Pages

Friday, September 2, 2022

பிணக்கும் பிரிவும்.

வணக்கம் என் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.

ஒரு வார காலத்திற்கும் மேலாக எங்களுக்குள் இருந்த அதிகப்படியான பிணக்குகள் காரணமாக  ஒருவர் மீது ஒருவருடன் அதிகபட்ச வெறுப்புக்கள் தோன்றியது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலைதான். இருப்பினும்  இணைந்து விட்ட ஏதோ ஒரு அன்பின் ஈர்ப்புடன்  எங்கள் வாழ்க்கை இதுநாள் வரை ஓடிக் கொண்டிருந்தது.  

நாங்கள் அன்பாக இணைந்து பல வருடங்களுக்கு மேலாகவே ஆகி விட்ட இந்த நிலையில் "இப்போது இது தேவைதானா" என்ற வருத்தம் இருவருக்குமே ஒரு புறம் மனதை அலைக்கழிப்பதாக எனக்குள் தோன்றியது.

சரி...சரி....விடு அம்மா."காலுக்கு உதவாததை" என்ற பழமொழியை என் குழந்தைகள் வலியுறுத்தவே ஆரம்பித்து விட்டனர். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. "கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று சொல்லும் போதே மனசு வலித்தது. என்னதான் அவ்வப்போது பிரச்சனைகள் பெரியதாகிப் போனாலும்  ஒரு அநாவசியமான பிரிவை தாங்கவே என் மனதில் தைரியம் இல்லை‌.

போன வாரம்... "அம்மா.. விரைவில் உனக்கு ஒரு.... ..."என்று இளைய மகன் ஆரம்பித்ததும், நான் பதறியபடி எவ்வளவோ தடுத்தும் அது நடந்து விட்டது. எனக்குத்தான் மனம் தாங்காமல் ஒரு மாதிரி தளர்ந்து போனது.

எந்தவொரு பிரச்சனைகளின் இறுதி வடிவம் பிரிவுதானா? வேறு சமரச மார்க்கமே இல்லையா? இப்படி எடுத்தற்கெல்லாம் சட்டென்று முடிவெடுக்கும் பிரிவென்றால அந்த காலத்தில் எந்தவொரு தடுமாற்றமுமின்றி அனைத்து மக்களும் நலமுடன் வாழவில்லையா? என் மனதில் எழுந்த ஏகப்பட்ட கேள்விகளால் புது உறவு பூக்க சற்று தாமதமானது. ஆயினும் என் குழந்தைகளின் மனதில் பாசத்தோடு வளர்ந்த செடி இலைகளின் அன்பான ஆதரவோடு மொட்டு விட்ட பூ மலர்ந்து விட்டது.

அட...... பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் குழம்பி தவிப்பதற்குள் புதிரை விடுவித்து விடுகிறேன்.

இது என் புது கைப்பேசி வந்த வரலாறு.

பிரிவுக்கு ஒரு மனதாக தயாரான என்னிடமிருந்த  கைப்பேசி புகைப்படங்கள் வீடீயோ எதையும் சரியாக பார்க்க விடாது, நீண்ட நேரங்கள் தன்னைப் பார்க்கும் என் கண்‌ நலம் கருதி படிக்க விடாமலும் படுத்த ஆரம்பித்து விட்டது.

"எல்லாம் உன் நலத்திற்ககாகத்தானே இப்படி......" என்ற  கேள்வி வேறு அதனிடமிருந்து அடிக்கடி எழும்புவதால், சரியென்று நானும் ஆமோதித்தபடி என்னை அமைதிபடுத்திக்  கொள்வேன். இறுதியில் புதுசு வந்தாக வேண்டுமென்ற விதியின் விளையாட்டிற்கு முன்  அதன் விளையாடல்கள் செல்லுபடி ஆகவில்லை.

ஆனாலும், அதை அதன் உடல்நலம் பாதிக்கப்பட்ட உடனே  மருத்துவரிடம்‌ முறையாக சென்று காண்பித்திருக்க வேண்டுமோ என்ற தவிப்பு இன்னமும்‌ என் மனதில் அதைப் பிரிந்த வேதனையோடு இணைந்து உறவாடியபடி உள்ளது. எதுவுமே நமக்கென்று  நிரந்தரமில்லாத இந்த  உலகத்தில் வாழும் போதும், அதனின் இயல்பான ஒத்துழைப்புக்கள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அதனின் இயல்பை இந்த புதிதாக வந்திருக்கும் இதனிடம் கற்றுக் கொள்ள எனக்கு சற்று காலதாமதம் ஆகலாம்.

இந்த கைப்பேசி வந்து அது என்னுடன் பழகும் பொழுதினில் ஏற்பட்ட தாமதத்தில் முந்தைய முள்ளங்கி பரோட்டாவை‌ பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிய வைத்த சகோதரர்கள் ஸ்ரீராம், கில்லர்ஜி, நெல்லைத்தமிழர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பான நன்றிகள். மற்றும்,அனைத்து சகோதர, சகோதரிகளின் நிறைய பதிவுகளையும் நான் தவற விட்டிருக்கிறேன். அனைவரிடம் என் மனமார்ந்த மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இனி எப்போதும் போல் வலைத்தளம் வர இறைவன் அருளை வேண்டிக் கொள்கிறேன்.


30 comments:

  1. தங்களுக்கு நல்வரவு..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      பதிவுக்கு முதலில் வந்த தங்களின் அன்பான வருகைக்கும், என் வலைத்தள வருகைக்கு கட்டியம் தரும்படியான ஊக்கம் மிகும் நல்லுரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. உங்களை காணவில்லை என்றதும் இதுதான் காரணம் என்று நினைத்தேன். எங்கள் ப்ளாக்கில் சொல்லவும் செய்தேன். அப்படியே ஆகி இருக்கிறது.

    இனி உங்கள் புதிய நட்புடன் இணைந்து அருமையான பதிவுகளை தாருங்கள்.

    //எதுவுமே நமக்கென்று நிரந்தரமில்லாத இந்த உலகத்தில் வாழும் போதும், அதனின் இயல்பான ஒத்துழைப்புக்கள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அதனின் இயல்பை இந்த புதிதாக வந்திருக்கும் இதனிடம் கற்றுக் கொள்ள எனக்கு சற்று காலதாமதம் ஆகலாம்.//

    நீங்கள் சொல்வது உண்மைதான். எதுவுமே நிரந்தரம் இல்லை. பழகிய ஒன்றின் பிரிவு அதன் ஒத்துழைப்பு நினைவுக்கு வரும் தான்.

    எல்லாம் கற்று கொள்வீர்கள். புது வரவுக்கு வாழ்த்துக்கள்.



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். சகோதரி தங்களின் ஊகம் மிகச் சரிதான். எ.பியிலும் நீங்கள் சொல்லியிருப்பதை படித்தேன்.சரியாக என் நிலையை கணித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் .

      பழையது எல்லோரின் பதிவுகளுக்கு கருத்திடவும், படிக்கவும், நான் பதிவுகள் எழுதவும் தங்கு தடையின்றி எனக்கு நல்ல பழக்கமாகி விட்டது. புதுசு என்பதால் கொஞ்சம் தடுமாற்றமாக உள்ளது.

      தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. அனைத்து வாழ்த்துகளும் என் குழந்தைகளுக்கே சாரும். தங்கள் அன்பான‌ கருத்துதனக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. ஞாயிறன்று புறப்பட்ட நாங்கள் திருச்செந்தூர் உவரி கோயில் தரிசனம் செய்து விட்டு நேற்று தான் தஞ்சைக்குத் திரும்பினோம்.. இடையில் மழையின் காரணமாக அடிக்கடி மின்தடை.. எங்கும் தொலைபேசியைப் புதுப்பிக்கவும் வலை தளங்கள் வருவதற்கும் இயலவில்லை..

    தங்களது பிரச்னையை நான் அறிவேன்..

    மெதுவாக வாருங்கள்..

    தங்களுக்கான பதிவுகள் காத்திருக்கின்றன..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி.

      திருச்செந்தூர் குமரனின் தரிசனம் தங்களுக்கு நல்லபடியாக கிடைத்திருக்கும் நம்புகிறேன். ஆலய தரிசனங்களிடையிலும் நீங்கள் பதிவுலக நட்புகளைப்பற்றி நினைப்பது தங்களின் அன்பான மனதை வெளிப்படுத்துகிறது.

      என் பிரச்சனையினையும் புரிந்து கொண்டமைக்கு நன்றி. விரைவில் அனைவரிவரின் விடுபட்ட பதிவுகளையும் பார்க்கிறேன். நன்றி. சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பழையன கழிதலும் புதியன புகுதலும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம்.. பழையன கழித்தததினால்தான் புதியன புகுகிறது. ஆயினும் பழையதின் பெருமைகள், அருமைகள் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. நன்றி. சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நான் கேபிள் டீவியிலிருந்து டிஷுக்கு மாறியபோது இப்படிதான் சஸ்பென்ஸ் கொடுத்தேன்.  அது நினைவுக்கு வந்தது! அப்புறம் செருப்பு புதுசாக வாங்கி இருப்பீர்களோ என்றும் நினைத்தேன்.  கைபேசி புதுசா?  வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. அப்படியா? தங்களின் மலரும் நினைவுகளை இந்தப்பதிவும் மீட்டு வந்து விட்டதா?

      /அப்புறம் செருப்பு புதுசாக வாங்கி இருப்பீர்களோ என்றும் நினைத்தேன். /

      அதனால்தான் புதிரை சீக்கிரமே விடுவித்து விட்டேன். இந்தக் கைப்பேசி புதிது என்றாலும், அதே மாதிரிதான். இருப்பினும் சில தடுமாற்றங்கள். மகளின் உதவியில் பதிவுகளுக்கு வரப்போக என ஓரளவு கற்றுக் கொண்டு விட்டேன்.

      தங்கள் அன்பான வாழ்த்துக்களளுக்கு நன்றி. இந்த வாழ்த்துக்களும் என் குழந்தைகளைத்தான் சேரும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. என்ன மாடல், என்ன விவரம்?  என்னுடைய கைபேசி வாங்கி ஐந்து வருடங்கள் ஆகின்றன.  இன்னும் ஓரிரு வருடங்கள் கூட இதை வைத்தே ஒட்டி விடலாம் என்கிற பேராசை இருக்கிறது!  பார்க்கவ வேண்டும்.  என்ன, ஓரு வாரங்களாக பேட்டரிதான் சரியாய் நிற்க மாட்டேன் என்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்த ஃபோன் மாடல் ஒன்+ நார்டு சி இ லைட். என் மகன்களும் இதே கம்பெனி கைப்பேசிகள்தான் வைத்திருப்பதாக கூறினார்கள். அதனால் இதையே வாங்கி தந்துள்ளார்கள்.

      எனக்கும் அந்த பழைய ஃபோனை விடுவதற்கு மனது வரவில்லை. இன்னமும் ஓரிரு வருடங்கள் பயன்படுத்தி விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அது பெரிதான ஸ்கிரீன். கிட்டத்தட்ட ஒரு சின்ன ஐபேட் மாதிரி இருக்கும். ஏனோ சில பிரச்சனைகளை தந்து விட்டது. ஆனாலும் இப்போதெல்லாம் ஐந்தாறு வருடங்களுக்கு மேல் ஃபோன்கள் நம்முடன் ஒத்துழைக்க மறுப்பது உண்மைதான். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    2. நானும் என் மகன்களும் (மகன்கள் ஒன் ப்ளஸ் 7, ஒன் ப்ளஸ் 8)அதே குடும்பம்தான்!  ஒன் ப்ளஸ் 5.  வாங்கி ஐந்து வருடங்கள் ஆகின்றன!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      மீள் வருகை தந்து ஃபோன் பற்றிய விபரமளித்ததற்கு நன்றி. அப்போ நாங்களும் அந்த குடும்பத்துடன் குடும்பமாக இணைந்து விட்டோம். :)) மகிழ்ச்சி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. அலைபேசியிலேயே மற்ற பதிவுகளுக்கு சென்று கமண்ட்ஸ் போடுவது கூட கஷ்டமில்லை, அதிலேயே பதிவெழுதி வெளியிடுகிறீர்கள் பாருங்கள்.. அதுதான் பாராட்டப்பட வேண்டிய விஷயம். 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் எனக்கு கைப்பேசியில் கருத்திடுவதும், பதிவுகள் எழுதுவதும் கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு பழகி விட்டேன். சேர்ந்தாற் போல ஃபோனை இடது கையில் வைத்தபடி எழுதும் போது, தோள்பட்டையும் வலிக்கும், கண் பார்வையும் பாதிக்கிறது. ஆயினும், எழுதும் ஆவலில், எப்படியோ பழகி வருகிறேன். இரண்டாவதாக வீட்டு வேலைகளில் நடுவில் எப்போதும் கைப்பேசியுடன் அமர இயலாது. டெஸ்க்டாப் மடிக்கணினி என்றால் அது ஒரு மாதிரி சௌகரியமாக இருக்கும். இதில் சில அசௌகரியங்களுடன் எப்படியோ பழகி விட்டேன். தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. மடிக்கணினி வாங்கி விட்டால் பதிவு எழுத வசதி.தோள்பட்டை வலி, கைவலி, கண்பார்வைக்கு நல்லது.
      போனில் நீங்கள் பதிவு எழுதுவது பாராட்டபடவேண்டிய விஷயம் தான்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்களின் மீள் வருகையும், ஆலோசனையும் மகிழ்ச்சியை தருகிறது. உண்மைதான்.. மடிக்கணினி இருந்தால் சௌகரியமாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டில் டெஸ்க்டாப் கணினிதான் நானும் முதலில் கற்று பயன்படுத்தி வந்தேன். பின் குழந்தைகளின் அலுவலகம் தொடர்பாக அவர்களுக்கு மடிக்கணினி உபயோகத்தால் அது சிறிது பயனற்று போய் விட்டது. இப்பவும் வீட்டில் இருக்கிறது. அதற்குள் எனக்கு இந்த கைப்பேசி யை வாங்கித்தந்து எனக்குப் பழக்கி விட்டதால் அதன்பக்கமே யாரும் போவதில்லை. அதன் சிறு தவறுகளை சரிசெய்து தந்து விட்டால் நானாவது பயன்படுபடுத்துவேன் என சொல்லி வருகிறேன். ஆனால் அவர்களுக்கு நேரமே இல்லை.

      தங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களின் ஊக்கமும் உற்சாகமும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருவதால், இதிலேயே தொடர்கிறேன். ரொம்ப நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. செல்போன் மூலம் எழுதி பதிவிடுகிறீர்களா? எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது. நான் பதிவிடுவது எல்லாம் லேப்டாப் மூலம்தான் செல்போனில் பதிவுகள் படித்தால் பேஸ்புக் டிவிட்டராக இருந்தால் லைக்பட்டனை அமுக்கிவிடலாம் ஆனால் பதிவில் அப்படி முடியாததால் பல்ரின் பதிவுகலை படித்தும் என்னால் கருத்துக்கல் இட முடிவதில்லை என்பதுதான் நிஜம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாட்கள் கழித்து உங்களின் அன்பான கருத்துக்கள் மகிழ்ச்சியை தருகிறது.

      இதில் என்னைப் போன்று நம் எ. பி குடும்ப சகோதரர்கள் கில்லர்ஜி அவர்களும், துரை செல்வராஜ் அவர்களும், கைப்பேசியிலேயே பிறரின் பதிவுகளுக்கு கருத்து தெரிவிப்பதுடன், பதிவுகளும் எழுதுகிறார்கள். என நினைக்கிறேன். எனக்கும் முதலில் சிரமமாக இருந்தாலும், இப்போது ஓரளவு பழகி வருகிறேன். தங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் அன்பான கருத்து மகிழ்ச்சியை தருகிறது. பதிவுகளுடன் தொடர்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. புதிய வரவு மகிழ்ச்சியை தரட்டும், பதிவுகள் வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் இனிதான வாக்கு பலிக்கட்டும். தங்கள் கருத்து மகிழ்ச்சியை தருகிறது. பதிவுகளை எழுதி நல்லபடியாக வெளியிட இறைவன் அருளை நானும் வேண்டிக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. பின் தொடரும் கருத்துகள் எல்லாம் வருகின்றன. ஆனால் நான் போட்ட கருத்துக்களை மட்டும் காணவில்லை! :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் இந்தப்பதிவுக்கு காணோமே என நினைத்திருந்தேன். உங்கள் வீட்டு வேலைகளிலும், உங்கள் மகன் குடும்பம் வந்திருப்பதால் வேலைகள் அதிகமாக இருக்கிறது எனவும் நினைத்திருந்தேன். அதன்பின் உங்கள் பதிவை படிககையில், உங்கள் உடல்நல குறைவுகளைப்படிதது மனதிற்கு வருத்தமாக இருந்தது. விரைவில் உங்கள் வயிற்றுப் பிரச்சனை, கால் வலிகள் சரியாக வேண்டுமெனவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன். இப்போது தங்கள் உடல்நலம் எப்படியுள்ளது? பரவாயில்லையா? உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும். ஆனால் நீங்கள் போட்ட கருத்துக்கள் வரவில்லையென இப்போதுதான் தெரிகிறது. எங்குதான் மாயமாகி விடுகிறதோ ? ஆனாலும் நீங்கள் மறுபடியும் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி. உங்கள் அன்புக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. முன்னாடி என்ன எழுதினேன்னு மெயிலில் போய்ப் பார்க்கணுமோ? எப்படி ஆனால் என்ன? உங்கள் புது சிநேகிதிக்கு என் வாழ்த்துகள். விரைவில் உங்களுக்கு மடிக்கணினி கிடைத்து அதன் மூலம் வலி இல்லாமல் பதிவுகள் போடவும் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. இந்த மாதிரி எழுதுவது மாயமாகி விட்டால், அதற்கு முன் என்ன எழுதினோம் என்பதை கோர்வையாக நினைவில் கொண்டு வருவது சிரமம்தான். நானும் சில முறைகள் இந்த சிரமத்தை உணர்ந்திருக்கிறேன். இந்த கருத்துப் பெட்டி மாறியதிலிருந்துதான் இந்த சிரமங்கள் நமக்கு அதிகமாகி விட்டது.

      /உங்கள் புது சிநேகிதிக்கு என் வாழ்த்துகள்/

      ஹா ஹா. என் சிநேகிதிக்கு வாழ்த்து சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி. தங்கள் வாக்கு பலித்து வலிகள் ஏதுமில்லா பதிவுகள் நிறைய எழுதவும் ஆசைப்படுகிறேன். ஆண்டவனும் அவ்விதமமே அருளட்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்

      தங்கள் பேத்தி அங்கிருந்து வீடியோ காலில் பேசுகிறாளா? அவ்விதம் பேசினால் தங்களின் வலிகளை கொஞ்சம் மறந்து மனது சந்தோஷமடையலாம். சீக்கிரம் தங்கள் உடல் வலிகள் பூரணமாக குறைந்து நலமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி. சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. பேத்தி, மருமகள், பையர் எல்லோருமே அங்கே போய்ச் சேர்ந்ததும் பேசினார்கள். பேத்தி தனக்குப் புதிதாக வாங்கி இருக்கும் பொம்மையைக் காட்டியது. :) நேற்றில் இருந்து பள்ளி ஆரம்பிச்சிருக்கும் என்பதால் இனி சனி, ஞாயிறு மட்டுமே பார்க்க முடியும்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகை தந்து நல்லதொரு விபரங்களை தந்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் பேத்தி தங்களுடன் பாசமாக பேசி பழகுவது மிகுந்த மகிழ்ச்சி. ஓ.. அங்கெல்லாம் இனிதான் பள்ளித்திறப்பு இல்லையா? வார இறுதி சனி ஞாயறுகளில் தினமும் அனேக முறைகள் அவர்களுடன் பேசி சந்தோஷமாக இருங்கள். அதுதான் தங்களுக்கு உடல் உபாதைகளளைப் போக்ககி மன மகிழ்ச்சியை தரும். நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete