Pages

Wednesday, May 3, 2023

சந்தேகம்+கோடு=சந்தோஷ கேடு

அந்த அடர்ந்த அமானுஷ்யம் மனதுக்குள் எப்போதாவது சற்று  லேசான திகிலை உண்டாக்கியது. ஆனால் அதை விட மனதின் வெறுமை திடமாக இருந்ததில், இவையெல்லாம் வெகு  சாதாரணம்.... இதையெல்லாம்  வென்று விடலாமெனவும் ஒரு பட்சி உள்ளுக்குள் கூவி விட்டு சென்றது.

"என்ன சொல்லி விட்டாள் இவள்....! என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க எப்படி இவளுக்கு மனது வந்தது.? புலம்பி புலம்பி அலுத்துப் போன வார்த்தைகள் மறுபடி மறுபடி ஒரு குழந்தை ஊஞ்சலில் ஏறுவது போல ஆடி விட்டு,ஆட்டி விட்டு சென்றது. 

வீட்டிற்கு திரும்பிச் செல்லவே பிடிக்கவில்லை. என்ன இருக்கிறது அந்த  வீட்டில்...? ஒவ்வொரு கல்லையும், மண்ணையும் பார்த்துப் பார்த்து கட்டும் போது இருந்த மகிழ்ச்சி கோட்டை ,.. தனக்காக ஒருத்தி வந்து அந்த வீட்டை தான் நேசித்தது போல் தன்னையும் நேசித்து, தன்னை கலகலப்பாக்குவாள் என்ற மனக்கோட்டை இடிந்து விழுந்து பல வருடங்களாகி விட்டது. 

நண்பனின் மனைவி என்ற அறிமுகத்தில் எப்போதோ திருமணத்திற்கு முன் மாலினியிடம்  ஒரு சொந்த சகோதரி போல் பேசி பழகி அவர்களுக்கு உதவிகள் செய்த  அந்த பழைய விஷயங்களை  இவளிடம் ஒளிவு மறைவில்லாமல், ஒரு குழந்தையின் மனத்தோடு சொன்னதிலிருந்து இவளிடந்தான் என்னவொரு மாற்றங்கள்....! 

முதலில் அதைப்பற்றி சகஜமாக வார்த்தைகளை துவக்கி கேலி செய்து பேசியவள்  நாளாவட்டத்தில், "அதுதான் உண்மை போலும்....! அதனால்தான் தன்னிடம் இவன் இன்னமும் நெருங்கி உரையாட கூட தவிர்ப்பதாகவும்," இன்னமும் என்னென்னவோ பேசக் கூடாத வார்த்தைகள் அவள் நாவிலிருந்து வந்து விழுந்ததும் இவன் தினமும் தவித்துப் போனான் என்பது உண்மை. 

தன்னை சந்தேகத்துடன் அவள் கூர்மையான கத்தி கொண்டு  கிளறுவது தினமும் ஒரு  வாடிக்கையானதில், அவளிடம் முன்பிருந்த நெருக்கத்தை இவனால் காட்ட இயலவில்லை என்பதை இவன் அவளுக்கு புரிய வைத்து விளக்கும் போதெல்லாம் சந்தேக கோடுகள் அவளிடமிருந்து குறுக்கும் நெடுக்குமாக இவனுக்கும், அவளுக்குமிடையே நிறைய விழுந்து அவளை  முகம் கூட பார்க்க முடியாமல், பிடிக்காமல் மறைக்கவே தொடங்கின.. 

அலுவலக விடுமுறை நாட்களில் மனம் அமைதியுற இந்த அமானுஷ்யம் இவனுக்கு தேவையாக இருக்கவே அடிக்கடி இங்கு வரலானான். இந்த மலைப்பாங்கான இடத்துக்கு வரும் போதெல்லாம் இவன் ஏதோ மனதுக்குப் பிடித்தமான இடத்திற்கு வந்ததைப் போன்று உணர்ந்தான். காரணங்களை கூறி மனம் விட்டு பேசவும் இவனுக்கு சுற்று வட்டாரத்தில் அதிக நட்புகளில்லை. அப்படியே பேசினாலும், இவனிடமிருக்கும் ஒரு சுணக்கத்தை காரணம் காட்டி இவனை தவிர்க்கும் ஆழமில்லாத, வேரில்லாத நட்புகள். 

பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்த நிலையில் நெருங்கிய  உறவுகளும் சத்தமின்றி  ஒதுங்கிப் போய் இருந்ததினால், மனைவியின் உறவை மட்டுமே பெரிதாக நினைத்து திருமணம் செய்த நாள் முதலாய் வாழ்ந்தும், மனதின் நிறைந்திருந்த உண்மை நிலையை அன்றொரு நாள் அவள் அழுத்தி கேட்ட விதத்தில் இவன் புலப்படுத்தியதில், வாழ்க்கை இப்படி  திசைமாறிப் போனது. 

நினைவலைகளுக்குள் இறுக்கமாக இருந்தவனை இளங்காற்று கொஞ்சம் சிலுசிலுப்பாக்கியது. தன்னிலை உணர்ந்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டான். யாருமில்லாத அந்த தனிமை, அந்த ஒரு அத்துவான இடம் எதுவும் மனதில் படியவில்லை. பொதுவாக அந்த இடம் எவருமே நீண்ட நேரம் வந்தமர்ந்து விட தயங்கும் மனப்பான்மையை தருவதுதான். சுற்றிலும் சறுக்கலான ஏற்றமுடனும் சில இடங்களில் இறங்கி பள்ளத்தாக்கை நோக்கி ஓடும் இந்த மலை பிரதேச முகடுகளில் லேசாக காற்று தழுவும் போது கூட ஒரு அதிர்வுடன் கூடிய சத்தத்தை உண்டாக்கியது. 

காற்றின் அலாதி தன்மையே அதுதான். இதமாக மென்மையாக பூக்களை மட்டுமில்லாது மனித மேனியையும் வருடுகிற மாதிரி தழுவும் காற்று  தீடிரென ஒரு உத்வேகம் பெறும் போது அதன் நிலை மறந்து ஆரவாரத்துடன் பல சத்தங்களை தர ஆரம்பித்து விடும். 

பல சமயங்களில் வரண்ட மண் துகள்கள், மரத்திலிருந்து வயதான காரணத்தால் உதிர்ந்து கீழே விழுந்த வருத்தத்தில் சருகான இலைகள் என எல்லாவற்றையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பும். அப்போது ஏற்படும் அதன் ஆனந்த சிரிப்பு சத்தம் ஒரு வகை. 

மின்னலும், மழையும் கூடவே உடன் வரும் நண்பர்களாக சேர்ந்து வரும் போது கைத்தட்டி ஆரவாரமாக அவைகளை வரவேற்கும் குதூகுல மனநிலையிலான ஒரு சத்தம். 

இதையெல்லாம்  பொதுவாக சிந்தித்து  ரசிக்கும் மனநிலை இவனுக்கு இப்போது குறைந்தே போய் விட்டது. 

இன்று அவன் இங்கு வந்து நிறைய நேரம் ஆகி விட்டதை லேசான இருட்டு, தன் வழக்கமான போர்வை போர்த்துக் கொண்டு வந்து கூறியது. சற்று தள்ளியிருந்த மரங்களின் கிளைகளில், பட்சிகள் தாங்கள் ஓய்வெடுக்க வந்து விட்டதை உணர்த்தும் சப்தங்களை அதே காற்றுடன் கரைய விட்டு மாறி மாறி தந்த களைப்பில் அடங்கிப்போக ஆரம்பித்து கொண்டிருந்தன. 

இவன் மெதுவாக எழுந்து காலணிகளை காலில் மாட்டிக் கொண்டு நடக்க முயற்சிக்கும் போது யாரோ கால்களை அழுந்த பற்றியிருப்பது போன்று தோன்றியது. இத்தனை நேரமாக முழங்கால்களை கட்டியபடியும், மடித்தும், தொங்க விட்டபடியும் சற்று உயர்ந்திருந்த அந்த பாறை போன்ற இடத்தில் அமர்ந்திருந்ததின் விளைவுதான்  என்ற எண்ணத்தில் கால்களை ஒரு முறை மடக்கி நீட்டிய பின் நடக்க ஆரம்பித்தான்

வேறுவழி.....! மனதிற்கு  பிடிக்கவில்லையென்றாலும், வீட்டை தோக்கித்தான் நடக்க வேண்டும். 

இன்னமும் தாமதமானால், ஊரைக்கூட்டி அதற்கு ஒரு காரணத்தையும் கூறி விடுவாள். பிறகு இன்றிரவும் தூக்கமில்லாமல்தான் அவமானத்துடன் கழிக்க வேண்டும். 

எத்தனை இரவுகள் இப்படித்தான் கழிகின்றன. என்றுதான் எந்த ஒரு இரவுதான், நிம்மதியான உறக்கம் வந்து வாழ்க்கையை சந்தோஷமடைய வைக்கப் போகிறதோ?.... மன வேதனையில் சரிவான அந்த இடத்தின் நடப்பதால் வரும் சிரமங்கள் அவன் மனதில் பதியவில்லை. 

நடக்க ஆரம்பித்த சில அடிகளுக்கு ஒருமுறை கால்களில் அந்த அதிர்வு வந்து வந்து மறைந்தது. கால்களை சற்று உலுக்கி அடியெடுத்து வைத்ததில் பெரிய கனமான கல் ஒன்று உருண்டு, பள்ளம் நோக்கி பாய்ந்து அந்த மலைபிரதேச இடுக்குகளில் நிம்மதியாக உறங்கப் போயிற்று. 

தன்னை யாரோ பின் தொடர்வது போன்ற இனம் புரியாத ஒரு பிரமை அடிக்கடி அவனை  பின்னால் திரும்பி பார்க்க வைத்தது. சுற்றி வர ஒருவருமில்லை. இந்தப்பகுதியில் அவ்வளவாக யார் வரப்போகிறார்கள். இன்னமும் சற்று சறுக்கல் பாதையில் காலை ஊன்றி கவனத்துடன் நடந்து, அந்த மலைப் பகுதியை கடந்து விட்டால், சாலை வந்து விடும். அதில் இறங்கி அரைமணி தூரம் நடந்தால் அவன் வீடுதான்.

 வீடா அது...!  அவனைப் பொறுத்த வரை அந்த வீடு ஒரு இடுகாடுதான்.. மனம் வீட்டிற்கு செல்ல வெறுப்பை காட்டியதில் ,  உடம்பு  நடக்கையில் சிறிது தள்ளாடியது. மீண்டும் பாதங்களின் அழுத்தலில் அவன் நின்றான். 

"அண்ணா....  யாரோ அழைக்கிறார்கள். இவன் மெள்ள திரும்பி பார்க்க எங்கும்  ஒருவருமில்லை.காற்று படபடவென வேகம் எடுத்த மகிழ்வில் தன் கடமையை செய்ய, அந்த காற்றில் கலந்து ஏதோ ஒரு வாசனை மூக்கை நெருடி விட்டு அகன்றது. இப்படிப்பட்ட தனிமையின் வீண் பயங்களை இவனின் வாழ்க்கையின் வெறுப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதை இவன் உணர்ந்து ரொம்ப நாட்களாகி விட்டன. இல்லாவிட்டால் இந்த தனிமை அடிக்கடி அவனுக்கு உகந்ததாக அமையுமா....? 

அண்ணா... நான்தான்.. என்னை தெரியவில்லையா? மீண்டும் ஒரு குரல் அழுத்தமாக மென்மையாக பிடரியில் மோதுகிற மாதிரி ஒலிக்கும் போது இவன் சாலையை அடைந்து விட்டான். யாராவது ஆரம்ப  மலைச்சரிவின் அந்த பக்கம்  வேறு யாருடனாவது பேசுகிறார்கள் போலும்....!! அதை சுத்தமாக அறிந்து கொள்ளும் ஆவலிலும் அவன் மனம் ஈடுபடவில்லை. 

வீடு வந்து, மனைவியின் வழக்கமான உபசரிப்பில் குளிர்ந்த போது இரவு மணி பத்ததை தொட்டிருந்தது. களைப்பு கண்களை மூடச்சொல்லி தழுவினாலும், ஒரு சில மணி நேரத்திற்குத்தான் இந்த தழுவல் நீடிக்கும் என்பதை அவன் உணர்ந்ததிருந்தும் படுக்கையில் விழுந்தான்...

வந்த வாரம் வழக்கமான அலுவலக வேலைகளில் மனத்தை செலுத்த நகர்ந்து முடிந்தது. இப்படியேதான் பொழுதுகள் பறக்கின்றன. 

தினமும் வேலைக்கும், வேலை முடிந்து வீட்டிற்கும்  என்று செல்வதே ஒரு கடமையாகப் போய் விட்டது. மற்ற பொழுதுகள் மெளனமாக புத்தகங்களை படிப்பதில் கழித்தாலும் மனத்தை அதில் முழு ஈடுபாட்டுடன் செலுத்த முடியாதபடிக்கு அவளின் சந்தேக கணைகள் துளைக்க ஆரம்பித்து விடும். அதற்கு இப்படி கிளம்பி காலாற நடந்தவுடன் கால்கள் கொண்டு சேர்க்குமிடம் அந்த பெரிய மலைதான். அங்குதான் தனக்கு வேண்டிய  நிம்மதி உள்ளதாக அவன் மனம் சொல்லும். நிர்மலமான அந்த இடத்தில் மனதில் பாரங்கள் அப்போதைக்கு சற்று குறைவதாக அவன் உணர்ந்தான். 

"என்ன இன்னைக்கு பொழுதுக்கு எங்கே கிளம்பீட்டீங்க? வழக்கமான சுடுசொல் தகித்தது. 

" சுசி.. இன்றாவது வழக்கத்தை மாற்றி பேசு. இன்று நாம் எங்கேயாவது வெளியில் போகலாமா சொல்... உனக்கு பிடித்தமான இடத்திற்கு நான் உன்னுடன் வருகிறேன். நான் எங்கும் தனியாக போகவில்லை.. இன்று என்னுடன் வெளியில் வருகிறாயா?" தயங்கி தயங்கி கேட்டான் அவன். 

"நான் எதற்கு? அப்படியே நான் வந்தாலும், அவளுடன் சென்ற அந்த இன்பமான நாட்களைப் போல் வருமா உங்களுக்கு..!!!" 

" ஐயோ.. மறுபடி ஏன் இப்படி பேசி வதைக்கிறாய்..? அது பழைய கதை. அப்போதும் அவள் என்னுடன் மட்டும் எங்கும் தனியாக வந்ததில்லை. நண்பனுடன், அவனும் நானுமாக கடைகளுக்கு போகும் போதுதான் வருவாள். மேலும் அவளை நான் என் தங்கையாகவே நினைத்துப் பழகினேன். எத்தனை தடவை இதை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... " வறண்ட குரலில் லேசான அழுகையும் கலந்து வெளி வர பார்த்தது. 

" இதை நான் நம்ப வேண்டுமாக்கும்....!! அந்த கடிதமே ஒரு அத்தாட்சியாக உங்களை காட்டித் தருகிறதே ..! 

"அது எப்போதோ அவர்கள் இந்த ஊரை விட்டு சென்றவுடன் எழுதியது. அதை வைத்து நீ என்னென்னவோ மனம் போன போக்குபடி பேசுகிறாய்... " அவனை முடிக்க கூட விடாமல் அவள் சீறினாள்

" ஆமா.. அதனால்தான் அதை இத்தனை நாட்களாக  பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்களா ? அப்படி என்ன ஒரு கரிசனம் அவளுக்கு உங்கள் மேல்.. ". 

" நீ அத்தனையுமே தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாய்.. சுசி.!! அவள் ஏதோ தன் மனக்குறையை என்னை தன் அண்ணனாக நினைத்து கடிதத்தில்  கூறியிருக்கிறாள்.மேலும் நம் திருமணத்திற்கு முன்பு கூட அவர்களை சந்திக்க நான் போகவேயில்லை. நம் திருமணத்திற்கு கூட அவர்களின் மாற்றிப் போன முகவரி  தெரியாத காரணத்தால் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று கூட இதுவரை எனக்குத் தெரியாது. அறிந்து கொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை. அப்போது என்றோ அவள் எழுதிய இந்த கடிதம் கூட இப்போது உன் கைகளில் என் துணிகளுடன் சேர்ந்துதான் உனக்கு கிடைத்திருக்கிறது. 

"அதுதான் பொக்கிஷமாக நினைச்சு துணிமணிக்குள் வைத்து காப்பாற்றி வருகிறீர்களோ..." நக்கலான  குரலில் கூறி அவள் விம்மினாள். 

"இல்லை.. சுசி. இது என் கையில் கிடைத்திருந்தால் நான் எப்போதோ கிழித்தெறிந்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். அதற்கு மாறாக...." அவனை முடிக்க விடாமல் அவள் அழுகையை நிறுத்தி விட்டு உறுமினாள். 

" அதான்...! என் கையில் கிடைச்சதாலே ஐயாவுக்கு தன் குட்டு அவ்வளவும் வெளிப்பட்டு இப்போ ரொம்ப திண்டாட்டமாக இருக்கா...? "" 

சே..! என்ன பெண் நீ..! இவ்வளவு சொல்லியும் நம்பாமல்... கோபமும் வருத்தமும் ஒரு சேர அவன் வீட்டை விட்டு  வெளியேறினான். . 

அந்த மலை ஏற்றம் இன்று மன வருத்தத்தினால் கொஞ்சும் கடினமாக தெரிந்தது. 

என்ன இவள்..? என்ன சொல்லியும் நம்பாமல் ஏதேதோ பேசி அவளையும் வருத்தத்துள்ளாக்கிக் கொண்டு நம்மையும் வருத்தப்பட வைக்கிறாள்.. அந்த கடிதம் அவள் கையில் ஏன்தான் சிக்கியதோ....? அதிலும் அந்தப்  பெண் மாலினி அப்படி என்னதான் எழுதி விட்டாள்.? வந்து சேர்ந்த விபரங்களை எழுதியவள். "இப்போதெல்லாம் தன் கணவன் அங்கிருந்த போது இருந்ததை போன்று அன்பாக இல்லையென்றும், அங்கு உங்களுடன் நட்பாக, பேசி பழகிய வாழ்வை போல இப்போது இல்லையென்றும் வருத்தப்பட்டு எழுதியிருந்தாள்..."

இவனும் "அது நண்பன் புதிதாக சேர்ந்த வேலை மும்மரத்தின் அலுப்பாக இருக்குமெனவும், சமயங்களில், ஏதோ விளையாட்டுக்காக அவன்  அப்படி செய்திருப்பான் கூடிய விரைவில் எல்லாம் சரியாகி விடுமெனவும் பதில் கடிதம் எழுதி போட்டானே..!!! இதையெல்லாம்  ஒரு பிரமாதமாக எடுத்துக் கொள்ள இவளால் எப்படி முடிகிறது... ? 

அதன் பின் நண்பனிடமிருந்தும், அவளிடமிருந்தும் எந்த ஒரு விசாரிப்புகளும் கடிதமும் வராத நிலையில், வாழ்க்கை ஓட, இடையில் ஒரு சில சுற்றங்கள் வலிய வந்து  இவன் திருமண ஆயுத்தங்களை ஆரம்பிக்கவும்  இவன் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்ததில் அவர்களை மறந்தே போனான் என்று கூட சொல்லலாம். 

திருமணத்திற்கு முன் அதிர்ஷ்டவசமாக வீடு அமையும் யோகமும் வரவே, அனைவரும் மனைவி வரும் வேளை நல்ல வேளை எனக்கூறி அவர்களை இவன் நினைவிலிருந்து அழித்தே விட்டனர். 

ஆரம்ப வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டிருந்த வேளையில், இவன் உண்மையை சொல்லி, இப்போது எங்கிருந்தோ இந்த கடிதமும் அவள் கையில் வந்து சேரவே இவனின் துரதிரஷ்டம் ஆரம்பமானது. 

மனதில் எழுந்த வெறுப்பு வானின் சூழலை கவனிக்க விடவில்லை. 

காற்று சற்று பலமாகி வானுடன் கலந்து கீழிறங்கும் மழை மேகங்களை சந்தோஷத்தோடு  வரவேற்கச் சென்றது. மழைத் தூறல்கள் ஒன்று, இரண்டு மூன்று என்ற எண்ணிக்கையை வரிசைப்படுத்தி, தான் கற்ற கணக்கை ஒப்புவிக்க தயாராயின. 

மழைத்துளிகள் விழுந்த வேகத்தில் இவன் லேசாக கவனம் கலைந்து இடத்தை விட்டு  எழுந்தான். 

மறுபடி வீடு செல்ல விருப்பமில்லை. எனினும் வேறு எங்குதான் செல்வது?  கால்கள் ஒரு சரிவில் சற்றே நிலை தடுமாறி சறுக்கின. 

"அண்ணா.... இவ்வளவு வேதனையை சுமந்து கொண்டு எப்படி வீட்டிற்கு  செல்லப்போகிறீர்கள்? என்னுடன் வந்து விடுங்கள். அடுத்தப் பிறவியில் நீங்களும், நானும் நிஜமாகவே ஒருதாய் வயிற்றில் பிறந்து நம் சகோதர பாசத்தை அனைவருக்கும் உணர்த்துவோம்.."!!!! 

சற்று அதிகரித்த காற்றுடன் மெல்லிய இதமான குரல் தனக்கு ஆறுதலாக  காதருகே வந்து உரசியது. 

 "யார்? யார்... பேசுவது?  இவன் சற்று பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். சுறறி வர யாருமேயில்லை. 

மழையினால் சீக்கிரமாகவே இருட்டு போர்வையை போர்த்திக் கொண்ட வானம் "இன்றாவது நிம்மதியாக சீக்கிரமே உறங்கப்போகிறேன்.. இல்லையென்றால் இந்த நட்சத்திரங்கள் உரிமையுடன் கதவை தட்டிக் கொண்டு வந்து இரவெல்லாம் கதைப் பேச துவங்கி விடும். "  என்றபடி வேறு எதிர்பார்ப்பில்லாமல் படுத்துறங்கப் போய் விட்டது. 

யாருமில்லாத அந்த அத்வானத்தில், கீழ் குரலில் அந்தப் பேச்சும் தன் பிரமையாகத்தான் இருக்குமென நினைத்தபடி ஒரு வேகம் கொண்டு  அவன் அவசரமாக முன்னேறினான்

" மழை சுதந்திரமாக தன் ராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்ட எக்களிப்புடன்  காற்றுடன் சேர்ந்து கொண்டாடலாமா என கைதட்டி ஆரவரித்தது." 

"அண்ணா.. வேற்றூருக்கு சென்ற பின உங்கள் நண்பரும் இதே சந்தேகத்தோடு என்னை தினமும் வாட்டி எடுத்ததில் உங்களிடம் சொல்லி, ஆறுதல் பெற நான் இங்கு வந்த வேளையில் உங்கள் திருமணம். அவரிடம் எதையும் சொல்லிக் கொள்ளாமல் வந்த நான் உங்களிடம் அதுவும் புது மனைவியுடன் இருக்கும் உங்களிடம் எப்படி சொல்வதென்ற சலனத்தில் இருந்த போது, எனக்கு இந்த மலையில்தான் விடுதலை கிடைத்தது. அன்று உங்களிடம் சொல்லும் நேரத்திற்காக காத்திருக்க எண்ணி பொழுதை கழிக்க இதில் ஏறியதில் என் வாழ்வையே இந்த மலை விழுங்கி கொண்டது. ஒரு விதத்தில் எனக்கு அது நல்லதுதான் என எண்ணினேன். இப்போது நீங்களும் என் இடத்தில்..!!!  தினமும் நீங்கள் படும் வேதனையை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. என்னால்தான் உங்களுக்கும் இப்படி ஒரு கஸ்டமான வாழ்வு. என்னுடனேயே வந்து விடுங்கள் அண்ணா..!! இப்போது நானிருக்கும் இடந்தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. அடுத்தப் பிறவியில் நாம்  ஒன்றாக பிறப்போம் . அப்போது எப்படி இவர்கள்  நம்மை சந்தேகப்படுவார்கள்...!! பார்க்கலாம்..? 

தன் மனதுதான் கற்பனையாக ஏதேதோ நினைத்துப் பேசுகிறது என இவனுக்குத் அசட்டுத்தனமாக தோன்றினாலும், இல்லையில்லை...... தன்னைச்சுற்றி, தன்னருகேயே வந்து  நிஜமாகவே யாரோ பேசுவது போல தோன்றியதாலும் இவன் நடந்த வேகம் சற்று தடைப்பட்டது. கால்களை மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடிக்கு மீண்டும் கால்களில் ஒரு அழுத்தம். 

மழை பெரிதாக வலுப்பதற்குள் மெள்ள இறங்கி அந்த சாலையை அடைந்து விடலாம் என்ற  ஒரு இனம் புரியாத படப்படப்பில் அடுத்த அடிக்காக வேகமாக கால் வைத்தவன் அடுத்த அடி வைக்க முடியாதபடிக்கு சறுக்கி உயரமான அந்த இடத்திலிருந்து பாறைகளின்  இடைவெளிகளில வழியே தீடிரென எதிர்பாராத வண்ணம் குடுகுடுவென உருண்டு ஒரு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். 

நிம்மதியில்லா மனதுடன் இத்தனை நாள் நரகத்தில் இருப்பதைப் போல உயிர் வாழ்ந்த இவனை சந்திக்க வேண்டி அங்கே காத்திருந்த ஓர்  உயிர் இவனை அன்பாக சகோதர பாசத்தோடு வரவேற்றது. 

கதை நிறைவுற்றது... 

இன்றைய பதிவாக ஒரு கதை.இதை ஒரே நேரத்தில் தந்து விட்டால்,படிக்கும் போது  சுவாரஸ்யத்திற்கு பங்கம் வராமல், நன்றாக இருக்குமென மொத்தமாக பகிர்ந்து விட்டேன். பிரித்து தந்தால் இரு பாகமாக தந்திருக்கலாம். நீளமாக உள்ளதென கதையை முழுதுமாக படிக்காமல் இருந்து விடாதீர்கள். உங்கள் அனைவரது ஊக்கமே எனது ஆக்கம். 

எனக்கு அவ்வளவாக கதைகளை, அதுவும் சுவாரஸ்யமாக எழுத வராது. ஆனால், ஆரம்பம் முதல்  (பதினேழு வயது முதல்) எழுதும் ஆர்வம் காரணமாக  கதைகளை இப்படி எழுதி பிதற்றுவது பிடித்தமாகிப் போனது. நடுவில் திருமண வாழ்க்கை, குடும்ப சூழ்நிலைகள் எழுதுவதை ஒத்தி வைத்தது. புதிதாக வலைத்தளம் ஆரம்பித்திலிருந்து இப்படி என்னுள் கருவாக உதிக்கும் கதைகளை அசட்டுத்தனமான என்  எழுத்துக்களால்  வடிக்கிறேன். அதுவும் இப்போது இருக்கும் நேரத்தில் கைப்பேசியிலேயே கொஞ்ச கொஞ்சமாக எழுதி வருகிறேன். என் கதைகள் அச்சு எழுத்துக்களில் வர வேண்டுமென்பதும் என் நீண்ட நாளைய  விருப்பம். அது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை. பார்க்கலாம்..! 

வலைத்தள உறவுகள் நான் எழுதும் கதைகளை படித்துப் பார்த்து அவர்களின் கருத்துக்களை சொல்வதே இப்போதைய மனமகிழ்வாக உள்ளது. என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எப்போதும் என் அன்பான நன்றிகள். 🙏

32 comments:

  1. கதை பிரமாதம். சாதாரண ஒரு கருவை வைத்துக் கொண்டு அதை எண்ணங்களாலும், உணர்வுகளாலும் மெருகேற்றி தூள் செய்து விட்டீர்கள். முடிவு எனக்கு சம்மதமில்லை என்றாலும் நடை பிரமாதம்.கதையை நகர்த்திக் சென்ற விதம், அளித்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களது மனப்பூர்வமான பாராட்டுக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. உங்களது பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      முடிவு கதைக்காக அப்படி உருவாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. முடிவை யோசிக்கையில் அதை மனோதத்துவ ரீதியாகவும் அணுகலாம் என்று தோன்றுகிறது. மனதில் ஏற்பட்ட துன்ப நினைவுகள் தாங்க முடியாத தோல்வி மனப்பான்மையைத் தர மனதின் ப்ரமையாக  அந்தக் குரலை எடுத்துக் கொள்ளலாம்.  அதற்கான வாய்ப்பை நீங்கள் கதையின் ஓரிரு வரிகளில் கொண்டு வந்திருக்கலாம்.  இல்லை, மறைபொருளாகவும் உணரலாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /மனதில் ஏற்பட்ட துன்ப நினைவுகள் தாங்க முடியாத தோல்வி மனப்பான்மையைத் தர மனதின் ப்ரமையாக அந்தக் குரலை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்பை நீங்கள் கதையின் ஓரிரு வரிகளில் கொண்டு வந்திருக்கலாம். /

      நடுவில் அந்த மாதிரி ஒரு பெண் குரலில் கொண்டு வந்து இருக்கிறேனே......! உண்மையில் ஒரு ஆவியின் கதையாக எழுத நினைத்தேன். ஆனால், இறுதியில் அவன் நிலை தடுமாறி கீழே விழும் வரைக்கும், அச்சமயத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, தன்னைச் சுற்றி வந்து கொண்டிருப்பது அந்த நண்பனுடைய மனைவிதான் என்பதை சரியாகவோ, முழுதாகவோ புரிந்து கொள்ளாமலே கால்கள் சறுக்கி தவறி கீழே விழுவதை உணர்வது போல முடித்து விட்டேன். .

      தங்கள் கதையை புரிந்து கொண்டு ஊக்கம் நிறைந்த அருமையான கருத்துக்களை தந்தது எனக்கு மகிழ்வாக உள்ளது. உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இதை எங்கள் செவ்வாயில் பிரசுரிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம், வருத்தம் மனதில்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இதை நானும் முதலில் செவ்வாய் பகுதிக்குத்தான் அனுப்ப நினைத்தேன். ஆனால் கதையின் நீளம் கருதியும், அதன் போக்கு(முடிவு) சரியில்லாதபடிக்கு அமைந்து விட்டதென அனைவருக்கும் சங்கடமாக இருக்குமோ எனவும் நினைத்து அனுப்பவில்லை. மன்னிக்கவும். வேறு ஒரு கதை எழுதி அனுப்ப முயற்சிக்கிறேன்.

      நீங்கள் சென்ற பதிவுக்கே வர இயலாத வேலைகள் அமைந்து விட்டன. ஆனால், இந்த கதை பதிவுக்கு உடனடியாக வந்து நல்லதொரு கருக் சத்துக்களை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கதை நீண்டதல்ல. விவரணங்கள் நீண்டதாகி விட்டது. முடிவு அவ்வளவாக திருப்திகரமாக இல்லை. ஆனாலும் ஒரு வித ஆற்றொழுக்கு கதையில் உள்ளது. பாராட்டுக்கள்.

    சில சமயங்களில் உண்மை சுடும்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கதை நீண்டதல்ல. விவரணங்கள் நீண்டதாகி விட்டது. முடிவு அவ்வளவாக திருப்திகரமாக இல்லை. ஆனாலும் ஒரு வித ஆற்றொழுக்கு கதையில் உள்ளது. பாராட்டுக்கள்./

      உண்மை.. கதையில் வரும் இயற்கையை ரசித்து நானும் நிறைய விவரணங்களை எழுதி விட்டேன். தங்கள் அன்பான பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

      /சில சமயங்களில் உண்மை சுடும்.!

      ஆம் உண்மை நெருப்பை போன்றதுதான்.உங்களின் அருமையான கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதை நன்றாக வித்தியாசமாக உள்ளதென கூறியமைக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இவ்ளோ பெரீய மாத்ரை? என்ற காமெடி நினைவுக்கு வருது. ரொம்ப பெரீய கதை. இரவுக்குள் படித்துவிட்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தொடரும் போட்ட கதைகளை உடனே படிக்க விருப்பமில்லை என்று நீங்கள் சொன்னதாக நினைவு. .அதனால கதையை இரு பாகமாக பிரித்து தராமல் அப்படியே தந்துள்ளேன்.

      /இரவுக்குள் படித்துவிட்டு எழுதுகிறேன்./

      சரி.. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். கதை இங்குதானே உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இது மாதிரியான கதைகளுக்கு இப்படித்தான் முடிவு.. நேர் கோடு மாதிரியான எழுத்துகளுக்கு மத்தியில் உணர்வுக் குவியலாகக் கதை..

    திறமையான கை வண்ணம்
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /நேர் கோடு மாதிரியான எழுத்துகளுக்கு மத்தியில் உணர்வுக் குவியலாகக் கதை../

      கதையை ரசித்துப் படித்ததற்கு என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

      /திறமையான கை வண்ணம்
      அருமை.../

      தங்கள் பாராட்டுகளுக்கு நான் தகுதியானவளா எனத் தெரியாது. இருப்பினும் உங்கள் கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரரே. உங்கள் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் என்னை எழுத வைக்கும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கதையில் முடிவு சுலபமில்லை

    கதையில் வசனத்தை விட வர்ணனைகள் பெரிதாக இருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கதையில் முடிவு சுலபமில்லை/

      முடிவுகளை ஒரே மாதிரி அமைத்து விட வேண்டாமே என்ற எண்ணத்தில் இந்த முடிவு எழுந்தது.

      ஆம் இயற்கையை வர்ணிக்கும் போது என் எழுத்துக்கள் சந்தோஷம் கொள்கின்றன. அதனால் கதை நீண்டு விடுகிறது.

      தங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் எனக்கு மேலும் கதைகள் பல எழுத தூண்டுகோலாக இருக்கும்.
      நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கதை நன்றாக இருக்கிறது. சோகமான முடிவைத்தான் மனம் ஏற்கவில்லை. பழைய சிநேகிதர்களோடு தொடர்பு இல்லை என்றதுமே காரணம் இதுவாகத்தான் இருக்கும் என யூகம் செய்ய முடிந்தது. அருமையான நடை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? எப்படியிருக்கிறீர்கள்? உங்களைத்தான் காணவில்லையே என நினைத்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதையை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கும், பாராட்டியதற்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி. உங்கள் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் எனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. நல்ல சரளமான நடை! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதையை ரசித்துப் படித்து உங்கள் ஊக்கம் நிறைந்த நல்லதொரு கருத்தினை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. End was not that great. Instead of dying he could have become a renunciate. Or the spirit of Malathi, could have explained his wife about his innocence. Narration was good.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதை பற்றிய தங்கள் கருத்துக்கு மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கமலாக்க கதை ஒன்றும் பெரிதாக இல்லை. ஆ! இதையே நீங்க பெரிசுன்னு சொன்னா நான் எழுதறத அப்ப என்னன்னு சொல்றதாம்!!!!..

    கதை மிக நன்று. சிறிய கரு ஆனால் அதை சொல் அலங்காரம் செய்துட்டீங்க உங்கள் பாணியில்.

    முடிவு எதிர்பார்க்க முடிந்தது. முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. அமானுஷ்யம் பிடிக்கும் வாசிக்க ஆனால் பெரிதாக நம்பிக்கை இல்லை என்பதால் இது முடிவு சைக்கலாஜிக்கல் என்று தோன்றியது.

    சொன்ன விதம் நடை மிக நன்று கமலாக்கா...

    கீதா
    .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      எனக்கென்னவோ கதை நீளமாக விட்டதோ என்ற ஐயம். அதனால் முன் எச்சரிக்கையாக நானே அப்படி கூறி விட்டேன். நீங்கள் இல்லையென்று சொன்னதில் மிகவும் சந்தோமடைகிறேன்.

      நீங்கள் உங்கள் வேலைகளுக்கிடையில் வந்து கதையைப் படித்து நல்லதாக கருத்தை தந்தது குறித்தும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் இன்னமும் இந்தக் கதையைப் படிக்க வரவில்லையே என இருந்தது.

      நானும் இந்தக் கதையில் அமானுஷ்யத்தை குறித்து படுபயங்கரமாக எழுத ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை./ தெரியவில்லை. ஏதோ என் அறிவுக்கு எட்டியபடி எழுதி உள்ளேன்.சுருங்க கூறினால், உங்கள் அளவுக்கு கதைகள் எழுதவும் என்னால் இயலவில்லை என்பதே உண்மை. தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் எனக்கு டானிக் மாதிரி. மிக்க நன்றி சகோதரி.

      உங்கள் பாராட்டிற்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. முடிவை வாசகர்களின் ஊகத்திற்கும் விடலாம் கமலாக்கா....

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும், அன்பு கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      ஆமாம்.. சரியாக ஊகித்து விட்டீர்கள். அதனால்தான் முடிவில் அவன் உருண்டு விழுவதாக உணர்வதை மட்டும் தெளிவாக்கியதாகி விட்டது கதை. இதில் ஒரு நூல் பிடித்து கூட ஏறி வேறு மாதிரி கதையை தொடரலாம் என்று கூடத் தோன்றுகிறது. அந்தளவிற்கு எனக்கு கற்பனை வருமென்று கூட தெரியாது. ஆனால் முன்பு ஒரு கதை நான் இங்கு என் தளத்தில் பதியும் போது, "நீங்கள் அனைவரும் முடிவு சுபமாக இல்லையே.." எனக் கூறவும், அதையும் ஒரு நூல் பிடித்து ஏறி தொடர்கிறேன்/ தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன். . ஆனால் அது இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.. (பின்னே அந்த நூலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி அதை கவனியாமல் இருந்தால் அந்த நூல் எப்படி ஒரு நூலாகும்... :)))) ) மறுபடி வந்து தங்கள் கருத்தை தந்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கதை முகவும் நன்றாக இருக்கிறது.

    நடை, உணர்ச்சிகளோடு கூடிய வசனங்கள் கதையின் தரத்தை உயர்த்துகிறது.

    மனைவியைவிட அவள் நினைவு முக்கியமா? முடிவு ஈர்க்கவில்லை. கதை, மனைவி கொடுமைக்காரி என்பதுபோல் சித்தரிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதை நன்றாக இருப்பதாக நீங்கள் வந்து படித்து சொன்னதற்கு மிகவும் மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி சகோதரரே நான்தான் உங்களை மிகவும் வறுப்புறுத்தி கதை படிக்க சொல்லி அழைத்து விட்டேனோ என வருத்தமாக இருந்தது. ஆனால், நீங்கள் வந்து படித்து கதையின் நடை நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் பெருமகிழ்வு அடைந்தேன்.

      உலகில் இது போன்ற கணவன் மனைவிகளும் இருக்கிறார்கள் இல்லையா? அந்த காலத்தில் மனைவியை சந்தேகப்படும் ஆண்கள் அதிகம். அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வெளியில் எங்கும் வராத பெண்களும் அதிகம். இந்த கதையில் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அவன் மனைவி சற்று கடுமையான மனம் படைந்தவள்தான்.அவளை விட அவன் உணர்வுகளுக்குத்தான் கதையில் முதலிடம் தந்து அமைத்துள்ளேன். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இந்தக் கதை பென்டிங்கில் இருக்கிறது என இன்று நினைவுக்கு வந்தது.

    திருமணமாகிவிட்டால் பழைய கதைகளைப் புரிந்துகொள்ளும் பரந்த மனம் இல்லாவிட்டால் கப்சிப் என இருப்பதும், தேவையில்லாதவற்றை வைத்திருக்காமலிருப்பதும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இன்று நினைவு வந்து தாங்கள் கதையை படித்து தந்த கருத்துக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரரே.

      திருமணமாகி விட்ட உடனே பேசி பழகும் போது தங்கள் பழைய காதலை சொல்லி, அதனால் மனசஞ்சலம் அடையாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த கதையில் தன் நண்பனின் மனைவி, என்றும், அவளை தன் சகோதரியாக அவன் பார்த்தாக சொல்லியும் அவளை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டுகிறது. சந்தேகம் ஒரு பேய் போன்றதுதானே ..!! அது மற்றவர்களைப்பற்றி என்றும் கவலை கொள்ளாது. கதையை ரசித்து நல்லதொருகருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. சரளமான நடையில் கதை விபரங்கள் அதிகம்.
    மனம் பாதிக்கப்பட்டவர்களின் கதை. முடிவை படிக்கும் போதே எதிர்யார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கதையை ரசித்துப் படித்து தங்கள் கருத்தை பதிவு செய்தமை கண்டு மகிழ்வடைந்தேன் சகோதரி. தங்கள் கருத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete