளவு இனிப்பை தந்தாலும், போதாது என்ற எண்ணமே தான் படைத்த இந்த மனிதருக்குள் வந்து விடுகிறதே..! போதாகுறைக்கு "இனிப்பை" உடலோடு சுமக்கும் கால கட்டாயத்திற்கு வேறு இவர் ஆளாகி விடுகிறார் . இந்த லட்சணத்தில் எப்படி அவ்வப்போதாவது (கிள்ளும் போதும், துள்ளும் போதும்) இவருக்கு எப்படி இனிப்பை தருவது.? என இறைவன் யோசித்து குழம்பியும் போவார். . ஹா ஹா ஹா . உங்கள் இருவரின் கருத்துகளுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த சாம பேத தான தாண்ட வழிகளை நேற்று ஒரு பெண்மணி புட் போர்ட் மாணவர்களிடம் பிரயோகித்ததை பார்த்தோம்!
ReplyDeleteஇப்போதெல்லாம் (கடந்த 20-30 வருடங்களாக), எவன் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன, நாய் நம்மைக் கடிக்காமல் போனால் போதும் என்று இருக்க வேண்டிய காலம். டீச்சர்களுக்கும் தங்கள் அறத்தை மறந்துவிட்டு, இந்த மாதிரி இருக்கவேண்டும். ஊருக்கு நல்லது நினைத்தால் பெரிய ஆபத்து அது. பையன் குடித்தாலும், போதையில் இருந்தாலும் கண்டுகொள்ளக்கூடாது, அவன் பெற்றோருக்கு இல்லாத அக்கறையா? அவனுகளுக்கே அக்கறை இல்லை என்றால் நமக்கெதுக்கு?
Delete// அவனுகளுக்கே அக்கறை இல்லை என்றால் நமக்கெதுக்கு?..//
Deleteமுத்தான கருத்துகள்..
இதைப் பற்றி கதை ஒன்று உண்டு கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில்!..
வணக்கம் சகோதரரே
Deleteஅப்படியா? வேறு வழியில்லாமல் இப்படியெல்லாம் நாமும் பிரயோகிக்க வேண்டியுள்ளது. நீங்கள் என் பதிவைப் படித்துப் பார்த்து என்ன மாதிரி புரிந்து கொண்டீர்கள் என்றுத் தெரியவில்லை. ஆனால், நான் சொன்னது எங்கள் மகளின் மகள் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறாள் . ஓவியம், பாட்டு என நல்ல திறமைசாலி, நாம் என்ன சொன்னாலும் சொன்னதும் டக்கென்று பிடித்துக் கொள்ளுபவள்.பள்ளிக்குச் செல்ல மட்டும் தயங்குகிறாள் ./பயப்படுகிறாள். அப்படியே மூன்று நாட்கள் சென்றாலும், கொண்டு சென்ற உணவை எதுவும் சாப்பிடலாமல் கொண்டு வந்து விடுகிறாள். அதனால் எடை குறைவு, அசதி, ஜுரம் என படுத்தல். இப்படி ஏதாவது உடம்பை படுத்திக் கொண்டே வேறு உள்ளது. அதைத்தான் குறிப்பிட்டேன். இந்த பிரச்சனைக்கு என்ன வழி எனத் தெரியவில்லை. இறைவன் அவளுக்குலநல்ல உடல் பலத்தையும், பள்ளிச் சென்று படிக்க வேண்டிய எண்ணத்தையும் அவளுக்கு தர வேண்டுமென்று தினமும் கவலையோடு பிரார்த்திக்கிறோம்.
மனபயங்கள் நீங்கி பேத்தி சீக்கிரம் பள்ளி செல்ல, இயல்பாக ஆகாரம் எடுக்க பிரார்த்திப்போம் அக்கா. எல்லாம் சரியாகி விடும். இது தாற்காலிகமானதுதான்.
Deleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே. தாங்கள் தாற்காலிகமாக எனச் சொல்வது போல் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளியில் அவளை எவ்வாறாவது அழைத்து வாருங்கள் என கூறுகின்றனர். அவர்கள் அறிவுரைகளின்படி கவுன்சிலிங் வேறு சேர்ந்து, அதுவே எனக்கு மிகவும் மன கஸ்டத்தை தருகிறது. அது வேறு கதை. என்னென்னவோ மன உளைச்சல்கள். இன்றிலிருந்தாவது குழந்தை நல்லபடியாக வெளி வந்து எல்லோரையும் போல் பள்ளி சென்று, சிறப்பாக ஆக வேண்டுமென இறைவனிடம் தினமும் பிரார்த்தனை செய்தபடி உள்ளேன். உங்கள் வார்த்தைகள் எனக்கு நல்லதொரு சொல்லாக இன்று அமைந்தது. மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடுக்கடுக்காய் சோதனைகள். அம்மை போட்டிருந்தா? எங்களுக்கு 2000 ம் வருடம் அம்மை போட்டது. வீட்டில் மாமியார் தவிர அனைவருக்கும் போட்டு அவஸ்தையை இருந்தது. அது நினைவுக்கு வருகிறது. ரொம்ப அவஸ்தைப் பட்டிருப்பீர்கள். தற்போது அனைவரும் மீண்டு விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம்.. இந்த அம்மை போட்டதில் எங்கள் குழந்தைகள் மிகவும் அவஸ்தைபட்டு விட்டார்கள். ஆனால், எனக்கு மட்டும் போடவில்லை. எனக்கு சிறுவயதில் இரண்டு முறை (ஒரு தடவை ஆங்காங்கே ஒன்றிரண்டுடன் லேசாகவும், அதற்கடுத்த மற்ற முறை உடலெல்லாம் மிக அதிகமாகவும்) போட்டு விட்டதால், எனக்கு இந்த தடவை வரவில்லை. அவர்களை நாள் முழுவதும் கவனித்து, கவலைப்பட்டு, பிரார்த்தித்து, வேளா வேளைக்கு சமையல். சாப்பாடு என பிசியாக இருந்தமையால், நான் அப்போது பதிவுலகிற்கு கூட வர இயலவில்லை.
நீங்கள் அந்நோயால் பட்ட அவஸ்தைகளை நினைவு படுத்தியமைக்கு வருத்தம் கொள்கிறேன். அனைவரும் நலமாக இருக்க வேண்டும் இதைத் தவிர இறையிடம் வேண்டுவது ஏது? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"சாம, தான, பேத தண்டத்தையும் உபயோகித்து விட்டேன்.இன்னமும் அவர் நல்லதிற்காக நான் பேசுவதை காது கொடுத்து கேட்கவில்லை." என அவரைப்பற்றி முடிவில் அங்கலாய்ப்போம். //
ReplyDeleteஆமாம். சாம, தான, பேத தண்டத்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை.
//அந்த காலத்தில் ஒரு வீட்டில் ஒருவருக்கு அம்மை நோய் கண்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அம்மனை மனதார வழிபடுவது. "அவள்" பத்திரமாக கருணையுடன் நோயுற்றவரை விட்டு இறங்கி செல்ல வேண்டுமென பிரார்த்திப்பது.//
அம்மை ஒருத்தருக்கு வந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு வந்து விடும். அது பரவும் என்பதால்தான் பெரியவர்கள் அம்மை போட்ட வீட்டில் கொடுத்து வாங்க கூடாது. மற்றும் நிறை பழக்க வழக்கங்களை கடைபிடிக்க சொன்னார்கள்.
குப்பைகளை வெளியே கொட்டமாட்டார்கள். சேர்த்து வைத்து இருந்து கடைசி நாளில் மண்ணை தோண்டி குழியில் வைத்து மூடி விடுவார்கள் மற்றவர்களுக்கு பரவ கூடாது என்ற எண்ணம்.
மனித நேயம் மிகுந்த எதிர்வீட்டினர் எங்களுக்கு உதவியதை மறக்கவே முடியாது. நகரத்தார் வகுப்பை சேர்ந்தவர்கள். வெகு காலம் எங்கள் குடும்ப நண்பராக இருந்தவர்கள்.
நான் நிறைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். எங்கள் வீட்டோடு எல்லோருக்கும் அம்மை போட்டு எதிரில் உள்ள நள் உள்ளம் கொண்ட நட்பு வீட்டிலிருந்துதான் தினம் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று
. சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கும் அக்காவுக்கு கடைசியில் வந்து விட்டது அம்மை. அப்போது சிவகாசியில் இருந்தோம் . அந்த அக்கா பேர் முத்தம்மா . முத்துக்களை அள்ளி வழங்கிய அன்னை அவர்களை குணப்படுத்த வேண்டும் என்று அம்மா ஆமணக்கு முத்துக்கள் வாங்கி மாரியம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தினார்கள்.
எனக்கு, என் தங்கைகள் இருவருக்கும் அம்மை போட்டது, எனக்கும் பெரிய தங்கைக்கும் பெரியமம்மன், 10 மாத குழந்தை பாகபிரியாளுக்கு சின்னம்மை. அவளை அம்மா குளிர வைத்து விட்டார். (தூத்துகுடியில் இருந்த போது.)
என் அம்மா நிறைய துன்பபட்டு இருக்கிறார்கள். அப்படியும் இறைவன் பாதங்களை பிடித்து கொள்வதை விடவில்லை.
அது போலதான் நானும் என்ன துன்பம் வந்தாலும் இறைவன் தான் துணை என்று நினைக்கிறேன்.
//குறிப்பாகச் சொன்னால் படிக்கும் அந்த "இடுக்கண்"களிலிருந்து நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலமாக தப்பி விட்டீர்கள்தானே:)))
தலைப்புக்கு காரணம் சொன்னாலும் நாங்கள் அப்படி நினைக்கவில்லை.
நீங்கள் முடிந்த போது ஏதாவது எழுதுவீர்கள், பதிவு பக்கமே வரமுடியாத சூழ்நிலை என்பதால்தான் வரவில்லை.
ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வோம்.
உடல் நலமும், மன பலமும் எல்லோருக்கும் வேண்டும் அதைவேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
வணக்கம் சகோதரி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. ஆம்.. தங்கள் கூறுவதும் உண்மை. குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல் பிறகு அம்மை போட்டவருக்கு தலைக்கு தண்ணீர் விட்ட பின்தான் சேகரித்த குப்பைகளை வெளிக் யில் கொட்டுவார்கள். அம்மை போட்ட வீட்டில் அந்த காலத்தில் மிக கவனமாகத்தான் செயல்படுவார்கள். அதற்கு வைத்தியம் ஏதும் கிடையாது. அம்மன் புகழ் பாடி, அவளை வேண்டியபடி நாட்களை நகர்த்தி, தானாக குணப்படுத்த வழி வகுப்பார்கள். இப்போது மருத்துவரிடம் சென்று அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த வழி முறைகள் வந்து விட்டது. ஆனாலும் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. இத்தனைக்கும் நான் இஙர்கள் அருகிலேயே இருந்து தொட்டு பணிவிடைகள் செய்தேன். எனக்கு வரவில்லை. ஏனெனில் எனக்கு சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் காலத்ததிலேயே இரு தடவைகள் (ஒரு தடவை லேசாக, மற்றொரு முறை அதிகமாக) வந்து விட்டமையால் இப்போது மறுபடியும் தொற்ற வாய்ப்பில்லை. இனி வராது என கூறினார்கள்.( எங்கள் பெரிய மகனுக்கு சிறு வயதிலேயே, விளைட்டாம்மை எனக்கூறும், மணல்வாரி, சிச்சிலுப்பை என பட்டிருக்கிறது. எனக்கும் சிறு வயதில் இதுவெல்லாம் வந்துள்ளது. ஆனால், இந்த நீர்கொப்பளிப்பான் வரும் போதுதான் பயமாக உள்ளது.) என்னவோ!!! இவர்களை தெம்போடிருந்து கவனிக்க ஒரு ஆள் வேண்டுமே என அந்த தெய்வமும் நினைத்திருக்கிறார். எப்படியோ அந்த இருபது நாட்களுக்கும் மேலாக ஒரே கவலையுடனும், அதே சமயம் ஒரு தெய்வ நம்பிக்கையுடனும் கழிந்தது. இப்போது அனைவரும் நலமுடன் உள்ளார்கள். ஆனால் உடல் பலகீனம் இருக்கிறது. என்ன செய்வது? நாளாவட்டத்தில் அதையும் அன்னை சரி செய்வாள்.
தங்கள் சிறு வயது பிரச்சனைகளை கூறியது மனதை கலக்கமூட்டியது. தங்கள் அம்மா அப்போது எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்கள் என நினைக்கும் போது எனக்கும் மிக மிக வருத்தமாக இருந்தது. எல்லாம் விதிப்பயன் என தேற்றிக் கொண்டாலும், நினைவுகளை சுமந்து வாழ்வது கடினம்தான். நாம் ஒவ்வொருவரும் இப்படித்தானே இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமயத்தில் என்ன பிறவி இது என்ற வெறுப்பும், விரக்தியும் வந்து ஆட்கொள்கிறது. ஆனால், நாம் நட்புகளுடன் இப்படி பகிர்ந்து கொள்ளும் போது சிறிது மனச்சலனம் குறைகிறது.
நான் விளையாட்டுக்காகத்தான் நகைச்சுவைக்காக இந்தமாதிரி தலைப்பெல்லாம் வைத்து எழுதுகிறேன். மற்றபடி நம் நட்பின் பதிவுகளை நாம் என்றுமே ரசித்துதான் படிப்போம். தங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து இந்த நட்புறவு என்றும் நீடித்திட இறைவனிடம் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாகம்பிரியாள் தூத்துகுடியில் உள்ள அம்மன் பேர்.அவள் அங்கு பிறந்தாள் அதனால் அந்த அம்மன் பேர்.
ReplyDeleteதேவகோட்டை அருகில் ஓரியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது
Deleteவணக்கம் சகோதரி
Delete/பாகம்பிரியாள் தூத்துகுடியில் உள்ள அம்மன் பேர்.அவள் அங்கு பிறந்தாள் அதனால் அந்த அம்மன் பேர்./
அப்படியா சகோதரி...! மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நம்முடன் தோன்றியவர்கள், நம்முடன் வாழ்ந்தவர்கள் என்றும் நம் நினைவுகளுடன் வாழ்வார்கள் என்ற ஒரு ஆத்ம நம்பிக்கையில்தான் நாம் இந்த உலகத்தில் நடமாடி கொண்டுள்ளோம். நம் விதியின் பால் கொண்ட நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் அதறகு துணையாக செயல்பட்டு வருகிறது. தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கு 2010ல் அம்மை போட்டது. அப்போ கம்பெனி ப்ராஜெக்ட் போயிட்டிருந்தது. நான் டிபார்ட்மெண்ட் ஹெட். அதுவரை நான் மெடிகல் லீவ் போட்டதில்லை. இருந்தாலும் என் அறை தனி என்பதாலும் மெயில் பார்த்து அதற்கு பதில் அளிக்கலாம், முடிவு எடுக்கலாம், கான்ஃப்ரன்ஸ் கால்ல மேனேஜ் பண்ணிக்கலாம் என்று நினைத்து மூன்றாவது நாள் நான் ஆபீஸுக்கு காரில் போனேன். உடம்பில் சுத்தமா தெம்பே இல்லை. காரை எப்படியோ ஆபீஸுக்கு ஓட்டிச் சென்றுவிட்டேன். அப்போதான் தோன்றியது அம்மை உடம்பின் தெம்பையும் சுத்தமா எடுத்துவிடும் என்று. பிறகு ஒருவரை என்னை வீட்டில் டிராப் செய்யச் சொன்னேன். 10 நாட்கள் விடுமுறை எடுத்தேன். எனக்காக ஆபீஸ் நண்பர்கள் வேப்பிலைக் கொத்துகள் நிறைய எடுத்து வந்தார்கள் (நினைவிருக்கட்டும் இது பஹ்ரைனில். அதனால் அவங்க டிராவல் செய்து எனக்காகப் பறித்துக்கொண்டு வந்தார்கள்). இப்போதும் முகத்தில் ஓரிரண்டு வடுக்கள் இருக்கின்றன. அவஸ்தையான 2 வாரங்கள் அவை. அப்போ பசங்களுக்கும் லைட்டாக வந்துவிட்டது (அதனால் பிற்காலத்தில் வராது என்று ஒரு நிம்மதிதான்). எந்த நிகழ்வையும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளும் நான், என் முகம் முழுவதும் மாறியதையும் புகைப்படம் எடுத்துவைத்துக்கொண்டேன்.
ReplyDeleteSick Leave அப்போது ஒரு முறைதான் எடுத்திருக்கிறேன்.
சாம பேத தான தண்டம் - வித்தியாச விளக்கம்தான். இருந்தாலும் ஒரிஜினல் அர்த்தத்தை நீங்கள் மாற்றிவிட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் கஷ்டங்கள் பொறுப்புகள் எல்லாமே தெரிகிறது.
ReplyDeleteஅக்கா விசேஷ தினங்கள் கொண்டாட முடியலைனா கடவுள் நம்ம வீட்டுக்கு வரவில்லை என்று ஏன் சொல்ல வேண்டும். அப்படி நினைக்காதீங்க. இறைவன் எப்போதுமே நம்மோடுதான் இருக்கிறான். சக்தி ரூபத்தில். நம் மனதுள். நாம அதை விட்டு வெளியே தேடுவதால்தான் சில சென்டிமென்ட்ஸ் வந்துவிடுகிறது.
எப்போதெல்லாம் முடிகிறதோ பதிவு போடுங்க அக்கா. கொஞ்சம் மனம் இலகுவாகும்.
இன்பத்தையும் தும்பத்தையும் ஒரே போன்று பார்க்கும் மனப்பக்குவத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நம் ஆன்மீக சித்தாந்தங்கள் சொன்னாலும் நம் மனங்கள் அப்படியா? அலை போலத்தான்.
எனக்கு அம்மை போட்டியது நான் 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது.
எல்லாம் நார்மலாகி மீண்டும் நல்லது நடந்திடட்டும்!
கீதா
//உலகமாதா அன்னை வீட்டில் இருப்பதை கண்டு, வருடந்தோறும் கலகலப்பாக வீடுகள்தோறும் வந்து நம்முடைய உபசரிப்புகளை ஏற்கும் கடவுளார்களாகிய, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ விநாயகர் என இந்த தடவை எவரும் எங்கள் வீட்டிற்கு வரவில்லை. //
ReplyDeleteஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட உடல் பலத்தையும், மன பலத்தையும் அருள்வாள் உலகமாதா. வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
நேரம் கிடைக்கும் போது தமிழில் ஏதாவது எழுதிக் கொண்டிருங்கள்..
ReplyDeleteமனதை சாந்தப்படுத்தி ஆரோக்கியத்தைத் தருகின்ற வல்லமை தமிழுக்கு உண்டு..
இது எனது அனுபவம்..
எனது தளத்தில் தினமும் ஒரு பதிவு வருவது இதனால் தான்..
தமிழுக்கு அமுதென்று பேர்!..
தமிழ் உண்மையில் அமுது..
ReplyDeleteபாரதிதாசன் எதற்காக சொன்னாரோ...
சத்யமான வார்த்தைகள்..
ஒன்றரை ஆண்டுகளாக கை விரல்கள் சற்று தளர்ந்திருக்க
நான் விடாது ஒற்றை இரட்டை விரல்களால் தட்டித் தட்டிப் பதிவுகள் தந்து கொண்டிருக்கின்றேன்..
எல்லாம் அம்மையப்பனின் கருணை..
வணக்கம் சகோதர, சகோதரிகளே.
ReplyDeleteஇன்று என் பதிவுக்கு வந்து கருத்துக்களையும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். அனைவருக்கும் பதில் கருத்து தந்து கொண்டிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் என் இளைய மகனின் வரவிற்காக சில நாட்களாக வேலைகளை விடாது செய்து கொண்டிருப்பதால், உடம்பும், கண்களும் தளர்ந்து உறக்கம் வருகிறது. அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள். நாளை மற்ற அனைவருக்கும் தனித்தனியாக பதில்களை தருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பள்ளி சென்று, சிறப்பாக ஆக வேண்டுமென இறைவனிடம் தினமும் பிரார்த்தனை செய்தபடி உள்ளேன்.//
ReplyDeleteஇறைவன் உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.
குழந்தை மகிழ்ச்சியாக பள்ளி சென்று வர வாழ்த்துகள்.
குழந்தையின் பயத்தை போக்க வேண்டும். காரணம் தெரிந்து விட்டால் எளிதில் பயத்தை போக்கி விடலாம்.
மதிப்பெண் நிறைய வாங்க வேண்டும் என்று பள்ளியில் கண்டிப்பாய் இருக்கிறார்களா?
ரொம்பக் கஷ்டமாக இருக்கு. உங்கள் வீட்டில் அனைவரும் குணம் அடைந்து விட்டார்களா? மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டீர்களா? உங்கள் உடல்/மன நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இத்தனை நாட்கள் தொடர்ந்து நீங்கள் வரவில்லை என்றதுமே ஏதோ பெரிய பிரச்னை எனத் தோன்றியது. எப்படிக் கேட்பது என நினைத்துப் பேசாமல் இருந்து விட்டேன். இப்போது சரியாகிக் கொண்டு வருவது குறித்து மகிழ்ச்சி. எங்க வீட்டில் எனக்கு, என் தம்பிக்கெல்லாம் சின்ன வயசில் வந்திருக்கு. அதைத் தவிர எனக்குத் தாளம்மை என்னும் பொன்னுக்கு வீங்கி அடிக்கடி வந்துவிட்டுப் போகும். எங்க பெண்ணிற்குக் குழந்தையில் அடிக்கடி அம்மன் விளையாடுவாள். என் அம்மா முத்து மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு முத்துப் போல் மொட்டுப் பூக்களை வாங்கிக் கொடுத்து அபிஷேஹம் செய்து வழிபட்டார். பின்னர் வரவில்லை. என் கணவருக்கு 35/40 வயதில் அம்மன் விளையாடி, அவர் அலுவலகம் செல்ல முடியாமல் அலுவலக வேலைகளை அவருக்குப் படித்துச் சொல்லணும். அலுவலகத்துக்குக் கடிதம் எழுதணும். இப்படியான வேலைகள். ஆனால் மாமியார் கெடுபிடி. என்னை அவர் எதிரேயே வரக் கூடாது என. அவங்க வெளியே கோயிலுக்கு (மாரியம்மன் கோயிலுக்குத் தான்( போகும் சமயம் இந்த வேலைகளைச் செய்து கொடுப்பேன். எப்படியோ ஒரு மாசம் அவதிப் பட நேர்ந்தது. பின்னர் அம்பிகை அருளால் சரியாச்சு. இப்போவும் அவள் அருளால் தான் நடமாடிக் கொண்டிருக்கோம்.
ReplyDeleteகவனமாக இருக்கவும். பழைய சாதம், சின்ன வெங்காயம், உப்புச் சேர்த்துத் தயிர் விட்டுச் சாப்பிடலாம். தயிரில் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்துப் பச்சடியாக உண்ணலாம். இளநீர் நிறையக் குடிக்கணும். சாத்விக உணவுகளே நல்லது. கீரை சூப், பூஷணி, பீர்க்கை, புடலை, முருங்கைக்கீரை ஆகியவற்றில் சூப் பண்ணிச் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅடடா! வீட்டில் பலருக்கு அம்மை பாதிப்பா? சிறு வயதில் அம்மை போட்டினால் பாதிப்பு அதிகம் இருக்காது, வயதானவர்களுக்கு வரும் பொழுது பாதிப்பு அதிகம் இருக்கும் என்பார்கள். இருந்தாலும் அம்மாதானே, அதிகம் படுத்த மாட்டாள். சீதலாஷ்டகம் படியுங்கள்.
ReplyDeleteபேத்தி திடீரென்று பள்ளி செல்ல பயப்படுகிறாள் என்றாள் அதை அலட்சியப் படுத்த வேண்டாம். அவளிடம் தனிமையில் அன்பாக பேசி விசாரியுங்கள்.
உங்களுக்கு மெயிலில் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன் கமலா படித்து பாருங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteஇதோ படித்துப் பார்க்கிறேன்.தங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.