Pages

Friday, April 28, 2023

பகல் கனவு.




ரவாரமிட்டபடி 

அங்குமிங்கும் 

ஆடி ஓடிய, அணில்கள் 

காணாமல் போயின!

காகங்களின் கரையல் சப்தம்,

கார் முகிலின் இடியோசையில், 

கரைந்தே போயின! 


 மற்ற பறவைகளின் 

பலவிதமான ஒலிகளும், 

பறந்தே போயின! 

பிறநில வாழ்

விலங்கினங்களும் 

விரக்தியுடன் இந்த

வில்லங்கத்தில் மாட்டாமல் 

ஒதுங்கி போயின!

காரணம் என்ன வெனில், இது,

கார்காலத்தின் ஆர்பாட்டந்தான்.


மழை! மழை! மழை!

எங்கும் மழை!

எத்திக்கும் மழை!

மழையரசி 

மகிழ்ச்சிப்பெருக்கில் தன்

மனந்துள்ள கொட்டித் தீர்த்தாள்.

மேள தாளத்துடன் 

ஆனந்தம் பொங்க

மேக வீதியில் வலம் 

வந்தபடியிருந்தாள்.


இதுகாறும் 

இவ்வுலக மாந்தர்க்கு

கடமையின் கருத்தை 

செவ்வனே விளக்கி வந்த

கதிரவனும் அரசியின் 

கட்டளைக்கு பணிந்து

மூன்று நாட்களாய் தன்,

முகம் காட்டாது

முடங்கிச் சென்ற வண்ணம் 

இருந்தான்.


மழை வேண்டி. 

இந்த மண்ணில்

பல வேள்விகளும்,

வேண்டுதல்களும் செய்த

மண்ணில் வாழ்

மக்களுக்கும், 

மழையரசியின்  

மட்டற்ற  சீற்றம் கண்டு,

மனதில் பக்தியோடு 

பயமும் உதித்தது.


பூமித் தாய்க்கு 

வேதனையையும்,

புவிவாழ் உயிர்களுக்கு 

சோதனையையும்,

மேலும் தரவிரும்பாத 

அன்னை தன்,

மேக குழந்தைகளை 

அதட்டி, அடக்கி,

துள்ளித் திரிந்த

மழை கற்றைகளை

தூறலாக போகும்படிச் செய்தாள்.


துளிகள் விழுந்த வேகத்தில்,

துள்ளி கண் திறந்தான் 

அந்த விவசாயி,


சுற்றிலும் பார்வையை 

சுழற்றி ஓட விட்டான்,

சுடும் நெருப்பாய்

சுட்டெரித்து கொண்டிருந்தான் 

சூரியன்.

மழைக்கு மாறாக

மாதவம் செய்தபடி

மனங்களித்து

மகிழ்ந்திருந்தான்


அக்குடிலின் வாயிலில்

குத்துகாலிட்டபடி

அமர்ந்தந்த 

நிலையிலும்,

இத்தனை உறக்கமா?

நீட்டி படுத்து நிம்மதியாக உறங்கி

நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது, 


இது

பகல் பட்டினியால்,

பரிதவித்து வந்த உறக்கம்,

பஞ்சடைந்த கண்கள்

பாவப்பட்டு மூடிக் கொண்டதால் 

வந்த மயக்கம்.

அந்த நித்திரையிலும் ஒரு

அற்புத கனவு!!! ஆனந்த கனவு.!!

இந்த மழை கனவு!!! 


இந்த பகல் கனவை

பார்த்த மனக்கண்களின்

மகிழ்ச்சியில் வந்தது இந்த

நீர்த் துளிகள் ! ஆனந்த 

கண்ணீர் துளிகள் !


பார்வை பட்ட இடமெல்லாம், .

பழுதடைந்த வயல் நிலங்களும், 

பயனற்ற கலப்பைகளும், 

பரந்த அப்பகுதியையே

பாழடைந்த சோலையாக்கின

எட்டாத கனவுடன், 

ஒட்டிய வயிறுடன், 

கண்களில் பசி சுமந்த

மக்களையும், கண்ட போது

கலக்கமடைந்தது 

அவன் மனது. 


இனி, இந்நிலை தொடர்ந்தால், 

பசியினால், பரிதவிக்கும்

மாந்தர் மட்டுமில்லாது,

அணில்களும் ஆடி ஓடாது!

காகங்களும் கரையாது!

பறவைகளும் பாடாது ! ஏனைய

ஜீவராசிகளும் தன் 

ஜீவனை இழந்து விடும் !


இறைவா! 

இவைகளுக்காகவாவது இந்த

பகல் கனவை

லிக்க வைத்து விடு... 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இது எப்போதோ பதிவுலகம் வந்த துவக்கததில் எழுதி அவ்வளவாக பார்வையை பெறாதது. சிறந்த பதிவர் சகோதரர் திரு. வை. கோபலகிருஷ்ணன் அவர்கள் மட்டுமே வந்து நன்றாக உள்ளதாக நவின்று விட்டுச் சென்றார். அவருக்கு இன்றும் என் மனமார்ந்த நன்றி. 

பொதுவாக கவிதைகள் நீளமானல் யார் கருத்திலும் நிலைபெறாது எனத் தெரியும். இங்கு கவியரசர்கள் (சகோதரர், துரைசெல்வராஜ் அவர்கள், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள்) இயற்றும் அற்புதமான கவிதைகளுக்கு முன் இதை கவிதை  எனச் சொல்லவும் நாணுகிறேன்.  இருப்பினும் எனக்குத் தெரிந்த வரிகளை மடக்கிப் போட்டு எப்போதோ ஈந்த இந்தக் ...... யை இப்போது ஒரளவிற்காகவாவது ரசிப்பீர்கள் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் பதிவாக்கி  காத்திருக்கிறேன்.  பார்வையிடும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

30 comments:

  1. கவிதை வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள் எழுத, எழுத எழுத்துகளும் வசப்படும்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள் என்க்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நல்லதொரு கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. படக்கவிதை மிக அருமை.
    விவசாயின் பகல் கனவு நன்றாக இருக்கிறது.
    இப்போதும் மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் செய்த விவசாயி நிலை கஷ்டம் தான்.
    மழை அதிகம் பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும். விவசாயி எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு விவசாயம் பார்ப்பதால் . உணவு பஞ்சம் இல்லை.

    அவர்களை நினைத்து கவிதை எழுதியதற்கு நன்றி.
    கவிதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.

    திரு. வை. கோபலகிருஷ்ணன் அவர்கள் உங்களை போல நல்ல விரிவான பின்னூட்டங்கள் கொடுத்து பதிவர்களை ஊக்கப்படுத்தியவர். இப்போது எழுதாமல் இருப்பது வருத்தம் தான். இறைபணியில் இறங்கி விட்டதாக சொன்னார்.

    இப்போது தமிழகத்தில் நல்ல மழை போலும். இங்கும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      படக்கவிதை நன்றாக இருப்பதாக கூறியமைக்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி.

      பதிவின் விளைவால் தாங்கள் தந்த கருத்துக்கள் உண்மை. அப்போதெல்லாம் விவசாயிகள் மழை ஒன்றையே நம்பி இருந்தார்கள். அதற்கேற்றபடி மழையும் மாதம் மும்மாரி பெய்யுமென கேள்விபட்டுள்ளேன் அது அதிக லாபத்தினை என்று தராமல், அது போல் அதீத நஸ்டங்களையும் தராமல் . இயற்கை நம்மோடு ஒன்றியிருந்த ஒரு காலம்.

      சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தன் கருத்தாக கீழே சொல்லியிருப்பது போல் இயற்கையை நாம்தான் பகைத்துக் கொண்டோம்.

      திரு. வை கோபால கிருஷ்ணன் பற்றி தாங்கள் கூறியதும் உண்மை. அவர் மற்ற பதிவர்களை ஊக்கப்படுத்துவது போல செய்யும் பல நல்ல செய்கைகளை (மற்றவர்களின் கதைகளை அவர்களின் அனுமதி பேரில் எடுத்து தன் வலைத்தளத்தில் பதிவிட்டு அதற்கு பரிசளிப்பு, மேலும் தன் கதைகளுக்கு விமர்சனம் செய்யச் சொல்லி பரிசளிப்பது) அப்போதுதான் புதிதாக வலைத்தளம் வந்த நானும் படித்து உணர்ந்திருக்கிறேன். ஆனால். . அவரும் நானும் ஒன்றல்ல..! அவர் இப்போது இறைபணியில் ஈடுபட்டிருப்பதாக நீங்கள் சொன்ன தகவலும் மகிழ்ச்சியே... எத்தனைப் பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

      அங்கு இப்போது மழையா? மகிழ்ச்சி. இங்கும் இனிதான் கோடைமழை துவக்கமாகும். தமிழகத்திலும் ஆங்காங்கே நல்ல மழை என நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அதீத மழை மக்களுக்கு சிரமங்களை தருமென்றாலும், மழையின் நன்மைகளை நாம் பயன்படுத்தி கொள்வதில்லையோ எனத் தோன்றுகிறது.

      தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கவிதை நன்று.  கவிதை சொல்லும் கருத்து அதனினும் நன்று.  கடைசியில் அத்தனையும் கனவுதான்- பகல் கனவுதான் - என்று அறியும் போது நம் கண்களிலும் கண்ணீர்த்துளி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவு( கவிதை) நன்றாக உள்ளதென கூறியமைக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றி.
      நாம் காணுபவைகளில் பல இது போல் பகல் கனவாகிப் போவது நிஜந்தானே..! எல்லாமே விதியின் வலிமை நமக்கு சாதகமாக இருந்தால், நல்ல கனவுகள் பலிக்கும் தன்மையை பெற்று விடும். தங்களின் அன்பான நல்லதொரு கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மழை பெய்யாததற்கு மனிதனே காரணம். வனமழித்து மணல்திருடி விஞ்ஞானப் பொருட்களால் இயற்கையைக் கற்பழித்து பணம் மட்டுமே பிரதானம் என்று என்னும் முட்டாள் சுயநல மனிதனால் மழை பொழியவில்லை.  பொழிந்த கொஞ்சம் மழையும் தேங்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உண்மை.. அழகாக சொல்லியுள்ளீர்கள். இயற்கை அழிவிற்கு நாம்தான் காரணம். அப்படியே அது இரக்கப்பட்டு தரும் மழையையும் நாம் பாதுகாப்பாய் சேமிக்கவில்லை. தங்கள் உண்மையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. வெய்யிலைக் கூட நிழலில் அமர்ந்து சமாளிக்கலாம்.  மழையாமி வந்தால் மக்கள் படாத பாடுபடுவர்.  அளவிறந்து வராமல் வளமோடு வாழ அவ்வப்போது அளவோடு வா மழையே என்று கெஞ்சத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல, பெரும் மழையை நான் எப்போதும் வரவேற்கிறேன். ஒருவேளை நான்காவது மாடியிலிருந்து, பெரிய பால்கனியிலிருந்து (சாளரம்?) பத்திரமாக ரசிக்கமுடியும் என்பதாலா? அதே மழை, ரோட,டோர வியாபாரிகள், திறந்தவெளிக் கடைகளுக்குத் துன்பமாகத்தான் இருக்கும்.

      Delete
    2. இன்று இதை எழுதிய நேரம்....பொ.செ.2 படம் பார்த்துவிட்டுத் திரும்பும்போது நல்ல மழை. இதை எழுதும்போதும் தூரல் வானம் மந்தாரமாக இருக்கிறது

      Delete
    3. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      வெய்யில் ஒரு அழகென்றால், மழை வேறொரு அழகு.

      /அளவிறந்து வராமல் வளமோடு வாழ அவ்வப்போது அளவோடு வா மழையே என்று கெஞ்சத் தோன்றுகிறது./

      அளவாக பெய்யும் மழை நன்றாக இருக்கும். அளவுக்கு அதிகமானால் எதுவுமே சுவாரஸ்யம் குறைவாகத்தானே தோன்றி விடும். ஆனால், நாம் அதிக வெய்யில் தகிக்கும் போது மழையை விரும்புகிறோம் . மழைக்காலத்தில், அடிக்கடி மழை பெய்யும் போது, எப்படாப்பா இந்த வெய்யிலை பார்க்கப் போகிறோம் என புலம்ப ஆரம்பித்து விடுவோம். ஆக இரண்டுமே அளவோடு இருந்தால் நம் மனதிற்கும், உடலுக்கும் நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு நீங்கள் கூறியபடி இயற்கையை நேசிக்க வேண்டும். அந்தப் பக்குவத்தையும் நாம் தொலைத்து விட்டோமே..! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      /நல்ல, பெரும் மழையை நான் எப்போதும் வரவேற்கிறேன். ஒருவேளை நான்காவது மாடியிலிருந்து, பெரிய பால்கனியிலிருந்து (சாளரம்?) பத்திரமாக ரசிக்கமுடியும் என்பதாலா?/

      ஹா ஹா ஹா. எதுவுமே நம்மை பாதிக்காத வரை எதையுமே ஒவ்வொரு கோணத்தோடு ரசிக்க முடியும். எனக்கும் ஹோவென்ற பெரும் மழையும், காற்றுடன் அதன் சத்தமும் இனிமையாக தோன்றும். அந்த நேரத்தில் யார்யார் வெளியில் இந்த பெரும் மழையில் மாட்டிக் கொண்டு அவதிப் படுகிறார்களோ என நினைக்கும் போது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும். வெளியில் சென்ற நம் வீட்டார்கள் என்றால், மனம் அவர்கள் நல்லபடியாக வந்து சேர வேண்டுமேயென கவலைகள் கொள்ளும். நீங்கள் சொல்வது போல், சிறு கடை வியாபாரிகள் மக்கள் என எல்லோருக்கும் இந்த எதிர்பாராத பெரும் மழை அவதிதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆஹா.. பொ. செ. 2ஆவது பார்த்து விட்டீர்களா? அருகில் உள்ள மாலில் உள்ள தியேட்டரிலா ? படம் எப்படி உள்ளது? சீக்கிரமே விமர்சனம் எ. பியில் என்றாவது ஒர் நாளில் எழுதி விடுங்கள்.

      /படம் பார்த்துவிட்டுத் திரும்பும்போது நல்ல மழை. இதை எழுதும்போதும் தூரல் வானம் மந்தாரமாக இருக்கிறது.

      நல்லது. ஆமாம் இங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் நல்ல மழை.. ஆனால், வெய்யிலின் வெப்பத்தை கிளறி விட்டு பெய்தது. மாலையில், இரவில் கொஞ்சம் வெப்பம் தணிந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.
      மீள் வருகை தந்து கருத்தை தந்ததற்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. துரை செல்வராஜூ அண்ணா  கவிகள் புனைவதில் மிக வல்லவர்.  நினைத்த நேரத்தில் அவரால் எழுத முடிகிறது.  நானெல்லாம் மனவரிகளை மடக்கிப்போட்டு கவிதை என்று கூறி பம்மாத்து செய்யும் தற்காலிகன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /துரை செல்வராஜூ அண்ணா கவிகள் புனைவதில் மிக வல்லவர். நினைத்த நேரத்தில் அவரால் எழுத முடிகிறது/

      ஆம்..உண்மைதான்.. அவர் நினைத்த நேரத்தில் கவி மழை பொழிய முடிகிறது. அவர் இறைவனுக்கு அனேக பாமாலைகளை அப்படித்தான் தொகுத்து சூட்டியுள்ளார். கவிதைகள் இயல்பாகவே தங்கு தடையின்றி அவருக்குள் உதிப்பது அவருக்கு இறைவனால் கிடைத்திருக்கும் ஒரு வரம்.

      தாங்களும் கவிதை புனைவதில் வல்லவர். உங்களளின் சுருக்கமான கருத்துக்கள் நிறைந்த கவிதைகளையும் நான் நிறைய ரசித்திருக்கிறேன். அதனால்தான் எனக்குத் தெரிந்த வரையில் உங்கள் இருவரையும் குறிப்பிட்டேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கவிதை நன்று.

    அவனவன் பெங்களூர் வெக்கையில் கஷ்டப்படும்போது, மழைக் கவிதை எங்க வந்ததுன்னு யோசித்தேன். கடைசியில் பகல் கனவு என எழுதிவிட்டீர்கள்.

    இன்னம் நான்கு வாரங்களில் மரை வரும். அதற்கான முன்னோட்டமாக இந்தக் கவிதை இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கவிதை நன்று. /

      தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

      ஆமாம்.. இங்கு வெக்கை உயிர் போகிறது. மழை வந்தால் நன்றாக இருக்கும். .வரவர வெய்யிலும் கஸ்டமாக உள்ளது. அதிலும் இங்கு பெங்களூரில். இங்கு நாங்கள் வந்த புதிதில் இவ்வளவு வெய்யில் தெரியவில்லை. ஒருவேளை நல்ல வெய்யிலில் ஆண்டு முழுவதும் இருந்து வந்ததினாலோ என்னவோ..!! இப்போது இங்கும் வெய்யில் தெரிகிறது.
      .
      /இன்னம் நான்கு வாரங்களில் மரை வரும். அதற்கான முன்னோட்டமாக இந்தக் கவிதை இருக்கட்டும்./

      வரட்டும். நல்ல மழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. திருச்சி வை கோபாலகிருஷ்ணன் சார், நல்ல இரசிகர். தானும் பின்னூட்டங்கள் போட்டு, மற்றவர்களுடையதற்கும் நெடும் பதில் போடுவார்.

    ந்த்தை கூட்டுக்குள் அடங்கிவிட்டது. என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /திருச்சி வை கோபாலகிருஷ்ணன் சார், நல்ல இரசிகர். தானும் பின்னூட்டங்கள் போட்டு, மற்றவர்களுடையதற்கும் நெடும் பதில் போடுவார்./

      ஆமாம். மற்ற பதிவர்களையும் ஊக்கப்படுத்துவதில் வல்லவர். நகைச்சுவையாகவும் பதிவுகள் எழுதுவார். மீண்டும் பதிவுலகம் வந்தால் நன்றாயிருக்கும். வரவேண்டுமென நாமும் பிரார்த்திப்போம். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் இன்றும் விவசாயத்தை மேற்கொள்ளும் வேளாண் பெருமக்களுக்கு முன்னர் நாமெல்லாம் சாதாரணம்!.

    எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு விவசாயம் பார்ப்பதால் இன்றைக்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை நம் நாட்டில்..

    இருந்தாலும் தமிழகத்தில் அதுவும் தஞ்சை மாவட்டத்தில் சில வருடங்களாகவே ஆதி வேளாண்மைக்குள் நாடு விட்டு நாடாக
    வடவர்கள், வங்க தேஷிகள்
    வந்து நுழைந்திருக்கின்றனர்.

    உள்ளூர் மக்கள் தொண்ணூறு சதவீதம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேறி விட்டனர்..

    ஏன்.. எதற்கு.. யாரால்.. என்பதெல்லாம் அரசியல்..

    பதிவு நன்றாக இருக்கின்றது..
    வாழ்க வளம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      விவசாயம் குறித்த தங்களது கருத்துக்கு நன்றி.

      /எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு விவசாயம் பார்ப்பதால் இன்றைக்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை நம் நாட்டில்../

      உண்மை. அவர்கள்தான் இந் நாட்டின் முதுகெலும்பை போன்றவர்கள். அவர்களால்தான் நாம் வாழும் வாழ்வில் நம் ஜீவாதாரத்திற்கு தேவையான உணவை நாம் உண்ண முடிகிறது.

      பதிவு நன்றாக உள்ளதென்ற தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. சந்தடி சாக்கில் என்னை கவியரசர் என்றெல்லாம் சொல்லியிருக்கின்றீர்கள்.. அது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை..

    ஒரு சில பதிவுகளைப் பார்க்கும் போது அந்தப் பதிவின் தாக்கமாக நானும் எழுதுகின்றேன்..

    மற்றபடி நான்
    சாதாரணமானவன்..

    பேர் தரும் நூல் ஒன்றும்
    கல்லாதவன் உயர்ந்த
    பேறு பெரும் இடத்தில்
    இல்லாதவன் தேறும்
    சபையறிந்து செல்லாதவன்
    அங்கு தேர்ந்த பொருள்
    எடுத்துச் சொல்லாதவன்..
    - கவியரசர் கண்ணதாசன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /சந்தடி சாக்கில் என்னை கவியரசர் என்றெல்லாம் சொல்லியிருக்கின்றீர்கள்.. அது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை../

      நான் அறிந்த வகையில்தான் அவ்வாறு கூறினேன். உங்கள் கவிதை திறனை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். கவிதை ஊற்று தன்னிச்சையாக உருவாகும்
      விஷயத்தில் நீங்கள் இறையருள் பெற்றவர் . இல்லையென மறுப்பது தங்களின் தன்னடக்கத்தை காட்டுகிறது.

      கவிஞர் கண்ணதாசனின் கவிதையும் அருமை. அவர் பாணி தனி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஒரு திறமை உண்டல்லவா? அந்த வகையில் நீங்களும் ஒரு கவியரசர்தான். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  11. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /ஆகா... அருமை.../

      உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள்தாம் அன்றிலிருந்து இன்றுவரை நான் எழுதி வருவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கமலாக்கா மழைக்கவிதை அருமை...ஆனால் பகல் கனவாகிவிட்டதே பகல் கனவு கூட பலிக்குமாமே அப்படி பலித்திடட்டும்.

    உங்கள் கற்பனை அபாரம் கமலாக்கா.. வேலைப் பளு சின்ன கமென்ட் போட்டு ஓடுகிறேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /பகல் கனவு கூட பலிக்குமாமே அப்படி பலித்திடட்டும். /

      ஆம். பலிக்கட்டும். நாடு உணவு பஞ்சமின்றி தழைத்தோங்கட்டும். தங்கள் வாக்கும் பலிக்கட்டும்.

      உங்களின் தற்போதைய வேலை பளு நானறிவேன். இத்தனை கடுமையான வேலைகளின் நடுவிலும் நீங்கள் வந்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் சகோதரி. கவிதை நன்றாக உள்ளதென கூறியமைக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் கூட. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  13. நல்ல கவிதை.பகல்கனவு பலிக்குமா ? விவசாயிகள் வாழ்வு நிலைக்குமா?

    இயற்கை வளம் செழிக்க வேண்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்து தந்தமை கண்டு மனம் மகிழ்ந்தேன். என் தாமதமான பதில் கருத்துக்கு மன்னிக்கவும். எல்லா பதிவுக்கும் தங்களின் தொடர்ந்த ஊக்கமிக்க கருத்துகளுக்கு . மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete