ரவா வெல்ல கேசரி புராணம்...
எனக்கு தெரிந்து எனக்கும் சரி, என்னை சார்ந்த என் இனிய சுற்றங்களுக்கும் இந்த ரவை கேசரி படலம் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவதாக தொடர்ந்தது . சென்னையிலிருந்து என் கணவர் என்னை பெண் பார்க்க வரும் போது காலை நேரம். பத்து பதினொன்று என அந்த நேரத்தில் கேசரியும், பஜ்ஜியும் அத்தனை பேருக்கும் முன்னால் அமர்க்களமாக அணிவகுத்து நின்றன. இத்தனைக்கும் காலை சீக்கிரமாகவே எழுந்து காலை டிபனை (வழக்கப்படி இட்லிதான்) முடித்து விட்டு வீட்டிலிருந்த நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். அவர்களும் (அவர்கள் அக்கா வீட்டிலிருந்து) காலை டிபனை முடித்து விட்டு வந்திருந்தார்கள். பெண் பார்க்கும் வைபவங்கள் முடிந்த பின் பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், உடனே மாலை நிச்சயதார்த்தம் என முடிவானது. ஏனென்றால் அப்போது சென்னையிலிருந்து அடிக்கடி வந்து போவது கொஞ்சம் கடினம். அவர் அலுவலகத்தில் அடிக்கடி விடுமுறையும் எடுக்க இயலாது என்பதினால், பெரியவர்கள் கலந்தாலோசித்து இந்த அவசர முடிவு.
அன்றைய மாலைக்குள் எங்கள் அம்மா (அப்போதெல்லாம் யாரையும் உடனடியாக சமையலுக்கு அழைக்கும் வசதி கிடையாது) வடை பாயாசத்துடன் இனிப்பு வகைகளையும் செய்து சமையலையும் (அதுவும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலைகளில் ) தடபுடலாக முடித்து நிச்சயதார்த்தத்திற்கு மனையிலும் அப்பாவுடன் வந்தமர்ந்தார். அதற்குள் வாத்தியார் ஏற்பாடு, பிற வேலைகள் என அப்பாவும், அண்ணாவும் மன்னியும் பயங்கர பிஸி. வீட்டிலேயே நடைபெற்ற அந்த அவசர விழாவுக்கு அக்கம் பக்கம் உறவினர்கள், தெரிந்தவரகள் என நிறைய பேர்களை விழாவில் கலந்து கொள்ளவும் , சாப்பிடவும், அழைத்திருந்தோம் .மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் பத்து பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். மனையில் வைக்க சீர் பட்சணங்களும் (அதை முதல்நாளே நிச்சயதார்த்திற்கென அம்மா, பாட்டி செய்து வைத்து விட்டார்கள். "என்னம்மா இது இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.) தயார் நிலையில் இருந்தன.
இத்தனை பேருக்கும் சமையல், வீட்டிலுள்ள எங்களுக்கு காலை டிபன், பின் இடையில் வந்தவர்களுக்கும் இனிப்பு காரத்துடன் டிபனும் (இட்லிகளும்) என பரபரப்புடன் அவர்கள் (எங்கள் அம்மாவும், பாட்டியும். ) விடாமல் செய்ததை என்னால் இன்னமும் மறக்க இயலாது. இப்போது உள்ளவர்களால் இப்படி தனியாக அத்தனையும் செய்யவே இயலாது. நல்லவேளை...! என் முதல் பெண் பார்க்கும் படலத்துடன் அத்தனையும் சுபமாக முடிந்தது. மேலும் நிறைய தடவைகள் இந்த பஜ்ஜி கேசரி சிரமங்களை என் பெற்றோருக்கு நான் தர வைக்கவில்லை அந்த இறைவன்.
திருமணமாகி எங்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்திற்கு பின் என் புகுந்த வீட்டின் ஒரு சுற்றத்திற்காக ஒரு இடத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கு சென்றிருந்தோம். பெண் வீட்டுக்காரர்கள் ஏற்கனவே எனக்கு மிகவும் அறிமுகமானவர்கள். (அக்கம்பக்கமாக ஒரு இடத்தில் முன்பு ஒரு சமயம் நாங்கள் குடியிருந்ததில் ஏற்பட்ட நெருங்கிய நட்பு) நாங்கள் உறவு என கூட்டமாக அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போனதோ கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர். அத்தனை பேருக்கும் அவர்கள் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜிகள், நெய் சொட்ட கேசரி என அமர வைத்து போதும் போதுமென தடுத்தும் அன்போடு விடாப்பிடியாக பறிமாறினார்கள். பிறகு நல்ல பெரிய டம்ளர்களில் காஃபி. மயங்கி கீழே விழாத குறையாக சாப்பிட்ட (சாப்பிட வைத்தார்கள்) பிறகு பெண் பார்க்கும் படலம் முடிந்தது.
அந்தப் பெண்ணை நான் ஏற்கனவே பல தடவைகள் பார்த்து பேசியுள்ளேன். ஆனால், மாப்பிள்ளை உறவுகள் அப்போதுதான் பார்க்கிறார்கள். இறுதியில் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேண்டாமென மாப்பிள்ளை பையன் சொன்னதும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. (அடாடா.. அவர்கள் வீட்டில் அன்று தின்றதிற்காகவாவது ஒத்துக்கொள்ள கூடாதா? என்று என் மனதிற்குள் அந்தப்பையனிடம் பல முறை கேட்டு கேட்டு அலுத்து விட்டேன்.) என்னசெய்வது? "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற மாதிரி பிறக்கும் போதே இதையெல்லாம் முடிப் போட்டல்லவா இறைவன் அனுப்பி வைக்கிறான்.
பெண் வீட்டுகாரர்களுடன் அநநிகழ்வுக்குப் பின்னும் நான் பேசி பழகினேன். எனக்குத்தான் சங்கடமாக இருக்கிறதென்று வருத்தமாக அவர்களிடம் சொல்லும் போதெல்லாம் அவர்கள்தான்" "இது எல்லாம் உலகில் சகஜந்தான்" என என்னை சமாதானபடுத்துவார்கள். அவர்களின் நல்ல மனதை எண்ணி நானும் அவர்களுடன் எப்போது பேசும் போதும் வியந்திருக்கிறேன். இன்று அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி நலமாக, வளமாகத்தான் இருக்கிறார்கள். இதைதான் "இறைவன் செயல்" என்கிறோம்.
அட......! இன்னமும் இவர் தலைப்புக்கு வரவில்லையே...! என நீங்கள் எண்ணலாம். நான் இப்போது ஒரு தினம் இதைச் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு செய்தேன். கடவுளுக்கும் நேவேத்தியமும் செய்யலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாத என்னைப் போன்றவர்களும் இது மாதிரி செய்தால் கொஞ்சம் (கொஞ்சந்தான்) சாப்பிடலாம் என்ற நினைப்பில் வெல்லம் சேர்த்து செய்தேன்.
இதைப் பகிர நினைக்கும் போது, இந்த கேசரி சம்பந்தபட்ட நிறைய புகைப்படங்களை நான் எடுக்கவே இல்லையே என்ற நினைவு வந்தது. அதனால், என் மனதின் எண்ணங்களும் ரவையோடு சேர்ந்த வெல்லமாய் உடன் கலந்து பதிவாக வந்து விட்டது. ரவையின் அளவுடன் கண்ணளவாக வெல்லம் கரைத்து வடிகட்டி சேர்த்து கிளறும் போது நெய்யும் சேர்த்து நன்றாக வந்த இந்த வெல்ல கேசரியை நீங்களும் கொஞ்சம் எடுத்து சுவைக்கலாமே.. மேலும் மு. ப. , ஏலப்பொடி போட்டவைகளை படங்கள் எடுக்கவேயில்லை.அதறகாக என்னை மன்னிக்கவும். ஆனாலும் சுவையாக வந்த கேசரிக்காக நீங்கள் அனைவரும் இந்தப் பதிவையும் படிப்பீர்கள் என அன்புடன் நம்புகிறேன். உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.
வெல்ல கேசரியையும், என் சுவையான அனுபவ எண்ணங்களையும் முறையே பார்த்து படித்து ரசித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான நன்றி... 🙏.. .