Pages

Wednesday, May 10, 2023

வாழையும், சேனையும்.

பொங்கலுடன் எரிசேரி. 

நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம்  சம்பந்தபட்ட அனைத்தும்  அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில தொந்தரவுகளைத் தரும். 

ஒவ்வொரு வீட்டின், அல்லது கோவிலின் அனேக விஷேட தினங்களில் இந்த வாழை மரந்தான் அனைவரையும் வரவேற்கும் நல்ல மனதுடன் வாசலில் கட்டப்பட்டு அதன் சிறப்பை பறைசாற்றிக் கொள்ளும் பெருமையை பெற்றது. 

வாழைப்பழம் கனிகளில் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது.  எக்காலத்திலும் தடங்கலின்றி கிடைப்பதால், இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்களில் இக்கனி முதலிடம் பெறும் பாக்கியத்தை பெற்றது. 

வாழைக்காய் வகையில் கறி, கூட்டு, புளிச்ச கூட்டு, வறுவல் துவையல் பொடிமாஸ் எனப்படும் கறி போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தவிரவும் வாழை இலையில் சாப்பிட்டு பழகியவர்கள் அதை விட சிறந்த தட்டுகளில் பரிமாறினாலும், இவையெல்லாம்  இதற்கிணையாக (வாழை இலைக்கு இணையாக) வருமா என்று கூறுவார்கள். அந்தளவிற்கு இலையில் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் கூடுதல் சுவை பெறும். 

வாழைப்பூ அதன் இயல்பான துவர்ப்பு சுகர் அதிகம் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து. தாராளமாக  இதை மதிய  உணவுடன் கறி, கூட்டு, பருப்புசிலி, வடை, அடை என செய்து சாப்பிடலாம். இதுவும் சில சமயங்களில் அதனுடன் சேரும் பொருட்களால் வாயு தொந்தரவை சிலருக்கு ஏற்படுத்தும். (எதுவுமே, அமிர்தமேயானாலும், அளவுக்கு மிஞ்சினால் அது விஷந்தானே...! . 

வாழைத்தண்டிலும் அது போல் சிறந்த பலன்கள் உள்ளது. அதிலேயும் கறி, கூட்டு, உசிலி, அவியல் தோசை என அனேக விதமான உணவு வகைகள் செய்து சாப்பிட உடம்பிற்கு நல்லதைச் செய்யும் தன்மை கொண்டது. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்

இன்று வாழைக்காயுடன், காய்கறிகளில் ஒன்றான சேனைக் கிழங்கையும் (அந்த காலத்தில் மன்னர் ஆட்சியில் பலம் கொண்ட ஒரு படை என்பது. சேனை, படைக்கு தலைமை தாங்குபவர் சேனாதிபதி என்ற பெயர்களைப் போலவே இதற்கு யார் முதலில் சேனைக்கிழங்கு என்ற பெயர் வைத்தார்களோ தெரியவில்லை..) சேர்த்து செய்யும் உணவாகிய எரிசேரி. ( இதற்கும் இந்தப் பெயரை யார் வைத்தார்களோ?) இது மலையாள கரையோரம் அன்றிலிருந்து இன்றுவரை உலா வந்த / வரும் சிறப்பு உணவுகளில் ஒன்று. . 

வாழைக்காயைப் போல இந்த சேனைக் கிழங்கிலும் பல நன்மைகள் உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது அது ஒரு ருசி. இதிலும் (சேனைக்கிழங்கிலும்) கறி, கூட்டு, சாம்பார், பிட்லை, வறுவல் என விதவிதமாக செய்யலாம். அவியலில் இவை இரண்டும் (வாழை, சேனை காய்கள்) எவ்வித மனவேறுபாடின்றி சேர்ந்து கொள்ளும். 

வாழைக்காய் எளிதில் வெந்து விடும். மாறாக சேனைக்கிழங்கு சில சமயம் அடம் பிடிக்கும். குக்கரில் வைத்தால் கூட அதன் மனது  சிலசமயம் கல் மனதாகவே இருக்கும். சில சமயம் வெறும் கடாயில் அரிந்து போட்டு வேக வைத்தாலும், வெந்து விடும். பொதுவாக கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருக்கும் சேனைகள் இந்த மாதிரி அடம் பிடிக்கும். அதனால் வெள்ளை மனதுடையவையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சமயத்தில் அது நன்றாகவே வெந்து எரிசேரியில் சேரும் போது  உருதெரியாமல் கலந்தும் விடும். 

இப்படி குழைந்து வெந்து விடும் சேனைக்கிழங்கு மசியல் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு (இதை மட்டும் வைத்து செய்யும் சேனை மசியல்) மசியல் புளி விட்டும், இல்லை இறுதியில் எலுமிச்சைபழம் சேர்த்தும் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட அதன் ருசி நன்றாக இருக்கும். ஓரிரு சுட்ட அப்பளங்களை இதன் தொட்டுகையாக இருக்கடடும் என இது முழுமனதுடன் சம்மதித்து விடும். (இப்போது இங்கு சில சாமான் மால்களில் இந்தச் சேனைக் கிழங்கை தோல் நீக்கி  துண்டுகளாக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.) 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்கள். 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் கடுகு மட்டும் தாளித்து கொட்டியுள்ளேன். 


இது குக்கரில் சமர்த்தாய் வெந்து காத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டங்கள். 


இது வறுத்து அரைக்க காத்திருக்கும் மசாலா சாமான்கள். 

இது எரிசேரி. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்கள் பண்ணும் போது எடுத்தவை.  ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் குழப்புமோ என்னவோ? இது பண்ணும் போது தொடர்ச்சியாக எடுத்த நிறைய புகைப்படங்கள் பழைய கைப்பேசியிலிருந்து மாற்றும் போது காணமல் போய் விட்டது. 

முதலில் சேனைக் கிழங்கின் தன்மையை பொறுத்து அதை கொஞ்சம் பெரிதான துண்டங்களாக்கி குக்கரிலோ தனியாகவோ வேக வைத்துக் கொள்ளவும். பின் வாழைக்காயை அதே அளவு பெரிய துண்டுகளாக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். 

ஒரு கடாயில் அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன்  தனியா, உ. ப, க. ப ஒவ்வொரு ஸ்பூன் இவற்றுடன் மிளகு ஒரு ஸ்பூன் என எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் அரை மூடி துருவிக் கொண்டு அதையும் கொஞ்சம் வாசனை வருமளவிற்கு வறுத்துக் கொண்டு நன்கு ஆறியதும், கொஞ்சம் கறிவேப்பிலையையும்  கடாயில் அதனுடன் சேர்த்து  வறுத்து உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து அந்த விழுதை வேக வைத்திருக்கும் காய்களுடன் சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு கொதிக்க விட்டு, (இதற்கு மேல் தேங்காய் அதிகம் சேர்த்தால் பாதகமில்லை என்பவர்கள் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பூவை நன்கு வறுத்து இறுதியில் அதனுடன்  சேர்த்துக் கொள்ளலாம்.) (அப்போது இந்த எரிசேரி நல்ல மணம் பெறும். ஹா ஹா. ) கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து இறுதியில் ஒன்று சேர கொதித்து வருகையில், மூன்று பெரிய ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவிடலாம். இப்போது இதன் வாசனை கண்டிப்பாக உடனே நம்மை உணவருந்த அழைக்கும். 


இது மஞ்சள் தூள் சேர்த்த பொங்கலுடன் வறுத்த சாமான்களை சேர்த்த படம். 

மதியமோ, இல்லை, பசிக்கும் போதோ வெறும்  சாதம் மட்டும் வைத்தால், மீதமிருக்கும் இந்த எரிசேரி ஒரு கை கொடுக்கும் என்பதால், எப்போதும் எங்கள் வீட்டில் இந்த பொங்கலுக்கு உடன் துணையாக வரும் சட்னிகள், சாம்பார், உ. வடை முதலியவை மறுபேச்சின்றி  சத்தமின்றி ஒதுங்கிக் கொண்டன. (ஆனால், எப்போதும் அதன் துணையாக வருபவை அன்று பற்களை கடித்தபடி பழி வாங்கும் மன நிலையில் உள்ளதென்பதும் எனக்கு புரிந்தது. :))) 

பி. கு. இன்னமும் இவை இரண்டின் நன்மைகள் (அதுதான் காய்கள் இரண்டின் நன்மைகள் ஏ முதலான விட்டமின், உடலிலுள்ள குறைகளை போக்கி நிறைகளை அதிகரிக்கச் செய்வது..) பற்றிய குறிப்பை இதனுடன் இணைக்க சேகரித்தேன். ஆனால், ஆகா.. ஒன்றுமில்லாத இந்தப் பதிவு இவ்வளவு நீ.. ள.. மா.. என்று பதிவின் நீளம் கருதி ஒருவரும் பொறுமையுடன் படிக்க வில்லையென்றால் என்ன செய்வதென்று அது எதையும்  இணைக்கவில்லை

இப்படி எத்தனைதான் நன்மை குறித்த குறிப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், பயன்படுத்தும் அவரவர் உடல் நிலைக்கேற்றபடிதான் அவைகளும் நம்முடன் ஒத்துழைக்கும் இல்லையா..? 

அறு(சு)வைப் பதிவை படிக்கப் போகும் அனைவருக்கும் அன்பான நன்றிகள். 🙏.

Wednesday, May 3, 2023

சந்தேகம்+கோடு=சந்தோஷ கேடு

அந்த அடர்ந்த அமானுஷ்யம் மனதுக்குள் எப்போதாவது சற்று  லேசான திகிலை உண்டாக்கியது. ஆனால் அதை விட மனதின் வெறுமை திடமாக இருந்ததில், இவையெல்லாம் வெகு  சாதாரணம்.... இதையெல்லாம்  வென்று விடலாமெனவும் ஒரு பட்சி உள்ளுக்குள் கூவி விட்டு சென்றது.

"என்ன சொல்லி விட்டாள் இவள்....! என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க எப்படி இவளுக்கு மனது வந்தது.? புலம்பி புலம்பி அலுத்துப் போன வார்த்தைகள் மறுபடி மறுபடி ஒரு குழந்தை ஊஞ்சலில் ஏறுவது போல ஆடி விட்டு,ஆட்டி விட்டு சென்றது. 

வீட்டிற்கு திரும்பிச் செல்லவே பிடிக்கவில்லை. என்ன இருக்கிறது அந்த  வீட்டில்...? ஒவ்வொரு கல்லையும், மண்ணையும் பார்த்துப் பார்த்து கட்டும் போது இருந்த மகிழ்ச்சி கோட்டை ,.. தனக்காக ஒருத்தி வந்து அந்த வீட்டை தான் நேசித்தது போல் தன்னையும் நேசித்து, தன்னை கலகலப்பாக்குவாள் என்ற மனக்கோட்டை இடிந்து விழுந்து பல வருடங்களாகி விட்டது. 

நண்பனின் மனைவி என்ற அறிமுகத்தில் எப்போதோ திருமணத்திற்கு முன் மாலினியிடம்  ஒரு சொந்த சகோதரி போல் பேசி பழகி அவர்களுக்கு உதவிகள் செய்த  அந்த பழைய விஷயங்களை  இவளிடம் ஒளிவு மறைவில்லாமல், ஒரு குழந்தையின் மனத்தோடு சொன்னதிலிருந்து இவளிடந்தான் என்னவொரு மாற்றங்கள்....! 

முதலில் அதைப்பற்றி சகஜமாக வார்த்தைகளை துவக்கி கேலி செய்து பேசியவள்  நாளாவட்டத்தில், "அதுதான் உண்மை போலும்....! அதனால்தான் தன்னிடம் இவன் இன்னமும் நெருங்கி உரையாட கூட தவிர்ப்பதாகவும்," இன்னமும் என்னென்னவோ பேசக் கூடாத வார்த்தைகள் அவள் நாவிலிருந்து வந்து விழுந்ததும் இவன் தினமும் தவித்துப் போனான் என்பது உண்மை. 

தன்னை சந்தேகத்துடன் அவள் கூர்மையான கத்தி கொண்டு  கிளறுவது தினமும் ஒரு  வாடிக்கையானதில், அவளிடம் முன்பிருந்த நெருக்கத்தை இவனால் காட்ட இயலவில்லை என்பதை இவன் அவளுக்கு புரிய வைத்து விளக்கும் போதெல்லாம் சந்தேக கோடுகள் அவளிடமிருந்து குறுக்கும் நெடுக்குமாக இவனுக்கும், அவளுக்குமிடையே நிறைய விழுந்து அவளை  முகம் கூட பார்க்க முடியாமல், பிடிக்காமல் மறைக்கவே தொடங்கின.. 

அலுவலக விடுமுறை நாட்களில் மனம் அமைதியுற இந்த அமானுஷ்யம் இவனுக்கு தேவையாக இருக்கவே அடிக்கடி இங்கு வரலானான். இந்த மலைப்பாங்கான இடத்துக்கு வரும் போதெல்லாம் இவன் ஏதோ மனதுக்குப் பிடித்தமான இடத்திற்கு வந்ததைப் போன்று உணர்ந்தான். காரணங்களை கூறி மனம் விட்டு பேசவும் இவனுக்கு சுற்று வட்டாரத்தில் அதிக நட்புகளில்லை. அப்படியே பேசினாலும், இவனிடமிருக்கும் ஒரு சுணக்கத்தை காரணம் காட்டி இவனை தவிர்க்கும் ஆழமில்லாத, வேரில்லாத நட்புகள். 

பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்த நிலையில் நெருங்கிய  உறவுகளும் சத்தமின்றி  ஒதுங்கிப் போய் இருந்ததினால், மனைவியின் உறவை மட்டுமே பெரிதாக நினைத்து திருமணம் செய்த நாள் முதலாய் வாழ்ந்தும், மனதின் நிறைந்திருந்த உண்மை நிலையை அன்றொரு நாள் அவள் அழுத்தி கேட்ட விதத்தில் இவன் புலப்படுத்தியதில், வாழ்க்கை இப்படி  திசைமாறிப் போனது. 

நினைவலைகளுக்குள் இறுக்கமாக இருந்தவனை இளங்காற்று கொஞ்சம் சிலுசிலுப்பாக்கியது. தன்னிலை உணர்ந்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டான். யாருமில்லாத அந்த தனிமை, அந்த ஒரு அத்துவான இடம் எதுவும் மனதில் படியவில்லை. பொதுவாக அந்த இடம் எவருமே நீண்ட நேரம் வந்தமர்ந்து விட தயங்கும் மனப்பான்மையை தருவதுதான். சுற்றிலும் சறுக்கலான ஏற்றமுடனும் சில இடங்களில் இறங்கி பள்ளத்தாக்கை நோக்கி ஓடும் இந்த மலை பிரதேச முகடுகளில் லேசாக காற்று தழுவும் போது கூட ஒரு அதிர்வுடன் கூடிய சத்தத்தை உண்டாக்கியது. 

காற்றின் அலாதி தன்மையே அதுதான். இதமாக மென்மையாக பூக்களை மட்டுமில்லாது மனித மேனியையும் வருடுகிற மாதிரி தழுவும் காற்று  தீடிரென ஒரு உத்வேகம் பெறும் போது அதன் நிலை மறந்து ஆரவாரத்துடன் பல சத்தங்களை தர ஆரம்பித்து விடும். 

பல சமயங்களில் வரண்ட மண் துகள்கள், மரத்திலிருந்து வயதான காரணத்தால் உதிர்ந்து கீழே விழுந்த வருத்தத்தில் சருகான இலைகள் என எல்லாவற்றையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பும். அப்போது ஏற்படும் அதன் ஆனந்த சிரிப்பு சத்தம் ஒரு வகை. 

மின்னலும், மழையும் கூடவே உடன் வரும் நண்பர்களாக சேர்ந்து வரும் போது கைத்தட்டி ஆரவாரமாக அவைகளை வரவேற்கும் குதூகுல மனநிலையிலான ஒரு சத்தம். 

இதையெல்லாம்  பொதுவாக சிந்தித்து  ரசிக்கும் மனநிலை இவனுக்கு இப்போது குறைந்தே போய் விட்டது. 

இன்று அவன் இங்கு வந்து நிறைய நேரம் ஆகி விட்டதை லேசான இருட்டு, தன் வழக்கமான போர்வை போர்த்துக் கொண்டு வந்து கூறியது. சற்று தள்ளியிருந்த மரங்களின் கிளைகளில், பட்சிகள் தாங்கள் ஓய்வெடுக்க வந்து விட்டதை உணர்த்தும் சப்தங்களை அதே காற்றுடன் கரைய விட்டு மாறி மாறி தந்த களைப்பில் அடங்கிப்போக ஆரம்பித்து கொண்டிருந்தன. 

இவன் மெதுவாக எழுந்து காலணிகளை காலில் மாட்டிக் கொண்டு நடக்க முயற்சிக்கும் போது யாரோ கால்களை அழுந்த பற்றியிருப்பது போன்று தோன்றியது. இத்தனை நேரமாக முழங்கால்களை கட்டியபடியும், மடித்தும், தொங்க விட்டபடியும் சற்று உயர்ந்திருந்த அந்த பாறை போன்ற இடத்தில் அமர்ந்திருந்ததின் விளைவுதான்  என்ற எண்ணத்தில் கால்களை ஒரு முறை மடக்கி நீட்டிய பின் நடக்க ஆரம்பித்தான்

வேறுவழி.....! மனதிற்கு  பிடிக்கவில்லையென்றாலும், வீட்டை தோக்கித்தான் நடக்க வேண்டும். 

இன்னமும் தாமதமானால், ஊரைக்கூட்டி அதற்கு ஒரு காரணத்தையும் கூறி விடுவாள். பிறகு இன்றிரவும் தூக்கமில்லாமல்தான் அவமானத்துடன் கழிக்க வேண்டும். 

எத்தனை இரவுகள் இப்படித்தான் கழிகின்றன. என்றுதான் எந்த ஒரு இரவுதான், நிம்மதியான உறக்கம் வந்து வாழ்க்கையை சந்தோஷமடைய வைக்கப் போகிறதோ?.... மன வேதனையில் சரிவான அந்த இடத்தின் நடப்பதால் வரும் சிரமங்கள் அவன் மனதில் பதியவில்லை. 

நடக்க ஆரம்பித்த சில அடிகளுக்கு ஒருமுறை கால்களில் அந்த அதிர்வு வந்து வந்து மறைந்தது. கால்களை சற்று உலுக்கி அடியெடுத்து வைத்ததில் பெரிய கனமான கல் ஒன்று உருண்டு, பள்ளம் நோக்கி பாய்ந்து அந்த மலைபிரதேச இடுக்குகளில் நிம்மதியாக உறங்கப் போயிற்று. 

தன்னை யாரோ பின் தொடர்வது போன்ற இனம் புரியாத ஒரு பிரமை அடிக்கடி அவனை  பின்னால் திரும்பி பார்க்க வைத்தது. சுற்றி வர ஒருவருமில்லை. இந்தப்பகுதியில் அவ்வளவாக யார் வரப்போகிறார்கள். இன்னமும் சற்று சறுக்கல் பாதையில் காலை ஊன்றி கவனத்துடன் நடந்து, அந்த மலைப் பகுதியை கடந்து விட்டால், சாலை வந்து விடும். அதில் இறங்கி அரைமணி தூரம் நடந்தால் அவன் வீடுதான்.

 வீடா அது...!  அவனைப் பொறுத்த வரை அந்த வீடு ஒரு இடுகாடுதான்.. மனம் வீட்டிற்கு செல்ல வெறுப்பை காட்டியதில் ,  உடம்பு  நடக்கையில் சிறிது தள்ளாடியது. மீண்டும் பாதங்களின் அழுத்தலில் அவன் நின்றான். 

"அண்ணா....  யாரோ அழைக்கிறார்கள். இவன் மெள்ள திரும்பி பார்க்க எங்கும்  ஒருவருமில்லை.காற்று படபடவென வேகம் எடுத்த மகிழ்வில் தன் கடமையை செய்ய, அந்த காற்றில் கலந்து ஏதோ ஒரு வாசனை மூக்கை நெருடி விட்டு அகன்றது. இப்படிப்பட்ட தனிமையின் வீண் பயங்களை இவனின் வாழ்க்கையின் வெறுப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதை இவன் உணர்ந்து ரொம்ப நாட்களாகி விட்டன. இல்லாவிட்டால் இந்த தனிமை அடிக்கடி அவனுக்கு உகந்ததாக அமையுமா....? 

அண்ணா... நான்தான்.. என்னை தெரியவில்லையா? மீண்டும் ஒரு குரல் அழுத்தமாக மென்மையாக பிடரியில் மோதுகிற மாதிரி ஒலிக்கும் போது இவன் சாலையை அடைந்து விட்டான். யாராவது ஆரம்ப  மலைச்சரிவின் அந்த பக்கம்  வேறு யாருடனாவது பேசுகிறார்கள் போலும்....!! அதை சுத்தமாக அறிந்து கொள்ளும் ஆவலிலும் அவன் மனம் ஈடுபடவில்லை. 

வீடு வந்து, மனைவியின் வழக்கமான உபசரிப்பில் குளிர்ந்த போது இரவு மணி பத்ததை தொட்டிருந்தது. களைப்பு கண்களை மூடச்சொல்லி தழுவினாலும், ஒரு சில மணி நேரத்திற்குத்தான் இந்த தழுவல் நீடிக்கும் என்பதை அவன் உணர்ந்ததிருந்தும் படுக்கையில் விழுந்தான்...

வந்த வாரம் வழக்கமான அலுவலக வேலைகளில் மனத்தை செலுத்த நகர்ந்து முடிந்தது. இப்படியேதான் பொழுதுகள் பறக்கின்றன. 

தினமும் வேலைக்கும், வேலை முடிந்து வீட்டிற்கும்  என்று செல்வதே ஒரு கடமையாகப் போய் விட்டது. மற்ற பொழுதுகள் மெளனமாக புத்தகங்களை படிப்பதில் கழித்தாலும் மனத்தை அதில் முழு ஈடுபாட்டுடன் செலுத்த முடியாதபடிக்கு அவளின் சந்தேக கணைகள் துளைக்க ஆரம்பித்து விடும். அதற்கு இப்படி கிளம்பி காலாற நடந்தவுடன் கால்கள் கொண்டு சேர்க்குமிடம் அந்த பெரிய மலைதான். அங்குதான் தனக்கு வேண்டிய  நிம்மதி உள்ளதாக அவன் மனம் சொல்லும். நிர்மலமான அந்த இடத்தில் மனதில் பாரங்கள் அப்போதைக்கு சற்று குறைவதாக அவன் உணர்ந்தான். 

"என்ன இன்னைக்கு பொழுதுக்கு எங்கே கிளம்பீட்டீங்க? வழக்கமான சுடுசொல் தகித்தது. 

" சுசி.. இன்றாவது வழக்கத்தை மாற்றி பேசு. இன்று நாம் எங்கேயாவது வெளியில் போகலாமா சொல்... உனக்கு பிடித்தமான இடத்திற்கு நான் உன்னுடன் வருகிறேன். நான் எங்கும் தனியாக போகவில்லை.. இன்று என்னுடன் வெளியில் வருகிறாயா?" தயங்கி தயங்கி கேட்டான் அவன். 

"நான் எதற்கு? அப்படியே நான் வந்தாலும், அவளுடன் சென்ற அந்த இன்பமான நாட்களைப் போல் வருமா உங்களுக்கு..!!!" 

" ஐயோ.. மறுபடி ஏன் இப்படி பேசி வதைக்கிறாய்..? அது பழைய கதை. அப்போதும் அவள் என்னுடன் மட்டும் எங்கும் தனியாக வந்ததில்லை. நண்பனுடன், அவனும் நானுமாக கடைகளுக்கு போகும் போதுதான் வருவாள். மேலும் அவளை நான் என் தங்கையாகவே நினைத்துப் பழகினேன். எத்தனை தடவை இதை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... " வறண்ட குரலில் லேசான அழுகையும் கலந்து வெளி வர பார்த்தது. 

" இதை நான் நம்ப வேண்டுமாக்கும்....!! அந்த கடிதமே ஒரு அத்தாட்சியாக உங்களை காட்டித் தருகிறதே ..! 

"அது எப்போதோ அவர்கள் இந்த ஊரை விட்டு சென்றவுடன் எழுதியது. அதை வைத்து நீ என்னென்னவோ மனம் போன போக்குபடி பேசுகிறாய்... " அவனை முடிக்க கூட விடாமல் அவள் சீறினாள்

" ஆமா.. அதனால்தான் அதை இத்தனை நாட்களாக  பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்களா ? அப்படி என்ன ஒரு கரிசனம் அவளுக்கு உங்கள் மேல்.. ". 

" நீ அத்தனையுமே தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாய்.. சுசி.!! அவள் ஏதோ தன் மனக்குறையை என்னை தன் அண்ணனாக நினைத்து கடிதத்தில்  கூறியிருக்கிறாள்.மேலும் நம் திருமணத்திற்கு முன்பு கூட அவர்களை சந்திக்க நான் போகவேயில்லை. நம் திருமணத்திற்கு கூட அவர்களின் மாற்றிப் போன முகவரி  தெரியாத காரணத்தால் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று கூட இதுவரை எனக்குத் தெரியாது. அறிந்து கொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை. அப்போது என்றோ அவள் எழுதிய இந்த கடிதம் கூட இப்போது உன் கைகளில் என் துணிகளுடன் சேர்ந்துதான் உனக்கு கிடைத்திருக்கிறது. 

"அதுதான் பொக்கிஷமாக நினைச்சு துணிமணிக்குள் வைத்து காப்பாற்றி வருகிறீர்களோ..." நக்கலான  குரலில் கூறி அவள் விம்மினாள். 

"இல்லை.. சுசி. இது என் கையில் கிடைத்திருந்தால் நான் எப்போதோ கிழித்தெறிந்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். அதற்கு மாறாக...." அவனை முடிக்க விடாமல் அவள் அழுகையை நிறுத்தி விட்டு உறுமினாள். 

" அதான்...! என் கையில் கிடைச்சதாலே ஐயாவுக்கு தன் குட்டு அவ்வளவும் வெளிப்பட்டு இப்போ ரொம்ப திண்டாட்டமாக இருக்கா...? "" 

சே..! என்ன பெண் நீ..! இவ்வளவு சொல்லியும் நம்பாமல்... கோபமும் வருத்தமும் ஒரு சேர அவன் வீட்டை விட்டு  வெளியேறினான். . 

அந்த மலை ஏற்றம் இன்று மன வருத்தத்தினால் கொஞ்சும் கடினமாக தெரிந்தது. 

என்ன இவள்..? என்ன சொல்லியும் நம்பாமல் ஏதேதோ பேசி அவளையும் வருத்தத்துள்ளாக்கிக் கொண்டு நம்மையும் வருத்தப்பட வைக்கிறாள்.. அந்த கடிதம் அவள் கையில் ஏன்தான் சிக்கியதோ....? அதிலும் அந்தப்  பெண் மாலினி அப்படி என்னதான் எழுதி விட்டாள்.? வந்து சேர்ந்த விபரங்களை எழுதியவள். "இப்போதெல்லாம் தன் கணவன் அங்கிருந்த போது இருந்ததை போன்று அன்பாக இல்லையென்றும், அங்கு உங்களுடன் நட்பாக, பேசி பழகிய வாழ்வை போல இப்போது இல்லையென்றும் வருத்தப்பட்டு எழுதியிருந்தாள்..."

இவனும் "அது நண்பன் புதிதாக சேர்ந்த வேலை மும்மரத்தின் அலுப்பாக இருக்குமெனவும், சமயங்களில், ஏதோ விளையாட்டுக்காக அவன்  அப்படி செய்திருப்பான் கூடிய விரைவில் எல்லாம் சரியாகி விடுமெனவும் பதில் கடிதம் எழுதி போட்டானே..!!! இதையெல்லாம்  ஒரு பிரமாதமாக எடுத்துக் கொள்ள இவளால் எப்படி முடிகிறது... ? 

அதன் பின் நண்பனிடமிருந்தும், அவளிடமிருந்தும் எந்த ஒரு விசாரிப்புகளும் கடிதமும் வராத நிலையில், வாழ்க்கை ஓட, இடையில் ஒரு சில சுற்றங்கள் வலிய வந்து  இவன் திருமண ஆயுத்தங்களை ஆரம்பிக்கவும்  இவன் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்ததில் அவர்களை மறந்தே போனான் என்று கூட சொல்லலாம். 

திருமணத்திற்கு முன் அதிர்ஷ்டவசமாக வீடு அமையும் யோகமும் வரவே, அனைவரும் மனைவி வரும் வேளை நல்ல வேளை எனக்கூறி அவர்களை இவன் நினைவிலிருந்து அழித்தே விட்டனர். 

ஆரம்ப வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டிருந்த வேளையில், இவன் உண்மையை சொல்லி, இப்போது எங்கிருந்தோ இந்த கடிதமும் அவள் கையில் வந்து சேரவே இவனின் துரதிரஷ்டம் ஆரம்பமானது. 

மனதில் எழுந்த வெறுப்பு வானின் சூழலை கவனிக்க விடவில்லை. 

காற்று சற்று பலமாகி வானுடன் கலந்து கீழிறங்கும் மழை மேகங்களை சந்தோஷத்தோடு  வரவேற்கச் சென்றது. மழைத் தூறல்கள் ஒன்று, இரண்டு மூன்று என்ற எண்ணிக்கையை வரிசைப்படுத்தி, தான் கற்ற கணக்கை ஒப்புவிக்க தயாராயின. 

மழைத்துளிகள் விழுந்த வேகத்தில் இவன் லேசாக கவனம் கலைந்து இடத்தை விட்டு  எழுந்தான். 

மறுபடி வீடு செல்ல விருப்பமில்லை. எனினும் வேறு எங்குதான் செல்வது?  கால்கள் ஒரு சரிவில் சற்றே நிலை தடுமாறி சறுக்கின. 

"அண்ணா.... இவ்வளவு வேதனையை சுமந்து கொண்டு எப்படி வீட்டிற்கு  செல்லப்போகிறீர்கள்? என்னுடன் வந்து விடுங்கள். அடுத்தப் பிறவியில் நீங்களும், நானும் நிஜமாகவே ஒருதாய் வயிற்றில் பிறந்து நம் சகோதர பாசத்தை அனைவருக்கும் உணர்த்துவோம்.."!!!! 

சற்று அதிகரித்த காற்றுடன் மெல்லிய இதமான குரல் தனக்கு ஆறுதலாக  காதருகே வந்து உரசியது. 

 "யார்? யார்... பேசுவது?  இவன் சற்று பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்தான். சுறறி வர யாருமேயில்லை. 

மழையினால் சீக்கிரமாகவே இருட்டு போர்வையை போர்த்திக் கொண்ட வானம் "இன்றாவது நிம்மதியாக சீக்கிரமே உறங்கப்போகிறேன்.. இல்லையென்றால் இந்த நட்சத்திரங்கள் உரிமையுடன் கதவை தட்டிக் கொண்டு வந்து இரவெல்லாம் கதைப் பேச துவங்கி விடும். "  என்றபடி வேறு எதிர்பார்ப்பில்லாமல் படுத்துறங்கப் போய் விட்டது. 

யாருமில்லாத அந்த அத்வானத்தில், கீழ் குரலில் அந்தப் பேச்சும் தன் பிரமையாகத்தான் இருக்குமென நினைத்தபடி ஒரு வேகம் கொண்டு  அவன் அவசரமாக முன்னேறினான்

" மழை சுதந்திரமாக தன் ராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்ட எக்களிப்புடன்  காற்றுடன் சேர்ந்து கொண்டாடலாமா என கைதட்டி ஆரவரித்தது." 

"அண்ணா.. வேற்றூருக்கு சென்ற பின உங்கள் நண்பரும் இதே சந்தேகத்தோடு என்னை தினமும் வாட்டி எடுத்ததில் உங்களிடம் சொல்லி, ஆறுதல் பெற நான் இங்கு வந்த வேளையில் உங்கள் திருமணம். அவரிடம் எதையும் சொல்லிக் கொள்ளாமல் வந்த நான் உங்களிடம் அதுவும் புது மனைவியுடன் இருக்கும் உங்களிடம் எப்படி சொல்வதென்ற சலனத்தில் இருந்த போது, எனக்கு இந்த மலையில்தான் விடுதலை கிடைத்தது. அன்று உங்களிடம் சொல்லும் நேரத்திற்காக காத்திருக்க எண்ணி பொழுதை கழிக்க இதில் ஏறியதில் என் வாழ்வையே இந்த மலை விழுங்கி கொண்டது. ஒரு விதத்தில் எனக்கு அது நல்லதுதான் என எண்ணினேன். இப்போது நீங்களும் என் இடத்தில்..!!!  தினமும் நீங்கள் படும் வேதனையை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. என்னால்தான் உங்களுக்கும் இப்படி ஒரு கஸ்டமான வாழ்வு. என்னுடனேயே வந்து விடுங்கள் அண்ணா..!! இப்போது நானிருக்கும் இடந்தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. அடுத்தப் பிறவியில் நாம்  ஒன்றாக பிறப்போம் . அப்போது எப்படி இவர்கள்  நம்மை சந்தேகப்படுவார்கள்...!! பார்க்கலாம்..? 

தன் மனதுதான் கற்பனையாக ஏதேதோ நினைத்துப் பேசுகிறது என இவனுக்குத் அசட்டுத்தனமாக தோன்றினாலும், இல்லையில்லை...... தன்னைச்சுற்றி, தன்னருகேயே வந்து  நிஜமாகவே யாரோ பேசுவது போல தோன்றியதாலும் இவன் நடந்த வேகம் சற்று தடைப்பட்டது. கால்களை மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடிக்கு மீண்டும் கால்களில் ஒரு அழுத்தம். 

மழை பெரிதாக வலுப்பதற்குள் மெள்ள இறங்கி அந்த சாலையை அடைந்து விடலாம் என்ற  ஒரு இனம் புரியாத படப்படப்பில் அடுத்த அடிக்காக வேகமாக கால் வைத்தவன் அடுத்த அடி வைக்க முடியாதபடிக்கு சறுக்கி உயரமான அந்த இடத்திலிருந்து பாறைகளின்  இடைவெளிகளில வழியே தீடிரென எதிர்பாராத வண்ணம் குடுகுடுவென உருண்டு ஒரு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். 

நிம்மதியில்லா மனதுடன் இத்தனை நாள் நரகத்தில் இருப்பதைப் போல உயிர் வாழ்ந்த இவனை சந்திக்க வேண்டி அங்கே காத்திருந்த ஓர்  உயிர் இவனை அன்பாக சகோதர பாசத்தோடு வரவேற்றது. 

கதை நிறைவுற்றது... 

இன்றைய பதிவாக ஒரு கதை.இதை ஒரே நேரத்தில் தந்து விட்டால்,படிக்கும் போது  சுவாரஸ்யத்திற்கு பங்கம் வராமல், நன்றாக இருக்குமென மொத்தமாக பகிர்ந்து விட்டேன். பிரித்து தந்தால் இரு பாகமாக தந்திருக்கலாம். நீளமாக உள்ளதென கதையை முழுதுமாக படிக்காமல் இருந்து விடாதீர்கள். உங்கள் அனைவரது ஊக்கமே எனது ஆக்கம். 

எனக்கு அவ்வளவாக கதைகளை, அதுவும் சுவாரஸ்யமாக எழுத வராது. ஆனால், ஆரம்பம் முதல்  (பதினேழு வயது முதல்) எழுதும் ஆர்வம் காரணமாக  கதைகளை இப்படி எழுதி பிதற்றுவது பிடித்தமாகிப் போனது. நடுவில் திருமண வாழ்க்கை, குடும்ப சூழ்நிலைகள் எழுதுவதை ஒத்தி வைத்தது. புதிதாக வலைத்தளம் ஆரம்பித்திலிருந்து இப்படி என்னுள் கருவாக உதிக்கும் கதைகளை அசட்டுத்தனமான என்  எழுத்துக்களால்  வடிக்கிறேன். அதுவும் இப்போது இருக்கும் நேரத்தில் கைப்பேசியிலேயே கொஞ்ச கொஞ்சமாக எழுதி வருகிறேன். என் கதைகள் அச்சு எழுத்துக்களில் வர வேண்டுமென்பதும் என் நீண்ட நாளைய  விருப்பம். அது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை. பார்க்கலாம்..! 

வலைத்தள உறவுகள் நான் எழுதும் கதைகளை படித்துப் பார்த்து அவர்களின் கருத்துக்களை சொல்வதே இப்போதைய மனமகிழ்வாக உள்ளது. என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எப்போதும் என் அன்பான நன்றிகள். 🙏