Pages

Thursday, July 28, 2022

சம்(மின்)சாரம்

 காலையிலிருந்தே இனம் புரியாத ஏதோ ஒரு கவலையில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சற்று குறைந்துள்ளது போல் தோன்றியது பவானிக்கு.  இன்று  கணவரின் பிறந்த நாளுக்காக அவரது அலுவலக நட்புகள் மாலையில் விருந்தினர்களாக வருகை... . தடபுடலான உபசாரங்கள்.. முதல் நாள் இரவே  கணவனுடன் சேர்ந்தமர்ந்து வரும் விருந்தாளிகளுக்கென கலந்தாலோசித்த விதவிதமான உணவு பட்டியல்கள்...  சரியென்று அத்தனையும், அதற்கும் மேலாகவும் செய்ய உற்சாகமாக ஒப்புதல்  அளித்தப் பின்,.... இப்படி அதையெல்லாம் தவிர்த்து  பின்வாங்குவது சற்றேனும் முறையில்லையே என்று மனசாட்சியுடன் தர்ம போராட்டம்.... இப்படியாக காலை பத்து மணி முதற் கொண்டு மனதுக்குள்  இயலாமையால் எழுந்த கோப ஆறு வடிகால் ஏதுமின்றி பொங்கி, பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.

நேரம் தன் பாட்டுக்கு இறக்கையை விரித்த வானம்பாடியாக கொஞ்சமும் கவலையின்றி பறந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கதவை திறந்து வெளி வாசலில் சென்று நின்று "இதெல்லாம் மாலை கணவரின் அலுவல நண்பர்கள் விருந்துக்கு வரும் முன்பு முறையாக செய்து முடிக்க தன்னால் முடியுமா. .?" என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசிக்கும் போதே மனதில் எழுந்த கவலை காரணமாக மறுபடி சீறிய கோப ஆறு தன் வெள்ள விபரீதத்தை பெருக்க செய்தது.

வாசல் கதவை சாத்தி விட்டு சமையலறை வந்தவள், ஒரு முடிவோடு சமயலறை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பொருட்களை நகர்த்த கொஞ்சம் சிரமபட்டாலும், கடினத்தைப் பாராமல் இழுத்து வைத்துக் கொண்டாள். வேறு வழியில்லை... இப்போதைக்கு தன் மனதின் கோபங்களை, இயலாமைகளை தணித்துக் கொள்ள இதுவும்  ஒரு சிறந்த செயல்தான் என அவள் மனம் மறுபடி, மறுபடி வலியுறுத்தியது. 

மாலை.... அவசரமான ஒரு இயந்திரமாக தன் உடம்பை வருத்திக் கொண்டதின் பலனாக முதல் நாளிரவு பட்டியல் போட்ட உணவு வகைகள் மலர்ச்சியுடன் ஒன்று கூடி சமயலறை மேடையில் புன்னகைத்து கொண்டிருந்தன. சப்பாத்தி, பூரிி அதற்கேற்ற தன் ஜோடிகளுடன், சில கலவன் சாதங்கள், வடை, பஜ்ஜி  போன்ற பலகாரங்களும், மற்றும் அவற்றின் இணையாகிய பல சட்னிகள் யாவும் இனிப்பான போளி, மற்றும் விதவிதமான கொழுக்கட்டைகளுடன் விருந்துக்கு தாங்கள் தயாராகிய கதைகளை இணக்கமாக பேசியபடியிருந்தன.  மாலையானதும், கணவருடனும், மற்றும் அதற்குப் பின்னரும், ஒவ்வொருவராக வந்த நட்பு விருந்தாளிகள் முன்னறைக்  கூடத்தை தங்கள் பேச்சினால் கலகலப்பாக்கி கொண்டிருந்தனர். 

"என்ன பவானி... எல்லாம் தயாரா?" என்றபடி தங்கள் அறைக்குள் முகம் கழுவி தன்னை கொஞ்சம் தெம்பாக்கி கொண்டிருந்த  மனைவியை நெருங்கிய அவள் கணவனுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் அவளின் அசாத்திய களைப்பு புரிந்தது. 

"என்னாச்சு.. முடியல்லையா?" ஆதரவாக கேட்டவனிடம், "ஒன்றுமில்லை.. வாருங்கள்.  எல்லோருக்கும் இலை போட்டு  பரிமாறுகிறேன்..." என்றபடி ஒரு மலர்ச்சிப் புன்னகை கூட தராது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவானி. 

"எப்போதும் விதவிதமாக சமைக்கும் எண்ணங்களில் ஆர்வமாக கலகலப்பாக இருக்கும் அவள் இன்று உற்சாகமில்லாமல் இருப்பதேன்? . நேற்று என்னை கேட்காமலே கூட விதவிதமாக பாரம்பரிய பட்டியல்களை சிலவற்றை அவளே தேர்ந்தெடுத்தாளே.... சிலவற்றிக்கு இது கடினமானது என நான் சொல்லியும், கேட்காமல், எனக்கு இது மிகவும் சுலபமென வாதிட்டு அதை செய்யவதற்கு ஒப்புக் கொண்டாளே ...  இன்று எதற்காக இந்த சோர்வு.. ஒரு வேளை என் வறுப்புறுத்தலில், யாருடைய துணையுமின்றி, எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்ய வேண்டியதாகி விட்டதே என்ற  சிறு கோபத்தில், எழுந்த இயல்பான வருத்தமாக இருக்குமோ...? " என்றெல்லாம்  மனதுக்குள் நினைத்தபடி நண்பர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்து வர தங்கள் அறையிலிருந்து அவனும் வெளியேறினான். 

அனைவரும் வானளாவ புகழ்ந்ததில், பவானிக்கு கொஞ்சம் சோர்வகன்று கூடுதலான முகக்களையும் வந்திருப்பதை புரிந்து கொண்டான் அவள் கணவன்." இதேப் போல் மற்றுமொரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ என அந்த நாட்களையும்  இப்போதே குறித்து வைத்தபடி.... " அவர்கள் அனைவரும் விடை பெற்றதும், திருப்தியான முகப்பாவத்துடன் கூடத்தில் அமர்ந்திருந்த பவானியின் அருகே  வந்தமர்ந்தான் அவள் கணவன். 

"பவானி... இன்று உன் கைப்பக்குவம்  போல் எங்கும் ருசித்ததில்லை என என் நண்பர்கள் அனைவரும் கூறியதை கேட்டாயல்லவா? நிஜமாகவே  நீ செய்யும் பக்குவங்களில் எப்போதையும் விட இன்று எல்லாமே மிக சரியாகவும், ருசியாகவும் அமைந்திருந்தது. அது எப்படியென கேட்க வேண்டுமென்று நானே நினைத்தேன்... அது சரி......  எல்லாமே நன்றாக, ருசியாக வந்திருக்க வேண்டுமேயென்ற கவலையில் உன் உடல்/ மனச்சோர்வு அகன்று, கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ச்சியெனும் போனஸை இப்போதாவது பெற்ற மாதிரி இருக்கிறதா? அவர்களது பாராட்டுக்கள் என்னையும் பெருமை கொள்ள வைக்கிறது. எனக்கும் இப்படியொரு சமையல் வித்தகியான சம்சாரம் என் வாழ்க்கைத் துணையாக கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். வா.. இப்போதும் மணியாகவில்லை. காலையில்தான் நமக்கு நேரமில்லை. எனக்கு அலுவலகத்தில் உள்ள கெடுபிடியால் விடுமுறையும் எடுக்க இயலவில்லை. நல்ல திருப்தியான மனதுடன் சந்தோஷமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். வா.. புறப்படு "என்றான். 

"உண்மைதான்.... காலையில் நீங்கள் அலுவலம் சென்ற பின், என் மனதில் ஏற்பட்ட கோப வெள்ளத்தில் கரையேற முடியாமல் திண்டாடினேன். இன்றைய தினத்தில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நம் ஏரியா முழுக்க கிடைக்காமலே போன அந்த  மின்சாரத்திற்காக நானும் அதற்கு நன்றி கூறி, இப்போது உங்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். என்னைக்குமே" பழையது என்றுமே தங்கந்தான்"என்ற பழமொழிப்படி, நான் சென்று எனக்கு உதவிய அவைகளையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி விட்டு, "உங்களை இனி தினமும் விடாமல் நான் அங்கிகரித்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லி, அவைகளையும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டு வருகிறேன்...." என்றபடி பழைய சுறுசுறுப்புடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் பவானி. 

பாதி புரிந்த பாவனையிலும், மீதி பாதியை யோசித்தபடியும் அமர்ந்திருந்தான் அவள் கணவன். 

கதை முடிந்தது. 

பி. கு... .." என்னடா இது... உங்களை சுருக்கச் சொன்னால், இப்படி ஒரேடியாகவா...? என்று வியக்கும் (வியப்பாரா?:)))   ) சகோதரர் நெல்லைத் தமிழரின் கருத்துக்காகவா இப்படி... ." (ஹா.ஹா.ஹா) என எண்ணாமல் இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று நீங்கள் அனைவரும் கருத்துரையில் கூறினால், நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பேன். மகிழ்ச்சி வெள்ளமாவதும், சிறு ஓடையாகி வடிந்து போவதும் உங்கள் அனைவரின் அன்பான தட்டச்சில்தான் உள்ளது. கருத்துச் சொல்லப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

Wednesday, July 20, 2022

டாக்டரும், நோயாளியும்.

வணக்கம் அனைவருக்கும். 

எவ்வளவு செலவு செய்து கொண்டு 

"காசிக்குப் போனாலும் கர்மம் தொலைவதில்லை என்பது போல்....

எவ்வளவு செலவு செய்து படித்து

"நல்ல டாக்டராக பரிமளித்தாலும், நகைச்சுவை பேச்சுக்களுக்கு குறைவில்லை போலும்..." என்றுதான் என்னை எண்ண வைத்தது. . 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அப்படியே சில சமயங்களில் நோய்கள் ஏதும் ஏற்பட்டாலும், 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா? ஆக படுத்தும் உபாதைகளுக்கு  நிர்மலமான சிரிப்பே  சிறந்த ஒரு நிவாரண மருந்து. 

இது எனது கைப்பேசியில் வாட்சப்பில் பலவிடங்களிலிருந்து சுற்றி வந்த டாக்டர் ஜோக்குகள். இது ஏற்கனவே உங்களுடனும் சுற்றி வந்து நீங்கள் அனைவரும் படித்திருக்கலாம். இருப்பினும் ஒரு மாறுதலுக்காக இன்று இங்கு இதை பதிவிடுகிறேன்.  இங்கும் வந்து படிப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. 🙏. 


1.) நோயாளி.. டாக்டர்! எனக்கு பல் ஆடுது!

டாக்டர்... எந்த பாட்டுக்கு?


2.) இரண்டு இட்லியைக் கூட முழுசா என்னாலே சாப்பிட முடியல டாக்டர்..?

என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்


3.)நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."


4.)டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க..

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!


5.) மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”


6.)டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...


7.)நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க


8.) டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?


9.) "டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"


10.) நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.


11.) அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!


12.) "டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."


13.) டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சுதான் கொல்லுவாங்க!


மீண்டும் அனைத்தையும் படித்து சிரித்த அனைவருக்கும், இதை அனுப்பி பகிர்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்.🙏. 

Friday, July 15, 2022

கீரை புராணம்.

கீரை வறுத்தரைத்த சாம்பார்.. 

மனிதர்களில் பல ரகங்கள் மாதிரி கீரையிலும்  பல ரகம்.  நான் திருமணமாகி சென்னை வந்த புதிதில், "அரைக்கிரை, முறைக்கிரை, சிரிக்கிரை" இந்த மாதிரி தெருவில்  ஒரு மாதிரி ராகத்தில் அழுத்தி கூவி கீரை விற்பார்கள். முதலில்  எதுவும் புரியவில்லை. பின் இந்த கீரை விற்கும் சொற்கள் குறித்த ஐயங்கள்  என் புகுந்த வீட்டு உறவுகள் மூலமாகத்தான் கொஞ்ச நாட்கள் கழித்து அது கீரை சம்பந்தப்பட்டது என புரிந்து கொண்டேன். 

காய் வாங்க வெளியில். செல்லும் போது, "என்னம்மா முளைக்கீரை எப்படிம்மா?" என்று கேட்கும் போது, தப்பி தவறி நாமும் "என்னம்மா முறைக்கீரை" என்று அவரை கிண்டலாக அழைப்பது போல், அவருக்கு தோன்றி விட்டால், அவர் "முறைப்பதை" முதலில் நாம்  சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

அந்த முறைப்பிலேயே அவர் சென்னை பாஷையில் ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற கலக்கத்தில், ஏதோ ஒரு கீரையை சிரிக்காமல் வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். 

அதன் பின் நாடோடி தென்றலாக அங்கே இங்கே என்று வாழ்க்கை நகர்ந்ததில். கீரைகளும் ஆங்காங்கே தலைகாட்டியபடி பின் தொடர்ந்தேதான் வந்தபடி இருந்தது. இதில் என் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சாப்பிட பிடிக்காத விஷயங்களில் இந்த கீரையும் ஒன்று. 

கீரை பண்ணும் அன்றைய தினம் அவர்களுக்காக நிறைய காய்களை போட்டு சாம்பார், இல்லை, அவியல் மாதிரி  பண்ணி காய்களை உண்ணும்படி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஏதும் சாப்பிடாமல் இருப்பார்களே என அன்று வருத்தம் வரும். 

அதன் பின் அவர்கள் சற்று வளர்ந்த பிற்பாடு, அரைக் கீரையை உப்பிட்டு  வேக வைத்து மசித்து, கடுகு உ. ப, மி. வத்தல் தாளித்து, பெருங்காயத்துடன், பச்சை தேங்காய் எண்ணை ஒரு ஸ்பூன் விட்டு, அந்த கீரையுடன் கலந்த சாதம், 

 கீரை வெந்ததும் மசித்தவுடன் தேங்காய், சீரகம், மி. வத்தலுடன் அரைத்துச் சேர்த்து, செய்த கரைச்ச கூட்டு,

 கீரை வெந்து மசித்ததும்  புளி, கடுகு, வெந்தயம், பெ. காயம் தாளிப்பு சேர்த்த புளிக்கீரை,( புளிக்கீரையென்று ஒன்று  உண்டு. அதற்கு புளியே விட வேண்டாம். அது அவ்வளவாக எங்களுக்கே பிடித்ததில்லை. குழந்தைகளுக்கு எப்படி?)  

அரைக்கீரையோ முளைக்கீரையோ வேக வைத்துக் கொண்டு, மிளகு, தேங்காய், மி. வத்தல் சேர்த்து மிளகூட்டல், 

இல்லை கீரை வடை, கீரை அடை, 

கீரையைவெந்து மசித்ததும், வேக வைத்த பா. பருப்புடன் சேர்த்து, தேங்காய், சீரகம், நாலைந்து மிளகு, மி. வத்தலுடன் (இதை வறுத்து ஒரு முறை, வறுக்காமல் ஒரு முறையில் செய்யலாம். ) அரைத்து சேர்த்த பொரிச்ச கீரைக்குழம்பு, (இது பொதுவாக பொன்னாங்கண்ணிகீரை, இல்லை பீட்ரூட் கீரை, இல்லை,மணத்தக்காளி கீரையில் செய்தால் அமிர்தமாக ருசிக்கும்.)

 கீரையை து. பருப்புடன் கலந்து சாம்பார் பொடி போட்டு ஒரு குழம்பு, இல்லை வறுத்த சாமான்களுடன் சேர்த்து செய்த கீரை சாம்பார், 

இது போக "பருப்புகீரை" என்று ஒன்று உண்டு. அதை அலம்பி பொடிதாக அரிந்து வேக வைத்த பின், வெறும் வேக வைத்த  து. பருப்படன் கலந்து  கடுகு, மி. வ உ. ப தாளித்து இறக்கிய கீரை, 

இதைத்தவிர பசலைக் கீரை என்ற ஒன்றுமுண்டு. அதையும் வேக வைத்த பருப்புகளோடு கலந்து தேங்காய் சீரகம், மி. வத்தலிட்டு காரத்துடனோ ,  இல்லை.. சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தோ,  கூட்டாக செய்தும், 

கீரை தண்டுடன் தண்டு கீரையாக வாங்கும் போது, கீரைகளை ஆய்ந்து,( பொதுவாக இந்த எல்லா வித கீரைகளை ஆய்ந்து சுத்தப்படுத்த நிறைய நேரமும், நீண்ட பொறுமையும் தேவைபடும்.) மேற்கூறிய முறைகளில் செய்து விட்டு, மறுநாள் தண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து,  அத்துடன் ஊற வைத்த பாசிப்பயிறு, அல்லது பா. பருப்பு வேக வைத்து சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவலுடன் கலந்து சுண்டலாக, 

இது போக வெந்தய கீரையில், இல்லை முள்ளங்கி கீரையில், செய்த சாம்பார், புளிக்குழம்பு, என பலவகைகளில் செய்து எங்கள் வீட்டில் அனைவரும் (குழந்தைகள், முதல் பெரியவர்கள்) கீரையை ரசித்து உண்ணும்படி செய்து விட்டேன்.( அப்பாடா.! சொல்வதற்குள் நான் வாடிய கீரையாக ஆகி விட்டேன். ஹா. ஹா. ஹா. பொறுமையாக கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும்? கேட்டதற்கு நன்றி.. நன்றி.. ) 

இன்னமும் எத்தனையோ கீரைகள் (சரியாக நினைவில்லை.) இப்படியாக செய்ததில் தற்சமயம் செய்த "வறுத்தரைத்த கீரை சாம்பாரை"  இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.  இதையும் அனைவரும் செய்து சுவைத்திருப்பீர்கள். இருந்தாலும் என் பாணியாக இருக்கட்டுமென (இல்லையென்றால், பண்ணும் போதே எடுத்த முளைக்கீரை புகைப்படங்கள் இன்னமும் என்னை "ரீலீஸ்" பண்ணவில்லையா என என்னை "முறைத்து"க்கொண்டே இருக்கின்றன.) இங்கு பகிர்கிறேன். 

கீரையை ஐந்து கட்டு அலம்பி அரிந்து வைத்த புகைப்படம். 


வறுக்க தேவையான பொருட்கள். வெந்தயம், மி. வத்தல்கள், உ. பருப்பு, க. பருப்பு, து. பருப்பு, கொத்தமல்லி விரைகள், (தனியா) இது ஆறுபேருக்கு இரு வேளைக்கு, நான் எடுத்துக் கொண்டது. கொஞ்சமாக பண்ணும் போது எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாம்பார் நன்கு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால் மறுநாள் காலைக்கும் பயன்படும். அதுவும் இரவு வைத்த மீந்து போன சாதத்தில், கொஞ்சம் தயிரும். பாலும் கலந்து கெட்டியாக தயிர்சாதம் செய்து கொண்டு இந்த சாம்பாரை துணையாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால், இன்னமும் நிறைய மீந்த சாதம் இருக்க கூடாதா என்ற எண்ணத்தை உருவாக்கும். (அன்றைய தினம் காலை டிபனை கூட மனம் எதிர் பார்க்காது.)


ஒரு ஸ்பூன் சீரகம், கொஞ்சம் மிளகும் எடுத்துக்கொண்டேன்.(சீர்+அகம் "சீரகம்" நம்முள்ளிருக்கும் அகத்தை சீராக்க, "மிளகு" (வயிற்று உப்பசம்) வயிற்று உபாதையை சரியாக்க )  "மருந்தே உணவு, உணவே மருந்து" என ஆயுர்வேதத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. விருப்பமில்லாதவர்கள் இவ்விரண்டையும் வறுக்கும் சாமான்களுடன் கலக்க வேண்டாம்.


ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொண்டேன்.


அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நிறைய கடுகு வெடிக்கச்செய்து அதில் பாதியை வறுத்தரைக்கும் சாமான்களுடன் சேர்க்கவும்.


இல்லையென்றால், இப்படி மிக்ஸியில் நேரடியாக போட்டுக்கொண்டேன். நான் அந்த மசாலா சாமான்களில் போட்டு படமெடுக்கவில்ஙை. (அதனால் இப்படி)


உப்பிட்ட கீரை  வெந்ததும், கீரை மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். கீரையை இந்த மாதிரி கீரை மத்தால் கடையும் போது சுவை மாறாமல் இருக்கும். எனக்கு தெரிந்த சிலர் ஆட்டுரலில் போட்டு அரைப்பார்கள்.  தற்சமயத்தில் மிக்ஸியில் அரைக்கிறார்கள். அது மிகவும நைசாக உருத்தெரியாமல் ஆகி விடுவதால்  அதன் ருசியின் அளவும் குறைவதாக எனக்கு தோன்றுகிறது. (இரண்டாவதாக உப்பிட்ட பின் அந்த பொருளை எங்கள் வீட்டில் "பத்து" எனச் சொல்வது சிறு வயதிலிருந்தே அம்மாவிடம் கற்ற பாடம்.) (எச்சில், பத்து என சொல்வது மாதிரி) அதை மிக்ஸியில் போடக் கூடாது. "ஒயர் மூலம் வீடே  எச்சில், பத்து என்று கனெக்ஷன் ஆகி விடுமா?" என என்னை கேலி செய்தவர்கள் நிறைய பேர்.  என்ன செய்வது? பழக்கங்களை சுலபத்தில் மாற்ற முடியுமா? 


ஒரு எலுமிச்சை அளவு புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்தெடுத்த புளிக்கரைசலை, கடாயில் மீதமிருக்கும் கடுகுடன் விட்டு கொதிக்க விடவும்.


ஆரம்பத்திலேயே சாதம் வைக்கும் போது வேக வைத்திருக்கும் து. பருப்பையும் நன்கு கடைந்து வைக்கவும்.


புளிஜலம் நன்றாக கொதித்ததும், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மசித்த கீரையை உடன் சேர்த்து கொதிக்க விடவும். 


வறுத்த மசாலா கலவையை நைசாக மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கும் கீரையுடன் சேர்க்கவும்.


அரைத்த பொடிகள் கரைத்து வைத்த கலவை.


கரைத்து வைத்ததை விட்டு நன்கு கொதி வந்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். 

 

கீரை சேர்ந்து கொதித்ததும் பெருங்காயத்தூள் கொஞ்சம் போடவும்.. நான் எப்போதுமே கடைசியில்தான் பெருங்காய பொடி சேர்த்து விடுவேன். வாசனை நிலைத்து இருக்கும்.


எல்லாம் கலந்த  நிலையில் கீரை சாம்பார் அசத்தலாக நான் ரெடி என்கிறது.


"சாதம் பரிமாறிய பின்தான் என்னை பரிமாறுவார்களாம். அதுவரை நான் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டுமாம்" என்று முறைப்பிலிருந்த  முளைக்கீரை சாம்பார்.


என்ன நட்புகளே.! கீரை சாம்பார் ருசியாக இருந்ததா? "ஆமாம்.. நாங்க எப்போதும் செய்வதுதானே.! இதில் என்ன மாறுபட்ட ருசி...! "என்ற ஒரு கேள்வி வரும் முன் நீங்கள் இதை எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்திருக்கிறீர்கள் என்ற அனுபவ கருத்துக்களை எதிர்பார்த்தபடி விடை பெறுகிறேன். நன்றி. 🙏.

இதுவும் எ. பியில் என் திங்கள் பதிவாக எப்போதோ வந்தது. இன்று என் பதிவில் இதை ஒரு மாற்றத்திற்காகவும், சேமிப்பாகவும் பதிவு செய்துள்ளேன். அதை விட நேற்று வீட்டில் மோர் கீரை செய்தேன்.(அதை மட்டும் எ. பியில் வந்த அந்தப் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்) உடனே இந்த பதிவு என் டிராப்டில் இருப்பது நினைவுக்கு வரவே இந்த கீரைப்பதிவு இங்கும் விடாமல் வந்து முளைத்து விட்டது.. அங்குமிங்குமாக வந்து கருத்துக்கள் தெரிவி(த்தவர்களுக்கும்)ப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Monday, July 4, 2022

பிடித்த பாடல்.

வணக்கம் அனைவருக்கும்

எல்லோரும் இப்போது வந்த புது படங்களை ரசிப்பார்கள். அதில் பாடல்கள் சிறப்பாக இருந்தால் அதை சிறப்பித்து கொண்டாடுவார்கள்.  இந்த படம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. ஆனால் நான் இப்போதுதான் பார்த்தேன். இதைப்போலவே அன்னமைய்யா படமும் நடிகர் நாகர்ஜூனா அவர்களின் உருக்கமான பக்திபரவச நடிப்யில் மிகவும் மனதை உருக்கும் வண்ணம் வெற்றிப்படமாக அமைந்தது. அதையும் முன்பே பலமுறை தெலுங்கிலும், தமிழிலும் பார்த்துள்ளேன். அதில்  வந்த பாடல்களும் மிக பிரபலம். இதுவும்  அப்படித்தான் என நினைக்கிறேன். இந்தப் பாடல் இந்தப் படத்தில் முதல் தடவையாக கேட்டதிலிருந்து பிரதி தினமும் கேட்கிறேன். நாகர்ஜூனா அவர்களின் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் நடிப்பும், அனுஷ்கா அவர்களின் அழகு ததும்பும் அமைதியான நடிப்பும் இந்த படத்தையும் பல தடவை என்னை பார்க்க வைத்து விட்டது. மெய்சிலிர்க்க வைக்கும்  குரலில் பாடும் சரத் சந்தோஷ் அவர்களுக்கும் ஜானகி ஐயர் அவர்களுக்கும் (தெலுங்கு படத்தில் ஜானகி ஐயருக்கு  நிகராக பாடுவது பாடகி ஸ்ரீ நிதி அவர்கள்.) நன்றி. பாடலில் ஸ்ரீமன் நாராயணனை கண்ணெதிரில் நிற்க வைக்கும் இவர்களது (பாடகர்கள், நடிகர் நாகர்ஜூனா) திறமைகளுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன். இதில் ஸ்ரீபாலாஜியாக வருபவர் நாம் கண்ட இறுதியாக வந்த மகாபாரத தொடரில் ஸ்ரீ கிருஷ்ணராக வந்தவர். அப்படியே தெய்வீக களையுடன் இருக்கும் இவரைப் பார்க்கும் போது மனது நாராயணனின் மேல்  வைத்திருக்கும் பக்தியோடு ஒன்றிணைந்து சாட்சாத் அந்த இறைவனை காண்பது போல் திருப்தி கொண்டு விடுகிறது. இவரது அருள் சுரக்கும் அந்த தெய்வீக  நடிப்புக்கும் நன்றி 🙏. 

 

நன்றி கூகுள். 

இந்தப் பாடலை இப்போது எனக்காக கேட்கப் போகும் ( ஏற்கனவே இது நீங்கள் படம் பார்த்து பலமுறைகள்  கேட்டு ரசித்த  பாடலாகவும் இருக்கக் கூடும்.இருப்பினும் இப்போதும் கண்டிப்பாக கேட்பீர்கள் என நம்புகிறேன். )  உங்களனைவருக்கும் என் பணிவான நன்றி. 🙏.