Pages

Wednesday, January 19, 2022

காலம் மாறிப் போச்சு.

 மறுபடியும் பிரவேசம். 

இது எப்போதோ எழுதப் பெற்று தனக்கு (கவிதை மாதிரி உள்ள அதற்கு... ) வர வேண்டிய ஆதரவு மதிப்பெண்களை இழந்த கவிதை. இப்போதும் பெரும்பான்மையாக இல்லாவிடினும், சிறிதளவாவது கிடைக்கும் (அதுதான் ஆதரவு....! ) என்ற நம்பிக்கையில், ஆசை மலர்களை மனதுக்குள் சூடியபடி கிளை பரப்பி மறுபடி துளிர்தெழுந்துள்ளது.  

சகோதரர் ஸ்ரீராம் ரெற்றோ கவிதை என எ.பியில் பகிர்ந்துள்ளதை பார்த்ததும், "நானும் பழையனவைதானே...!! என்னையும் மறு முறை ஒரு தடவை தூசு தட்டி வெளியிட்டால்தான் என்ன..? " என என்னிடம் அது முறையிட அதன் வார்த்தையை அரைமனதாக அங்கீகரித்து பதிவுக்குள்அனுப்பலாமா வேண்டாமா என தயங்கியபடி யோசித்தேன்.

 "இது அந்த மாதிரியா என்பதெல்லாம் எனக்கு தெரியாதே. .!!!! அது எங்கே...   நீ எங்கே.....!!!! நீயாக இப்படியொன்றை கற்பனை செய்து கொண்டால் எப்படி? மேலும், உன்னை நான்  அன்று உருவாக்கிய வரிகளில், வார்த்தைகளில் குற்றங்கள் குறைகள் இருக்கலாமே. .!!! " என முதலில் பிகு செய்தபடி  ரொம்பவே தயங்கினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....! என்பது யாரும் அறியாததல்லவே.. ." என்ற அதன் ஆழமான  மறு பதிலில் அதன் பின் எழுந்த என் மறுபேச்சுகள் பயனின்றி போகவும் தைரியமாக அதுவே பதிவுக்குள் வந்தமர்ந்து விட்டது.:)))) 

இதோ அந்தக் கவிதை.. .

காலம் மாறிப் போச்சு... 

கடல் போன்ற வீடு...! அதில்

கணக்கற்ற நிறைய மனிதர்கள்...!

சுற்றங்களும், சுகங்களுமாக,

சுமை தாங்கும், உறவுகள்..!


அன்பும் , அரவணைப்புமாக ,

அரண் போன்ற மனங்கள்...!

தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,

தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்...!


பாட்டும், கதையுமாக, பேத்திகளை,

பாசத்துடன் பார்த்துப் பார்த்து 

பாரபட்சங்கள் ஏதுமின்றி, 

பக்குவமாக்கும் ,பாட்டிகள்...!


விடியலில் உதிக்கும் விறகடுப்பு,

வீதி அசந்து உறங்கும் வரை,

அனல் கக்கும் அதிசயம்,

அண்டை அசலெங்கும் தொடரும்..!!!! 


உணவுகளுக்கும், பஞ்சமில்லை...!!

உடைகளுக்கும். வஞ்சமில்லை....!!

உறவுகளின், உணர்வுகளும்,

உரிமைகளும் , என்றுமே, 

அங்கு உடைந்ததில்லை....!!


நான்.. நீ...என்ற பேதமில்லை….!அங்கு

நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை...!

மதிப்பும் , மரியாதையும் 

குறைந்ததில்லை...!!

மற்ற சண்டைகளும் என்றும் 

வந்ததில்லை..!!.

       

ஆனால் , இது அந்தக் காலம்....!

இன்று அந்த கடல்கள், கணிசமாக வற்றி,

கரையோரங்களும்,கவனிப்பின்றி,

கடுகளவாய் சிறுத்து விட்டது...!!


அடுப்பும், மரித்து விட்டது...!!மக்களின்,

உடுப்பும், மாறி விட்டது...!! மனிதரின்

சுயநலமெனும் போர்வைக்குள்,

சுற்றங்களின்  சுகங்களும்,

சுமைகளும், சிறிதளவும் சிரமமின்றி,

சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன...!


௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,

௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,

நான்.... நீ... என நாலும் ௯றிக்கொண்டு,

நான்காய் பிரிந்ததில், நன்றாகவிருந்த

நாகரீகங்கள் , தடு(தடம்)மாறி விட்டதில்,

நலம் குலைந்த நகர(நரக)மாயிற்று...!!

        

"என் வாழ்விலேயே இப்படி மாறிப் போன

 இந்த காலத்தின் கோலங்கள்..!!

உன் காலத்தில் எப்படி மாறுமோ?.." என்று

புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,

புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,

காதருகே, கால் கடுக்க நின்றபடி

காதுகளில் ஓதியபடிதான்  உள்ளது..!!! 


"விபரறிந்து பாட்டி... நீ..! அன்று

விசனத்துடன் சொன்ன வாக்கு ... .! 

விந்தை நிறைந்த இவ்வுலகில்

விரைவாய் அவ்வாறே மாறிப் போனதில்

வியப்பொன்றும் இல்லையம்மா...!!!" 


கடல் கடந்து சென்று வாழ்வதுதான், 

தன் கருமம் எனக்௯றி, 

காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை....!!


காசிருந்தும், கார்கள் பலவிருந்தும், 

எங்கள் கால் பதிக்க அங்கு  இடமில்லை, 

என்றான் மற்றொருவன்....!!


இல்லத்தில் இணைந்திருந்து 

இன்பமாக வாழ பழகியிரு ....! என்

இல்லத்தில் பிறகு உங்களை 

இணைத்துக் கொள்கிறேன் 

என்றான் ஒரு பிள்ளை....!! 


சிறிய பிரச்சனை எனக்கு...!! 

அது தீர்ந்து முடிந்ததும்

சில காலத்துக்குள் நீங்கள் 

என்னுடன்தான் …!! என்றான் 

இன்னொருவன்....!! 


இயந்திரமயமான இக்காலத்தில்,

இளமை விரட்டிய, எங்களுக்கு , 

இந்த இல்லம் என்ற ஒன்றிடம்

இல்லாமலிருந்தால், இன்னும் பல

இன்னல்களுடன் இணைந்திருப்போம்....!            


நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,

நான்கும் நாலுவிதமாய் போனதில் , 

இன்று முகமறியாத ,

உறவுகளுடன் வாழ்க்கையும்,

முதுமையுடன் அன்பாய்

முறியாமல் தொடர்கின்றது....!!


உன் சோகத்தை சுமக்க , பாட்டி...!அன்று

உன் பேத்தி நானிருந்தேன்....!!

என் வார்த்தை உரைக்க வகையாய், 

என் பேத்தி  இன்று

என் அருகிலேயே இல்லையே.....!!!! 


இந்த இல்லத்தின் உறவுகளுக்கும் 

இன்று இதே நிலமைகள்தான்...!!

இந்நிலை எந்நாளில் மாறுமோ? அந்த

இறைவனுக்கே வெளிச்சம்...!!! 


கடல் போன்ற வீடு....!!அதன்

காலங்கள் மாறிப் போச்சு...!!என, நீ. .

கடவுளிடம் புலம்புவது இப்போதும் என்

காதுகளில் ஒலிக்கிறது … பாட்டி!!!!  ஆம்!

காலம் மாறித்தான் போச்சு...! அது 

கணிசமாக மரித்தும் போச்சு....!!!!

***********************************************************************                       

கவிதை நன்றாக இருந்தால், (இல்லாவிட்டாலும்) இதற்கு ஆதரவு தர வேண்டுமாய் சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இனி வரும் காலங்களும் ஏதாவது ஒரு வகையில் மாறிப் போக வாய்ப்பு உள்ளதால், இது மூன்றாம் முறையாக இங்கு வருவதற்கு சற்று அதிகமாகவே வெட்கப்படுமாம்:))))  எனவே படித்துப் பார்ப்பவர்களுக்கும், ஆதரவாக விமர்சிப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

28 comments:

  1. கவிதைகள் சிறப்புறுவது அதன் கருத்தால்.  இந்தக் கவிதையின் கருத்து எல்லோரும் மனதுக்குள் மறுகும் கருத்து என்பதால் வரவேற்பைப் பெரும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      முதலில் வருகை தந்து பதிவை உங்கள் கருத்துக்களால் சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துகளையும், கவிதையை பற்றிய அன்பான கருத்துகளை கண்டும் மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஆரம்ப வரிகள் அப்படியே 60 களின் குடும்ப, மற்றும் வீடுகளின் அமைப்பை பிரதிபலிக்கின்றன.  இப்போது எல்லாமே மாறிப்போச்சு. அதை முணுமுணுக்கும் பாட்டி கூட மாறிப்போயிருப்பாள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் 50,60 பந்துகளில் இருந்த வீடுகளின் சூழல் இப்போது நிச்சயம் வராது.

      /அதை முணுமுணுக்கும் பாட்டி கூட மாறிப்போயிருப்பாள்./

      ஹா ஹா. உண்மைதான்.. இப்போது நிகழும் காலச் சூழலை கண்டு மாறிப்போயிருப்பாள். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பணம் பெரிதென அதன் பின்னால் ஓடுபவர்கள்,  பிறர் மனம் அல்ல, தன் மனமே அறியாதவராயும் இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம்.. பணம் ஒன்றே இப்போது பிரதானமாகி விட்டது. அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. என்ன செய்ய முடியும்..? இதுவும் காலத்தின் மாறுதல்கள். நல்லதொரு கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நிச்சயமாய் வரவேற்பைப் பெறும் உங்கள் கவிதை. எல்லாமே மாறித்தானே போச்சு. அந்த ஆதங்கத்தைச் சொல்லாமல் இருக்க முடியாதே! நல்ல கருத்து என்பதால் சிறப்பான வரவேற்பும் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமாக உள்ளீர்களா?
      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை குறித்த தங்கள் கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களின் ஊக்கமிகு வார்த்தைகள் என்றுமே என் எழுத்துகளுக்கு பலம். அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அன்பின் கமலாமா,
    கவிதை ஆழம் திகைக்க வைக்கிறது. அத்தனையும் உண்மை.

    கால் பதிக்க முடியாத வகையில் தான் காலம் இருக்கிறது.

    பாட்டி காலத்தில் நாம் இருந்து விட்டோம்.
    இப்போது இணையத்தில் சொல்லித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும்.

    எமக்கு நீரே உமக்கு நாமே::)))

    மனம் நிறை வாழ்த்துகள் அம்மா.
    நம் பிரார்த்தனைகள் நம் செல்வங்களை
    வாழவைக்க வேண்டும்.
    நமக்காகவும் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை குறித்த தங்கள் கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி.

      /பாட்டி காலத்தில் நாம் இருந்து விட்டோம்.
      இப்போது இணையத்தில் சொல்லித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும்.

      ஆம்.. உண்மை. அதுவும் இன்னமும் பாட்டியின் எண்ணங்களுடனேயே வாழ்கிறோம். அதுதான் சிரமம். :)

      /எமக்கு நீரே உமக்கு நாமே::)))/

      ஹா.ஹா.ஹா.

      /நம் பிரார்த்தனைகள் நம் செல்வங்களை
      வாழவைக்க வேண்டும்.
      நமக்காகவும் பிரார்த்திப்போம்./

      உண்மை.. அது ஒன்றுதான் நமக்கு வேண்டியது. அனைவருக்காகவும் அன்புடன் பிரார்த்திப்போம்.

      உங்கள் வாழ்த்திற்கும், அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. Replies
    1. கவிதை வரிகள் பல உண்மைகளை உரக்கச் சொல்கிறது... அருமை...

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை அருமை என்ற தங்களது ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்கள் என் எழுத்தை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டுள்ளது.அதற்காக என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இன்றைய அவல நிலையை அப்பட்டமாய் எடுத்துரைக்கும் கவிதை வரிகள்... கூட்டுக்குடும்பம் எனும் அற்புத விஷயத்தை நாம் இழந்து விட்டோம் என்பதை ஆணித்தரமாக சொல்லும் கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கூட்டுக்குடும்பம் எனும் அற்புத விஷயத்தை நாம் இழந்து விட்டோம்/

      உண்மை.. தாங்கள் நல்லதொரு கருத்தை இங்கு சொன்னதற்கும், உங்கள் அன்பான வாழ்த்துகளை தந்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அன்றும் இன்றும் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறீர்கள் சகோ.

    வாழ்த்துகள் தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையைப் பற்றிய தங்கள் கருத்துகள் கண்டு மகிழ்வெய்தினேன்.

      உங்கள் ஊக்கம் நிறைந்த சொற்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கமலாக்கா காலையிலேயே வாசித்துக் கருத்துமிட்டேனே...இப்ப துளசியின் கருத்தைப் பதிய வந்தால் என் கருத்தைக் காணவில்லை!!!

    கமலாக்கா என் மனதிலுள்ளவை அனைத்தும் நீங்க அப்படியே கொட்டிட்டீங்க...

    கவிதையின் கருத்து மனதை ஏங்க வைத்துவிட்டது. அதுவும் நான் கூட்டுக் குடும்பத்தில் இருந்தவள் பாட்டிகளின் கீழ் வளர்ந்தவள். அத்தை மாமாக்கள் என்று அத்தனையையும் ஏங்க வைத்துவிட்டீர்கள்.

    பல சமயங்களில் நானும் என் தங்கைகளும் பேசிக் கொள்வது எங்கள் பழைய வாழ்க்கையைப் பற்றித்தான். பாட்டிகள் அத்தைகள் என்று...

    ரொம்ப நன்றாகச் சொல்லியிருக்கீங்க

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அடாடா.. நீங்கள் கொடுத்த கருத்து காணாமல் போய் விட்டதா? நீங்கள் அடிக்கடி எல்லா பதிவுகளிலும், "என் ப்ளாக்கர் படுத்துகிறது. ரோபோ வந்து விட்டது. போட்ட கருத்தெல்லாம் காணாமல் போய் விட்டது " என்றெல்லாம் சொல்வீர்கள். நான் இதை இன்று கண்கூடாக பார்த்து வருத்தமடைந்து விட்டேன்.

      நானும் உங்களைத்தான் காணவில்லையே எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்னை மகிழ்ச்சியடைய செய்கின்றன. கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்து விட்டு அதன் நினைவுகளை மறப்பது கடினந்தான். என்ன செய்வது? வேலை மாற்றங்கள், கால சூழ்நிலைகளுக்கு நாம் அனுசரித்துதானே போக வேண்டியுள்ளது. பதிவை ரசித்து தந்த உங்களது அருமையான கருத்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஆமாம் கமலாக்கா கருத்துகள் சில சமயம் அப்படி ஆகிறது நேற்று முன் தினம் திடீரென்று ரோபோ முளைத்தது. ஏற்கவும் இல்லை...இப்போது ஒழுங்காகப் போகிறது ஆனால் எப்போது மீண்டும் வருமோ?

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      மீள் வருகை தந்து பதில் கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. அந்த ரோபோ இனி வராமலிருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் நமக்கு அவன்தான் துணை. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் சிறப்பை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. என்றாலும் அந்த நாளைய வாழ்க்கை போல இப்போது இல்லை என்பது நிதர்சனம். கவிதையை ரசித்தேன்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

      /என்றாலும் அந்த நாளைய வாழ்க்கை போல இப்போது இல்லை என்பது நிதர்சனம்./

      உண்மை.. உத்யோக நிமித்தங்கள், பொருளாதார இடர்பாடுகள் என கூட்டுக் குடும்ப வாழ்க்கையை தொடர முடியவில்லை. என்ன செய்வது? மனம் மட்டும் பழைய வாழ்க்கை இனி வராதா என ஏங்குகிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அப்பழுக்கற்ற உண்மையை
    அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்..

    நெஞ்சை அழுத்துகின்றன சில வரிகள்..

    இனி இதற்கெல்லாம் விடிவு காலம் என்பதே இல்லை போலிருக்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      /இனி இதற்கெல்லாம் விடிவு காலம் என்பதே இல்லை போலிருக்கின்றது/

      உண்மை.... எப்போது பழைய காலங்கள் வரப்போகிறது என்று தெரியவில்லை. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கவிதை அருமை சகோதரி.
    கூட்டுக்குடும்பம் அந்தக்காலத்தில் , இந்தக்காலத்தில் அது முடியாத காரணம் பலருக்கு, ஒரு சிலருக்கு சாத்தியப்படுகிறது.

    காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்பது போல பிள்ளைகள் எல்லாம் அயல் நாட்டில் பெற்றோர்கள்தான் அவர்களை பார்க்க போக வேண்டிய நிலமையில் இருக்கிறார்கள். சிலர் இதை மகிழ்வுடன் ஏற்று போய் இருக்கிறார்கள். சிலர் வேறு வழி இல்லாமல் இருக்கிறார்கள்.
    ஒரு சிலர் நீங்கள் வந்து பாருங்கள் எங்களால் முடியாது இனி என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் குழந்தைகளை வாழ்த்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் பலர்.

    கவிதை நன்றாக இருக்கிறது சொன்ன விதமும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை நன்றாக உள்ளதென்ற கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      ஆம்... இப்போதுள்ள கால கட்டத்தில் கூட்டுக் குடும்பம் இயலாததாகி விட்டது. இப்போதுள்ள படிப்புகள், வேலை அனைத்தும் வெளிநாடுகளை சார்ந்து இருப்பதால், வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகி விட்டது. அதுவும், தவிர்க்க முடியாததாக வேறு ஆகி விட்டது. நீங்கள் கூறுவது உண்மைதான். குழந்தைகளை வாழ்த்தியபடி அந்நாட்களை நினைவு கூர்ந்தபடி இருக்கப் பழகி வருகிறோம். கவிதை நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. இப்போது உடல் நலம் பெற்று இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    எனக்கும் இரண்டு மூன்று நாளாக உடம்பு சரியில்லை. ஊருலிருந்து வந்தது முதல் ஒன்று மாற்றி ஒன்று வந்து படுத்துகிறது.
    இறைவன் அருளால் நலம்பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete