Pages

Wednesday, November 9, 2022

மனதினுள் கடத்தல்.

 
நம்மையும் மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டிருப்பதை உலகம் தோன்றியதிலிருந்து நாம் உணர்ந்து கொண்டுதான் வருகிறோம்.அதை  நமக்கு பிடித்தமான கடவுள்கள் பெயர் சொல்லி அழைப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை தந்து விட்டால். பதிலுக்கு உனக்கு அதை தருகிறேன்.. இதை தருகிறேன்.. என்று வியாபார நோக்கோடு பேச்சு வார்த்தையும் நடத்திக் கொள்கிறோம்.

 ஆனால், உண்மையில் நம்மிடம் எதையும் எதிர் நோக்காத தாயன்பு கொண்டவன் இறைவன். அவன் நம்மிடத்தில் விருப்படுவனவெல்லாம் ஆழமான பக்தி, அசையாத நம்பிக்கை அவ்வளவுதான்.!
மாதா, பிதா, குரு,.தெய்வம்  என்று நாம் வரிசை படுத்துவதில், எல்லாவற்றிலும் அவனே முதன்மையானவனாக ஆகிறான். 

===============================================================================  "தாயினும் சாலப் பரிந்து" என்றவிடத்தில் அவன் தாயினும் மேலாகிறான். 

"அன்னையாகி. தந்தையாகி," என்று சொல்லும் போது அன்னையுடன், தந்தையும் அவனேயாகி நம்மை காக்கும் அனைத்துப் பொறுப்பையும் சுமக்கிறான். 

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்," என்னுமிடத்திலும்  இறைவன் தன்னிருப்பிடத்தை மெய்ப்பிக்கிறான். 
  
"இறுதியில் தெய்வமாக" நின்று  நமக்கு வேண்டியதை நம் பாப புண்ணிய கணக்கோடு நமக்கு பகிர்ந்தளிக்கிறான்
================================================================================ இப்படி நான்கு நிலைகளிலும் நம்முடன் உறவாடுபவனிடம், வியாபார யுக்தியோடு, நாம் செயல்படுவது சரியா? இறைவனை கண் முன் கண்ட பல மஹான்கள் பக்தி மலர் கொண்டு மட்டுமே பூஜித்தார்கள். அந்தந்த பிறவிகளில் அவர்கள் அவ்வாறிருக்க, அதற்கு முந்தைய  பிறவிகளில் எத்தனை நல்ல சத்சங்க பலன்களுடன் தவமியற்றினார்களோ? 

சமய குரவர் நால்வரும், ஆழ்வார்கள் பன்னிருவரும், அறுபத்து மூன்று  நாயன்மார்களும், இன்னமும் அத்தனை மஹான்களும், ஆன்மிகம் கண்ட பல பெரியவர்களும், ஆண்டவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், பக்தி மட்டும் கொடுத்து பதிலுக்கு  எதையும் வேண்டா நிலையில் அடி பணிந்தார்கள். இவர்களை படித்தாவது இனி வரும் பிறவிகளில் கரை சேரும் எண்ணஙகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றால்,  அது ஒரு துளியேனும் சாத்தியபடுவதற்கு  ஒரு பொழுதேனும் சம்மதிக்க மறுக்கிறது.  

காரணம்... நம் மனம். 

 நம் மனதில் பரிபூரணமாக குடி கொண்டிருக்கும்  கடவுள் நம் அன்பு கடத்தலில் "உள்கட"ந்து பயணித்து நம்மை பூரணமாக அரவணைத்துக் கொள்வார். . ஆனால்  அவர் கடக்கும் பாதையை செப்பனிடாமல்  சேறும் சகதியுமாக (ஆசா பாசங்கள்) கற்களும், முட்களுமாக (சுயநலம், குரோதங்கள்) வைத்திருக்கிறோமே என எண்ணுகிறேன். இவைகளை சுத்தம் செய்து விட நேரத்தை எதிர் நோக்கும் போது,  மேலும் மேலும், ஆசாபாசங்களை கொண்டு குழைத்தெடுத்த சேறும், சகதியுமாக ஆகிறது மனம்...!! இதையும் இந்தப் பிறவியில்  இறைவன்தானே இவ்வாறு அருளுகிறார் என நினைக்கும் போது, இந்தப் பிறவியிலும்  நல்வழிபடுத்த "அவன்"ஆயுத்தம் ஆகவில்லை என்ற அப்பட்டமான உண்மையும் புலப்படுகிறது. 

மஹான்களில் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ ராகவேந்திரர்  பற்றை தொலைத்து இறைவனிடம அன்பை மட்டுமே கொடுத்து பதிலுக்கு எதையும் எதிர்நோக்காத  உள்ளத்துடன் அவனுடன் ஐக்கியமானார்.  ராக வேந்திரர் திரைப்படத்தில் வரும் "அழைக்கிறான் மாதவன்" என்ற இந்த பாடல், மனம் கசிந்துருகி கண்ணீரோடு அடிக்கடி கேட்பேன். இந்தப் பாடல் இடம் பெற்ற இப்படத்தில் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்த நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், அவரால் இயன்ற வரை ஸ்ரீ ராகவேந்திரரை நம் கண் முன் கொண்டு வந்து தந்துள்ளார். பாடகர் திரு. யேசுதாஸ் அவர்களின் குரலினிமை, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும், உள்ளத்தை கரைந்துப் போகும்படி செய்கிறது. 



இந்த பாடலில்  வருவது போல் "அவன் அழைக்கின்றான் "என்பதை உணரும் சந்தர்ப்பம்  உண்டாவது எந்த பிறவியிலோ? 
அழைத்தால் வருகிற இயல்புடையவன் ஆண்டவன்.  ஆனால்  வரவேற்று அணைத்துக்கொள்ளும் பக்குவம் வராத போது, அவன் அழைப்பிற்கான நேரத்தையாவது  எதிர் நோக்கி கொண்டிருக்கும் அந்த சமயம் , வாய்ப்பதாவது எப்போதோ

ராகவேந்திரர் இறையோடு ஐக்கியமாகி அருளுகின்ற "மந்திராலயம்" செல்லும் வாய்ப்பு  ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுமின்றி தீடீரென எங்களுக்கு கிடைத்தது எங்களது பெரும் பாக்கியமே! அதை என் வாழ்வில்  என்றுமே மறக்கவே இயலாது. 


படங்கள் நன்றி கூகுள். 

"
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே". 🙏. 

பின்வரும் கதையை படிக்க நேர்ந்தது எனக்கு இந்த நினைவுகளை மீட்டு இந்த பதிவை உருவாக்க வைத்தது. எனது பதிவையும், நான் படித்த இந்தக் கதையையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 


கடவுளுக்கு பலி.
"""""""""""""""""""""''""""""""'
குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தன. அவ்வப்போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான்  ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த குரு, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

"எதற்காக? என்று கேட்டார் குரு."

"பண்டிகை வரப்போகிறதே!  இறைவனுக்கு  பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன்.

"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

இதைக் கேட்ட குரு எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

"என்ன இது?" என்றான் குயவன் கோபமாக.

"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ". குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு?  அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

அவன் படைத்த 'உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய்"... இப்படி நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்....

நான் படித்ததில் பிடித்த இக்கதையில் வருவது போல் இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய ஆசைதான் வேண்டுதலாக மாறி, சமயத்தில் பிறரையும், எப்போதும் நம்மையுமே கஸ்டபடுத்துவதாகவே அமைகிறது.

 குருவருள் அனைவருக்கும்  துணையாக  இருக்க இன்றைய வியாழனில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. 

30 comments:

  1. குரு வாரத்துக்கேற்ற பதிவு.    அந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும்.  ரஜினியும் ராகவேந்திரராகவே வாழ்ந்திருப்பார் படத்தில்.  

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும், ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். அந்தப்பாடலை விரும்பாதவர் யார்? ரஜனிகாந்த் அவர்களும் கதையோடு ஒன்றி சற்றும் தன் இயல்பான ஸ்டைலின்றி அமைதியாக நடித்திருப்பார். அவரது வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று. இரண்டாவதாக அவரும் ஸ்ரீ ராகவேந்திரரரின் மேல் பற்று கொண்ட பக்திமான். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நேற்று எங்கள் வீட்டில் உண்டான சில வேலைகளினால் இந்தப்பதிவுக்கு என் பதில் கருத்து தர தாமதமாகி விட்டது. அனைவரும் மன்னித்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மிகவும் தத்துவ மயமான பதிவு.  எதைக் கண்டு இந்தப் பதிவு பிறந்தது என்று யோசனை வருகிறது.  பக்தி மலர்கள் போதும் பூஜிக்க என்கிற வார்த்தை உண்மை உண்மை என்று மனதில் படிகிறது.  சொல்லப்பட்டிருக்கும் சிறுகதையும் அருமை, அதைத்தான் வலியுறுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.
      மனம் வேதனையுறும் சமயங்களில் தத்துவங்கள் உருவாவது மனித மனத்தின் பொதுவான இயல்புதானே.. ஆனால், இந்த துன்பம். இன்பம் என்றில்லாமல் எப்போதும் மனம் இறையில் ஒன்றித் திளைக்கும் நாளைத்தாம் நாம் அனைவருமே விரும்பி எதிர்பார்க்கிறோம் . அதை இறைவன் நடத்திக் கொடுத்தால் சரி...அது ஒன்றுதான் என் வேண்டுதலும்.

      சிறுகதையையும் ரசித்துப்படித்ததற்கு நன்றி. ஆம்...! இந்த கதையின் கருத்தும் அதைத்தான் சொல்கிறது. தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சேறும் சகதியுமாக இந்தப் பிறவியின் இந்த மனம் கூட அவனால் அருளப்பட்டிருப்பபதுதான் என்பதால் இந்தப் பிறவியில் கடைத்தேறல் இல்லை என்பது தெளிவாகிறது என்கிற வரிகள் எனக்குள்ளும் ஒரு கதவைத் திறக்கிறது.எப்போது முக்தி கிடைக்கும் என்பதும் அவன் கையில்தான் இருக்கிறது.  நம் மனம் பக்குவப்படவும் அவன் அருள் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ஊன்றி ரசித்துப் படித்து தந்த தங்களது கருத்துரைகளுக்கு என் மனம் மகிழ்ந்த நன்றிகள் பல.

      /எப்போது முக்தி கிடைக்கும் என்பதும் அவன் கையில்தான் இருக்கிறது. நம் மனம் பக்குவப்படவும் அவன் அருள் வேண்டும்./

      ஆம் அதையும் அவன்தான் அருள வேண்டும். அது எந்தப் பிறவியிலோ அதையும் அவன்தான் தீர்மானிப்பான். தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. // குருவருள் அனைவருக்கும் துணையாக இருக்க இன்றைய வியாழனில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்...//

    மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த கருத்துரைக்கு நானும் மிக்க மகிழ்சச்சியடைந்தேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. மிகவும் கனமான பதிவு...

    அருமை.. அற்புதம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவு நன்றாக உள்ளதென தந்த தங்களது அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அனைத்தும் இறைவன் செயல். அவனருள் இல்லாமல் எதுவும் எழுத தோன்றாது. அனைவருக்கும் குருவருள் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. // வியாபார நோக்கோடு பேச்சு //

    இந்த புரிதல் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து தந்த தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. தங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துக்கள் என்னை எப்போதும் எழுத வைக்கும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. சிறப்பான கதை அருமையான கருத்தை உள்ளடக்கியது.

    காணொளிப்பாடல் கேட்டேன் அடிக்கடி முன்பு கேட்ட பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து சிறப்பான கதை என்ற தங்கள். கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

      ஆம். இந்தப் பாடலை கேட்காதவர்கள் யார்? நீங்களும் அடிக்கடி கேட்டு ரசித்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி சகோதரரே. தங்கள் அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி. தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. மந்த்ராலயத்துக்கு 2,3 முறை சென்றிருக்கிறேன். ஸ்ரீராகவேந்திரரின் வாழ்க்கைச் சரிதமும் படிச்சிருக்கேன். இந்தப் படமும் 2, 3 முறை பார்த்துள்ளேன். பிடித்த படம். பிடித்த பாடல். தத்துவங்கள் நிறைந்த மிகக் கனமான பதிவு. நீங்கள் உணர்ந்ததை மற்றவரும் உணரும்படி எழுதி இருக்கீங்க. குயவன் கதையைப் பல சொற்பொழிவுகளிலும் கேட்டிருக்கேன். படிக்கவும் படிச்சிருக்கேன். என்றாலும் அப்படி எல்லாம் யாரும் திருந்தி விடலை என்பதும் உண்மை தானே! தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் அருமையாகவும் எளிமையாகவும் எழுதுவதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீங்களும் இரு தடவைகளுக்கு மேலாக மந்த்ராலயம் சென்றிருப்பது அறிந்து மகிழ்வுற்றேன். முன்பே இதை நீங்கள் பதிவுகளில் சொல்லியிருப்பதும் அறிவேன். இறைவனுக்கு மனமிருந்தால்தான் நமக்கும் இந்த மாதிரி கோவில்களுக்குச் சென்று தரிசிக்க இயலும். அதையும் அவனருளின்றி பெற இயலாது. அவ்வாறு நிகழும் போது மனம் மகிழ்வாக இருக்கும். அருமையான பாடலையும், அந்தப்படத்தையும் நீங்கள் அடிக்கடி கேட்டு, பார்த்திருப்பதற்கும் மகிழ்ச்சி.

      /நீங்கள் உணர்ந்ததை மற்றவரும் உணரும்படி எழுதி இருக்கீங்க. /

      நான் எங்கே உணர்ந்திருக்கிறேன்.? இறை அருகாமையை உணர முடியாதபடிக்கு இந்த பந்த பாசங்கள் கட்டிப் போடுகின்றனவே..! அதன்படி வந்த புலம்பல்தான் இந்தப்பதிவும். ஆனால் அதையும் ரசித்து தாங்கள் பாராட்டியிருப்பது மிக்க மன மகிழ்வை தருகிறது. தங்களைப் போன்றவர்களின் ஊக்கமிக்க வார்த்தைகள் எனக்கு ஏதோ எழுதும் ஆற்றலை தருகிறது. மிக்க நன்றி சகோதரி.

      நேற்று தவிர்க்க முடியாத வேலைகள் சில அதிகமாக வந்து விட்டன. அதனால் தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும். அனைவருமே பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அருமையான பதிவு.
    பாடலும் அருமை.
    எல்லாவற்றையும் படைத்து , காத்து வருபவனுக்கு நாம் அதை தருகிறோம், இதை செய் என்று கேட்பது மடமைதான்.
    ஆனால் எல்லாம் கொடுத்த இறைவனுக்கு நன்றியாக நாம் அன்பை, மலர்களை, பிரசாதங்களை படைத்து மகிழ்கிறோம்.

    கதையும் பதிவு பிறந்த விவரமும் அருமை.

    அப்பர் தேவாரத்தில் சொல்வது போல
    வேண்டத்தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
    வேண்டும் அயன்மாற்கு அறியோன் நீ
    வேண்டி என்னைப் பணி கொண்டாய்
    வேண்டி நீ யாது அருள் செய்தாயானும்
    அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
    அதுவும் விருப்பன்றே!

    அவருக்கு தெரியும் யாருக்கு எப்போது எதை கொடுக்க வேண்டும் என்று. அவர் கொடுத்தற்கு நன்றி சொல்லி
    நாளும் நம்பி பணிவோம். மற்றவை அவர் விருப்பபடி நடக்கட்டும்.

    தாயுமானவர் சொல்வது போல பரம்பொருளுக்கு நாம் உடமையாக ஆகி விடுவோம். அவர் நம்மை காப்பார்.
    நேரம் வரும் போது அவர் பக்கத்தில் அழைத்து கொள்வார்.

    //நம்மிடம் எதையும் எதிர் நோக்காத தாயன்பு கொண்டவன் இறைவன். அவன் நம்மிடத்தில் விருப்படுவனவெல்லாம் ஆழமான பக்தி, அசையாத நம்பிக்கை அவ்வளவுதான்.!//

    ஆமாம், பக்தியும் நம்பிக்கையும் கொள்வோம்.
    தெய்வத்திடம் நம்மை ஒப்படைத்து விடுவோம். அவன் பார்த்துக் கொள்வான்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவையும், அதற்கென பதிந்த பாடலையும், படித்த கதையாக பகிர்ந்ததையும் ரசித்துப் படித்து பாராட்டி யிருப்பதற்கு உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      அப்பர் சுவாமி பாடிய தேவாரப்பாடலையும் இங்கு குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி. உண்மைதான்...!! இறையருள் பெற்றவர்கள் நமக்காக இப்படி நல்ல வார்த்தைகள் சொல்லி பாடலாகத் தருகிறார்கள். அதை அனைத்தையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

      நாமும் அவ்வாறே அனைத்தையும் அந்த இறைவனின் பொறுப்பில் விட்டு விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். ஆனால் இந்த சலனம் மிகுந்த வாழ்வில், சற்று மனவுளைசல் அடிக்கடி ஏற்பட்டு விடுகிறது. அதையும், அந்த எண்ணங்களையும் தருபவன் இறைவனே என எண்ணி மனதை சமாதானப்படுத்திக் கொண்டு உலா வருகிறோம்.

      /தெய்வத்திடம் நம்மை ஒப்படைத்து விடுவோம். அவன் பார்த்துக் கொள்வான்./

      ஆம். அப்படி முழுமையாக அவனிடம் நம்மை ஒப்படைக்கும் மனப்பக்குவத்தை அவன்தான் அருள வேண்டும். என பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      தாமதமாக பதில்கள் தருவதற்கு அனைவரும் மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச
    பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே". 🙏. //

    ராகவேந்தரர் தரிசனம் இன்று வியாழன் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      தாங்களும் வியாழனன்று ராகவேந்திரரை தரிசித்துக் கொண்டமைக்கு மிக்க மனம மகிழ்வடைந்தேன் சகோதரி. அவரருள் அனைவருக்கும் பூரணமாக கிடைத்திட நானும் அவரை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சிறப்பு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      பதிவை குறித்த தங்களது பாராட்டிற்கும்,, வாழ்த்தினுக்கும் என மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கதை மிகவும் அருமை.

    ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர்
    ஆக்கிய யாகத்து அவியுணவை
    ஈட்டும் கருணை இறையவர் கைகளில்
    ஏந்திப் புசிப்பரோ கூறுமையா!
    மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்
    வாளால் அரிந்து கறி சமைத்தால்
    தந்தையும் உண்டு களிப்பதுண்டோ இதைச்
    சற்று நீர் யோசித்துப் பாருமய்யா!’

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரே

      கதை அருமை என்ற பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்தப் பாடல் எதில் என்று தெரியவில்லை. பாட்டின் பொருள் அருமை. பதிவுக்குப் பொருத்தமாக இங்கு பகிர்ந்தமை கண்டு மகிழ்வடைகிறேன். . மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. எங்க ஊர் தாத்தா கவிமணி எழுதிய ஆசிய ஜோதியிலிருந்து. படித்த நினைவு.

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பதிவுக்கு வந்து தெரியாத பாடலுக்கு தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. அருமையான பாடல் கமலாக்கா....மிகவும் பிடித்த பாடல். ரசித்தேன்.

    பதிவு தத்துவமாக..... கமலாக்கா ஆன்மீகவாதி, தத்துவம் நிறைந்தவங்கன்னு தெரியும்!! ஆனா அக்கா எப்போ கமலானந்தா ஆனாங்கன்னு கொஞ்சம் நேரம் அப்படியே!!!! பார்த்துக் கொண்டிருந்தேன் ஹாஹாஹாஹாஹா சும்மா உங்களைக் கலாய்ச்சேன்....

    நானும் கடவுள்டன் வியாபாரம் பேசுவதில்லை பேசியதில்லை. எனக்கும் அந்த எண்ணம் நிறைய உண்டு....நீ எனக்கு இதைச் செய் நான் உனக்கு இதைச் செய்கிறேன் என்று பேசுவது ....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      ஹா ஹா ஹா. எப்போதுமே தத்துவவாதி எனறெல்லாம் ஒன்றுமில்லை சகோதரி. இந்த தத்துவங்கள் வரும், சமயத்தில் அம்போ என என்னை விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய் விடும். ஹா ஹா.

      ஆம்.. கடவுளிடம் பேரம் பேசுவதில் எந்த பயனுமில்லை. என்றுதான் நானும் நினைப்பேன். நம் வினைக்கேற்ய அவன் நினைப்பதை தருகிறான். நாம் மறுக்காமல் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.மகிழ்விலும் துக்கத்திலும் அவனை மறக்காத உள்ளத்தை தா என மட்டும் அவனை வேண்டிக்கொண்டே உள்ளேன். அவ்வளவுதான்..!

      தாங்கள் பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்திருப்பதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

      நான்தான் உங்களுக்கு தாமதமாக பதில் தருகிறேன். பொறுத்துக் கொள்ளவும். , நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கதை மிக அருமையான கதை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கதையை ரசித்துப் படித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் எனக்கு மேலும் பதிவுகள் எழுத பலத்தை தருகிறது. மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete